மானசீக மன்னிப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 2,593 
 
 

தன்னுடைய வாழ்க்கை நிலை திருமணமாகி இவ்வளவு சீக்கிரமாக மோசமாகப்போய்விடும் என கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கவில்லை சரண்யா. மன இறுக்கம் அதிகரிக்க கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விட்டாள்.

குபேரனைப்போல் வாழ்ந்தவர்கள் குடியிருக்க வீடு கூட இல்லாத நிலைக்கு, வாடகை வீட்டிற்குப்போக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு கணவன் சரணும், அவரது தந்தையும் திருமணத்துக்கு முன்பே எடுத்த பேராசை முடிவு தான் காரணம் என்பது புரிந்தது.

பெற்றோருக்கு ஒரே பெண். அளவான வசதியிலும் அரண்மனை வாழ்க்கை போல் குறை எதுவுமின்றி இளவரசியைப்போல் வளர்ந்து, வாழ்ந்தவளுக்கு தம் அந்தஸ்துக்கு சமமான மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவளது தந்தை முயன்றார்.

“நாங்க பெரிய எடம்னாலும், எங்க அந்தஸ்துக்கு நீங்க இல்லைன்னாலும் பொண்ணு அழகா இருக்கறதுனால என்னோட மகனுக்கு கட்டிக்க சம்மதம். வரதட்சணை சல்லிக்காசும் வேண்டாம். சொல்லிப்போட்டேன் ஆமா” என மாப்பிள்ளையின் தந்தை மாதவன் வசனம் பேசியதை நம்பி பெரிதாக விசாரிப்பு எதுவுமின்றி பங்களா வீட்டைப்பார்த்து பட்டென விழுந்துவிட்டார் சரண்யாவின் தந்தை ரமணன்.

“இதபாரும்மா உன்னோட குடும்பத்த நடத்தர அளவுக்கு மாத செலவுக்கு என்னால பணம் தர முடியுமே தவிர, அவங்களோட கடனை அடைக்கற அளவுக்கு எனக்கு வசதியில்லை. அது கப்பல். என்னோடது படகு. மூழ்கற கப்பல படகுல கட்டி காப்பாத்த நெனைச்சா படகும் சேர்ந்தே முழுகிப்போகும். கப்பல விட்டுட்டு படகுல வந்து ஏறிட்டா கூட எல்லாரையும் காப்பாத்திருவேன். மனுசன் உசுரோட வாழ சொர்க்கம் தேவையல்லை. சோறு இருந்தா போதும். அத தெனமும் நூறு பேருக்கு என்னால போட முடியும்” எனக்கூறியவர் “புரியறவங்களுக்கு புரியனமே” எனக்கவலை கொண்டார்.

“ஐநூறு பேருக்கு வேலை கொடுத்தவங்கள உங்க மளிகைக்கடைல வந்து பொட்டலம் கட்டச்சொல்ல முடியுமா?” என மகள் சரண்யா கேட்டது சரி என்றாலும் “கால சூழலுக்கு ஏற்ப வாழப்பழக வேண்டும் எனும் நியதிப்படி வாழ்ந்தால் தான் நெருக்கடியைக்கடக்க முடியும்” என்றார்.

“கௌரவம் பார்த்தா நடுத்தெருவுல தான் நிக்கனம். இந்த மளிகைக்கடைய வெச்சுத்தான் உன்னை இளவரசி மாதர வளர்த்தியிருக்கேன். பத்து பைசா கடன் கிடையாது. பத்துப்பேருக்காவது நாந்தான் கடன் கொடுத்திருக்கறேன். சின்ன வயசுல இருந்து உழைப்ப மட்டுமே நம்பியிருந்த நான் உன்ற விசயத்துல பங்களாவ நம்பி மோசம் போயிட்டேன்” கண்களில் கண்ணீர் சிந்தினார்.

“சொல்லப்போனா என்னோட நெலைமைக்கு உங்கள விட நாந்தான் அழுகோணும். பெரிய எடத்துப்பொண்ணக்கல்யாணம் பண்ணி கடனை அடைச்சுப்போடலாம்னு நெனைச்சு ஒரு கோடிய வெச்சுட்டு பத்துக்கோடி கடன வாங்கி இப்பத்தெருக்கோடிக்கு வந்துட்டாங்க. இவங்க எந்தப்பொண்ணக்கட்டோணும்னு திட்டம்போட்டாங்களோ அந்தப்பொண்ணோட அப்பா விசாரிச்சுட்டு முழிச்சுட்டாரு. நீங்க வெகுளியா இருந்துட்டு விசாரிக்காம என்னக்கொண்டு போயி பங்களாவுல இல்ல பாதாளத்துல தள்ளிப்போட்டீங்க” தன் பங்குக்கு சரண்யாவும் பேசினாள்.

“இப்படி திட்டம்போட்டு உண்மையச்சொல்லாம ஏமாத்துனவங்க கூட வாழறத விட டைவர்ஸ் பண்ணிடலாம் னு தோணுது” என தந்தை ரமணன் பேசியதைக்கேட்டு “அப்பா…” எனக்கத்தினாள் .

“அந்த வார்த்தைய மட்டும் இன்னொரு தடவை பேசிடாதீங்க. என்னோட மனசுல இன்னொருத்தருக்கு எடமில்லை. இப்படிப்பட்ட நிலைல உண்மையச்சொல்லி பொண்ணுக்கேட்டிருந்தாக்கூட நான் சம்மதிச்சிருப்பேன். இத்தனை கடனை வெச்சுட்டு இப்படி சொல்லிட்டாங்களேன்னு கோபம் தான். மேல் நிலைல இருந்தாலும், கீழ்நிலைல இருந்தாலும் கணவன் கணவன் தான்னு நெனைக்கிறவதான் நான். பொய் சொல்லிட்டாங்கன்னு கோபத்துல சொல்லாம வந்திட்டனே தவிர பொளைக்க முடியாதுன்னு நான் வரலே. மறுமணம்ங்கிற வார்த்தை என்னோட அகராதில கெடையாது” என்று தன் மனைவி சரண்யா உறுதியாகப்பேசியதைக்கேட்ட படி வீட்டிற்குள் நுழைந்த கணவன் சரண், ‘தாங்கள் கடனை மறைத்து திருமணம் செய்ததால் விவாகரத்து செய்ய வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட கோபத்தில் வந்து விட்டாளோ…?’ எனும் பயத்தில் மன்னிப்புக்கேட்டு அழைத்துச்செல்ல வந்தவன், அவளது பேச்சைக்கேட்டு நேரில் மன்னிப்புக்கேட்க வேண்டிய அவசியமில்லை எனப்புரிந்து மகிழ்ச்சியடைந்தாலும் மானசீகமாக மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *