மன்னிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,090 
 

வாம்மா….சாந்தி, எப்படி இருக்கே?

வரும்போதே…..அப்பாவெனக் கட்டிப் பிடித்து அழுதாள்!

எந்தத் தந்தைக்குத் தன் மகள் அழுவதைத் தாங்க முடியும்?

உள்ளிருந்து, சாந்தியின் அம்மா, ஜானகி ஓடோடி வந்தாள்….

என்னாச்சும்மா? ஈஸ்வரா!!

சாந்தி, இன்னமும் தந்தையின் கைகளை விட்டபாடில்லை!

ஜானகி, உடனே தன் மகனுக்கு ஃபோன் போட்டு, புறப்பட்டு வருமாறு கூறினாள்.

ஜானகி- சுந்தரம் தம்பதியர்க்கு இரண்டு குழந்தைகள். சாமிநாதன் முதல் பையன். சாமி பொறந்து சரியாக பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, சாந்தி பிறந்தாள்.

நடுத்தரக் குடும்பமே என்றாலும், சாமி ஒரு வங்கியில் மிகப் பெரிய பதவியில் இருப்பவர். ஆனால், இன்னமும் திருமணமாகவில்லை.

சாந்திக்குக் கல்லூரிப் படிப்பு முடிந்தவனுடேயே, வரன் பார்க்க ஆரம்பித்து, சட்டென 23 வயதில் திருமணமாகி விட்டது. இப்போது, அவளுக்கு வயது 27.

சாந்தியின் கணவர், ஒரு மென்பொருள் கம்பெனியில் வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி. சாந்தியின் கணவருக்கு ஒரு சகோதரி மற்றும் ஒரு சகோதரர். பெரிய குடும்பம். கணவர், அசோக் இரண்டாவது பையன் அவர்களின் பெற்றோருக்கு!

இப்படி நல்ல குடும்பத்திற்கு வாழப் போன சாந்திக்கு, அடுத்தடுத்த சோதனைகள் வந்த வண்ணம் இருந்தன.

அசோக்கின் தந்தை உடல்நலம் சரியில்லாதவர். படுத்த படுக்கைதான். அசோக்கின் தம்பி ஒரு உதவாக்கரை. அசோக், ஒரு அம்மாக் கோண்டு. அடிக்கடி, வேலை சம்பந்தமாக, வெளியூர்ப் பயணம் வேறு!

இந்தச் சூழலில், கணவனோடு சாந்தி இருக்கும் நாட்களில், மகிழ்ச்சி என்பது சில மணிநேரங்கள் கூட நீடிப்பதில்லை. ஏதோ, ஊருக்குப் போய்ட்டு வந்த ஒருநாள், தாகம் தீர்ப்பவளாக மட்டுமே சாந்தி தென்பட்டாள், அவள் கணவனுக்கு!

அடுத்த நாளே, அசோக்கின் அம்மா, எப்பப் பாரு, யார்ட்ட தான் பேசுவாளோ உன் பொண்டாட்டி….. ஒரே ஃபோனும், கையுந்தான்!

போன வாரம், யாரோ அவ கிளாஸ்மேட்டாம்…பாக்கப் போறேன்னு போய்ட்டு, ராத்திரி 9 மணிக்கு வரா.

அப்பாவுக்கு, மாத்திரை கொடுக்க மறந்துட்டா.

இப்படியாகச் சின்னச் சின்ன விஷயங்களை, ஆனால், சென்சிடிவ்வாகச் சொல்லி, அசோக்கின் மனதில், விஷத்தை விதைப்பாள் அவன் தாயார்.

அப்படி ஒரு சண்டையில், இன்று சொல்லிக் கொள்ளாமலேயே, தன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டாள் சாந்தி!

***

சாமிநாதன் வேலை விஷயமாக ஹாங்காங் போயிருந்தவர், அங்கிருந்து உடனே டிரிப்பைப் பாதியிலேயே முடித்துக் கிளம்பி வந்து விட்டார்.

அம்மாவும், அப்பாவும் சாந்தி வந்த கதையைச் சொல்ல,

அவர், மனம் நொந்துவிட்டது.

சாந்தி, நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

சாமி: என்ன செய்யலாம் அப்பா?

சுந்தரம்: பகவான்ட்ட வேண்டிக்கத் தான் முடியும்! எல்லாம், சரியாப் போய்டும்.

ஜானகி: என்னை, உங்கப்பா கல்யாணம் பண்ணிண்டப்போ, அவாத்துல பத்துப்பேர். எனக்கு நாலு மச்சுனர், அஞ்சு நாத்தனார். வறுமை வேற தாண்டவம் ஆடித்து! இப்பப் பாரு. நாப்பத்தைஞ்சு வருஷம் போனதே தெரியல்ல. எல்லாம் சரியாப் போயிடும். நான் ஏன் உன்ன உடனே வான்னு சொன்னேன்னா,

மாப்ளேட்டே நீ பேசு. அவர், உம்மேல நல்ல மரியாதை வெச்சிருக்கார். நீ சொன்னா, ஒரு வேளை அவர், புரிஞ்சுப்பார்.

அதுக்குள்ள, சாந்தி, அண்ணாவின் குரல் கேட்டு எழுந்து வந்தாள்.

அண்ணான்னு…. கட்டிப் பிடிச்சுண்டுத் திரும்ப ஒரே அழுகை.

சாந்தியை, ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கும் போதே,

வீட்டில் தொலைபேசி அடித்தது.

சுந்தரம்: ஹலோ…….

அசோக்: மாமா, நான் அசோக் பேசறேன். சாரி, நேத்து நடந்த கலவரத்தில சாந்தியைப் புரிஞ்சுக்காமத் திட்டிட்டேன். சாந்தியை, ஒரு ரெண்டு நாள், அங்கேயே இருக்கச் சொல்லுங்கோ… நான் வந்து அழைச்சிண்டு போறேன.

சுந்தரம்: சரி மாப்ளே.

****

இதுதான், அசோக்கின் மனமாற்றத்திற்குக் காரணம்!

சாந்தி, வீட்டை விட்டு வெளியேறியவுடன், அசோக், அலுவலகத்திற்குச் செல்ல,

எதிர்வீட்டு, பங்கஜம் மாமி வருகிறாள். அசோக்கின் தாயாரிடம், நடந்ததைக் கேட்டுவிட்டு, தன் பங்குக்குத் தன் வீட்டில் வாழா வெட்டியாக உக்காந்திருக்கும், தன் மகளை,

சாந்தியை divorce பண்ணிட்டு, அசோக்குக்கு மணம் முடிக்கத் தூபம் போட்டாள்.

என்ன திமிர் பாத்தேளா? அவளுக்கு! அவன் வரட்டும், இரண்டில ஒன்னு பாத்த்துடறேன்…

இது, நடந்து கொண்டிருக்கும் போதே, வீட்டில் முக்கியமான கோப்பை (documents) மறந்து வைத்து விட்டுப் போன அசோக் எடுத்துச் செல்ல வந்தவன், பங்கஜம் மாமியின் பேச்சைக் கேட்டு விட்டான்….

அசோக்கின் அம்மா திடுக்கிட்டாள்….

பங்கஜம் மாமி உடனே வெளியில் கிளம்பி விட்டாள்.

அசோக், அவன் அம்மாவிடம் ஒன்றும் கேட்கவில்லை.

***

இரண்டு நாள் கழித்து,

அசோக், சாந்தியின் வீட்டிற்கு வந்தான்.

சாமிநாதனிடம் பேசிவிட்டு, நேரே சாந்தியின் அறைக்குச் சென்றான்.

சாந்தி, அவனைப் பார்த்ததும் ஓடி வந்து அணைத்தாள். சாரிங்க….சொல்லாம வந்துட்டேன்.

அசோக்: எதுக்கு நீ சாரி கேக்குற….நாந்தான் கேக்கணும். இதுவரைக்கும் ஒரு வார்த்தை நீ என்கிட்டே உங்க அம்மா இப்படிப் பண்றாங்கன்னு சொல்லி இருக்கியா? உன்னை நெனச்சாப் பெருமையா இருக்கு. உன்னை, அம்மா பேச்சைக் கேட்டு, ரொம்பவே கொடுமைப் படுத்திட்டேன்.

அப்பப்பா…என்ன உலகம் இது! சுயநலவாதிகளின் வஞ்சனையில் சிக்கித் தவிக்கும் பேதைகள் நிறைந்த உலகம். நல்ல வேளை …..இறைவன் அருளால், நாம் காப்பாற்றப் பட்டோம்!

நான் முடிவு செய்து விட்டேன். இனி, ஒருக் கணம் அந்த வீட்டில் இருக்கக் கூடாது!!அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம். நாம், இருவரும் தனியாக ஒரு வீடெடுத்து, சந்தோஷமாக வாழலாம்.

***

சாந்தி: அப்பா, அசோக் தனிக் குடுத்தனம் போலாம்னு சொல்றார்ப்பா…

சுந்தரம்: சாமா, ஜானகி, மாப்ளே எல்லாரும் வாங்கோ…

ஜானகி, மாப்ளே தனிக் குடுத்தனம் போனும்னு சொல்றார். என்ன சொல்றேள்?

ஜானகி: ஏன்னா….அது தப்பு. வயசான மாமா இருக்கார். மாமி பாவம். அதெல்லாம் செய்யப் படாது.

சாமி: அசோக், அந்தத் தப்பைப் பண்ணாதேள்.

சாந்தி: ஆமாங்க….நானும் சொல்றேன்… அம்மா (மாமியார்) ஏதோ போறாத காலம். தப்பு பண்ணிட்டா. எப்படியோ, நீங்க என்னைப் புரிஞ்சுண்டேலோனோ! அது போதும் நேக்கு.

வாங்கோ… நம்பாத்துக்குப் போலாம்…

****

அசோக்கும், சாந்தியும் வீட்டிற்குள் நுழைய…..

அசோக்கின் அம்மா……அங்கேயே இருங்கோ…..ஆரத்தி எடுத்துண்டு வரேன்….

அசோக்குக்கும் சாந்திக்கும் ஒன்றும் புரியவில்லை….

அசோக்கின் அம்மா, ஆரத்தி எடுத்து இருவரையும் வரவேற்று சாந்தியிடம் மன்னிச்சுடும்மா…. தப்பு பண்ணிட்டேன் என்றாள்!

ஏம்மா…..விடுங்கோ…..அப்படின்னு கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *