கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2023
பார்வையிட்டோர்: 2,506 
 
 

பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6

மங்களம் ப்ரியாவுக்கு காஃபி எடுத்து வந்தாள். ”என்ன, சாப்பாட்டுப் பொட்டலங்கள் எல்லாருக்கும் சரியாக இருந்ததா? இப்பத் தான் குடுத்து முடிச்சியா?” என்று கேட்கவும், ”ஓஹோ, நிம்மி எல்லாம் சொல்லிட்டாளான்னு” சொன்ன ப்ரியா, ”எல்லாம் கரெக்டா இருந்தது. ரொம்ப த்ருப்தியா சாப்பிட்டான்னு,” சொன்னாள். பின் மங்களத்திடம் தன் பாங்குல கூட வேலை செய்யறவனோட தங்கை கல்யாணம், அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள கால் கொஞ்சம் ஊனமுள்ள பிள்ளை முன் வந்து, அதில் தன்னை யோசனை கேட்டது, அவன் நல்லவனாய் இருந்தால் தாராளமா பண்ணலாம்னு தான் சொன்னது பற்றியும் சொன்னாள். பேச்சு அப்படியே இந்தக் காலத்தில் பெண் வீட்டார்கள் போடும் கண்டிஷன்களைப் பற்றியும், கல்யாண ஃபோட்டோ, வீடியோன்னு வேற பக்கம் திரும்பியது. ”நல்ல காரியம் பண்ண. உடல் ஊனம் பரவாயில்ல, மனம் ஊனம் தான் கூடாது,” என்ற மங்களம், ”ஆமாம், பையன் எந்த ஊரில் இருக்கான்னு” கேட்க, அவன் டெல்லில இருக்கான். கொரோனா டைம்ங்கறதாலே பொண் பாக்கறது, நிச்சயம் பண்ணறது எல்லாம் ஜூம் மூலமாத்தான் பண்ணப்போறான்னு சொன்னாள் ப்ரியா.

இதைக்கேட்ட தைலா, “எங்க காலத்தில கல்யாணத்துல ஃபோட்டோ எடுக்கறது கூட கிடையாது. இந்தக் காலத்துல தான் எவ்வளவு சௌகரியம்,” என்று சொல்ல, ”கொள்ளுப்பாட்டி, அப்படி இருந்திருந்தா நான் ஒங்க சின்ன வயசு ஃபோட்டோவைப் பாத்திருப்பேனே,” என்ற நிம்மியிடம் தைலா,  “நீ நெனக்கறா மாதிரி அது ஒண்ணும் அவ்வளவு அழகா இருக்காது, எண்ணையை ஒரு வண்டி தடவி தழைச்சு வாரிய தலைமுடி, மூக்கில புல்லாக்கு ரவிக்கை முழங்கை அளவு, பவுடர் பூச்சு இல்லாத முகம், கண்ணில் அப்பிய மை எல்லாம் சேர்ந்து கிராமக் களை சொட்டும். இந்தக் காலத்துல பெண்களுக்கு அழகுணர்ச்சி அதிகமா இருக்கு. கல்யாணத்துல அல்லது விசேஷ நாட்கள்ல ஒப்பனை பண்ணிக்கறா. அதனால ப்யூடி பார்லர்கள் நெறைய வந்துடுத்து. அதனால் அவாளுக்கு பணமும் வர்றது, சுயமா சம்பாதிக்கிற தைரியமும் வந்துடுத்து. அந்தக் காலத்தில டாய்லெட் ஸெட்டுன்னு கல்யாணத்துல குடுப்பா சீப்பு, கண்ணாடி, சோப்பு இது மாதிரி.   இந்தக் காலத்துல மேக் கப் பொருட்கள் கொடுக்கறது ஒரு சின்ன ஸூட்கேஸ் அளவு இருக்கு” என்றாள்.

அதற்கு ப்ரியா, ”எங்கம்மா கல்யாண ஃபோட்டோ கூட கலர் கிடையாது, கறுப்பு வெள்ளை தான். ஆனால் என் கல்யாண சமயத்தில் அதோட வீடியோ கூட வந்துடுத்து,” என்றாள். நிம்மியிடம், ”நிம்மி, உனக்குத் தெரியுமா? அடுத்த வருஷம் ஜனவரி மாசம் திறக்கறதாயிருந்த ஸ்கூல் இப்போதைக்கு திறக்காதுன்னு நெனக்கிறேன். ஏன்னா கொரோனா புது மாதிரி வருதாம். அது ரொம்ப மோசமானதாம். அதனால ஜூம்ல தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு க்ளாஸ் நடக்கும்னு நெனக்கிறேன்” என்றதும், “பரவாயில்லம்மா, நமக்கு வருஷம் வேஸ்ட் ஆகக்கூடாது, அவ்வளவு தானே,” என்றாள் நிம்மி.

ப்ரியா, ”அம்மா நீ இங்கிலீஷில் எழுதின கொரோனா பத்தின போயம் ஹிந்து பேப்பரில் வந்துருக்கு பாத்தயான்னு” கேட்க, மங்களம், “நான் எழுதிப் போட்டதோட சரி. அப்புறமா அதை நெனைக்கவே இல்ல” என்று சொல்லவும் நிம்மி அவளிடம், ”பாட்டி, கிராமத்தில படிச்சு இவ்வளவெல்லாம் தெரிஞ்சுண்டிருக்கேள்.  நீங்க வேலை வேற பாத்ததா அம்மா சொன்னா, அது எப்படி?” என்று அடுத்த வம்புக்குத்தாவ, தைலா, ”நான் விவரமா எல்லாத்தையும் சொல்றேன். உங்கம்மா அரைகொறையா தப்பா ஏதோ உங்கிட்டே சொல்லியிருக்கான்னு,”  கூறி  ஃப்ளாஷ்பாக்கை ஆரம்பித்தாள்.

”நான் படிக்கிற காலத்துல ஸ்கூலெல்லாம் கிடையாது. மரத்தடில எல்லாரும் ஒக்காந்துக்குவோம். வாத்தியார் ஒத்தொத்தருக்கா மணலைப் பரப்பி . கையப் பிடிச்சி எழுதக் கத்துக் கொடுப்பார். தப்பா எழுதினா அந்த மணலையே கொஞ்சம் கையில வெச்சுண்டு பசங்க கையில் திருகி விடுவார். வலி தாங்காது. யூனிஃபார்மெல்லாம் கிடையாது. அதுக்கப்பறமா தான் எங்க கிராமத்தில ஸ்கூல் வந்தது. அதுவும் கூரை வேஞ்சு கதவு மூங்கில் தட்டி போட்டிருக்கும் 5வது வரைக்கும் தான் படிக்கலாம். அதனால என்னோட மச்சினர்களுக்கு குழந்தைகள் படிப்புக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. பெரிய மச்சினர் வேதம் படிச்சு கனபாட்டிகளா வேலை பாத்தார். சின்னவர் பாட்டுக் கத்துண்டு அது மூலமா சம்பாதிச்சிண்டு இருந்தார். என் பெரிய ஓரகத்தியின் அண்ணாவுக்கு அமெரிக்கால கோவில்ல வேலை செய்ய வாய்ப்பு கெடச்சுது. அவருடைய தயவால பெரிய மச்சினரும் அமெரிக்கா கிளம்பிட்டார். என் மாமனார், மாமியாருக்கு இதுல இஷ்டமே இல்லை. கொஞ்ச நாள் கழிச்சு சின்னவரும் அண்ணா கூப்பிட்டார்னு கிளம்பிட்டார். இவருக்கு சான்ஸ் கெடச்சும் வயசான காலத்தில அம்மா அப்பாவை விட்டுட்டு நான் வர மாட்டேன்னு என் புருஷன் சொல்லிட்டார். என் குழந்தைகள் சின்ன கிளாஸ்ல இருந்ததால எந்த பிரச்சனையும் இல்லாம இருந்தது. இது நடுல என் மாமனார், மாமியார் ஏதோ கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண படகுல போறச்சே அது மூழ்கிப் போய் அவாளும் செத்துப் போயிட்டா. யாருக்காக ஊரை விட மாட்டேன்னு சொன்னாரோ அவாளே போயிட்டா. அதனால தன் முடிவை மாத்திண்டுட்டார். அந்த சமயத்தில என் புருஷனோட நண்பன் இவரைப் பார்க்க வந்துட்டு ‘நீ மெட்ராஸ் வந்துடு, இங்க இருந்தா உன் குழந்தைகள் படிப்பு வீணாயிடும்னு’ சொல்ல, இவர், ’நான் அதிகம் படிக்கலயே, எனக்கு என்ன வேலை கெடைக்கும்’னு; கேட்டார். அதுக்கு நண்பர், ’கடையில் கணக்கு எழுதினா கூட இங்கே கிடைக்கிறதை விட நெறைய கிடைக்கும். கவலப்படாதே, தைரியமா வா, நான் பாத்துக்கறேன்’னு சொன்னதால நாங்கள் மெட்ராஸ் வந்தோம்.

அந்தக் காலத்துல ரயிலே ஏற மாட்டா. அதப் பூதமோ பிசாசோன்னு நெனச்சு பயப்படுவா. எங்க போறதா இருந்தாலும் மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி தான். மெட்ராசுக்குப் போறதா இருந்தால் இதெல்லாம் பத்தாது. ரயில்ல தான் போகணும். அதுக்கு கொஞ்சம் அதிகமா செலவழியும். அதுவுமில்லாம என்ன தான் எங்காத்துக்காரரோட நண்பர் நான் பாத்துக்கறேன்னு சொன்னாலும் புது ஊரில கையில காசில்லாம சம்பளம் வருகிற வரைக்கும் காலம் தள்ள முடியுமா?  அதனால முன்னே எப்பவோ  பதக்கத்தோட கெடச்ச சங்கிலியை வித்துப் பணமாக்கி வெச்சுண்டோம். நல்ல வேளை அதில் இருந்தது வைரக்  கற்கள் என்பதால் நல்ல விலைக்குப் போச்சு.”

”நண்பரே வீடு பாத்துக் குடுத்தார். கிராமத்தில தனி வீடு விசாலமா இருக்கும். இங்கே ஸ்டோர் மாதிரி வீடு. சின்னதா இருக்கும். வரிசையா  பல குடித்தனங்கள் இருக்கும். எல்லாருக்கும் பொதுவான குழாய், பாத்ரூம், டாய்லெட். அவசரத்திற்கு ஒண்ணும் நடக்காது. எல்லாத்துக்கும் லைன்ல் நிக்கணும்.  ப்ரைவஸி கிடையாது. எல்லார் வீட்டு சமாசாரமும் எல்லாருக்கும் தெரியும் அடுத்தவா வீட்டில என்ன நடக்கிறதுன்னு தெரிஞ்சுக்கற வம்பு. பக்கத்திலேயே ஸ்கூல் இருந்தது. என் கொழந்தைகள் நன்னா படிச்சதினால ஸ்காலர்ஷிப் கெடச்சுது என் பிள்ளையும் கடையில துணி எடுத்துப் போட்டு சம்பாதிச்சான். இது நடுவுல என் மச்சினர்கள் ரெண்டு பேரும் வந்து வீட்டை வித்து கொஞ்சம் பணம் குடுத்தா. அப்ப என் பொண்ணு மங்களம் காலேஜ்ல B.Sc சேர்ந்தா. பிள்ளை சாம்பு இஞ்ஜினீயரிங்க் படிச்சுண்டிருந்தான். அவனுக்கு வெளிநாட்டுக்குப் போய் M.S படிக்கணூம்னு ஆசை.  இஞ்ஜினீயரிங்க் முடிச்சு கொஞ்ச நாள் வேலை பாத்து பணம் சேர்ந்தப்புறமா அமெரிக்கா கிளம்பிட்டான்.

மங்களமும் படிப்பு முடிஞ்சு ஸிண்டிகேட் பாங்க்ல லேடீஸ் ப்ராஞ்சுல வேலை பாத்தா. அங்கே வேலை செய்யறவா எல்லாரும் பொண்கள் தான். பயமில்லேன்னு யாரோ சொன்னதாலே அனுப்பிச்சேன். நிம்மி, நீ கேட்ட கேள்விக்கு இவ்வளவு பெரிய பதில் இருக்கு. உங்கம்மா இதெல்லாம் சொல்லியிருக்க மாட்டாளே?” என்று சொன்ன தைலா பாட்டியிடம், ”ஆமாம், கொள்ளுப்பாட்டி. ஆனால் அம்மாவுக்கு ஏது டைம் இதெல்லாம் விவரமாச் சொல்ல? கார்த்தால எழுந்து சமைச்சு கையில்  கட்டி எடுத்துண்டு ஆஃபீஸுக்கு ஓடணும். நல்ல வேளை, கொரோனாவால இப்ப வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணிண்டிருக்கா. அதிலும் கஷ்டம் தான் டாக்யுமெண்ட்ஸ் எல்லாம் ஆஃபிஸ்ல இருக்கும். அதனால நெனெச்சு நெனச்சு ஃபோன் பண்ணுவா. அதுக்கு ஆஃபீஸ் போயிட்டு வர்றதே பரவாயில்லைன்னு தோணறதுன்னு அம்மா சொல்லுவா.”

(தொடரும்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *