ராஜாராமனின் பெர்முடா- ட்ரை ஆங்கிள்…..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 10,532 
 

‘ஹை……இது என்ன ராஜாண்ணா…..ரெண்டு டிரை ஆங்கிள்….அதும் ஒன்னுக்கு மேல ஒன்னு..அப்புறம் கீழே குட்டியா அதுக்குள்ளே ஒன்னு வேற..இதுக்கல்லாம் என்ன அர்த்தம்…’

‘ராஜாத்தி..வா..வா..வா தங்கம்..ஆமா நீ மாத்திரம் தனியா வந்தா எப்பிடி நான்
ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சொல்ல முடியாதில்லே…முக்கிய விஷயமில்லையா …எல்லாத்தையும் கூட்டி வா கண்ணம்மா…’

“ஏய் எல்லாம் வாங்க…முக்கிய விஷயமாம்…ராஜாண்ணா..சொல்லப்போறான்
ரொம்ப முக்கிய விஷயம்..ஓடியாங்க…ஓடியாங்க….”

‘ஆரம்பிச்சுட்டானா…இன்னிக்கு என்ன அஜண்டாவாம்….’ என்றார் மாமா ‘இவன்னாவே ஸ்வாரஸ்ம்டா…சிவராமா……

‘டிரை ஆங்கிள் மாமா…’விளக்கினான் சிவராமன்….

‘நீள அகலம் சொல்லியிருப்பானே’ என்றார் மாமா

“ஆமா மாமா சொல்லியிருக்கான்….மேல முக்கோணம் முப்பத்தாறாம் கீழ் முக்கோணம் முப்பத்து எட்டாம்…”

‘பையனுக்கு சாமுத்திரிகா லட்சணம் அத்துபடியில்லே…ஆமா சின்ன முக்கோணம் என்னவாம்…’

‘அது ….வேரியபுள்…முக்கோணத்துக்கு முக்கோணம் மாறுமாம்…ஹெரால்ட் ராபின்ஸன் ஒரு இடத்திலே ஒன்னு சொல்றானாம்….என்னமோ சோன்னானே…மறந்து போச்சே….’

‘முக்கியமான இடம் வர்ரபோது நீ கோட்டை விட்ருவேன்னு ஊருக்கே தெரிஞ்சதுதானே…புண்ணாக்கு …புண்ணாக்கு…அடிக்கடி இவன் ஹெரால்ட் ராபின்சன்ங்கறானே …..நீ படிச்சிருக்கியா…’

‘ஹா…ஞாபகம் வந்துட்டது…இப் ஹர்…அந்த வார்த்தை மறந்துட்டது…’

‘சரி ..ஞாபகத்துக்கு வர்றத சொல்லு….’

‘இப் ஹர் டேஷ் ஈஸ் ஈஸ் ஆஸ் பிக் ஆஸ் ஹர் மவுத்…..’

‘சரி ….மலர் வர்றா நிறுத்து….’என்றார் மாமா ‘….அரை குறை…முட்டாப்பய…’

‘கேட்டுட்டுதான் மாமா வர்ரேன்…டேய் சிவராமா…அவன் ஆரம்பிப்பான்…தப்பிச்சுக்குவான்…நீ சிக்குவே….’

‘அவன் சொன்னதை திருப்பி சொல்றேன்…அதிலென்ன தப்பு மலரு…’

‘தப்பே இல்லே…இதா இந்த நம்பருக்கு போன் பண்ணிக்கேளு…அந்த டேஷ்க்கு சரியான வார்த்தை கிடைக்கும்…’

மலர் கொடுத்த சீட்டைப்பார்த்த சிவராமன் அலறினான்’…இது என் பொண்டாட்டி நம்பர் ஆச்சே. உனக்கு எப்பிடிக்கெடச்சது..அவளுக்கு டேஷ்க்கு சரியான வார்த்தை தெரியும்னா இவனை மாதிரி அவ மறைக்கவே மாட்டா…இப்பவே கேட்கறேன்…’

‘உனக்குப்போய் மறைப்பாளா…கேளு…கேளு…’ இன்னிக்கு நீ செத்தேடா சிவராமா’என்று வன்மத்துடன் முணகிக் கொண்டாள்…இதே வேலையாப்போச்சி உங்களுக்கு….நாய்களா….’

சிவராமனின் பத்தினி செல்லில் வந்தாள்…சிவராமன் ஆரம்பிதான்’…சசீ ..ஒரு வரி சொல்றேன்..அதுல ஒரு டேஷ் வருது….அத கரெக்கடா..கண்டு பிடி…என்னப்பா…இப் ஹர் டேஷ் ஈஸ் ஆஷ் பிக் ஆஸ் ஹர் மவுத்…அதுக்கு மேல அந்த ராஜாப்பய சோன்னது மறந்துட்டது சசீ…அந்த டாஷை இப்ப நான் பில் பண்ணணும்டா…உடனே சொல்லுப்பா…’

‘உன் பக்கத்திலே யாரு யாரு இருக்கா சிவூ…’

‘இந்தப்பக்கம் மாமா…பக்கத்திலே மலரு..கொஞ்சம் தள்ளி அந்த ராஜாப்பய..என்னைப்பார்த்து அவ்வளவுதானா நீங்கற மாதிரி கேவலமா இளிக்கறான்…எவ்வளவு திமிர் தெரியுமா அவனுக்கு…மாமாவுக்கும் அதை பில் பண்ணத்தெரியல்லே….நீதான் பில் அப் த ப்ளாங்க்ஸ் எக்ஸ்பர்ட் ஆச்சே..உடனே அந்த டேஷைப் பில் பண்ணுடா…அப்புறம் அந்த வரியை முடி…என்ன….முடியுமில்லே…

‘உடனே முடியாதுப்பா..அதுக்கு கொஞ்சம் வேலை செய்யனும்…உன் ஒத்தாசை வேணும் …’

‘என்னவேணாலும் செய்யலாம்…அந்த டேஷைப் பில்லப் பண்ணலே என் மண்டை வெடிச்சிடும் தங்கம் இது மானப்பிரச்சினைடா…முடிச்சிட்டுத்தான் தூங்கறது என்ன…

‘ரொம்ப டெனஷன் ஆகாதே சிவு..நான் இருக்கேனில்லே…சீக்கிரம் வந்துடு..உன்னை வச்சிட்டுத்தான் செய்யனும்..என்ன…வச்சிடறேன்…சரியா….’

‘மாமா என் பொண்டாட்டி கரெக்டா டேஷுக்கு அர்த்தம் சொல்லுவா…இவன் வார்த்தயை அரை குறையா சொல்லி மறைப்பானாம்…நான் விடுவனா என் பொண்டாட்டி இந்த டேஷ் பில் பண்றதிலே எமகண்டி…படிக்கிறபோதே….

மலர் ஆரம்பித்தாள்’…சிவராமா தவறிடாதே…எதுக்கும் கொஞ்சம் அல்வா வாங்கிட்டுப்போ அவ சரியான ஏமாத்துக்காரி…முக்கியம்னு தெரிஞ்சா இழுத்தடிப்பா…’

‘அதெல்லாம் அய்யாவை ஏமாத்த இவங்க பாட்டி வந்தாலும் முடியாது ஆகாது…போட்டுப்பெரட்டிட மாட்டேன்….சிவராமனா கொக்கா…’

‘அப்பிடிப்போடு…பாட்டியெல்லாம் சப்ஜெக்டுக்கு வேணாம்…என்ன…’

‘கரெக்ட் இவளை வச்சே சப்ஜெக்டை முடிச்சுடறேன்…ஜெய் சரோஜாதேவி..’

மலருக்கு மயக்கமே வந்து விட்டது…ராஜாவைப் பார்த்தாள்…அவன் ஒன்றும் தெரியாத மாதிரி கட்ப்யூட்டரில் என்னவோ செய்து கொண்டு சாது மாதிரி இருந்தான்..நமுட்டுச்சிரிப்பு….

‘என்னடா இளிக்கிறே…எவனையாவது எதுக்காவாது தூக்கி விட்டுடறே…அப்புறம் அமுக்குக் கள்ளன் மாதிரி பாசாங்கு பண்ணு….அவன் என்னவோ ஜெய் சொல்றான்..உன் உபாத்தியாயமா….

‘பாரு மலரு …எனக்கும் அவனுக்கும் பேச்சே இல்லை…வந்தான்….நின்னான்..கேட்டான்…மாமா கிட்டக தானா போய் கருவினான் உன் பொண்டாட்டிகிட்ட போய் டேஷுக்கு அர்த்தம் கேளுன்னு நானா சொன்னேன்….ஏ குட்டிகளா…நீங்க சொல்லுங்க…என் மேல என்ன தப்பு….’

‘அக்கா ராஜான்னா உனக்கு எளக்காரம் எப்ப பார்த்தாலும் அவனையேதிட்டுவே…ராஜாண்ணா நீ அந்த முக்கோணத்துக்கு அர்த்தம் சொல்லு…நீ எது சொன்னாலும் சரியா இருக்கும்…’

‘நான் சொல்றேன் இங்க வாடி ..முக்கோணம்…. முக்காத கோணம்..எல்லாம் சொல்றேன் இங்க வா…..’ என்றாள் மலர்…

‘அக்கா அது பேரு பெர்முடா ட்ரை ஆங்கிளாம்…’ இது விசாலம்…

‘அது பக்கத்திலே போனா காந்தம் மாதிரி இழுத்துருமாம்…தப்பிக்கவே முடியாதாம்….அது பக்கத்திலே போன யாரும் இதுவரை தப்பிச்சதே இல்லையாம் அந்த ட்ரை ஆங்கிள் எங்கக்கா இருக்கு…அதிசயமா இல்லே…’ என்றாள் ஷகீலா..

‘அவனுங்களுக்கு எல்லாம் அதிசயம்தாண்டி ‘

‘நீ எனக்குக் காட்ரியாக்கா உடனே பாக்க முடியும்னு ராஜாண்ணா சொல்றான்…எப்பிடிக்கா அது…’

“காட்டு மலரு அவங்க அவ்வளவு ஆசைப்படறாவ்க இல்லே… என்றான் ராஜா…அப்புறம் ஆண்டாள் பாசுரம் பதினொன்னலே…..புற்றரவு ம்ம்ம்ம்ம்ம் புனமயிலே…..ன்னு….

‘கையில் இருந்த பேனாவை அவன் மீது வீசினாள்….செறுப்பால அடிப்பேன் ஓடிரு…போங்கடி எல்லாம்…வந்துட்டாளுங்க….முக்கோணமாம் அதுல வேரியபுள் சைஸ் வேறயாம்….பரதேசி… உன்னைச்சாக அடிக்கனும்டா…..’

காலையில் ராஜாராமன் வரவுக்கு காத்திருந்த மாதிரி சிவராமன் எழுந்து ராஜாவிடம் வந்தான்’….நீ என்னடா மனசிலே நெனைச்சிட்டிருக்கே…பெரிய இவனா நீ…உன்னாலே என் பொண்டாட்டி மின்னடி என் மானமே போச்சி என்னை அவ கிட்ட கவுத்துட்டியேடா என்பதஞ்சி நாள் வைராக்கியம் இந்த நாயால கெட்டுப்போச்சி மாமா சரியா மாட்டிகிட்டேன்….ஒதைக்கனும் இவனை…என்னை ஏண்டா அப்பிடி மாட்ட வச்சே…பூனைக்கண்ணா…திருட்டு முண்டம்….’

‘சாந்தி…சாந்தி….சாந்தி…அவசரப்படாதே…… மாமான்னு ஒருத்தன் நான் எதுக்கு இருக்கேன் ..விஜாரிப்போம் ..குத்தம் செஞ்சா தண்டனை நிச்சயம்….’

‘இருங்க மாமா… மொதல்லே கவுந்துட்டான்னு சொன்னான்…அப்புறம் மாட்டிகிட்டதா சொல்றான்..தீர விசாரிங்க மாமா…கவுத்து மாட்டிகிட்டானா இல்லே மாட்டிட்டு கவுந்தானா..சரியா சொல்லச்சொல்லுங்க…என்றான் ராஜா..

‘ விசாரிக்கிறன்டா விடுவனா ….ஏண்டா சிவூ எனக்கு ஒரு சந்தேகம் …கவுந்து மாட்டிகிட்டயா இல்ல மாட்டிகிட்டு கவுந்தியா….அதான்அவனோட கேள்வி..

‘நீங்க என்ன கேக்க வர்ரீங்கன்னே புரிய லை மாமாஇவனாலே எல்லாமே கெட்டு தலை கீழாப்போச்சி….’

‘மாமா தலைகீழாப் போச்சிங்கறான்….கன்ப்யூஸா இருக்கு…

‘என்ன மாமா இவன் பேசறான்…..டேய் உன்னை….’ என்று சிவராம்ன் கை தூக்கியபோது மலர் குறுக்கே வந்தாள்..

‘டேய் டேய்…இருங்கடா பேச்சு பேச்சா இருக்கனும்…அதான் நம்ம ஆபிஸ் விதி…எவனானாலும் கை தூக்ககூடாது…நீ உன் கேபின் போ…’

‘முடியாது அவன் பேசியே உன்னைக் கவுத்துடுவான் சூரன்…’என்றான் சிவராமன்…

தலையில் அடித்துக்கொண்டாள் மலர்…’மொதல்லே நீ அங்க போ நீ..சொன்னதை செய்யி …..சிவராமன் விலக ‘டேய் நீ என் கேபினுக்கு வா’ என்றாள் ராஜாவிடம்…..

‘என்ன நடக்குது மலரு …’என்றார் மாமா….

‘அது ஒன்னுமில்லே மாமா…நீங்க மாமாவா இவன் மாமாவான்னு இப்ப சர்ச்சை..சரியா …சும்மா கை சூப்பிட்டு நிக்காதீங்க….’

‘ஐயோ என்னை விடும்மா…நான்இந் பஞ்சாயத்துக்கு தலைவரே இல்லே…’

ராஜா சமர்த்தாக மலரின் பக்கத்தில் உட்கார்ந்தான்…..

‘மடியிலே உட்கார்ந்துகோடா கண்ணா …ச்சீ..தள்ளி உட்காரேன் …கட்டிப்பிடிச்சிதான் உட்காருவே….மூஞ்சைப்பாரு…..’

‘கோச்சுக்காதே மலரு நீ கூப்பிட்டுதானே வந்தேன்…அப்புறம் ஏன் கடிக்கறே…’

‘சரி என்ன பிரச்சினை…ஏன் அவன் உர்ருன்னு வர்ரான்….’

‘அது மலரு ..ஒரு வரியிலே சொல்லிடறேனே…இவனும் இவன் பெண்ட்டாட்டியும் ஆறுமாசமா டூவாம்…’

‘டூவா…அப்பிடின்னா என்னடா…’

‘மக்கு ..இது கூட புரியலை…ஒரே ரூம்லே ஒரே பெட்லே தனித் தனியாம் புரியதா…’

‘ஓ…சரி ..சரி…ஏனாம் ..ஆமா இதெல்லாம் உனக்கெப்பிடிடா தெரியுது…’

சொல்றேன்… சொல்றேன்…ஒரு நா பேச்சு வாக்கிலே அதெல்லாம் ஆறு மாசமாச்சி மாப்புளேன்னான்..என்னடா இதுன்னு சந்தேகப்பட்டு பையனை ஒரு கிளப்புக்கு தள்ளிட்டுப்போயி ஸ்ட்ராங்கா ரெண்டு லார்ஜ் ஊத்தி விட்டனா ..பையன் கவுந்துட்டான்…’

‘இந்த கவுந்துட்டான் பாஷை விடறியா ..அருவெருப்பா இருக்கு….’

‘நீங்க பேசறீங்க….அப்பமாத்திரம் சரியா…’

‘டேய்….’

சரி…அத விடு விஷயத்துக்கு வர்ரேன் …..நல்லா தலைக்கு ஏறிடுச்சா..மெல்ல ஆரம்பிச்சேன்….. ஏண்டா இப்பிடியாச்சு…உன் பெண்டாட்டி நல்லவளாச்சே என்னடா உன் பிரச்சினைன்னா அழுவறான்…… அழுவறான்….அப்பிடி அழுவறான்….மாப்ளே….என் பொண்டாட்டி அழகுடா…என்னை விட ரொம்ப அழகுடா ..நாளைக்கு பொறக்குற குழந்தை அழகில்லேன்னா எல்லாரும் என்ன சொல்லுவாங்க…இவ கூட என்னை ஒரு மாதிரியா பார்க்க மாட்டாளான்னு கதற்ரான்…என் குழந்தை அழகில்லேன்னா என்னலே கூடத் தாங்க முடியாதுங்கறான் மலரு ……….அதான் ஆறு மாசமா இந்தப்பய சொரத்தில்லாம திரியறான்…முதுகு காமிச்சி படுக்கறானாம்…உடம்பு எதாவது சரியில்லையான்னு கூட அவ கேட்டிருக்கா…சரியா…

‘ஓ..இப்பிடிப் போகுதா கதை….அவன் எப்பவோ மனசால ரொம்பவும் பாதிக்கப்பட்டவண்டா…’

‘இதேதான் பிரச்சினை…யோசிச்சேன்…ஒரு ஐடியா வந்த்து…நேத்து பையன் அவனா வந்து மாட்னான்… இவன் கேனத்தனம் உலகப்பிரசித்தம் விடுவனா…..சிக்குனடா சிங்காரம்னு ஒரு பிட்டைப்போட்டேன்…பையன் அம்மணி கிட்ட போயி டேஷை பில்லப் பண்ணுண்ணு கேட்டிருப்பான் அடமே பிடிச்சிருப்பான்….அம்மணி சான்ஸை விடுவாளா….இதாண்டா டேஷ்னு அம்மனி கலாய்ச்சிருப்பா பையன் கிளீன் போல்ட்… கவுந்துட்டான்….’

‘ச்சீ …சனியனே …வாயை மூடு….. கர்ம்ம்…உங்கிட்ட பேச வந்தேன் பாரு….எந்திருச்சி போடா…’

‘உங்க காரியம் முடிஞ்சிருச்சி இப்பிடித்தான் தொரத்துவீங்க ..தெரிஞ்சதுதானே…’

‘ஓடிரு …கொர வளையக்கடிச்சுருவேன்…’

மாமா தன் இடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்….மலர் தன்னிடத்தில் இருந்து சிவராமனை அழைத்தாள்….’போடா எம். டி கூப்புடுறா…போ…’

சிவராமன் மலருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்’…இன்னம் பக்கத்திலே வாடா…’என்றாள் மலர்…

‘அந்தக் காலிப்பயலை மாதிரி வெக்க மில்லாம தேச்சிட்டு உட்கார என்னாலே முடுயாது மலரு…’

‘சரி ..சரி..அவனை விடு ஆமாம்..காலையிலே அவன் கிட்ட என்னடா சண்டை…அடிக்க வேற போற …அவனானா நான் ஒன்னுமே பண்ணலைங்கறான்….’

‘அவனை நம்பாதே மலரு ….அவன் பயங்கர பிராடு….’

‘சரி இருக்கட்டும் உன் பிரச்சினை என்ன….எதுக்கு கோபம்…..’

சிவராமன் மௌனமாக இருந்தான்’….சொல்லு உன் பிரச்சினை என்ன…என்னை நம்பதானா சொல்லு….’

‘சரி சொல்றேன்…ரகசியம் சரியா…’

‘சரி…யாருகிட்டயும் உன் விஷயம் பேச மாட்டேன் …சத்தியம் சரியா…’

‘சரி நான் என்ன சொன்னாலும் கேட்டாலும் நீ திட்டக்கூடாது…’

‘திட்டமாட்டேன்…’

சிவராமன் ஆரம்பித்தான்’…..மலரு …நீ ரொம்ப அழகு…ரொம்ப ரொம்ப..சரியா…’

‘ஆமாம் ..நிஜம்தான்….அதுக்கென்ன இப்போ…’

‘உங்க அம்மா அப்பா எல்லாம் இவ்வளவு அழகா இருப்பாங்களா மலரு…’

‘கெடையாது…ரெண்டு பேரும் சாதாரணமா இருப்பாங்க…’

‘அப்புறம் நீ அழகா இருக்கே….அது எப்பிடி…

‘அட பைத்தியக்காரா..எங்க அப்பாவோட அப்பா அழகாம்..அவங்களோட அம்மா கூட அழகாம்…அம்மா மாதிரி அப்பா மாதிரியே பிள்ளைகள் பொறக்காது…பரம்பரை இருக்கு….வேற நல்ல நிறைய விஷயங்கள் குழந்தைகளோட அழகைத் தீர்மாணிக்கும்…நல்ல எண்ணம்..அழகான கற்பனை.. சிந்தனை..பராமரிப்பு.. தாய்ங்கறவ சந்தோஷமா இருக்கனும்…இப்பிடி நெறைய விஷயங்கள் இருக்கில்லே….அதான் கொழந்தையை உருவாக்குது….’

‘அவ்வளவு எனக்குத்தெரியாது மலரு… நான் சுமாராத்தான் இருப்பேன் …ஸ்கூல்ல வாத்தியார் பசங்க எல்லாரும் என்னைக் குரங்கான்னு தான் கூப்பிடுவாங்க…விளையாட்டுலே கூட சேர்த்துக்க மாட்டாங்க…’

‘உங்க அம்மா உன்னை என்ன சொல்லி கூப்புடும் ….’

‘என் ராசான்னுதான் என்னை சொல்லும் பொண்ணு பார்க்க போன போது கூட எம் புள்ளைக்கென்ன அப்பிடி ராசா மாதிரி இருப்பான்னு தான் சொல்லிச்சு…’

‘அவதான் அம்மா… ஆமா அழகுன்னா என்ன…ஆம்பிளை பொம்பிளை யாரானும் அவங்க கிட்ட ஒரு அழகு இருக்கும் தெரியுமா…’

‘அதெல்லாம் தெரியாது மலரு ..ஆனா எம் பொண்டாட்டி அழகு …என்னை விடக்கூட…ஏன்.உன்னை விடக்கூட …’

‘சிவூ…இப்பிடிச்சொல்றதாலேதான் நீஅழகு…..சரியா…’

மலரு …எனக்கொரு ஆசை….’

‘என்ன….சொல்லுப்பா…’

‘இந்த தடவை கொழந்தைதான்னு அவ நிச்சயமா சொல்றா….எனக்கு பெண் குழந்தை பிறந்தா உன்னை மாதிரி பொறக்கனும்…ஆண் குழந்தை பிறந்தா நம்ம ராஜா மாதிரி பொறக்கனும்…..’

‘அப்பிடியே நடக்கும் ததாஸ்த்து….இதோட இதையும் சேர்த்துக்கோ…சிவராமன் மாதிரி வெள்ளந்தியா கபடில்லாத புத்தி இருக்கனும்னு வேண்டிக்கோ….அதான் உண்மையான அழகு..சரியா….’

சிவராமன் மலரின் ஏந்திய இருக்கரங்களில் அழுது கொண்டிருந்தான்…..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *