பத்து ஈரோக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 558 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விமானநிலையங்களில் காணக்கிடைக்கும் முத்தங்கள் கிளர்ச்சியைத் தராது. ஒவ்வொரு செக்- இன்னிற்கு முன்னாலும் குட்டியாகவோ நீண்டோ, வழியனுப்பு முத்தங்கள் கொடுக்கப்பட்டு பெறப்பட்டுக் கொண்டிருந்தன. விடியற்காலையில், எழுந்தபொழுது இருந்த சோம்பல், விமானநிலையத்தை அடைந்ததும் காணாமல் போனது.. சோம்பல் இல்லாவிட்டாலும் அம்மு நிறைய சோகமாகவே இருந்தாள். அம்முவை வழியனுப்ப நான் வந்திருக்கின்றேன்.

சில வருடங்களுக்கு முன்னர், முதல் முத்தத்தை வெட்கப்பட்டுக்கொண்டே கொடுத்ததைப்போல, முப்பதாயிரத்து முன்னூற்று சொச்சத்து முத்தத்தையும் வெட்கம் கலந்து கன்னத்தை தடவியபடி கொடுத்துக் கொண்டிருந்தாள். வெள்ளைக்கார ஜோடிகள் கொடுத்துக் கொண்டிருப்பதை எல்லாம் கவனிக்காது, இருபது அடி தூரத்தில் இருந்து, சுடிதார் அணிந்து இருந்த நடுத்தர வயது அம்மணி, எங்களையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். முத்தங்கள் கொடுக்கும்பொழுது நான் கண்களை மூடுவதில்லை, ஓரக்கண்ணால் அம்முவையோ, பொதுவிடங்களில் முத்தம் கொடுத்தால், சுற்றத்தையும் கவனித்துக் கொண்டே இருப்பது உண்டு.

அந்த சுடிதார் அணிந்து இருந்த அம்மணி வங்காளதேசத்தவராகக் கூட இருக்கலாம். ரோம் நகரத்தில் ஏகப்பட்ட வங்காளாதேசத்தினர் வசிக்கின்றனர். வங்காளதேசமோ, பாகிஸ்தானோ, உத்திரப்பிரதேசமோ, என்னைப் பொருத்தவரை எல்லோருமே வட இந்தியர்கள். நான் கவனித்ததை அந்த அம்மணி கவனித்தது, தாவணிக்கனவுகளில் பாக்யராஜ் காசுப்போட்டு, தங்கைகளை திசைத்திருப்புவதைப்போல, தன் குழந்தைகளை வேறுப்பக்கம் திருப்பிக்கொண்டார்.

“கார்த்தி, இந்தாடா இனிமேல் எனக்கு ஈரோக்கள் தேவைப்படாது, தேவைன்னாலும் நான் கார்ட்லேந்து எடுத்துக்கிறேன்” என அவளிடம் இருந்த சில பத்து ஈரோத்தாள்களைத் திணித்தாள்.

“இல்லை அம்மு, ஆம்ஸ்டர்டாம் ல பிளைட் மாறுறப்ப தேவைப்படும்” சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது நெடிய ஆப்பிரிக்க கறுப்பு மனிதன், தனது சுமைகளைத் தள்ளிக்கொண்டபடி, வருத்தம் தோய்ந்த முகத்துடன் எங்களை அணுகி,

“எனது பணப்பையைத் தொலைத்துவிட்டேன், ஊருக்குப்போக பயணச்சீட்டு எடுக்க 174 ஈரோக்கள் தேவைப்படுகின்றது, ஏனையவர்களின் உதவிகளினால் 164 ஈரோக்கள் கிடைத்துவிட்டது, இன்னும் பத்து ஈரோக்கள் இருந்தால் பயணச்சீட்டு எடுத்துவிடுவேன்” சொன்னது,

திருச்சி பேருந்து நிலையத்தில், “அண்ணே, ஊருக்குப்போற வச்சிருந்த காசைத் தொலைச்சிட்டேன், பத்து ரூவா கொடுங்கண்ணே” எனக் கேட்பதுப் போலவே இருந்தது.

“கார்த்தி, பாவம்டா, காசு கொடுக்கலாண்டா, பத்து ஈரோதானே”

“இல்லடா அம்மாடி, எனக்கு என்னமோ நம்பிக்கை வரல, திருச்சியா இருந்துருச்ச்சுன்னா, நானே டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஊருக்கு அனுப்பி இருப்பேன், இங்க எல்லாத்தையும் 70 ஆல் பெருக்கிப் பார்க்க வேண்டியதாக இருக்கு”

“ஒரு வேளை நிஜமாகவே தேவைப்படுறவரா இருந்துச்சுன்னா, பெரிய உதவியத்தானே இருக்கும், பத்து பேர் ஏமாத்துனாலும், ரெண்டு பேருக்காவது நிச்சயம் உதவி தேவைப்படும்” நாங்கள் எங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த கறுப்பன், சோகமாக நாங்கள் தரமாட்டோம் போல என்பதாக மெல்ல நகர, ஒரு நிமிடம் என்னையும் அம்முவையும் அந்த ஆளின் நிலையில் வைத்துப் பார்த்தேன். காசு இல்லாமல் தெரியாத ஊரில் சிக்கிக் கொண்டால்… ஒரு பத்து ஈரோத்தாளுடன் சில சில்லறைகளையும் சேர்த்து, அந்த கறுப்பனின் கையில் கொடுத்தேன். வாயினால் நன்றி சொல்வதைவிட, அவன் கண்களில் நன்றி சொன்ன விதம் நிஜமாக உதவித் தேவைப்படுபவன் போல இருந்தது.

அவன் டிராலியைத் தள்ளிக் கொண்டே சனக்கூட்டத்தில் மறைந்துப் போனான், விமானத்திற்கு நேரம் ஆக, அம்முவும் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் இடத்திற்கு வழியனுப்பிவிட்டு, இந்த ஆப்பிரிக்கன் வேறு எங்கேயாவது தென்படுகின்றானா என டெர்மினல் ஒன்றில் இருந்து டெர்மினல் 3 வரை அலசிப்பார்த்துவிட்டேன். அவனைப் பார்க்க முடியவில்லை. பயணச்சீட்டு எடுத்து செக் இன் செய்து இருப்பானோ…. ஒரு பத்து ஈரோக்களுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லை என என்னை நான் சமாதனப்படுத்திக் கொண்டு,

சட்டையில் எஞ்சி இருந்த அம்முவின் வாசத்தோடு, வீடு திரும்ப, பேருந்தில் ஏறியபொழுது தூரத்தில் அந்த கறுப்பன்,. டிராலி இல்லாமல், ஹாயாக சுமைகளின் மேல் அமர்ந்து கால் மேல் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள், அம்மு ஊருக்குப் பத்திரமாகப் போய் சேர்ந்தவுடன் போன் செய்து முதலில் கேட்டது “அந்த கறுப்பன், பத்திரமா ஊருக்குப் போய் இருப்பான்ல…”

“ம்ம்ம்… ” நான் வெறும் ம்ம் மட்டும் சொன்னால் கடுமையான மனநிலையில் இருக்கின்றேன் என்பதை அம்மு புரிந்து கொள்வாள்.

“உனக்கு எப்போதும் சந்தேகம் தான்….. ஏமாத்துனாக் கூட ஒன்னும் பெரிய விசயம் இல்லை… பாவம் ரோம்ல விக்கிற விலைவாசில, அதிகப்பட்சம் ஒரு வேளை சாப்பாடு சாப்பிடப்போறான் … போயிட்டுப்போறான் விடு கார்த்தி”.

சில வினாடிகள் மௌனத்திற்குப்பின்னர் “ஐ லவ் யூ அம்மு” என்றேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *