கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2023
பார்வையிட்டோர்: 2,802 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த வருஷம் மார்கழி மாதத்தில் மற்ற வருஷங்களைப்போல் பனிச்சாரல் அதிகமில்லை. கொல்லைக் கிணற்றடியில், பாகீரதி உதயராகத்தில் திருப்பாவை பாடிக்கொண்டே ஸ்நானம் செய்துகொண்டிருந்தாள். அவள் மெல்லிய குரல் விடியற்கால நிசப்தத்தில் கலந்து மனத்திற்கு அமைதியை அளித்தது.

பாகீரதி, மார்கழி மாதத்தில் மட்டும் பிராதக்கால ஸ்நானம் செய்கிற வழக்கம் என்று இல்லை. வருஷம் பூராவும் அவளுக்கு மார்கழிகான். அவளுடைய பதினைந்தாவது வயதிலிருந்து குளிருக்கும் வெயிலுக்கும் அவள் தேகம் ஈடுகொடுத்து, உரம் பெற்றுவிட்டது.

பாகீரதியின் வீட்டார் எங்கள் வீட்டுக்கு வந்து ஏழெட்டு மாதங்கள் ஆகியிருக்கும். நம் சமூகத்தில் ஆயிரக் கணக்காக இருக்கும் பால்ய விதவைகளில் அவளும் ஒருத்தி என்றுதான் முதலில் நினைத்துக் கொண்டிருந்தேன். நாளடைவில் அவளுடைய ஜீவியத்தில் ஏதோ மறக்கமுடியாத சம்பவம் நடந்திருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது. மனத்துக்குள் குமுறிக் கொண்டிருக்கும் துக்கத்தைக் கிளருவதல் எனக்கு அவ்வளவாக இஷ்டமில்லாததால் அதை அறியப் பிரயத்தனப்படவில்லை. அன்று பாகீரதிபின் குரலைக் கிணற்றடியில் கேட்டவுடன் அவளுடைய பரிதாபமான முகம் என் மனத்தை என்னவோ செய்தது. வேதனை மிகுதியால் நித்திரை கலைந்து விடவே எழுந்திருந்து கொல்லைப்பக்கம் போனேன் இன்னும் பால் வடியும் முகம்; வைதவ்வியத்தால் களையை இழந்துவிட்டாலும், லக்ஷணமாகத்தான் இருந்தது. ஸ்நானம் செய்துவிட்டு, குடத்தில் ஜலத்துடன் என் எதிரில் வந்தாள் பாகீரதி.

“என்ன மாமி? ஸ்நானம் ஆகிவிட்டதா?” என்று கேட்டேன். “ஆகிவிட்டது அம்மா; இன்று என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டாய்” என்றாள்.

“தூக்கம் பிடிக்கவில்லை. அதோடு உங்கள் பாட்டு நன்றாக இருந்தது; இன்னும் கொஞ்சம் பாடுவீர்கள், கேட்கலாம் என்று வந்தேன்” என்றேன்.

பாகீரதி ஒரு மாதிரியாகச் சிரித்துக்கொண்டாள். “ஐயோடி! என் பாட்டும் நானும்” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு, “போகிறேன்! பூஜை செய்து விட்டு அடுப்பு மூட்டினால் சரியாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே போய்விட்டாள்.

வக்கீல் நாகநாதையருக்கு மனைவி இல்லை. ஒரு பெண்ணையும், பிள்ளையையும் வைத்துவிட்டு அவள் இறந்துவிட்டாள். அப்போது அவருக்கு வயது நாற்பதுக்குள் இருக்கும். பாகீரதி அவருக்கு மைத்துனி ஆக வேண்டும். தங்கை இறந்து போனபோது வந்தவளைக் குழந்தைகளைக் கவனிப்பதற்காகத் தம் வீட்டிலேயே வற்புறுத்தி வைத்துக்கொண்டார் அவர்.

பாகீரதியை விடியற்காலம் ஐந்து மணிக்குள் கிணற்றடியில் பார்த்தால் உண்டு. இல்லையென்றால் சமையல் அறைக்குள் தான் பார்க்கமுடியும். ஒருவர் எதிரிலும் அவள் வருவதில்லை. வீட்டில் மற்ற வேலைகளைச் செய்வது, வருகிறவர்களை விசாரிப்பது முதலியவற்றை வக்கீலுடைய பெண் லக்ஷ்மிதான் கவனித்து வந்தாள். பாகீரதியின் குரல்கூட அதிகமாகக் கேட்காது. உதயத்திலிருந்து அஸ்தமனம்வரையில் சலியாத உழைப்பு. கண்ணன் கீதையில் சொல்லியிருக்கும் கடமையை நன்கு உணர்ந்தவள் பாகீரதி என்று சொல்லலாம். தங்கை குழந்தைகள் பெரியம்மாள் வார்த்தைக்கு மறுத்துப் பேசமாட்டார்கள்.

பாகீரதி உள்ளே போனபிறகுகூட அவள் குரல் இனிமை என் காதிலே ஒலித்துக்கொண்டிருந்தது. அவர்கள் குடிவந்த நாளாய்ப் பாகீரதியைப்பற்றி விசாரிக்க வேண்டுமென்கிற ஆவல் ஏற்பட்டதில்லை. அன்று காலை அவள் பாட்டைக் கேட்டபிறகு ஏதோ ஒருவித அனுதாபம் அவளிடம் தோன்றி என் மனத்தை வதைக்க ஆரம்பித்தது.

நாகநாதையருடய பெண் லக்ஷ்மி தோட்டத்தில் வாழை இலை நறுக்க வந்தாள்.

“உன் பெரியம்மா என்ன செய்கிறாள்?” என்று அர்த்தமில்லாமல் கேட்டுவைத்தேன்.

“அப்பாவுக்கு இரண்டாந்தரம் டிபன் செய்து கொண்டிருக்கிறாள் மாமி. ஏன் மாமி, ஏதாவது வேண்டுமா உங்களுக்கு?”

“வேலையில்லாமல் ஒழிவாய் இருக்கிறாளாக்கும் என்று பார்த்தேன்” என்றேன்.

சாயங்காலம் பாகீரதி கிணற்றடியில் ஏதோ வேலையாய் இருந்தாள். என்னைக் கண்டதும், காலையில் “என்னைக் கேட்டாயாமே. லக்ஷ்மி சொன்னாள். என்ன விசேஷம்” என்று விசாரித்தாள்.

“விசேஷம் ஒன்றும் இல்லை. உங்களிடம் இரண்டு தமிழ்ப் பாட்டுக்கள் கற்றுக் கொள்ளலாம் என்கிற உத்தேசம். உங்களுக்கு ஒழிந்த வேளையில் சொல்லிக் கொடுத்தால் போதும்”.

“ஒழிவு என்று எனக்கு ஒரு வேளை இருப்பதைப் பார்த்திருக்கிறாயா அம்மா” என்று சொல்லிவிட்டுப் பாகீரதி கண்கலங்க நின்றாள்.

அவள் மனத்தைப் புண்படுத்தி விட்டோமே என்று எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. அவள் சிறிது சமாளித்துக் கொண்டு, “விடியற்காலம் ஸ்நானம் செய்யும்போது கொஞ்ச நேரம் பகவத் பஜனை செய்கிறேனே, அதைத் தவிர மற்றப் பொழுதில் பகவானை நினைக்க எனக்குப் போது ஏது” என்றாள்.

வாஸ்தவந்தான். அவளை வெளியில் பார்ப்பதே அபூர்வமாக இருக்கும்போது எனக்குப் பாட்டும், கதையும் சொல்லித்தர முடியுமா அவளால்? ஆனால், உண்மையில் அவள் வரலாற்றை அறிந்துகொள்ள ஆசைப்பட்டேனே தவிர, பாட்டுக் கற்றுக்கொள்ள அல்ல.

“என்ன அம்மா யோசிக்கிறாய்?” என்றாள் பாகீரதி.

“ஒன்றும் இல்லை மாமி! என்னைப்பற்றித் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று என் மனம் துடிக்கிறது. நான் இன்னொருவர் விஷயத்தில் அதிகமாகத் தலையிட மாட்டேன்” என்று தயங்கிக் கொண்டே சொன்னேன்.

“என் கதையைக் கேட்பதால் புண்ணியமா ஏற்படப் போகிறது? அதைக் கேட்டால் கதை எழுதுகிறவர்கள் ஒரு நல்ல கதை எழுதி விடலாம், நாளைக்கு விடியற் காலம் கபில தீர்த்தத்துக்கு ஸ்நானம் செய்யப் போகிறேன். கூட வந்தாயானால் என் வந்தாயானால் என் புண்ணிய கதையைச் சொல்கிறேன் !” என்றாள்.

“ஆகட்டும்” என்று ஒப்புக்கொண்டேன்.

விடியற்காலம் மணி ஐந்துக்குக் குறைவாக இருக்கலாம். பனிக்காற்று, சிலுசிலு வென்று அடித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் நக்ஷத்திரங்கள் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தன. நாகநாதையருடைய பிள்ளை பாலு எங்களுக்கு முன்பு போய்க்கொண்டிருந்தான். ஊருக்கு வெளியே போகும்வரையில் பாகீரதி தன் வழக்கப்படி மெதுவாகப் பாடிக்கொண்டே வந்தாள். அந்தக் குளிர்ந்த வேளையில், ‘கார்மேனிச் செங்கண், கதிர் மதியம் போல்முகத்தான்’ என்று அவள் பாடிய போது வானத்தில் சிற்சில இடங்களில் கன்னங் கரேலென்று பரவி இருந்த மேகக்கூட்டமும், கீழ்த்திசையில் ரவியின் வருகையை அறிவிக்கப் பரவியிருந்த ஒளியும் கண்ணனுடைய உருவத்தையே நினைவூட்டின.

“இந்தக் குளிரில் எப்படித்தான் ஸ்நானம் செய்யப் போகிறேனோ?” என்று பேச்சை ஆரம்பித்தேன்.

“எல்லாம் இரண்டு நாளைக்குச் செய்தால் வழக்கமாகி விடுகிறது. பாலுவின் அம்மா இருந்தாளே, அவள் என்ன என்னைப் பார்த்து இப்படித்தான் கேட்பாள்: அக்கா, இரவு பதினோரு மணிவரையில் உழைத்துவிட்டுத் திரும்பவும் விடியற்காலம் நாலு மணிக்கே எழுந்து விடுகிறாயே’ என்பாள். என் கதையைக் கேட்கவேண்டும் என்கிறாயே” என்று பாகீரதி ஆரம்பித்தாள்.

“நாகநாதன் – என் தங்கையைக் கல்யாணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட புது உறவு அல்ல. அவனுக்குப் பால்யத்துலேயே தாயார் தகப்பனார் இரண்டு பேரும் போய் விட்டார்கள். கொஞ்சம் சொத்து உள்ள குடும்பம் என்று பெயர். அத்தைக் கிழவி ஒருத்தி இருந்தாள். கண் தெரியாது. அவள் இருந்தவரைக்கும், பிள்ளை ஏதோ சாப்பாட்டுக்குக் கஷ்டப்படாமல் இருந்தான். அவளும் போன பிறகு பண்டிகை பருவங்களுக்கு எங்களகத்தில் சாப்பிட வருவான். அப்பொழுது அவனுக்கு வயது பதினெட்டு, பத்தொன்பது இருக்கலா அவன் வீட்டுக்கு வரப்போக ஆரம்பித்தபோது எனக்குப் பதினான்கு வயது; கல்யாணம் ஆகிவிட்டது. என் கணவருக்குக கல்யாணமான ஆறு மாதத்துக் கெல்லாம் பாரிச வாய்வு வந்து கால்கை இழத்துவிடவே, வைத்தியம் செய்வதற்காக எங்கள் வீட்டிலேயே வைத்துக்கொண்டிருந்தோம். கூடத்தில் ஒரு பெஞ்சியில் படுத்துக்கொண்டிருப்பார். சிசுருஷைகளெல்லாம் என் தாயாரும் நானும்தான் செய்துவந்தோம்.

நாகநாதனை இரண்டு மூன்று மாதங்கள் வரையில் நான் நன்றாகக் கவனித்ததில்லை. ஒரு நாள் அம்மா அப்பாவிடம் அவனைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள்: ‘பிள்ளை மூக்கும் முழியும் ராஜா மாதிரி இருக்கிறான். நம்ம சுந்துவையாவது நல்ல இடத்தில் கொடுக்கலாம். பெரிய மாப்பிள்ளையின் குடும்பம் எப்படி என்று தெரிந்தே பாகீரதியைக் கொடுத்துத் தலையில் கல்லைப் போட்டுக்கொண்டாயிற்று.’

“அன்று இரவு ஏதோ வேலையாக வந்த நாகநாதனை முதல் முதலாகச் சரியாகக் கவனித்தேன். என் மனத்தை என்னவோ செய்தது. ‘நம்மைவிடச் சுந்து அழகில் சிறந்த வள் இல்லை. பள்ளிக்கூடம் போக அழுது, அவளுக்கு இரண்டு எழுத்துக்கூட வாசிக்கத் தெரியாது. அவள் அதிர்ஷ்டத்தைப் பார்த்தாயா?’ என்று வேதனைப் பட்டேன்.

“அவன் வந்தபோது அப்பா சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கூடத்தில் இவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கவே, ‘அப்பா இல்லையா? ‘என்று கேட்ட நாகநா தனைப் பார்த்து, ‘உட்காருங்கள் சாப்பிடுகிறார்’ என்று அன்றைத் தினமே முதல் முதலாகப் பேசினேன். அவன் சிறிது நேரம் என்னையும் என் கணவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ‘உடம்பு இப்போது தேவலையா?’ என்று கேட்டான்.

‘தேவலை என்று எப்படிச் சொல்ல முடியும்?’ என்று மெதுவாகக் கூறினேன்.

நாகநாதன் வருத்தம் நிறைந்த முகத்துடன் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் வெட்கத்துடன் சமையல் அறைக்குள் போய் விட்டேன்.

அன்றைய தினத்திலிருந்து அவனுடன் பேசுவது சகஜமாகப் போய்விட்டது. அப்பாவிடம் அவன் அடிகடி என்னைப் பார்க்கும் போதெல்லாம், ‘கல்யாண விஷயத்தில் மட்டும் யோசித்துச் செய்யவேண்டும்’ என்பான். என்னைப்பற்றி நாகநாதன் அக்கறையாக விசாரிக்கவே அவனிடம் எனக்கு அன்பு ஏற்பட்டது. வீட்டில் ஏதாவது செய்தால், அவனுக்காக எடுத்து வைத்திருப்பேன். ‘தங்கைக்கு ஆத்துக்காரராக வரப்போகிறானோ இல்லையோ?’ என்று அம்மா சந்தோஷத்துடன் சொல்லிக் கொண்டிருப்பாள்.

“கையில் இருக்கும் நல்ல வரனை விட்டுவிடக் கூடாது என்று அந்த வருஷமே சுந்துவுக்கும் நாகநாதனுக்கும் கல்யாணம் நடந்தது. சுந்து தனக்கு அழகிய கணவன் வாய்த்ததைப் பற்றிப் பெருமையோ, கர்வமோ கொள்ளவில்லை. அவள் வழக்கம்போல் தன் தோழிகளுடன் விளையாடப் போய்விடுவாள். ‘இந்த மாதிரி அகத்துக்காரர் கிடைத்தால், நாள் பூராவும் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கலாமே’ என்று நான் எண்ணிக் கொண்டேன்.

“தங்கைக்குக் கல்யாணம் என்ற சந்தோஷமே எனக்கு ஏற்படவில்லை. கல்யாணச் சந்தடியெல்லாம் ஓய்ந்து ஒரு வாரத்துக்குமேல் ஆகிவிட்டது. நாகநாதன் வழக்கம்போல் வந்து போய்க்கொண்டிருந்தான். சுந்து அவனைக் கவனிப்பவளாகவே தோன்றவில்லை.”

அதுவரையில் சொல்லிவிட்டுப் பாகீரதி பெருமூச்சு விட்டாள். நான் கதையைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு வந்தவள், திடுக்கிட்டு அவள் முகத்தைக் கவனித்தேன். காலை ஒளியில் அவள் முகம் வெளுத்திருந்தது. கண்கள் ஏதோ வெறி பிடித்தவைபோல் மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தன. பிறகு சிறிது நேரம் கழித்து மறுபடியும் பாகீரதி ஆரம்பித்தாள்.

“சுந்துவின் அதிர்ஷ்டம் ஆரம்பமானவுடன், என் வாழ்க்கை இருளடைய ஆரம்பித்தது. என் கணவருக்கு நாளுக்கு நாள் உடம்பு அதிகமாகவே, நாங்கள் எல்லோரும் கவலைப்பட ஆரம்பித்தோம். என் மனத்தை அறுத்து வந்த துக்கத்தை யாரிடமாவது சொல்லி, அழவேண்டும் போல் தோன்றியது.

“வீட்டில் வைத்தியரை அடிக்கடி அழைத்துவர யாராவது வேண்டியிருக்கிறது என்று சொல்லி நாகநாதனை வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருந்தோம். நான் மறைவாகப்போய்க் கண்ணீர் வடிக்கும்போதெல்லாம். அவன் ஏதாவது தேறுதல் வார்த்தைகள் சொல்லுவான். என் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்று இதுவரையில் எல்லோர் மனத்திலும் போராட்டத்தை உண்டு பண்ணி வந்த புதிர் விடுபட்டது. திடீரென்று என் கணவர் இறந்து விட்டார். நாகநாதன் என்னை ஒரு நாள் சந்தித்தபோது, ‘நான் முதல் முதல் பார்த்த பால்வடியும் முகம் பாழடைந்து போய் வீட்டதே!’ என்று அழுதேவிட்டான்.

“ஐயோ! இதென்ன இப்படி அழுகிறீர்களே?” என்று நானும் நடுங்கிப்போனேன்.

“உன் காலத்தை எப்படிக் கழிப்பாய்?” என்றான்.

“நான் தேம்பித் தேம்பி அழுதேன். அசடன்! சுந்துவை நான் கல்யாணம் செய்துகொண்டிராவிடில்” என்று அவன் சிறிது நடுக்கத்துடன் கூறிச் சட்டென்று நிறுத்திக் கொண்டான். என் தேகம் பூராவும் நடுங்கியது.

“உங்கள் மனத்தை நான் அவ்வளவு கெடுத்துவிட்டேனா?” என்றேன்.

“சீ, கெடுக்கிறதாவது.”

“சுந்துவின் கள்ளங் கபடற்ற முகம் என்னைக் கேலி செய்வதுபோல் தோன்றியது.

“இனி மேல் சத்தியமாக உங்கள் எதிரில் வரமாட்டேன்” என்றேன்.

”என்ன என்ன?” என்று அவன் பதற்றத்துடன் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே, அந்த இடத்தை விட்டு வந்துவிட்டேன். அதிலிருந்து அவன் எதிரில் இன்னும் நான் போகவில்லை. சுந்து இருந்தவரையில் இந்த வீட்டில் காலடி வைத்ததில்லை. அவள் இறப்பதற்கு முன்பு, ‘அக்கா உன்னைத் தவிர என் குழந்தைகளுக்கு வேறு கதி இல்லை’ என்று அழுதுவிட்டுப் போனாள். லக்ஷ்மி புக்ககம் போய் விட்டால், நான் ஊருக்குப் போய்ப் பகவத் பஜனையில் காலத்தைக் கடத்துவேன் அம்மா!” என்று பாகீரதி சொல்லி முடித்தாள்.

கபில தீர்த்தம், அதன் சுற்றுப்புறம் எல்லாம் பாகீரதியின் கதையைக் கவனித்துக் கேட்பதுபோல் அமைதியாக இருந்தன. ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ என்று பாகீரதி குளத்தில் ஸ்நானம் செய்ய ஆரம்பித்தாள்.

நானும் குளிருக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே மெதுவாகத் தண்ணீரீல் காலை வைத்தேன்.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *