பொங்க சீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 10,042 
 

சின்னச் சின்ன கருவேலங்கன்றுகளை குழிகளில் வரிசையாக நட்டுக்கொண்டிருந்தான் ஜெயபாலு.

“பொண்ணுக்கு பொங்க சீர்வரிச வைக்க சாமாஞ்செட்டு எடுக்கப்போயிருக்கு உங்கம்மா. ம்… எது தவறினாலும் உங்க தங்கச்சிக்கு பண்டிகைக்குப் பண்டிகை சீர் தவறதில்ல…”

– குழிகளில் தண்ணீர் ஊற்றும்போதே சேர்த்து போதித்தாள் கோமளா.

வீட்டில் தனித்துப் பிறந்தவள் என்பதால், இங்கே மலருக்கு சீர், செனத்தி செய்வதைப் பார்த்தாலே கோமளாவுக்குப் பற்றிக் கொண்டுவிடும். ஆனாலும், ஜெயபாலுக்கு மனைவி சொல்லே மந்திரம்.

“ம்… உரம் வாங்கணும்னு 500 ரூபா கேட்டேன். பதிலே சொல்லல… பொங்க சீர் எடுக்கப் போயிருக்குதோ..?” என்று அவன் சொல்லி முடித்த வேளையில்… படலைத் தள்ளிக் கொண்டு களைத்த முகத்தோடு உள்ளே வந்தாள் அம்மா. கையில் ஒரு கட்டைப் பை, தலையில் கரும்புக்கட்டு!

“ஜெயபாலு… எல்லாம் மலருக்குதான். நாளைக்கு குடுத்துட்டு வந்துடு!” என்றாள்.

“உரம் வாங்க ரூபா கேட்டேன்… கடலைச் செடி சத்தில்லாம இலை சிறுத்துக் கௌம்புது. நீ புடவை எடுத்தாந்திருக்கே…” என்றான் முகத்தை சுளித்துக்கொண்டு. அடுப்பங்கரையிலிருந்து கண்களை அசைக்காமல் பார்த்துக் கொண்டுஇருந்தாள் கோமளா.

“ஒத்தைப் பொண்ணு… ஏதோ என் உசுரு இருக்கிறவரைக்கும்தானே…”

– பெருமூச்செறிந்தபடி பொங்கல்பானை, அடுப்பு, துடுப்பு, பிரிமனை, மஞ்சள் கொத்து, அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, கிழங்கு வகை என எல்லாவற்றையும் ஒருமுறை கட்டைப்பையில் இருந்து எடுத்து, சரிபார்த்து மீண்டும் பைக்குள் வைத்தாள் அம்மா.

ஜெயபால் எதுவும் பேசவில்லை. ஆனால், வீட்டினுள்ளே டம்ளர் விழும் சத்தம்.

மறுநாள் அவனுடன் பஸ் ஸ்டாண்டு வரை வந்தனர் அம்மாவும் கோமளாவும்.

கட்டிக்கொடுத்ததிலிருந்து எண்ணி இரண்டே முறைதான் தாய்வீடு வந்திருக்கிறாள் மலர். பெரிய தாத்தா செத்ததற்கு ஒருமுறை… சின்னம்மா பெண் கல்யாணத்துக்கு ஒருமுறை… அவ்வளவுதான்.

“அதது தாய் வீட்டுக்கு மாசம் ஒரு தரம் வந்து டேரோ போட்டுத் தங்கிட்டு போவுதுங்க. இவ… வாழ்வு சாவுனா மட்டுந்தான் வந்துட்டுப்போறா. அப்பிடி என்ன தொலையாத தூரத்துல கட்டிக் குடுத்துட்டோம்?! ஹூம்… எப்பிடியோ.. அங்கே அவ சவுகரியமா இருந்தாச் சரி…”

– அம்மா புலம்புவதைக் கேட்டுக்கொண்டு நின்றான் ஜெயபாலு. கோமளா வருவதற்கு முன்புவரை அவனுக்கும் கொள்ளையாக மலரைப் பிடிக்கும். அடுத்தவர் மனசு நோகக்கூடாது என்று எண்ணுபவள். சின்ன வயசில் அண்ணன் செய்த தப்புகளுக்கு தானே பொறுப்பாளியாகியவள்.

பஸ் வந்துவிட்டது. மலரின் ஞாபகங்களில் தேய்ந்து கிடந்தவனைத் தொட்ட அம்மா, “இந்தா 500 ரூபா. நூறு ரூபாயை மலர் கையில குடுத்துடு… கைச் செலவுக்கு வச்சுப்பா. மீதிக்கு உரம் வாங்கிட்டுவா…”

“அண்ணே…” என்று ஆசையுடன் வரவேற்றாள் மலர். இளைத்துக் கறுத்திருந்தாள்.

“எதுக்குண்ணே… வேலவெட்டிய விட்டுட்டு இத எடுத்துட்டு வந்தே. பெறகு பார்த்துக்கிடலாம்னு விட வேண்டியதுதானேண்ணே..?” என்றாள். காபி வைத்துக் கொடுத்தாள். அம்மா, அண்ணி பற்றி விசாரித்தாள்.

ஜெயபாலுவின் கண்கள் அலைபாய…

“அவுக யாரோ தெரிஞ்சவுகளப் பார்க்கணும்னு சொல்லியிருந்தாக. வர நேரமாகும் போல. நீ கௌம்புண்ணே… பஸ்ஸை விட்டா நாளைக்குத்தான் பஸ்ஸூ…”

– கிளப்புவதிலேயே குறியாக இருப்பது போல் தோன்றியது. என்னவாக இருக்கும் என்று உள்ளுக்குள் குழப்பம் எட்டிப் பார்த்தாலும்.. ‘ச்சே, பெருசா எதுவும் இருக்காது…’ என்று தேற்றிக் கொண்டு நூறு ரூபாயை எடுத்து மலர் கையில் திணித்துவிட்டு, பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தான்.

“அடடே… மச்சானா…” என்ற குரல் கேட்க, திரும்பினான். மலர் புருஷன்… நன்றாகக் குடித்திருந்தான்… நிற்கக்கூட நிதானமில்லாதவனாக!

“பொங்கல் வரிசை வைக்க வந்தியா..?! ” – இளித்தான்.

“மச்சான்… வரவர கடையில வருமானமேயில்ல… கையிலயும் காசு இல்ல. ஆமாம்… பொங்கச் சீரு வெறும் சாமாஞ்செட்டாவேவா வச்ச…?”

காபி டம்ளரோடு மலர் நின்ற காட்சி சட்டென்று மின்னலாக வந்து மறைய… சட்டைப்பையிலிருந்து நானூறு ரூபாயை எடுத்து அவன் கையில் வைத்தான். “இது உங்களுக்கு மாப்பிள்ள…. அப்ப நான் வரேன்!” என்று ஜெயபால் கிளம்ப, அவனோ கையிலிருந்த பணத்திலேயே லயித்திருந்தான்.

பஸ்ஸில் அமர்ந்தபோது… கோபாவேச கோமளா மின்னி மறைய… அதையும் மீறி, ‘ரெண்டு நாளைக்காவது மலர் நிம்மதியா இருப்பா’ என்று ஜெயபால் நினைத்த நொடியில் பெருந்திரளாக திரண்ட கண்ணீர், எதிர்காற்று வேகத்தில் சிதறிக் கொண்டிருந்தது!

– ஜனவரி 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *