நழுவிய வாய்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 5,381 
 

‘சாந்தா, எப்பிடி இருக்கே?’ ங்கிற குரல் கேட்டுத் திரும்பினாள் சாந்தா. அவள் உயிர்த்தோழி விமலா தான் அங்கு நின்றிருந்தாள். “நான் நன்னா தாண்டி இருக்கேன், உனக்கென்னாச்சு, முன்னெல்லாம் என் வீட்டுக்கு அடிக்கடி வருவே, இல்லேன்னா ஃபோனாவது பண்ணுவே, இப்ப கொஞ்ச நாளா ஃபோனும் பண்ணல, நீ பொண்ணாத்துக்கு போயிட்டயோன்னு நெனச்சேன்” என்று சாந்தா கூறவும், ”அப்பிடி ஒங்கிட்டே சொல்லாம அமெரிக்கா. போயிடுவேனா? எல்லாம் நாம நெனக்கிற மாதிரி நடக்கிறதா? என் பொண்ணு ரொம்ப நாள் கழிச்சு கர்ப்பமாயிருக்காளேன்னு ,ஊருக்குப் போக ப்ளான் போட்டோம், ஆனா விதி அதை மாத்திடுத்து. நன்னா இருந்த எங்காத்துக் காரருக்கு திடீர்னு ஸ்ட்ரோக் வந்து ஒரு பக்கம் இழுத்துண்டுடுத்து. மருந்து, மாத்திரை, ஆசுபத்திரின்னு வீடே அமர்க்களப்பட்டது” என்று விமலா சொல்லவும், சாந்தா, ”ஓஹோ, அதான் இளைச்சு. துரும்பா இருக்கியா?” என்று கேட்டாள். “ஆமாண்டி சாந்தா, மொதல்ல ஒண்டியாத் தான் சமாளிச்சிண்டு இருந்தேன், ஆனா அவரைத் தூக்கி உட்கார்த்த, குளிப்பாட்டன்னு தனியா முடியல, இப்ப ஒரு வேலைக்காரன் போட்டிருக்கேன். இவரை யார் கிட்டேயும் விட்டுட்டுப் போக முடியாது, கூட்டிண்டு போகவும் முடியாது. இப்ப எனக்கு ஒரு ப்ராப்ளெம், என் பொண்ணுக்கு ஜனவரில பிரசவம், அவள் அமெரிக்கால பெத்துண்டா குழந்தைக்கு ஸிடிஸன்ஷிப் இயல்பா கெடச்சுடும், இந்தியால பொறந்ததுன்னா அதுக்கு அப்ளை பண்ணி இல்லாத ஃபார்மாலிடீஸ் எல்லாம் சந்திக்கணும்’, அதனால இந்தியா வர மாட்டேங்கறா, என்னால போக முடியாது, எனக்குப் பதிலா என் உயிர்த் தோழியான நீ போக முடியுமா? காசுக்கு ஆள் கெடைப்பா, ஆனால் அவா அக்கறையோடு செய்ய மாட்டா. நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம், பாஸ் போர்ட், விஸா, டிக்கட் எல்லாம் அவளே பாத்துப்பா. நீ ஆறு மாசம் குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்கணும், நீ மாட்டேன்னு சொல்லிட்டா எனக்கு வேற வழியில்ல, தயவு செஞ்சு என்னைக் கை விட்டுடாதேடி” என்றாள் விமலா.. சாந்தா, ’எங்காத்துக்காரரைக் கேட்டு உனக்கு ஃபோன் பண்றேன்’னு விமலாவிடம் சொன்னாள்.

வீட்டுக்கு வந்த சாந்தா தன் கணவன் கைலாசத்திடம், ”என் ஃப்ரெண்ட் விமலாவை மார்கெட்ல பார்த்தேன். அவ ஆத்துக்காரருக்கு ஸ்ட்ரோக் வந்து முடியாம கெடக்காறாம்னா” எனவும், ”சரி, போய் பாத்துட்டு வந்தாப் போச்சு” என்று கைலாசம் பதிலளித்தார். ”நான் சொல்ல வந்தது அதில்லன்னா, அமெரிக்கால இருக்கற அவ பொண்ணு ரொம்ப நாள் கழிச்சு முழுகாம இருக்காளாம்” என்று சாந்தா இழுக்கவும், ”இந்தப் பீடிகை எல்லாம் போடாம, விஷயத்துக்கு பளிச்சுனு வா” – கைலாசம் இடை மறிக்க, ”சொல்றதுக்குள்ள என்ன அவசரம்?” என்று சாந்தா கோபமாகக் கேட்க, “உனக்குத் தெரியுமோன்னோ எனக்கு நீட்டி முழக்கிப் பேசறது பிடிக்காதுன்னு, அதனால தான் சொன்னேன், ஹூம், மேலே சொல்லு” என்று கைலாசம் இறங்கி வந்தார். ”சரி நான் சுருக்கமா சொல்றேன், என்னை நீ அமெரிக்கா போய் என் பொண் பிரசவத்துக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?னு கேட்டா விமலா. நான் ஒங்களக் கேட்டுச் சொல்றேன்’னு சொன்னேன்.” என்று சாந்தா கூற, கைலாசம், ”தாராளமா போயிட்டு வா, எனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்ல. இந்தமாதிரி சமயத்துல உதவலேன்னா ஃப்ரண்ட்ஷிப்புக்கு அர்த்தமே இல்லை” என்றார். ”இல்ல, உங்களத் தனியா விட்டுட்டு நான்—–,” என்று சாந்தா இழுக்க, ”எனக்கென்ன, பயமா?. என்னப் பாத்துக்க எனக்குத் தெரியும். நீ என்னப் பத்திக் கவலப்படாதே. அது தவிற, பிள்ளை நாட்டுப் பெண் வேற இருக்கா. எதுக்கு மென்னு முழுங்கறே? உனக்குத் தனியாப் போக பயம்னு சொல்ல வரயா?”ன்னு கைலாசம் கேட்க, ”சேசே, அதெல்லாம் இல்ல, சும்மாத் தான் கேட்டேன், அப்ப நான் அமெரிக்கா கெளம்ப சம்மதம்னு என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணிடட்டுமா?” என்று சாந்தா பதிலளிக்க ‘தாராளமாப் பண்ணு’ என்றார் அவள் கணவர்.

சாந்தா விமலாவுக்கு ஃபோன் பண்ணித் தான் அமெரிக்காச் செல்ல தன் கணவர் அனுமதித்ததைத் தெரிவித்தாள் .விமலாவுக்குப் படு குஷி. தன் நன்றியைத் தெரிவித்தாள். வேலைகள் மளமளவென நடக்கலாயின. பாஸ்போர்ட், விசா, டிக்கெட் வகையறா எல்லாம் முடிந்து சாந்தா அக்டோபரில் கிளம்ப முடிவாயிற்று. குறித்த நாளில் சாந்தா மூட்டை முடிச்சுகளோடு ஏர்போர்ட் வந்தாள். அவளை வழியனுப்ப சாந்தா குடும்பமும், விமலாவும் வந்திருந்தனர். சாந்தாவுக்கு கல்யாணம் பண்ணிப் புக்ககம் போற மாதிரி பயம். .

விமலா சாந்தாவிடம், ”உனக்கு நான்-ஸ்டாப், அதாவது ஸ்ட்ரெய்ட் ஃப்ளைட் தான் புக் பண்ணியிருக்கா, நீ நடுவில எங்கும் எறங்க வேண்டாம் பாஸ்போர்ட் மற்ற டாகுமெண்டுகளைப் பத்திரமா வெச்சுக்கோ, செக் பண்ணதுக்கப்புறமா பாஸ்போர்டை ஞாபகமா திரும்ப வாங்கி வெச்சுக்கோ. உனக்கு ஏதாவது தேவைன்னா ஏர் ஹோஸ்டெஸ்களை கேட்டா அவா உதவி பண்ணுவா உனக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்ல பேசு, அவா புரிஞ்சுப்பா, நீ ஊர் போய்ச் சேர்ந்தாலும் செக் இன் மற்றும் ஸெக்யூரிடி செக் எல்லாம் முடிந்து பிறகு தான் வெளில வர முடியும், என் பொண்ணும் உள்ளே வர முடியாது, வெளில காத்துண்டிருப்பா, ஒரு வேளை அவ வர்றதுக்கு லேட்டானாலும் நீ கரோஸலுக்குப் போய் , அதாவது லக்கேஜ் ஏரியாவில் உன் பெட்டிகளை இறக்கச் சொல்லி கலெக்ட் பண்ணிண்டு வெளி கேட் கிட்ட வெயிட் பண்ணு. ஒனக்கு வீல் சேர் ஏற்பாடு பண்ணியிருக்கா என் பொண்ணு.. அவா ஒன்ன ப்ளேன் நின்னு கதவு திறந்தவுடன் கூட்டிண்டு போவா. புது இடத்தில் நடக்க வேண்டாம், எங்க, எப்படிப் போறதுன்னு முழிக்க வேண்டாம். என் பொண்ணு உனக்குப் ஃபோன் பண்ணுவா. அதை வீல் சேர்-காரா கிட்ட கொடு. அவா ஒன்ன எம்பொண்ணு இருக்கற இடத்துக்குக் கூட்டிண்டு போவா,” என்று விமலாவின் உபதேசம் முடிந்தவுடன், கைலாசம், ”அங்க வீடு போய்ச் சேர்ந்தவுடன் ஃபோன் பண்ணு, முடிஞ்சப்போ லெட்டர் போடு. ஊர் புதுசு, குளுரு ஜாஸ்தின்னு கேள்விப் பட்டிருக்கேன், ஜாக்கிரதையா இரு” ன்னு தன் பங்குக்கு உபதேசம் பண்ண, பொத்துக் கொண்டு வந்த அழுகையை அடக்கி கொண்டாள் சாந்தா. உள்ளூர ஒரு .இனம் தெரியாத பயம். பார்வையாளர்கள் நேரம் முடிந்தது. சாந்தா எல்லோரிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு. செக் இன் மற்றும் ஸெக்யூரிடி செக்கிற்காக வீல் சேரில் கிளம்பினாள்.

எல்லா ஃபார்மாலிடிகளும் முடிந்து, அவளை ப்ளேன் வாசலில் இறக்கி விட்டு உள்ளே போகச் சொன்னார் வீல் சேர்-காரர். சாந்தாவும் ஏர் ஹோஸ்டஸ் உதவ, உள்ளே போய் உட்கார்ந்தாள். தன் பக்கத்து ஸீட்டில் யார் வரப் போகிறார்களோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு இளம்பெண் வந்து உட்கார்ந்தாள். அவள் .எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்று சாந்தாவுக்கு ஊகிக்க முடியவில்லை. ப்ளேன் புறப்பட்டது. லேசாக மேலே எழும்பிப் பின் பறக்கலாயிற்று. சாந்தாவுக்கு இது முதல் விமானப் பயணம் என்பதால் வயிற்றை பிரட்டிக் கொண்டு வந்தது. காதை அடைத்தது. அதனால் கண்ணை மூடித் தியானத்தில் இருந்தாள். சிறிது நேரத்தில் விமானம் சீராகப் பறக்கத் தொடங்கியது. பக்கத்தில் இருந்த பெண் தமிழில் வார இதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாள். நம்ம ஊர் பெண்ணைப் பார்த்ததில் சாந்தாவுக்கு பெரிய நிம்மதி ஆனால் அவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது? அதற்கு அவசியமே இருக்கவில்லை. அந்தப் பெண்ணின் கால் தவறுதலா சாந்தாவின் மேல் பட்டு விட ’’ஸாரி’ ஆண்ட்டி’ ன்னு அவள் சொன்னதும் சாந்தா, ’பரவாயில்ல’ என்றாள். அந்தப் பெண், ”ஓ, நீங்களும் தமிழா?”, எனக் கேட்கப் பழக்கம் வலுவானது.

சாந்தா, ’தான் ஊருக்குப் புதிது என்பதால் அவளைக் கூட்டிக் கொண்டு போக யாரும் வரும் வரையில் தனியாக இருப்பது பயமாக இருக்கும், என்ன பண்ணுவேனோ தெரியவில்லை’ என்றதும், ”கவலைப்படாதீங்கம்மா. உங்க வீட்டு மனுசங்க வர வரைக்கும் நான் உங்க கூட இருக்கேன், அப்படி அவங்க வரலேன்னாலும் நீங்க அட்ரஸ் குடுத்தீங்கன்னா, நான் கொண்டு விட்டுடறேன், நான் இங்க 5 வருஷமா இருக்கேன், எனக்கு எல்லா இடமும் நல்லாத் தெரியும்” என்றாள் அவள். சாந்தா, ”ரொம்ப நன்றிம்மா” என்றாள்.

ப்ளேன் அமெரிக்கா வந்திறங்கியது. சாந்தா இறங்கி ஃபார்மாலிடீஸ் எல்லாம் முடிந்து வீல் சேரில் வெளியே வந்தாள். அங்கு விமலா பெண் ரேகா வந்திருந்தாள். அது வரை சாந்தா கூட வந்த பெண்ணும் இருந்தாள். பின்பு ரேகாவிற்கு சாந்தா அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து.வைத்தாள். ரேகா ”க்ளாட் டு மீட் யூ, தாங்க் யூ ஃபார் கிவிங் குட் கம்பெனி டு மை ஆண்டி” என்று தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். பிறகு அந்தப் பெண் விடைபெற்றுச் சென்றாள். சாந்தா காரில் ஏறி உட்கார, வண்டியைக் கிளப்பினாள் ரேகா. கார் போகும் பொழுது வேடிக்கைப் பார்த்து வந்த சாந்தா ’ரோடெல்லாம் என்ன இப்பிடி பளிச்சுனு இலை போட்டு சாப்பிடற மாதிரி சுத்தமா குண்டு குழியில்லாம இருக்கே’ ன்னு ஆச்சரியப் பட்டாள். ரோடில் ஜாஸ்தி கூட்டமே இல்ல, நாயோ, பூனையோ, அல்லது மாடோ எதுவுமே காணும் என்று சாந்தா சொன்னதற்கு ரேகா’அது மாதிரி விலங்குகளைத் திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு ஃபைன் எக்கச்சக்கமா தீட்டிடுவா. அந்த பயத்தினால தான் வெளில விட மாட்டா’ன்னு சொன்னாள்.

வீடு வந்து சேர்ந்தார்கள். சாந்தா வந்து சேர்ந்ததற்கு தன் வீட்டிற்கும் விமலாவுக்கும் தகவல் தெரிவித்தாள். ரேகாவின் கணவன் ரோஷனும் சாந்தாவிடம் நன்கு பழகினான். அவன் சாந்தாவிடம், ’எங்கம்மாவை வர முடியுமான்னு கேட்டேன், அதுக்கு, உன் தங்கைப் பிரசவமும் அந்த சமயத்தில் இருப்பதால் வர முடியாது, அவளுக்கும் இது தலைப் பிரசவம்னு சொல்லிட்டா, இல்லேன்னா உங்களைத் தொந்தரவு பண்ணியிருக்க மாட்டோம், ஸாரி,’ என்றதற்கு, ’இதுக்கு எதுக்கு வருத்தப்படறேள்? மனுஷாளுக்கு மனுஷா சமயத்தில ஒத்தாசை செய்யலைன்னா அப்புறம் நம்ம பிறப்புக்கு என்ன அர்த்தம் இருக்கு?’ என்றாள்.சாந்தா தாய் மாதிரி ரேகாவிற்கு பிடித்ததையெல்லாம் செய்து கொடுத்தாள். அவளுக்கு அம்மா வரவில்லையே என்ற குறையே தெரியவில்லை. அந்த ஊர் வழக்கப்படி ’பேபி ஷவர்’ (நம்மூர் வளைகாப்பு) ரேகாவின் ஃப்ரெண்ட்ஸ்கள் நடத்தினார்கள். ரேகாவை உட்கார்த்தி வைத்து அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு தேவையான பொருட்களைப் பரிசாகக் கொடுத்தார்கள். குழந்தை வரவை எதிர்பார்க்கும் விதமாக வீட்டை அலங்கரித்தார்கள், விளையாட்டுகள், பாட்டு என்று சந்தோஷமாய் இருந்து விட்டு எல்லோரும் விருந்து சாப்பிட்டுக் கிளம்பினார்கள். அதற்குப் பிறகு ஒரு நல்ல நாளில் ஸீமந்தம், வளைகாப்பு நடந்தது. அதற்கு வந்திருந்த சில தமிழ்க் குடும்பங்கள் சாந்தாவிற்கு பழக்கமாயின.

மார்கழி மாதம். சாந்தா நம்மூர் வழக்கப்படி வாசலில் பெரிய வண்ணக் கோலம் போட்டிருந்தாள். ரேகா அதைப் பார்த்து, ’ஐயோ, மாமி இங்கெல்லாம் இப்பிடி வெளில கோலம் போடக் கூடாது’ ன்னு சொல்லவும், சாந்தா ‘இது தனி வீடு தானே? நம் வீட்டு வாசலில் தானே போடறேன், யாராவது தடுத்தால் நிறுத்திட்டாப் போச்சு’ன்னு சொன்னாள். மாறாக அக்கம் பக்கத்தவர்கள் இவள் கோலத்தை பார்த்து ரசித்து, ’வாட் எ ப்யூடிஃபுல் ட்ராயிங்க், ஸோ ஸிம்மெட்ரிகல், வொண்டர்ஃபுல் ஹேண்ட்வொர்க் வித் ஸிம்பிள் டாட்ஸ்’ என்று ஆச்சரியப் பட்டார்கள். அங்கு இருக்கும் தமிழ்ச் சங்கத்திலிருந்து கோல வகுப்பு எடுக்க சாந்தாவிற்கு அழைப்பு வந்தது. ரேகாவின் பிரசவம் முடிந்து கிளாஸ் எடுப்பதாக சாந்தா ஒப்புக் கொண்டாள் ஜனவரி 1 ந்தேதி ரேகாவிற்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஒரு மாதம் ஆனதும் சாந்தா கிளாஸ் எடுக்கத் தொடங்கினாள். தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் கழிந்து 15 நாட்களுக்குப் பிறகு அதற்கு விழா கொண்டாடினார்கள். வரவேற்புக்கு சாந்தா தான் கோலம் போட்டாள்.

அங்கு இந்தியாவில் சாந்தா மருமகள் கல்பனா, ”அப்பா, பாத்தேளா! அம்மா, பேரு பேப்பர்ல வந்திருக்கு. அம்மாவோட கோலத்துக்கு அத்தனை பெருமை கெடச்சிருக்கு”ன்னு சொல்லிப் பேப்பரைக் கொடுத்தாள். அதில் ’அமெரிக்காவில் ’தமிழரின் அற்புதக் கை வண்ணம்’ என்ற தலைப்பில் உள்ள செய்தியைப் பார்த்து கைலாசத்திற்கு ரொம்ப சந்தோஷம் கைலாசத்தின் மகன் மாலை ஆஃபீஸிலிருது வந்தவன், ”அப்பா, என் ஃப்ரெண்ட் ஆதர்ஷ் நாடகக் குழுல இருக்கறது உங்களுக்குத் தெரியுமில்லையா/ அவன் ’உலகென்னும் மேடையிலே’ன்னு ஒரு நாடகத்தில நடிச்சுண்டிருக்கான். அதுக்கு நம்மூர்ல நல்ல வரவேற்பு. அதப் பாத்து அமெரிக்கால இருக்கிற தமிழ்ச் சங்கங்களிலேருந்து அழைப்பு வந்திருக்கு. ஆனால் அவனுக்கு அப்பாவா நடிக்கிறவர் திடீர்னு விலகிட்டார். அவர் பையன் ’உங்களுக்கு வயசாயிடுத்து, தனியா வெளிநாடு போக வேண்டாம்’னு சொல்லிட்டானாம். ‘நான் குழுவோடத் தானே போகப் போறேன், அதுவுமில்லாம நாம செலவு பண்ணாம வெளிநாடு போற சான்ஸ் கெடைக்காது’ன்னு சொன்னதுக்கு ’எதுவாயிருந்தாலும் உங்களுக்கு ஏதாவது ஒண்ணு வந்தா அவா உங்களையே கவனிப்பாளா? அவாளுக்கு அவா வேலை இல்லையா? எனக்கே லண்டன் போகும்படி சான்ஸ் கெடக்கும் போல இருக்கு .உங்க வெளிநாடு ஆசையை அப்ப தீர்த்துக்குங்கோ’ன்னு சொல்லிட்டானாம். நாடகக் குழுக்காரா வேற ஆள் தேடறா. பார்க்கிறதுக்கு கிட்டத்தட்ட அவரை மாதிரியே உள்ளவர் மேலும் பாட்டுத் தெரிஞ்சவரா ஒருத்தரைத் தேடறா. ஆதர்ஷ் என்னிடம் வந்து ’டேய் உங்கப்பா இந்த ரோலுக்கு பொருத்தமா இருப்பார், அதுவுமில்லாம அவர் மார்கழி மாச பஜனையில் பாடறதைக் கேட்டிருக்கேன்னு சொன்னான் ‘நான் எங்கப்பாவைக் கேட்டுச் சொல்றேன்னு’ சொல்லியிருக்கேன். .என்ன சொல்றேள்? நாளைக்குப் போகலாமா? உங்களுக்கு நடிக்கத் தெரியறதான்னு பார்க்க அவா ஜஸ்ட் ஒரு சின்ன டெஸ்ட் வெப்பா,” என்றான்.

கைலாசத்தின் நடிப்பு அந்த நாடகக் குழுவினருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அவர் ஃபிப்ரவரி கடைசியில் கிளம்ப ஏற்பாடானது. அமெரிக்காவில் ஒரு மாதம் தங்குவதாக திட்டம் போடப் பட்டது. கைலாசம் தன் மகனிடமும் மருமகளிடமும் அவர் அமெரிக்கா வரப் போகும் செய்தியை சாந்தாவிற்கு தெரிவிக்கக் கூடாது, அது ஸர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று சொல்லி விட்டார். கலிஃபோர்னியாவில் தான் முதல் நாடகம். ரேகாவிற்கு அழைப்பு வந்தது. அவள், ”மாமி, இந்த ஞாயித்துக்கெழமை ஒரு நாடகம் இருக்கு. மெட்ராஸ்லே ரொம்ப வெற்றிகரமா ஓடி இப்ப இங்க வந்திருக்கு. ரொம்ப நன்னாயிருக்குன்னு தமிழ் பேப்பர்ல போட்டிருக்கு. நாங்க போகப் போறோம் நீங்களும் வறேளா?” ன்னு கேட்டாள். சாந்தா வருவதாகச் சொன்னாள்..

நாடகம் நடக்கும் ஹாலுக்கு எல்லோரும் சென்றார்கள். அங்கு நிறைய மக்கள் கூடியிருந்தாலும் இறைச்சல் இல்லாமல் அமைதியாக இருந்தது சாந்தாவுக்கு ஆச்சரியமாக இருந்தது நாடகம் பாதி நடக்கும்போது அவர்கள் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசாமல் அல்லது தூங்கி வழியாமல் அதில் ஆழ்ந்து இருப்பது கண்டு வியந்தாள். ரேகா மெல்லிய குரலில் ‘அப்பாவாக நடிக்கிறவர் உங்காத்து மாமா போல இருக்கார்னு’ சொல்லவும் சாந்தா ‘இதை அப்புறமா பாத்துக்கலாம், யாருமே பேசாதபோது நாம் மட்டும் பேசினா தப்பு’ன்னு சொன்னதைக் கேட்டு, ரேகா ’மாமி நமக்கே பாடம் எடுக்கிறாளே’ என நகைத்தாள். சாந்தா, ரேகாவின் கணவனை நாடகக் குழுவினரைப் பார்த்து அப்பாவாக நடித்தவரின் விவரம் விசாரித்து வரச் சொன்னாள். அவனும் விசாரித்து வந்து அவர் பெயர் கைலாசம், மேலும் பிள்ளையும் மருமகளும் மெட்ராஸில் இருக்கிறார்கள் என்ற விவரம் சொன்னான். சாந்தாவுக்கு இப்பொழுது அது தன் கணவன் தான் என்று தெளிவாயிற்று. ஆனால் அவளும் அவர் என்ன தான் செய்கிறார், பார்ப்போம் என்று சும்மா இருந்து விட்டாள்.

சாந்தாவைப் பார்க்க அவரே ரேகா வீட்டிற்கு வந்தார். அவளிடம், ”உன்னைப் பாக்க அவ்வளவு தூரத்திலேந்து வந்திருக்கேன், ஆனா நீ நான் யார்னு தெரிஞ்சுக்க ஆளைத் தூது விட்டுட்டு வந்து பாக்கலையே” ன்னு சொன்னதும், ”நான் நாடகத்துக்கே வரல, கொழந்தையப் பாத்துண்டு வீட்ல தான் இருந்தேன், ரேகாவும் ரோஷனும் கடைக்குப் போயிட்டு வறோம்னு தான் கெளம்பிப் போனா. எனக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது” என்று சாந்தா பதிலளித்தாள். கைலாசம் கேட்டார், “பின்னே யாரோ ரோஷன்னு ஒருத்தர் வந்து விசாரிச்சார்னு சொன்னாளே, அது யாரு?” ”அதுவா, நான் தான் மாமா,விசாரிச்சேன், ஏன்னா உங்க நடிப்பு ஸூப்பரா இருந்தது, ரேகா வேற அவ அம்மாவின் ஃப்ரெண்டோட கணவன் மாதிரி இருக்கேள்னு சொன்னா, அதனால நீங்க அவர் தானான்னு உறுதிப் படுத்திண்டு மாமி கிட்ட வந்து சொல்லலாம்னு கேட்டேன்” என்றான் ரோஷன். ”ஓஹோ, அப்படியா சேதி. நான் ரேகாவைப் பாத்திருக்கேன், உங்களப் பாத்ததில்ல. உங்க கல்யாணத்துக்கும் ஏதோ அசந்தர்ப்பத்தால என்னால வர முடியல. ரோஷன்னு ஒருத்தர் வந்து கேட்டதாச் சொன்னதும் சாந்தா அங்கு வந்திருக்காள்னு நெனச்சேன். அதான் பார்க்கவல்லையேன்னு ‘கேட்டேன்” என்று கைலாசம் சொன்னவுடன் .எல்லோரும் ‘கொல்’லென்று சிரிக்க, கைலாசம் புரியாமல் விழித்தார்.

சாந்தா, ”என்ன, உங்களுக்குத் தான் ஸர்ப்ரைஸ் கொடுக்க முடியுமா? நானும் உங்களை ஏமாத்திட்டேன் பார்த்தேளா! நானும் நாடகம் பார்க்க வந்தேன், நீங்க ஸூப்பரா நடிக்கிறதப் பார்த்தேன்”, என்றதும் மாமா முகத்தில் அசடு வழிந்தது. ”நீங்களும் இங்கேயே தங்கலாமே” என்று ரோஷன் கூற, ”அது முடியாது, எனக்கு இன்னும் ஸியாட்டில், நியூ யார்க், மேரிலேண்ட்டெல்லாம் போகணும். எல்லாம் முடிஞ்சு ஊருக்கு போறதுக்கு முன்னால வேணா வந்து தங்கறேன், ஆனா அவாளோட தான் திரும்பிப் போகணும், நீ என்னோட வரதானா அதுக்குத் தகுந்தாப்பல டிக்கெட் வாங்கச் சொல்லு. நான் மார்ச் கடைசில தான் போவேன். எப்படியும் ரேகா பிரசவிச்சு கிட்டத்தட்ட மூணு மாசம் ஆயிடும். அதனால ப்ராப்ளம் ஒண்ணும் இருக்காது” என்றார் கைலாசம் சாந்தாவைப் பார்த்து. ரேகா, ”எங்க அம்மா, அப்பா கிட்டேயும் மாமனார், மாமியார் கிட்டேயும் குழந்தையைக் காட்டணும். அதனால நாங்களும் உங்களோடேயே இந்தியா வரோம்’ என்றாள்.

ஏர்போர்ட்டுக்கு வந்தாயிற்று. உள்ளே போகக் காலை எடுத்த சாந்தா, ’ஐயோ, இதென்ன சோதனை, என் காலையே தூக்க முடியலையே’, என்று கத்த முயன்றும் அவளால் கத்தவும் முடியவில்லை. ’ஐயோ, எனக்கு என்ன ஆச்சு?’ என்று எண்ணும் போது, பக்கத்தில் யாரோ, ’நினைவு அரைகுறையா திரும்பி இருக்கு. லேசா கண் முழிச்சா மாமி. மறுபடி மயங்கிட்டா’ன்னு பேசுவது கிணற்றுக்கடியிலிருந்து பேசுவது போல் சன்னமாகக் கேட்டது. கூடவே விமலா, ’கொஞ்ச நாள் முன்னாடி, சாந்தாவை மார்கெட்ல பாத்தேன். நன்னாத் தானே பேசிண்டிருந்தா. எப்படி ஆச்சுன்னு’ கேட்பதும், பதிலுக்குக் கைலாசம், ’இவ துணி ஒலர்த்த மாடிக்குப் போனா, வெய்யில் தாங்காம மாடி எறங்கி வர போது மயங்கி விழுந்துட்டா. நெனவே வரலை. ஆசுபத்திரி கொண்டு வந்து காட்டினதுல அவா ட்யூமர் இருக்கு. உடனே ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டா’ கூறுவதும் கேட்டது. அதற்கு விமலா, ’நல்ல வேளை, என் பெண் பிரசவத்துக்கு இவ அமெரிக்கா போய் அங்கு இந்த மாதிரி படுத்துண்டாள்னா இவளைக் கவனிக்க யார் இருப்பா? என் பெண்ணாலும் கவனிக்க முடியாது. அவ நிறை மாத கர்ப்பிணி. நீங்கள்ளாம் வேறே இங்க கவலைப்படுவேள். நாம்ப நெனக்கிறது ஒண்ணு, நடக்கிறது ஒண்ணு, எல்லாம் நன்மைக்கேன்னு’ சொல்வதும் சாந்தாவிற்குக் கேட்டது. ’அப்ப நான் அமெரிக்கா போன கதை எல்லாம் மயக்கத்தில் கண்டதுவா?’ என்று எண்ணியவளை மீண்டும் ஆழ்ந்த மயக்கம் ஆட்கொண்டது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *