கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2023
பார்வையிட்டோர்: 2,570 
 

பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7

விட்ட இடத்திலேருந்து தொடர்ந்த நிம்மி, சாயங்காலம் வந்தா திரும்ப ராத்திரிக்கு சமைச்சு சமையல் கட்டு,டைனிங் டேபிளை க்ளீன் பண்ணிப் படுக்க சரியா இருக்கும். இது நடுவுல அம்மாவுக்கு வரும் ஃபோனை அட்டெண்ட் பண்ணணும், எங்களோட கொஞ்சம் பேசணும், மறு நாளைக்கு வேண்டிய சமையலுக்குத் தயார் பண்ணணும்” என்று நிறுத்த,  மங்களம், அவளுக்கே நான் சொன்ன அளவு தானே தெரியும்? அதெல்லாம் பழங்கதைன்னு நானே அதிகம் சொல்ல மாட்டேன்” என்றாள். ப்ரியாவுடைய மொபைல் ஒலித்தது.

அவள் கணவன் தான் ஃபோன் பண்ணி. ”என்ன, அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வீட்டு நெனவே இல்லையா, எப்ப திரும்பி வர்றதா உத்தேசம்?” என்று கேட்டான். ”இதோ வந்துட்டேன்” என்று அவனுக்கு பதிலளித்த ப்ரியா, ”அம்மா அவர் கூப்பிடறார். நான் கிளம்பறேன், வாடி நிம்மி” என்று சொல்லியவள், ”நாளைக்கு ஞாயித்துக் கிழமை, பொண்டுகள். அதனால நீங்கள்ளாம் நம்மாத்துலயே சாப்பிடலாம்” என்று கூறி விட்டு மங்களத்திடமும் தைலாவிடமும் விடைபெற்றாள். அவள் கிளம்பிய பின் வந்த மங்களத்தின் கணவர் வேம்பு, ”காலம் மாறினாலும் சில பேர் திருந்தவே மாட்டான்னு” சொல்லிக் கொண்டு வந்து உட்கார்ந்தார். அவளுக்கு அண்ணா பிள்ளை என்பதால் மாப்பிள்ளையாகவே பாவிக்காமல் தன் பிள்ளை போல நெனச்சதால் மிகவும் உரிமையோடு   ”என்ன விஷயம்? ஏன் இப்படி அலுத்துக்கறேன்னு,” தைலா கேட்டதற்கு வேம்பு, ”ஒண்ணுமில்ல அத்தை, பக்கத்து வீட்டுக்காரா  எங்கேயோ கிளம்பிண்டிருந்தா. கார் வாசலில் காத்துண்டிருந்தது என்னைப் பாத்தவுடன் சட்டுனு உள்ள போயிட்டா. நான் ஒத்த ப்ராமணனாம், என்னைப் பாத்தா அவா போற காரியம் கெட்டுப் போகும்னு நெனச்சு உள்ளே போயிட்டான்னு அப்புறமா தான் வெளங்கித்து. இந்தக் கம்ப்யூடர் காலத்தில கூட இப்படி இருக்காளேன்னு சிரிப்பா வர்றது” என்று சொல்லவும், ”இதோ பார் வேம்பு, ஜனங்கள் எதைப் பிடிச்சிக்கிறது, எதை விடறதுன்னு தெரியாம கொழம்பிப் போயிருக்கா. அவாளுக்குத் தெளிவு இன்னும் கிடைக்கல. அதனால தான் சகுனம் பாக்கறது, கல்யாணத்துல மாமா தோள் தூக்கறது, ஊஞ்சல், நலங்குன்னு அந்தக் கால வழக்கத்தை காரணம் புரியாமல் வெச்சு வயசான பையன் பெண்ணுக்கு சங்கடத்தை குடுக்கறா” என்றாள் தைலா.

மறு நாள் காலை எல்லோரும் குளித்து ப்ரியா வீட்டுக்குக்  கால் டாக்ஸியில் புறப்பட்டனர். பொண்டுகள் சாப்பாடு ஸிம்பிளாக இருந்தாலும் அருமையாக இருந்தது. இவ்வளவு சீக்கிரம் எல்லா வேலையும் முடிச்சுட்டியே, ப்ரியா, நீ சமர்த்து தான் என்ற தைலாவிடம், ”என்ன பாட்டி, அரைச்சுக் குடுக்க, பாத்திரம் தேய்க்க, துணி தோய்க்க, வீடு பெருக்கித் துடைக்கன்னு எல்லாத்துக்கும் மிஷின். கரண்ட் கட் ஆகாம இருக்கணும். நல்ல வேளை இன்னிக்கி லோட்ஷெட்டிங் எதுவும் இல்லை. பிழச்சேன்” என்றாள் ப்ரியா. ”இதனால வேலை சீக்கிரம் முடியுமே தவிர எனக்கென்னவோ ஆட்டுக்கல், அம்மி, திரிகை உபயோகப் படுத்தினாதான் பக்குவங்கள் நன்னா இருக்கும்னு தோணறது’’ என்றாள் தைலா. ”ஏன் பாட்டி நான் பண்ணின சமையலை நன்னாயிருக்குன்னு சாப்பிட்டேள், அப்புறம் இப்படிச் சொல்றேளேன்னு கேட்ட ப்ரியாவிடம், ”இப்பவும் நன்னாருக்குன்னு தான் சொல்றேன், ஆனால் அந்த மணம் இல்லன்னு தான் சொல்ல வரேன், நீ வெறகு அடுப்பில சமைச்சு சாப்பிட்டதில்ல, சாப்பிட்டா உனக்கு வித்தியாசம் தெரியும். வாஷிங் மிஷின் தோச்சாலும் துணியெல்லாம் சுருக்கமாக்கிடறது. நம்ம கையால தோச்சு ஒதறி ஒலத்தினா துளிச் சுருக்கம் இருக்காது. டிஷ் வாஷர், கண்ணாடி பீங்கான் பாத்திரத்துக்கு தான் லாயக்கு. மிக்ஸில அரைச்ச சூட்டுல புளிச்சுப் போயிடும்,” என்ற தைலாவிடம் ”அதுக்கு டைம் வேணும். தவிற ஊரோட ஒத்து வாழணும் இல்லன்னா எல்லாரும் சிரிப்பா,” என்றாள் ப்ரியா.

அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கி எழுந்து காஃபி குடித்து முடித்த பின் காராசேவ் எல்லோருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள் ப்ரியா. நிம்மி ஒண்ணொண்ணா ஒடிச்சுத் தின்று முடிக்கறதுக்குள்ள, தைலா  பாட்டி தட்டைக் காலி செய்திருந்தாள். நிம்மி, ”‘பரவாயில்லயே பாட்டி, உங்க பல் என்னோடதை விட ஸ்ட்ராங்க் போல இருக்கே, நான் இன்னும் பாதி கூட திங்கல’ என்றாள்.  ’அதெல்லாம் அந்தக் காலத்து உடம்பு. எனக்கே அம்மா அத்தனை வலு கிடையாது’ என்றாள் மங்களம். ”ஆமாம், நான் செஞ்ச அளவு உழைப்பு உனக்குக் கிடையாது. ஒழச்சாத் தான் உடம்புல வலுவேறும். நிம்மி, என் பல் நன்னாயிருக்கறதுக்குக் காரணம் நாங்க பல் தேய்க்க வேப்பங்குச்சியும் ஆலங்குச்சியும் தான் உபயோகப் படுத்துவோம். முழுக் கரும்பைப் பல்லால் தான் தோலுரிச்சு கடிச்சு சாப்பிடுவோம். வீட்டில் பொருள் விளங்கா உருண்டை பண்ணுவா. அது கெட்டியா பல் உடையற மாதிரி இருக்கும். பல்லை உறுதியா வெச்சுக்க இதெல்லாம் அந்தக் காலத்து தந்திரம். ஃபோன் ஒலித்தது. நிம்மி எடுத்தாள். ”அம்மா உன்னோட மாமா பேசறாம்மா” என்றதும், ”இதோ வர்றேன்னு சொல்லு” என்ற  ப்ரியா, ”ஹலோ மாமா, நீங்கள்ளாம் எப்படியிருக்கேள்? எல்லாரும் சௌக்கியமா? அங்க கொரோனா பாதிப்பு ஜாஸ்தியா இருக்காமே? நீங்கள்ளாம் வெளியே எங்கும் போறதில்லயே ?” என்று கேட்க, “நாங்கள்ளாம் வீட்ல தான் இருக்கோம். எல்லாமே ஆன்லைன் தான். உங்க மாமி மட்டும் தன் அக்கா வீட்டுக்கு எப்பவாவது ப்ரிகாஷனோடு போய்ட்டு வருவா. அவ அக்காவும் அது மாதிரி நம்ம வீட்டுக்கு வருவா,” என்ற மாமாவிடம், ”எதுக்கும் வாக்ஸின் போட்டுக்கற வரைக்கும் நீங்க எல்லாரும் ஜாக்கிரதையா இருங்கோ மாமா,” என்ற ப்ரியா என்று ஃபோனை அணைத்தாள்.

­

அப்பொழுது நிம்மி, ”கொள்ளுப்பாட்டி, நீங்க அமெரிக்கா போயிருக்கேளோ”ன்னு கேட்டாள். ”போயிருக்கேனே, கொள்ளு தாத்தாவோட ஒரு தரம், தனியாக ஒரு தரம். கொள்ளுத்தாத்தாவோட போனபோது என் பிள்ளை சாம்புவுக்கு கல்யாணம் ஆகலை. அங்க 6 மாசம் இருந்தோம். நான் அங்க போனாலும் என்  உடம்பைப் பாத்துப்பேன். ஆனால் உங்க கொள்ளுத்தாத்தா குளிர் காலத்துலயும் வீட்டுக்குள்ள என்ன செருப்பும் ஸாக்ஸும்னு போட மாட்டார். தினமும் தலைக்குக் குளிப்பார். எல்லாம் சேர்ந்து படுத்திடுத்து. அதனால எனக்கு அமெரிக்காவே ஒத்துக்கலைன்னு சொல்லிண்டு இருந்தார். அதுக்கப்புறமா இந்தியா வந்தப்புறம் சாம்புவுக்கு வரன் தேட ஆரம்பிச்சார். ஆனால் அவன் எனக்கு இப்ப வேண்டாம்னு ஒவ்வொரு தடவையும் சொல்லியே கல்யாணத்தை தள்ளிப் போட்டுண்டு இருந்தான். ’இவனைக் கேட்டா இப்படித்தான் சொல்வான், வயசாயிண்டே வர்ரது. அதனால நாமே ஒரு பொண்ணைப் பாத்துடலாம்’னு ஜோசியர் கிட்டேசொல்லிப் பொருத்தம் பாத்து ஒரு பொண்ணோட ஃபோட்டோவும் அனுப்பிச்சார். ’எங்களுக்குப் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு நாங்க பாக்கு வெத்திலை மாத்திண்டு நிச்சயம் பண்ணிட்டோம் நீ கல்யாணத்துக்கு மட்டும் வந்தா போதும்’னு சொல்லிட்டார். அவன் உடனே பதறி அடிச்சுண்டு, ’அப்பா, அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போய் என் பிள்ளை அங்கேயே கல்யாணம் பண்ணிண்டுட்டான்னு சொல்லிடுங்கோப்பா.  எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயி கொழந்தையும் இருக்கு ’ அவ அமெரிக்கப் பொண்ணு. அதனால நீங்க என்ன சொல்வேளோங்கிற பயத்துல சொல்லலை’ன்னு லெட்டர் போட்டான். ’எனக்கு நீ கல்யாணத்தை தள்ளிப் போடறதைப் பாத்து சந்தேகம் வந்தது. அதனால நானும் கொஞ்சம் ட்ராமா போட்டேன். பாக்கு வெத்திலையும் மாத்திக்கல, நிச்சயமும் பண்ணலை. இருந்தாலும் நீ என் கிட்டே சொல்லாம பண்ணிண்டது எனக்கு வருத்தம் தான்’னு சொல்லிப் பதில் போட்டுட்டார்.”  

”நான் எதையும் லைட்டா எடுத்துப்பேன். ஆசாரக் குடும்பத்தில் பொறந்து தன் ஒரே பிள்ளை இப்படிப் பண்ணிட்டானேன்னு கொள்ளுத் தாத்தாவுக்குத்தான் வருத்தம். அப்பவும் நானும் கொள்ளுத் தாத்தாவும் என் பொண்ணு மங்களத்து வீட்ல தான்  இருந்தோம் எங்களைப் பாக்க சாம்பு மட்டும் எப்பவாவது வருவான். கொள்ளுத்தாத்தாவுக்கு 80 வயது முடியப் போற டைம்ல சாம்பு தன் மனைவி இரு பிள்ளைகளுடன் அவர்கள் இந்தியாவையும் நம் சொந்தங்களையும் பாக்கணும்னு சொன்னதனாலே வந்து கொஞ்ச நாள் இருந்தான். தான் பொறந்த கிராமத்தை அவாளுக்குக் காட்ட எங்களையும் அழைச்சுண்டு போனான். அவனுடைய அப்பாவுடைய கோபமும் மாறிப்போச்சு. அதனால வர சம்மதிச்சார். கிராமத்தில சாம்பு பெரிய படகு மாதிரி காரில் வெள்ளைக்கார குடும்பத்தோடு இறங்குவதைப் பார்த்து யாரோ என்று நெனச்சு கண்டுக்கலை. . அவா கவனமெல்லாம் அந்தக் காரின் மேல் தான் இருந்தது. ஏனென்றால் அந்த ஊரில் காரே கிடையாது எங்களைப் பாத்தவுடனே புரிஞ்சு போச்சு. சாம்பு, கிராமத்தில் இருந்த குடும்பங்களுக்கு வாங்கிண்டு வந்த வெளி நாட்டுப் பொருட்கள் எல்லாம் குடுத்தான். ’நீ கிளம்பினப்புறம் நெறைய பேர் பொழப்புக்கு வழி தேடிண்டு வேற ஊருக்கு போயிட்டா. ஏதோ சில பேருக்கு மண் வாசனை போகலை என்னை மாதிரி,ஒட்டிண்டிருக்கா’ என்றாள் என் தோழி.”

(தொடரும்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *