எல்லோருக்குமான மரியாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 4,497 
 

வாசலில் உட்கார்ந்திருந்த தசரதன், உள்ளே எட்டிப்பார்த்து ஊர்மிளாவிடம் ஏங்க, அனு அம்மா உங்களை யாரோ கூப்பிடுறாங்க என்று குரல் கொடுத்தார். வெளியே வந்த ஊர்மிளா, தசரதனை வெறுத்து எரித்து விடுபவள் போல் பார்த்து விட்டு, வந்தவளிடம் தகவல் சேகரித்து கொண்டு திரும்ப உள்ளே சென்று விட்டாள்.

ஏங்க வீட்டுக்குள்ளே மட்டும் கூப்பிட்டுக் கொண்டிருந்த அந்த மனுஷன் இப்போ வெளிமனுஷால் முன்னாலேயும் ‘அனு அம்மா’, ‘அனு அம்மா’,ன்னு கூப்பிட்டு மானத்தை வாங்குகிறார், எனக்கு பத்திக்கிட்டு வருது என்றாள் ஊர்மிளா.

மாமனாரை மரியாதை குறைவா “அந்த மனுஷன்” ன்னு சொல்லி அசிங்கப் படுத்துறதை விடவா, அனு அம்மான்னு கூப்பிடறது உனக்கு கேவலமா இருக்கு.,? என்று கேட்டான் கணவன் லெட்சுமணன்.

இது தப்பில்லையா.,?.,! நானும் அனு தாத்தான்னு கூப்பிடவா.,?

ம். . கூப்பிடேன் . . தப்பு எதுவும் கிடையாது. நீ அனுவுக்கு அம்மாதானே., அவரும் அனுவுக்கு தாத்தா தானே., என்ன ஒண்ணு அவர் பேசயில் ..ங்க போட்டு கூப்பிடுகிறார். அதுதான் எனக்கு நெஞ்சை சம்மட்டியால் அடிக்கிறது போல இருக்கு.

வலிக்கிதுல்ல, மனசு வலிக்கிதுல்ல. . அப்பப் போய் கேளுங்க,

கணவனும் மனைவியும் பேசிக்கொள்வது தசரதன் காதில் விழுகிறது. வரட்டும் வந்து கேட்கட்டும், ஏம்ப்பா . . என்ன ஆச்சு உங்களுக்கு.,? எப்பவும் போல ஊர்மிளான்னு கூப்பிட வேண்டியது தானே, அது என்ன அனு அம்மான்னு கூப்பிட்டு கூடவே அடைமொழியா வாங்க போங்கன்னு சேர்த்துக்கிறது என்று கேட்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு பதில், என்று காத்திருந்தார்.

மகன் லெட்சுமணன் கேட்க மாட்டான். காரணம் தப்பு ஊர்மிளா பேரிலும் இருக்கிறது என்று தீர்மானித்தவன் அவன்.

அறுபத்தைந்து வயசாகும் தசரதன், மருமகள் செய்யும் சில வேண்டாத காரியங்களை சொல்ல முடியாமல், சகித்துக் கொள்வார். பொறுமை இழந்த சகிப்புத் தன்மை, நெஞ்சுக்குள் கொதிக்கிற போது தான் கோபப்படுவார். ஆற்றாமையால் மனைவி சுமத்திராவிடம் புலம்புவார். சுமித்திராவோ யார் பக்கமும் பேசமுடியாமல் மூவரிடமும் மாட்டிக் கொண்டு தவிப்பாள். அவளின் கோபமும் ஆத்திரமும் நெஞ்சுக்குள்ளேயே புதைந்து உடல் பலஹீனத்தை அதிகரிக்கச் செய்யும்.

பேத்தி அனுப்பிரியாவுக்கு வயசு இருபத்தியேழு மாதம். சாப்பிடும் விஷயத்தில் கொஞ்சம், கொஞ்சம் இல்லை நிறையவே அடம் பிடிப்பாள். மூன்று வேளையும் எதையும் விரும்பி சாப்பிடுவதில்லை சாப்பாட்டு வேளையில் போராட்டம் போர்க்களமாயிடும். சென்ற வாரம் அப்படித்தான் குழந்தையை சாப்பிட வைக்க ஊர்மிளா கெஞ்சும் போதும், மிரட்டும் போதும், தொடையைப் பிடித்து திருகும் போதும் தசரதனுக்கு சங்கடமாக இருந்தது. எரிச்சலில் கோபம் கூட கொப்பளிக்கும். மருமகளை கண்டிக்க தலைப் படுவார். இருந்தாலும் குழந்தை சாப்பிடும் விஷயத்தில் சலுகைக் காட்டக் கூடாது என்று அடக்கிக் கொள்வார். இது ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்கும் தொடர்ந்தது.

அடுத்த இரண்டு நாளில் அமைதிக் காக்க முடியாமல் ஏன் இப்படி பிடிக்காததை திங்கடிக்க, அவளை கஷ்டப்படுத்துறே, பிடித்த மாதிரி ஏதாவது செஞ்சு சாப்பிட வைக்கிறது தானே என்று கேட்டு விட்டார், அவ்வளவு தான் அப்படியே விசிறி கெடாசி விட்டு நீங்களே ஊட்டிக்குங்க என்று சொல்லி அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

குழந்தையை சமாதானப் படுத்தி பாட்டி சுமத்திரா சாப்பாடு ஊட்டும் போது இரண்டு வாய் வாங்கிக் கொள்ள, நான் ஊட்டுனா திறக்காத வாயி பாட்டி ஊட்டுனா மட்டும் திறக்குதா.,? நான் என்ன உனக்கு விஷமா கொடுக்கிறேன் என்று சொல்லி திட்டினாள். அது பாட்டி சுமத்திராவுக்கு வலித்தது.

இதற்கு பத்து மாதங்களுக்கு முன்பு, பெங்களுரூ வந்து தங்கி இருந்த போது பேத்தி அனுப்பிரியா பேசமாட்டாள். வாடி ராசாத்தி என்று கை நீட்டி கூப்பிடும் போது ஓடிவருவாள், மடியில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். ராகத்தோடு தாலாட்டு பாடுவதிலும் குழந்தையை தூங்க வைப்பதிலும் தசரதன் எக்ஸ்பெர்ட். அதை புரிந்துக் கொண்ட மருமகள் ஊர்மிளா, மாமா அப்படியே அவளை தூங்க வைத்திடுங்க என்று கூட பலமுறை சொல்லி இருக்கிறாள். இருந்தாலும் சண்டை மூண்டு மனவலியோடு தான், கணவன் மனைவி இரண்டு பேரும் ஊர் திரும்பினார்கள். மருமகள் குணமறிந்து மாமியார் சுமத்திரா சட்டென்று வாய் விட்டிட மாட்டாள். இவர் தான் நெஞ்சு பொறுக்காமல் சாடுவார்.

இப்போது, தாத்தா ‘க்கத’ என்று சொல்லி ஓடி வந்து பக்கத்தில் படுத்துக் கொண்டு மழலையில் கதை கேட்கவும், கதையாடி ராசாத்தி. . பாப்பாவுக்கு என்ன கதை வேணும் என்று சந்தோஷித்து அவர் கேட்க, பாப்பாக்கு ‘சிஞ்ஙம் க்கத’ என்று பதிலுரைப்பது மனதை கொள்ளை கொண்டு சோகத்தை மறக்கடிக்கும். சிங்கம் கதை சொல்லி அவ்வளவு தான் கதை முடிந்தது என்று முடிக்கவும், ‘யான க்கத’ என்று பிரயாசை படும் போது ஆசையாக அணைத்து கடித்து தான் முத்தமிடுவார். இப்போ வந்து மூன்று மாதங்களில் கொஞ்சம் கொஞ்சம் பேச்சு பழக்கம் வருகிறது. இந்த மழலையை நினைத்து தசரதனும் சுமத்திராவும் கொஞ்சி மகிழ்ந்து பொழுதை கழிக்கின்ற வேளையில் சண்டை வந்து விட்டது.

தமிழ் வருடப்பிறப்பின் போது ஊர்மிளா ஏனோ தானோ என்று செய்தாள். குறை சொல்லி கோபப்பட்டார். எனக்கு அவ்வளவு தான் தெரியும், அதை சகித்துக் கொண்டு தான் இருக்கனும் என்று எரிந்து விழுந்தாள்.

எம் பொண்ணு அமெரிக்காவில் இருந்துக் கொண்டு என்னென்ன செய்யனும்.? எப்படி செய்யனும்.? என்று போனில் கேட்டு கேட்டு செய்கிறாள், ரெண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அதிலேயும் ஒரு ஆறுமாச கைகுழந்தையை வைத்துக் கொண்டு, உதவி ஒத்தாசைக்கு ஆள் இல்லாம பிரம்மாதமா செய்றாள். உனக்கு, நாங்கள் பக்கத்தில் இருக்கிறோம், தெரியாததைக் கேட்டு செய்வதெற்கென்ன, அதற்கு கௌரவம் இடம் கொடுக்கலைன்னா உன்னை பெத்தவ கிட்ட கேட்டு செய்யறது தானே என்றார்,

உங்க பொண்ணோடு என்னை கம்பேர் பண்ணி பேசாதீங்க, நான் வேற, அபர்ணா வேற, நான் எதற்கு அபர்ணா போல இருக்கனும்.,? நான் இப்படித்தான் இருப்பேன்.,! யாருக்காகவும் எதுக்காகவும் நான் மாறனுங்கிற அவசியம் இல்லை. எப்போ பார்த்தாலும் அபர்ணா அபர்ணா-ன்னு சொல்லி சொல்லி அபர்ணா பேர்ல எனக்கு வெறுப்புத்தான் வருது என்றாள்.

ஓஹோ. . அவ்வளவு ஆச்சுதா..? நேற்று வரையில் அக்கா அக்கா என்று சொல்லி வந்த நீ. . இப்போ அவ பெயரை சொல்லுகிற அளவில் வார்த்தை தடுப்பு ஏற்பட்டுச்சா . .

இந்த தடுப்பு வெடுப்புன்னு பேசற வேலை எல்லாம் இங்க வேண்டாம் உங்களுக்கு உங்க பொண்ணு ஒசத்தின்னா பேசாம அமெரிக்காவுக்கு போக வேண்டியது தானே . .

தப்பு தான், உன் வீட்டுக்கு வரலாமா என்று உன்னிடம் கேட்காமல் உன் வீட்டுக்கு வந்தது தப்பு தான். மரியாதை தெரியாத மதிக்கத் தெரியாத உன்னிடம் பேச்சு வச்சுக்கிறது தப்பு தான். மேற்கொண்டு வார்த்தையை வளர்த்தாதே. . என்று பதிலுக்கு கத்திவிட்டு வெளியே சென்று விட்டார்.

ஊர்மிளா இதுநாள் வரையில் பெங்களூருக்கு வாங்க என்று இருவரையும் கூப்பிட்டதில்லை, வந்து ஊர் திரும்பினாலும் ஏன் ஊருக்கு போறீங்க இங்கேயே எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னதுமில்லை. மகனுக்காகவும் பேத்திக்காகவும் தாம் உறவு. சொந்தத்தில் பெண் எடுத்ததை நினைத்து வீட்டுக்குள்ளேயே இருந்தபடி அழுது கொண்டிருந்தாள் சுமத்திரா.

அமெரிக்காவுக்கு போக வேண்டுமாம் அமெரிக்காவுக்கு., அமெரிக்கா என்ன பக்கத்தில இருக்கிற அண்ணாமலை நகரா.,? நினைச்ச நேரத்துக்கு போய் வர . . அவர் உள்ளம் வெதும்பியது.

தசரதன் வேலை பார்த்தது அறநிலையத் துறையில். அவர் மனைவி சுமத்திரா வேலைப் பார்த்தது சமூகநலத் துறையில். பார்த்த உத்தியோகத்திலும் சரி, ஜென்னித்த ஜாதகத்திலும் சரி வெளிநாடு செல்லும் யோகம் இரண்டு பேருக்குமே இல்லை. இருந்தாலும் இருவரும் ரிட்டையர்டு ஆன பிறகு அமெரிக்கா சென்று வந்தார்கள்.

ஐ.டி.கம்பனி புராஜக்ட்டுக்காக மாப்பிள்ளை யு.எஸ். செல்ல, கூடவே தனது இரண்டரை வயது மகனுடன் அபர்ணாவும் சென்றாள். சென்ற ஏழு மாதத்தில் கருத்தரிக்கவே அவளின் பேறு காலத்தின் போது உடனிருக்க வேண்டி மாப்பிள்ளையும் மகளும் கேட்டுக் கொள்ள, அவசரக்கதியில் பாஸ்போர்ட், விஸா எடுத்து இருவரும் அமெரிக்காவும் சென்று ஐந்து மாதமும் தங்கி வந்தாயிற்று.

மகள் வயிற்று பேரனின் பிரிவு தாக்கத்தை மகன் வயிற்று பேத்தி அனுப்பிரியா தணித்து வைத்தாள். தசரதன் காலையில் பிரஷருக்கும், சுகருக்கும்., இரவில் விட்டமின் மாத்திரைகளும் போட்டுக் கொள்வதுண்டு. அன்றாடம் இதைக் கவனிக்கும் பேத்தி தாத்தா ‘மாத்த’ என்று சொல்லி கை விரலைப் பிடித்து இழுத்துச் சென்று மாத்திரையை எடுக்கச் சொல்லி, இருக்கும் இடத்தை காண்பிப்பதும், பாட்டில் திறந்து மாத்திரையை எடுத்ததும் ‘பாப்பா மாத்த’ என்று கேட்டு அதை வாங்கிக் கொண்டு தாத்தா ‘ஒக்கி’ என்று தரையை காட்டி உட்காரச் சொல்லி, தாத்தாவின் வாயில் போடுவதும், மாத்திரையை விழுங்கியதும், நெஞ்சை தடவிக் கொடுத்து, ‘அவ்லலான்’ என்று சொல்லுகிற அழகும் சாமர்த்தியமும் ஆஹா. .இந்த ஜென்மத்துக்கு இது போதுமே. . என்று மனதை தேற்றிக் கொள்வார். இதை ஆயுசுக்கும் அனுபவிக்க மருமகள் விடமாட்டாள். . . இருந்தும் இல்லாமல் இருக்க ஏன் உயிர் வாழ வேண்டும் கொரோனா சாவு கணக்கில் தனது உயிரும் சேராதா. . என்று ஆதங்கம் கொள்வார்.

தசரதன் சுமத்திராவுக்கு ஊர்மிளா, நெருங்கின சொந்தமும் இல்லை, தூரத்து சொந்தமும் இல்லை. ஆனாலும் சொந்தக்கார பொண்ணு. அக்கா அபர்ணா கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற லெட்சுமணன், ஊர்மிளாவை பார்க்க, ஊர்மிளாவும் லெட்சுமணனை பார்க்க, ராமாயண கதையாயிற்று. இருவருக்குள்ளும் முளைத்த காதல் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாது.

பி.இ., முடித்த லெட்சுமணன், மைசூரில் எம்.பி.ஏ., படித்துக் கொண்டும், பி.டெக்., முடித்த ஊர்மிளா சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த விஷயம் தெரியாமல் ஊர்மிளா வீட்டில் வரன் தேட, ஊர்மிளாவால் தூண்டப்பட்ட லெட்சுமனன், தசரதனிடம் தமது விருப்பத்தை சொல்ல, நடக்க முடியாத சாத்தியக் கூறுகளை தசரதன் சுமித்திரா இருவரும் அவன் முன் நிறுத்தினார்கள்.

நான் உங்களை கட்டாயப் படுத்தவில்லை. அவள் எனக்கு மனைவியாக வந்தால் என் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். என் விருப்பத்தை சொல்லி விட்டேன் பிறகு உங்கள் இஷ்டம் என்றான் லெட்சுமணன். மகனின் ஆசைக்காக இருவரும் ஊர்மிளாவை பெண் கேட்டு திருமணத்தை நடத்தி வைத்தார்கள். லெட்சுமணன், எம்.பி.ஏ., முடித்து பெங்களுரூக்கு வேலைக்கு சென்றதும் தனிக் குடித்தனம் உருவானது. ஊர்மிளா வேலைக்கு செல்வதில்லை.

ஆசைப் பட்ட இதயத்துக்கு நாளடைவில் ஊர்மிளாவின் குணபேதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. அவளின் அடங்காமையும், பிடிவாதமும் அவனின் நிம்மதியை குலைத்தது. குடும்பத்துக்குள் பிரச்சினை, சண்டை, விரோதம் எதுவும் வேண்டாமென்று அமைதியான தலையாட்டி பொம்மையானான்.

ஏண்டா. . இப்படி,.! என்று பெற்றோர்கள் கேட்டால் எனக்கு வேற வழித்தெரியலை. என்ன செய்யலாம் சொல்லுங்க என்று எதிர்க்கேள்வியுடன் சம்பாஷனையை முடித்துக் கொள்வான்.

போகப் போகப் எல்லாம் சரியாயிடும், சண்டைப் போடு கைநீட்டி அடிக்காதே, வீட்டை விட்டு வெளியே போன்னு விரட்டாதே, நீ கஷ்டத்தில் பிறந்து வளர்ந்தவன், அவள் செல்வ செழிப்பில் பிறந்தவள் அப்படித்தான் இருப்பாள், ஒரு குழந்தை பிறந்தால் கவலை எல்லாம் பறந்து விடும் கலங்காதே என்று சொல்லி மகனை தேற்றுவாள் சுமத்திரா.

அப்படிப் பட்ட பொறுமைசாலியான சுமத்திரா, நாம இங்க இருக்கிறது பிடிக்காமல் தான் அவள் ஏதாவது சாக்கு கிடைக்குமா என்று சண்டை வளர்க்கிறாள். நாம இல்லைன்னா அவ. . எல்லாத்தையும் ஒழுங்காத்தான் செய்றா. வக்கனையா பண்டிகை எல்லாம் கொண்டாடுறா, இருக்கிற போதுதான் கிறுக்குத் தனம் பண்றா . . எப்போ நாம வாயை திறப்போம், அதிலிருந்து வார்த்தையை பிடுங்கி சண்டை போடலாம் என்று கங்கனம் கட்டிகிட்டு நிற்கிறாள் என்றாள்.

நீ. . ஏம்மா இப்போ எரியற நெருப்பில நெய்யை ஊத்துறே.,

அப்பவை இப்படி மனசு கலங்க வச்சுட்டியே. . அப்படி அவரு என்ன கேட்காததை கேட்டிட்டாரு. . குழந்தை பேர்ல இருக்கிற அக்கறையால சுருக்குன்னு அறிவு இருக்கான்னு கேட்டிட்டாரு, இத வயசில சின்னவங்களா இருக்கிற நீங்க பொறுத்து போகக்கூடாதா.,? இதைக் கூட கண்டிக்கலைன்னா வீட்டுக்கு பெரியவரா இருக்கிறதில அர்த்தமில்லை.

அப்பா பேசினது தப்புத் தானே. . இதே அத்தானைப் பார்த்து அறிவு இருக்கா என்று கேட்பார்களா . . மருமகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமுன்னு நீங்க புரிஞ்சுக்கலை. . அப்பாவை நேரிடையாக குத்தம் சொல்ல முடியாமல் அம்மாவையும் சேர்த்து பொதுப்படையாக பேசினான் லெட்சுமணன்.

இது வரையில் மாப்பிள்ளை அப்பாவிடம் மரியாதையாகத் தான் நடந்துக்கிறாரு. அப்பாவை எதிர்த்து ஒரு சொல் சொன்னதில்லை. அப்படியே ஏதாலும் வருத்தம் இருந்துசுன்னா கூட மனஸ்தாபம் வேண்டாமுன்னு கம்முன்னு போய்விடுவார். உம் பொண்டாட்டி போல திருப்பிக்கிட்டு உங்களுக்கு அறிவு இருக்கான்னு பதில் பேச்சு பேசமாட்டார்.

விடு சுமத்திரா, நம்ம நேரம் பேச்சு வாங்கி கட்டிக்கிட்டு, இங்க சோறு திங்க வேண்டியதிருக்கு. .

மகன் வீட்டுக்கு வந்தோமா, புள்ளைங்களை பார்த்தோமா பிரச்சினை ஏதும் இல்லாமல், ஊர் திரும்பினோமா என்று இருங்கள், எல்லாம் சரியாயிடும் என்று சொல்லி புருஷனை அமைதியாக இருக்கச் சொன்னாள்.

ரிடைய்ர்டு ஆன நம்ம இருண்டு பேருக்கும் பேரன் பேத்திகள் தானே உலகம். பேத்திகிட்ட கொஞ்சி விளையாடி பொழுதை கழிக்கிற சுகமே அலாதியானது தானே. . அதை விட வேறு வேலை என்ன இருக்கு.,? பெத்த புள்ளைங்களை விட பேர புள்ளைங்க தான் ஒஸ்தி தெரியுமில்ல. .

எல்லாருக்கும் எல்லாமும் தெரியும். உங்க மருமகளுக்கும் அது தெரியும். அவ புள்ள அவளை விட்டிட்டு எங்கே நம்மிடம் ஒட்டிக் கொள்ளுமோ என்கிற பயம் தாம், அவ நம்மள வெறுக்கிறத்துக்கு காரணம்.

பத்து மாத பந்தத்தை யாராலேயும் எப்போதும் பிரிக்க முடியாது. எல்லாம் தெரிந்தவள் போல பேசுறா. . இதை யோசிச்சு பார்க்க அவளுக்கு அறிவு இல்லையா..?

நீங்க. எதையும் யோசிக்காம பேசினதாலே இப்போ அவகிட்ட வாங்கி கட்டிக்கிட்டீங்க, திரும்பவும் ஏன் பொல்லாப்பை தேடுறீங்க . . முதல்ல நீங்க உங்க வாயை மூடிகிட்டு இருங்க, எந்த சண்டையும் வராது.

இப்போ உள்ள சண்டைக்கு காரணம் இதுதான் . . .,

இரண்டு நாள் முந்தைய மதிய வேளையில் ஊர்மிளா வழமைப் போல போராட்டத்துடன் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். ஒரு மாசம் முன்பு வரை கையில் மொபைலை வைத்துக் கொண்டு, ரைம்ஸ் வீடியோவுடன் சாப்பாட்டை விழுங்கிக் கொண்டிருந்த அனுப்பிரியா, கொஞ்சம் முன்னேற்றமாக, கதை கேட்ட படியும், டிராயிங்க் கிறுக்கிய படியும் சாப்பிடலானாள். ஒரு அன்னவெட்டி சாதத்தை ஒரு மணி நேரமாக திட்டி திட்டி மல்லுக்கட்டி ஊட்டி விடுவாள். திட்டுவதும் கிள்ளுவதுமான துன்புறுத்தல் குழந்தைக்கு வலித்ததோ இல்லையோ தசரதனுக்கு வலித்தது.

போராட்ட முடிவில் குழந்தை சரியாக சாப்பிட வில்லை. பெற்ற மனம் பரிதவிக்க, தோல்வி கண்ட முயற்சி துவண்டு விழ, எரிச்சலுடன் போய் படுத்துக் கொண்டாள். அவளின் தாக்கம் குழந்தைக்கு தெரியவில்லை. அழுது கொண்டே தாயின் பின்னால் சென்று அரவணைப்பு தேடி, . ஓடிப்போய் காலை கட்டிக்கொண்டது. மகளை அலட்சியப் படுத்திய ஊர்மிளா, போ. . எங்கிட்ட வராதே போய் தொலை, உனக்குத்தான் சலுகைக் கேட்க ஆள் இருக்குள்ள அங்கேயே போ. .என்று கத்தி கூச்சலிட்டு குழந்தையை அறைக்கு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டாள். லெட்சுமணன் இவை எதையும் கண்டுக்கொள்ளாமல் அறைக்குள்ளேயே இருந்தான்.

அமைதிக்காத்த தசரதனுக்கு கோபம் தன்னை மீறி வந்து விட்டது. அந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன தெரியும், போ. .போ. .ன்னு விரட்டறதுமில்லாமல் வெளியே தள்ளி விடறீங்களே . . உங்களுக்கு அறிவு இருக்கா., என்று இருவரிடமும் காட்டமாக கத்திவிட்டு குழந்தையை தூக்கி சமாதானப் படுத்த முயல, அது உடலை வளைத்து கீழே இறங்கி அறைப்பக்கம் ஓடி கதவுக்கு வெளியிலேயே ம்மா. . ம்மான்னு கேவி அழுதது பரிதாபமாக இருந்தது.

குழந்தக்கு பிடித்ததை செய்து ஊட்டுன்னா ஊட்டறது இல்லை, பேச்சு மட்டும் முழநீளத்துக்கு முழங்குது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அறையை விட்டு விர்றென வெளியே வந்த ஊர்மிளா. . .

யாருக்கு, எனக்கா அறிவில்லை., நான் என்ன ஒண்ணும் தெரியாத முட்டுக்கட்டையா.? எம். . புள்ளயை நான் திட்டுவேன், அடிப்பேன், உதைப்பேன் அதை பத்தி உங்களுக்கென்ன,? என்று கேட்டாள்.

கொழந்தை சாப்பிடல்லன்னு இப்படியா ராட்சசி கோலம் கட்டுவா. .

ஆமாம் நான் ராட்சசி தான் அப்படித்தான் நடந்துக்குவேன், உங்களுக்கு ‘அறிவிருந்தால்’ நீங்கள் ஊட்டிப் பாருங்கள் . . அப்போது தெரியும் எங் கஷ்டம்.

தசரதன், மட்டுமல்ல சுமத்திராவும் அதிர்ந்து போனாள்.

நான் என்ன ஒண்ணுமில்லாத குடும்பத்திலிருந்தா வந்திருக்கேன், எங் குடும்பம் என்ன பிச்சைக்கார குடும்பமா.,? தொட்டத்துக் கெல்லாம் குத்தம் சொல்றீங்க. . இந்த வீட்டில நான் யாரு.,? ஒண்ணும் பேசாமலிருக்க நான் என்ன உங்க அடிமையா. . என்று காட்டமாகக் கத்தினாள்.

ஊர்மிளாவின் எதிர்வினைப் பேச்சால் ஆத்திரம் கொண்ட லெட்சுமணன், வயசுல பெரியவங்க அவங்க பேசினால் பொறுத்து போகாமல் பதிலுக்கு நீயும் அறிவில்லையா என்று கேட்பியா. . ஒழுங்கு மரியாதையாக எங்கப்பாவிடம் மன்னிப்பு கேள் என்றான்.

நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும், முடியாது. நான் எந்த தப்பும் பண்ணலை, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. .

கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்கு வாதம் வளர்ந்தது. மன்னிப்பு கேட்டு இங்கே இருக்கிறதென்றால் இரு. . இல்லைன்னா ஓடிபோய் விடு. .என்று கோபமாக கத்தி ஊர்மிளாவை அடித்து தள்ளினான் லெட்சுமணன்.

சாப்பிட உட்கார்ந்த தசரதன் பிசைந்த சாதத்தை அப்படியே வைத்து விட்டு எழுந்தார். கையை கழுவிக்கொண்டு வெளியே வரந்தாவில் வந்து உட்கார்ந்து விட்டார். மருமகளின் அவமரியாதை பேச்சு நெஞ்சை அறுத்தது. நா. . தழு தழுக்க. உள்ளம் குமுறியது. எந்த வித சமாதானத்தையும் ஏற்காமல் மனசு துடித்தது.

தந்தையின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு இருப்பதை அறிந்த லெட்சுமணன் துணுக்குற்றான்.

சாரிப்பா. . இப்படி நடக்குமின்னு நான் எதிர்ப்பார்க்கவில்லை. நான் தான் ஆரம்பத்திலிருந்து சொல்றேனல்ல, அவகிட்ட பேச்சு கொடுக்காதீங்க, அவள் அப்படித்தான் . . எதெற்கெடுத்தாலும் ரகளை கட்டுவாள். . என்ன சொன்னாலும் திருந்துறாற் போல இல்லை.

மாமனாரிடம் கை ஆட்டி பேசுவது, மாமனாரை எதிர்த்து பேசுவதெல்லாம் இந்த வீட்டில் தான் நடக்குது. அவ கிட்ட கைகட்டி வாய் பொத்தி சாப்பிடனுமின்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. லெட்சுமன். . எங்களை கொண்டுப் போய் ஊருல விட்டிடு., நாங்கள் ஊருக்கு போய் விடுகிறோம் என்றார்.

சொல்லும் போது பேசமுடியாமல் தவித்தார். முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் அழுகையாக வெளியேறியது. அதை கண்டு தந்தையை கட்டிப்பிடித்து அவன் அழுதது கல் மனதையும் கரையச் செய்யும். சிங்கமும், சிங்கக்குட்டியும் அழுததை காண சகிக்காத ஊர்மிளா மன்னிப்புக் கேட்டாள்.

இதன் பிறகு இரண்டு நாட்கள் யாரும் சரிவர பேசிக்கொள்வதில்லை, வயிற்றுக்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லை. தமது மரியாதையை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் மருமகளிடம் மரியாதையுடன் பேச வேண்டும் என்று முடிவெடுத்து தான், அனு அம்மா உங்களுக்கு . . அனு அம்மா உங்களை. . அனு அம்மா நீங்கள் . . என்ற வார்த்தை பிரயோகங்கள் உருவாகின.

அப்பா, நீங்கள் பேச்சுக்கு பேச்சு அவளை கேவலப்படுத்துறதா நினைக்கிறா, அவதான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டிட்டாளில்ல, பிறகு ஏன் நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள்.,?

இது கேவலப் படுத்தறதா அர்த்தமில்லை. பதிலுக்கு பதில், பேச்சுக்கு பேச்சு என்று இருப்பவளிடம், நான் பெயர் சொல்லி கூப்பிட போய் பதிலுக்கு என்ன தசரதா என்று கேட்டிடக் கூடாதல்லவா., அதனால் தான் என் மரியாதையை நான் காப்பாற்றிக் கொள்கிறேன். உன் நிம்மதி, உன் சந்தோஷம் கூட அதில் அடங்கி இருக்கு. ஆழ்ந்து சிந்தித்துப் பாரு உனக்கு அது புரியும்.

நீங்க ஞாயமா பேசறதா நினைத்து பிரச்சினையை உண்டு பண்ணுறீங்க.

வேண்டாம்ப்பா. . நான் எதுவும் பேசலை. நான் அம்மாவை அழைச்சுட்டு ஊருக்கு போயிடுறேன். இடம் புரியாமல் மொழித்தெரியாமல் இங்கே இருப்பதில் வீண் வம்பு தான் வந்து சேருது. பாழாய்ப் போன கொரோனாவால வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடக்கிறதாலே வெந்ததை தின்னுட்டு வந்ததை உளரி கொட்டி, உங்கக்கிட்ட வாங்கிக் கட்டிக்கிறேன்.

பஸ் கிடையாது, டிரெயின் கிடையாது, பிளைட்டும் இல்லாமல் எப்படி சிதம்பரம் போய் சேர்வது. உங்களை ஊருக்கு அனுப்பி வைக்க எனக்கு துளியும் இஷ்டம் கிடையாது. ஊருக்குப் போய் கொரோனா பீதியால குறு குறுன்னு இருக்கிறதை விட இங்கேயே இருந்து விடுங்கள், அங்கு யார் இருக்கிறார்கள் உங்களை கவனித்துக் கொள்ள.,

எனக்கு அம்மா இருக்கிறாள், அம்மாவுக்கு நான் இருக்கிறேன். வேறு யாரு வேணும்.,? இ.பாஸ் எடுத்து உன் காரில கொண்டுப்போய் எங்களை விட்டிடு அப்போது தான் நம் எல்லோருக்கும் மரியாதை கிடைக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *