கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.) த்ரில்லர்
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 19,271 
 

கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை
என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த
ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. உருவம் ஆணாக இருந்தாலும்,
இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்கு குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான்.ஆண்களோடு விளையாடவேண்டியது ஏற்பட்டுவிட்டால் வீடுகட்டி, கல்யாணம் பண்ணி விளையாடும் விளையாட்டில்தான் பிரியம் அதிகம். அதிலும் மணப்பெண்ணாக தன்னை வைப்பதென்றால்தான், விளையாட வரச் சம்மதிப்பான்.

வயசு ஆகஆக அவன் ஆண்களோடு சேர்ந்து பழகுவதையேவிட்டுவிட்டான். பெண்கள் இருக்கும்
இடங்களில்தான் சதா அவனைப் பார்க்கலாம். ஏதாவது அதிசயமான சங்கதியைக் கேள்விப்பட்டால் பட்டென்று கையைத்தட்டி இடதுகை மணிக் கட்டின் மேல் வலது முழங்கையை ஊன்றி ஆள்காட்டி விரலைக் கொக்கிபோல் வளைத்துத் தன் மூக்கின்மேல்
ஒட்டவைத்துக் கொள்வான். அகலமான கருஞ்சாந்துப் பொட்டை வைத்து வெற்றிலை போட்டுக்கொண்டு கீழ் உதட்டைத் துருத்தியும், நாக்கை நாக்கை நீட்டியபடியும் சிகப்பாகப் பிடித்திருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொள்வான். தலைமுடியை அள்ளிச் சொருகி ‘கொப்பு’ வைத்து பூவைத்துக்கொள்ளுவான். அவன் அணிந்திருக்கும்
பாடி பெண்கள் அணிந்துகொள்ளும் ஜம்பரின் மாடலில் அமைந்திருக்கும். மேலே போட்டுக்கொள்ளும் துண்டை அடிக்கடி மாராப்பை சரி பண்ணுவதுபோல் இழுத்து இழுத்து
விட்டுக்கொண்டு இடுப்பை இடதும் வலதும் ஆட்டி அசல் பெண்களைப்போல் கையை ஒய்யாரமாக வீசி நடப்பான். எவ்வன புருஷர்களைக் கண்டுவிட்டால் கோமதிக்கு எங்கோ இல்லாத வெட்கம் வந்துவிடும்.

பெண்கள் இவனை வித்தியாசமாகவே நினைப்பது இல்லை. நடத்துவதும் இல்லை. இவன் எங்கு
சென்றாலும் இவனைப் பிரியமாக வைத்துக்கொள்வார்கள். ஆண் பெண் சம்பந்தமான பால்
உணர்ச்சி கதைகளைச் சொல்லி அவர்களை மகிழ்விப்பான். மனசைத் தொடும்படியான
ஒப்பாரிகளைப் பாடி அவர்களின் கண்ணீரை வரவழைப்பான். ஆனால் ஒரு இடத்தில் நிலைத்து
இருக்கமாட்டா. ஒரு வீட்டில் சிலநாள் இருப்பான்; திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல்
இன்னொரு வீட்டிற்குப் போய்விடுவான்.

இவனுக்கு ஒரே ஒரு கலை அற்புதமாகக் கைவந்திருந்தது. சமையல் பண்ணுவதில் இவனுக்கு
நிகர் இவனேதான். விருந்து நாட்களில் கோமதி கோமதி என்று இவனுக்கு ஏகப்பட்ட
கிராக்கி.

*********

ஒரு தடவை தூரத்து ஊரிலுள்ள தனது பந்துக்கள் வீட்டுக் கல்யாணத்திற்குப் போகும்படி நேர்ந்தது இவனுக்கு. கல்யாணவீட்டுக்கு வந்திருந்த பெண்களில், பிரசித்தி பெற்ற ரகுபதி நாயக்கரின் வீட்டுப் பெண்களும் வந்திருந்தார்கள்.அவர்களுடைய அழகையும் நகை ஆபரணங்களையும் உடைகளையும் உல்லாசமான பேச்சுக்களையும் கண்டு கோமதி அப்படியே சொக்கிப்போய் விட்டான்!

ரகுபதி நாயக்கரின் இளையபேத்தி குமாரி சுலோ இவனைக் கண்டதும், இவனுடைய அங்க
அசைவுகளையும் தளுக்கையும் கண்டு தன் வைர வளையல் குலுங்கக் கைகொட்டிக் கலகலவெனச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அடக்கமுடியாமல் கண்களில் பொங்கிய கண்ணீரைத்
துடைத்துக் கொண்டாள். சிரிப்பை அடக்க அவள் அவனோடு பேச்சுக் கொடுத்தாள். ரகுபதி
நாயக்கரின் வீட்டுப் பெண்களுக்கு இவனைப் பற்றி அங்கிருந்த ஒருத்தி விஸ்தாரமாகச்
சொல்லி அறிமுகம் செய்து வைத்தாள்.

பெண்கள் விலகி உட்கார்ந்து அவனைத் தங்கள் அருகே உட்கார வைத்துக்கொண்டார்கள்.
பட்டுச் சேலைகளின் சரசரப்பும் வியர்வையோடு கலந்த மல்லிகைப் பூவின் சுகந்த
நெடியும் கோமதியைக் கிறங்க அடித்தது. பெண்கள் ஒருவருக்கொருவர் காதோடு காதாக
பேசிக்கொண்டு சிரிக்கும் ஒலி, வளையல் ஒலியோடு போட்டியிட்டது. கோமதி ஏதோ
வாய்திறந்து பேச ஆரம்பித்தபோது சுலோ குனிந்து தன் காதை அவன் வாய் அருகே
நீட்டினாள்.

“யக்கா, இந்தச் சேலை என்ன விலை?”

சுலோ சிரித்தாள். சிரித்துவிட்டு, “இதோ – இது ஐநூறு ரூபாய் விலை – “ அவள்
வாயிலிருந்து ஒரு மதுரமான வாடை வீசியது.

“யக்கா, உனக்கு இந்தச் சேலை ரொம்ப நல்லாயிருக்கு.”

சுலோ மீண்டும் சிரித்தாள். பெண்மைக்கே உரிய நாணம் கலந்த சப்தமில்லாத குமிழ்ச்
சிரிப்பு வந்து அவளைக் குலுக்கியது.

“நீ எங்க வீட்டுக்கு வாரையா? சமையல் செய்ய?”

சரி, என்ற பாவனையில் தலையை ஆட்டினான் கோமதி.

கோமதிக்கு, சுலோ தன் வலதுகை நிறைய அணிந்திருந்த வளையல்கள்மீதுதான் கண்ணாக
இருந்தது.

அந்த வளையல்கள்தான் அவளுடைய சங்குபோன்ற வெண்ணிறமான கைக்கு எவ்வளவு பொருத்தமாக இருந்தது. ரகுபதி நாயக்கரின் வீட்டுப்பெண்கள் எல்லோருமே அப்படித்தான் ஒரு
கையில் வைர வளையல்களும் ஒரு கையில் கருவளையல்களும் அணிந்திருப்பார்கள். அந்த
வீட்டுப் பெண்களை நினைத்தாலே சிவந்த உதடுகளும் வெண்மையான பற்களுமே ஞாபகத்துக்கு
வரும்.

இப்போது இருக்கும் ரகுபதி நாயக்கரின் பேரனான ரகுபதி நாயக்கர் தன்
குடும்பத்திலுள்ள அழகை மேலும் மேலும் வளர்த்துச் செழுமைப்படுத்தினார். தன்னுடைய
அழகுமிகுந்த நான்கு புத்திரர்களுக்கும் ஆந்திரதேசத்துக்குச் சென்று தங்க
விக்ரகங்களைப்போலுள்ள எட்டு ஸ்திரி ரத்தினங்களைக் கொண்டுவந்து ஆளுக்கு இரண்டு
பேரை கல்யாணம் பண்ணி வைத்தார். தன் குடும்பத்திலிருந்து வெளியே கொடுக்கவேண்டிய
பெண்களுக்கும் அவர் அழகுமிகுந்த மாப்பிள்ளைகளையே தேர்ந்தெடுப்பார். இந்த
மாப்பிள்ளைகளுக்கு சொத்து இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அழகுமிகுந்த
பெண்ணையும் கொடுத்து அவனுக்கு வேண்டிய சொத்தையும் எழுதி வைப்பார். எவ்வளவு
எடுத்துக் கொடுத்தாலும் குறைவுபடாத சம்பத்து இருந்தது அவர்கள் குடும்பத்திற்கு.

இப்பேர்ப்பட்ட ஒரு இடத்துக்குத்தான் கோமதி சமையல் உத்தியோகத்துக்குப் பெட்டி
படுக்கையுடன் போய்ச் சேர்ந்தான். பக்கத்து வீட்டிலுள்ள பெண்களெல்லாம் இவனைப்
பார்க்க வந்து விட்டார்கள். இவனுடைய நடையையும், நீட்டிப் பேசுகிற பேச்சையும்,
அசைவுகளையும் கண்ட பெண்கள் சிரித்து ரஸித்தார்கள். உற்சாகமூட்டினார்கள். அன்று
எல்லோருக்கும் ஒரு பெரிய விருந்தே நடந்தது. அவன் படைத்த உணவை
ருசிபார்த்தபின்தான் பெண்களுக்கு அவன் மீதுள்ள இளப்பம் ஓரளவு நீங்கியது. அவனை
பரிவாகவும் இரங்கத்தக்க ஒரு ஜீவனாகவும், தங்களோடு, தங்கள் இனத்தோடு சேர்ந்த ஒரு
ஆத்மாவாகவும் நடத்தினார்கள்.

சாப்பிட்டு முடித்த ரகுபதி நாயக்கர், இந்தப் புது சமையல்காரனை
பார்க்கவேண்டுமென்று சொல்லி மாடியிலுள்ள தன்பகுதிக்கு வரவழைத்தார். கோமதி
பயந்து ஒரு பூனைபோல் மெல்ல நுழைந்து அவர் எதிரே வந்து நின்றான். இவனைப்
பார்த்ததுதான் தாமதம். ரகுபதி நாயக்கர் ஆகாயத்தை நோக்கி கடகடவென்று சிரிக்க
ஆரம்பித்துவிட்டார். அவருடைய வெண்ணிறமான மீசையோடு பற்களின் ஒளி போட்டியிட்டது.
கோமதி உண்மையாகவே பயந்து போனான். அவனுடைய பயத்தைக் கண்டு ரகுபதி நாயக்கர்
இன்னும் உரக்கச் சிரித்தார். வீட்டுப்பெண்கள் எல்லாம் சிறிது தள்ளி நின்று இதை
வேடிக்கை பார்த்தார்கள்.

“பலே, பலே; வா இங்கே. உன் பேர் என்ன?”

”கோமதி”

“கோமதியா! பேஷ் பேஷ்….!” என்று முழங்காலில் கையால் தட்டிக்கொண்டு மீண்டும்
அந்த கடகடத்த சிரிப்பையும் அவிழ்த்து விட்டார் ரகுபதிநாயக்கர். பின்பு எழுந்து,
தன் பீரோவைத் திறந்து ஒரு ஜோடி பட்டுக்கரை வேஷ்டிகளை எடுத்து “இந்தா, பிடி”
என்று கொடுத்தனுப்பினார்.

வேறு யாராவது இருந்தால் இந்த வெகுமதியைக் கண்டு மகிழ்ந்து போயிருப்பார்கள்.
ஆனால் கோமதி அந்த வேஷ்டிகளை கடைசிவரையும் உடுத்தவே இல்லை.

*********

ஒரு நாள் பகல் உணவுக்குப்பிறகு ‘அந்தப்புர’த்தில் பெண்கள் எல்லோரும் சாவகாசமாக
உட்கார்ந்திருந்தார்கள். சிலர் பதினைந்தாம் புலியும், சிலர் தாயமும்
விளையாடிக்கொண்டிருந்தார்கள். கோமதி, ஒரு பெண்ணுக்குத் தலையில் பேன்
பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு திடீரென்று என்ன உற்சாகம் வந்ததோ
தெரியவில்லை. தன் இனிமையான பெண் குரலில் சோகம் ததும்ப ஒரு ஒப்பாரியைப்
பாடினான். உணர்ச்சியோடு பாடினான். விதவைக்கோலம் பூண்டுவிட்ட ஒரு பெண்
சொல்லுவதாக பாவம்:

“கருப்பும் சிகப்புமாய் – நான்
கலந்துடுத்தும் நாளையிலே
சிகப்பும் கருப்புமாய் – நான்
சேர்ந்துடுத்தும் நாளையிலே
நீலமும் பச்சையுமாய் – நான்
நிரந்துடுத்தும் நாளையிலே
கைக்களையன் சேலையை – என்
கழுத்திலிட்டுப் போனியளே
கைக்களையன் சேலை: எந்தன்
கழுத்தை அறுக்காதோ
ஈழுவன் சேலை: எந்தன்
இடுப்பை முறிக்காதோ”

அங்கிருந்த விதவைப்பெண்கள் இதைக் கேட்டவுடன் அழுதே விட்டார்கள். சுமங்கலிகள்
மௌனமாகக் கண்ணீர் வடித்தார்கள். உடனே கோமதி கருவளையைப் பற்றிய ஒரு வேடிக்கையான
நாடோடி பாடல் ஒன்றைப் பாடி அபிநயம் பிடிக்கத் தொடங்கினான்.

“சோளம் இடிக்கையிலே
சொன்னயடி ஒரு வார்த்தை: – “ஐயோ
கையைப் பிடிக்காதிங்கோ – என்
கருவளைவி சேதமாகும்…….”

’கொல்’லென்று பெண்கள் சிரித்தார்கள்; வடித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
சிரித்தார்கள்.

*********

அதிகாலையில் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் கோமதி வேலை செய்துகொண்டு இருந்தான்.
பெண்கள் குளிக்கும் அறைகளில் கொண்டுபோய் வெந்நீர் ரொப்புவதும், சோப்புகளும்
துவாலைகளைக் கொண்டு கொடுப்பதும் அவர்களுக்கு முதுகு தேய்த்துவிடுவதுமாக
வழக்கமான வேலைகளில் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தான். அவனுடைய சுதாரிப்புக்கு
இன்று ஒரு காரணமுண்டு. சுலோவின் அண்ணன் ரகு பட்டணத்திலிருந்து இன்று மாலை
லீவுக்கு வருகிறான். தன் அண்ணனைப் பற்றி சுலோ கோமதியிடம் பல சந்தர்ப்பங்களில்
சொல்லக் கேட்டிருக்கிறான்… அவருக்கு என்னென்ன சமையல் வகைகள் பிடிக்கும்
என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான் கோமதி.

அந்த மாலை நேரம் இப்போதே வந்துவிடக்கூடாதா என்றிருந்தது. பிறபகல் நத்தைபோல்
ஊர்ந்து அந்த மாலைநேரமும் வந்தது. போர்டிகோவுக்குள் கார் வந்து நின்றதும்
முன்பக்கம் பெண்களெல்லாம் வந்தார்கள். கோமதி மட்டும் கதவு இடுக்குவழியே
ஒளிந்துகொண்டு பார்த்தான். சுலோ ஓடிச்சென்று காரின் பின்கதவைத் திறந்தாள்.
ஆணழகனான ரகு ஆஜானுபாகுவாக இறங்கி ஜம் என்று நின்றான். பெண்கள் அவனுக்கு
திருஷ்டி சுற்றி கழித்து அவன் உள்ளே வர விலகி நின்றார்கள். ரகுவைப் பார்த்த
கோமதிக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. முதலில் அதிர்ச்சியாயிருந்தது.
மலமலவென்று கண்களை மூடித் திறந்தான். திடீரென்று எங்கேயும் இல்லாத வெட்கம்
வந்து அவனைச் சூழ்ந்துகொண்டது. ஒருவரும் பார்ப்பதற்குள் உள்ளே ஒரே
ஓட்டமாகப்போய் குளிப்பறைக்குள் போய்க் கதவை பூட்டிக்கொண்டான்.

இரவு சாப்பாட்டின்போது ரகுவுக்கு சுலோவே பரிமாறினாள். கோமதி மறைவில் நின்றுகொண்டு ரகு சுவைத்துச் சாப்பிடுவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். “சாப்பாடெல்லாம் புதுமாதிரி இருக்கிறதே. இப்போது சமையலுக்கு யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான். ‘புது ஆள்
வந்திருக்கிறதண்ணா’ என்று சொல்லிக்கொண்டே பின்புறம் பார்த்தாள். கோமதி மறைந்துகொண்டு தன்னைப்பற்றி சொல்லவேண்டாம் என்று ஜாடை செய்தான். சுலோவும் சிரித்துக்கொண்டே ரகுவுக்குத் தோன்றாமல் வேறு பேச்சுக்கு மாற்றிவிட்டாள்.

ரகு மாடிக்குப் போனபிறகு சுலோ கோமதியைக் கூப்பிட்டு, “அண்ணா உன்னைப் பார்த்தால்
மிகவும் சந்தோஷப்படுவான்; மண்டு! நீ ஏன் வேண்டாம் என்று சொன்னாய்? பாலை
எடுத்துக்கொண்டு வா” என்று சொல்லிவிட்டு அண்ணாவின் அறைக்குப் போய்விட்டாள்.

கோமதிக்கு உடம்பெல்லாம் வேர்த்து படபடவென்று வந்தது. தன்னைச் சிறிது
ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிலைக்கண்ணாடியின் முன்போய் நின்று தன்னை நன்றாகப்
பார்த்து, தலையிலுள்ள பூவை சரிப்படுத்திக் கொண்டான். பால் டம்ளரை ஒரு தட்டில்
எடுத்துக் கொண்டு மாடியை நோக்கி இப்பொழுதுதான் புதுப்பெண் முதல் இரவுக்குப்
போகிறதைப்போல் அடிமேல் அடிவைத்து ஏறிச் சென்றான். தட்டோடு கை நடுங்கியதால்
எங்கே பால் கொட்டி விடுமோ என்று நினைத்து தம்ளரை ஒரு கையால் பிடித்துக்கொண்டே
போனான்.

“கோமதி… கோமதி.. உள்ளே வாயேன்” என்று சுலோ கூப்பிட்டாள்.

“யார் கோமதி?” என்று கேட்டான் ரகு.

“அதுதான்; நான் அப்போ சொல்லவில்லையா; சமையலுக்கு ஒரு புது ஆள்
வந்திருக்கிறதென்று?”

”ஓஹோ; சரிதான்” என்று சொல்லிக்கொண்டு தலையை ஆட்டிக் கொண்டான். “யாரோ பெண்பிள்ளை
போலிருக்கிறது” என்று எண்ணிக்கொண்டு சுலோவைப் பார்த்தவாறு தன் பேச்சைத்
தொடர்ந்தான்.

கோமதி மெதுவாகப் பக்கத்தில் வந்து நின்றான்.

“அண்ணா பாலை எடுத்துக்கொள்”

ரகு திரும்பிப் பார்த்தான். முகத்தைச் சுழித்தான். இந்த ரஸவிஹாரத்தை அவன் ஆண்மை
நிறைந்த உள்ளத்தால் தாங்கமுடியவில்லை. சுலோவை இதெல்லாம் என்ன என்ற முறையில்
கோபத்தோடு பார்த்தான். சுலோ கலகலவென்று சிரித்தாள். கருங்கல் தரையில் கண்ணாடி
வளையல்கள் தொடர்ந்து விழுந்து உடைவதுபோல் இருந்தது அவளுடைய சிரிப்பு.

இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை கோமதிக்கு. அவமானம்
தாங்கவில்லை. தட்டை மேஜைமீது வைத்துவிட்டு கையால் முகத்தை மூடிக்கொண்டு
மூஸ்மூஸ் என்று அழ ஆரம்பித்துவிட்டான். ரகு கோமதியை நோக்கி “சீ போ வெளியே”
என்று கத்தினான். கோமதி துயரம் தாங்காமல் வெளியே ஓடுவதைப் பார்க்கப் பரிதாபமாக
இருந்தது.

*********

”என்ன காரியம் செய்து விட்டாயண்ணா”

சுலோவிற்கு மனசு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. தான் விளையாட்டாக நினைத்தது
இப்படி அண்ணாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணிவிடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
கோமதியை நினைத்து மிகவும் துக்கப்பட்டாள்.

“இரக்கப்படத் தகுந்த ஒரு ஜென்மத்திடம் இப்படிக் கொடுமையாக நடந்து கொள்ளலாமா?”
என்று கேட்டாள். ரகுவுக்கும் ‘பாவம்’ நாம் ஏன் இப்படி நடந்துகொண்டோம் என்று பட்டது. “தான் இனிமேல் அவனிடம் சுமுகமாக நடந்துகொள்வதாகக்’ கூறினான்.

அன்றிரவு தனக்குச் சாப்பாடே வேண்டாம் என்றுவிட்டு வெறும் தரையில்
படுத்துக்கொண்டான் கோமதி.

*********

மறுநாள் சுலோ கோமதிக்கு எவ்வளவோ சமாதானம் சொல்ல வேண்டி இருந்தது. என்ன
சொல்லியும் கோமதிக்கு மனசு சமாதானப்படவில்லை. ரகு வந்து கோமதியிடம் சிரித்துப்
பேசியதும் கோமதிக்கு எல்லாம் சரியாகப் போய்விட்டது. பழைய கோமதி ஆனான்.
குளிப்பறையில் ரகுவுக்கு தண்ணீர் எடுத்து வைத்தான். சோப்பும் துவாலையும் கொண்டு
வைத்தான். ரகுவும் சந்தோஷமாகக் குளிக்க வந்தான்.

“சரி, நீ போகலாம்; நான் குளித்துக்கொள்கிறேன்” என்றான் ரகு.

“உங்களுக்கு நான் முதுகு தேய்க்கிறேனே…..!” என்று குழைந்தான் கோமதி.

“வேண்டாம் வேண்டாம்; நானே தேய்த்துக்கொள்வேன்” என்று சொல்லி, பிடரியைப்
பிடித்து தள்ளாத குறையாக கோமதியை வெளியேற்றி கதவைப் பூட்டிகொண்டான் ரகு. அந்தக்
கதவுக்குமேல் ஒரு சிறு பாட்டு ஜன்னல் ஒன்றிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய ஆட்டுரல்மேல் ஏறி அந்த ஜன்னல் வழியாய்க் குளிப்பறைக்குள் திருட்டுத்தனமாக வேறு எதையோ பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தான் கோமதி, சுலோ இந்த நாடகத்தையெல்லாம் ஒன்று விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்களில் பிதுங்கும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அப்பால் போய்விட்டாள்.

*********

‘சாப்பிடுங்கள்; இன்னுங்கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கோமதி பலமாக
உபசரித்துக்கொண்டே ரகுவுக்குப் பரிமாறினான்.

“வேண்டாம்; வேண்டாம் போதும்; போதும்” என்று சொல்லும்வரை திணற அடித்தான். தன்
மனதுக்குப் பிடித்தவர்களை தான் சமைத்ததை தன் கையாலேயே பரிமாறி அவர்கள் உண்பதைக்
காண்பதில் எப்பவுமே கோமதிக்கு பரம திருப்தி. அதோடு சுலோவும் சேர்ந்துகொண்டு
ரகுவைத் திண்டாட வைத்து வேடிக்கை பார்த்தாள்.

“சுலோ, இந்தப் பயலுக்கு நீ ரொம்பவும் இளக்காரம் கொடுக்கிறாய். இவனைக் கண்டாலே
எனக்குப் பிடிக்கவில்லை. நான் இவனை வெறுக்கிறேன்” என்று ரகு இங்கிலீஷில்
சொன்னான்.

’ஐயோ பாவம்; அண்ணா, அப்படியெல்லாம் சொல்லாதே’ என்று பதிலுக்குச் சொன்னாள்.
சொல்லிவிட்டு சுலோ கோமதியின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். இவர்கள் இரண்டு
பேரும் பேசிக்கொண்டது கோமதிக்கு விளங்கவில்லையானாலும் தன் சமையலைப் பற்றியும்
தன்னைப்பற்றியும்தான் தன் எஜமானர்கள் புகழ்ந்து பேசிக்கொள்கிறார்கள் என்று
எண்ணி மகிழ்ந்தான் கோமதி.

அவர்கள் எல்லோரும் சாப்பிட்டு மாடிக்குப் போனபின் கோமதி பெண்களின்
குளிப்பறைக்குப் பக்கத்தில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட தன்னுடைய தனித்த அறையில்
வெற்றிலைப் பாக்கு, புகையிலைகளைப் போட்டு முழக்கிக்கொண்டிருந்தான். சந்தோஷத்தை
அவனால் அடக்க முடியவில்லை. குரலெடுத்துப் பாடவேண்டும்போல் இருந்தது.

*********

இரவுச் சாப்பாடு முடிந்தது. வழக்கம்போல் கோமதி ரகுவுக்கு பால் எடுத்துக்கொண்டு
போனான். ரகு தனியாக உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். பக்கத்தில் கொண்டு
வந்து வைத்துவிட்டு எதிரேயுள்ள கண்ணாடியில் தன் முகத்தை இப்படியும் அப்படியுமாக
ஒரு தடவை பார்த்துக்கொண்டான். மீண்டும் பக்கத்தில் வந்து உராய்ந்துகொண்டு
“பாலைச் சாப்பிடுங்கோன்னா; ஆறிப்போகிறது” என்று கொஞ்சலாகச் சொன்னான். சொன்னதோடு
அவன் நின்றிருந்தாலும் ரகுவிற்கு கோபம் வந்திருக்காது; நாடியை வேறு தொட்டுத்
தாங்கினான். ரகு பேனாவை எறிந்துவிட்டு அப்படியே கோமதியின் செவிட்டில் ஓங்கி ஒரு
அறை விட்டான். இதை கோமதி எதிர்பார்க்கவில்லை. கன்னத்தைக் கையால் பொத்திக்கொண்டு
ரகுவைப் பார்த்து சிரிக்க முயன்றான்; சிரிக்கமுடியவில்லை. பீதியும் சிரிப்பும்
மாறிமாறி முகத்தில் தோன்றி இறுதியில் பீதி முற்றி பயங்கரமாக முகம் மாறியது. இது
ரகுவுக்கு இன்னும் ஆவேசத்தை உண்டு பண்ணியது. தன் வலது காலை உயர்த்தி ஓங்கி அவன்
நெஞ்சில் உதைத்துத் தள்ளினான்.

“ஓ” என்று பயங்கர ஊளையுடன் தடால் என்று தரையில் விழுந்தான் கோமதி.
பக்கத்தறையிலிருந்த சுலோ ஓடிவந்து ரகுவை தடுக்காவிட்டால் கோமதி என்னாவாகி
இருப்பானோ.

அன்று இரவு மூன்று பேர்களும் தூங்கவில்லை. குளிப்பறைக்குப் பக்கத்திலிருந்த
அறையிலிருந்து இரவு பூராவும் ஒப்பாரி வைத்து அழும் சோகக்குரல் கேட்டுக்கொண்டே
இருந்தது.

மறுநாள் ரகு ஏதோ அவசர ஜோலியாக பட்டணத்துக்குப் புறப்பட்டு விட்டான். சுலோவின்
முகத்தில் அருளே இல்லை. இதை ரகு கவனித்தான். கோமதி தன் அறையிலிருந்து வரவே
இல்லை.

எல்லோரிடமும் சொல்லிக்கொள்ள வந்தபோது ஸ்திரிகள் கூட்டத்தில் கோமதி இல்லாதது
கண்டு, “அவன் எங்கே; கோமதி” என்று கேட்டான் ரகு.

”அவனுக்கு உடம்புக்கு சரியில்லை போலிருக்கிறது. இன்று வெளியிலேயே காணோம்” என்று
சொன்னார்கள். சுலோ ஒன்றுமே தெரியாததுபோல் மௌனமாக இருந்தாள். ரகு கையில் ஒரு
பொட்டலத்துடன் கோமதியின் இருப்பிடம் சென்றான்.

“கோமதி! யேய் கோமதி; கதவைத் திற” என்று அன்போடு கேட்டான். கோமதியும் கதவைத்
திறந்தான். தலைவிரிகோலமாக கண்கள் வீங்கப் பார்க்கப் பாவமாக இருந்தான்.

“இந்தா இதை வைத்துக்கொள்” என்று அந்தப் பொட்டலத்தை கோமதியிடம் கொடுத்தான் ரகு.
அதை தலைகுனிந்தவாறே மௌனமாக வாங்கிக்கொண்டான். “அதில் என்ன இருக்கிறது என்று
பார்!”

கோமதி பொட்டலத்தை அவிழ்த்தான். நிறைய செவந்தி பூக்களும், அருமையான கருவளைகளும்
இருந்தன. பெண்களெல்லோரும் சிரித்தார்கள். கோமதியும் சிரித்தான்; அவன் கண்களில்
கண்ணீர் வந்தது.

ரகு ஊருக்குச் சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. கோமதி எல்லா வேலைகளையும்
முன்போலவே செய்கிறானென்றாலும் அவன் முன் போல கலகலப்பாக இல்லை. தனியாக ஏதாவது
ஓரிடத்தில் இருந்து கொண்டு எதையோ பறிகொடுத்தவன்போல் எதையாவது பார்த்துக்
கொண்டிருப்பான். மனதை அறுக்கும் பெருமூச்சுக்களை அடிக்கடி விடுவான். உடம்பு
மெலிந்துவிட்டது. சுலோ இதையெல்லாம் மௌனமாக கவனித்துக்கொண்டு வந்தாள்.

ஒருநாள் இரவு இரண்டுமணி இருக்கும். சுலோ தற்செயலாகக் கண்விழித்தாள். கீழே
கோமதியின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ‘ஏன்?’ என்று
பார்க்கவேண்டும்போல் இருந்தது. மெதுவாக இறங்கி வந்தாள். பார்த்தாள். கோமதியைக்
காணோம். உள்ளே ஒரு பெண் மட்டும் தனியாக உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.
திகிலும் ஆச்சரியமாகவும் இருந்தது.

யார் இந்தப் பெண்; கோமதி எங்கே?

அரவமில்லாமல் சுலோ பக்கவசத்திலிருந்த ஜன்னல் வழியாகப் போய்ப் பார்த்தாள்.
அந்தப் பெண் முழங்காலைக் கட்டிகொண்டு உட்கார்ந்திருந்தாள். கைகள் நிறைய
கருவளைகள் போட்டுக் கொண்டிருந்தாள். தலையில் ஜடைநிறைய செவ்வந்திப் பூக்கள்.
அவள் எதிரே ரகுவின் படம் இருந்தது! சுலோ முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அந்த
பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாக இறங்கிக்கொண்டிருந்தது. முன்னால்
குனிந்து வளையல்கள் மீது முகத்தைக் கவிழ்ந்துகொண்டாள் அந்தப் பெண். அவளுடைய
கண்களின் நீர்ப்பட்டு அந்தக் கருவளைகள் நனைந்து அதிலிருந்து பிரகாசமான
வைரங்களைப் போல் கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

எதிரேயுள்ள ஜன்னல் வழியாக இப்பொழுது நன்றாகப் பார்க்க முடிந்தது சுலோவால்.
அடையாளம் கண்டுகொண்டாள். சேலையுடுத்திக்கொண்டிருந்த அது வேறு யாருமில்லை.
கோமதிதான்!

சுலோ திடுக்கிட்டுப் போனாள். பீதியால் நிலைகொள்ள முடியவில்லை. திரும்பி
மாடிப்படி ஏற காலைத் தூக்கி வைக்க முயன்றாள் – முடியவில்லை, அப்படியே
உட்கார்ந்துவிட்டாள்.
நன்றி:  தீபம் 1964

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *