நீர்த்துப் போகாத நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2023
பார்வையிட்டோர்: 2,482 
 

மாலையில் வீசும் தென்றலின் குழுமையில் மனம் மகிழ, இன்னொரு பக்கம் வானொலியில் ஒலித்த ‘நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’ என்ற எனக்குப் பிடித்தமான சினிமாப் பாடலின் இனிமையில் மனம் கரைந்து போயிருந்தேன். வீட்டிலிருந்த ஆச்சி எதற்கோ அடிப்போடுவதுபோல் இருந்தது.

“எப்படீ ஸ்கூல் விட்டு வந்த? வயித்துவலி சரியாயிருச்சா” எனப் பரிவாய்க் கேட்க,

“என்ன ஏதாவது திட்டத்தோட இருக்கியா ஆச்சி? பாசம் பொங்குது” என்றேன் நான்.

“இல்லடி எனக்குத் தண்ணி தாகமா இருக்கு? உங்க அப்பனுக்குத் தெரியாம ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர்றியா” என்றாள்.

“சரி இரு ஆச்சி. சமயம் பார்த்து வாங்கிட்டு வர்றேன். எனக்கும் சேர்த்து காசு தா. அம்மாவுக்குத் தெரியாம வாங்கிட்டு வர்றேன்” என்றேன். அதற்குள் அங்கு வந்த அம்மா ரகசியமாக நாங்கள் பேசுவதைப் பார்த்து,

“ஆச்சியும் பேத்தியும் எனக்குத் தெரியாம என்னமோ திட்டம் போடுற மாதிரித் தெரியுதே. என்ன சேதி” என்றாள்.

“இல்லம்மா ஆச்சி வயிறுவலி சரியாயிருச்சான்னு கேட்டாங்க. சொல்லிக்கிட்டிருந்தேன். அவ்வளவுதான்” என்றேன்.

“சரிசரி கைகால் அலம்பிட்டு வந்து காப்பியக் குடி” என்றாள் அம்மா. எனக்கு அப்பாடா என்றிருந்தது. எங்களது திட்டத்தை அம்மா கண்டுபிடிக்கவில்லை. இல்லையென்றால் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து, அப்பா ஐ.நா சபையில் நிற்கவைப்பது போல் நிற்கவைத்துக் கேள்வி கேப்பார். பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

ஆறாவது படிக்கும் என் பெயர் கயல்விழி. எனக்கு ஆச்சியை ரொம்பப் பிடிக்கும். அவ்வப்போது ஆச்சியுடன் சேர்ந்து வீட்டிற்குத் தெரியாமல் ஐஸ்கிரீம், பன்னீர் சோடா, மாங்காய், மிட்டாய் எனக்குப் பிடித்தவைகளையும் ஆச்சிக்குப் பிடித்தவற்றையும் சேர்ந்து வாங்கி வீட்டுக்குத் தெரியாமல் சாப்பிடுவதில் நாங்கள் இரண்டு பேரும் கூட கில்லாடிகள்.

ஆறு மணிக்கு மேல் ஆனதும் ஆச்சியைப் பின்வாசலுக்கு வரச்சொல்லிவிட்டு நான்

“அம்மா ஸ்கேல் வாங்கிட்டு வாறேன்” என்று கூற, அம்மா,

“நேத்துத்தான ஸ்கேல் வாங்குன. ஓயாம காசு விளையுதா?” என்றாள்.

“நீ ஒண்ணும் காசு தரவேணாம். அப்பா வாங்கித் திங்க குடுத்த காசு இருக்கு. நான் வாங்கிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாக வீட்டைவிட்டு வெளியில் நடந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அம்மா கேள்வி கேட்டே கொன்றுவிடுவாள்.

இரண்டு ஐஸ்கிரீம் வாங்கியபின் வீட்டின் பின்புறம் இருந்த கொல்லையில் ஆச்சியுடன் சேர்ந்து சாப்பிட்டேன். பிறகு,

“ஆச்சி நீ பின்னாடி வழியப் போ. நான் முன்னாடி வர்றேன். இப்படியே வந்தா அம்மா கண்டுபிடிச்சுரும்” என்று சொல்ல, ஆச்சி,

“இந்தாடீ ஸ்கேலு” என்று தன் முந்தானையில் மறைத்து வைத்திருந்த ஸ்கேலைக் கொடுக்க வீட்டின் முன்பகுதிக்குச் சென்றேன். வீட்டிற்குள் போனவுடன்,

“ஒரு ஸ்கேல் வாங்க இவ்வளவு நேரமா? எங்கடீ ஊர் சுத்தப் போன?” என்றாள் அம்மா.

“இல்லமா. பக்கத்து வீட்டு மீனாட்சியத்தைத் துணிக்கடைக்குப் போகுது. உன்ன கூப்டலியா? எங்க போனாலும் உன்னக் கூப்பிட்டுப் போகும்” என்று ரூட்டைமாத்தி விட்டேன். உடனே அம்மா ஆர்வமும் கோபமும் பொங்க,

“நிசமாவா கயலு. ஒரு வார்த்தை கூட என்கிட்டச் சொல்லல” என்றாள். பக்கத்து வீட்டு விசயத்தைத் தெரிந்து கொள்வதில் அம்மாவுக்கு அலாதிப் பிரியம். மீனாட்சி வீட்ல எதுவும் விசேஷமா? எங்கிட்ட சொல்லாம இருக்கமாட்டாளே? என அம்மாவுக்குள் பல சிந்தனை ஓட்டங்கள்.

ஆச்சியும் நானும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டோம். நான் படிக்க அமர்ந்தேன். இவ்வாறாக என்னுடைய பள்ளிநாட்கள் எல்லாம் சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்தன. ஆச்சியைப் பிரிந்து அம்மாச்சி ஊருக்குப் போவதென்றால் கூட எனக்குக் கஷ்டமாய் இருக்கிறது.

நாட்கள் உருண்டோடுவதே தெரியவில்லை. நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஆச்சிக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. எப்போதும் வருவதுபோல் இளைப்பு வேறு. இரவு நேரங்களில் வரும் இளைப்பு இன்னிக்குப் பகலில் தெரிய, ஆச்சி சோர்ந்து போய்விட்டாள்.

நான் காலையில் ஸ்கூல் போகும்போதே,

“கவலைப்படாத உடம்பு சரியாயிரும். நாம ரெண்டுபேரும் அம்மாவுக்குத் தெரியாம ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுவோம். ஒழுங்கா சாப்பிடு” என்று ஆறுதல் சொல்லிவிட்டு பள்ளிக்குக் கிளம்பினேன்.

பள்ளிமுடிந்து மாலையில் வீடு திரும்பும்போது வீடு நிறைய ஆட்களாய் இருப்பதைப் பார்த்து, திகைத்து என்னன்னு தெரியலையே என்று உள்ளே நுழைந்தேன். உள்ளேயுள்ள ஹாலில் ஆச்சி மர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டிருந்தாள். அம்மா பக்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். என்னையும் அறியாமல் ‘ஆச்சி’ எனக் கத்திக்கொண்டே அவளின் பக்கத்தில் சென்று ஆச்சியின் மேல் படுத்து அழுதேன். கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் வழிந்தோடியது. அம்மா,

“கயலு உங்க ஆச்சியப் பாத்தியா. இப்படி போயிருச்சு. நினைச்சுக்கூட பார்க்கலியே” என்று கதற என்னால் ஆச்சியின் இழப்பிலிருந்து மீண்டு வரமுடியாமல் உறைந்து விட்டேன். ஆச்சி இறந்து ஒரு மாதமாகியும் என்னால் சரியாகச் சாப்பிடமுடியவில்லை.

“அம்மா ஆச்சிய மறக்கமுடியல” என நான் அழும்போதேல்லாம் “சரி விடு. மறந்துதான் ஆகனும். ஆச்சி உன்னோடவேதான் தெய்வமா இருப்பாங்க” அம்மா தேறுதல் சொல்ல அமைதியானேன்.

ஆச்சி இறந்து பல ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் எனக்குத் திருமணமாகி எனது மகள் நிலாவும் நான் செய்தது போலவே தனது ஆச்சியுடன் சேர்ந்து எனக்குத் தெரியாமல் கூல்டிரிங்ஸ் வாங்கிக் குடிக்கையில் தாங்கமுடியாத கோபம் வந்தாலும் உள்ளூர நமுட்டுச் சிரிப்புடன் எனது ஆச்சியின் பசுமையான நினைவுகளில் மூழ்கிப் போகின்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *