முதல் தரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 609 
 

திடீரென அப்பாவைப் பார்த்ததும் சுகந்தி மிகவும் பூரிப்பானாள்.

“என்னப்பா லெட்டரே இல்லை….திடீர்னு வந்து நிக்கறீங்க.”

அதே நேரம் திவாகர் உள்ளே வந்தான். மாமனாரைப் பார்த்ததும் முகம் பரவசமானது.

“என்னங்க எப்ப வந்தீங்க….ஏய்…சுகந்தி….அப்பாவுக்கு டிபன், காபி கொடுத்தியா…” என்றான்.

ராமனாதனுக்கு உள்ளூர மகிழ்ச்சியாய் இருந்தது. இரண்டே பெண்கள். திவாகர் முதல் மாப்பிள்ளை.அதிர்ஷ்டவசமாய் நல்லவனாய் அமைந்து விட்டான். மாலதிக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை அமைந்து விட்டால் போதும். அதற்குத்தானே இப்போது வந்தது.

திவாகர் முகம் கழுவி வந்து அமர்ந்தான்.

“வாங்க மாமா…..டிபன் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்…”

டைனிங் டேபிள் முன் அமர்ந்தனர். சுகந்தி திராட்சையைக் கழுவி ஒரு தட்டில் வைத்து அப்பாவின் முன் வைத்தாள். பிறகு அவளும் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

“மாலதிக்கு ஒரு வரன் வந்திச்சு…”

“அப்படியா….என்ன வேலையாம் அவருக்கு…”

“நல்ல வேலைதான்…. ஒரு கம்பெனில ஆபீசர் போஸ்ட். ஒரே பையன்…வேறெந்த பிக்கல்…பிடுங்கலும் இல்லே… சீர்ல எந்த டிமாண்டும் இல்லே…நீங்க செய்யிறபடி செய்யுங்க… அப்படின்னு சொல்லிட்டாங்க…”

“அப்புறம் என்ன…ரொம்ப நல்லதாப் போச்சு..” என்றான்.

“எந்தக் கம்பெனிப்பா? இவரை விட்டு விசாரிக்கச் சொல்லலாம்… ” என்றாள் சுகந்தி.

“அதற்குத்தானம்மா…நான் இப்ப வந்தேன். மாலதிக்குப் பார்த்த வரன்…வேறெந்த கம்பெனியும் இல்லே. நம்ம மாப்பிள்ளை கம்பெனிதான். பெயர் அரவிந்தன் ” என்றார் முகமலர்ச்சியுடன்.

திவாகர் உடனே பிரகாசமானான்.

“ஓ அரவிந்தனா…எனக்கு நல்லாத் தொ¢யுமே….”

“சொல்லுங்க… மாப்பிள்ளை….பையன் எப்படி….குணத்துல எப்படி….” என்றார் ராமனாதன் பரபரப்புடன்.

திவாகர் எழுந்து கைகழுவப் போனான். மாலதி பின்னாலேயே கை துடைக்க டவலுடன் போனாள்.

“இங்கே பாருங்க…அரவிந்தனைப் பத்தி இப்ப எதுவும் சொல்ல வேணாம். வேற ஏதாவது சொல்லி சமாளிங்க. அப்புறம் சொல்றேன்..” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.

“ஏன்…ஏன் அப்படிச் சொல்லணும்….” என்றான் புரியாமல்.

“அது அப்படித்தான்….நான் சொல்ற மாதிரி செய்யுங்க…விவரம் எல்லாம் அப்புறம் சொல்றேன்” என்றாள் மெல்லிய குரலில்.

ராமனாதன் ஆர்வமாய்க் காத்திருந்தார்.

“என்ன மாப்பிள்ளை…சொல்லுங்க…”

“அது வந்து….அவர் வேற செக்ஷன். சும்மா…பார்த்தவரை நல்ல மாதிரின்னு தோணும்…அது ஒண்ணும் பிரச்னை இல்லே… அந்த செக்ஷன்லயும் எனக்கு வேண்டியவங்க இருக்காங்க…நீங்க ரெண்டு நாளாவது இருப்பபீங்க இல்லையா…நாளைக்கு விசாரிச்சு முழு விவரம் சொல்லிடறேன்” என்றான் தயங்கிய குரலில்.

‘அப்படியா’ என்றார் ஏமாற்றத்துடன்.

பேச்சு பின்னர் வேறு திசையில் போனது. எப்படியும் நாளைக்குத் தொ¢ந்து விடும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார். அதுதான் சொன்னாரே பார்த்தவரை நல்ல மாதிரி என்று.

மாலதி அதிர்ஷ்டம் எப்படியோ அந்த மாதிரி அமைகிறது…என்று நினைத்துக் கொண்டார்.

சுகந்தி பேச்சோடு பேச்சாகச் சொன்னாள்.

“வெளியில பார்க்கிறது வச்சு…யாரைப் பத்தியும் ஒரு முடிவுக்கு வரமுடியாது…அந்த அரவிந்தன் உள்ளூர ஆள் எப்படியோ..” என்றாள்.

திவாகர் ஏதோ சொல்ல முயன்றான். சுகந்தி கண்ஜாடை காட்டியதும் அடங்கி விட்டான்.

இரவு சாப்பாடு ஆனதும்…படுக்கையில் கேட்டான்.

“ஏன் அந்த மாதிரி பேசினே…”

“என்னங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க…அந்த அரவிந்தன் யாரு…”

“ஏன்…எதுக்குக் கேட்கிறே…”

“சொல்லுங்க….அவர் போஸ்ட் என்ன?”

“எங்க கம்பெனி ஆபீசர்…”

“நீங்க…” என்றாள் பட்டென்று.

“நான் என்ன செய்ய முடியும்…கம்பெனி எக்சாம் எழுதிக்கிட்டேதான் இருக்கேன். பாஸ்தான் பண்ணலே” என்றான் அவமானமாக.

“உங்களைக் குறை சொல்லலீங்க. உங்க போஸ்ட்…அவரைக் காட்டிலும் குறைவு தானே.”

“அ..ஆமா…அதனால என்ன?”

“ஏற்கனவே மாலதி கொஞ்சம் சிவப்பு…அதுலேயே அவ அலட்டுவா…இப்ப அவ புருசன் உங்க கம்பெனியிலேயே…பெரிய ஆபீசர்னா…என்னமா அலட்டிக்குவா தெரியுமா…”

“திவாகர் ‘இது என்னடா…புதுக்குழப்பம்’ என்பது போல பார்த்தான்.

“அதனால …நான் சொல்றமாதிரி செய்யுங்க. நாளைக்கு அப்பாகிட்டே, விசாரிச்சேன்…அரவிந்தன் அப்படி ஒண்ணும் நல்லவன் மாதிரி தெரியலேன்னு சொல்லிருங்க…”

“பொய் சொல்லச் சொல்றியா..”

“ஆயிரம் பொய் சொல்லலாங்க ஒரு கல்யாண விஷயத்துலே..”

“அது கல்யாணம் நடக்க…இது நிறுத்த இல்லே சொல்றே…”

“இதுவும் நன்மைக்குத்தான். நம்ம நன்மைக்கு புரிஞ்சுதா…சும்மா…வேற ஏதாவது உளறி வைக்காதீங்க. நான் சொல்றபடி பேசுங்க..”

கண்டிப்பான குரலில் சொன்னாள். திவாகர் எதுவும் பேசத் தோன்றாமல் படுத்துக் கொண்டான். அவள் சொல்வதும் ஒரு விதத்தில் நியாயம்தான். நாளைக்கு இரண்டு மாப்பிள்ளைகளும் போனால், மரியாதை ஆபீசருக்குத்தானே…முதல்
மாப்பிள்ளை சாதாரண போஸ்ட் என்றுதானே சொல்வார்கள். அவ்வளவு ஏன்…கல்யாண விஷயத்திலேயே பாரபட்சம் ஆரம்பித்துவிடுமே…பெரிய மண்டபம்…வீடியோ…எனக்கு வெறும் போட்டோ மட்டும்தான். சாயங்காலம் ரிசப்ஷன்… கச்சேரி என்று அமர்க்களம் செய்வார்கள்….மாமனாரே சொன்னாரே…நம்ம வீட்டுல இதுதான் கடைசி ஃபங்ஷன்…சிறப்பா செய்யப் போறேன்னு…

அப்படியே தூங்கிப் போனான். காலையில் கிளம்பும்போது ராமனாதன் நினைவுபடுத்தினார்.

“மறக்காம… விசாரிச்சுக்கிட்டு வாங்க…நான் நாளைக்கு ஊருக்குப் போகணும்…அப்புறம் கல்யாண விஷயமா மத்த ஏற்பாடுகள் எல்லாம் இருக்கே” என்றார் கவலை அப்பிய குரலில்.

சுகந்தி ஜாடை காட்டினாள். ‘நான் சொன்னதை மறந்துராதீங்க’ என்பதுபோல.

மாலையில் வீட்டு வாசலிலேயே இருவரும் பரபரப்புடன் காத்திருந்தார்கள். அவன் உள்ளே நுழைவதற்கு முன்னமே…’என்ன…என்ன’ என்று விசாரித்தார்கள்.

“என்னங்க…நல்லா விசாரிச்சீங்களா…” என்றாள் சுகந்தி, ‘நல்லா’வில் அழுத்தம் கொடுத்து.

“என்ன மாப்பிள்ளை, பையன் எப்படி…நல்ல ரிசல்ட்தானே” என்றார் ராமனாதன்.

“அடடா…ஏன் இப்படி அவசரப்படறீங்க…உள்ளே வராம எங்கே போகப் போறேன்…முதல்லே உள்ளே வாங்க” என்றான்.

“எப்படியோங்க…மாலதி நல்ல எடத்துல வாழ்க்கைப்படணும்…வசதி இருக்கிற வீடுன்னு கொடுத்துட்டு…பின்னால அவ கண்ணைக் கசக்கக் கூடாது…மாப்பிள்ளை நல்ல குணமா இருக்கணும்…அதுதான் முக்கியம்…பணம் வரும் போகும்…
குணம் அமையறதுதான் கஷ்டம்…அதுக்குத்தான் முதல் மரியாதை…நல்லாதானே விசாரிச்சீங்க…ஒருத்தருக்கு நாலு பேரா…” என்றாள் சுகந்தி.

“சொல்லுங்க மாப்பிள்ளை எனக்கு பயங்கர டென்ஷனா இருக்கு…” என்றார் ராமனாதன்.

‘ஓக்கே’ என்றான் புன்சிரிப்புடன்.

“எ…என்ன சொல்லறீங்க” என்றார் இருவரும் கோரசாய்.

“கிளீன் ரிசல்ட்…நீங்க மத்த ஏற்பாடுகளைக் கவனிக்கலாம். அரவிந்தன் நம்ம மாலதிக்கு எல்லா வகையிலும் ரொம்பப் பொருத்தமானவன். ஒரு அப்பழுக்கு சொல்ல முடியாது…குணத்துல தங்கம்…இருபத்து நாலு காரட்…” என்றான்
உற்சாகமான குரலில்.

‘கடவுளே’ என்று கைகூப்பினார்.

“நான் இப்பவே போய் தெருமுனை பிள்ளையாருக்கு செதறுகாய் போட்டுட்டு வரேன். நீங்க நல்ல சேதி கொண்டு வரணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன். என் பிரார்த்தனை வீண் போகலே…” என்றபடி கிளம்பிப் போனார்.

சுகந்தி முகம் ‘உர்’ரென்று ஆனது.

“என்ன சுகந்தி…கோபமா…என்மேலே…”

“இல்லே…ரொம்ப சந்தோஷம்…படிச்சுப் படிச்சு சொன்னேன்ல…இப்படியா என்னை அவமானப்படுத்தறது…” என்றாள்.

“இல்லே சுகந்தி…நான் செஞ்சது சரின்னு நீயே ஒப்புத்துக்குவே…கொஞ்சம் பொறுமையாத்தான் கேளேன்…”

“ஒண்ணும் வேணாம்..” என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டவளை இழுத்து சோபாவில் அமர வைத்தான்.

அருகில் அமர்ந்து தோளை அணைத்தபடி பேசினான்.

“என்மேலே எவ்வளவு நம்பிக்கை வச்சு உங்கப்பா இங்கே வந்திருக்கார். ஏதோ ஒருவித சுயநல நினைப்போட… நான் அரவிந்தனைப் பத்தி அவதூறாப் பேசினா…அது நியாயமா…அதுவும் இல்லாம…மாலதி யாரு…உன் தங்கை தானே..
அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா…நமக்கும் சந்தோஷம் தானே…”

‘இந்தக் கதையை யார் கேட்டார்கள்’ என்கிற பாவனையில் சுகந்தி அமர்ந்திருந்தாள்.

“நீயே சொன்ன மாதிரி…பணம் வரும் போகும்…குணம் அமையறதுதான் கஷ்டம்னு…நான் நல்ல குணத்தோட இருக்கிறது அவசியம் இல்லையா…இன்னைக்கு உனக்காக ஒரு பொய் சொல்றேன்னு வச்சுக்க…அதுலயே ஒரு டேஸ்ட் வந்து…பின்னால..நம்ம வாழ்க்கையையே பாதிக்கிற மாதிரி…பொய் சொல்ல ஆரம்பிச்சா…அப்ப…அதுல உனக்கு விருப்பம்தானா…சொல்லு…”

அவன் எடுத்துக் காட்டிய விதம் அவள் மனதில் சுள்ளென்று உறைத்தது.

நியாயம்தானே…பொய் சொல்வதில் சுகம் கண்டுவிட்டால் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாமே…

தன் கணவன் குடும்பத்தின் முதல் மாப்பிள்ளை மட்டுமல்ல, முதல் தர மாப்பிள்ளையுங்கூட என்று மனதில்பட்டது அவளுக்கு.

“நியாயம்தாங்க நீங்க செஞ்சது” என்றாள் மனப்பூர்வமாய்.

திவாகர் பெரூமூச்சு விட்டான். மனதில் பாரம் இறங்கிய மாதிரி இருந்தது.

(எப்பவோ எழுதின கதை!)

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *