தெய்வீகக் காந்திமதி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 5,995 
 

(இதற்கு முந்தைய ‘சபரிநாதனின் கொக்கரிப்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

இரண்டொரு கணங்கள் பூட்டிய கதவின்மேல் சாய்ந்தபடியே நின்றார். மலங்க மலங்க விழித்தார். பின்பு வேகமாகச்சென்று கொல்லைப்புற கதவைத்திறந்து பின்புறமாக ஓடலானார்.

பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடினார். மனித நடமாட்டமில்லாத கற்களும் முட்களும் சிதறிக்கிடந்த வனாந்திரப் பகுதியில் அவரால் ஓடவும் முடியவில்லை. விழுந்து வாரி ஓடினார். எங்கே ஓடுகிறோம்; எந்தத் திசையில் ஓடுகிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் ஓடினார்.

ஒரு பெரிய மனிதக் கூட்டம் அவரைத் துரத்திக்கொண்டு வருகிற மாதிரியான அவசரத்திலும் பீதியிலும் ஓடினார். கடும் மனச்சிதைவிற்கு உள்ளாகிவிட்ட சபரிநாதனின் இந்த ஓட்டம் டாக்டர் மரகதவல்லியின் மகப்பேறு மருத்துவமனை காம்பவுண்டு ரோடில் கனரக வாகனம் ஒன்றால் மோதப்பட்டதில்தான் முடிவிற்கு வந்தது.

ரத்தக்களரியான பொட்டலமாகத்தான் சபரிநாதனின் உடல் நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அபாய கட்டத்தைத் தாண்டிய பிறகு அவரின் உடல் தனியார் ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக காயங்களும் எலும்புச் சேதங்களும் குணமான பிறகுதான் அங்கிருந்த டாக்டர்களுக்கு சபரிநாதனின் மனச்சிதைவு தெரியவந்தது. மனச்சிதைவின் இசிவுதான் அவரை நம்பமுடியாத வன்முறைக் குற்றத்திற்குச் சரிய வைத்திருக்கிறது என்ற உண்மையை மருத்துவக் கண்டுபிடிப்புகள் எடுத்துச் சொன்னதும், அவரின் இரண்டு மகள்களும் நெருங்கிய உறவினர்களும் கலங்கி விக்கித்துப் போனார்கள். இவ்வளவு கோரமான சரிவை சபரிநாதனிடம் யாரும் கற்பனைகூட செய்து பார்க்காததால் எல்லோருமே பேச்சற்றுப் போய்விட்டார்கள்.

சபரிநாதனின் மனச்சிதைவிற்கான சிகிச்சைகள் சவாலனதாகவும் வேதனையானதாகவும் இருந்தது. விரைவில் உடல்நலம் பெற்று விட்டாலும் பாதிக்கிணறு தாண்டிய மன நோயாளியாகத்தான் திம்மராஜபுரத்திற்கு அழைத்து வரப்பட்டார். முதல் சிலமாதங்கள் இரண்டு மகள்களும் மாற்றி மாற்றி அவரைப் பார்த்துக்கொண்டார்கள். ஆனாலும் அவரைக் கவனித்துப் பராமரிப்பது அத்தனை எளிதாக இல்லை. சபரிநாதன் ஒரு இடத்தில் ஒரு நிமிஷம் இருக்காமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

வெளி உலகம்தான் அவருக்கு சுதந்திரமாக இருந்தது. வீடு சிறை மாதிரி பிடிக்காத ஆஸ்பத்திரி மாதிரி தெரிந்தது. சில மாதங்கள் அவரின் உறவினர்கள் வந்து மாறி மாறி தங்கி கவனித்தார்கள். பிறகு சில நண்பர்கள் தாங்களாக முன்வந்து சிரமப்பட்டு பராமரித்துப் பார்த்தார்கள். ஆனால் நாட்பட நாட்பட யாராலும் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. கடைசியில் இந்த மாதிரி கடும் மனச்சிதைவிற்கு உள்ளாகும் மனநோயாளி அவர்களின் குடும்பத்தினர்கள் எப்படி அலுப்பும் எரிச்சலும் ஏற்பட்டு நோயாளியை தாட்சண்யம் இல்லாமல் உதாசீனப் படுத்துவார்களோ, அதே உதாசீனத்திற்கு சபரிநாதனும் ஆளாகிவிட்டார்.

வீட்டில் வைத்து அவரை சமாளிப்பதே பிரச்சனையானபோது, ஒரு கட்டத்தில் குற்றாலத்தில் இருக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சைகள் செய்யும் மனநல மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்க்கப்பட்டு விட்டார்.

ஒருசமயம் குற்றாலம் போய் அவரைப் பார்க்கச்சென்ற அவருடைய மகள்கள் சிகிச்சைகளின் ஒரு பகுதியாக பிரதான அருவியில் குளிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த மற்ற மன நோயாளிகளின் வரிசையில் வெறித்த பார்வையோடு சபரிநாதனும் நடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்து நெஞ்சே வெடித்துப் போவதுபோல் அழுதார்கள்… நாளடைவில் சபரிநாதனின் குற்றாலக் கோலத்தைப் பார்க்க மனிதர்கள் வருவது அபூர்வமாகிவிட்டது.

ஆனால் அவரின் மகள்கள் வேறொரு மனிதாபிமான மரபை தயக்கம் காட்டாமல் முன்நின்று ஒரு காரியத்தை முழு மனதுடன் செய்து முடித்தார்கள். ஏழ்மை என்ற ஒரே காரணத்தினால் சபரிநாதனுக்கு மனைவியாக கழுத்தை நீட்டி எல்லா அவமதிப்பையும் அடிமைத் தனத்தையும் அவரிடம் அனுபவித்த ராஜலக்ஷ்மியின் கால் விலங்கு போல அவளில் கிடந்த தாலிக்கொடியை அவள் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்க விரும்பாத பட்சத்தில் அதைக் கழற்றி எரிகிற சுதந்திரத்தை சபரிநாதனின் மகள்களே ராஜலக்ஷ்மிக்கு அளித்தபோது ஒரேயொரு தடவை அவளின் கண்கள் மூடித் திறந்தன. ராஜலக்ஷ்மிக்கு ஏகப்பட்ட சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்தனர். அதற்குமேல் அவளிடமிருந்து சொல் வடிவத்தில் எந்த அபிப்பிராயமும் வெளிப்படவில்லை. வாயடைத்துப்போய் நின்றாள்.

ராஜலக்ஷ்மிக்கு சபரிநாதன் என்ற பாதாளச் சிறையில் இருந்து சுதந்திர வானத்தில் சுப்பையாவுடன் சேர்ந்து பறக்க உணர்வுகள் உள்ளூர பொங்கிக் கொண்டுதான் இருந்தன. துடைக்க முடியாத அவமானத்திலும் தப்பிக்க முடியாத தண்டனையிலும் சபரிநாதன் மாட்டிக்கொண்ட வினாடியே திம்மராஜபுரத்தை விட்டு சுப்பையாவுடன் பறந்துவிட இறக்கைகளை சிலிர்த்துத் தயாராக ராஜலக்ஷ்மி இருந்தது உண்மைதான்…

ஆனால் கடும் மனச்சிதைவுக்கு ஆளாகி, கோர விபத்துக்கும் உள்ளாகி, கடைசியில் தீராத மன நோயாளியாய் குற்றாலத்தில் வேறோருவித கைதி போல இருக்கும் நிலைமைக்கு சபரிநாதன் சீரழிந்து விட்டபோது ராஜலக்ஷ்மியின் மென்மையான மனிதநேயம் அலறிவிட்டது.

இந்தக்கதி ஏற்பட்டதற்கு காரணம் சபரிநாதன்தான். அவருள் இப்படியொரு மாயகானல் நாடகத்தை எழுதி அதிலேயே ஒரு கதாபாத்திரமாகவும் கிடந்தது அவர்தான். இந்த மாய நாடகத்தில் ராஜலக்ஷ்மி நிஜத்தில் எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்றுக் கொண்டதில்லை என்றாலும்கூட சபரிநாதன் அவளை ஒரு கதாபாத்திரமாகத்தானே பார்த்தார். போர்த்தப்பட்ட அந்தத் தோற்றமே ராஜலக்ஷ்மிக்கு குற்ற உணர்வைத் தந்தது. அவளைக் கண்ணீர் விடவும் வைத்தது…

சிறையில் இருந்து தப்பவேண்டும் என்றுதான் தவித்தாளே தவிர, சிறைச்சாலையே இப்படித் தவிடு பொடியாகவிட வேண்டும் என்று அவள் நினைத்ததே கிடையாது. இப்போதும் மற்றொரு கணிதப்படி அவளுக்கு சுதந்திரம் கிடைத்துதான் விட்டது. ஆனால் அவளுடைய இறக்கைகள் பறப்பதற்காக இன்னமும் விரியவில்லை. இனம்புரியாத பயம் மனசைப்போட்டு அழுத்திக் கொண்டிருந்தது. சுப்பையாவுடன் ஓடிவிட மனதில் ஏற்படுத்திக் கொண்டிருந்த தயார்நிலை ராஜலக்ஷ்மிக்குள் வடிந்து வற்றிப்போய் விட்டது. எந்தத் தீர்மானத்திற்கும் அவளால் வரமுடியவில்லை. உறைந்துபோன ஜடமாக படித்துறையிலேயே அமர்ந்திருந்தாள்.

ராஜலக்ஷ்மியின் இந்த இறுக்கமான பேச்சற்ற பேதலிப்பை சபரிநாதனின் மகள்களால் தாங்கவே முடியவில்லை. சொற்களால் எவ்வளவு அசைத்தும் அசைந்து கொடுக்காத பாறையாக இருந்த ராஜலக்ஷ்மியின் மெளனத்தை சம்மதமாக நினைத்து சபரிநாதனின் மகள்கள் வேகமாக அடுத்தடுத்து காரியங்களில் இறங்கினார்கள்…

திம்மராஜபுரம் ஊர் சமூகத்தில் நடைமுற ஒன்று உண்டு. கல்யாணமான ஒரு ஆண் குணப்படுத்த முடியாத மனச்சிதைவுக்கு ஆளாகிவிட்டால், அவனுடைய மனைவி விரும்பினால், அவனின் மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து அவளை விடுவித்துக் கொள்ளலாம். அதேபோல மனைவிக்கு மனச்சிதைவு ஏற்பட்டாலும் அவளுடைய கணவன் அவளை மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடலாம். திம்மராஜபுரத்தில் இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிற ஒரு நடைமுறை. சபரிநாதனின் பெண்கள் இந்த நடைமுறையைத்தான் ராஜலக்ஷ்மிக்கும் – அவள் வார்த்தைகளால் சம்மதிக்காத நிலையிலும் – செயல்படுத்திக் கொடுத்தார்கள்.

அப்போதும் ராஜலக்ஷ்மி எதுவும் பேசாமல் கண்களை மூடித் திறந்தாள். அவள் சந்தோஷமும் படவில்லை; வேதனையுடன் தலை குனியவும் இல்லை.

எல்லோருக்கும் மெளனமாக வணக்கம் தெரிவித்துவிட்டு ராஜலக்ஷ்மி கல்லிடைகுறிச்சியில் இருக்கும் அவள் அம்மா வீட்டிற்கு போய்ச் சேர்ந்தாள். அவளின் எதிர்காலத்திற்கு தேவையான பெருளாதார பாதுகாப்பு அனைத்தையும் அவளுக்குச் செய்து கொடுத்துவிட்டுத்தான் சபரிநாதனின் பெண்களும் ஊர் திரும்பினார்கள்.

திம்மராஜபுரத்தில் நடந்துவிட்ட இந்தக் களேபரங்களின் மத்தியில் சுப்பையா மிகுந்த மன வருத்தத்துடன் ஹைதராபாத்துக்கு மனவியுடன் திரும்பிச்செல்ல வேண்டியதாகிவிட்டது. அவனால் ராஜலக்ஷ்மி இல்லாமல் திரும்பிப் போகவும் முடியவில்லை, திம்மராஜபுரத்திலேயே தங்கவும் வழியில்லை.

இதையெல்லாம் தாண்டி இரண்டாவது மோட்டடார் பைக்கையும் சபரிநாதன் தீ வைத்துவிட்டு ஓடியதின் பின்னால் ஏதோவொரு மர்மம் இருப்பதாகவும், அதில் சுப்பையாவுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கிசுகிசுத்தார்கள். இதனால் சுப்பையாவுக்கு ஊர்க்காரர்களுடன் இயல்பான உறவில் ஒரு தொய்வு வந்துவிட்டது.

காந்திமதி நினைத்திருந்தால் சுப்பையாவுக்கும் ராஜலக்ஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாக ஊர்க்கூட்டத்தில் சொல்லியிருக்க முடியும். ஆனால் அதைச் சொன்னால் வேறு கிக்கல்கள் ஏற்பட்டுவிட வழி இருந்தது. அதனால் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டாள். ஆனால் என்றைக்காவது ஒருநாள் அவர்கள் ஓசையே இல்லாமல் இணைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் காந்திமதிக்கு இருந்தது. உணரவும், புரியவும் முடியாத நிலையில் சபரிநாதன் இருந்தாலும்கூட காலம் முதலில் அவருக்குத்தான் கனிந்தது.

பல நாட்கள் கழித்து திடீரென ஒருநாள் காந்திமதி அவளுடைய அப்பா அழகர்சாமியுடன் ஒருவித கழிவிரக்கத்தோடு குற்றாலத்தில் மனநல சித்த வைத்திய மையத்தில் பத்தோடு பதினோராவது மனநோயாளியாக இருக்கும் சபரிநாதனைப் பார்த்து வரப்போனாள். அவள் போன நேரம் மன நோயாளிகள் பிரதான அருவியில் குளிக்கிற நேரம். வரிசையில் அணிவகுத்துச் சென்ற சபரிநாதன், காந்திமதியை வெறித்த பார்வை பார்த்தார். அவரின் தோற்றம் காந்திமதியின் மனதை சம்மட்டியாகத் தாக்கிவிட்டது.

ஒரு காலத்தில் கம்பீர ஆணழகனாகத் தோற்றமளித்த மனிதர், பஞ்சப் பராரியாக தற்போது அழிந்து போயிருந்தார். காந்திமதி குற்றாலநாதர் கோயிலின் பிரகாரத்தில் உட்கார்ந்துகொண்டு கண்ணீர் விட்டாள். தான் பஞ்சாயத்தில் உண்மையைச் சொல்லி தப்புப் பண்ணிவிட்டதாக காந்திமதியால் நினைக்க முடியவில்லை. மாறாக இந்தக் கொடிய நிலையில் சபரிநாதனுக்கு தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்றுதான் தவித்தாள். ஆனால் என்ன செய்வதென்று புரியவில்லை. சரியாகச் சாப்பிடாமலும்; சரியாக உறங்காமலும் எழெட்டு நாள் காந்திமதி மனதைப்போட்டு குழப்பிப் பார்த்தாள். பால் கொதித்து விருவிருவென்று பொங்குவது போல ஒரு எண்ணம் அவள் மனதில் பொங்கி வழிந்தது… அது ஒரு தெய்வீக முடிவு…

அடுத்த பத்தாவதுநாள் சபரிநாதனின் மகள்கள் உட்பட பெரியவர்களும் ஊர்க்காரர்களும் பஞ்சாயத்தில் கூடியபோதுதான் காந்திமதி அவளின் தீர்மானத்தை வெளியிட்டாள்.

சபரிநாதன் இனி குற்றாலத்தில் அனாதை போல இருக்க வேண்டியதில்லை; திம்மராஜபுரம் வீட்டிற்கே அவரை அழைத்து வந்துவிடலாம்; அவருடைய ஊரில்; அவருடைய வீட்டில் அவருடைய மனிதர்களின் மத்தியிலேயே வாழ்ந்து வரட்டும். வேளாவேளைக்கு அவருக்கு சமையல் செய்து சாப்பாடு போட்டு; மறக்காமல் அவருக்கான மாத்திரை மருந்துகளை பார்த்துப் பார்த்து கொடுத்து; ஒரு குழந்தையை கவனித்துக் கொள்வதுபோல தான் பார்த்துக் கொள்வதாகவும், அதற்காக தனக்கு எந்தப் பொருளோ சன்மானமோ வேண்டாம் என்றும், வாழ்நாள் பூராவும் மனச்சிதைவிலிருந்து சபரிநாதன் நலம் பெறாமலே போனாலும்கூட கடைசிவரை அவரை தான் பாதுகாத்து வருவதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றும் காந்திமதி கூட்டத்தில் சத்தியம் செய்தாள். இதற்காக மனைவி என்ற ஸ்தானமோ சொத்து சுகங்களில் உரிமையோ தனக்கு வேண்டவே வேண்டாம் என்றாள்.

கூடியிருந்த ஊர்ஜனங்கள் கண் கலங்கினார்கள். சபரிநாதனின் மகள்கள் காந்திமதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நன்றிக் கண்ணீர் விட்டார்கள். யாரைப் பார்த்தாலும் பயந்த, எதைக் கண்டாலும் ஓடத் தயாராகத் தெரிந்த சபரிநாதனை, அவரின் மகள்கள் காந்திமதியிடம் பலவிதத்திலும் பேசிப் பார்த்தபின் ஒப்படைத்தார்கள்.

குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்வது போலத்தான் காந்திமதி சபரிநாதனைப் பெற்றுக்கொண்டாள். அதேநேரம் சபரிநாதனின் மகள்கள் தங்களுடைய அப்பாவின் புதுமனைவி என்ற அடையாளத்தோடு மட்டும்தான் காந்திமதியை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள். வேறுவழியின்றி காந்திமதியும் அதற்கு சம்மதம் சொன்னாள்.

என்ன காரியம் செய்கிறோம் என்கிற பிரக்ஞை இல்லாமலேயே சபரிநாதன் காந்திமதியின் கழுத்தில் புதிய தாலிக்கொடியை அணிவித்தார். மூன்றாவது மனைவி!!

சொன்னபடியே காந்திமதி சபரிநாதனை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள். மூன்று ஆள் சாப்பாட்டை ஒரே ஆளாகச் சாப்பிடும் சபரிநாதனுக்கு அவள் வகை வகையாகச் சமைத்துப் போட்டாள். மருந்துகளையும் மாத்திரைகளையும் தவறாமல் கொடுத்தாள். மாதம் ஒருதடவை மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துச்சென்றாள். எல்லா விதத்திலும் சபரிநாதன் காந்திமதிக்கு கட்டுப்பட்டு நடந்துகொண்டார். நிற்கச் சொன்னால் நின்றார்; உட்காரச் சொன்னால் உட்கார்ந்தார்.

எப்போதாவது முரண்டு பிடித்து நாக்கை துருத்திக்கொண்டு வன்முறையைக் காட்ட சபரிநாதன் முயலும்போது காந்திமதி தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியை சரக்கென்று எரியவிட்டுக் காட்டுவாள். உடனே சபரிநாதன் மிரண்டு அடங்கிப் போய்விடுவார். மற்றபடி காந்திமதிக்கு சபரிநாதனால் எந்தத் தொந்திரவும் இல்லை. ஒரு பள்ளிக்கூடத்துப் பையனை கண்டிப்புடன் நடத்துவது போலத்தான் சபரிநாதனை நடத்தி வந்தாள்.

அதேநேரம் இரவுகளில் இச்சைக்கு உரிய ஆசை நாயகனாகவும் அவரை காந்திமதி பயன் படுத்திக்கொண்டாள். இத்தனைக்கும் அவளுக்குள் கனன்ற துடிப்பின் வேகத்திற்கும் அவரின் அதற்கான உடல் திறனுக்கும் எத்தனை ஏணி வைத்தாலும் எட்டாதுதான்!! இருந்தாலும் ஒன்றும் இல்லாததற்கு இந்த ஊமைப்பிள்ளை போதும் என்கிற திருப்தி காந்திமதிக்கு…!

சபரிநாதனின் மனம் சிதைந்த வாழ்க்கை இப்படி காந்திமதியால் நூதனமாக பராமரிக்கப்படுகிற செய்தி கொஞ்சநாள் கழித்துத்தான் கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் ராஜலக்ஷ்மிக்குத் தெரியவந்தது. அதற்குப் பிறகுதான் மிகப்பெரிய பெருமூச்சு ராஜலக்ஷ்மியிடமிருந்து வெளிப்பட்டது.

விதவையான காந்திமதிக்கு வாழ்வு கிடைத்தது; அறுதலிச் சிறுக்கி என்று அடிக்கடி அவளை கரித்துக்கொட்டிய சபரிநாதனின் கடைசிப் புகலிடம் அதே காந்திமதிதான்; சுப்பையா சூழ்நிலையால் தன் மனைவி சுகுணாவுடன் சேர்ந்துகொண்டான்; ராஜலக்ஷ்மி இளவயதில் புதியதொரு சதந்திரத்துடன் ஏராளமான சொத்துக்களுடன் தனித்து விடப்பட்டாள்.

முடிந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “தெய்வீகக் காந்திமதி

  1. அப்போ ராஜலக்ஷ்மி என்ன ஆனாள்???/ அவளை நிறைய ரசிக்க வையுங்கள் …puthakam, paatu endru அனுபவிக்க வையுங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *