கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 1,770 
 

வத்சலா தன்னுடைய பேனாவை மூடி வைத்துவிட்டு அலுவலக சுவற்றில் மணி பார்த்தாள். பத்தரையை காட்டியது, ஒரு காப்பி சாப்பிட்டால் மனசுக்கு சுகமாய் இருக்கும் என்று தோன்றியது. எழுந்தவள் அலுவலகத்தில் இருக்கும் கேண்டீனுக்கு சென்று ஒரு காப்பி ஆர்டர் செய்து விட்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். கேண்டீன் வாசலில் ராஜேஸ் உள்ளே வந்து கொண்டிருப்பதை பார்த்தாள். அவன் கண்கள் அங்கும் இங்கும் அலைவதை பார்த்தவள் தன்னைத்தான் தேடுகிறான் என்பதை உணர்ந்து நாற்காலியில் இருந்து எழுந்து கையை காட்டினாள். அங்கும் இங்கும் சுழன்று பார்த்தவன் கண்களில் வத்சலா கையாட்டிக் கொண்டிருப்பதை பார்த்ததும் முகம் சற்று உற்சாகத்தை காட்டினாலும், முகம் மீண்டும் இருண்டு போனதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

அருகில் வந்து உட்கார்ந்த ராஜேசுக்கும் சேர்த்து இன்னொரு காப்பி ஆர்டர் செய்த வத்சலா, அப்புறம் ராஜேஸ் எப்படி இருக்கறே? அவன் எதற்கு வந்திருப்பான் என்று மனதுக்குள் ஒரு குரல் சொன்னாலும் அதை கேட்பது நாகரிகம் ஆகாது என்று நாசுக்காக விசாரித்தாள்.

ப்சு….அவன் உதட்டை பிதுக்கிவிட்டு தோளை குலுக்கினான். மனசு விட்டு போச்சு ஆண்ட்டி, இப்ப என்ன பண்னறதுன்னு தெரியலை.குரலில் இயலாமையின் ஆற்றாமை தெரிந்தது.

மனசு உடைஞ்சிடாதே ராஜேஸ், கொஞ்ச காலம் அப்படித்தான் இருக்கும், அப்புறம் எல்லாம் சரியாயிடும், ஆறுதலாய் சொன்னாலும் இவளுக்கும் ஒரு அயர்ச்சி தோன்றத்தான் செய்தது. அவன் மெளனமாய் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். இவள் மேலும் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று தயாரான வேளையில் சர்வர் இருவருக்கும் காப்பியை கொண்டு வந்தான். ஆளுக்கொன்றாய் எடுத்து குடிக்க ஆரம்பித்தனர்.

காப்பியை பருகிக்கொண்டிருந்த ராஜேசின் முகம் கொஞ்சம் தெளிவடைய உங்களை பாத்துட்டு போனா கொஞ்சம் மனசு ‘ரிலாக்சா’ இருக்குது ஆண்ட்டி, அடிக்கடி வர்றேனேன்னு நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க.

என்ன ராஜேஸ் இப்படி பேசறே, நீ எப்ப வேணும்னாலும் என்னை பார்க்க வரலாம், ரேஷ்மிய நான் கேட்டதா சொல்லு, அவளை நான் பாக்க விரும்பறதா சொல்லு.

எங்க ஆண்ட்டி நான் சொல்றதை கேக்கறதா இருந்தாத்தான் எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் வந்திருக்காதே.

இந்த வாரம் ‘சண்டே’ அவளை வீட்டுல வந்து பாக்கறேன், நீ வீட்டுலதான் இருப்பே.

இல்லைங்க ஆண்ட்டி, அன்னைக்கு எனக்கு டூட்டி இருக்கு, சாயங்காலமாத்தான் வருவேன், சாரி ஆண்ட்டி நீங்க வரும்போது நான் வீட்டுல இல்லாம இருக்கறது எனக்கு கஷ்டமா இருக்கு.

நீ இல்லாம இருந்தாத்தான் எனக்கு அவ கூட பேசறதுக்கு செளகர்யமா இருக்கும்.

ஓகே பை ஆண்ட்டி, இவன் சட்டென எழுந்து கவுண்டரில் காப்பிக்கான பணத்தை கட்டிவிட்டு கையாட்டி சென்றான். நான் நில்லு, நில்லு நான்தான் பணம் தருவேன் என்று இங்கிருந்து சைகை காட்டியும் அவன் அதை கண்டு கொள்ளவில்லை.

‘ரேஷ்மா’ எனது ஒன்று விட்ட தங்கையின் பெண். ராஜேஸ் இரு மாதத்திற்கு முன் தான் அவளை கல்யாணம் செய்திருந்தான். நல்ல விமர்சையாக நடந்த கல்யாணம். ராஜேசின் அப்பா அலுவலகத்தில் எனக்கு கீழ் வேலை பார்த்தவர். நல்ல நட்புடன் இருந்தார். அவர் வீட்டுக்கு அடிக்கடி போய் அவர்கள் குடும்ப உறுப்பினர்களான ராஜேசும், அவன் அம்மாவும் நல்ல பழக்கம். ஒரு விதத்தில் ராஜேசுக்கு பெண் எடுத்ததே என் மூலமாகத்தான். அதனால் இப்பொழுது சிக்கலில் தவிப்பவளும் நான்தான். ரேஷ்மா ஒரே பெண், கொஞ்சம் செல்லமாய், வசதியாகவும் வளர்ந்தவள். இன்றைய நாகரிக யுவதி, ராஜேசும் இன்றைய இளைஞர்களுக்குரிய குணாதிசயங்கள் இருந்தாலும் அப்பா அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேச யோசிப்பான். அதுதான் இப்பொழுது இருவருக்கும் உரசலே. அவன் அப்பா அம்மாவிடம் மென்மையாக நடந்து கொள் என்று சொல்ல அவள் நான் என் இயல்பில்தான் நடக்கிறேன், அது அவர்களுக்கு சங்கடமாய் தெரிந்தால் நான் என்ன செய்ய முடியும்? . இது அவளின் வாதம். ராஜேசின் அப்பா இப்பொழுது வேறொரு பிரிவுக்கு மாற்றலாகி விட்டதால் முன்னைப்போல் பார்த்து பேச முடியவில்லை. இந்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு போனால் இரு வீட்டாரின் உறுப்பினர்களிடமும் பேச வேண்டியிருக்கும், என்ற பயத்திலேயே அவர்கள் வீட்டிற்கு போவதை தவிர்த்து வந்தாள்

ஆனால் இந்த இரு மாதத்திற்குள் மூன்று முறை ராஜேஸ் தன்னை பார்க்க வந்து விட்டான். அவன் மனைவியை பற்றி ஒரு பாட்டம் குறை சொல்லி விட்டும் சென்றான். இந்த முறைதான் காண்டீனில் இருந்ததால் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை ராஜேசின் அப்பாவும் வீட்டில் இருந்தார். வாங்க மேடம், அழைத்தவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அவர் மனைவியிடம் சென்றேன். இருவரும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ராஜேஸ் வேற வீட்டுல இல்லை, அவர்கள் சொல்லவும் பரவாயில்லை, அவனுக்கு இன்னைக்கு வேலைன்னு சொன்னான், ஆமா ‘ரேஷ்மாவை’ எங்க காணோம், இதுவரை அவள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாததால் அவளை பற்றி வத்சலா கேட்டாள்.

ராஜேஸ் வேற வீட்டுல இல்லை, இவ மட்டும் எதுக்கு இங்க தனியா உட்கார்ந்திருக்கணும், அவங்க வீட்டுக்கு போயிட்டு வான்னு அனுப்பிச்சோம், அவளும் பாவம் வாரம் முழுக்க வேலைக்கு போயிட்டு வந்துட்டிருக்கறவதானே !

வத்சலாவுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. ரேஷ்மாவும் வீட்டில் இல்லை, இவர்களிடம் எவ்வளவு நேரம் பேசுவது, யோசனையாய் சரி அப்ப நான் கிளம்பட்டுமா? கேட்டவுடன் நல்லாயிருக்கே, நீங்க வருவீங்கன்னு ராஜேஸ் சொல்லிட்டு போயிருக்கான், ரேஷ்மாவை வீட்டுல இருக்க சொன்னான். நாங்கதான் அவளை வேண்டாம் நீ உங்க வீட்டுக்கு போய் பாத்துட்டு வரதா இருந்தா வா அப்படீன்னு அனுப்பி வச்சோம். ஏன் ரேஷ்மா கிட்டே ஏதாவது பேசணுமா?

வத்சலாவுக்கு தர்ம சங்கடமாகி விட்டது, என்ன சொல்வது? ரேஷ்மா உங்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாக ராஜேஸ் சொல்லிவிட்டு சென்றான், அதற்கு பஞ்சாயத்து பேச வந்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? ஒரு உண்மை புரிந்தது ராஜேஸ் கவலைப்பட்டுக் கொண்ட அளவுக்கு அவன் பெற்றோர் ரேஷ்மாவை பற்றி கவலைப்பட்டுக்கொள்ளவில்லை. இவன்தான் வேண்டாததை நினைத்து தன்னையும் சங்கடப்படுத்திக்கொண்டு என்னையும் இக்கட்டில் மாட்டிவிட்டிருக்கிறான்.

வத்சலாவுக்கு ராஜேஸ் மேல் கோபம் கூட வந்தது. ரேஷ்மா இப்படித்தான் என்று அவனின் பெற்றோர்கள் புரிந்து கொண்டு அதிகம அலட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். இவன்தான் ரேஷ்மாவின் நடவடிக்கை தன்னுடைய பெற்றோர்களை அலட்சியப்படுத்துவதாக இருக்கிறது என்று அவளுடன் வாதம் புரிந்திருக்கிறான் மனம் சற்று இலேசாக அவர்களுடன் சகஜமாய் பேசிக்கொண்டிருந்து விட்டு மதியம் அங்கேயே சாப்பிடவும் செய்தேன். மதியம் மூன்று மணிக்கு மேல் ஹாய் பெரியம்மா..என்று வந்து கட்டிப்பிடித்த ரேஷ்மாவை செல்லமாய் முறைத்து நான் வர்றேன்னு சொல்லி அனுப்பிச்சும் நீ போயிட்டியில்லை, சாரி பெரியம்மா, அத்தை உங்க வீட்டுக்கு போயிட்டு வான்னு சொன்னப்ப பக்கம் தானே போயிட்டு வந்துடலாமுன்னு போனேன். அங்க போனா எங்கம்மா ஏண்டி எங்கக்கா வர்றேன்னு சொன்ன பின்னால நீ எப்படி இங்க வந்தேன்னு சண்டை பிடிச்சாங்க, சரின்னு ஓடி வந்தேன். அப்படி சொல்லியும் மூணு மணிக்குத்தான் என்னை பாக்கணும்னு தோணியிருக்கு? தாங்கலாய் கேட்டவளை சாரி..சாரி..ரொம்ப சாரி..நான் என்ன பண்ணுறது, கிளம்பலாமுன்னு நினைச்சா அப்பாவோட பிரண்ட் குடும்பத்தோட வந்துட்டாரு, அவர் வந்திருக்கறப்ப் எப்படி கிளம்ப முடியும், எப்படா கிளம்புவாங்கன்னு எதிர்பார்த்து ஓடி வந்தேன்..மூச்சு விடாமல் பேசினாள்.

அத்தை காபி ப்ளீஸ்..செல்லமாய் கொஞ்சி கேட்டவளிடம் தயாராய் வைத்திருந்த காப்பியை நீட்டினாள். இந்தா உங்க மாமாவுக்கும், கொடுத்திடு இன்னொரு டம்ளரை கொடுக்க, அவள் இங்கிருந்தே..அங்கிள்..சபதமிட்டாள். என்னம்மா..அவரின் பதில் குரல் காப்பி…நீங்க வர்றீங்களா, இல்லே நான் அங்க வரவா? அவளின் கேள்வி எனக்கே ஒரு மாதிரியாய் பட என்ன ரேஷ்மா மாமா வயசானவங்க, அவங்களை இங்க வர சொல்றியே? கொஞ்சம் கோபத்துடன் கேட்டவளை ரேஷ்மா வியப்பாய் பார்த்தாள்.

இதில் என்ன தப்பு பெரியம்மா? நீயும் ராஜேஸ் மாதிரிதான் பேசறே, நான் அங்க கொண்டு போகும்போது அவர் வேற எங்கியாவது போயிருந்தார்னா அந்த காப்பி ஆறிடும் இல்லையா? அதுதான் நான் அங்க வர்றேன், இல்லை அவர் இங்க வர்றதா இருந்தா இந்த காப்பியை அவர் இங்க வந்து குடிச்சா சூடா இருக்குமில்லை..அவளின் வாதம் கூட எனக்கு ஒரு வகையாய் நியாயமாய் பட நான் சிறிது யோசனையுடன் நின்று கொண்டிருக்க ரேஷ்மா..வேர் இஸ் மை காப்பி ஆங்கிலத்தில் கேட்டபடி உள்ளே வந்தார் ராஜேஸின் அப்பா.

அடுத்த முறை ராஜேசிடம் சொல்லி விடவேண்டும், நீ மட்டும் தனியாக உன் வீட்டில் இருக்கிறாய். ரேஷ்மா உன் பெற்றோருடன் புரிதலுடன்தான் இருக்கிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *