படிக்காதவள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 2,591 
 
 

‘தன் மனதை யாராவது திருட வர மாட்டார்களா? இந்த வீட்டிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்காதா? வரன் பார்த்து திருமணம் நடப்பது என்பது கனவிலும் நடக்காது. படிப்பு புரியவில்லை என்பதால் தானே கல்லூரிக்கு செல்ல மறுத்தேன். இந்த பூமியில் வாழும் அனைவருக்கும் முழுமையான விசயங்கள் தெரிந்திருக்க வேண்டுமென நினைக்க முடியுமா? அனைத்து விசயங்களையும் ஒருவரால் தெரிந்து கொண்டு செயல் படுத்த இயலுமா? படிக்க முடியவில்லையெனில் பிழைக்கவே முடியாதா? படிப்பென்றால் எது படிப்பு? எவ்வளவு டிகிரி வாங்கியவர்கள் அறிவாளிகள்? டிகிரி படிப்பில் சேராமல் பள்ளிப்படிப்போடு நின்றவர்களை படித்தவர்கள் என கூற மறுப்பது ஏன்?’ எனும் கேள்விகளை யாரிடம் கேட்டாலும் அதற்கு சரியான பதில் ஒருவரிடமிருந்தும் வராத நிலையில் வருத்தமடைந்தாள் சிரியா.

‘தங்கைகள் படிக்கிறார்கள். நன்றாகவே படிக்கிறார்கள். ஆனால் சமையல் என்பது சுட்டுப்போட்டாலும் அவர்களுக்கு வரவில்லை. வீட்டு வேலைகளை செய்வதுமில்லை. தண்ணீர் கூட தண்ணிடம் கேட்டு வாங்கி குடிக்கின்றனர். எனக்கு வீட்டு வேலை, சமையல் மிகச்சிறப்பாக வருகிறது. ஒரு பெண்ணின் சம்பாதனை பிறந்த குடும்பத்துக்கு தேவை என்பதற்க்காக அவளை தியாகியாக்கி திருணம் செய்யாமலிருக்க கட்டாயப்படுத்துவது எவ்வகையில் நியாயமில்லையோ, அது போல ஒரு பெண்ணின் உழைப்பின் சேவை அவசியம் தேவை எனக்கருதி வீட்டிலேயே அடிமை போல வைத்திருப்பதும் நியாயமில்லை தானே? நான் சமைப்பது போல் எனது தாயாராலும் சமைக்க முடிவதில்லை. இது கூட மற்றவர்களைக்காட்டிலும் என்னுடைய தனித்திறமை தானே? அப்படியிருந்தும் படிக்காததால் வீட்டில் உள்ளவர்கள் ‘மக்கு’ எனத்திட்டுகிறார்கள்? உறவினர்களும் மதிக்க மறுக்கிறார்கள். படிக்காதவர்களால் வாழவே முடியாதா? பணம் சம்பாதிக்கும் மிசினாக தன் மனைவி வர வேண்டுமென நினைக்கும் ஆண்கள், நல்ல சத்துள்ள சுவையான உணவை சமைத்துப்போடுவதோடு குடும்பத்தை சிறப்பாகக்கவனித்துக்கொள்ளும் என்னைப்போன்ற அன்பான பெண்களை ஏற்க மறுப்பது ஏன்? இரண்டு பேரும் படித்து வேலைக்கு போவதால் குழந்தைகளை கூட சரியாக வளர்க்காமல், அன்புக்கு ஏங்க வைத்து பிற்காலத்தில் பெற்றோரின் சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு கவனிக்காமல் உதறிச்செல்லும் குழந்தைகளின் மன நிலைக்கு சிறு வயதில் பெற்றோரின் இணக்கமான, அன்பான வளர்ப்பு இல்லாதது தான் காரணம் என படித்த யாரும் யோசிக்காதது ஏன்? ‘ என தனக்குத்தானே கேள்விகளைக்கேட்டு விட்டு, வீட்டில் உள்ள மற்ற வேலைகளை தானாக இழுத்துப்போட்டுக்கொண்டு வெள்ளந்தியாக செய்யத்தொடங்கியதில் பெற்றோருக்கு ஒரு பக்கம் மகள் படிக்கவில்லையே என கவலை வந்தாலும், தங்கள் பணி சுமையை பகிர்ந்து கொண்ட போது அந்தக்கவலை போனதில் சற்று நிம்மதி கிடைத்தது. 

பேருக்காக நான்கைந்து முறை ‘நீ படிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். நீ, ஏ படிக்காம போனே…? நாங்க படிக்க வேண்டாம்னு எப்பவாச்சும் சொன்னமா?’ என மேம்போக்காகக்கேட்டு விட்டு, விட்டு விடுவர்.

படிக்கும் இளைய சகோதரிகள் இரண்டு பேரும் வீட்டிற்குள் வந்து விட்டாலே போதும். ‘அது வேணும், இது வேணும்’ என பெற்ற தாயிடம் கேட்டு கட்டளையிடுவது போல் அதிகாரம் செய்வார்கள்.

சில சமயம் உடல் நிலை சரியில்லாத சமயம் வேலை செய்ய சோர்வாக இருக்கும் போது கெடாமல் இருக்கும் சாம்பாரை திரும்பவும் சூடு பண்ணி ஊற்றினால் “எதுக்கு காலைல வெச்ச கத்திரிக்கா சாம்பாற சூடு பண்ணி ஊத்தறே? தோசைக்கு தேங்காய் சட்னி தான் எனக்கு புடிக்கும்னு உனக்குத்தெரியாதாடி மக்கு?” என கேட்டும், தங்கைகளின் கேள்வியைக்கூட பொருட்படுத்தாமல், அவர்கள் கேட்கும் உணவு வகைகளைச்செய்து கொடுப்பாள். தான் படிக்காவிட்டாலும் தன் சகோதரிகள் படிக்க வேண்டுமென ஒரு தாயைப்போல பாசம் வைத்து எண்ணியதால் மனம் புண்ணாகும் படியான ஏசும் பேச்சுக்களைக்கூட பொறுத்துக்கொள்வாள்.

படிக்காததால் ‘அக்கா’ என கூப்பிடாமல் ஒரு வேலைக்காரப்பெண்ணைப்போல நடத்துவதினர். பெற்றோரும் அவர்களைத்தட்டிக்கேட்பதற்க்கு பதிலாக ‘அறிவுள்ளவங்க, படிச்சவங்க பேசுனா நாம தான் பொறுத்துக்கனம்’ என அவர்களது பேச்சுக்கு ஆதரவாகப்பேசும் போது சிரியா தனது அறையில் சிரிது நேரம் அமர்ந்து கண்ணீர் வடிப்பாள்.

ஒரு முறை குடும்ப ஜோதிடரிடம் குடும்பத்துடன் சென்ற போது சிரியாவின் ஜாதகத்தைப்பார்த்து தெய்வ அம்சமான பொண்ணு. இந்தப்பொண்ணு பிறந்த பின்னாடி பத்து வருசம் நடந்த சுக்கிரன் திசை யோகத்துல தான் வீடு கட்டினீங்க. தொழில்ல லாபம் வந்துச்சு. அந்த யோகத்துல கட்டின அபார்ட்மெண்ட் தான் இன்னைக்கும் வாடகை வருமானமா வந்து உங்க குடும்பத்து செலவுக்கு ஒதவுது. மத்த ரெண்டு பொண்ணுகளையும் படிக்க வைக்க முடியுது. இந்தப்பொண்ண எப்பவும் கண் கலங்காம பாத்துக்கங்க. சுக்கிரன் உச்சமா இருக்கறதுனால கண்ணாலத்துக்கப்புறம் பங்களா, கார், பதவி, சொத்துன்னு ஊரே மெச்சற மாதற கோடீஸ்வரியா வாழறதோட தான தர்மம் பண்ணறது, கோயில் கட்டறது, அறக்கட்டளை நடத்தறதுன்னு வயசான காலத்துல உங்க பொண்ண தெய்வமா கால்ல உழுந்து ஆசீர்வாதம் வாங்கப்போறாங்க. உங்க மத்த பொண்ணுங்களுக்கு சாதாரண யோகம் தான். படிச்சு வேலைக்கு போவாங்க. நடுத்தர குடும்பமா வாழ்வாங்க” என ஜோதிடர் சொன்னதை சிரியாவைத்தவிர யாரும் ரசிக்கவில்லை.

ஜோதிடம் பார்த்து விட்டு வந்த பின் பெற்றோரும் சகோதரிகளும் பொறாமையாகப்பார்த்தது, சரியாக பேசுவதையே தவிர்த்தது சிரியாவுக்கு விந்தையாகவும், அதே சமயம் விசனமாகவும் இருந்தது.

‘தான் பெற்ற பெண் எதிர்காலத்தில் சிறப்பாக வர வேண்டும் என நினைக்கும் பெற்றோருக்கு மத்தியில் தன் பெற்றோர் தனது எதிர்கால சிறப்பின் செய்தியைக்கேட்டு வருத்தப்படுவதை என்னவென்று சொல்வது?’ என நினைத்த போது வேதனை அதிகமானது.

“உன்ன மாதிரியே காலேஜ்க்கு போய் படிக்காததுனால அந்த சோசியகாரருக்கும் பெரிய அறிவில்லைன்னுதான் நெனைக்கறேன்.

உன்ற தங்கச்சிக ரெண்டு பேரும் எல்லாத்துலயும் பெஸ்டா இருக்கறாங்க. அவங்களப்போயி சாதாரணமா வாழப்போறாங்கன்னும், படிச்சத அடுத்த நிமிசமே மறந்து போற உன்னப்போயி கோடீஸ்வரின்னு சொல்லறதும் ஏத்துக்கவே முடியல. நீ பொறந்து பத்து வருசத்துல எங்களுக்கு ஒடம்புல தெம்பு இருந்தது. பாடு பட்டோம். முன்னேறி சொத்து சேர்த்தோம். இப்ப சொகமா வாழறோம். அதுக்கு உன்ற யோகந்தா காரணம்னு சொல்லறாரே. நீ ஏதாச்சும் முன் கூட்டியே போயி என்னப்பத்தி நல்லாச்சொல்லுங்கன்னு சொல்லி வெச்சிருந்திருப்பியோன்னு சந்தேகம் வருது” என தாய் காஞ்சனா சொன்ன போது இது வரை வராத கோபம் சிரியாவுக்கு வந்தது.

“நானும் தெரியாமத்தான் கேட்கறேன். நீ என்னை பத்து மாசம் சுமந்து பெத்தையா? இல்லா எங்காவது தத்து எடுத்து வளர்த்தினியா? எப்பப்பார்த்தாலும் தங்கச்சிகளையே தூக்கி வெச்சு பேசறீங்க. நானும் மனுசிதான். எனக்குன்னு மனசு இருக்கு. அது புண்ணாகும்னு ஒரு நாளாவது யோசிச்சியா? சொந்தக்காரங்க வந்தாலும் என்னை வெளில வர வேண்டாம்னு சொல்லறது, எந்த விசேசத்துக்கும் என்னை மட்டும் கூட்டிட்டு போகாம தங்கச்சிகளை கூட்டிட்டு போறீங்க. எனக்கு மட்டும் இப்படி துரோகம் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? எல்லாத்துக்கும் மேல வீட்ட விட்டே தனியா வெளில போகாத என்னப்பார்த்து ஜோசியரு கிட்ட நல்லாச்சொல்லோனும்னு சொல்லி வெச்சயான்னு கேட்ட பாரு…. இது வரைக்கும் உன்ற மேல வெச்சிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போயிருச்சு” என தேம்பி தேம் அழுதாள் சிரியா.

சிரியாவை உறவினர் மகனுக்கு பெண் கேட்டு வந்த போது, தற்போது மற்ற இரண்டு பெண்களின் படிப்பு செலவு இருப்பதால் நான்கு வருடங்களுக்கு திருமணம் செய்ய முடியாது என சிரியாவின் பெற்றோர் கூறிய போது, மாப்பிள்ளை வீட்டினர் திருமண செலவு முழுவதையும் தாங்களே ஏற்பதாகவும், வரதட்சணையாக ஒரு பவுனும் வேண்டாமெனவும் கூறியதால் சம்மதித்தனர். 

மாப்பிள்ளைக்கு சிரியாவை உறவென்பதாலும், முன்பே தெரியுமென்பதாலும், அவளுடைய கள்ளம் கபடமற்ற குணம் பிடித்திருந்ததாலும் அதிக வசதியிருந்தும், படித்து வேலையிலுள்ள பெண்களின் பெற்றோர் பலர் பெண் கொடுக்க முன் வந்தும் பெண்ணின் நற்குணத்துக்காகாவே பேசி முடித்தனர்.

திருமண செலவு முழுவதையும் தாங்களே செய்ததோடு, வரதட்சணையும் வாங்காத மாப்பிள்ளை கிடைத்திருப்பதை பெரிய அதிர்ஷ்டமென உறவுகள் வியந்து பேசினர்.

திருமணத்தில் இத்தனை சலுகைகளை மாப்பிள்ளை வீட்டினர் ஏற்படுத்திக்கொடுத்தும் பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டினரை உரிய மரியாதை கொடுத்து நடத்தாதது மாப்பிள்ளைக்கு வருத்தமிருந்தாலும், சிரியாவின் நிலையை அறிந்து பொறுத்துக்கொண்டு தங்கள் வீட்டில் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்ட நிலையில் கருவுற்றதும் வளைகாப்பு, டெலிவரி செலவு கூட தாங்களே செய்து குழந்தையை தங்கள் வீட்டிலேயே வளர்த்ததைக்கண்ட உறவினர்கள், பெற்ற மகளையே உதாசீனப்படுத்திய சிரியாவின் பெற்றோரின் செயலைக்கண்டு மிகவும் வருந்தியதோடு, திட்டவும் செய்தனர்.

திருமணம் செய்த பின் தனது மனைவியான சிரியா பெயரில் வேலையை விட்டு விட்டு துவங்கிய தொழில் ஒரே வருடத்தில் நல்ல லாபத்தைக்கொடுக்க பெரியதாக பங்களா போன்ற வீடு வாங்கி அதில் குடியேறினர்.

அதே சமயம் தனது தந்தை வீட்டில் தனது திருமணத்துக்கு பின் மருத்துவ செலவு, தொழில் நஷ்டம் என வந்ததோடு உடன் பிறந்த சகோதரிகளின் காதல் பிரச்சினை என பெற்றோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடன் ஏற்பட்டதால் இருக்கும் வீட்டை விற்கும் நிலை வர, அக்கடனை தானே அடைத்து விட்டு சிரியா பெயரில் மாற்றி எழுதி, அவளது பெற்றோரை அங்கேயே குடியிருக்கும் படி உதவிய சிரியா கணவன் முகன் மனைவியின் தங்கைகளுக்கும் திருமணத்துக்கு வேண்டிய உதவிகளைச்செய்த போது மணமக்கள் தங்களது பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவதற்கு முன் சிரியாவின் காலிலும், அவரது கணவரது காலிலும் விழுந்து வணங்கி வாழ்த்துப்பெற்றனர்.

“படிச்சாத்தான் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்னு நெனைச்சிட்டிருந்தோம். படிக்காத எங்க பொண்ணு சிரியாவை வெறுத்து ஒதுக்கி படிச்ச குழந்தைகளை ஒசத்தியா நெனைச்சோம். படிக்க பணம் வேணும்னு இத்தன பண்பான மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுக்க தள்ளிப்போட யோசித்தோம். எதுவுமே வேண்டாம்னு சொல்லீட்டு கண்ணால செலவையும் ஏத்துகிட்டவங்க, மனைவி கூட பொறந்த பொண்ணுங்க கண்ணாலத்தையும் நடத்தி வெச்சுட்டீங்க. உங்கள மாப்பிள்ளைன்னு கூப்பிடறத விட மகன்னு தான் கூப்பிடோணும்.

இது வரைக்கும் நாங்க தெரியாம செஞ்ச தப்ப மன்னிச்சிடுங்க” என காலைத்தொட வந்தவர்களின் கைகளைப்பிடித்து பேரக்குழந்தையை அவர்கள் கையில் சிரியா கொடுத்த போது ” எங்களைக்காப்பாத்த பொறந்த சாமி நீயி. உனக்கு போயி துரோகம் நெனைச்சு அதுக்கான தண்டனைய அனுபவிச்சிட்டோம். நீ நல்லா இருக்கோணும்” எனக்கூறி வாழ்வில் முதன்;முறையாக நல்ல வார்த்தை சொல்லி பெற்றோர் வாழ்த்தியபோது ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது அப்பாவிப்பெண் சிரியாவிற்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *