பதியன்ரோஜா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 6,004 
 

திருவள்ளூர் செல்லும் பாதையில் ஆவடியைத் தாண்டி, சென்றுகொண்டிருந்தது அந்த கார்.

மிகுந்த சந்தோஷத்துடன் அப்பாவின் மடியில் அமர்ந்திருந்தாள் ஆறு வயது பாரதி, அம்மா சுந்தரி காரை செலுத்திக்கொண்டிருந்தாள்.

“நான் வேகமா போறேன்னு ட்ரைவ் பண்றே சரி, ஆனா ரொம்ப ஸ்லோவா போற, பின்னாடி வர்றவனெல்லாம் ஹாரனடிக்கிறதோடல்லாம, நம்மளை க்ராஸ் பண்ணும்போது என்னை ஒரு மாதிரி பாக்கறான், கொஞ்சம் வேகமா போ” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் சரவணன்.

தார் ரோடிலிருந்து பிரிந்து சென்ற கார் சற்று வேகமெடுத்து ஒரு அரை கிலோமீட்டர் சென்று மரங்களடர்ந்த பகுதியில் பெரிய காம்பௌண்ட் கேட் அருகில் நின்றது.

அருகிலிருந்த கட்டிடத்தை பார்த்து “ஸ்கூல் பெரிசா இருக்குல்ல” பிரமிப்புடன் சொன்னான் சரவணன்.

“நல்லா விசாரிச்சிட்டேன், இந்த ஏரியாலயே இதான் பெஸ்ட் ஸ்கூல், சீட் கிடைக்கறதே கஷ்டமாம், வாங்க போகலாம்” என்றாள் சுந்தரி.

“ஆமா, இவ டெய்லி எப்படி ஸ்கூலுக்கு வருவா ! பஸ்லயா?” என்றான் சரவணன் காரை லாக் செய்து.

“தெரியலையே கேட்போம்” என்றாள் சுந்தரி.

“எனக்கென்னவோ இதெல்லாம் சரியாவரும்னு தோணலை” என்றான் சரவணன் நம்பிக்கையில்லாமல்

“ஆரம்பிச்சிட்டீங்களா, வாங்க போகலாம்?” என்று அவனை அதட்டினாள்.

“ஸ்கூல் யாருக்கு?” என்றாள் பாரதி.

“உனக்குத்தான்,” என்றாள் சுந்தரி.

“அப்ப இப்ப படிக்கிற ஸ்கூல், ‘ப்ரெட்டி ஏஞ்சல்ஸ்’?” ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்தாள்

“உன்னை மாதிரி ப்ரெட்டி ஏஞ்சல்ஸெல்லாம் இங்க தான் படிப்பாங்களாம், பேசாம வா” என்று விடுவிடுவென நடந்த சுந்தரியை புரியாமல் பார்த்தாள் பாரதி.

அவர்கள் காம்பௌண்டு கேட்டை திறந்து உள்ளே சென்ற போது முகப்பில் இருந்த பகுதி வாலிபால் கிரவுண்டு போன்றிருந்தது. அதில் ஸ்டம்புகள் வைத்து குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கிரவுண்டை சுற்றி வேலியிட்டு, ஆங்காங்கே பென்சுகள் போடப்பட்டிருந்தது. நடைபாதையில் நிழலுக்காக வைக்கப்பட்டிருந்த மரங்களையும், அவற்றிலிருந்து தாரை தாரையாக விழுந்த மஞ்சள் நிற பூக்களையும் ரசித்தபடி நடந்து அலுவலகத்தை அடைந்தனர்.

அலுவலகத்தில் இருந்தவரிடம், “ எக்ஸ்க்யூஸ்மீ சார், குழந்தையை ஸ்கூல்ல சேர்க்கணும்” என்றாள்.

அவர், கவனம் கலைந்து “ஃப்ர்ஸ்ட் ஸ்டாண்டர்டா?” என்றார் பாரதியை கண்களால் அளவெடுத்து.

“இல்லை செகண்ட்” என்றாள் சுந்தரி.

“ஆக்சுவலா ப்ரி கேஜி தான் சேர்த்துக்கிறது, ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்ன்னாலே மேம் கோவிச்சுக்குவாங்க, செகண்ட் ஸ்டாண்டர்ட் டைரக்டா சேர்த்துக்கிறதில்லை, நீங்க வேணுன்னா எதுக்கும் ப்ரின்சிபலைப் பாருங்க” என்றார்.

சரவணன், “அவரே சேர்த்துக்க மாட்டோம்னு சொல்லிட்டார்ல வா சுந்தரி போகலாம்” என்றான் அவசர அவசரமாக.

“பேசாம வாங்க” என்றவள் அலுவலரிடம் திரும்பி “கொஞ்சம் எங்களுக்கு ப்ரின்சிபல் ரூமை காட்டறிங்களா” என்றாள்.

“வாங்க”அவர் முன்னே செல்ல, சுந்தரி விடுவிடுவென அவரை தொடர்ந்தாள்.

அவர் முதலில் உள்ளே சென்று ப்ரின்சிபலிடம் விஷயத்தை சொன்னார். பின்பு இவர்களை அழைத்தார். உள்ளே சென்றவர்களிடம், ப்ரின்சிபல், “சாரிம்மா டைரக்டா செகண்ட் ஸ்டான்டர்ட் சேக்கிறதில்லைம்மா” என்று முகத்திலடித்தார்போல் சொன்னவர்,” அவளை சிறிது நேரம் உற்றுப் பார்த்து, புருவம் உயர்த்தி, “நீங்க.. நீ சுந்தரி?” என்றார் ஆச்சரியத்துடன்.

அவள் சிறிது யோசித்து, “ஆமாம் மேம், உங்க ஸ்டூடன்ட் தான்” என்றாள்,
அவர் இன்னமும் ஞாபகம் வைத்துக்கொண்டிருந்த மகிழ்ச்சியில்,

“ எங்க சயின்ஸ் மிஸ்” என்று சரவணனிடம் அறிமுகப்படுத்தினாள்,

“ நீ கவர்மென்ட் ஸ்கூல்லல்ல படிச்சே?” என்றான் சரவணன் சந்தேகத்துடன் அவளைப் பார்த்து.

பிரின்சிபல், வாங்க! ப்ளீஸ் உக்காருங்க என்று எதிரில் இருந்த நாற்காலிகளைக் காட்டி, அவர்கள் அமர்ந்தவுடன் , இங்க ப்ரிசின்பல் போஸ்ட் தற்ரேன்னாங்க, வி.ஆர்.எஸ் வாங்கிட்டு வந்துட்டேன்” என்றவர் “அப்ப இது உன் டாட்டரா? உன் பேர் என்ன?” என்றார் குழந்தையைப் பார்த்து.

“பாரதி” என்றாள் பாரதி.

“ குட், சுந்தரி, இப்ப வந்தாரே அவர் கிட்ட போய் நான் சொன்னேன்னு சொல்லி அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிக்க, ஆமா உங்க வீடு பக்கத்தில தான?” என்றார் லேசான சந்தேகத்துடன்

“வில்லிவாக்கம் மேம்.” என்றாள் சுந்தரி.

“அப்ப இங்கேயிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் இருக்காது?”

சுந்தரி சற்றே தயங்கியவாறே “பன்னெண்டு கிலோமீட்டர் மேம்”

“அப்படின்னா, ஹாஸ்டலுக்குன்னு தனி ஃபார்ம் இருக்கு அதுவும் மறக்காம வாங்கிக்க”

“இல்லைங்க மேடம் ஹாஸ்டல்லாம் வேண்டாம்” என்றான் சரவணன்.

முகம் சுளித்த பாரதி “ஹாஸ்டல்லாம் வேண்டாம்பா” என்றாள்.

“நோ நோ பத்து கிலோமீட்டர்க்கு மேலன்னா ஹாஸ்டல் கட்டாயம், சாரி இந்த ஸ்கூலுக்குன்னு ஒரு நேம் இருக்கு, தொடர்ந்து நாலு வருஷமா சென்ட் பர்சென்ட் ரிசல்ட் தெரியும்ல? எல்லா ரூல்சையும் உங்களுக்காக மாத்த முடியாது” என்றார் திட்டவட்டமாக.

“தேங்க் யு மேம், கட்டாயம் ரெண்டு ஃபார்மும் வாங்கிக்கறோம்” என்று அவரிடம் விடைபெற்று, அலுவலகத்தில் இரண்டு ஃபாரம்களையும் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தனர்

அதுவரை ஏதோ தீர்க்கமான சிந்தனையிலிருந்த சுந்தரியைப் பார்த்து சரவணன், “இப்ப நான் ட்ரைவ் ப்ண்ணட்டுமா?” என்றான்.

“ம்” என்று சிந்தனையிலிருந்து விடுபடாமல் அவனிடம் கார் சாவியை தந்தாள்.

“என்ன ஏதோ பலமான சிந்தனை?” என்று அவன் காருக்குள் அமர்ந்து லாக்கை விடுவித்தான்.

“ஹாஸ்டல்னு சொன்னாங்களே அதான்” என்று சுந்தரி அவன் அருகில் அமர்ந்தாள்.

பாரதி நேரே பின் சீட்டிற்கு சென்று தனியாக அமர்ந்துகொண்டாள்.

“அப்ப வேண்டாங்கறியா” என்று காரை ஸ்டார்ட் செய்தான் சரவணன்.

“ இல்லைங்க, ரொம்ப நல்ல ஸ்கூல் சீட் கிடைக்கிறதே கஷ்டம்” என்று மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ஒரு இருபது நிமிடத்தில் வீட்டை அடைந்தனர். அதுவரை பாரதி இருவரிடமும் எதுவும் பேசவில்லை.

வீட்டிற்குள் நுழைந்தவுடன், செருப்புகளை கழட்டி வீசிய பாரதி நேரே பால்கனிக்கு சென்று தரையில் அமர்ந்து, முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“ஏய் என்னாச்சு” என்ற சரவணன்,” சுந்தரி, பாரதி மூட் அவுட்ல இருக்கா பார்த்து கூட்டிட்டு வா ” என்றான்.

சுந்தரி பால்கனிக்கு சென்று ஒன்றும் புரியாதவள் போல் முகத்தை வைத்துக்கொண்டு அவள் அருகில் குனிந்து “என்னாச்சு பாரதி” என்றாள்

“மம்மி, எனக்கு இந்த ஸ்கூல் வேணாம், மம்மி?” என்றாள் அவள் கழுத்தை ஆசையாக கட்டிக்கொண்டு.

“ஏன், இந்த ஸ்கூலுக்கு என்ன?” என்றாள் சிறிது குரலை உயர்த்தி.

“இந்த ஸ்கூல்ல உன்னையும், டாடியையும் விட்டுட்டு அங்கியே இருக்கணும் அதனால வேணாம் மம்மி ப்ளீஸ்” என்றாள் மெலிதான விசும்பலுடன்.

சுந்தரி ” அதெல்லாம் முடியாது. முகம் கழுவிட்டு, சாப்பிட வா.” என்றாள் முகத்தை சற்று கடுமையாக வைத்துக்கொண்டு.

“ஓண்ணும் வேணாம்” என்று கூறி கைகளை விடுவித்து வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டாள்.

சிறிது நேரம் சென்றால் எல்லாம் சரியாகிவிடுமென நினைத்து சுந்தரி உள்ளே சென்றாள்.

எவ்வளவு நேரமாகியும் உள்ளே வருவதற்கான அறிகுறியே இல்லை.

பொறுமையிழந்த சரவணன் ” என்னவாம், கேட்டியா? ” என்றான்.

“இந்த ஸ்கூல் வேண்டாமாம் இங்க ஹாஸ்டல்ல தங்கி படிக்கணுமாம்”

“நானும் அதத்தான்சொல்றேன்“

“அப்பா பொண்ணு ஒரே பிடிவாதம் தான், அப்ப அவ கரியர்”

“ஆமாம் பெரிய கரியர், ரெண்டாம் கிளாசுக்கு” என்றான் ஏளனத்துடன்.

“இப்பல்லாம் அந்த காலம் மாதிரி இல்லைங்க, ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேன்றீங்க, அவளை விட்டு பிரியணும்னு எனக்கு மட்டும் ஆசையா என்ன? நானும் ரத்தமும் சதையுமா இருக்கிற மனுஷிதான?” என்றாள் சற்றே கோபமாக.

அவன் மேலும் பிரச்சினையை பெரிதாகக விரும்பவில்லை “ சரி எதையாவது சொல்லி கூட்டிட்டு வரதுதானே ”

“வரமாட்டாளாம்”

நீண்ட நேரத்திற்கு பிறகு பால்கனியிலிருந்து அழைப்பு வந்தது. இருவரும் ஓடிச்சென்று அவளைத் தூக்கிக்கொண்டு வந்து டைனிங் டேபிள் அருகிலிருந்த நாற்காலியில் அமரவைத்தனர்.

“நான் ஒண்ணு சொன்னா கேப்பியா டாடி”

“எப்ப பாத்தாலும் டாடி! டாடி! எல்லாம் இந்த டாடி செல்லம் தான், மொதல்ல சாப்பிட சொல்லுங்க உங்க பொண்ணை” வெடித்தாள் சுந்தரி.

“மொதல்ல சாப்புடும்மா செல்லம்ல, அப்புறம் தான் பேச்சுவர்த்தை”

“ப்ராமிஸ்” என்றாள் தன் பிஞ்சு கரங்களை நீட்டி

“ப்ராமிஸ், கோல்கேட் எல்லாம்” என்று சுந்தரி இருவருக்கும் உணவு பரிமாறினாள். பாரதியும் அமைதியாக சாப்பிட்டாள். “சுந்தரி நீ சாப்பிடலை “ என்றான் சரவணன்
அவள் “ இல்லைங்க பக்கத்து வீட்டு ‘தனம்’ உடம்பு சரியில்லைன்னா போய் பாத்துட்டு வந்து பொறுமையா சாப்டுக்கறேன்” என்றாள்

சாப்பிட்டு முடிந்து, பாரதி ‘பெட்’டின் மீது அமர்ந்திருக்க இருவரும் தரையில் அவளைப் பார்க்குமாறு அமர்ந்துகொண்டனர். இப்போது அவளே ஆரம்பித்தாள்,

“சொல்லு டாடி நான் சொன்னா கேப்பியா?, ப்ளீஸ் டாடி” என்று கண்ணீருடன் மன்றாடினான்.

இதுவரை அவள் எதற்கும் இப்படி பிடிவாதம் பிடித்ததில்லை. அவனும் அவள் கேட்டு எதையுமே மறுத்ததில்லை.

“பாக்கலாம், இப்ப டாடி டிவில கிரிக்கெட் பாக்கப்போறேன், அம்மா ‘தனா’ ஆண்ட்டிக்கு உடம்பு சரியில்லைன்னாங்க, அவங்களைப் பாக்க போறாங்க. நீ பேசாம சமத்தா படுத்து தூங்கணும் சரியா!.” என்றான். பாரதி அரைமனதுடன் தூங்க சம்மதித்தாள். அவளை படுக்கவைத்து, இருவரும் அறையை விட்டு வெளியேறினர்.

ஒரு அறை மணி நேரத்தில் திரும்ப வந்த இருவரும் பாரதியின் இருபுரமும் அமர்ந்து கொண்டனர். அவன் ஏதோ பேச ஆரம்பிப்பதற்குள்,

“இந்த ‘தன’த்துகிட்ட ஏதாவது கேள்வி கேட்டா பொட்டில அடிச்சா மாதிரி பதில் சொல்வாங்க” என்றாள்.

“ஏன் என்னாச்சு?”

” நாங்க பேசிட்டிருக்கும்போது காலைல ஸ்கூலுக்கு போனதை பத்தி பேச்சு வந்தது, இந்தமாதிரி பாசத்தோட இருக்குற குழந்தைய ஹாஸ்டல்ல விடறதுக்கு, நீங்க தத்தெடுத்துருக்கவே வேணங்கறா?”

“அமா நீ தத்தெடுத்த புள்ளைன்னு ஊரெல்லாம் டமாரம் அடிச்சிட்டியா? யாருக்கும் எதுவும் தொ¢யக்கூடாதுன்னு தானே ஆறு மாச குழந்தைய தத்தெடுத்தோம், அதுக்கப்புறம் தானே இந்த புதுவீட்டுக்கும் வந்தோம், இனிமே அவ வந்தா உள்ளார சேக்காதே ” என்றான் சற்று கோபத்துடன்.

“சரி சரி கத்தாதீங்க முழிச்சிறப்போறா, ‘தனா’ சொல்றதுலயும் நியாயம் இருக்கத்தானே செய்யுது, அதான் யோசிக்கிறேன் ஒண்ணும் புரியலை” என்றாள், சிந்தனையிலிருந்து மீளாமல்.

“சில விஷயத்தில யோசிக்கவே கூடாது!” என்று, ஒரு முடிவுடன் உள்ளே சென்றவன், இரண்டு விண்ணப்ப படிவத்தையும் கொண்டுவந்து இரண்டாய், நாலாய், எட்டாய் கிழித்து ஜன்னல் வழியே வீசி எரிந்துவிட்டு விளக்கை அணைத்து ஓசைப்படாமல் பாரதியின் அருகில் அவள் மேல் படாமல் படுத்துக்கொண்டார்.

அப்போது திடீரென்று பாரதியின் கை அவர் மேல் படர்ந்தது. மெதுவாக அவர் மீது ஏறி படுத்துக்கொண்டவள், அவர் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டாள். கன்னத்தில் உராயும்போது ஈரத்தை உணர்ந்தவர்,

“ஏய் நீ இன்னும் தூங்கலை” என்றார்.

அவள் பதிலேதும் சொல்லாமால் அவர் காதருகில் சென்று “தாங்க்ஸ் டாடி” என்று சொல்லி மேலும் இறுக அணைத்துக்கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *