புரூட்டைஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 3,082 
 
 

எப்போதும், வெள்ளை வேஷ்டி, சட்டையில் வெளியே கிளம்பும் சுயம்பு ராஜன், காலை ஏழரை மணி வாக்கி்ல், கைலி, டிஷர்ட்டுடன் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த குணாளன் ‘என்ன காலைலே மப்டிலே கிளம்பீட்டீங்க, முக்கிமான வேலையா..?’ என்றான்.

‘ஆமாப்பா, ஒரு அர்ஜெண்டுதா, போற ஆளை இன்னைக்கு பாக்கலேனா, இந்த மப்டி ட்ரஸ்ஸூம் மிஞ்சாமப் போயிடும்போல.. அடுத்த டவுசர்லெ பாக்க கூடாதுன்னு சாமிக்கிட்டெ வேண்டிக்கோபபா’

‘கப்பல் முழுகப்போற மாதிரி இப்படி பேசுறீங்களே என்னாச்சு, வேணுன்னா நானும் வரட்டுமா?’

‘தேவையிலலப்பா, ஒனக்கு ஏஞ்செரமம்..’ கடங்காரனைத்தான் பாக்கப்போறேன். பெரிய தில்லாலங்கடியா இருப்பாம்போலெ, வேற ஏதாவது மொரண்டு புடிச்சா சொல்றேம்பா..’ என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார் சுயம்பு. மா.பொ.சி தெருவில் , அவன் வாடகையில் வசித்துவரும், வீட்டிற்கு முன் நின்று சுயம்பு, எதிரே நின்ற பெண்ணிடம் விசாரித்தார்.

‘அம்மா நாதன்கிறவரு எந்த வீட்லமா இருக்காரு..’

‘யாரு நாதனா, எப்படி இருப்பாரு..’

‘கண்ணு மூஞ்சிலாம் சோளக்காட்டு பொம்மைமாதிரி, இருக்கும்ல, தலையிலகூட முடி இருக்காதும்மா, ஆளே வித்தியாசமா இருப்பாரு..’

‘புரியிதுங்க, அந்த ஓசிக்கும்பாவைச் சொல்றீங்களா?’ அது அடுத்த வீடுதான். தங்கச்சி வீட்லெ வந்து தங்கிருக்கான் அந்தப்பய’

‘அவரு வீடுனுல்ல சொன்னாரு..?’

‘உங்கட்டெ கடங்கேட்டானா, அப்ப அப்டித்தா சொல்லிருப்பான், கட்டாக்காலிக்கு வீடு எதுக்கு..?’ அவனோட தங்கச்சி இருப்பா, அவள்டெ கேட்டுக்கோங்க..: என்று சில நிமிடங்களில், அவனுடைய ஜாதகத்தை புட்டு வைத்துவிட்டு, வீட்டுக்குள் சென்றாள் அந்தப் பெண். அவன் தேடி வந்த நாதன் இல்லாததால், சுயம்புவும் சென்ற சில நிமிடங்களில், வந்த பாதையை நோக்கித் திரும்பி விட்டான்.

ஒரு பதினோரு மணிவாக்கில், பைக்கை வீட்டுமுன் நிறுத்திய நாதன், ஹல்மெட்டும், கையுமாக வீட்டுக்குள் நுழைந்தான். காலையில் அவசர அவசரமாகச் வெளியேறியவன், சாவகாசமாக குளித்து முடித்து விட்டு, பனியனுடன், அடுக்குமாடி குடியிருப்பின் மாடிப்படியில் உட்கார்ந்தான். உட்கார்ந்த சில நிமிடங்களில், கையிலிருந்த பபோனிலிருந்து, ரிங்டோன் ஒலித்தது. அதனைக் காதருகே கொண்டு போனவன், இடையிடையே சிரித்துக் கொண்டே பேசினான்.

‘ஹலோ, ரொம்ப நாளைக்குப் பிறகு போன் பண்ணிருக்கே, ஊர்லே ஏதாவது விஷேசமா…?’

‘.. அப்டிலாம் ஒண்ணுமில்லே, பேசலான்னுதான்..’

‘இப்ப எனக்கு வர்ற போனெல்லாம், நன்கொடை கேட்டுத்தான் வருது, அது மாதிரி நீயும் பண்ணிருப்பேனு நெனைச்சேன்’ சும்மா தைரியமா சொல்லு..’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, முதல் வீட்டுப் பெண் தகவலைச் சொல்வதற்காக வந்தாள். இவன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அவள், கொடியில் காயப்போட்ட துணியை, திருப்பி போட்டுக் கொண்டிருந்தாள்.

யாரையும் பொருட்படுத்தாமல் போனில. சம்பாஷனையில் இருந்த நாதன், ‘ இப்பல்லாம் ஒரு நாளைக்கு ஏழெட்டுப் பேருக்கு, சாப்பாடு போட்றேன்டா..? என்றான்.

‘அப்டியா.. பல காசு பணம் ரொம்ப பொரளுதோ..’

‘ஊர்லெ நீங்கதாண்டா நம்பளை, இப்ப நல்லா இருக்கேண்டா..’ இதைக்கேட்டு கேலியாக ஒரு புன்முறுவல் செய்த அண்டை வீட்டுப் பெண், ‘ சாப்பாடு சப்ளை பண்ற வேலை பாக்குற மனுசக் கொரங்கு, சாப்பாடு போட்றானாமுல்ல.. போக்கத்த நாய்க்கு என்ன வாயி.. அடி ஆத்தி’ என்று மெதுவாக முனகிக் கொண்டு, அவளது சமையலறைக்குள் நுழைந்தாள்,

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கடன் கொடுத்தவன் வீட்டுப்பக்கம் வருவானா என்று எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாள் அண்டை வீட்டு பெண்.. ஏனென்றால் எதிரே அவரை பொருட்படுத்தாமல், புழுகித் தள்ளிய நாதன்மீது, அவ்வளவு கோபம்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. எப்போதும் வீடுதேடி வந்து, நாதன் மருமகன்களுடன் விளையாடும் குழந்தைகள் வரவில்லை. ‘ ஒருநாள், கடைக்குச் சென்று கொண்டிருந்த ஸ்வீட்டியை நிறுத்தி, ‘ என்னடி வெளையாட வருவே, வீட்டுப் பக்கமே காணோமே..’ என்று கேட்டாள் நாதனின் தங்கை. ‘ படிலே உட்காந்திருக்காங்கல்ல, அந்த அங்கிளப் பத்தா, பயமா இருக்கு..’ என்று, அடுத்த கேள்வியை சந்திக்க விரும்பாமல் ஓடி விட்டாள்.

கடந்த ஒன்றரை மாதமாகவே, போனில் புழுகித் தள்ளிக் கொண்டிருந்தவன், திங்கட்கிழமையன்று வழக்கம்போல் மாடிப்படியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். இரண்டாவது தளத்தில் குடியிருக்கும் ரஞ்சனி, அலுவலகத்திற்குப் புறப்பட்டு, படியில் இறங்கிச் சென்றாள். தொடந்து கீதா, சாமுத்ரிகா ஆகியோர், சிரித்துப் பேசிக் கொண்டே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

‘அடியே இன்னைக்கும், அந்த வெருகு மூஞ்சி உட்காந்திருக்காண்டி, இன்னைக்கு என்ன பண்ணப் போறானோ தெரியலையே..? என்று சொல்லிக் கொண்டு இறங்கினார்கள்.
அவனைக்கடந்து செல்ல, ஒரு அடி இருக்கும் நிலையில், ‘ ஓலையைக் கிழித்தது போல ‘டர்ர்’ என்ற சத்தம் ஓங்கி ஒலித்தது. அவனைக் கடந்து ஒரு அடி வைத்த ரஞ்சனி, ‘.. ஏங்க ஆபீஸ் போற நேரத்துலெ, இதெ ஒரு வேலையாவே பண்ணிட்டு இருக்கீங்க…’ என்றாள்.

‘எல்லாருக்கும் மாதிரித்தான் எனக்கும் வருது, வாயின்னா பொத்திக்கலாம், இத என்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்க..’ என்று நியாயம் கேட்டான் நாதன். இதனால் ஆவேசத்தின் உச்சத்துக்குச் சென்ற சாமுத்ரிகா, ‘ ராஸ்கல் என்னடா சொல்றே, எங்களைப் பொத்தச் சொல்றியா..’ சொல்றா..’ என தலைமுடியை பிடித்து, அடித்துக் கேட்க முடியாத குறையாக கோபத்தில் கத்தினாள். அப்போது அந்த இடத்துக்கு ஓடி வந்த நாதன் தங்கை, ‘அக்கா, நா பேசிக்கிறேக்கா, இப்ப விட்ருங்கக்கா..’ என்று சகோதரனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

‘அப்போது மூன்றாவது வீட்டில் குடியிருந்த டெய்லர் மனைவி, ‘.. இதெல்லாம் ஒரு தப்பா?’ எங்களுக்குந்தான் காது பிஞ்சுபோற அளவுக்கு கேக்குது, நாங்க என்ன சண்டைக்கா போறோம்..’ என்றாள். அப்போது கடைசி வீட்டிலிருந்து வந்த அங்காளேஸ்வரி என்ற பாட்டி சொன்னாள்.

‘நீங்க ஆந்துராக்காரங்கல்ல, அங்கெ துப்பாக்கிசத்தத்தைக் கேட்டே பழக்கமாயிடுச்சு, அதனால் ஒண்ணுந்தெரியலெ, அவங்களுக்கு இது புதுசுதானே’ அதான் மூக்கு மேலே, கோவம் வந்திருச்சுபோல..’

பாட்டியின் இந்த வா்ர்தையைக் கேட்டவர்கள், ‘பாத்தியா இந்தக் கெழம் நாயம் பொழக்குறதை’ என்று சிரித்துக் கொண்டே கலைந்து சென்றானர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *