மூன்று உள்ளங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2023
பார்வையிட்டோர்: 2,639 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாலை. ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாத நேரம். நாட்டுப் பெண்ணும், பிள்ளையும் ‘டாக்சி’ யில் வந்து இறங்கினார்கள். வாலாம்பாள் லொக் லொக் என்று இருமிக்கொண்டே கதவைத் திறந்துவிட்டுச் சற்று ஒதுங்கி நின்றாள். தெருக் கூட்டுகிற வள்ளியம்மை, கோல மாவுத் தகரத்தை நகர்த்தி வைத்துவிட்டுச் சின்ன எஜமானியைக் கவனிப்பதில் முனைந்திருந்தாள். இருபது வருஷங்களாகக் களை இழந்துகிடந்த அந்தப் பங்களா அன்று புது அழகு பெற்று விளங்கியது. வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி, கட்டுக் கட்டாகக் கோலம் போட்டுச் செம்மண் இட்டிருந்தாள் வள்ளியம்மை. அவள் சின்ன ராஜா- அந்த வீட்டுப் பிள்ளைக்கு அவள் வைத்திருந்த செல்லப் பெயர் – நான்கு வயதுப் பையனாக இருந்ததிலிருந்து வேலை செய்து வருபவள் அவள். அந்தச் சின்ன ராஜாவுக்குக் கல்யாணமாகி மனைவியுடன் வருகிறான் என்பது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

நாகராஜன் மனைவி சுசீலா பரந்த நோக்கமுடையவள். படிப்பினால் கர்வம் அடையாமல், குடும்ப வழக்கங்களையும் பழகியிருந்தாள். மாமியாரிடம் நாட்டுப் பெண்ணால் நல்ல பெயர் வாங்கமுடியாது என்கிற எண்ணத்தை மாற்ற முடியும் என்று கல்யாணம் நடப்பதற்கு முன்பு நினைத்திருந்தாள். அந்த வீட்டில் முதல் முதல் நுழைந்தவுடன் வாலாம்பாளின் தீக்ஷண்யமான பார்வை ஒரு கணம் சுசீலாவைத் திகைக்க வைத்தது. கூடத்தில் சென்றதும், சுசீலா பயபக்தியுடன் வாலாம்பாளுக்கு நமஸ்காரம் செய்தாள்.

“மகராஜியாக இரு” என்று கரகரத்த தொண்டையில் வார்த்தைகள் தெளிவாக வராமல் தடுமாறின.

“இன்னொரு ஆசீர்வாதம் செய்ய மறந்து விட்டாயே, அம்மா! பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழச் சொல்லவில்லையே?” என்று கேட்டுவிட்டு நாகராஜன் ஆவல் ததும்பும் கண்களுடன் சுசீலாவைப் பார்த்தான். சுசீலா மாமியாரைப் பார்த்தாள். மறுபடியும், சுட்டெரித்து விடுவதுபோன்ற அதே பார்வை! தன் கண்களை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள் சுசீலா.

“ஏண்டி, அம்மா! இன்றோடு என் பொறுப்புத் தீர்ந்துவிட்டது. புதுசாயிற்றே என்று இன்றைப் பாட்டை நான் பார்த்துக் கொண்டுவிடுகிறேன். நாளையிலிருந்து வீட்டுப் பொறுப்பெல்லாம் உன்னுடையது. இருபது வருஷமாக உன் மாமனார் போனதிலிருந்து – நாகராஜனையும் காப்பாற்றி, இந்தக் குடும்ப பாரத்தையும் வகித்து, இந்த இருமல் வியாதியோடும் இரவு பகலாக ஈடு கொடுத்து, மனம் ஒடிந்து போயிருக்கிறது, அம்மா. இனிமேல், உன்கையில் விட்டுவிட்டேன்” என்றாள் வாலாம்பாள் நாட்டுப்பெண்ணைப் பார்த்து.

“ஆமாம் அம்மா? தள்ளாத காலத்தில் அது எவ்வளவு நாளைக்கு உழைக்கும்?” என்று பரிந்து பேசினாள் வள்ளியம்மை.

சுசீலா ஒரு புன்னகையுடன், மாமியாரின் உத்தரவை ஏற்றுக்கொண்டாள்.

வாலாம்பாள் மறுபடியும் தன் கரகரத்த தொண்டையில் ஆரம்பித்தாள்:

“இந்த வாசல் ரேழி அறை என்னுடையது. இந்தா, வீட்டுச்சாவி!” என்று சொல்லிச் சுசீலாவிடம் சாவிக் கொத்தைக் கொடுத்தாள்.

“வாங்கிக்கொள் அம்மா ” என்றாள் வள்ளியம்மை. ஊரிலிருந்து வந்ததும் இவ்விதம் பிரமாதமாகத் தனக்கு வரவேற்புக் கிடைக்குமென்று சுசீலா எதிர் பார்க்கவில்லை. சாவிக்கொத்தில் எந்த எந்த அறைகளின் சாவிகள் இருக்கின்றன என்றே அவளுக்குத் தெரியாது. இருந்தாலும், மரியாதையாகச் சாவிக் கொத்தை வாங்கிக் கொண்டாள். வாலாம்பாள் முகத்தில் திருப்தி நிறைந்த பொறாமை படர்ந்தது. இவ்வளவு காலமாக வகித்துவந்த பெரிய பொறுப்புப் போய்விட்டதே என்கிற எண்ணம் பொறாமைக்குக் காரணமாக இருக்கலாம்; குடும்பத் தொல்லை விட்டதே என்று திருப்தியும் ஏற்பட்டிருக்கலாம்.

***

சுசீலா அந்த வீட்டுக்குள் நுழைந்து ஒரு நாள் ஆயிற்று.அடுத்த நாள் எழுந்திருந்தபோது மணி ஆறரைக்குமேல் ஆகிவிட்டது. சமையல் அறையில் அறையில் சந்தடி எதுவும் இல்லை. வள்ளியம்மை மட்டும் காபிப் பாத்திரங்களைப் பளபளவென்று தேய்த்து வைத்திருந்தாள். வாலாம்பாள், வார்த்தையில் சொன்னதைக் காரியத்திலும் நிறைவேற்றிவிட்டாள். சுசீலா, மெதுவாக ரேழி அறைக்குள் எட்டிப் பார்த்தாள். பச்சைக் கம்பளியை இழுத்துப் போர்த்துக்கொண்டு வாலாம்பாள் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். சமையல் அறைக்குள் நுழைந்த சுசீலாவுக்கு எல்லாம் புதிதாக இருந்தன. காபிப்பொடி, சர்க்கரை முதலியவற்றைத் தேடி எடுப்பதற்குள் அரை மணி நேரம் ஆகிவிட்டது. காபியை எடுத்துக் கொண்டு வாலாம்பாள் அறைக்குள் நுழைந்த போது, அவள் அரைத் தூக்கத்தில் இருந்தாள்.

“அம்மா!” என்று ஒருதரம் கூப்பிட்டாள்.

“எழுந்து விட்டாயா? மணி ஏழு இருக்குமா?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். சுசீலாவுக்கும் வயதான ஒரு பாட்டி இருந்தாள். அவள் விடியற்காலமே எழுந்து ஸ்னானம், ஜபம், தபம் இவைகளை முடித்துக்கொண்டு, மாட்டுப்பெண்ணுக்குக் – சுசீலாவின் தாயாருக்கு – கறிகாய் நறுக்கிக் கொடுப்பதைச் சுசீலா பார்த்திருக்கிறாள். ஆனால், இம்மாதிரி வீட்டுக்குள் ஒரு சிறு பெண் நுழைந்ததும், குடும்பப் பொறுப்பு அவ்வளவையும் அவள் தலையில் போட்டுவிட்டு ஏழு மணி வரையில் தூங்குகிற பழங்காலத்து மனுஷியும் இருக்கிறாள் என்பது அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

“என்ன சமைக்கிறது அம்மா?”

“விறகுமச்சின் கீழ் ஆணியில் கூடையில், பெரிய கத்தரிக்காய் வைத்திருக்கிறேன். அதை உப்பும், உறைப்புமாக எனக்குத் துவையல் செய்துவிடு. அப்புறம் உன் பாடு. அவனுக்குக் காரமே ஆகாது”.

சமையல் திறமை எல்லாவற்றையும் சிரமப்பட்டு உபயோகித்து, வாலாம்பாளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று சுசீலா சிரமப்பட்டுத் துவையலைச் செய்திருந்தாள். வாலாம்பாள், சாப்பிட்டு முடிந்ததும், “ஏண்டி அம்மா! உனக்குக் கத்தரிக்காய்த் துவையல் செய்து வழக்கமில்லையா?” என்று கேட்டதும் சுசீலாவின் முகம் வாடிவிட்டது, தாயாருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த நாகாராஜன் அம்மாவையும், மனைவியையும் ஒரே சமயத்தில் மாறி மாறிக் கவனித்தான்.

“குழம்பு எப்படியடா இருக்கிறது?”

“நன்றாகத்தான் இருக்கிறது” என்று சொல்லிச் சுசீலாவைப் பார்த்தான் நாகராஜன். அவள் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டிருந்தாள்.

“ஆமாம், வசனம் சொல்லுவார்களே, ‘வேப்பிலைத் துவையலும்’ என்று, அந்த மாதிரி, ஆம்படையாள் கையால் செய்தால் எல்லாம் அமுதமாகத்தான் இருக்கும்.”

முதல் அத்தியாயமாகச் சமையல் விஷயத்தில் பொறாமை படர்ந்தது.

நாகராஜன் சிரித்துக்கொண்டே ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.

***

அன்று பௌர்ணமிக்கு முந்திய இரவு. சுசீலா அந்த வீட்டுக்குக் பழைய மனுஷியாகி விட்டாள். வேலைக்காரி வள்ளியம்மையிலிருந்து தோட்டக்கார ராமு வரையில் சின்ன எஐமானியிடம் விசுவாசமாக இருந்தார்கள். அவள் வந்ததிலிருந்து வீடு களையோடு இருப்பதாக ஒரு வருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். ஆனால், இவ்வளவு சுகங்களுக்கும் இடையில் சுசீலாவின் மனத்தில் வேதனை ஒன்று குமுறிக்கொண்டே இருந்தது. வாலாம்பாளின் தீக்ஷண்யமான பார்வையும், நடுநடுவே அவள் சொல்லிவந்த வார்த்தைகளும் சுசீலாவை வேதனைப்படச் செய்தன.

குளுமையான நிலவிலே நாகராஜன் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தான். சுசீலா கன்னத்தில் கை ஊன்றி, ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன யோசனை செய்கிறாய்?” என்று பேச்சை ஆரம்பித்தான் நாகராஜன்.

“ஒன்றும் இல்லை; மீதிக் காலத்தையும் இந்த வீட்டில் எப்படிக் கழிக்கப் போகிறேன் என்று கவலையாக இருக்கிறது” என்றாள் சுசீலா.

“அப்படி என்ன உனக்கு இங்கே கஷ்டம்? வீடு நிறைய வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். வள்ளியம்மை நான் குழந்தையாக இருந்த போதிலிருந்து இருக்கிறவள்.”

“அதெல்லாம் இல்லை. உங்கள் அம்மா என்னைக் கண்ணாலேயே சுட்டு விடுகிறார். ரேழி அறையைக் கடந்து நான் வாசலுக்குப் போகும்போதெல்லாம் அவருடைய கடுமையான பார்வையை என்னால் சகிக்க முடியவில்லை.” அவள் கண்கள் கலங்கிப் போயிருந்தன.

அவள் முகத்தை பார்த்ததும் அவன் பயந்து போனான்.

“சுசீ! என்ன இப்படி அசடாக இருக்கிறாய்?” வேறு ஒன்றும் கேட்க அவனுக்குத் தெரியவில்லை. அவள் மௌனமாக மாடிப்படியைத் திரும்பிப் பார்த்தாள். மாடிப்படியில் அந்த உருவம் நின்ற நிலை அவளைத் திடுக்கிடவைத்தது.

“அவர்! – உங்கள் அம்மா!…வந்திருக்கிறார்” என்று அவள் ஆரம்பித்ததும், வார்த்தைகள் நாக்கிலேயே ஒட்டிக் கொண்டன. அவன் மாடிப்படியைப் பார்த்தான். “என்ன அம்மா?” என்று கேட்டுக் கொண்டே எழுந்தான்.

“ஒன்றும் இல்லை – எல்லோரும் சதாரணமாகப் பீடிகையுடன் ஆரம்பிக்கும் வார்த்தை – மாரடைப்பது போல் இருந்தது. நீ வந்து என் அறையில் படுத்துக் கொள்கிறாயா? அவள் வேணுமானால் இங்கே படுத்துக் கொள்ளட்டும்.”

“ஏன் நானும் வருகிறேனே” என்றாள் சுசீலா. கணவனைத் தன்னிடமிருந்து பிரித்துவிட விரும்புகிறாள் என்று அவள் மனம் கூறிற்று.

“அசடு! நீ எதற்காகத் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளவேண்டும்? பேசாமல் இங்கேயே தூங்கு. இந்த மார்வலியில் பொழுது விடிவதற்குள் மூச்சு நின்றுவிட்டால் வீட்டுத் தஸ்தாவேஜங்களைப்பற்றி இன்று வரையில் தெரியாது. சொல்ல வேண்டும். நீ வேறு எதற்கு?”

குடும்ப விஷயத்தைத் தெரிந்துகொள்ளப் பிள்ளைக்குத்தான் பாத்தியதை. தனக்கு இல்லை! மாமியார்களின் மனப்போக்குத்தான் எவ்வளவு விசித்திரமானது!

தாயாரின் பின்னால் நாகாராஜன் சென்றான்.சுசீலா, கோபமும் துக்கமும், நிறைந்தவளாய் அறையில் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டாள். வீட்டிலே வேலை செய்யத் தனக்குப் பாத்தியதை; சொத்து சுதந்தரங்களைப்பற்றி அறிந்துகொள்ள உரிமை இல்லை.

***

இரவு தூங்கியபோது மணி மூன்று. அதற்குள், சந்தடி செய்யாமல் மூன்று தடவை கீழே போய்க் கதவு இடுக்கின் வழியாக மாமியாரின் அறையைக் கவனித்து விட்டு வந்தாள். வாலாம்பாள் அசையாமல் படுத்திருந்தாள். நாகராஜன், தன் அம்மாவின் கால்களை வருடிக் கொண்டே தூங்கி விழுந்தபடி இருந்தான்.

“மார்வலி என்று சாக்குச் சொல்லி, என்னிடமிருந்து பிரித்துவிட்டாள், பார்த்தாயா?” இதே கேள்வியை மனம் திருப்பித் திருப்பிக் கேட்டது.

காலையில், நாகராஜன் முகம் வாடி இருந்தது. இரவெல்லாம் கண் விழித்ததால் கண்கள் குழி விழுந்து சிவந்திருந்தன. சுசீலா அவனுடன் பேசவில்லை. பாதிச் சமையல் ஆகிக்கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நாகராஜன் வந்து உட்கார்ந்தான்.

“இன்றைக்கு லீவு போட்டு விட்டேன்” என்றான்.

” அம்மாவுக்குச் சிசுருஷை செய்வதற்காகவா?” என்று கேட்டாள் சுசீலா.

நாகராஜன் சிரித்து விட்டான்.

“மார்வலியும் இல்லை; ஒன்றும் இல்லை. என்னவோ வயசாகி விட்டாலே புத்தி தடுமாறி விடுகிறது.”

“ஊஹும்.” இது. சுசீலாவின் பதில்.

“உனக்கு என்மேல் கோபம் தானே?’

“சே, சே. தன்னந்தனியாய் மாடியில் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிழவிக்குத் துணை இருக்கப் போனால், எனக்குக் கோபம் வருவது நியாயமா?” என்று சற்றுப் பரிகாசமாகவே கேட்டாள் சுசீலா.

“நீ வந்ததிலிருந்து உன்னுடனேயே பேசுகிறேனாம். அவளுடன் பேசுவதில்லையாம். இதுதான் அவள் குறை!”

சுசீலாவுக்கு இந்த ஒரு வார்த்தையிலேயே மாமியாரின் குணம் புரிந்துவிட்டது. ஊரார் மெச்சப் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினாளே தவிரத் தன்னைக் கண்டால் அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது விளங்கிவிட்டது.

சுசீலா மேலும் பேசுவாள் என்று நினைத்து, சிறிது நேரம் அங்கேயே நாகராஜன் உட்கார்ந்திருந்தான். ஆனால், அவளுடைய பேச்சுக்கு மாறாக அடுப்பில் தள தளவென்கிற சத்தத்துடன் சாதம்தான் கொதித்துக் கொண்டிருந்தது.

***

வாலாம்பாளுக்கு அன்று மார்வலி வந்தது உண்மையோ இல்லையோ, அந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக் கெல்லாம் திடீரென்று குளிர்காய்ச்சல் வந்துவிட்டது. சுசீலா, மனத்திலிருந்த வெறுப்பை யெல்லாம் அடக்கிக் கொண்டு கணவன் மனங்கோணாமல் சிசுரூஷைகள் செய்தாள். வேளைக்கு வேளை மருந்து கொடுத்தாள். உடம்பு வலிக்கிறது என்று சொன்னால், உடம்பைப் பிடித்து விட்டாள் இவ்வளவு செய்தும் வாலாம்பாள் சிற்சில சமயங்களில் நாட்டுப்பெண்ணை வெளியே அனுப்பிவிட்டுப் பிள்ளையிடம் ரகசியம் பேசியது மட்டும அவள் மனத்தைப் புண்படுத்தியது.

“அம்மா என்னை வெளியே போகச் சொல்லி விட்டு உங்களிடம் என்ன சொல்லுகிறார்?” என்று வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டாள் சுசீலா.

“என்ன சொல்கிறாள்? நீயே முக்கால் பங்கு என் மனத்தை அபகரித்துக்கொண்டு விட்டாயாம்? அவள் இறந்துவிட்டாலும், உன் வீட்டு மனுஷாளுடன் அதிகம் பழக வேண்டாம் என்று சொல்லுகிறாள். அசட்டு மனுஷி!” என்றான் நாகராஜன் அலக்ஷ்யமாக.

சுசீலாவுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது.

“வஞ்சனையையும் எண்ணத்தையும் பாருங்கள்! என் இந்த மனுஷிக்கு ராத்திரி பகலாக உழைக்கிறேனே, என்னைச் சொல்லவேண்டும்!” என்றாள் கண்களில் நீர் ததும்ப.

“போனால் போகிறது, சுசீலா. இன்னும் கொஞ்ச நாளில் சாகப் போகிறவள். அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!” என்று அவளைத் தேற்றினான் நாகராஜன்.

”அவர் வஞ்சனை அவரோடு இருக்கட்டும்!” என்று பெமூச்சு விட்டுக் கணவனின் தேறுதல் வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் அடைய முயன்றாள் சுசீலா.

வாலாம்பாள் படுத்து இரண்டு வாரத்துக்கெல்லாம் நாகராஜனைச் சுசீலாவிடம் ஒப்பித்துவிட்டுப் போக வேண்டிய தெய்வ சம்மதம் ஏற்பட்டது. இல்லாவிடில், அந்தக் கிழவி இந்தத் தம்பதிகளின் தாம்பத்தியப் பாதையில் மாறாத ஒரு கசப்பை உண்டாக்கியே இருப்பாள்.

தாயாரின் கர்மங்களை நியமப்படி, பயபக்தியுடன் செய்து முடித்தான் நாகராஜன். சுசீலாவும் வாலாம்பாளின் வஞ்சனையைப் பாராட்டாமல் பிதுர் கிருத்தியங்களில் சிரத்தையுடன் ஈடுபட்டாள். ஆனால், அவள் கபட மற்ற மனத்தில் வாலாம்பாளின் தீக்ஷண்யப் பார்வையும் கடுஞ் சொற்களும் பதிந்து போய்விட்டன. இரவில் திடீர் திடீரென்று படுக்கையில் அலறிப் புடைத்துக் கொண்டு, “அதோ பாருங்கள் ! அம்மா குறட்டை விடுகிற மாதிரியே இல்லையா?” என்று நல்ல தூக்கத் தில் இருக்கும் நாகராஜனைத் தட்டி எழுப்புவாள். “அதெல்லாம் ஒன்றும் இல்லை, தூங்கு” என்று சொல்லி விட்டு நாகராஜன் மறுபடியும் நித்திரையில் ஆழ்ந்து விடுவான். பொழுது விடிந்ததும் இரவு அவள் பயந்ததைச் சொல்லிப் பரிகாசம் செய்வான்.

“போங்கள், உங்களுக்குப் பரிகாசமாக இருக்கிறதாக்கும். ரேழி அறையில் அம்மா நடமாடுகிற மாதிரியே எனக்குத் தோன்றுகிறது. அவர் இந்த வீட்டை விட்டுப் போகவில்லை. என்னிடம் ஏற்பட்ட சந்தேகம் அவருக்குக் குறையவில்லை. உங்கள் அன்பை நான் அடைந்துவிட்டேன் என்று பொறாமைப்பட்டுக்கொண்டே இருந்தார்” என்றாள் சுசீலா பயம் நிறைந்த கண்களுடன்.

“அடி, அசடே!” என்றுதான் நாகராஜனுக்குச் சொல்லத் தோன்றியது.

***

அன்று அமாவாசைக்கு முந்திய தினம். சுசீலா வழக்கம் போல் சமையல் வேலைகளை முடித்துவிட்டுத் தெருவில் வள்ளியம்மையோடு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வாலாம்பாள் இறந்துபோய் மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டன.

“அம்மா! உன்னைப் பார்த்தால் சந்தேகமாக இருக்குதே; தலை முழுகி எவ்வளவு நாள் ஆச்சு?” என்று சந்தோஷம் தொனிக்கும் குரலில் கேட்டாள் வள்ளியம்மை.

“போடி! மூணு மாசந்தான் ஆறது. உடம்பு சரியாக இல்லை. இந்த வீட்டிலேயே இருக்கப் பிடிக்கவில்லை. ஐயரிடம் சொன்னால் காதில் போட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறார்.”

“ஏன் வீட்டுக்கு என்ன அம்மா?”

“அந்த அம்மாளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை. நான் அடி வைத்த நாளிலிருந்து என்னைக் கண்டால் கரித்தார். என்னவோ! அவர் என்னை ஏதாவது செய்துவிடப் போகிறாரே!”

“பைத்தியம்மாதிரி பேசிறியே அம்மா!”

“பைத்தியம் என்னடி? ராத்திரி ஆகிவிட்டால், மனத்தை என்னவோ பண்ணுகிறது. இந்த ரேழி அறையைப் பார்த்தாலே மனம் நடுங்குகிறது.”

வள்ளியம்மை பேசாமல் சுசீலாவின் முகமாறுதலைக் கவனித்தாள். சுசீலாவின் அழகிய முகம் வெளிறிப் போயிற்று. கன்னத்தில் இருந்த ரத்தமெல்லாம் சுண்டி விட்டதுபோல் முகம் பயங்கரமாகக் காணப்பட்டது.

“அம்மா!” என்று ஓர் அடி முன்னால் வந்தாள் வள்ளியம்மை.

சுசீலாவுக்குத் தலை சுற்றியது. கண்கள் புரண்டன். திருதிருவென்று விழித்தாள். ஆயிரக்கணக்கில் வாலாம்பாளின் முகம் தோன்றி மறைவதுபோல் பிரமை தட்டியது. கீழே விழுந்தவளை வள்ளியம்மை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

நாகராஜன், வேதனை நிறைந்த கண்களுடன் சுசீலாவின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். அது நெருப்பாகக் காய்ந்தது. வள்ளியம்மையின் மூலமாக விவரங்களை அறிந்தான். ‘இருதயத்துக்கு அதிர்ச்சி’ என்றார் டாக்டர். நோயாளியை இனி இந்த வீட்டில் வைப்பதே பிசகு என்றும் அபிப்பிராயப் பட்டார்.

ஆஸ்பத்திரியில் சுசீலாவுக்கு சுயப் பிரக்ஞை வர மூன்று நாட்கள் ஆயின. ஆனால், ஜூரம் மட்டும் தணியவில்லை. பரிதாபமான கண்களுடன் நாகராஜனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவள் மனத்தில் பலவிதமான போராட்டங்கள் நிகழ்ந்தன. வாலாம்பாள் எண்ணம் போல, கணவனிடமிருந்து தன்னைப் பிரித்து விடவே இந்த வியாதி வந்திருப்பதாக நினைத்துக்கொண்டாள். அப்படி நினைத்தபோது அவள் மனம் வெடித்து விடுவதுபோல் தோன்றியது. கன்னத்தில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.

***

சுசீலாவின் ஜுரம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

“இங்கே இருக்கிறவரையில் சந்தோஷமாக இருக்கிறது. அந்த வீட்டுக்குப் போகவேண்டுமே என்று கவலைப்படுகிறேன்” என்றாள் சுசீலா, ஒரு நாள், நர்ஸிடம்.

நர்ஸ் ஒரு விதமாகச் சிரித்துக்கொண்டாள். சுசீலாவின் உடம்பு பூரண குணம் அடைந்ததும், வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று டாக்டர் கூறி விட்டார். வீட்டுக்குப் போகும் அந்த நாளும் வந்தது. டாக்சியில் ஏறி உட்கார்ந்த சுசீலாவின் முகம் வாட்டமடைந்தது. நாகராஜன் அதைக் கவனிக்காதவன்போல உட்கார்ந்திருந்தான். ஆனால், டாக்சியோ அவள் முன்பின் பார்த்திராத ஒரு வீட்டின்முன் நின்றது. வாசலில் வள்ளியம்மையும் நின்றிருந்தாள். “வா, அம்மா” என்று சொல்லித் திருஷ்டி கழித்து, எஜமானியை வரவேற்றாள் வள்ளியம்மை. சுசீலா வெட்கத்துடன் நாகராஜனைப் பார்த்தாள்.

“என்னிடம் சொல்லவே இல்லையே. வேறு வீடு பார்த்துவிட்டீர்களா, என்ன?”

“ஆமாம்” என்றான் நாகராஜன். அதே சமயத்தில் சுசீலாவின் பார்வையில் திருப்தி நிறைந்திருந்ததையும் அவன் கவனித்தான்.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *