நட்சத்திர பங்களா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 8,547 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

கையில் ஆவி பறக்கும் காப்பியோடு இப்படி வாயிற்புறம் சாய்ந்து நிற்பது இவளுக்கு பிடித்த வேளை.

வீட்டின் வலப்புற ஓரமாய் நிற்கும் மொட்டை மரத்தை இலக்கின்றி பார்த்தபடி துளித்துளியாய் காப்பியை ரசித்து உள்ளிறக்குவாள்.

‘ஏந்தாத்தா, இந்த மரம் ரொம்ப நாளா மொட்டையா நிக்குதோ. இதை வெட்டிட்டு ‘பளிச்’சுனு பூக்கற மரமா ஒண்ணை நட்டா என்ன? இல்லைன்னா, ஒரு வேம்பு – உடம்புக்கு அந்தக் காத்து பலம்ல?’

‘இல்லப்பூ… துணி காயவிடறக் கயிறு, இதுக்கும் வெளிச்சுவருக்குமாத்தானே நிக்குது? இந்தத் திசையில் துணிங்களைக் காயவிட்டா காலை, உச்சி வெயிலு தோதாப்பட்டு துணிங்க நிமிசமாய் காஞ்சிடுது. இதை வெட்டிட்டா எப்ப வேற மரம் முளைக்கதுங்கறா ராணி… தவிர, மரத்துல முனிகினி ஏதானும் இருந்தா… வெட்டவுடாது…’

‘வெறும் ஒரு கம்பை நடறது?’ -இப்படி சொன்னாலும் அந்த உயிரற்ற மரமும் பழகிப் போனது.

அதேபோல காலையும், மாலையும் அதில் வந்து அமரும் ஒற்றைக்குருவியும் கூட… மொட்டை மரத்தின் உச்சிக்கிளையில் வெகுநேரம் ‘தியானம்’ செய்துவிட்டுப் போகும்.

பத்து மணிக்கு மேல் அதிலிருந்து நீளும் கொடியில் வண்ண வண்ண துணிகள் படபடப்பதுகூட அழகுதான்.

விழிகளைச் சுழற்றினாள்.

பதினைந்து நாட்களாய் பூட்டப்பட்டிருந்த மாடி அறையின் சன்னல்கள் விரிந்திருந்தன.

‘எத்தனை நாட்கள் தங்குவதாய் உத்தேசம்?’ என்று வந்திருப்பவனை இவள் கேட்பது நாகரீகமில்லை. அவன் உரிமையுள்ள விருந்தாளி வேறு!

ஆனால், உள்ளே அதே கேள்வி விடாது குடைகிறது.

நேற்று மசால் தோசையை மென்றபடி பேசினான்.

“பிரமாதம். ராணி கை ‘நளபாகம்’ எப்படின்னு தெரியலை. ஆனா, அடிக்கடி இங்கே வந்திடுவேன். இந்த வீடு எப்படி வசதியானதுதானா பரணி? ரொம்ப சின்னது இல்ல…?”

“எங்களுக்குப் போதும்” அமர்த்தலாய் சொன்னாள்.

“பங்களா ரொம்ப பெரிசு. துணைக்கு இதே காம்பவுண்டல் நீங்க ரெண்டு பேர் இல்லைன்னா நான் தங்கறது சிரமம் – காடு போலிருக்குது. ஆனால், ரெண்டு அழகிய பெண்ணுங்க வளைய வந்தா இதுவே பிருந்தாவனமாய் மாறிடுது.”

“நீங்க கோகுல கிருஷ்ணனாய் இருக்கலாம். ஆனா, நாங்க கோபிகா ஸ்தீரிகள் இல்லை” -சிடுசிடுத்தாள்.

இங்கே தங்கப் போகிறவனது வாலை ஆரம்பத்திலேயே சற்று நறுக்கி வைத்தால் தேவலை. இல்லையென்றால் வம்புகள் வரம்பு மீறிப் போகுமே?

இப்படி ரசித்துச் சாப்பிடுபவன் தினமும் தட்டோடு வந்து உட்கார்ந்துவிடுவான்.

“ஸ்ஸ்… ஆ…”

“என்ன?”

“ரொம்ப காரம்… பேச்சு, பச்சை மிளகாய்… ரெண்டும்!” கண் சிமிட்டினான்.

அக்குழந்தைத்தனமான சமிக்ஞை சிரிப்பு மூட்டியது.

சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.

காலையில் எழுந்ததும் பரணி அருந்துவது ஒரு சொம்பு தண்ணீர்தான். பிறகு வேலைகளை முடித்தபின் அனுவோடு சேர்ந்து காலை சிற்றுண்டி.

வீடு பெருக்கி, துணிகளை துவைத்து உலத்திய பின் அவள் ஆவலோடு எதிர்பார்க்கும் சிறு ஓய்வு இது.

சூடான காப்பியை ரசித்துப் பருகி, உடலைத் தளரவிடும் சில நிமிடங்கள்.

இன்றைய வேலையை நினைத்ததுமே உற்சாகமாக இருந்தது. காரணம், தைக்க இருந்தது அனு குட்டிக்கான பட்டுப்பாவாடை.

மற்றபடி வேலை இயந்திரத்தனமாய் போகும். முடியும்போது உடம்பும், மனதும் அலுத்து சோரும்.

இம்முறை அனுவின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையாய் அமைந்தது. போனமுறை அம்மா தவறினதைக்கொண்டு எந்த கொண்டாட்டமும் இல்லை. அதற்கும் சேர்த்து இவ்வருடம் ஈடுகட்ட வேணும்.

அருகில் இருந்த அனுவின் சிநேகிதக் குட்டிகளை மாலையில் தன் வீட்டிற்கு அழைத்திருந்தாள்.

இரு வகை இனிப்பு, காரம், பழரசம், விளையாட்டு என்று வைத்தால் பிள்ளைகளுக்கு இரண்டு மணி நேரம் குஷியாய் கழியும்.

அனுவும் மகிழ்ந்து போகும்.

பாவாடைத் துணியைப் பிரித்துப் போட்டாள்.

வேலை செய்ய இது தோதான இடம்.

நகரின் விளிம்பில் இருந்தும் இது ஒதுக்குப்புறம். பிரதான சாலையிலிருந்து நன்கு உள்ளடங்கியதால் வாகன இரைச்சல், புழுதி எட்டாது.

‘வாழ்க்கையில் கிடைத்த நன்மைகளுக்கு முதல்ல நாம நன்றி சொல்லிப் பழகணும்’ என்பார் அடிக்கடி பெரியம்மா.

உண்மைதான்!

உற்சாகமாய் பாவாடை மடிப்புகளை அடுக்கிய நேரம், அந்த ‘ஹார்ன்’ ஒலி கேட்டது.

வருவது அர்ச்சனா என்று எண்ணி முடிக்கும் முன்பே பரணியின் வலது கை வாய்க்குப் போனது!

‘ஐயையோ…இன்னும் அவள் தந்த ரவிக்கை வேலையை முடிக்கலியே!’ நினைத்த நெஞ்சு படபடத்தது.

‘விர்’ரென்று புலிக்குட்டி போல வந்து நின்றது அந்த மஞ்சள்நிற கார்,

தன்னைப் பேயறைந்தாற் போல பார்த்து நின்ற பரணியைப் பார்த்தவளுக்கு விவரம் புரிந்துபோனது.

‘என்ன… வேலை இன்னும் முடியலையா?” அர்ச்சனாவின் ‘லிப்ஸ்டிக்’ உதடுகள் சுழித்தன.

ஏதோ இந்த வேலை முடிய தான் இதுவரை நான்கு முறைகள் நடந்து ஓய்ந்த ரீதியில் அர்ச்சனா பேசியது சற்று எரிச்சல் மூட்டியது. ஆனாலும் அதை வெளிக்காட்ட முடியாதே!

“அ…ஆமா…ஸாரி.”

“என்ன நீ? ஏற்கெனவே தைச்ச ரவிக்கையில அங்கேயும் இங்கேயுமாய் சில மாறுதல்கள் பிடிக்கணும், பிரிக்கணும். அதையுமா செய்யலை?”

அவள் தந்திருந்த நான்கு ரவிக்கைகளும் சென்னையில் புகழ்பெற்ற தையலகத்தில் சோளி ஒன்றிற்கு நூறு ரூபாய் வீதம் கூலி தந்து தைத்துக்கொண்டவை. ஆனாலும், உடம்பில் அத்தனை பாந்தமாய் பொருத்தாமல் போக, திருத்தங்களுக்காய் இங்கு வந்திருந்தன.

“பிரிச்சுட்டேன் மேடம்… இருபது நிமிஷம் இருந்தா தையலும் போட்டிருவேன்.”

“நானென்ன உன்னை மாதிரி சும்மா வீட்டோட கிடக்கிறவளா? இப்ப மதுரை போகணும்… என்ன இப்படி பொறுப்பில்லாம…இத்தனை மறதி… ச்சே…”

‘மளுக்’கென பரணி கண்களில் நீர் நிரம்பியது.

காரணம், அர்ச்சனாவின் அர்ச்சனை மட்டுமல்ல; அதை கேட்டபடி பாஸ்கரன் பின்னாலே வந்து நின்றதுதான்!

“பரணி… யாரிது?” அவன் அதட்டலாய் கேட்டான்.

‘விர்’ரென ஒரு ராணியின் தோரணையில் திரும்பிய அர்ச்சனா, மறுகணம் பூனையானாள்!

சிடுசிடுப்பு போய் சிரிப்பு ஏறியது.

“நான்… நீங்க யார்? புதுமுகமாய் தெரியுது. அலோ…”

சாட்டையாய் வளையும் அவளது நாக்கில் தேன் சொட்டியது!

“வீட்டுக்கு வர்றவங்கதான் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளணுமே தவிர, வீட்டுக்காரங்க இல்லை” மிடுக்காய் வந்தது பதில்!

அவள் மேலும் குழைந்தாள். “நான் அர்ச்சனா. பக்கத்துல ‘சுகர் மில்’ இருக்குதே… அதன் ஜெனரல் மேனஜரோட பொண்ணு. பரணிகிட்ட துணி தைக்கக் கொடுக்க வருவேன். இன்னும் வேலை முடியலையாம். மறந்துட்டேங்கறா… பச்… நான் இப்ப என்ன செய்யறது? இன்னைக்கு மதுரையில் சில வெளிநாட்டக்காரங்களை நான் சந்திக்கணும். பட்டுச்சேலை கட்டலாம்னா… அதற்குரிய ரவிக்கை இவகிட்ட மாட்டிகிச்சு…!”

“வீட்டுக்கு வரலாமே? ஒரு ‘கூல் டிரிங்ஸ் குடிக்கறத்துக்குள்ளே துணி தயாராயிடும். இருபது நிமிஷம்னு சொன்னேல்லியா பரணி?”

இவளைப் பார்த்தான்.

“ம்ம்… ஆமா.”

அவன் திரும்பி நடக்க, பால் தட்டுக்குப் பின்னே போகும் பூனைக்குட்டியாய் அவனைத் தொடர்ந்தாள் அர்ச்சனா.

ஆச்சரியமாகவும், துளி எரிச்சலாயும் இருந்தது.

இவன் இந்நேரம் இங்கு மூக்கை நீட்டுவானேன்?

அதோடு நில்லாமல் பல்லை இளித்து வந்தவளை அழைப்பானேன்?

அவளும் தேனில் விழுந்த ஈ போல அவன் பின்னால் போவானேன்?

பரணி வேலைகளை மறக்கும் ரகமில்லை.

மறந்தாலும் லேசில் விட்டுவிடும் பெண்ணில்லை அர்ச்சனா.

ஆக, இதோடு போனதே என்று நிம்மதி காணாமல் ஏன் இத்தனை ஆராய்ச்சி?

மனதைக் கட்டினாள்.

ரவிக்கைகளோடு அமர்ந்து வேலைகளில் ஒன்ற முயற்சித்தாள்.

வேலையை முடித்து துணிகளை இஸ்திரியிட்டு மடித்தாள். சிறுபையினுள் அவற்றை இட்டு வெளியே வந்த நேரம், இருவரும் ஜோடியாய் எதிரே…

கண்ணை நிறைத்த ஜோடி… ஆனால், கருத்துக்கு ஏற்கவில்லை.

“அட… சொன்ன நேரத்துக்கு முடிச்சிட்டியே?” – சிறுபிள்ளையைப் பாராட்டுவது போல ஏக உற்சாகமாய பேசினான் பாஸ்கரன்.

அதாவது இவளுக்கு உதவிவிட்டானாம்.

“இன்னும் நேரமாகி இருந்தாலும்கூட நான் அலுத்திருக்க மாட்டேன் பாஸ்கர்.”

அர்ச்சனா கொஞ்சினாள்.

சதா விறைப்பும், கர்வமுமாய் நிற்பவளை- நிமிட நேர காத்திருக்கப் பொறுமையற்றுப் பறப்பவளை இன்று குழைவா பார்ப்பது புதுமைதான்!

என்ன வசியம் போட்டான் இவன்?

அப்போதுதான் புதிதாய் பார்ப்பவள் போல மீண்டும் அவன் மீது ஓரவிழி ஓட்டினாள் பரணி.

இந்திய சராசரி ஆணைவிட அரை அடி உயரம்.

ஆனால், ஒட்டகச் சிவிங்கி போல ‘வெடவெட’ப்பா தெரியாதபடி தோள்கள் அகன்று கிடந்தன.

இடுப்பும், காலும் வலுவாய்… வடிவாய்.

எதற்கோ அவன் சிரிக்க, விழிகளை அவன் முகத்திற்கு உயர்த்தினாள்.

முகமும் வெகு கவர்ச்சிதான்.

சீரான பல் வரிசையும், சிரிப்பில் இடுங்கும் விழிகளும் தனி ஈர்ப்பு.

ஒட்ட வெட்டப்பட்டிருந்தாலும் அடர்ந்து பளபளத்த தலைமுடி. ஜுன்ஸ் பாக்கெட்டினுள் இரு கட்டை விரல்களைச் சொருகியபடி அவன் நின்ற தோரணை தனி கம்பீரம்.

இந்த மிடுக்கோடு இணைந்த பணம்தான் அவன் வசிய ரகசியம்.

தங்க பாணமின்றி மன்மதனே வந்தாலும் லட்சியம் பண்ணுவாளா அர்ச்சனா?

“வரட்டுமா பாசு, உங்களைச் சந்திச்சதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இன்னைக்கு வர்ற ஜெர்மன் குழுவுக்கு மதுரையைச் சுற்றிக் காட்ட ஏற்பாடு செய்யணும். ஒரு நாள் ‘சுகர் மில்’லைக் கூட அவங்க பார்க்கணுமாம். ஆக, மூணு நாள் நான் ‘பிஸி’. ஆனா, வர்ற ஞாயிறு ‘பிரீ’தான். அன்னிக்கு மதுரையிலே ரஷ்ய பாலே நடன நிகழ்ச்சி ஒண்ணு போலாமா?”

“ஸாரி அர்ச்சனா. அன்னிக்கு எனக்கு வேற ஒரு முக்கிய நிகழ்ச்சி இங்கே இருக்கு” – என்றவன் இவள் புறமாய் திரும்பினான்.

பரணி அவசரமாய் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.

அர்ச்சனாவைப் பழித்துவிட்டு தான் அவனை இப்படிப் பார்வையால் விழுங்கினால் எப்படி…?

“அதை மறுநாளுக்கு ஒத்திப் போடக்கூடாதா பாசு?” அரை மணி நேர சந்திப்பிற்குள் பாஸ்கர், ‘பாசு’வாகச் சுருங்கி கைக்குள் அடங்கியாச்சா?.

பரணியின் பொறுமல் அடங்கவில்லை.

“முடியாதே.அன்னிக்கு அனுவோட பிறந்தநாள் விருந்து. நான் இல்லைன்னா இந்த ரெண்டு கோபிகா ஸ்திரீகளும் கோபிச்சுப்பாங்க. பிறகு இந்தக் கண்ணன்பாடு கஷ்டம்….!”

இதென்ன? இவன் தன்னை தானாய் அழைத்துக்கொண்டு விட்டு, தாங்கள் இவன் வராது போனால் உருகிக் கரைவதாய் கதை அளக்கிறான்.

சற்றே பார்வையைக் காட்டமாக்கினாள்.

“அதுக்குள்ள முறைப்பு பார்த்தீங்களா? நம்ப வீட்டு நிகழ்ச்சியை விட்டுட்டு நான் போவேனா பரணி?” – என்றான் சர்க்கரை குரலில்.

அவன் கெஞ்சுவதைக் கேட்ட அர்ச்சனா முகம் கடுத்தது.

“ஓ… உனக்கிந்த வேலைக்கான கூலியைக் கொடுக்க மறந்துட்டேன் பரணி. இந்தா…”

நூறு ரூபாய் நோட்டை உருவி நீட்டினாள்.

“பாக்கி பத்து ரூவாய்… இதோ…”

“பச்… இருக்கட்டும். உம் மறதிக்கு இதில் பாதிதான் தந்திருக்கணும் – ஆனா, அதனாலத்தானே நான் பாசுவைத் சந்திக்க நேர்ந்தது? ஆக வச்சுக்கோ…”

மூகம் கன்றி சிவக்க, குறுகி நின்றாள் பரணி.

– தொடரும்…

– ராணிமுத்து மார்ச் 1, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *