கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 1,712 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

எவ்வளவு ஊதியும் அடுப்பு எரிய மறுத்தது. அடி வயிறு வரை மூச்சை இழுத்து இழுத்து ஊதினாள் பூமணி.

கரும் புகை சுருள் சுருளாக வந்து அவளைக் கவ்வியதே தவிர சிவப்புச் சுடர் கிளம்பவேயில்லை.

    ‘சனியன் பிடிச்ச அடுப்பும் விறகும்……. மனிசற்றை சீவனை வாங்குது’ முணு முணுத்துக் கொண்டே பொத்தலாய் ஆயிரம் கண்ணாய் துளை போட்டிருந்த குசினிச் செத்தை வழியே வெளியே பார்த்தாள்.

    முற்றத்து வேப்பமரத்தில் நைந்துபோன கயிறை ஊஞ்ச லாய்க் கட்டி அதில் ராசுவை இருத்தி வேகமாய் ஆட்டிக் கொண்டிருந்தான் முத்து.

    ‘டேய் முத்து’ எத்தினை சொன்னாலும் உன்ரை மண்டைக்கை ஏறாது. கயிறு அறப் போகுதடா எருமை. அவனை இறக்கி விடு’ அடித்தொண்டையில் கத்தினாள்.

    அம்மா ஒருத்தி கத்துகிறாளே என்ற நினைப்பில்லாமல் தொடர்ந் தும் முத்து ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருந்தான்.

    ‘ஏன்ரா…சொல்லுக் கேளாத தத்தாரிகள், என்ரை வயித்தில வந்து பிறந்தியள்? தேப்பனைத் தின்னியள். வந்த னெண்டால்…’

    அடுப்பு எரியாத ஆத்திரம். அடுப்பில் வைத்த பனங்கிழங்குகள் அவிந்தபாடில்லையே என்ற அவசரம். எல்லாமாகச் சேர்ந்து அவள் வாயில் திட்டுக்களாக வந்து விழுந்தது.

    கைக்குக் கிடைத்த நீளச் சுள்ளியால் எட்டி முத்துவைப் பிடித்துக் கொண்டு இரண்டு காலுக்கும் மாறி மாறி அடித்தாள். அவன் திமிறிக் கொண்டு நாலு வீடு கேட்கக் கத்தினான்.

    ‘மூட்டா வாயை. குரல் மட்டும் பத்துக் கட்டைக்குக் கேட்கும். பன்னெண்டு வயசாகுது, உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கே. நான் ஒருத்தி தனிய ஐஞ்சு பிள்ளையளோட இந்த நாய்படாப்பாடு பட கடவுள் விட்டிட்டான். துணை இருக்கோ. உதவி இருக்கோ ஆதரவிருக்கோ கிடந்து சீரழியிறன். என்ரை கவலையை ஆரிட்ட சொல்ல’

    அவனை அடித்த கை சோர அந்த இடத்திலேயே அமர்ந்து தலையில் அடித்து கொஞ்ச நேரம் அழுதாள்.

    ‘அந்தக் கடன்காரன் வரிசையாய் ஐஞ்சைத் தந்திட்டு ஈரல் கருகிச் செத்தான் பாவி. படுபாவி நான் கிடந்து சாகிறன். ஆர் கேட்கினம் என்னை’

    அவளின் குரல் உயர்ந்தது.

    அடி வாங்கிய வேதனை தற்காலிகமாய் மறைய தலை தலையாய் அடித்து அழும் அம்மாவைக் கொஞ்சம் பரிதாபத்தோடு பார்த்தான் முத்து.

    ‘அழாதையணை அம்மா…’ என்று சொல்ல ஆசையாய் இருந்தது. சொல்லப் பயமாகவும் இருந்தது. அப்படிச் சொன்னாலும் இன்னும் அழுவாள் அல்லது எரிந்து விழுவாள். இடுப்பிலிருந்து நழுவும் காற்சட்டையை ஒரு கையால் பிடித்துக்கொண்டே கொண்டு அவளைப் பார்த்துக் நின்றான்.

    ‘ஏன்ரா மரம் மாதிரி நிற்கிறாய். போய் ஏதாவது விறகு பொறுக்கி வாடா. அந்தப் பனை வடலியுக்கை போய்ப் பார். அடுப்பில வைச்ச பனங்கிழங்கு இன்னும் அவியேலை. ரெயினுக்கு நேரமாகப் போகுது. ராசுவையும் கூட்டிக் கொண்டு போய் நிறைய விற்கு பொறுக்கி வா. நான் ஒருத்தியாய் எதை யெண்டு செய்யிறது’.

    அழுத முகத்தை கிழிந்த சீலையில் துடைத்துக் கொண்டே திரும்ப அடுக்களைக்கு வந்தாள்.

    கிழிந்த பாயில் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த வயதுக் குழந்தை தவழ்ந்து மண்ணில் இறங்கி அவளிடம் வந்தது.

    ‘தேவி…… எடி தேவி…….’

    சத்தமாய்க் கூப்பிட்டாள்.

    வேவி எல்லையில் நின்ற புளிய மரத்திலிருந்து கீழே விழுந்த புளியம்பழங்களை சட்டையில் அள்ளிச் சேகரித்துக் கொண்டிருந்த பத்து வயதுத் தேவி ஓடிவந்தாள்.

    இதையும் தூக்கிக் கொண்டு போய் வைச்சு விளையாடு’ யொல்லிவிட்டு அடுப்பை ஊதுவதில் கவனமாயிருந்தாள் பூமணி.

    ‘எந்த நேரமும் உதை தூக்கி வைச்சிருக்க வேணும். என்னால் ஏலாது. கிழே விட்டால் மண்ணைத்தான் தின்னும்’ என்று சொல்லிப் போகத் திரும்பியவள் தலையில் ஒரு குட்டு அழுத்தமாய் விழுந்தது.

    ‘ஐயோணை அம்மா…’

    ‘தூக்கடி. உனக்கு அவ்வளவு விளையாட்டே. என்னை என்ன செய்யச் சொல்லுறியள்’

    தேவி குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு போக அது தாயைப் பார்த்துக் கொண்டு சிணுங்கியது.

    முத்துவும் ராசுவும் சுமந்து கொண்டு வந்து போட்ட விறகுகளைத் திணித்து ஊதியபோது கொஞ்சம் எரிந்தது.

    பானைக்குள்ளிருந்து பனங்கிழங்கை எடுத்துப் பார்த்தாள். ‘முத்து நீ வெளிக்கிடு. இனிக் கிழங்கு அவிஞ்சிடும்’

    முத்து உம்மென்று முகத்த்தை வைத்துக் கொண்டு ‘நீ அடிச்சது நோகுது. காலைப்பார் ரத்தம் வருகுது?’ என்று நொண்டி நொண்டி நடந்தான்.

    அவளுக்கு வேதனையாக இருந்தது.

    ‘பாவம், பச்சைப் பிள்ளைக்கு அடிச்சுப் போட்டன். இல்லாத ஆத்திரமெல்லாம் இப்போது தான் வருகுது எனக்கு’. தன்னைத் தானே நொந்து கொண்டு அவனை ஆதரவாகப் பார்த்தாள்.

    ‘என்ரை ராசாவல்லே ஓடப்பு, கெதியாய் வெளிக்கிடு. ரெயின் வாப்போருது. பிள்ளைக்கு இனி மேல் அடிக்க மாட்டன்.ஓடணை’

    அம்மா ‘ராசா’ என்று தன்னைச் சொன்னது அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க வலியை ஒரு நிமிஷம் மறந்தான்.

    ஓடிப்போய் உள் கயிற்றுக் கொடியில் இருந்த சேர்ட்டை போட்டுக் கொண்டு வந்தான். அதற்குள் பூமணி அவித்த பனங்கிழங்குகளை பக்குவமாய் எடுத்து சின்னக் கூடைக்குள் அடுக்கி வைத்தாள்.

    ஒரு தட்டில் சோறும் சம்பலும் எடுத்துக் கொடுத்தாள். ‘சூடை மீனெண்டாலும் வாங்கி ஒரு குழம்பு வைக்கமாட்டாய். நெடுகவும் சம்பலைத்தான் தருவாய். என்னெண்டு தின்னிறது’. வாய் சொல்லிச் சொல்லி சோற்றை விழுங்கியது.

    சாப்பிட்டுவிட்டு அவன் வந்ததும் கூடையைத் தலையில் வைத்துவிட்டாள் பூமணி.

    ‘இந்தா ரெண்டு நாலு ரூபா. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் டிக்கற் எடு, றெயிலுக்கை வித்து முடியாவிட்டாலும் இறங்கி நிண்டு யாழ்ப்பாணம் வாற றெயிலில திரும்பி வந்திடு. கனதூரம் போகாதை’

    தாயிடமிருந்து காசைவாங்கி பொக்கற்றினுள் வைத்துக் கொண்டு கூடையுடன் நடந்தான். கால்களில் வலி இருந்தது. அழுத்தமாய் ஊன்ற முடியாமல் இறுக்கிப் பிடித்தது.

    குறுக்குப் பாதைவழியாய் நடந்து ஸ்டேஷனுக்கு வந்தான், செல்வமும் அருளும் கூடைகளுடன் ஸ்டேஷனில் நின்றார்கள். கூடைக்குள் மஞ்சள் மஞ்சளாய் அவித்துச் சீராக்கிய பனங்கிழங்குகள்.

    ‘முத்து! இண்டைக்கு ரெயில் அரை மணி லேட்டாம்’ என்றான் செல்வம்.

    முத்து கூடையை கீழே இறக்கி வைத்தான்.

    “என்னடா நொண்டிக் கொண்டு வாறாய். காலில என்ன’ அருள் அவனது கால்களைப் பார்த் துக் கேட்டான்.

    முத்து குனிந்து கால்களைப் பார்த்தான். வரி வரியாய் தடித்திருந்தது. காலில் வேதனை இன்னும் அதிகமாய்த் தெரிந்தது.

    ‘அம்மா அடிச்சவ. எதுக்கெடுத்தாலும் அடிக்கிறதுதான் அவவுக்கு வேலை ஆத்திரத்துடன் சொன்னாலும் குரலில் கரகரப்பிருந்தது. வேதனை கண்களில் நிராய்த் ததும்பியது. ஓரமாய் இருந்து நொண்டி நெண்டிப் போய் டிக்கற்றை வாங்கிக் கொண்டு வந்து ஒரமாய் இருந்த பெஞ்சில் அமர்ந்தான். மற்றவர்களும் கூடைகளைக் காலடியில் வைத்து அவனுக்கு அருகே அமர்ந்தார்கள்.

    “டேய்…கால் சரியாய் நோகுதடா’. கால்கை நீட்டி வைத்துக் கொண்டு முனகினான், கொஞ்சம் வீங்கியிருந்தது.

    ‘எச்சிலைத் தொட்டுப் பூசி விடு நோகாது’ என்று ஆலோசனை சொன்னான் செல்வம்.

    விரலால் நாக்கு நுனியில் தொட்டுத் தொட்டுப் பூசிப் பார்த்தான் முத்து.

    ‘இன்னும் நோகுதடா’..

    ‘ரெயின் வருகுது. நீ நடந்து திரியாதை; ஒரு இடமாய் நிண்டு வித்துக் கொண்டிரு, என்ரை வித்து முடிஞ்சால் உனக்கு வித்துத் தாறான்’ என்று அருள் ஆதரவாய்ச் சொன்னான்.

    தூரத்தில் தாளம் தவறாத ரெயிலின் ஓசை. தடதடவென்ற தண்டவாளத்தின் அதிரல்.

    மூன்று பேரும் கூடைகளைத் தூக்கிக் கொண்டு ஆயத்தமாய் நின்றார்கள். ரெயில் நின்றதும் மூன்று பேரும் வெவ்வேறு பெட்டிக்குள் ஏறினார்கள். முத்து ஏறி கூடையைக் காலடியில் வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் நின்றான்.

    ரெயில் நகரத் தொடங்கியதும் கூடையையும் நகர்த்திக் கொண்டு மெதுவாய் நடந்தான்.

    ‘பனங்கிழங்கு…… பனங் கிழங்கு…….’ மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே ஒவ்வொருவரையும் ஒரு வித எதிர்பார்ப்போடு பார்த்தான்.

    சிலர் வாங்கினார்கள். சிலர் எடுத்துப் பார்த்துவிட்டு திரும்ப வைத்தார்கள் சிலர் பத்துச் சதம் குறைத்துத் தா என்று கேட்டார்கள்.

    பத்துச் சதத்திற்காக சண்டை போடும் அவர்களையும் அவர்களது நாகரீகமான ஆடைகளையும் ஒரு வித எரிச்சலோடு பார்த்தான்? அவர்களது குழந்தைகள் பிஸ்கற்றை பிய்த்து யன்னல் வழியாக எறிந்து கொண்டிருந்தார்கள்.

    பெற்றோர்கள் பத்துச் சதத்திற்காசு இவனோடு சண்டை போட்டார்கள். அவன் குறைத்துத் தர முடியாது என்று நகர, இதுகளின்ரை திமிரைப் பார். பத்துச் சதம் குறைக்க மாட்டுதுகளாம் என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்த ஒவ்வொரு பத்துச் சதமும் எங்களுக்கு எவ்வளவு பெரிய காசு எண்டது இவையளுக்கு எங்கை புரியப் போகுது என்று எரிச்சலோடு நினைத்துக் கொண்டான்.

    அந்தக் கிழங்குகளைச் சிலர் ஆர்வமாய் வாங்கிக் கொள்ளும் போது சந்தோஷமாக இருக்கும்.

    மூன்று பெட்டிகளைக் கடந்து போனபோது எதிரே வெறுங் கூடையுடன் அருள் வந்தான். முத்துவின் கூடையை எட்டிப் பார்த்துவிட்டு – ‘என்னடா அரைவாசிக் கிழங்கை அப்பிடியே வைச்சிருக்கிறாய்’ என்றான்.

    ‘ஓமடா. இனி அடுத்த ரெயிலில திரும்பிப் போகேக்குள்ள விற்கலாம்தானே. ஸ்டேஷன் வருகுது இறங்குவம்’.

    ‘நான் கூடையைத் தூக்கிறன், நீ மெல்ல நடந்து வா’

    ‘என்னாலயெண்டால் கால் எடுத்து வைக்க ஏலாமல் கிடக்கு. பார் வீங்கியிருக்குது என்ன……..’

    அருள் அவனை அனுதாபத்தோடு பார்த்துவிட்டு இரண்டு கைகளிலும் கூடையை எடுத்துக் கொண்டான். ரெயில் நின்றதும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள்.

    தூரத்திலிருந்து இவர்களைக் கண்டுவிட்டு செல்வம் ஓடிவந்தான்.

    ‘ஸ்டேஷன் மாஸ்டர் வாறாரடா அருள். டிக்கற் எடுத்தனீங்களோ எண்டு கேட்கப் போறார்’.

    அருள் முத்துவின் கூடையைப் பொத்தென்று வைத்தான்.

    ‘ஏன்ரா நீங்கள் டிக்கற் எடுக்கேலை. நான் எடுத்திட்டன். இல்லாட்டி இப்ப ஓடக்கூட என்னால ஏலாது’ முத்து கூடையை தனக்குப் பக்கத்தில் எடுத்து வைத்தான்.

    அருளும் செல்வமும் தங்களது கூடைகளுடன் குறுக்கே பாய்ந்து இடைவெளியின் கம்பி அடைப்பைக் குனித்து கடந்து ஒரே ஒட்டமாய் ஓடினார்கள்.

    ஸ்டேசன் மாஸ்டர் அவர்கள் ஒடுவதைப் பார்த்துவிட்டு ‘இதுகளோடை பெரிய கரைச்சல்’ என்று முணுமுணுத்துக் கொண்டே விஸிலை ஊதினார்.ரெயில் நகர ஆரம்பித்ததும் வேகமாய் முத்துவிடம் வந்தார்.

    அவனின் தோழர்கள் ஓடியதைக் கண்டும் பிடிக்க முடியாமற் போன ஆத்திரமும் எரிச்சலும் அவன் மீது திரும்பியது.

    ‘டிக்கற் எடுக்காமல் கள்ளமாய் வாறது. எளிய சாதியள் உங்களோடை எப்பவும் கரைச்சல்தான். என்னடா முழுசிறாய். டிக்கற் எடுத்தனியே’

    ‘எடுத்தனான்…..’ என்று நிமிர்ந்து சொல்லிவிட்டு ஷேர்ட் பொக்கற்றினுள் கையை வைத்தான். தேடினான். மனதுக்குள் உறைத்தது.

    பனங்கிழங்கு விற்ற சில்லறைகளைத் தவிர டிக்கற் இருக்கவில்லை. திகைத்துப்போய் பரபரப்பாய்த் தேடினான்.

    ஜயோ பொக்கற்றுக்குள்ள தானே வைச்சனான்.காசுகள் எடுத்து மாத்தேக்குள்ள எங்கையாவது விழுந்திருக்குமோ? பதட்டத்துடன் தேடினான்.

    ‘என்னடா நடிக்கிறாய். நீ டிக்கற் எடுக்கேலை என்ன?’

    ‘இல்லை ஐயா எடுத்தனான், எடுத்தனான். எங்கையோ விழுந்திட்டுது’ பயத்தோடு சொன்னான்.

    ‘உப்பிடிப் பொய் சொல்லி தப்பலாம் எண்டு பார்க்கிறியே. அவங்களாவது ஓடிப்போனாங்கள். உனக்கெண்டால் அத்தனையும் திமிர். என்ன லெவலில் நிண்டனீ? உங்களுக்கெல்லாம் ஒரு நாளைக்குப் பூசை போட்டால் எல்லாம் சரியாப் போகும். உன்னைப் பொலிசில் பிடிச்சுக் குடுக்கட்டே’

    முத்து கூடைக்குள்ளேயும் தேடிக் களைத்து நிமிர்ந்து… ‘சத்தியமாய் எடுத்தனான்.எங்கையோ விழுந்திட்டுது. சத்தியமாய் டிக்கற் எடுத்தனான் ஐயா’ அவசர அவசரமாய்ச் சொன்னான். கண்கள் கலங்கிப் பளபளத்தன.

    ‘பொய்ச் சத்தியம் பண்ணிறியோடா. உன்னை…’ ஷேர்ட்டைப் பிடித்து இழுத்து அவனின் உலுக்கினார். நைந்த நிலையிலிருந்த ஷேர்ட் பொக்கற் அவரது கையோடு வர சில்லறைகள் கலீரென்று சிதறி விழுந்தன.

    ‘விடுங்கோ என்னை. ஐயோ என்ரை காசு’ முத்து திமிறினான். அவன் இடறியபோது கால்கள் கூடையில் பட்டு கூடை சரிய பனங்கிழங்குகன் தண்டவாளங்களின் மீது தாறுமாறாய்ப் பரவி விழுந்தது. அவனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு…

    ‘எல்லாத்தையும் பொறுக்கிக் கொண்டு ஓட்டா’ என்று கையை விட்டார்.

    தோளிலிருந்து ஷேர்ட் கிழிந்து தொங்க, தலை கலைந்து போக அவன் சிதறிக் கிடந்த சில்லறைகளையும் கறுப்பாய் கல்லுக்குள் புரண்டிருந்த பனங்கிழங்குகளையும் மாறி மாறிப் பார்த்தான். அழுகை உடைத் துக் கொண்டு வந்தது.

    அம்மா அடிக்கப் போகிறாள். கவனமில்லாமல் ஏன்ரா இருந்தனி சனியனே. இந்தளவு பனங்கிழங்கும் அநியாயமாய்ப் போட்டுதேடா. எல்லாம் உன்னாலதான் என்று திட்டித் திட்டி அவனை நார் நாராய்க் கிழிக்கப் போகிறாள்.

    வரிவரியாய்த் தடித்திருந்த தன் கால்களை ஒரு தடவை பார்த்தான். குனிந்து அழுகையோடு ஒவ்வொரு சில்லறையையும் பொறுக்கத் தொடங்கினான்.

    – மல்லிகை 1981.11

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *