மாங்கல்யம் தந்துநானே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 1,246 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் மூக்குவிடைத்த சாதியைச் சேர்ந்தவன் என்பது அம்முவிற்கும், அவள் காது துடிக்கும் சாதியைச் சேர்ந்தவள் என்பது எனக்கும் இன்று தான் தெரியும். நாங்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றோம் என்று எங்கள் வீட்டில் செய்தியை சொன்னபொழுது, எங்களின் அம்மாக்கள் கேட்ட முதல் கேள்வி,..

“அவங்க என்ன ஆளுக”

அப்பாக்களைக் காட்டிலும் அம்மாக்கள் சாதி அபிமானங்களை அதிகம் கொண்டிருக்கின்றனர்.

“என்னடா கார்த்தி, காது துடிக்கிறவனுங்க, இன்னக்கி நமக்கு சமமா இருக்கிற மாதிரி இருக்கலாம், ஒரு காலத்தில் எங்க தாத்தா அவங்களை எல்லாம் மதிக்கவே மாட்டாரு” என் அம்மா இப்படி சொல்லிவிட்டார் என்பதை மிகவும் வருத்தமாக அம்முவிடம் சொன்னபொழுது, அவளின் அம்மா மூக்குவிடைத்த சாதியைப் பற்றி மிகக் கேவலமாக சொன்னதை சொல்லி என்னைத் தேற்றினாள்.

அம்மு பாசம் காட்டுவதில் மட்டும் “நெஜமாத்தான் சொல்றியா” வகை பெண்ணாக இருந்தாலும், நிறையவே முற்போக்கு அரசியல் சிந்தனைகளைக் கொண்டிருப்பவள். என்னைப்போல் அவளுக்கும் எளிமையான சுயமரியாதை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம்.

“ஏண்டா கார்த்தி உனக்கு இந்த நினைப்பு, உன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிய விசயம், நல்லநாள் அதுவுமா, வாழ்த்தாம் வசவா பாடிட்டு இருப்பானுங்க, ஒரு மரியாதையும் வேண்டாம்… எனக்கு சடங்கு சம்பிராதாயம் எல்லாம் முக்கியம்…”

அம்முவிற்கு கிட்டத்தட்ட இதே பதில்தான். பெரியாரைப் புரிந்து இருந்ததால், மூக்கும் காதும் இந்த ஒரு புள்ளியில் இணைவது வியப்பைத் தரவில்லை.

அம்முவைப்போல் எனக்கு எப்படியாவது பிரச்சினை இல்லாமல் திருமணம் முடியவேண்டும் என்ற பயம் இருந்ததால் சமாதானத்திற்கு தயாரான பொழுது, எனது அப்பா ஒரு யோசனையை சொன்னார்.

அம்மா ஏற்கனவே தேர்ந்து எடுத்து வைத்திருந்த புரோகிதரிடம் திருமண சடங்குகளுக்கு முன்பதிவு செய்ய நானும் அப்பாவும் தான் போனோம். புரோகிதர் ஆங்கிலத்தில் தான் பேசினார். இடையிடையே மணிப்பிரவாள நடைப்போல கொஞ்சம் தமிழும் நிறைய சமஸ்கிருதமும் வந்து விழுந்தது.

“தமிழில், திருமண வாழ்த்து வசனங்களை சொல்ல வேண்டும், அதற்கான தமிழ் இலக்கியப்பாடல்கள் குறள்களை நாங்களே தருவோம்”

“நோ இட் ஈஸ் இம்பாஸிபிள், நீங்க வேற ஆளைப் பார்த்துக்கோங்க. … இல்லாட்டி திக காரவாளை கூப்பிட்டுக்கோங்க”

என வெளியில் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டினார்.

இந்த புரோகிதர் தான் வேண்டும் என அம்மா ஒற்றைக்காலில் நின்றார். இனி அம்மாவிற்குப் பதில் சொல்ல வேண்டுமே…எனக் கையைப் பிசைந்து கொண்டிருந்த பொழுது,

அப்பா என்னை புரோகிதரின் அலுவலகத்திற்கு வெளியே நிற்க வைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றார். வரும்பொழுது சிரித்துக் கொண்டே “புரோகிதர் தமிழுக்கு சம்மதித்துவிட்டார் “ என்றார்.

அன்பும் அறனும் உடைத்தாயின் எனத் தொடங்கி தமிழ் வாழ்த்துப்பாக்களுடன் அந்த புரோகிதரால் திருமணம் சிறப்பாகவே நடத்தி வைக்கப்பட்டது. சாப்பாட்டை விட, திருமணத்திற்கு வந்தவரெல்லாம் தமிழ் மந்திரங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

சாவகாசமாக, அப்பாவிடம், எப்படி அந்த புரோகிதர் சம்மதித்தார் எனக் கேட்ட பொழுது “அவர் வழக்கமாக வாங்கும் பணத்தை விட, இரண்டு மடங்கு தருவதாக சொன்னேன்,

ஒப்புக்கொண்டார்”

“அட.” இது எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே என நினைக்கையில் அப்பாவே தொடர்ந்தார்,

“இன்னொன்றை கவனித்தாயா, அவர் பூணூல் கூட போட்டிருந்திருக்க மாட்டார், அதற்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்தேன்”

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *