கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 13,375 
 

மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?” – பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள்.

”ஆமாண்டியம்மா… ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி… வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் ‘பாரதிம்மா… பாரதிம்மா…’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா… வன்மமாம், வன்மம்!” – அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி.

டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார் பாரதி, 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் ‘எப்போதும் பெட் ரெஸ்ட்டிலேயே இருக்க வேண்டும்’ என்று மருத்துவர் சொல்லிவிட்டார். கணவரின் செல்லமான தங்கச்சி, தலைப் பிரசவத்துக்காக பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள். நியாயமான அண்ணியாக, பாரதியை

பூ போல்தான் தாங்குகிறாள் புஷ்பவல்லி. இருந்தாலும் இப்படி ஒரு கெட்ட பெயர்.

”பார்த்தீம்மா… எங்க இருக்கே?” – மழலைக் குரலில் கொஞ்சிக்கொண்டே, வாத்து மாதிரி வித்தியாசமாக நடந்து வந்தாள் ஷைலு. எதிர் ஃப்ளாட் குழந்தை. ஜீன்ஸ் பாவாடையும், பிரௌன் கலர் டாப்ஸும் அணிந்துகொண்டு அமர்க்களமாக இருந்தாள். போன விஜயதசமிக்குத்தான் பிரி.கே.ஜி-யில் சேர்ந்தாள்.

சில மாதங்களுக்கு முன் அறிமுகமான பாரதி, அவளுக்கு உயிர். இத்தனை காலமாக, குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அரசமரத்தைச் சுற்றி, இதற்காகப் பல லட்சங்களை டாக்டர்களுக்கு அழுத பாரதிக்கும், தன்னை ‘அம்மா’ என்று அழைக்கும் ஷைலு என்றால் கொள்ள ஆசை.

”வந்துட்டா உன் வளர்ப்பு மக. அம்மாவும் பொண்ணும் ராத்திரி தூங்குற வரைக்கும்

கொஞ்சிக்கிட்டே இருங்க!” – தலையைத் தினுசாக நொடித்துக்கொண்டு சமையல் அறைக்கு நகர்ந்தாள் புஷ்பவல்லி. எப்போதும் மென்சோகமாக வளையவரும் பாரதி, ஷைலுவைக் கண்ட பிறகுதான் கொஞ்சம் பிரகாசமாக இருக்கிறாள் என்பதில் அவளுக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான்.

”ஷைலு பாப்பா… பாரதி அம்மா எங்கே இருக்கேன் சொல்லு?” என்று அறைக்குள் மறைந்துகொண்டு கொஞ்சலாகக் குரல் கொடுத்தாள் பாரதி.

”தோ…” – கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த பாரதியைக் கண்டுபிடித்ததும் பரவசமாகக் கத்தினாள் ஷைலு. குழந்தையை ஆசையாக வாரி அணைத்து, உச்சிமுகர்ந்து எச்சில்பட முத்தங்கள் கொடுத்தாள் பாரதி.

”பாப்பா… இன்னைக்கு ஸ்கூல்ல என்னலாம் நடந்துச்சு? அம்மாகிட்ட சொல்லு பார்க்கலாம்!”

”ம்ம்ம்… ராகுல் என்னை அடிச்சான். நான் அவனைக் கடிச்சேன்!” – ஷைலு சொல்லச் சொல்ல, ஆசையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் பாரதி. தன் வயிற்றில் பெறாத பிள்ளை ஒன்று, தன்னை ‘அம்மா’ என்று அழைக்கிறது. இந்தக் கொடுப்பினை எத்தனை பேருக்குக் கிடைக்கும். எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ என்று நெகிழ்ந்துபோயிருந்தாள்.

”ரொம்பத் தொல்லை கொடுக்கிறாளா மேடம்?” – கதவைத் திறந்துகொண்டு நுழைந்தான் ஆசிப். ”அப்பா…” என்று அலறிக்கொண்டே ஷைலு ஓட்டமாக ஓடிவந்து ஆசிப் தோள் மீது பாய்ந்து ஒட்டிக்கொண்டாள்.

”சேச்சே… இல்லைங்க சார். ரொம்பச் சமத்தா நடந்துக்கிறா. எனக்கும் போர் அடிக்காம டைம்பாஸ் ஆகுது!” – சொல்லிக்கொண்டே டி.வி. சத்தத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தினாள் பாரதி.

”ஷைலு… டைம் டென். அப்பா இப்போ சாப்பிட்டுத் தூங்கினாதானே, காலையில கரெக்ட் டயத்துக்கு ஆபீஸ் போக முடியும்?” – குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாவாறே சொன்னான் ஆசிப்.

”வாங்க ஆசிப் சார். சாப்பிடுறீங்களா?” – டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சீனிவாசன் கேட்டார். பாரதியின் அண்ணன்.

”இல்லைங்க. அம்மா செஞ்சு வெச்சிருப்பாங்க. என்னோட சேர்ந்துதான் அவங்களும் வாப்பாவும் சாப்பிடுவாங்க!”

பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் ஆடிட்டர் ஆசிப். மாற்று மதத்துப் பெண்ணைக் காதலித்து மணம் புரிந்தவன். ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக இரு வீட்டாரும் இவர்களது அன்பின் தீவிரத்தைப் புரிந்துக்கொண்டு கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டனர். உலகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் ஆசிப்புக்குக் கொடுத்த அல்லாவின் கருணை, திடீரென்று ஒருநாள் தீர்ந்துவிட்டது. ஷைலு பிறந்த சில மாதங்களிலேயே மஞ்சள் காமாலை தாக்கி இறந்துவிட்டாள் அவனது மனைவி சபிதா.

புஷ்பவல்லி, தன் கணவருக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறிக்கொண்டிருந்தாள்.

”சார்… கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்கக் கூடாது. உங்க பர்சனல்தான். ஆனாலும் ஏதோ கேட்கணும்னு தோணுச்சு. வயசுல மூத்தவ. உங்களைத் தம்பியா நினைச்சு சொல்றேன்!” – புஷ்பவல்லி பீடிகையோடு ஆரம்பித்தாள்.

சீனிவாசன், லேசான பதற்றத்தோடு மனைவியை ஏறிட்டார்.

”சொல்லுங்க மேடம். உங்களை நான் என் குடும்பத்துல ஒருத்தவங்களாத்தான் பார்க்கிறேன். எங்க அம்மா, அப்பாவை சொந்தப் பொண்ணு மாதிரி கவனிச்சுக்கிறீங்க. ஷைலுவும் உங்க வீட்லயேதான் இருக்கா. நீங்க சொல்லி நான் தப்பா எடுத்துப்பேனா?”

”உங்களுக்கு ரொம்பச் சின்ன வயசுதான். மிஞ்சிப்போனா 30 இருக்குமா? உங்களுக்காக இல்லேன்னாலும் குழந்தைக்காகவாவது இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா… உங்க மதத்துல இது சகஜம்தானே? தாய்ப்பாசத்துக்காக ஷைலு ஏங்குறதைப் பார்த்தா, சமயத்துலே எனக்கே அடிவயித்தைப் பொரட்டறது…”

”என்ன மன்னி நீங்க..?” – பாரதி பதற்றப்பட்டாள்.

”அவங்க சொல்றதுல தப்பு ஒண்ணு இல்லீங்க!” – பாரதியைப் பார்த்துச் சொன்ன ஆசிப் தொடர்ந்தான்.

”சபிதாவும் நானும் காலேஜ் படிக்கிறப்பவே காதலிக்க ஆரம்பிச்சிட்டோம். மலையாளத்துப் பொண்ணு. வேற மதம்னு சொல்லி பிரச்னை வரும்னு தெரியும். இருந்தாலும் அவங்க குடும்பத்துல என்னை ஓரளவாவது ஏத்துக்கணுமேனு மலையாளம் கத்துக்கிட்டேன்!

அல்லா கருணையாலே எல்லாம் நல்லபடியா முடிஞ்சு மூணு வருஷம் சந்தோஷமா வாழ்ந்தோம். அந்த வாழ்க்கை போதும்னு அல்லா முடிவு செஞ்சிட்டாரு போல. கடவுளோட தீர்ப்புக்குக் காரணம் இல்லாமலா இருக்கும்? என்னை நிக்காஹ் பண்ணிக்கச் சொல்லி ஃப்ரெண்ட்ஸ் மட்டுமில்ல, வீட்லயும் வற்புறுத்திட்டுத்தான் இருக்காங்க. ஷைலுவுக்குனு சாக்கு சொல்லி பண்ணிக்கிட்டாலும், என்னைக் கட்டிக்கிட்டு வரப்போற பொண்ணோட முழு மனசா வாழ முடியுமானு தெரியலை. அப்படி அரைகுறையா வாழ்றது இன்னொரு பொண்ணுக்குச் செய்ற துரோகம் இல்லையா?

மனசு முழுக்க சபிதா நிறைஞ்சிருக்கா. அவ எனக்குக் கொடுத்துட்டுப் போன பரிசா ஷைலு பொறந்திருக்கா. அம்மா முகம்கூடக் குழந்தைக்கு சரியா ரிஜிஸ்டர் ஆகலை. தாய்ப்பால் மறக்கிறதுக்கு முன்னாடியே சபிதா போய்ச் சேர்ந்துட்டா. அதை நெனைச்சாத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு.

என்ன… 10, 15 வருஷத்துக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதுக்குள்ள ஷைலு வளர்ந்துடுவா. அவளை நல்லாப் படிக்கவெச்சு, நல்ல இடத்துலே கட்டிக்கொடுத்திட்டேன்னா இறைவன் கொடுத்த என் வாழ்க்கையும் ஒருவழியா நிறைவாயிடும்!” – விழியோர ஈரத்தோடு பொறுமையாகச் சொல்லி முடித்தான் ஆசிப்.

அறையில் சகிக்க இயலாத மௌனம் சூழ்ந்தது. என்ன புரிந்ததோ தெரியவில்லை, சேட்டைக்கார ஷைலுவும் அமைதியாக அப்பாவின் முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

பாரதியின் காதில் ஏதேதோ குரல்கள் வகைதொகை இல்லாமல் ஒலிக்கத் தொடங்கின.

‘சரிங்க… நான் இப்போ ஒரு சார்ட் போடுறேன். இந்தச் சார்ட்ல சொன்ன மாதிரி டிரீட்மென்ட் எடுத்துக்கலாம்!’

‘நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு 101 வடைமாலை சாத்துறேன்னு வேண்டிக்க!’

‘மென்சஸ் ஆனதுல இருந்து சரியா 12-ம் நாள்ல ஸ்கேன் எடுத்து எக் சரியா வளர்ந்திருக்கான்னு பார்க்கணும். சரியா வளர்ந்து இருந்தா நோ ப்ராப்ளம். இல்லேன்னா அதுக்கு ஏத்த மாதிரி டிரீட்மென்டை மாத்திக்கணும்!’

‘புட்லூரு புள்ளத்தாச்சி அம்மனைப் பார்த்து வளையல் போடுங்க. மூணாம் மாசம் ரிசல்ட் நிச்சயம்!’

‘எக் ஃபார்ம் ஆகுறதுல கொஞ்சம் பிராப்ளம் இருந்தது. அதை மருந்து மூலமா சரிபண்ணிடலாம்!’

‘இன்னுமா விசேஷம் இல்லை. எங்க ஓரகத்திப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆன மொத மாசமே நின்னுருச்சு!’

‘இப்போ எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஏன் பிரெக்னன்ஸி ஆவலைனு தெரியலை. நூத்துலே

15 பர்சென்ட் பேருக்கு ஏன் இன்ஃபெர்ட்டிலிட்டினு காரணமே கண்டுபிடிக்க முடியாது!’

‘குலதெய்வக் கோயிலுக்குப் பொங்கல் வெக்கிறதா வேண்டிக்கிட்டீங்களா?’

‘ஸாரி. ஐ திங்க் பிராப்ளம் வித் யுவர் சைடு மிஸ்டர் சங்கர். தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? ஒரு கவுன்ட்டிங் எடுத்துப் பார்த்துடலாமா? நான் சொல்ற லேப்ல ரிப்போர்ட் எடுத்துடுங்க. அப்படியே டெஸ்டிஸையும் ஸ்கேன் பண்ணணும்!’

‘ஐயப்பன் கோயில் ஜோசியர்கிட்டே ஜோசியம் பார்த்தீங்களா?’

‘உங்க கவுன்ட்டிங்ஸ் பக்கா. பாரதிக்கு ஒரு ஹெச்.எஸ்.ஜி. டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாமா?’

‘கருமாரியம்மன் கோயிலுக்குப் போயிட்டு வாங்க. எலுமிச்சம்பழம் கொடுப்பாங்க. வெறும் வயித்துல சாப்பிட்டா அப்படியே நிக்குமாம்!’

‘ரெண்டு டியூப்லயும் ப்ராப்ளம்னு நினைக்கிறேன். அடுத்த வாரம் அட்மிட் பண்ணுங்க. லேப்ராஸ்கோபி பண்ணி சரிபண்ணிடலாம்!’

‘இதுக்கெல்லாம் சித்தவைத்தியம்தான் கரெக்ட். டாக்டர் ஜமுனா எனக்குத் தெரிஞ்சவங்கதான். போய்ப் பார்க்கிறீங்களா?’

‘லேப்ராஸ்கோபில சரியாகலை. டயக்னஸ்டிக் சென்டருக்கு எழுதித் தர்றேன். டயக்னஸ்டிக் பண்ணா, சான்ஸ் இருக்கு!’

‘மாசத்துக்கு ஒரு முறை மலைவேம்பு அரைச்சுக் குடுங்க!’

‘டயக்னஸ்டிக் பண்ணதுல ஒரு டியூப் ப்ளாக் கிளியர் ஆயிருச்சு. ஸோ, இனி பிரெக்னன்ஸிக்கு நிறைய சான்ஸ் இருக்கு!’

‘ஷாலினி டாக்டரை பாருங்க. கைராசி டாக்டர்!’

‘இன்னும் மூணு மாசம் பார்ப்போம். அப்புறமா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம்!’

‘நான் கல்யாணத்துக்கு வரலை. யாராவது எத்தனை குழந்தைனு கேட்டுர்றாங்க!’

‘ஆறு மாசத்துக்கு ரெகுலரா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம். உங்க ஸ்பெர்ம்ஸை எடுத்து கான்சன்ட்ரேட் பண்ணி உங்க ஒய்ஃபோட எக்ல இன்ஜெக்ட் பண்ணிடுவோம். கண்டிப்பா சக்சஸ் ஆகும். இதுவும் சரிப்படலைன்னா டெஸ்ட் டியூப்…’

‘எனக்குத்தான் பிராப்ளம்ங்கிற மாதிரி டாக்டர் சொல்றாங்களே… நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’

‘என்னன்னே புரியலை. இதுவரை என் பேஷன்ட்கள்ல யாருக்கும் மூணு முறைக்கும் மேலே ஐ.யூ.ஐ. பண்ணதில்லை’

ஐயோ… இடைவிடாமல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தக் குரல்களை எல்லாம் யாராவது ஆஃப் செய்து தொலையுங்களேன் என்றிருந்தது பாரதிக்கு.

பத்து ஆண்டுகளில் எவ்வளவு வேதனை, எவ்வளவு சோதனை, எவ்வளவு செலவு, எவ்வளவு மருத்துவர்கள், எவ்வளவு அறிவுரைகள். எல்லாத் துயரங்களையும் கடந்து, இருளில் நம்பிக்கையாக வெளிச்சக் கீற்று கொடுத்தது அவளது கர்ப்பம். ஆனால், அந்த வெளிச்சமும் தொலைந்து சூன்யத்தில் நிற்பதுபோல் ஆகிவிட்டதே இப்போது! மார்பு, சுமையாகக் கனத்தது பாரதிக்கு. இருபுறமும் விண்விண்னென்று வலி.

அவளது கணவன் சங்கர், கால் மணி நேரத்துக்கு ஒரு முறை போன் செய்து ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தான். பாவம், அவன் சோகத்தை மறைத்துக்கொண்டு பாரதியைத் தேற்றுகிறான்!

‘நமக்கு அப்படி என்ன வயசு ஆயிடுத்து? 40-க்கு மேலகூடக் குழந்தைப் பெத்துக்கிறவா இப்போலாம் சகஜம்… தெரியுமா?’ – ஒவ்வொரு முறை போனில் பேசும்போதும், மறக்காமல் திருவாசகமாக இதைச் சொல்ல சங்கர் மறப்பதே இல்லை.

ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவந்து, மூன்று நாட்கள்தான் ஆகின்றன. பிரசவத்துக்கு முன்பே டாக்டர் சொல்லியிருந்தார், ‘ரொம்ப கிரிட்டிக்கல். மேக்ஸிமம் டிரை பண்றோம். அனேகமா தாய், சேய் ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரைத்தான் காப்பாத்த முடியும்னு தோணுது. குழந்தை உயிரோடு பிறந்தாலும் தீவிரமான கண்காணிப்பில் இருக்கணும்.’

குழந்தை, உயிரோடுதான் பிறந்தது. ஆண் குழந்தை. உருவத்தில் அச்சு அசல் சங்கரை அப்படியே உரித்து வைத்திருந்தது. பாரதியின் நிறம். கை, காலெல்லாம் நல்ல நீளம். முயல் குட்டி மாதிரி முழித்துப் பார்த்தது.

”பாரதி… பையன் பொறந்திருக்கான் பாரு. கண்ணை நல்லாத் திறந்து பாரு!” – முழு மயக்கத்தில் இருந்தாலும், கறுப்பாக, தாட்டியாக இருந்த நர்ஸின் குரல் வெகுதூரத்தில் இருந்து அளக்க முடியாத ஆழத்தில் கேட்டது பாரதிக்கு. சிரமப்பட்டுப் பாதிக் கண்களைத் திறந்தாள்.

”என் குழந்தை. என் வயிற்றில் வளர்ந்த மகன். என் ரத்தம்…” – உடலும் உள்ளமும் சிலிர்த்தன பாரதிக்கு. கடைசியாக மகனைப் பார்த்தது அப்போதுதான். இன்குபேட்டரில் வைத்து குழந்தையைப் பாதுகாக்கிறார்கள் என்று சொன்னார்கள். சுவாசிக்கத் திணறுகிறானாம். உயிர் பிழைக்க 50 சதவிகிதம்தான் வாய்ப்பாம். அவ்வப்போது, யாராவது நர்ஸ் வந்து தாய்ப்பாலை மட்டும் ஒரு கண்ணாடிக் குடுவையில் பெற்றுச் செல்வாள். இரண்டு நாட்கள். அதற்குள்ளாகச் சில லட்சங்கள் கரைந்த நிலையில், திடீரென்று ‘குழந்தை இறந்துவிட்டது’ என்றார்கள். தவமாய்த் தவம் இருந்து கிடைத்த செல்வம்; மலடி என்ற அவலச்சொல் போக்கியவன்; பூமிக்கு வந்த சுவடுகூட இல்லாமல் மறைந்துபோனானே? ஆண்டவா… என் துக்கத்துக்கு முடிவே இல்லையா?

புஷ்பவல்லிக்கு, நாத்தனாரின் துயரத்தைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பாரதிக்கு ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அவர்களது குடும்பத்தில் இருந்த ஒரே சங்கடம். அதுவும் தீரப்போகிறது என்பதில் எல்லோரையும்விடப் புஷ்பவல்லிக்குத்தான் அதிக சந்தோஷம். சில நாட்கள்கூட நீடிக்காத மகிழ்ச்சியாக இது போய்விட்டதே என்று மாய்ந்துபோனாள். பாரதியைவிட மனரீதியாக இவள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டாள். நான்கைந்து நாட்களாகச் சமைக்கக்கூட மறந்து, பிரமை பிடித்ததுபோல அமர்ந்திருந்தாள்.

”பார்த்தீம்மா… எங்க இருக்கே?” – பள்ளிவிட்டு வழக்கமான குதூகலத்தோடு ஷைலு கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.

உளவியல் சமநிலை பாதிக்கப்பட்டிருந்த புஷ்பவல்லிக்கு என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று புரியவில்லை. ஷைலுவை இழுத்து முதுகில் நாலு சாத்துச் சாத்தினாள். பேய் மாதிரி கத்தத் தொடங்கினாள்.

”சனியனே… அவ என்ன உன்னைப் பெத்தெடுத்துப் பால் கொடுத்தவளா..? மகராசி, உன் தொல்லை இல்லாம உன் அம்மா போய்ச் சேர்ந்துட்டா. பெத்த புள்ளையைப் பறிகொடுத்து நிக்குறா என் பாரதி. இனிமே அவளை அம்மா, அம்மானு சொல்லி அவளை உயிரோட கொல்லாத” – என்ன பேசுகிறோம், ஏது பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எந்தக் கோபத்தை யார் மீது காட்டுகிறோம், எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. அப்படியே குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.

குழந்தைக்கும் எதுவும் புரியவில்லை. முதலில் மலங்க மலங்க விழித்தாள். எதிர்வீட்டு ஆன்ட்டி கொஞ்சம் முறைப்பாகத்தான் பேசுவாள். ஆனாலும் இப்படி அடித்து, கோபமாகக் கத்துவாள் என்றெல்லாம் அவள் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. வீறிட்டு அழத் தொடங்கினாள். சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்த பாரதி, திகைத்தாள். ஒரு பக்கம் புஷ்பவல்லி அழுதுகொண்டிருக்கிறாள்; இன்னொரு பக்கம் ஷைலுவும் அழுதுகொண்டிருக்கிறது.

”என்னடா ஷைலு… ஏன் அழுவுற. நீ நல்ல குட்டியாச்சே?’ – குழந்தையைச் சமாதானப் படுத்தும்விதமாக வாரி அள்ளிக்கொண்டு கேட்டாள்.

பாரதியைக் கண்டதுமே எதற்காக அழுகிறோம் என்பது ஷைலுவுக்கும் மறந்துவிட்டது. தன்னுடைய அழுகைக்கு ஏதாவது காரணம் கற்பிக்கவேண்டுமே என்பதற்காக, ”பால்… பால்…” என்று அழுகைக்கு நடுவே நடுங்கிக்கொண்டே உச்சரித்தாள்.

பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்ததுமே, ஷைலுவுக்கு அவளது பாட்டி பால் காய்ச்சிக் கொடுப்பாள். சில நாட்களாக நேராக பாரதியைத் தேடி அவள் இங்கே வந்துவிடுவதால், புஷ்பவல்லிதான் காய்ச்சிக் கொடுப்பது வழக்கம். ‘குழந்தை பால் கேட்டு, புஷ்பவல்லி மறுத்ததுதான் இத்தனை களேபரம் போலிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டாள் பாரதி.

”மன்னி… நம்ம கஷ்டம் நமக்கு. குழந்தைக்கு என்ன தெரியும்? ப்ளீஸ், அவளுக்குக் கொஞ்சம் பால் காய்ச்சிக் குடுங்களேன்!”

எதுவும் பேசாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள் புஷ்பவல்லி. மொத்தமாக அழுது தீர்த்துவிட்டதால் ஓரளவுக்கு இப்போது மனம் தெளிந்திருந்தது. கோபம் கண்ணை மறைக்க, சின்னக்குழந்தையைப் போட்டு அடித்துவிட்டதை எண்ணி குற்ற உணர்வு கொண்டாள். ஃப்ரிட்ஜைத் திறந்தாள். ப்ரீஸரில் பால் இல்லை.

”பாரதி… வீட்ல பால் இல்லை. கடைக்குப் போய் வாங்கிட்டு வந்துடுறேன். குழந்தையைக் கொஞ்சம் சமாதானப்படுத்தும்மா!” – சொல்லிவிட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.

ஷைலுவின் கேவல் அடங்கவே இல்லை. ”பால்ம்மா… பால்ம்மா…” என்று சொல்லிக்கொண்டே அழுதாள். மூச்சு முட்டுவதைப் போல இழுத்து இழுத்துப் பெரிதாகச் சத்தம் வருமாறு மூச்சு விட்டாள். எப்படி இவளை சமாதானப்படுத்துவது?

பாரதிக்குத் தாங்கவில்லை. குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். ஏதோ வேகத்தில் அனிச்சையாக நைட்டியை விலக்கி, தன் மார்புக்காம்புகளை ஷைலுவின் வாயில் திணித்தாள். என்ன ஏதுவென்று புரியாமல் திணறிய ஷைலுவுக்கு, சட்டென்று பாரதியின் நோக்கம் பிடிபட்டது. அழுகையை நிறுத்தியது. முட்டி முட்டிப் பால் குடிக்கத் தொடங்கியது. பாரதியின் மார்புக் கனம் குறைந்தது. வலி நீங்கியது. ஆதுரமாகக் குழந்தையின் தலையைத் தடவ ஆரம்பித்தாள். ஷைலு, தன்னுடைய நினைவுகளில் புதைந்துபோன தாய்வாசத்தை மீண்டும் சுவாசிக்கத் தொடங்கினாள்!

– மே 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *