தண்ணீரும் – கண்ணீரும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 1,725 
 
 

படுத்திருந்த அறையின் கதவு இடுக்கின் வழியே சல சலவென தண்ணீர் சத்தம் கேட்டு கண் விழித்து லைட்டைப்போட்ட போது லைட் எரியவில்லை. அருகிலிருந்த செல்போனை எடுத்து அதிலுள்ள லைட்டை எரியவிட்டுப்பார்த்த போது அறை முழுதும் தண்ணீர் நிறைந்திருந்ததைக்கண்டு அதிர்ந்து அறைக்கதவைத்திறந்த போது மேலும் தண்ணீர் வேகமாக அறைக்குள் வந்து கட்டிலின் மீது இருந்த பெட்டை நனைக்கவிருந்த நிலையில் அச்சத்தின் உச்சத்துக்கே சென்றாள் நிகிலா.

பதட்டத்துடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை தூக்கிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் கீழாடை நனைந்தபடி மெதுவாக எட்டு வைத்து நடக்க இயலாமல் உந்தி நடந்து படிக்கட்டுகளில் ஏறி மொட்டை மாடியில் பெட்டைப்போட்டு படுக்க வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். கீழே பார்த்த போது போர்டிகோவில் நின்றிருந்த கார் பாதியளவு தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தது.

தண்ணீரின் நாற்றம் இரவு சாப்பிட்ட உணவை வயிற்றிலிருந்து வாய் வழியே வெறியேற்றப்பார்த்தது.

நிகிலாவுக்கு வெளிநாட்டு ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பளம் லட்சங்களில் கிடைக்கிறது. கணவன் மகிழனும் நன்றாகப்படித்து வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். பெண் குழந்தைகள் இரண்டு பேருடன் எதிர்காலத்தில் உள் நாட்டில் செட்டிலாகும் பொருட்டு குழந்தைகளை இங்கேயே படிக்க வைக்க வேண்டுமெனக்கருதியதால், சென்னையிலேயே ஒரு ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரத்தைப்பார்த்து இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை இருக்கும் சேமிப்பு போக கோடிகளில் லோன் போட்டு வாங்கி மனைவி குழந்தைகளை இங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் கூடுதல் சம்பளம் கிடைப்பதால் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து வீட்டுக்கடனை கட்டி வந்தான்.

மகிழனும் சேலத்திலிருக்கும் சொந்த ஊரில் தோட்டத்துக்குள் கடன் வாங்காமல் இருக்கும் பணத்தில் வீட்டைக்கட்டி விட்டு, சென்னையில் வாடகை வீட்டில் இருந்து குழந்தைகளைப்படிக்க வைத்து வயதான காலத்தில் உள்ளூரில் பெற்றோர் மற்றும் உறவுகளுடன் வாழ்ந்து விடலாம் என நினைத்திருந்தான். ஆனால் மனைவி நிகிலாவோ நகரத்து ஆடம்பரமான வாழ்க்கை மீது அதீத காதல் கொண்டிருந்த காரணத்தால் சென்னையிலேயே வீடு வாங்க வேண்டுமென பிடிவாதமாக தான் எண்ணியதை சாதித்திருந்தாள்.

“நிகிலா… எல்லாரும் ஒரே பக்கமா வாழனம்னு ஆசைப்படும் போது வீட்டோட விலை ஐம்பது மடங்கு விலை அதிகமாகத்தான் செய்யும். இடப்பற்றாக்குறையால மழைநீர் வடிஞ்சு போகக்கூட இடம் விடாம வீடுகளைக்கட்டினா ஒரு நாளைக்கு இல்லேன்னாலும் ஒரு நாளைக்கு மழை அதிகமா பெய்யும் போது வீட்டுக்குள்ள தான் தண்ணி வரும். அதோட சாக்கடையும் கலந்து வரும். ஏற்கனவே கழிவு நீரை சுத்திகரிச்சுத்தான் யூஸ் பண்ணறோம். நல்ல காத்தும் கிடைக்கறதில்லை” என வீடு வாங்கும் ஆசையை கைவிடுமாறு தன் மனைவியிடம் கெஞ்சலாகக்கூறினான்.

“நீங்க இன்னும் உங்க தாத்தா காலத்துலியே இருக்கீங்க. ஏற்கனவே வீடு வாங்கியிருக்கிறவங்க என்ன முட்டாள்களா? எல்லாரும் நல்லா படிச்சவங்க. வீடு கட்டி விக்கிறவங்க பல அவார்டு வாங்கினவங்க. அந்த டிவிலியே விளம்பரம் கொடுக்கிறாங்கன்னா சும்மாவா? இன்னைக்கு நாம புக் பண்ணலேன்னா நாளைக்கு இந்த வீடு நமக்கு கிடைக்காது. அவ்வளவு டிமாண்ட் இந்த பகுதிக்கு. என்னோட கம்பெனி போக நல்ல, நல்ல ஸ்கூல் வேற பக்கத்துலயே இருக்கு. வயசான காலத்துல நம்ம தாத்தா, பாட்டி மாதிரி ஆடு, மாட்டுக்குள்ளே, மண்ணு காட்டுக்குள்ளே வாழனம்னு நமக்கென்ன விதியா? இந்த சிட்டில வீட்ட வாங்கினா சட்டில சமைக்கனம்னு அவசியமில்லை. ஒரு நொடில ஆர்டர் போட்டா ஆவி பறக்க வேணுங்கிற சாப்பாடு கிடைக்கும்.

வீட்டுக்கடன் முடிச்சிட்டு சம்பாதிக்கிற பணத்த பேங்க்ல போட்டுட்டா வட்டிப்பணத்துல சந்தோசமா வயசான காலத்த ஏஸில குளு, குளுன்னு காலத்தக்கழிச்சுக்கலாம். அத விட்டுட்டு வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறுச்சாங்கிற மாதர யோசிக்காம இப்பவே வீட்டை புக் பண்ணுங்க” என பின் விளைவுகளைப்பற்றி யோசிக்காமலும், வீடு கட்டப்பட்டிருக்கும் இடத்தைப்பற்றி யாரிடமும் விசாரிக்காமலும் தான் தவறு செய்து விட்டதாக நினைத்து கண்ணீர் சிந்தினாள் நிகிலா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *