கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 2,738 
 

(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு செங்கலும் பரத்தின் உழைப்பால் எழுந்தவை. உதவிக்கு நான்கு பேரை வைத்துத் தொடங்கிய நிறுவனம், இன்று பிரமாண்ட தொழிற்சாலையாகி, நாநூறு பேர் வேலை செய்ய, சக்கைபோடு போடுகிறது. 

பரத், கதாநாயகனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டவன். அவனைப் பார்க்கும் எந்தப் பெண்ணுமே இவன் நம் வாழ்க்கைத் துணைவனாய்க் கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணாமல் இருக்கமாட்டாள். அப்படி அதிருஷ்டம் ஒரு சில ஆண்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதில் ஒருவன் பரத். 

இதுவரை அவன் மனதில் எந்தச் சலனத்திற்கும் இடம் கொடுத்ததில்லை. அவனின் சிவந்த அதரங்கள், சிகரெட்டைத் தொட்டதில்லை.

எத்தனையோ பெண்கள் காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண்களில் ஒருவரும் அவனுள் காதலை ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவர்கள் சாதாரண பெண்களில்லை. அழகிப் போட்டியில் கலந்து கொள்ளுவதற்கு தகுதிபடைத்தவர்களும், பணக்கார யுவதிகளும்தான். 

ஆனால், அவர்களால் முடியாத ஒரு பெரிய விசயத்தை மவுனமாகவே செய்துவிட்டாள், அஸ்வினி. 

அஸ்வினியை அமுதாவுடன் ஏழெட்டு முறை இப்படித்தான் நடுவழியில் பார்த்திருக்கிறான். ஆனால், பேசியதில்லை.

அவளின் அடக்கமும், மென்மையான அழகும் அவனைப் பெரிதும் கவர்ந்தன.

ஒரு பெண், ஆணின் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்பவளாய் இருக்கக்கூடாது. 

மனதை மயிலிறகால் வருடுவது போன்ற இதத்தைத் தருபவளாய் இருக்க வேண்டும். ‘அவள் மடியில் படுத்து நிம்மதியாய் உறங்கமாட்டோமா?’ என்று ஒரு ஆணை ஏக்கமுறச் செய்வதுதான் ஆழமான காதல்! அப்படி ஒரு ஏக்கத்தை அவனுக்குள் அஸ்வினி உண்டாக்கிவிட்டாள்.

அவனின் அலுவலகம். எப்போது வந்தாலும் கேட்பதற்கு ஆளில்லை. ஆனால், அஸ்வினியைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எட்டு மணிக்கே புறப்பட்டு அந்தச் சாலையில் காத்திருந்தது, அவன் மட்டுமே அறிந்த ரகசியம். 

அவனைப் பார்த்த மாத்திரத்தில் சிட்டுக்குருவியின் சிறகாய் அஸ்வினியின் இமைகள் படபடக்கும். 

அந்த இமைகளுக்குள் பொதிந்து கிடப்பதுகாதலா?நட்பா?

வியாபார சக்கரவர்த்தி பரத்தால் அதை மட்டுமே கண்டுணர முடியவில்லை. 

அவனுக்குத் தன்னை நினைத்து வெகுவாய் ஆச்சரியம் ஏற்பட்டது. 

அவன் கையிலிருந்த பேனா, அஸ்வினி… அஸ்வினி என்று புலம்பித் தள்ளியிருந்தது. 

ஒரு பெண் தன்னை இந்தளவு இயல்புக்கு மாறான விசயங்களைச் செய்யத் தூண்டுவாளா என்ன? 

முன்பு போல் பசிப்பதில்லை, உறக்கம் வருவதில்லை. அவ்வளவு ஏன்? வியாபாரத்தில்கூட கவனம் செலுத்த முடிவதில்லை. எத்தனையோ முறை, பேச வந்த விசயத்தை மறந்து அஸ்வினியையே நினைத்துக்கொண்டிருந்தான். 

அவளின் நாணமும், பதற்றமும் ‘உன் மீது எனக்கும் காதல் இருக்கிறது’ என்று சொல்வது போல்தான் இருந்தது. 

‘என்ன பெண் அவள்? கல்லூரியில் படிப்பவள்தானே? எத்தனை முறைஎன் மனதைக் கோடிட்டுக்காட்டியிருப்பேன்! ஒருமுறையாவது தொலைபேசியில் பேசியிருக்கிறாளா? அப்படியென்ன பாழாய்ப்போன வெட்கமோ? புரியவில்லை’

பரத்திற்கு லேசாய் சலிப்பு ஏற்பட்டது, என்றாலும் அன்று முழுக்க வேறெதிலும் வேலை ஓடவில்லை. அவளை உடனே. பார்க்க வேண்டும் போல் மனசு துடித்தது. ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளைப் பார்க்க முதன்முதலாய் கல்லூரிக்குச் சென்றான். 


காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்த கணவரைப் புன்னகை பூத்த முகத்துடன் எதிர்கொண்டாள், தனலட்சுமி,

சட்டையின் இரண்டு பொத்தான்களை கழற்றிவிட்டு, கைகளைப் பரப்பி சோபாவில் அமர்ந்தார், புருசோத்தமன்.

தண்ணீர் கொண்டுவந்த தனலட்சுமி, “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்று கேட்டாள். 

“இல்லே… வேண்டாம் தனம். சாப்பிட்டு வந்திட்டேன்!”

“ஆபீசிலேர்ந்துதானே வாறீங்க? அப்புறம் எப்படி சாப்பிட்டீங்க?” 

“முருகவேல் தெரியுமா?” 

“ஆமா. உங்களோட நண்பர். கப்பல் கம்பெனி நடத்துறவர் தானே?” 

“அவரேதான்! திடீர்னு ஆபீசுக்கு வந்து முக்கியமான விசயம் பேசணும்னு தன் காரிலேயே அழைச்சிட்டு ஓட்டலுக்கு போயிட்டார்.” 

“ஓட்டல் சாப்பாடு உங்களுக்கு ஆகாதே!” 

“அதை விடு! அதைவிட முக்கியமான விசயம் ஒண்ணு இருக்கு!* 

“என்னங்க?” 

“முருகவேலுக்கு ஜெயசூரியான்னு ஒரு மகன் இருக்கான், தெரியுமில்லையா?” 

“ஆமாம்… வாட்டசாட்டமா அழகாயிருப்பான்!” 

“அவன்தான் இவனோட எல்லா நிறுவனத்துக்கும் நிர்வாக இயக்குநர். நம்ம அமுதாவை ஏதோ விழாவுல பார்த்திருக்கானாம். ரொம்ப பிடிச்சிடுச்சாம். உங்க பொண்ணை எங்க வீட்டு மருமகளா ஆக்கிக்க விரும்புறோம்னு சொன்னார்!”

“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?” என்றாள், பதற்றத்துடன். 

“எனக்குச் சம்மதம்தான். எதுக்கும் வீட்டுலே ஒருவார்த்தை கேட்டுட்டுச் சொல்றேன்னு வந்துட்டேன்”. 

“அப்பாடா…” என்று நிம்மதியாய் மூச்சுவிட்டாள்.

“நம்மைவிட பெரிய இடம். நான் எதிர்பார்த்த மாதிரி சொத்துக்கு ஒரே வாரிசு, பையனும் அழகு, விசாரிச்ச வரைவில் நல்ல பையன். அமுதாவுக்கு இந்த இடத்தையே முடிச்சிட்டா என்ன?” 

“புரிஞ்சுதான் பேசுறீங்களா?”

“என்ன சொல்றே தனம்?” 

“கையிலே வெண்ணெயை வச்சுக்கிட்டு ஏன் நெய்க்கு அலையிறீங்க?” 

“புரியலே!” 

“அமுதாவுக்கு பரத்தான் மாப்பிள்ளைன்னு அவள் பிறந்தப்பவே நானும் எங்க அண்ணனும் முடிவு பண்ணின விசயம். அது உங்களுக்கே தெரியும். அப்படியிருந்தும் வெளியிலே மாப்பிள்ளை பார்க்கிறீங்கன்னா… என்ன அர்த்தம்? எங்க சொந்தக்காரங்கன்னாலே உங்களுக்கு இளக்காரம்தான்!” என்றாள், குரல் கம்ம. 

“உன் புராணத்தைத் தொடங்கிட்டியா? இதோ பார்! உங்க அண்ணனைப் பற்றி உனக்கே தெரியும். அர்த்தராத்திரியிலே குடை பிடிக்கிற ஆணவக்காரர். திடீர் பணக்காரர். இப்ப நம்மைவிட அந்தஸ்துல ஒரு படி மேலே இருக்கிறவர். இருபது ஆண்டுக்கு முந்தி பேசினதை எல்லாம் காப்பாத்துற ரகமாயிருந்தா… கல்யாண விசயத்தைப் பற்றிப் பேசியிருக்க மாட்டாரா? அமுதாவைத் தன் வீட்டு மருமகளா ஆக்கிக்கணும்னு நினைச்சிருந்தா… நம்ம வீடு தேடிவந்து பேசியிருக்க மாட்டாரா?” 

“எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிட்டா சரியாயிடுமா? கல்யாண விசயமாய் எங்க அண்ணன் இன்னைக்குத்தான் போனில் பேசினார். அதை உங்ககிட்டே சொல்லணுமனு இருந்தேன். நீங்க என்னடான்னா… வந்ததும் உங்க நண்பர், பொண்ணு கேட்ட விசயத்தை சொல்லி நிலைகுலைய வச்சிட்டீங்க.” 

“உங்க அண்ணன் எப்ப பேசினார்?”

“ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி!” 

“ஏன்… அதை என்கிட்டே பேசியிருக்கலாமே!”

“முதல்ல உங்க. ஆபீசுக்குபோன் பண்ணிட்டுதான்…அங்கே. நீங்க இல்லேன்னதும் என்னிடம் பேசினார்!” 

“செல்போனில் பேசியிருக்கலாமே!” என்றார் விடாப் பிடியாய். 

“அதான்… நண்பரோடு பேசும்போது தொந்தரவாய் இருக்கும்னு அணைச்சு வச்சிட்டீங்களே! நானே எத்தனை முறை முயற்சி பண்ணி ஓய்ஞ்சுபோனேன் தெரியுமா?” 

“அட… ஆமாம்!” என்றபடி பையிலிருந்த செல்போனை எடுத்து உயிரூட்டினார். 

“எங்கண்ணனுக்கு நீங்க போன் பண்ணிப் பேசுங்க!”

“தனம்… நான் ஒண்ணு சொன்னா கேட்பியா?” என்றார் தயக்கமாய், 

“என்ன?” ஆர்வமாய் பார்த்தாள். 

“இந்த மாதிரி நெருங்கிய உறவுமுறைகளிலே கல்யாணம் பண்றது தப்புன்னு விஞ்ஞானம் சொல்லுது. பிறக்கிற குழந்தைகள் ஏதாவது குறைகளோட பிறக்கவாய்ப்பிருக்காம்.” 

“போதும்ங்க உங்க வியாக்கியானம், தொடக்கத்திலே இருந்தே எங்க பக்கத்து சொந்தம் உங்களுக்குப் பாகற்காய் தான். இதுவே உங்க அக்காவோ, தங்கையோ இருந்து அவங்களுக்கு பையனும் இருந்திருந்தா இப்படி விஞ்ஞானமா பேசிட்டிருப்பீங்க? இந்நேரம் அமுதாவுக்குக் கல்யாணத்தை முடிச்சிருக்கமாட்டீங்க? இங்கே பாருங்க… என் விருப்பத்துக்கு மாறாக முடிவு எடுத்தீங்கன்னா… என்னை உயிரோடவே பார்க்க மாட்டீங்க” என்றாள், அழுத்தமாய். 

“என்னது…?” அதிர்ந்தார். 

“அதுமட்டுமில்லே… அமுதாவும் பரத்தைத் தவிர வேறு யாருக்கும் கழுத்தை நீட்டமாட்டா… அந்த அளவுக்கு பரத்தை தேசிக்கிறா…” 

“த…ன…ம்…” 

“இதுக்கும் மேலே பிடிவாதம் பிடிக்கிறது நல்லதா கெட்டதான்னு நீங்களே முடிவு பண்ணுங்க” தீர்க்கமாய்ச் சொல்லிவிட்டு, கோபமாய் உள்ளே சென்றாள். 

புருசோத்தமன் யோசனையில் ஆழ்ந்தார். 


கல்லூரி வாசலில் நின்றிருந்த காரைப் பார்த்து இன்ப அதிர்ச்சியில் “அட கடவுளே!” என்று அலறிவிட்டாள், அமுதா. 

“என்னாச்சு அமுதா?” 

“அங்கே பார்!” 

அவள் கை காட்டிய இடத்தில் காரில் இவளையே பார்த்தபடி பரத். 

அதைச் சற்றும் எதிர்பார்க்காத அஸ்வினியினுள் இன்ப வெள்ளம் ஊற்றெடுத்தது. 

“அலோ பரத்! எங்கே இந்தப் பக்கம்?” என்றாள், அவனருகே ஓடி. 

என்ன சொல்லுவது என்று ஒரு கணம் திணறினான்.

“சும்மாதான்… இந்தப் பக்கம் வந்தேன்… உன் நினைவு வந்தது… அப்படியே உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு தான்…” அவனின் பார்வை, அமுதாவின் பின்னால் நின்றிருந்த அஸ்வினியின் மேல் படிந்திருந்தது. 

அஸ்வினிக்குப் புரிந்தும், புரியாதது போலிருந்தாள். அந்த வார்த்தைகள் அமுதாவினுள் ‘சில்’லென சிலிர்ப்பை ஏற்படுத்தியது. 

‘என்மேல் பரத்திற்கு இவ்வளவு காதலா?’ தலை கால் புரியவில்லை அமுதாவிற்கு. 

அத்தியாயம்-4

வண்டியை வீட்டுக்கு விடாமல் கடற்கரையை நோக்கிச் செலுத்தினாள், அமுதா. 

நெற்றியைச் சுருக்கினாள், அஸ்வினி. 

“என்ன திசைமாறிப் போறே?” 

“கடற்கரையில் கொஞ்சநேரம் இருந்துட்டுப் போகலாமே!”

“சரி” என்ற அஸ்வினிக்கும் மனசு நிறைந்திருந்ததால், கடற்கரைக் காற்றை அனுபவித்தபடி பரத்தின் நினைவுகளை அசை போட வேண்டும் போலிருந்தது. 

வண்டியை நிறுத்திவிட்டு மணலில் கால்கள் புதைய நீலக்கடலை நோக்கி நடந்தனர். 

காற்றில் பட்டொளி வீசிப் பறந்த துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் சேர்த்து முடிபோட்டுக்கொண்டாள், அஸ்வினி. கழுத்தைச் சுற்றி ‘மப்ளர்’ மாதிரி போட்டாள், அமுதா. 

சலிக்காமல், அலுக்காமல் சுரையை முத்தமிட்டு முத்தமிட்டு, காற்றிற்குச் சிலிர்ப்பை ஏற்படுத்தும் அலைகளில் கால்களை நனைத்தனர். 

அமுதாவின் முகத்தில் இதுநாள்வரை இல்லாத பரவசம், இப்போது பரவியிருந்தது. சிறு குழந்தையைப் போல் கைகளில் தண்ணீரை அள்ளி வீசினாள். 

“ரொம்ப மகிழ்ச்சியா இருக்கியா அமுதா?”

“உம்… ரொம்ப ரொம்ப!” 

“ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” 

முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை வெளிப்பட, அஸ்வினியை நோக்கியவள், புருவம் உயர்த்தினாள்.

“உன் முகத்திலும்தான் ஒரு மாற்றம் தெரியுது. கன்னமெல்லாம் சிவந்திருக்கு!”

“அது… அதெல்லாம் ஒண்ணுமில்லே. ஜாலியா இருக்கிறதால அப்படித் தெரியுது!” என்று சமாளித்தாள். 

‘பின்னே, உண்மையைக் கூறமுடியுமா? உன் முறை மாப்பிள்ளை என்னை நேசிக்கிறார் என்று! ஆனாலும், இந்த எதிர்பார்ப்பு உண்மையாக இருக்க வேண்டும்!’ அஸ்வினியின் காதல் மனசு ஏங்கியது. 

“அப்படியா?” என்றாள், அமுதா. 

“சொல்லு அமுதா!” 

“பரத் பற்றி நீ என்ன நினைக்கிறே?” 

அஸ்வினி, அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

“இதே கேள்வியை நீ ஏற்கனவே கேட்டாச்சு அமுதா!”

“இப்ப மறுபடியும் கேட்கிறேன்… சொல்லு!”

“அதே பதிலைச் சொல்றேன்… நாகரிக இளைஞர்!”

“இன்னைக்கு திடீர்னு பரத் நம்ம கல்லூரிக்கு வந்தாரே. ஏன்னு தெரியுமா?” 

“தெ… தெரியாது…” 

“எனக்குத் தெரியும்.” 

“என்ன சொல்லு!” 

“ஊகூம்.. அது ரகசியம்!” 

“இந்த அலட்டல்தானே வேண்டாங்கிறது!” 

“எல்லா விசயத்தையும் சொல்லிட்டா மர்மம்கிற வார்த்தைக்கே மதிப்பில்லாமப்போயிடுமே!” 

“என்னடி… என்கிட்டேயே மறைக்கிறியா?” 

“உன்கிட்டே மறைப்பேனா? ஆனா, கொஞ்ச நாளைக்கு விளையாட்டுகாட்டிட்டு சொல்லுவேன். ஆனா, அந்த விசயம் தெரிஞ்சா நீ ரொம்ப ஆனந்தப்படுவே!” 

“என்னன்னு ஒரு குறிப்பாவது கொடுக்கலாமில்லே?”

“சரி… உனக்காக ஒரு குறிப்பு தர்றேன். விசயம் பரத்தைப் பற்றி!”

“பரத்?”

“ஆமாம்! இன்னைக்கு திடீர்னு கல்லூரிக்கு ஏன் வந்தார் தெரியுமா?”

“ஏன்?” இதயம் படபடத்தது. 

“தன் காதலியைப் பார்க்க!”

“கா… காதலியா?”

“ஆமாம்… அவர் பார்வையே சரியில்லே. இது நாள் வரைக்கும் மனுசன் மனசுக்குள்ளே கமுக்கமா வச்சிருந்திருக்கிறார். இப்பதான் தைரியம் வந்திருக்கு.” 

‘கடவுளே… இவளுக்கு விசயம் தெரிந்துவிட்டதா?’ கடற்காற்றையும் மீறி வியர்த்தது. 

“யார் அவள்?” 

“நீயும் நல்லா நடிக்கிறே அஸ்வினி.”

“நடிக்கிறேனா?”

“ஆமா! அவள் யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் தெரியாத மாதிரி கேட்கிறே! பரவாயில்லே… இந்த விளையாட்டுகூட நல்லாவே இருக்கு. கிளம்பலாமா? இருட்டிப்போச்சு!” என்றாள், அவளையே குறுகுறுவெனப் பார்த்தபடி. 

அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தாள், அஸ்வினி. 

‘பரத் என்னைக் காதல் ததும்பப் பார்த்ததை இவள் கவனித்திருக்கிறாள். அதுதான் பொடி வைத்துப் பேசுகிறாள்!


மாடியில் நின்றிருந்த பரத், தோட்டத்தில் பல வண்ணங்களில் விதவிதமாய் இதழ்விரித்துச் சிரித்த மலர்களை ரசித்துக்கொண்டிருந்தான். 

இளமாலை வெயில், அந்தச் சூழ்நிலையை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. தோட்டக்காரன், செடிகளுக்கு நீர் ஊற்றினான். இலைகளை முத்தமிட்ட நீர்த்துளிகள், வெயில் பட்டு தகதகவெனத் தங்கமாய் மின்னின. 

“பரத்!” குரல் கேட்டுத் திரும்பினான். 

அவன் பெற்றோர் சத்தியமுத்துவும், வாசுகியும் அவனை நோக்கி வந்தனர். 

“இங்கே என்னப்பா பண்ணிக்கிட்டிருக்கே?”

“சும்மாதான் நின்னுட்டிருக்கேன்!” 

“வியாபாரம் வியாபாரம்னு அரக்கப் பரக்க ஓடிக் கிட்டிருப்பே… இன்னைக்கென்னவோ அதிசயமா வீட்டுக்குச் சீக்கிரமா வந்துட்டே?” அப்பா கேட்டார்.

“ஆமாம்ப்பா!” 

“ஏதாவது போன் வந்து மறுபடியும் அவன் வெளியே கிளம்புறதுக்குள்ளே பேச வந்த விசயத்தைப் பேசிடுங்க” என்றாள், வாசுகி. 

“அதுவும் சரிதான்!” 

“என்னம்மா? ஏதாவது முக்கியமான விசயமா?”

“ஆமா… உன்னோட கல்யாண விசயம்தான்!”

“கல்யாணமா?” திடுக்கிட்டான். 

“நீ சும்மா இரு! நான் பேசுறேன். பரத், இன்னைக்கு உன்னோட மாமாவும் அத்தையும் வந்திருந்தாங்க. அமுதாவுக்கும், உனக்கும் கல்யாணம் பண்ணணும்னு, அது பல ஆண்டுக்கு முன்னாலேயே பேசி எடுத்த முடிவு.”

“….” 

“நான் சம்பாதிச்சது ஒரு பக்கம், நீ சம்பாதிச்சது ஒரு பக்கம்னு நிறையவே சேர்த்தாச்சு. சொத்து வெளியிலே போகவேணாம். ஒண்ணுக்குள்ளே ஒண்ணா நம்ம சொந்தத்துக்குள்ளேயே இருக்கட்டும். அமுதா தேவதை மாதிரியிருக்கா. அவளும் உன்னைத்தான் கட்டுவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கிறாளாம்…”

“….”

“உன்னைக் கட்டிக்க அவள் கொடுத்து வச்சிருக்கணும்கிறது ஒருபக்கமிருக்கட்டும். அவளைக் கட்டிக்க நீயும் அதிருஷ்டம் பண்ணி இருக்கணும்! உன்னை ஒரு வார்த்தை கேட்டுட்டு நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கலாம்னு இருக்கேன் !” 

அப்பா பேசிக்கொண்டே போக… திகைப்பின் உச்சத்திலிருந்தான், பரத். 

அவன் கண் முன்னே அஸ்வினியின் பூமுகம் வந்து போனது.

“இ… இப்ப அதுக்கு என்ன அவசரம்ப்பா? கொஞ்ச நாள் போகட்டுமே!”

“கொஞ்ச நாள்னா எவ்வளவு? பத்துப் பதினஞ்சு நாளா?”

“அதில்லேப்பா…” 

“உடனே கல்யாணம்னு சொல்லலியே? நிச்சயம்தானே? அப்புறம் என்ன பரத்?” 

“இப்ப புது வியாபார யோசனையில இருக்கேன். ஒரு மாசம் கழிச்சு இதைப்பற்றிப் பேசுவோமே” என்றான் அழுத்தமாக. 


ஒரே வாரத்தில் ரொம்ப தளர்ந்துபோயிருந்தார், சேதுராமன். அன்றுதான், சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்திருந்தார். 

வேறொன்றுமில்லை! எப்போதும் போல் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர், மனைவி கொடுத்த காப்பியைப் பருகும்போது திடீரென்று நெஞ்சுவலியால் சாய்ந்துவிட்டார். 

அலறியடித்தபடி அக்கம்பக்கத்து வீட்டார் உதவியுடன் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றாள், செண்பகம்.

முதல்முறைதான்.ஆனால்,கடுமையாக வலி வந்திருந்ததால் தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு, எப்படியோ உயிர் பிழைத்துவிட்டார். மறுபடியும் வந்தால் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் எச்சரித்தே அனுப்பியிருந்தனர்.

மகள்கள் இருவரும் ரொம்பவே பயந்துவிட்டிருந்தனர்.

அப்பாவின் உடல்நிலை பரவாயில்லை என்று மருத்துவர் கூறியபிறகே கல்லூரிக்குச் சென்றாள், அஸ்வினி. 

அன்று வகுப்பு முடிந்து வீடு திரும்பியவள், முன்பின் பார்த்திராத ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், தங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதைப் பார்த்தாள். 

யோசனையுடன் முகம் கழுவி, காப்பி தம்ளருடன் அப்பாவின் அருகே அமர்ந்தாள். 

“இப்ப உடம்பு பரவாயில்லையாப்பா?” 

“ஏம்மா பயப்படுறே? அப்பாவுக்கு ஒண்ணுமில்லேடா… நல்லாதான் இருக்கேன்!” 

‘திடீர்னு அப்படி ஆயிட்டதும் நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம்ப்பா!” 

“உங்களை எல்லாம் கரைசேர்க்காம,கடமையை முடிக்காம நான் போயிடமாட்டேன், அஸ்வினி!” 

“இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா… நீங்க நூறு ஆண்டு இருக்கப்போறீங்க.” 

“அவ்வளவு பேராசை எனக்கில்லைம்மா!” 

“அப்பா… இப்ப நான் வரும்போது ஒருத்தர் வெளியே போனாரே, அவர் யார்? இதுவரை அவரை நாள் பார்த்ததேயில்லையே ?” 

“ஓ… ஏகாம்பரத்தைச் சொல்றியா? அவர் தரகரும்மா”

“தரகரா? அவர் ஏன் நம்ம வீட்டுக்கு வந்தார்?”

“கல்யாண வயசுல நீ இருக்கியேம்மா! என்ன புரியலியா? உனக்கு நல்ல வரன் பார்க்கச் சொல்லி உன் ஜாதகத்தைக் கொடுத்திருந்தேன்”

அஸ்வினிக்குத் தூக்கிவாரிப்போட்டது. “அப்பா… என்னப்பா இது? என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?”

“அவசரம்தாம்மா ! இப்ப என் உடம்பு இருக்கிற நிலையிலே. எதையும் நம்பமுடியலே. உங்கம்மா ஒரு வெகுளி, வீட்டுப் பறவை. ஒண்ணுந்தெரியாது. திடீர்னு நான் உங்களை யெல்லாம் விட்டுட்டுப்போயிட்டா… அவளால கட்டிக் காப்பாத்த முடியாது”. 

“அப்பா… ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?” 

“எல்லாத்தையும் யோசிக்கணுமேம்மா! பெத்தவன் இல்லையா? உனக்கடுத்து செல்வி இருக்கா. அவளையும் ஒருத்தன் கையிலே ஒப்படைக்கணும். உன்னைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பிட்டு அவளுக்கும் வரன் பார்க்கணும். எல்லாக் கடமையும் முடிச்சிட்டேன்னா நிம்மதியா இருக்கும். ஒரு வாரத்திலே நல்ல வரன்களோட வர்றேன்னு சொன்னார் தரகர்.”. 

அப்பா பேசிக்கொண்டே போக, அஸ்வினிக்கு கண்ணீர் கொப்பளித்தது. 

அந்தக் கண்ணீரில் பரத்தின் முகம், கலங்கலாய் வந்து இம்சித்தது.

– தொடரும்…

– மாலை மயக்கம் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2002, ராணி முத்து, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *