சரஸ்வதி பூஜை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 5,630 
 

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சரஸ்வதி பூஜை-செப்டம்பர் மாதம் இருபத்தாமும் தேதி செவ்வாய்க்கிழமை!” என்று ஹாலில் உட்கார்ந்திருந்த தாத்தா, பஞ்சாங்கத்திலிருச்ச இரைந்து படித்தார்.

மாடியிலிருந்து அந்தச் சமயத்தில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த சரஸ்வதியின் காதில் அது நன்றாக விழுந்தது.

“தாத்தா! சரஸ்வதி பூஜை செவ்வாய்க் கிழமை யில்லையாம்; ஞாயிற்றுக்கிழமை தானாம். அதனால் சர்க்கார் ஆபீஸ்களுக்கு லீவு கிடையாதாம். நேற்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தாரே, நீ கேட்க வில்லையா?” என்று கேட்டாள் அவள் கீழே இறங்கி வந்து.

தாத்தா மூக்குக் கண்ணாடியைக் கழற்றி உரையில் வைத்துவிட்டு, “ஞாயிற்றுக் கிழமையாவது! எந்தப் பஞ்சாங்கத்திலும் அந்த மாதிரி இல்லையே? ஒரு நாள் முன்னே பின்னே இருக்குமே ஒழிய ஒரே யடியா நாலைந்து நாளா வித்தியாசப்படும்? அதெல்லாம் இருக்காது” என்றார் தம் பேத்தியைப் பார்த்து.

“அதென்னமோ, கவர்ன்மெண்டுக்கு மட்டும் சரஸ்வதி பூஜை இந்த வருஷம் ஞாயிற்றுக்கிழமைதானாம். மத்திய சர்க்காருக்கு இந்த விஷயங்களில் ஆலோசனை சொல்லுவதற்காக மாதம் மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் சீமையிலிருந்து வந்திருக்கும் சாஸ்திரிகள் அப்படித்தான் சொல்லி விட்டாராம், தெரிகிறதா?” என்று கேட்டுவிட்டு, சரஸ்வதி சமையலறைப் பக்கம் போய் விட்டாள்.

“சாஸ்திரிகளாவது, சீமையிலிருந்து வருகிறதாவது! எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சிண்டிருக்குகள், போக்கிரிப் பசங்கள்!” என்று முணு முணுத்துக் கொண்டார் தாத்தா.

சரஸ்வதி சமையல் அறைக்குள் நுழைந்த போது, அங்கு இன்னும் காப்பிக் கடை தான் நடந்து கொண்டிருந்தது. அவள் சகோதரர்கள் அப்பொழுது தான் எழுந்து பல் தேய்த்துவிட்டு வந்து உரத்த சத்தத்துடன் பேசிக்கொண்டே காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

“என்ன இரைச்சல், கொத்தவால் சாவடி மாதிரி!” என்று கேட்டுக் கொண்டே வந்த சரஸ்வதி, தன் தாயாரைப் பார்த்து, “அம்மா! சரஸ்வதி பூஜை செவ்வாய்க்கிழமை என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, தாத்தாவைப் போய்க் கேளு. ஞாயிற்றுக்கிழமைதானாம், சொல்லி விட்டார்!” என்றாள்.

“என்னடி இது” என்று கேட்டுவிட்டு ஹாலை நோக்கி விடுவிடென்று நடந்தாள் அவள் தாயார். சரஸ்வதி உடனே வாயைக் கையினால் பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்க முயன்றதும், அவள் சகோதரர்களும் சிரித்துக் கொண்டே எழுந்திருந்து, ஹாலில் நடக்கும் வேடிக்கையைப் பார்ப்பதற்காகத் தங்கள் தாயாரைப் பின் தொடர்ந்தார்கள்.

***

இந்த சரஸ்வதிக்கு வயது பதினைச்தோ அல்லது பதினாறோ இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வருகிற ஐப்பசி மாதத்துக்கு அவளுக்கு இருபத்து மூன்று வயது நிறையப் போகிறது! ஆனால் பார்ப்பதற்குப் பதினெட்டு வயசு மாதிரிதான் இருப்பாள். ரொம்ப ரொம்ப அழகு என்று சொல்ல முடியாது; அழகில்லை என்றும் சொல்வதற்கில்லை, குறும்புத்தனமான சிரிப்பு ஒன்று எப்பொழுதும் அவள் முகத்தில் குடி கொண்டிருக்கும். அவள் பேச்சிலும்கூட சதா குறும்பும் பரிகாசமும் தான்.

அவள் கல்யாண விஷயந்தான் அவள் பெற்றோருக்கும் தாத்தாவுக்கும் கூட, பெரிய கவலையை உண்டு பண்ணுவதாயிருந்தது. சென்னை ராஜதானியில் மட்டும் இல்லாமல் பம்பாய், கல்கத்தா டில்லி முதலிய இடங்களுக்கெல்லாம் உத்தியோகத்துக்காகப் போயிருக்கும் பிரும்மச்சாரிகளை வரனுக்காகச் சல்லடை போட்டு அரித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். தகுந்த வரன் தான் இன்னும் கிடைத்த பாடில்லை.

“ஏ, பெண்ணோ இங்கே வா!” என்று கூப்பிடுவார் தாத்தா. சரஸ்வதி சிரித்துக் கொண்டே எதிரில் வந்து நிற்பாள்.

“இந்த வருஷமாவது கல்யாணம் பண்ணிக் கொள்கிறதாய் உனக்கு உத்தேசம் உண்டா, இல்லையா?”

“எந்த வினாடியும் தயாராக இருக்கிறேன்” என்பாள் சரஸ்வதி குறும்புச் சிரிப்புடன்.

“நீ தயார் தான்! வேளை தானே வரவில்லை!” என்று முணுமுணுப்பார் தாத்தா.

பாவம், சரஸ்வதிக்கும் மனசிலே குறை தான், தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்று. அவளுடைய குறும்புத் தனமான பேச்சும் சிரிப்பும் இந்தக் குறை வெளியே தோன்றாதபடி செய்து வந்தன.

ஒரு நாள் மாலை ஏழு மணி இருக்கும். வீட்டில் விளக்கேற்றின பின் சரஸ்வதி பாடங்களைப் படிப்பதற்காக மாடியில் இருந்த தன் அறைக்குச் சென்று புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அப்பொழுது, “சரஸு!” என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தார் அவள் தாத்தா.

சரஸ்வதி திரும்பிப் பார்த்தபொழுது அவர் வாசற்படி யருகிலேயே இன்று, “சரஸு! மதுரையில் ஒரு வரன் இருக்கிறது என்று சொன்னேனே, அந்தப் பையனைப் பற்றி விசாரித்து எழுதும்படி கல்யாணராமனுக்கு எழுதியிருந்தேன். அவனிடமிருந்து பதில் வந்திருக்கிறது. பார்!” என்று கூறி, ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார்.

கடிதத்தைக் கையில் வாங்கிய பொழுது சரஸ்வதியின் முகம் வெட்கத்தினாலும் கோபத்தினாலும் சிவந்தது. கல்யாணராமன் என்பவன் அவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் வெகு காலமாக வசித்த ஸப்ரிஜிஸ்ட்ராரின் பிள்ளை. மூன்று வருஷங்களுக்கு முன்பு அவன் லா காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். சரஸ்வதியின் குடும்பத்துக்கும் அவன் குடும்பத்துக்கும் மிக நெருங்கிய பரிச்சயம் உண்டு . சரஸ்வதியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவன் மனசில் இருந்தது. சரஸ்வதிக்கும் இந்த விருப்பம் இல்லாமற் போகவில்லை. கல்யாணப் பேச்சுகளும் நடந்தன. சரஸ்வதி அப்பொழுது தான் இண்டர்மீடியட் பரீக்ஷையில் தேறி இருந்தாள். மேலே பி.ஏ. படிக்க அவள் உத்தேசித்திருந்தபடியால் – இரண்டு வருஷங்கள் கழித்துக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவதாக அவள் கூறிவிட்டாள். கல்யாணராமன் தனக்காக இரண்டு வருஷம் காத்திருக்க மாட்டானா என்று தான் எதிர்பார்த்தாள் அவள். அது கல்யாணாமன் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமாக இருர்தால், இரண்டு வருஷம் மட்டும் அல்ல, ஐந்து வருஷமானாலும் காத்துக்கொண்டிருக்க அவன் தயார்தான். ஆனால் அவன் பெற்றோர்கள் அதற்குத் தயாராக இருந்ததாகத் தெரியவில்லை. வேறு இடத்தில் பெண் பார்க்க அவர்கள் முனைந்து விட்டார்கள். அந்தச் சமயம் கல்யாணராமன் பரீக்ஷையில் தேறின படியால் வக்கில் தொழில் நடத்துவதற்காக அவர்கள் குடும்பத்துடன் மதுரைக்குப் போக வேண்டியதாயிற்று.

இன்று மறுபடி அந்தக் கல்யாணராமனிடமிருந்து தாத்தாவுக்குக் கடிதம் வந்திருக்கிறது என்று தெரிந்ததும், சாஸ்வதிக்கு உண்டான கோபத்துக்கு அளவில்லை. “இரண்டு வருஷம் ஒரு பெண்ணுக்காகக் காத்திருக்க முடியாத ஆண் பிள்ளை ஒரு மனுஷனா!” என்று நினைத்துக் கொண்டு, அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பாராமலே கிழித்துத் தன் மேஜை அடியில் இருந்த குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டாள்!

***

சரஸ்வதி பூஜை வந்து விட்டது.

ஆமாம்; தாத்தா பஞ்சாங்கத்தைப் பார்த்து ஜோஸியம் சொன்னபடியே, அது செப்டம்பர் மாதம் இருபத்தாறாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று தவறாமல் வந்து விட்டது.

சரஸ்வதியின் வீட்டைப் பொறுத்தவரையில் சரஸ்வதி பூஜை தனியாக வரவில்லை மதுரையில் இருந்த கல்யாணராமனையும் அது தன்னுடனே அழைத்துக் கொண்டு ‘ஜாம் ஜாம்’ என்று வந்தது.

பொழுது விடிர்ததும், சரஸ்வதி படுக்கையை விட்டு எழுந்து மாடியிலிருந்து இழே இறங்கி வரத் தொடங்கினாள். அப்பொழுது ஹாவின் நடுவில் இருந்த பெட்டியும் படுக்கையும் அவள் கண்ணில் பட்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அடுத்த நிமிஷம் கல்யாணராமனே அவள் எதிரில் நின்றான்! மரியாதைக்காக அவனிடம், “எப்போது வந்தீர்கள்?” என்று கேட்டுவிட்டு விழுந்தடித்துக் கொண்டு கொல்லைப் பக்கம் சென்றாள் சரஸ்வதி.

தனக்காக இரண்டு வருஷம் காத்திருக்க முடியாதவனுடன் அதற்கு மேல் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

என்ன காரணத்தினாலோ அன்று ஒரே ஆனந்தத்தில் மூழ்கி யிருந்தார் தாத்தா. தம் பேத்தியின் போக்கு அவருக்கு அர்த்தமாகவில்லை. “அதிகம் படித்து விட்டாலே இந்தப் பெண்கள் அசடுகளாகி விடுகிறதுகள்! காலையில் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு மாடிக்குப் போனவள், அப்புறம் கீழே வந்து ‘என்ன?’ என்று கூட கேட்கவில்லையே, வந்தவனை?” என்று நினைத்துக் கொண்டார் அவர்.

மத்தியானம் மூன்று மணி இருக்கும். கல்யாணராமனும் சரஸ்வதியும் மாடியில் சந்தித்தார்கள். .

” ன் பேரில் உனக்கு என்னவோ கோபம் போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி நாலு வார்த்தைகள் கூடப் பேசாமல் இருப்பாயா நீ?” என்றான் கல்யாணராமன்.

“கோபமாவது, ஒண்ணாவது! உங்களுடன் எனக்கு என்ன பேச்சு வைத்திருக்கிறது என்று தான் சும்மா இருக்கிறேன்”

“நான் எழுதிய கடிதத்தைப் பார்த்தாயா?- தாத்தா உனக்கு அதைக் காண்பித்ததாகச் சொன்னாரே!”

“கண்ட கடிதாசியைப் படித்துப் பொழுது போக்க நான் என்ன வேலையில்லாமல் ஒழிந்து இருக்கிறேனா? மதுரையில் இருக்கும் வரன் எதையோ பற்றி எழுதியிருப்பீர்கள்! அது இருக்கட்டும். உங்கள் மனைவி சௌக்கியந்தானே? குழந்தைகள் ஏதாவது …” என்று இழுத்தாள் சரஸ்வதி.

கல்யாணராமன் பெரிதாகச் சிரித்தான்.

“உன்னைப் போல அசடை நான் பார்த்ததில்லை! மனைவியாவது குழந்தைகளாவது? எனக்கு இன்னும் கல்யாணமே ஆக வில்லையே! உனக்காக இரண்டு வருஷம் காத்திருந்து உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்? அந்தக் கடிதத்திலும் இதையெல்லாம் எழுதியிருந்தேனே” என்றான் கல்யாணராமன்.

சரஸ்வதி பதில் ஒன்றும் பேசவில்லை. கீழே குனிந்து, மேஜை அடியில் கிடந்த குப்பைக் கூடையில் தான் கிழித்துப் போட்ட கடிதத் துண்டுகளை எடுத்து ஒன்று சேர்த்துப் படிப்பதில் முனைந்தாள்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *