கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 2,515 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, தலைமைக் குமாஸ்தா சொன்ன விவரங்கள் புரியாமல், இன்னொரு பெண் குமாஸ்தாவிடம், சில ஃபைல்களை எடுத்துக் கொண்டுபோய் நின்ற போது, ஏதோ பெயருக்கு அந்தப் பெண் குமாஸ்தா விளக்கினாளே தவிர, அவள் பேசிய தோரணை, இனிமேல் என்னை நச்சரிக்காதே’ என்பது போலிருந்தது.

இயல்பிலேயே பயந்த சுபாவத்துடன், தாழ்வு மனப்பான்மை கொண்ட வசந்தி, பயத்தினால் திக்கித் திக்கிப் பேசுவதைப் பார்த்து, அலுவலகத்தில் பலர், அவள் வேலை ஏதாவது கேட்டால் கோட்டா செய்தார்களே ஒழிய, சொல்லித் தரவில்லை.

எஸ்.எஸ்.எல்.ஸி.யில் படித்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு அவளால் ஃபைல்களில் குறிப்புக்கள் எழுத முடியவில்லை. ஒருநாள் தலைமைக் குமாஸ் தாவே, “ஆமாம்மா. நீ எப்படி எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணினே?” என்று குத்தலாகக் கேட்டார்.

அந்தச் சமயத்தில் இன்னொரு பெண் – வயது நாற்பது இருக்கும் – மிஸஸ் பரிமளம் ராமச்சந்திரன், “இந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.ஸி. அந்த காலத்து இ.எஸ்.எல்.எபி. கிட்டகூட (எட்டாம் வகுப்பு) நிற்க முடியாது” என்றாள்.

உடனே தலைமைக் குமாஸ்தா, ‘அப்படியும் சொல்லிட முடியாது. இந்த வருஷந்தான் என் பொண்ணு எஸ்.எஸ்.எல்.ஸி. எழுதி இருக்கிறாள். அவள் எழுதுற இங்லிஷ் அவ்வளவு அருமை. எனக்கே புரிய மாட்டாக்கு” என்றார். அவர் பேசிய தோரணை, தன் மகளுக்கு, அந்த அலுவலகத்திலேயே ஒரு வேலை கிடைப்பதற்கு முன்னுரை கூறுவதுபோல் தோன்றியது.

நடுங்கும் கைகளிலேயே, பைலை வைத்துக் கொண்டு நின்ற வசந்தியைப் பொருட்படுத்தாமலே, இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். வசந்தி, தன் இருப்பிடத்திற்கு நகரப் போனாள். அதைப் பார்த்த தலைமைக் குமாஸ்தா, “ஆமா. உன் மனசில என்னதான் நினைச்சிக்கிட்ட? கொஞ்ச நேரம் காத்து நிற்க முடியாதோ? கொண்டா ஃபைலை.” என்று கத்தினார்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்த நாற்பது வயதுக்காரி, பெரிதாகச் சிரித்தாள். பைல்களில் தலைகளை விட்டுக் கொண்டிருந்த சில குமாஸ்தாக்கள், தத்தம் தலைகளை உயர்த்திவிட்டு பிறகு எதுவுமே நடக்காததுபோல் குனிந்து கொண்டார்கள்.

தலைமைக் குமாஸ்தா மீண்டும் கத்தினார். “ஆமா.. எந்த ஸ்கூல்ல படித்தே?”

வசந்தி, ஒரு பெயரைச் சொன்னாள்.

“எஸ்.எஸ்.எல்.ஸிலே எவ்வளவு மார்க் எடுத்தே?”

வசந்தி எடுத்தது குறைவான மார்க். ஆகையால் பதிலளிக்காமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

தலைமை விடவில்லை. “நான் சொல்றது காதுல விழல? எத்தனை மார்க்கு?”

“இருநூற்று எண்பது.”

“அதான கேட்டேன். இங்லீஷ்ல எவ்வளவு? அட. சொல்லும்மா. நான் சொல்றது காதுல விழல? சொல்லு”

“முப்பத்தஞ்சு…”

“முப்பத்தஞ்சு கிடைச்சதே ஆச்சரியம். எல்லாம் என் தலையெழுத்து. உங்கள மாதிரி ஆட்களைக் கட்டி மாரடிக்க வேண்டியதிருக்கு ஒழுங்கா வேலையைக் கத்துக்க இல்லன்னா மானேஜர்கிட்டச் சொல்லிச் சீட்டைக் கிழிக்க வேண்டியதிருக்கும்.”

வசந்திக்குத் தன் குடும்ப நிலையைச் சொல்லி, அப்படி அவர் எதுவும் செய்துவிடக் கூடாது என்று அவரைக் கும்பிட வேண்டும் போலிருந்தது. ஆனால், அவர் பார்த்த பார்வை, அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. பேசாமல், இருப்பிடத்தில் வந்து தொப்பென்று உட்கார்ந்தாள். அன்று இரவு, அவளால் துரங்க முடியவில்லை.

ஒரு வாரம் ஆகியிருக்கும். மானேஜர் அவளைக் கூப்பிட்டு அனுப்பினார். வசந்தி கைகால்கள் நடுங்க, அவர் அறைக்குள் போனாள். இண்டர்வியூ சமயத்தில் சிரித்த முகத்துடன் அவரைப் பார்த்து, அதையே மனத்தில் பதிய வைத்திருந்த வசந்திக்கு, இப்போது மானேஜர் கடுவன் பூனை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருந்தது பயமாக இருந்தது. நாக்கு, பல்லில் ஒட்டிக் கொண்டு வெளியே வர மறுத்தது.

மானேஜர் டை’யைச் சரிசெய்து கொண்டே அவளிடம் பேசினார். “நீ இன்னும் ஒர்க்கை பிக்கப் பண்ணலன்னு ஹெட் கிளார்க் சொல்றார். தப்பில்லாம இங்லீஷ்ல ஒரு சென்டன்ஸ்கூட உன்னால எழுத முடியல. பதினைஞ்சு நாள் டயம் கொடுக்கிறேன். அதுக்குள்ளே வேலையைக் கத்துக்க… இல்லன்னா. ஐ அம் ஸாரி. நான் வேற கிளார்க்கைப் போட வேண்டியதிருக்கும்.”

வசந்திக்கு, அவரிடம் எவ்வளவோ பேச வேண்டும் போல் தோன்றியது. ‘சமுதாயத்தின் அடித்தளத்தில் இருந்து வருகிறவர்கள், முதலில் அப்படித்தான் இருப்பார்கள்; ஆனால் போகப் போகச் சரியாகிவிடுவார்கள்’ என்று வாதாட வேண்டும் போலிருந்தது. வண்டி இழுத்துக் கஷ்டப்பட்ட அப்பாவும், வடை விற்றுப் பிழைப்பு நடத்தும் அம்மாவும், பள்ளிக்கூடத்திற்குப் போகும் தம்பி, தங்கைகளும்தான் வேலையின் சேர்ந்ததன் மூலம், வீட்டில் பாலும் தேனும் ஆறாய் ஒடப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அந்த எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட வேண்டாம் என்றும் மன்றாட வேண்டும் போலிருந்தது. ‘விசுவாசம் இருந்தால், எந்த வேலையையும் கற்றுக் கொள்ளலாம் என்றும், தனக்குத் திறமை இல்லையென்றாலும் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விசுவாசம் இருக்கிறது என்றும், அவரிடம் அடித்துச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் வாயைத் திறக்க முடியவில்லை. அப்படித் திறந்தால் கண்களில் முட்டி நிற்கும் நீர் கன்னங்களில் விழுந்து காட்டிக் கொடுத்துவிடும் போலிருந்தது. பேசாமல் தலையைக் குனிந்துகொண்டே திரும்பினாள்.

ஒருசில நாட்கள் ஓடின.

அன்றும் வசந்தி, வழக்கம்போல், அலுவலகத்திற்கு, மற்றவர்கள் வருவதற்கு முன்னதாக வந்துவிட்டாள். அவள் நாற்காலியில் ஒர் இளைஞன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அவள் லேசாகத் தயங்கினாள். அவன் சகஜமாகப் பேசினான்.

‘நான்தான் பிரகாஷ், லீவில் போயிருந்தேன். இன்னைக்குத்தான் டியூட்டியில் சேரப் போறேன். நீங்கதான் மிஸ் வசந்தின்னு நினைக்கிறேன். ‘அம் ஐ கரெக்ட்?’.

வசந்திக்கு, மற்றப் பெண்களைப்போல், ‘யு ஆர்’ என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவன் மிஸ் என்று சொன்னது அவளுக்குப் பெருமையாகத் தோன்றியது. இதுவரைக்கும் எவரும் அவளை அப்படி அழைத்ததில்லை. அவள், அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவன் மீண்டும் பேசினான்.

“அந்த ஹெட்கிளார்க் கிழம் கரிச்சுக் கொட்டுமே? எப்படி சமாளிக்கிறிங்க, மேடம்?”

அவன், மேடம்’ என்று சொன்ன வார்த்தையில், வசந்திக்கு அந்தத் தலைமைக் குமாஸ்தா ஏசும் ஏச்சுக்கள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவள், இப்போது சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

“சொல்லுங்க மேடம். அந்த ஆளு உங்களக் கன்னா பின்னான்னு திட்டியிருப்பானே. பேச மாட்டிங்களா? ‘பெண்ணுக்கழகு மெளனம்’னு பெரியவங்க சொல்லு வாங்க. நீங்க ஏற்கனவே அழகாய் இருக்கிங்க. இதுக்கு மேல அழகு தேவையில்ல. மெளனத்தைக் கலைக்கலாம்.”

இப்போது அவள் சிரித்தே விட்டாள்.

“அவர் என்னைத் திட்டுறது உங்களுக்கு எப்படி தெரியும்?”

“பிரண்ட்ஸ் சொன்னாங்க டோண்ட் ஒர்ரி, இனிமேல் நான் இருக்கேன். அது, நாட்டாமை ஒண்னும் பண்ண முடியாது. ஐ ஆம் ஸாரி. நான் உங்க நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறதை மறந்துட்டேன். கமான், டேக் யுவர் எபீட் மேடம்.”

வசந்திக்குப் பிறப்பின் பெருமையை இன்றுதான் உணர்ந்ததுபோல் தோன்றியது. அன்றும் வழக்கம்போல், தலைமைக் குமாஸ்தா அவளைக் கரித்துக் கொட்டினார். “ஏம்மா, ப்ளீஸ் இஷ்யு ஆர்டர்’னு எழுதாமல், ப்ளிஸ் ஆர்டர் இஷ் யு’னு எழுதினால் என்ன அர்த்தம்? பழையபடியும், ஏபிஎபிடி படிச்சு, இங்லீஷ் கத்துக்க” என்றார் காரமாக.

பிரகாஷால் பொறுக்க முடியவில்லை.

“அந்தப் பொண்ணு பாவம், புதுசு. பக்குவமாச் சொல்லி கொடுக்கிறத விட்டுப்புட்டு, டபாய்ச்சா என்ன ஸார் அர்த்தம்? நீங்க கூடத்தான் ஐந்து வருஷத்துக்கு முன்னால “மானேஜிங் டைரக்டர் புறப்பட்டுவிட்டார்’னு சொல்றதுக்காக, எம். டி. பாஸ்ட் அவே’ன்னு எழுதினிங்கன்னு மிஸஸ் பரிமளம் ராமச்சந்திரன் சொன்னாங்க” என்று அடுத்த செக்க்ஷனுக்கு எட்டும் படியாகக் கேட்டான்.

தலைமைக் குமாஸ்தா பதிலே பேசவில்லை. மிஸஸ் பரிமளம் ராமச்சந்திரன் விக்கித்துப் போனாள். எழுதியது எப்படி உண்மையோ, அப்படி, அவள் பிரகாஷிடம் சொன்னதும் உண்மை.

இப்போது, வசந்திக்குத் தலைமைக் குமாஸ்தாவையே கிண்டல் செய்யவேண்டும்போல் தோன்றியது. என்.ஸி.ஸி. பெண்ணைப்போல், இருக்கையில் வந்து உட்கார்ந்தாள். பிரகாஷ், அவளை எழுத விட வில்லை. அவள் எழுத வேண்டிய ஃபைல்களுக்கு, அவனே குறிப்புக்களை எழுதிக் கொடுத்தான்.

லஞ்ச் வேளையில், அவள் அவனை நன்றியறிதலோடு பார்த்துக் கொண்டே, “அந்தக் கிழத்த நல்லாக் கேட்டிங்க. ஆமா.. எம்.டி. பாஸ்ட் அவேன்னு எழுதினால் தப்பா?” என்று கேட்டாள்.

“பாசுடு அவேன்னா இறந்துட்டார்னு அர்த்தம்.”

வசந்தி, விழுந்து விழுந்து சிரித்தாள். அவளின் சீரான வெண்முத்துப் பற்களை ரசித்துக் கொண்டே, “வசந்தி, உனக்குப் பச்சைப் புடவை எடுப்பாய் இருக்கும்” என்று சொல்லிவிட்டு, அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். அதில், எந்தவிதமான சினக்குறியும் தெரியவில்லை. அதே நேரத்தில், அவன் பேச்சின் நோக்கைப் புரிந்து கொண்ட பாவமும் இல்லை. “என்ன, நான் சொல்றேன். நீ பதிலே சொல்லல?”

இப்போது அவள் பதிலளித்தாள். “அப்போ இந்தப் புடவை நல்லா இல்லியா?”

“உன் சிவந்த உடம்புக்குப் பச்சை நிறம் எடுப்பாய் இருக்கும். அப்புறம் காதில் இருக்கிற கம்மலைத் தூக்கி எறிஞ்சிடு, நல்ல ரிங்கா வாங்கிப் போடு. ஜாக்கெட்ல கை இவ்வளவு நீளமா இருக்கக் கூடாது.”

“ஸார், நீங்க எந்த ஸ்டுடியோவிலேயும் மேக்கப் மேனா இருந்திங்களா?” என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்.

பிரகாஷிற்கு உற்சாகம் ஏற்பட்டது. அவளைத் தொட வேண்டும் போலிருந்தது. ஆசையை அடக்கிக் கொண்டான். விட்டுப் பிடிக்க வேண்டும். முன்பு அவசரப்பட்டதால், கமலாவை அவனால் பிடிக்க முடியாமல் போனது மட்டுமில்லாமல், அவள், அவன் மனைவியிடமே புகார் செய்துவிட்டாள்.

இப்போது, தலைமைக் குமாஸ்தா, அவன் இல்லாத சமயங்களில்தான், அவளைத் திட்டுவார். ஒரு சமயம், அவன் எங்கேயோ, வெளியே போயிருந்தான். வசந்தி, இருக்கையில், கீண்ணிர் வராக் குறையாக இருந்தாள். தலைமைக் குமாஸ்தாவின் டோஸ் நீண்டு கொண்டே இருந்தது. நீ எழுதற இங்கிலீவுைச் சொன்னா என் பொண்ணு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்’ என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், பிரகாஷ் வந்துவிட்டான்.

“ஏன் ஸார் எப்ப பார்த்தாலும் உங்க பெண்ணை இழுக்கறிங்க? இன்னொரு வேகன்ஸி வராமலா போயிடும்? இந்தப் பெண்ணை நிறுத்திட்டுத்தான் உங்க பெண்ணுக்கு வேலை கொடுக்கணுமா என்ன?” என்று அவன் சொன்ன போது, தலைமைக் குமாஸ்தா தனக்குள்ளேயே முனங்கிக் கொண்டாரே தவிர, அவனுக்கு வெளிப்படையாக விடையளிக்கவில்லை. அவன், மானேஜிங் டேரக்டருக்குத் துரத்து உறவு. மானேஜரே அவனுக்குப் பயப்படுகிறார். அதோடு, பயல் மொட்டைப் பெட்டிஷன் போடுவதில் சமர்த்தன்.

மாலையில், அலுவலகம் முடிந்ததும், வசந்தி, அவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாள். “நீங்க சொல்றதுமாதிரி அந்தக் கிழம் தன்னோட மகள வைக்கிறதுக்காக என்னைத் திறமையில்லாதவள்னு நிரூபிக்கப் பார்க்குமோ?” என்றாள்.

“வசந்தி. இந்த மாதிரி சமாச்சாரங்களை, இந்த மாதிரி இடத்தில நின்று பேசக் கூடாது. வா, அந்த ஒட்டலுக்குப் போவோம். அங்க போய்ப் பேசலாம்.”

வசந்தி முதலில் தயங்கினாள். பிறகு, அவன் செய்த உதவிகளுக்கு நன்றி காட்டுவதுபோல், நடந்தாள். பேமிலி ரூமிற்குள் அவன் நுழைந்தான். அவள் கால்கள் தயங்கின.

“இங்க வந்து கலாட்டா பண்ணாதே. ரெண்டு பேரையும் தப்பா நினைப்பாங்க, என்னைப் பார்த்தால் தப்பா நடக்கிறவன் மாதிரி தெரியுதா?” என்றான் சற்றுக் கோபமாக.

வசந்தி, அந்த அறைக்குள் போனாள். அவன் எதிர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். “நான் உன்னிடம் நட்பைத்தான் எதிர்பார்க்கிறேன். சத்தியமாய் வேற எதையும் எதிர்பார்க்கல” என்று சொன்னது, அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அவர்கள் இருவரும் அடிக்கடி ஒட்டல்களுக்குப் போய் வருவது வாடிக்கையாகிவிட்டது. அவன், அவளுக்கு எதிர்த்தாற்போல் உள்ள நாற்காலியில்தான் உட்காருவான்.

அன்று சம்பள தினம். அவளுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை.

இருவரும், வழக்கமான ஒட்டலுக்குப் போனார்கள். பிரகாஷ், அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“டோண்ட் ஒர்ரி வசந்தி, ஹெட் ஆபீஸ்ல இருந்து கன்பர்மேஷன் வந்திடும். வெறும் பார்மாவிட்டிதான். மானேஜர் உனக்குக் கொடுத்த வேலையை, அவர்கள் உறுதி செய்து ஆர்டர் போடவேண்டியது அலுவலக விதி. பைலை எழுத வேண்டிய கிளார்க் லீவுல போயிருப்பான். நான் எதுக்கும் எங்க மாமாவுக்கு (எம்.டி.) நாளைக்கு எழுதுறேன்.”

“நான் இந்த மாதம் நானூறு ரூபாய் வாங்கிட்டு வருவேன் என்கிற தைரியத்துல எங்க அப்பா வண்டி இழுக்கிறத நிறுத்திட்டாரு. இரு நூறு ரூபாய் கடன் இருக்கு கடன் கொடுத்தவன் மோசமான மனிதன், போன மாசம் பக்கத்து வீட்டுக்காரங்களை மானம் போறமாதிரி பேசிட்டான். பிரகாஷ், வேலை போயிடாதே?”

வசந்தியால் கண்ணிரை அடக்க முடியவில்லை. பிரகாஷ், அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். “அசடே, இதுக்கா அழுவுறே? உனக்கு ரெண்டு மாதச் சம்பளம் சேர்ந்து வரப் போகுது. இந்தா, இருநூறு ரூபாய். ஏன் யோசிக்கிறே? ஒசியா கொடுக்கல, வட்டி போட்டு வாங்குவேன். நான் ஈட்டிக்காரனைவிட மோசமானவன்.”

அவள், லேசாகச் சிரித்தாள். அவன் அவள் கண்களைப் பட்டும் படாமலும் துடைத்துவிட்டான். பிறகு, கைக்குட்டையால் அவள் கன்னங்களைத் துடைத்தான். வசந்தி எச்சரிக்கை அடைந்தவள் போல், “ஸார். உங்க மனைவியும், பிள்ளைகளும் காத்திட்டிருப்பாங்க” என்று எழுந்தாள்.

பிரகாஷிற்கு மனச்சாட்சி நெஞ்சில் குத்துவதுபோல் தோன்றியது. குத்தலாகப் பேசுகிறாளே! அவள் கிடைக்காமல் போய் விடுவாளோ! என்றாலும் அவள், அவனை ஒன்றும் சொல்லாதது உற்சாகத்தைக் கொடுத்தது.

இப்போது, அலுவலகத்திற்குள்ளேயே, அவன், அவள் கையைத் தட்டுவதும், சடையைப் பிடித்து இழுப்பதும் சகஜமாகிவிட்டது. அவள் எதிர்ப்பை அதிகமாகக் காட்டவில்லை. அலுவலகத்தில் பலரால் ஒதுக்கப்பட்ட அவளுக்கு, அவன் தைரியம் கொடுத்தான். தாழ்வு மனப்பான்மையில் தவித்த அவளுக்கு, தன்னம்பிக்கை கொடுத்து, அவள் பெண்மையைப் பேணுகிற அவனது நட்பு நீடிப்பதற்காக இந்தச் சில்லறைத் தொல்லைகளை, அவள் ஒருவிதக் கலக்கத்துடன் தாங்கிக் கொண்டாள். பிரகாஷிற்கு நம்பிக்கை வந்து விட்டது. எப்படியாவது அவளை மகாபலிபுரத்திற்குக் கூட்டுக்கொண்டுபோய் விடலாம்.

தலைமைக் குமாஸ்தா, தனக்குள்ளேயே பொருமினார். அப்பாவிப் பெண்ணை, பெண்களை வஞ்சிக்கும் டெக்னிக்’ தெரிந்த ஒரு அயோக்கியன் கெடுக்கப் போகிறானே என்று வருந்தினார். இதற்கு முன்பு பல பெண்களை அவன் இப்படி நட்பாக்கி வஞ்சித்திருக்கிறான் என்று அவர் சொல்லத் துடித்தார். அதே நேரத்தில், இந்த ஸ்கேண்டல் பெரியதாகி, மானேஜர் காதுக்கு எட்டி, வசந்திக்குச் சீட்டுக் கிழிந்து, தன் மகளுக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்தாரோ, அல்லது ‘உன்னப் பார்க்கலங்ற ஆத்திரத்துல பேசுறியா?ன்னு அவன் திருப்பிக் கேட்டாலும் கேட்பான் என்று பயந்தாரோ தெரியவில்லை. அவர் பேசாமல் இருந்துவிட்டார். மிஸஸ் பரிமளம் ராமச்சந்திரன், ஒரு சமயம் சாடை மாடையாக, ‘சிலந்தி வலை பின்னிட்டு, பூச்சியும் விழுந்த மாதிரிதான் என்று சொன்னாள். வசந்திக்குப் புரியவில்லை; புரிந்துகொண்ட பிரகாஷ், “மிஸஸ் பரிமளம்! நம்ம வெங்கட் ராமன் இப்போ எங்கே இருக்கார்?” என்று கேட்டு வைத்தான். பரிமளம் பெட்டிப் பாம்பாகிவிட்டாள். வெங்கட்ராமன், அவள் பழைய காதலன்.

ஒருநாள், காலையில் வசந்தி கலவரத்தோடு வந்தாள். அவளுக்காக முன்னதாகவே வந்துவிட்டான் பிரகாஷ்.

“ஏன் வசந்தி. ஒரு மாதிரி இருக்கே?”

“ஏழப் பொண்ணுன்னா என்ன வேணுமானாலும் பேசலாம்னு நினைக்கிறாங்க. பொறுக்கிப்பசங்க.”

“நீ யாரைத் திட்டறே?”

“நானும் பார்த்துக்கிட்டே வாறேன். ஒரு வாரமா, நாலஞ்சு பொறுக்கி பசங்க, நான் ஏறுற பஸ்லயே ஏறுறாங்க. நான் இறங்கற இடத்திலேயே இறங்கறாங்க கன்னாபின்னான்னு பேசுறாங்க..”

“கண்டுக்காத கொஞ்ச நாளையில அவங்க போயிடு வாங்க”

அவன் பதில், அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ‘முன்கோப முரடர். அந்தப் பையன்களைப் போய் உதைப்பார்’ என்று நினைத்து, அவள் இதுவரை சொல்லாமல் இருந்தாள்.

“இந்தப் பயல்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சி கிடையாதா?”

“இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம்.”

“உங்களுக்கென்ன. சொல்லிட்டிங்க. ஒண்னு கிடக்க ஒண்னு பண்ணிட்டாங்கன்னா?”

பிரகாஷ் யோசித்தான். என்ன பதிலளிப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் மனைவி முருகனைக் கும்பிடுவதும், அவன் அதற்காக கிண்டல் செய்யும் போதெல்லாம் ‘கந்தனை நம்பினவங்க கைவிடப் படமாட்டாங்க. குறிப்பாய் பெண்கள் அவனைக் கும்பிடணும். எந்த அயோக்கியனும் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட முடியாது” என்று அடிக்காத குறையாக அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.

பிரகாஷ், அந்தச் சமயத்தில் ஏதாவது பொருத்தமாகச் சொன்னால்தான், வசந்தியின் சிநேகம் கெட்டியாகும் என்று நினைத்தவன் போல், ‘பேசாமல் கந்தசாமி கோவிலுக்குப் போ. சாமியை நல்லாக் கும்பிடு, எந்த அயோக்கியனும் உன் கிட்ட வாலாட்ட முடியாது” என்றான்.

“அப்புறம் நாம நாளைக்கு மகாபலிபுரம் போறோம். ஞாபகம் இருக்கா?”

“மறக்கக் கூடிய விஷயமா? ஆனால் பயமாய் இருக்கு.”

“நான் ஜென்டில்மேன். உனக்கு வேண்டான்னா வேண்டாம்.”

“நினைச்சிட்டோம். போயிட்டு வந்திடுவோம். பாரிஸ் பஸ் ஸ்டாண்ட்தானே!”

வசந்திக்கு திருமணமான அவனுடன் மகாபலிபுரம் போய், மேலும் அதிகச் சலுகைகளை அவன் எடுத்துக் கொள்ள அனுமதிப்பது சரியாகத் தெரியவில்லைதான். வருங்காலக் கணவனுக்குத் துரோகம் இழைக்கிறோமே என்ற எண்ணமும், இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறோமே என்ற தவிப்பும், அவள் இதயத்தை மாற்றி மாற்றித் தாக்கின. ஆனால் அவன் நட்பில்லாமல் இருக்க முடியாதுபோல் அவளுக்குத் தோன்றியது. மகாபலிபுரத்தில் அவன் அதிகப்படியான சலுகைகள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. அதேசமயம், தன் குடும்பக் கஷ்டங்களை எல்லாம் சொல்லி அவனிடம் அழ வேண்டும்.

அலுவலகம் முடிந்ததும், அவள் வள்ளலார் பாடிய கந்தசாமி கோவிலுக்குப் போனாள். பலதடவை கோவில்களுக்குப் போயிருந்தாலும், இப்போது தான் முதல் தடவையாக அவளுக்குப் பக்தி, ஒரு பெர்ஸனல் விஷயமாகத் தெரிந்தது. முருகன் அவள் அருகிலேயே இருப்பதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. அவன், எந்தத் தீங்கையும் அனுமதிக்க மாட்டான் என்று ஒரு நம்பிக்கை பிறந்தது. சுற்று முற்றிலும் மொய்த்த பக்தர்கள் கூட்டத்தில் தானும் ஒரு அங்கம் போலவும், தானே ஒரு மாபெரும் கூட்டம் போலவும் அவளுக்குத் தோன்றியது.

பிரகாஷ், ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் பஸ் நிலையத்தில் அவளுக்காகக் காத்து நின்றான்.

ஆனால் வசந்தி வரவில்லை. வரவே இல்லை.

மறுநாள், அவளை அலுவலகத்தில் பார்த்தபோது, எடுத்த எடுப்பிலேயே, “நேற்று ஏன் வர்ல?” என்றான்.

வசந்தி, அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். “கந்தசாமி கோவிலுக்குப் போனேன்.”

“வசந்தி! எப்படியாவது இன்றைக்கு மகாபலிபுரம் போயாகணும்.”

“எப்பவும் போக வேண்டாம். பேசாமல் உங்கள் மனைவி பிள்ளைகளோட போய்ட்டு வாங்க”

“அது நீ சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா?”

வசந்தி, அவனுக்கு பதிலளிக்கவில்லை என்றாலும், அவனை ஒரு அயோக்கியனைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். பிறகு நிதானமாக நடந்து தனது இருக்கையில் அமர்ந்தாள்.

– குமுதம் 12-5-1977

– ஆகாயமும் பூமியுமாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *