பெறுபேறு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 3,017 
 

வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு இந்தப் பயணம் ஓர் உறுதுணையாக அல்லது ஒரு தூண்டுகோலாக அமையும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோரின் கண்களில்!

பத்துப் பிள்ளைகளில் மூத்தவனை கண் காணாத இடத்துக்கு முன் பின் அறியாதவர்களிடம் அனுப்பி வைக்கும் அவர்களின் மனநிலை இதை விட வேறு என்னதாய் இருக்கும்.

புகையிரதம் அவனுக்குப் புதுசு.

“அடிச்சு வளர்க்காவிடின் அடையாளம் தெரியாதவர்களிடம் அடி வாங்க நேரிடும்”.

அருகே அமர்ந்திருந்த ஒருவர் மற்றவருக்கு சொன்னது காதில் விழ மனது ‘திக்’ என்றது.

வீட்டில் ஒரு நாளும் அடித்ததில்லை. அபரிமிதமான அன்பைச் சொரிந்தார்கள். அப்ப போற இடத்தில அடிக்கப் போறானுகளோ?

புதிய இருப்பிடத்தில் அல்லது புதிய வேலையிடத்தில் உறங்காத எண்ணங்களுடன் உறங்கிப்போனவன் மறு நாள் சற்றுச் சாவகாசமாகவே எழுந்தான்.

புத்தரின் இயற் பெயரான சித்தாத்தன் என்பதுதான் இவனது இயற் பெயர் என்பதுவும் செல்லப் பெயர் தான் சித்து என்பதும் முன்னர் தாயார் கூறியிருந்தது கவனகத்தில் தோன்றி மறைந்தது.

அன்று முழுக்க அவனுக்கு பெரிதாக வேலை எதுவும் இருக்கவில்லை.

தொட்டாட்டு வேலைகள் என்று சொல்வார்களே! அத்தோடை சரி!

“சித்து! ஒவ்வொரு நாளும் நீ அதிகாலையில் எழும்ப வேண்டும். அதுவும் நாம் எல்லோரும் எழும்ப முன்னதாவே எழும்ப வேண்டும்.”

“ஓம் அது எனக்கு நன்கு பழக்கமானதுதான். வெள்ளன நாலு மணிக்கே எழும்பிவிடுவேன். பின் கொஞ்ச நேரம் கும்பிடுவேன். வரும் பொழுது யாரோ விட்டுச் சென்ற புத்தரின் படத்தை எடுத்து வந்துள்ளேன். இது கூட என்ரை சமயமல்ல! எல்லா சாமிகளும் ஒண்ணுதான்!”

“நல்லது. மதத்தில் பிடித்ததை வைத்துக் கொள்! ஆனால் எதையும் மதம் பிடித்து வைத்துக் கொள்ளாதே.”

அவனுக்கு விளங்கினதோ இல்லையோ அவன் எப்படி வழிபடப் போகின்றான் என்பது மட்டும் வீட்டுக்கார அம்மாவிற்கு விளங்கவேயில்லை.

அதனைப் பார்ப்பதற்கென்றே அடுத்த நாள் அதிகாலை ‘அலார்ம்’ வைத்து எழும்பியவள் அவன் படுத்திருந்த இடத்தை எட்டிப்பார்த்தாள்.

முதல் நாள் முழுவதும் அந்த இடத்தை கூட்டித் துடைத்து மிகவும் தூய்மையான இடமாக மாற்றியிருந்தான்.

பரணில் தூக்கி வீசப்பட்டிருந்த ‘சண்லைட் சோப் பக்கீஸ் பெட்டி’ புதிதாய் வெள்ளை வர்ணம் பெற்று புத்தரின் வாசஸ்தலமாக மாறி இருந்தது.

திருநீற்றுக் கிண்ணமாக ஒரு சோடாமூடியும் சிறு விளக்காக இன்னுமொரு சோடாமூடியும் புத்தர் படத்துக்கு முன்பாக காட்சி அளித்தது ஆச்சரியமாக இருந்தது.

‘எல்லாவற்றையும் ரசிப்பவனுக்கு எதிலும் குறை தெரியாது. எதிலும் குறை காண்பவனுக்கு எதையும் ரசிக்கத் தெரியாது.’ யாரோ எழுதிய வரிகள் நினைவில் வர மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

வீட்டம்மாவின் அரவத்தில் அருண்டவனின் காதுக்குள் கெதியா எழும்பு அடுப்படியை தொடைச்சி சுத்தமா வை என்ற அவனது ஆழ்மனக் குரல் தூக்கத்தைத் துப்பரவாக துடைத்தது.

அடுத்த சில விநாடிகளில் தனது புறம் தூய்மையானதில் அகத்தை தூய்மையாக்குவதில் முனைந்தான்.

கைகளில் நிரம்பியிருந்த பூக்களை புத்தர் முன் சொரிந்தான்.

விபூதியை விரல்களால் கிள்ளி நெற்றியில் பரவினான்.

முழங்காலில் மண்டியிட்டான்.

நன்கு குனிந்து தலையால் நிலத்தை வருடினான்.

எழுந்தான்.

ஆகாயம் நோக்கி அகலமாக கைகைளை விரித்தான்.

பின் கைகளை குவித்தான்.

உழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும். மனிதரை மதிக்கும் குணம் வேண்டும். தோல்வியை எண்ணி அச்சம் இல்லை என்றால் வெற்றி நிச்சயம். உனக்கு வெற்றி நிச்சயம். எல்லாம் கடந்து போகுமடா இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா!

சூது கவ்வும் படத்தில் வரும் பாடலொன்றின் வரிகள் இவை என தெரியாத அவனுக்குத் தெரிந்த தேவாரமும் இதுதான். செபமாலையும் இதுதான். துவாவும் இதுதான்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்தம்மாவை வேடிக்கை பார்க்கவென்றே அந்தப் பக்கம் வந்தார் அரைகுறை தூக்கக் கலகத்துடன் அவரது கணவர்.

“பார்த்தீர்களா உந்த விநோதத்தை! சாமி கும்புடுகிறானாம்..சாமி! சமயத்துக்கு ஏற்றபடி இறைவனை பாடுபவர்களை கண்டுள்ளேன். உப்பிடி மத மயக்கத்தில் எவரையும் காணலை!”

எட்டிப் பார்த்தவர் அசந்துதான் போனார்.

“யாருக்கு வரும் உந்தப் பக்தி மனம். உள்ளார்ந்த உள்ளுணர்ச்சிகளோடு ஒன்றிக் கலந்து கடவுள் இருக்கிறார் என்று நம்பிக் கும்பிடுவது பாமரத்தனமல்ல. ஆனால் அந்தப் பக்தி அவரை நெறிப்படுத்த உதவுகின்றது என்று யாராவது உணராது இருப்பின் அதுதான்

பாமரத்தனம். அவரது அகம் பாராமல் புறம் பார்ப்பவர்கள் – புறம் பேசுவார்கள். அவனை விடு அவன்பாட்டுக்குக் கும்பிடட்டும்.” என்றவாறே அங்கால நகர்ந்தார்.

வாயால் சேவித்ததுடன் தனது வழிபாட்டினை பூர்த்தி செய்தவன் வீட்டின் சேவிதத்தை ஆரம்பிப்பதற்கு என அவனுக்கு அரண்மனை போலத் தோன்றிய அந்த குறுகிய களஞ்சிய அறையை விட்டு வெளியே வந்தான்.

வீட்டுக்கார அம்மாவின் கைக்குள்ளும் வேலை இருக்கும். பைக்குள்ளும் வேலை இருக்கும். சமைக்க வேண்டும். வீடு கூட்ட வேண்டும். விறகு கொத்த வேண்டும். உடுப்பு தோய்க்க வேண்டும். தண்ணீர் கட்ட வேண்டும். ஆடு மாட்டை பார்க்க வேண்டும். புல்லை அறுத்துப் போட வேண்டும். சாணகத்தை அள்ளி கிடங்குள் கொட்ட வேண்டும். அம்மியிலை கொஞ்ச நேரம். ஆட்டுக்கல்லிலை கொஞ்ச நேரம். உரல் உலக்கையோட கொஞ்ச நேரம். ஒவ்வொன்றாக வீட்டுக்காரம்மா சொல்லப் போவது அன்றைய வேலை மட்டுமல்ல.அன்றாட வேலை! எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தினந்தோறும் 16 மணி நேர வேலைக்கு குறைவிருக்காது.

இவ்வாறு அவன் நினைத்ததை வீட்டுக்காரம்மா நினைக்கவில்லை.

அவளது கையில் தேநீர் இருந்தது. அது அவனுக்காகவும் இருந்தது.

அதை விட அதிசயம் அவனுக்கான அந்தக் குவளை நசுங்காமலும் நெளியாமலும் இருந்தது.

என்ன பிறவி இந்த வீட்டுக்காரம்மா? – மனது நெளிந்தது.

ஆசைப்படக் கூடாது என்ற புத்தரை ஆசையுடன் நிமிர்ந்து பார்த்தான்.

வாழ்க்கை உனக்குப் படிப்பிக்கும். நீ கற்றுக் கொள்வாய் என்பது போலிருந்தது!

வீட்டுக்கார அம்மா தனக்கான தேநீருடன் வந்ததே அவனது முதல் நாளின் முதல் பாடமாயிற்று.

அதன்பின் வந்த நாட்கள் எவையுமே வீட்டுக்கார அம்மாவை தேநீர்தான் வரவேற்றது.

“நீ கவனமாகப் படிக்க வேண்டும். அதற்குரிய சகல வசதிகளும் உனக்கு செய்து தரப்படும். படி. வாழ்வில் உயர்வாய் படிப்படி. இந்த வாய்ப்பினை பயன்படுத்து நல்லபடி!”

“அப்ப வேலை!”

ஏழை மனது! எதற்காக ஏங்கும்?

ஏங்கியது!

“எழுத வாசிக்கத் தெரியுமா?”

“உயர் தரம் சித்தி பெற்றுள்ளேன். பின் தொடரவில்லை. தமிழ் எழுத வாசிக்க நன்கு தெரியும். ஆங்கிலம் எழுத்துக் கூட்டி வாசிப்பேன். சிங்களம் கொஞ்சம் கொஞ்சம் விளங்கும்.”

“ சரி! உனக்கு முன்னால் இப்பொழுது மூன்று தெரிவுகள் உள்ளன. முழு நேர படிப்பு. பகுதி நேர படிப்பும் வேலையும். முழு நேர வேலை. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எதை தெரிவு செய்தாலும் பின்னர் அதை இடை நிறுத்தி வேறொன்றுக்குள் எக் காரணம் கொண்டும் மாற இயலாது. படிப்போ வேலையோ நான் கருணை

காட்டமாட்டேன். மிகவும் இறுக்கமாக நடந்து கொள்வேன். வடிவா யோசிச்சுச் சொல்லு.”

“நெருப்பையும் இனிமேல் தள்ளி வையுங்க. படிப்புக்கும் எனக்கும் வெகு தூரம் எனின் என் மீது வரப்போகும் வெறுப்பையும் தள்ளி வையுங்க.”

உரத்துச் சத்தமாகவே சொல்ல நினைத்தாலும் வார்த்தைகள் வாய்க்குள் வழுக்கிக் கொண்டதில் சங்கடப்பட்டுச் சத்தமில்லாமலே சொன்னான்.

“படிப்பு என்றுமே அருகில்தான். நீ தான் அருகாமையை தொலை தூரம் என வீணே சங்கடப்பட்டுக் கொள்கிறாய். நீ தடுமாறும் போது தட்டிக் கொடுக்கவும் தடம் மாறும் போது தட்டிக் கேட்கவும் நாம் இருப்போம்.”

தனது படுக்கை அறையின் பிறிதொரு மூலையில் சிதறுண்டு கிடந்த புத்தகங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினான்.

வதமாயிருந்தது.

முற்றத்தில் கிடந்த விறகுகளை பொறுக்கி ஒன்றின் மேல் ஒன்றாக கொட்டிலுக்குள் அடுக்கினான்.

இதமாயிருந்தது.

உலகின் தலை சிறந்த வாத்தியார் யார்? நமது வாழ்க்கைதான். அது படிப்பிக்காத பாடத்தையா மற்ற ‘மனப்பாட வியாபாரிகள்’ படிப்பிக்கப் போகின்றார்கள்?

படிப்பென்றால் கசக்கும் என்ற கற்பனை கூட இனித்தது.

ஒரு மாதம் அதற்குள் எப்படிப் போனதென்பதே தெரியவில்லை.

‘நீ போய் ஒரு மாதம் ஆச்சு! நீ அனுப்பிய காசு கிடைத்தது. ரொம்ப உதவியா இருக்கு. உங்கு நீ உவர்கள் சொல்லும் வேலைகள் அனைத்தையும் பஞ்சி பாராமல் செய்!’

குடும்பத்தின் வளர்ந்த உறுப்பினர்கள் இதனையே திருப்பித்திருப்பிச் சொன்னது அந்தச் சிறிது நேர தொழில் நுட்ப உரையாடல் முடிந்த பின்பும் அவனது காதுகளில் திரும்பத்திரும்ப ஒலித்தது.

“சித்து! உன்ரை வீட்டுக்காரர் உனக்குச் சொன்னதைத்தான் எனக்கும் சொன்னார்கள். நீ என்ன படிக்கப் போகிறாயா? அல்லது வேலை செய்யப் போகிறாயா? ”

சமையற்காரனாக வருவதற்கு என்ன படிப்பு வேண்டிக் கிடக்கு எனச் சொல்லத் தொடங்கியவன் பாதியிலே அதன் போக்கை மாற்றி “சமையற்காரனாக வருவதற்கு படிப்பு என்ன வேண்டும்?” என்றான்.

முடிவெடுத்த முடிவு. பதிலில் முறுவலித்தது.

நூற்பந்து சிக்கலாகிவிட்டால் ஒட்டு மொத்தமாக பிடித்து இழுக்கக் கூடாது. நூலின் தலைப்பைப் பிடித்து இழுத்துத்தான் சிக்கலை தீர்க்க வேண்டும் என்பது வீட்டம்மாவிற்கு தெரியாதா என்ன?

கணனி ஒன்றை கொண்டு வந்து பொருத்தினார்கள்.

‘இதில நல்ல பரிச்சயம் வரும் வரை நல்லாய் விளையாடிப் பழகு. பாதியில் நிறுத்தி விடாதே.தொடங்குவதில் வெற்றி இல்லை.தொடர்வதில்தான் வெற்றி

என்பதை கவனத்தில் வை. உன்னால் நாங்கள் நல்லாக வாறதிலும் பார்க்க எங்களால் நீ நல்லா வாறதுதான் எமது விருப்பம்.’

வீட்டுக்கார அம்மாவிடம் ரகஸியமாக ஒரு தாயன்பும் தெரிந்தது. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும் வைராக்கியமும் மிகுந்தது.

கணனியைப் பார்த்துத்தானே இப்பவெல்லாம் விதம் விதமாக சமைக்கக் கற்றுக் கொள்கிறார்கள். அதற்கான முன் ஏற்பாடாகவே இதுவும் இருக்கப் போகிறது என்பதே சித்துவின் நினைப்பு.

என் மீது வீட்டம்மா கை ஓங்க முன்பாக கணனியில் எனது கை ஓங்க வேண்டும்.

ஆண்டவா அருள்புரி. மனம் பிரார்த்தித்தது.

எல்லாம் அறிந்த கணனியால் சுட்டு விரலுக்குக் கூட சுறுசுறுப்பு வந்தது!

நல்லாகவே பறந்தது பொழுது !

“இப்ப சொல்லு… படிப்பா…வேலையா?”.

“படிப்பில் விருப்பம் இருக்கு. ஆனால் படிக்க விருப்பம் இல்லை.”

குடை பிடிக்கிறாள் தாய். குடைக்கு வெளியே கை நீட்டி மழை பிடிக்கிறது குழந்தை என்ற கதைதான்!

விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள். விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்.

உது சரிப்பட்டு வராது. திணித்தால் பலகாரம் கூட பலாத்காரமாகி விடும். அவனை அவன் போக்கிலே சென்றுதான் தன் வழிக்குக் கொண்டு வர வேண்டும். பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின் என்ற குறள் வழி செல்வதை தவிர வேறு வழி எதுவும் உடனடியாக நினைவில் வரவில்லை.

“எமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை உன்னுள் நிறைந்து இருப்பது தெரியும். இப்ப உன்ரை பாட்டுக்கே கணனியிலும் நன்கு தேறி விட்டாய். இன்னொரு உதவி தேவை.” என்றார் வீட்டம்மா.

பதிலுக்காய் ஒரு வினாப் பார்வையை வீசினான் சித்து..

“ நீ செய்யப் போகும் அந்த உதவி…. பெரு மதிக்கும் உரியது!…. பெறுமதிக்கும் உரியது!… நான் படிப்பதற்கு நீ உதவி செய்ய வேண்டும்.”

வியப்பின் விளிம்பில் இமைக்க மறந்து வீட்டம்மாவின் உதட்டசைவையே பார்த்துக் கொண்டிருந்தன சித்துவின் கண்கள்!

கேட்க ஆயிரம் இருந்தும்…எதுவுமே கேட்கத் தோன்றாமல் உறைந்தது மனம்.

வீட்டிலிருந்து கடைசி தங்கைச்சி் சூரியகாந்தி பூக்களின் படத்தை புலனத்தில் அனுப்பியிருந்தாள். அவனது வீட்டுத்தோட்டத்தில் பூத்தவை. வீட்டு முற்றம் கூட சிறிதுதான். ஆனால் பூக்களால் என்றுமே நிறைந்திருக்கும். மலரோடு விளையாடும் தென்றலில் அசைந்தாடிய அந்தப் பூக்கள் அவனது நினைவை அங்கிழுத்துச் சென்றன. தன் வசமிழந்த உள்ளம் குளிர இன்பமூட்டின. தெய்வ பலம் படத்தில் வரும் அந்தப் பாடலை நிதம் பாடும் தந்தை மனதில் வாசம் செய்தார்.

“என்ன…நீங்கள் படிக்கப் போகின்றீர்களா? அதற்கு உங்களுக்கு நான் உதவி செய்ய வேண்டுமா?!”

நான் என்பதை சற்றே அழுத்திச் சொன்னது ஏதோ அதற்கு அடிக்கோடு இட்டது போலிருந்தது.

“திறந்த வெளி பல்கலை கழகத்தி்ல் நான் இயங்கலை மூலம் படிப்பதற்கு நீ உதவி செய்ய வேண்டும்!”

உடம்பு ழுழுக்கப் பரவிய பதற்றத்தை மறைக்கத் தெண்டித்தது அவன் முகத்தில் படர்ந்த மெல்லிய பரவசம்.

“என்னிலும் பார்க்க ரொம்ப வயது குறைந்தவர்களுடன் இனி போயிருந்து படிக்க எனக்கு வெட்கம்!” -அதே பரவசத்துடன் தொடர்ந்தான் சித்து.

மூளைக்குள் ஏதோவது இணைப்புக் கோளாறா?

வார்தைகள் அவதிப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது.

“திறந்த வெளி பல்கலை கழகம் என்றால் என்ன? “சித்துவின் சந்தேகம் தீர்ந்த பாடில்லை.

“திறந்த வெளி பல்கலைக் கழகம் பற்றி பலருக்கும் தெரியாது. திறந்த வெளி பல்கலை கழகத்தில் கற்பதற்கு நேரடியாக வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமேயில்லை. வீட்டிலிருந்தவாறே இயங்கலை மூலம் கற்கலாம். தேர்ந்தெடுக்கும் கற்கை நெறிக் கேற்ப அவர்கள் தமது பாட விதானத்தை அனுப்புவார்கள். வயது வரம்பும் இல்லை. எந்தத் துறையாயினும் அந்தத் துறைக்குரிய பல்கலை கழக அனுமதிக்கான அடிப்படைத் தகுதியை திறந்த வெளி பல்கலை கழகமும் எதிர்பார்ப்பது இயல்பு. எனினும் எழுத்தறிவு இல்லாதவர்கள் கூட பட்டதாரியாக வெளி வரலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவ்விதம் இளமாணியானவர்கள் புலமை பரிசு பெற்று முதுமாணியானது கூட உண்டு. புலமை பரிசும் அதி உயர் புள்ளிகளால் மாத்திரம் கணிக்கப்படுவது கிடையாது. வருமானம் குடும்ப நிலை போன்ற பல காரணிகள் அதற்கு அனுசரணையளிக்கின்றன. மற்றும் படி சுவருக்கும் வேலிக்கும் உள்ள பேதம்தான்.”

“யாருக்கு யார் உதவி புரிவது என்பதில் இப்பவும் எனக்கு ஒரு சந்தேகம்”

ஓர் அச்சமும் பதட்டமும் கேள்வியில் தொனித்தது.

“அதிலென்ன சந்தேகம்! பார்வை சற்றே மங்கலான ஒருவருக்கு உதவுவதாக நினைத்துக் கொள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் தருவேன். அதனை நீ கணனியில் சுருக்கித் தர வேண்டும். அதில் உனக்கு பிடித்தமானவை எவை பிடிக்காதவை எவை என்பதையும் பிறிம்பாக பதிவு செய்து தர வேண்டும். அத்துடன் வேறு எவற்றை சேர்த்திருக்கலாம்… அல்லது நீக்கியிருக்கலாம் என்பதையும் குறிப்பிட வேண்டும். விளங்காதவற்றையும் தவறாமல் குறிப்பிட்டால் அந்தப் பாடத்தை நீ முழுமையாக வாசித்துள்ளதாக நான் விளங்கிக் கொள்வேன். இதனை முடிக்க தினமும் உனக்கு நான்கு மணி நேரம் வேண்டும். ஆனால் இரண்டு மணித்தியாலத்திலும் முடிக்கலாம். அல்லது ஆறேழு மணித்தியாலங்களையும் எடுக்கலாம். அது உன்னைப் பொறுத்தது. விரைவாக படிப்பதும் விரைவாக பட்டதாரியாவதும் இனி உன்னைப் பொறுத்தது. நீயா நானா என்பதை பின்னர் பார்ப்போம்”

தினமும் பாடங்களை கூர்ந்து கவனித்தான். தொடர்புபடுத்தினான். செயற்படுத்தினான்.

பெறுபேறு வந்தது. பெரும் பேறாய் வந்தது.

அனைத்துப் பாடங்களிலும் அதி உயர் புள்ளிகள்!

வீட்டம்மா விரும்பியவாறே சித்தார்த்தன் பட்டதாரியானான்.

இது வரை அவன் விரும்பியது படிப்பை விட!

இனிமேல் அவனுக்கு விருப்பமானதும் வேறொன்றுமில்லை படிப்பைவிட!

அடுத்ததாக யாருக்கு அறிவுச் சுடரை ஏற்றலாம் என்ற ஆவலுடன் தனது மடிக் கணனியை தூக்கினார் வீட்டம்மா.

முதுமாணி பட்டத்தையும் புலமைப்பரிசு மூலம் பெற்றுக் கொள்வதற்கு அடுத்த நடவடிக்கை என்ன என்று அறியும் ஆர்வத்துடன் தனது கணனியை இயக்கினான் சித்தார்த்தன்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற வாக்கியம் கணனியின் முகப்புத் திரையில் விரிந்தது. இதயத்தில் உயிர்த்தது!

– டிசம்பர் 2022, அக்கினிக்குஞ்சு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *