கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,915 
 

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் – மேயர் ராமநாதன் திருமண மஹால், யானைத் தந்த நிறத்தில் பிரமாண்டமாய் காட்சி அளித்தது. மஹால் முழுக்க மின்பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மஹாலின் வெளிவாசலில் போக்குவரத்து போலீசார் நின்று, நான்கு சக்கர வாகனங்களை சீர்படுத்தி, உள்ளே அனுமதித்தனர். கார்களிலிருந்து புல்சூட் ஆசாமிகளும், பட்டுப்புடவை பெண்மணிகளும் இறங்கினர்.
எடிட்டர் சுந்தரத்தின் மகன், சுப்புவின் திருமண வரவேற்பு.
ஆட்டோவில் வந்திறங்கினேன். நான் எழுதிய திருக்குர்ஆன் நீதிக்கதைகளின் நான்கு தொகுதிகளை, “கிப்ட் பேக்’ செய்து, இடது கையில் வைத்திருந்தேன்.
திருமண வரவேற்பு!பொதுவாகவே கூட்டங்களை கண்டால் எனக்கு அலர்ஜி. பல திருமணங்களுக்கு என் மனைவிதான் போய் வருவாள். அபூர்வமாய் மனைவியுடன் சேர்ந்து செல்லும் போது, திருமண விருந்து சாப்பிடாமல் தவிர்த்து விடுவேன்.
ஆனால், இது என் குருநாதர் வீட்டு திருமணம். என் மகள் திருமணத்தை சிறப்பாய் நடத்திக் கொடுத்த மனிதருக்கு, நான் செய்யும் பதில் மரியாதை.
உள்வாசலில் பேட்ஜ் குத்திய ஊழியர்கள், விருந்தினரை வரவேற்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
மேல்தளத்தில் வரவேற்பு; கீழ்தளத்தில் விருந்து.
வரவேற்பறையின் இடதுபுறத்தில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இருக்கைகளில் விருந்தினர்கள் அமர்ந்திருந்தனர். மேடையில் மணமக்கள் நின்றிருந்தனர். மணமகளின் வலப்பக்கம் மணமகளின் தங்கையும், பெற்றோரும் நின்றிருந்தனர்; மணமகனின் இடப்பக்கம் மணமகளின் தாத்தா, பெற்றோர், சித்தப்பாமார்கள் நின்றிருந்தனர். எடிட்டர் சுந்தரம், படையப்பா ரஜினிகாந்த் போல், நீலநிற புல் சூட்டில் மிடுக்காய் காட்சி அளித்தார்.
வந்திருந்த விருந்தினர்களை நோட்டமிட்டேன். அரசியல்வாதிகளோ, சினிமாக்காரர்களோ இல்லை. எளிமையான ஆடை அணிந்த துணை நகர மனிதர்கள்தான் நிறைய வந்திருந்தனர். அவர்களின் முகங்களில் பெருமையும், சந்தோஷமும் பொங்கி வழிந்தன. ஏதோ ஒரு விதத்தில் கவுரவிக்கப்பட்டவர்களாய் தெரிந்தனர்.
குருநாதனின் மகனை இப்போதுதான் முதல் தடவையாக பார்க்கிறேன். சம்மர் கிராப்பிய தலை. பவர் கிளாஸ். கவுதம சித்தார்த்த கண்கள். ஒரு நாளைக்கு, 25 மணி நேரம் மவுன விரதம் இருக்க விரும்பும் வாய்; ஒடிசலான திரேகம்.
மணமக்களை வாழ்த்த மேடையின் இடப்பக்கம் நீண்ட, “க்யூ’ நின்றிருந்தது. மேடையில் இருபக்கமும் ராட்சச எல்.சி.டி., “டிவி’ திரைகளில் விடியோ பதிவுகள் ஓடிக் கொண்டிருந்தன.
“பரிசுகளை தவிர்க்கவும்…’ என, அழைப்பிதழில் போட்டிருந்தும், நிறைய பேர் பரிசு பொருட்கள் கொண்டு வந்திருந்தனர். “க்யூ’வில் நிற்காமல், குறுக்கு வழியில் வரும் விருந்தினரை கடுகடுத்த முகத்துடன் எதிர் கொண்டான் மணமகன் சுப்பு.
எனக்கு, முன் நாலாவதாக ஒரு முஸ்லிம் பெரியவர் நின்றிருந்தார்; வயது, எழுபது இருக்கும். குள்ளமான உருவம். நரைத்த வெண்பஞ்சு தலைகேசம். நெற்றியில் தொழுகை அடையாளம். சுருமா ஈஷிய கண்கள். முந்திரிப்பழ மூக்கு. மீசை இல்லா மேலுதடு. மருதாணி பூசிய சீரில்லா தாடி. பொக்கை வாய். முழுக்கை ஜிப்பா. கணுக்கால் காட்டும் கைலி. தூசிபடர்ந்த டயர் செருப்பு. இடது கையில் மஞ்சள் பை வைத்திருந்தார். கூன் போட்டு முன்னுக்கு வளைந்து நின்றிருந்தார்.
இவர் யாராயிருக்கும்? வரிசை முன்னேறியது. விழா மாறி வருந்திருப்பாரோ? அழையா விருந்தாளியோ? முஸ்லிம் பெரியவர் முறை வந்தது. மணமகனிடம் இவர் போய் பையுடன் இரு கை குவித்து வணங்கினார்.
“”அஸ்ஸலாமு அலைக்கும்!”
மணமகனும், “”வஅலைக்கும் ஸலாம்!” என்றான்.
“”கல்யாணத்தை திருவனந்தபுரத்ல கொண்டு போய் வைச்சிட்டீங்க…. வர முடியல!”
எடிட்டர் தன் மகனுக்கும், முஸ்லிம் பெரியவருக்கும் இடையே நின்று. “”சுப்பு… இவர் பெயர் அப்துல் காதர். புதுசத்திரம் ஏஜன்ட். பிள்ளைகளை நல்லா படிக்கவச்சு, நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தார். பிள்ளைகள் இவரை விரட்டி விட்டுட்டாங்க. பள்ளிவாசல்தான் இப்ப இவர் வீடு. வார நாட்களில், நானூறு பிரதியும், ஞாயிற்றுக் கிழமைகளில், எழுநூறு பிரதியும் விக்றாரு!”
எழுநூறு பிரதி விற்கும் ஒரு சப் – ஏஜன்ட்டை, மகனுக்கு விரிவாய் அறிமுகப்படுத்துகிறாரே சுந்தரம்?
“”இன்னும் ஆறே மாதத்தில், 1,000 பிரதி விற்றுக் காட்டுவேன்… இறைவனின் அருளோடு!”
சுப்பு அவரது கைகளைப் பற்றிக் குலுக்கினார். “”நீங்க என் திருமண வரவேற்புக்கு வந்தது சந்தோஷம் காதர் பாய்!”
“”பரிசு எதாவது குடுக்கணுமில்ல… இந்தாங்க பால்கோவா பாக்கெட்…” வாங்கிக் கொண்டான் சுப்பு.
மணமக்களுடன் அப்துல் காதரை நிற்க வைத்து, தானும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் சுந்தரம்.
“”மாப்பிள்ளை தம்பி… நீ இரண்டு வயசு பையனாயிருந்தப்ப உங்க வீட்டு பங்ஷன் ஒண்ணுக்கு வந்திருக்கேன். அப்ப எடுத்த போட்டோவை பத்திரமா இன்னும் வச்சிருக்கேன்…. பாக்கறீயா?’
சுவாரசியம் தொற்ற, “”எங்க… காட்டுங்க காதர் பாய்!”
அப்துல் காதர் மணமகனின் காலடியில் அமர்ந்தார். மஞ்சள் பையை தரையில் கொட்டினார். யாசின் சூரா சிறு புத்தகம். தஸ்பீஹ் மாலை. டேலாகட்டிகள். பழைய குண்டு இங்க் பேனா. கணக்கு சிட்டைகள். குட்டி ஸ்கேல், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு டப்பா. பல் செட்.
“க்யூ’வில் நின்றிருந்தோர் நெளிந்தனர். நானும். பெரியவரை குண்டுக் கட்டாய் தூக்கி ஒரு ஓரமாய் அமர வைத்தால் என்ன? நான்கு தலைமுறைப் பத்திரிகையாளர் குடும்பம். இவர்கள் பார்க்காத புகைப்படமா? பெரியவருக்கு சபை நாகரிகம் தெரியவில்லையே… ஆனால், பெரியவரின் செய்கை எடிட்டர் சுந்தரத்தையோ, அவரது மனைவியையோ எரிச்சல் படுத்தவில்லையே… உணர்வுகளை மறைக்கின்றனரா… இல்லை உணர்வே இதுதானா?
பத்து நிமிடத் துழாவலுக்கு பின், அந்த புகைப்படத்தை எடுத்து விட்டார் அப்துல் காதர். புகைப்படத்தை சுப்புவிடம் நீட்டினார்; வாங்கியதும் குதூகலித்தான் சுப்பு.
“”இத நான் வச்சுக்கலாமா?”
“”ஓ!”
“”காதர் பாய்… நீங்க இருந்து சாப்பிட்டுதான் போகணும்!”
காதர் பாய் மஞ்சள் பையுடன் தடுமாற்றமாய் நடந்தார். அவரை, சுந்தரம் அழைத்துச் சென்று, இரு உதவியாளரிடம் விட்டு, “”இவரை சாப்பிடும் இடத்திற்கு கூட்டிப் போங்கள். இவர் சாப்பிட்டு முடிக்கும் வரை உடனிருங்கள்!”
என்னுடைய முறை வந்தது.
“”இவன் நவாப்; ஆஸ்தான எழுத்தாளன். என்னுடைய முரட்டு சிஷ்யன்!” சுப்பு சிரித்து கைகுலுக்கி, “”எனக்கு, “கிரா’தான் பிடிக்கும். ஆனா, உங்க எழுத்துக்களை மதிக்கிறேன். பின்னர் ஒரு நாள் சாவதானமாய் சந்தித்து, இலக்கியம் கதைப்போம்!”
புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நகரும் என்னிடம் சுந்தரம், “”பங்ஷன் முடிஞ்ச பிறகு பேசலாம்… போயிடாதே!”
வரிசையாக தட்டேந்தி விருப்ப அயிட்டங்களை வாங்கிக் கொண்டிருந்தனர் விருந்தினர். வாங்கியவர்கள் குழுக் குழுவாய் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
காதர்பாயை தேடினேன். அவர் தன்னை கூட்டிவந்த இருவரிடமும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
“”எல்லாரும் நின்னுக்கிட்டு சாப்டுறாங்களே… உக்காந்து சாப்பிட ஏற்பாடு இல்லையா?”
“”இல்லை… ஆனா, உங்களை சேரில் அமர வைக்கிறோம்; சாப்பிடுங்கள்!”
“”நின்று கொண்டு நீர் அருந்து வதோ, சாப்பிடுவதோ இஸ்லாமில் தடை செய்யப்பட்ட விஷயங்கள். என்னால் நாற்காலியிலும், உட்கார முடியாது; மூட்டுவலி. தரையில் உட்கார்ந்து சாப்பிடவா?”
அவரை அழைத்து வந்த இருவரும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவர் கைபேசியில் சுந்தரத்திடம் பேசினார்.
“”முஸ்லிம் பெரியவர் தரைல உட்கார்ந்து சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறாரு பாஸ்!’
“”அவர் இஷ்டப்படி விடு. அவர் மனசு புண்படுற மாதிரி எதுவும் பேசிடாதே!”
கண்கொள்ளாக் காட்சி அரங்கேறியது.
தரையில் அமர்ந்தார் காதர்பாய். வலது காலை நீட்டிக் கொண்டார். சாப்பாடு தட்டை தனக்கு எதிரில் வைத்தார். சாப்பிடும் முன், “”பிஸ்மில்லாஹ்!” என்றார். பல் செட்டை வாய்க்குள் மாட்டிக் கொண்டார். என்ன பதார்த்தங்கள் இருக்கின்றன என கேட்டு, விரும்பியதை வரவழைத்தார்.
சாப்பிட்டு கொண்டே, “”வெஜிட்டேரியன் சாப்பாடு அரேன்ஜ் பண்ணியிருக்கீங்க… காஸ்ட்லி. தலைக்கு, எழுநூறு ரூபாய் கூட ஆகும். மட்டன் பிரியாணி போட்டு பந்தில பரிமாறி இருக்கலாம்!” என்றார். பின், ஐந்து நொடி தாமதித்து. “”பிராமின் வீட்டுக் கல்யாணங்கள்ல மரக்கறிதான்!”
இருவரும், மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“”ஆட்டுக்கறி விருந்தென்ன, மரக்கறி விருந்தென்ன… விருந்தளிப்பவர் மனோபாவம்தான் முக்கியம். எனக்கு திருப்தியா இருக்குய்யா. வயிறும், மனசும் நிறைஞ்சு போச்சுய்யா…
“”உனக்கு ஒண்ணு தெரியுமாய்யா? என் பேத்தி கல்யாணத்துக்கு, என் மகள் என்னை அழைக்கல. என் மஹல்லால்ல எனக்கு மதிப்பு இல்லைய்யா. சொத்துபத்து இல்லாத கிழவனை எவன் மதிப்பான்? பத்து வருஷமா மஹல்லால்ல நடந்த எந்த கல்யாணத்துக்கும் எனக்கு அழைப்பில்லை. இந்த ஒற்றை அழைப்பு, ஊர் முன்னாடி தலைநிமிர்ந்து நிற்க வச்சிருச்சு!”
தட்டை வழித்து சாப்பிட்டார். பின், தன்னுடைய விரல் ஒவ்வொன்றையும் வாய்க்குள் விட்டு நக்கினார்.
“”இங்கேயே கை கழுவிக்கவா?”
மவுனித்தனர்.
கை கழுவினார்.
“”பல் செட்டை கழட்டி அப்புறமா கழுவிக்கிறேன்!”
இருவரும் அவரை தூக்கி விட்டனர்.
“”பீடா போடுறீங்களா பாய்?”
“”வேணாம்!”
தாம்பூலப் பையை கொண்டு வந்து நீட்டினர்; வாங்கிக் கொண்டார். வாசல் பகுதிக்கு அழைத்து வந்தனர்.
“”நீங்க எங்க போகணும் பாய்? கார் வைத்து உங்களை விட்டு வர சொல்கிறேன்!”
“”வேண்டாம்… நான் போய்க்கிறேன்… நன்றிப்பா!” கிளம்பிப் போனார் காதர்பாய்.
இரவு, 10:30 மணிக்கு திருமண வரவேற்பும், விருந்தும் முடிந்தன. கோட்டை கழற்றி வைத்துவிட்டு, காலரை தளர்த்திவிட்டுக் கொண்டு காரில் ஏறினார் சுந்தரம். நான், அவருக்கு பக்கத்திலிருக்கும் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன். கார் சீறிப் பாய்ந்தது.
பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஓட்டலை அடைந்து, கார் நின்றது.
“வெஸ்ட் மினிஸ்டர்’ மதுக்கூடம் சென்று அமர்ந்தோம்.
வெள்ளை ஒயின் சூப்பினேன்.
“”ஹும்… அப்புறம்… சொல்லுடா நவாப்…”
“”திருமண வரவேற்புக்கு எத்தனை பேரை, “இன்வைட்’ பண்ணீங்க பாஸ்?”
“”1,500 பேர்!”
“”அரசியல்வாதிகளுக்கும், சினிமாக்காரர்களுக்கும் அழைப்பில்லை போலிருக்கு!”
“”ஆமாண்டா… பையன் விரும்பல. அவன் கோடீஸ்வரனின் வீட்டில் பிறந்த அஹிம்சை சேகுவாரா. அவனை மீறி அரசியல், சினிமாக்காரர்களை அழைத்தால், வரவேற்பில் நிற்க மாட்டேன் எனக் கூறி விட்டான்; அவன் உணர்வுகளை மதித்தோம்!”
“”உங்க மக கல்யாணத்துக்கும் இப்படித்தானா?”
“”மகளின் உணர்வுகளையும், விருப்பத்தையும் பொறுத்து, இன்வைட்டீஸ் அமைவாங்க. என் மக கல்யாணத்ல கொஞ்சம் கூடுதல் சுதந்திரம் எடுத்துக்கிட்டு பால்ய நண்பர்களை, பள்ளி ஆசிரியர்களை வரவேற்பேன். அக்கல்யாணத்திலும் இதே டைப் பபே விருந்துதான்!”
“”கேக்கணும்ன்னு நினைச்சேன்… அந்த புதுசத்திரம் ஏஜன்ட் அப்துல் காதர், திருமண வரவேற்பின் ஒழுங்கை சீர்குலைச்சிட்டார்ல!”
“”நோ… அப்படி யில்லைடா நவாப்!”
“”பின்ன?”
“”திருமண விருந்துகளுக்கு வருபவர்களிடம் செயற்கை தனமும், பாசாங்கும், போலி கவுரவமும் ஒளிந்திருக்கும். இரவல் நகை பூட்டி, அரை லிட்டர் நறுமணம் பீய்ச்சிக் கொண்டு, காட்சி அமைப்பை அதகளப் படுத்துவர். போட்டோக்களுக்கு விழுந்து, விழுந்து போஸ் கொடுப்பர். விருந்துக்கு வந்த பிரமுகர்களை பேசி, பேசி நட்பாக்க முயற்சிப்பர். அப்துல் காதர் யதார்த்தவாதி. அவர் புதுசத்திரத்தில் எப்படி இருப்பாரோ, அப்படித் தான் இங்கும் இருந்தார். அவர் விற்கும், எழுநூறு பிரதிகளில் மத நல்லிணக்கமும், விசுவாசமும், சுயநல மிருகங்களை ஜெயிக்கும் வியர்வை வாசனையும் பூசப்பட்டுள்ளன. உன் வீட்டுக் கல்யாணத்திற்கு முதல்வரோ, சூப்பர் ஸ்டாரோ வந்தால், எவ்வளவு சந்தோஷப் படுவாயோ, அவ்வளவு சந்தோஷம் எனக்கு காதர் பாய் வருகையில். அவர் கொடுத்த சுப்புவின் சிறு வயது போட்டோ, சுப்புவுக்கு கிடைத்த பரிசுகளில் மிக உன்னதமானது!”
“”கேட்க மகிழ்ச்சியா இருக்கு பாஸ்!”
“”ஒரு விதத்தில் நீயும், அப்துல் காதரும் ஒண்ணுதான்டா. என் நண்பர்கள் என்னிடம் மாற்றுக் கருத்து சொல்ல தயங்கும் போது, நீ மாற்றுக் கருத்துகளை அள்ளி வீசுவாய். பிராமணன் வீட்டுக் கல்யாணத்திற்கு திருக்குர்ஆன் பரிசளிப்பாய். திருமண வரவேற்புக்கு வாடா என்றால், வந்து விருந்தினர்களை, “அப்சர்வ்’ பண்ணி, கதை எழுதி, அதை என்னிடமே கொடுத்து, வெளியிட சொல்லி காசாக்குவாய். சிறு கருத்து வேறுபாடு என்றாலும், பத்து பக்க தன்னிலை விளக்க கடிதம் தாளிப்பாய். எல்லா நண்பர்களும், ஆட்டுக்கால் சூப் குடிக்கும் போது, பிடிவாதமாய் யானைக்கால் சூப் கேட்பாய். எந்த நொடியில் எப்படி இருப்பாய் என தெரியாத உன்னையே பராமரிக்கும் என்னால், சாதாரண அப்துல் காதர்களை பராமரிக்க முடியாதா? இன்னும் கொஞ்சம் ஒயிட் ஒயின் குடிக்கிறாயாடா?”
“”ஒயிட் ஒயின் வேண்டாம்; ரெட் ஒயின் வாங்கித் தாருங்கள் பாஸ்!” என்றேன் குறும்பாய்.

– ஜூன் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *