கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 3,274 
 

(2005ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

இவ்வுலகம் ஒன்று. 
ஆண்,பெண், மனிதர், தேவர்
பாம்பு, பறவை, காற்று, கடல்
உயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே. 
-பாரதியார். 

சின்னப்பொண்ணு அந்தப் பக்கம் நகர்ந்ததுமே, வெயிலின் உக்கிரம் ஜாஸ்தியானது மாதிரி இருந்தது சின்னராசுவுக்கு… சிதை நெருப்பு மாதிரி உச்சி வெயில் காந்தியது. 

“அப்பாரு இன்னங் காங்கயலியே…இம்புட்டு நேரம் என்ன தான் பண்ணுறாக…” 

கால் மாற்றி நின்று வாய் விட்டு முனகினான். 

கடைசி ஊர்வலம் முழுசும் உள்ளே போய்விட்டது. கூடவே போன நாய் ஏதோ அவசரம் போல – விடுவிடுவென்று ஓடி வந்து, பழைய இடத்தை மோந்து பார்த்து. காலால் மண்ணில் குழி பறித்து அங்கேயே படுத்துக் கொண்டது. 

உள்ளே போய்ப் பார்க்கலாமா.? 

சின்னப் பொண்ணுவையும் பார்த்தது மாதிரி இருக்குமே… 

நப்பாசை. தயக்கம். ஆனாலும் கால்கள் உள்ளே நகர்ந்தன. வலது பக்கமிருந்த மயான அலுவலக அறையிலிருந்தாள் சின்னப் பொண்ணு. இவனைக் கவனிக்கவில்லை. சடலம் கொண்டு வந்த கும்பல் அறை வாசலில், மெதுவாக அந்தப் பக்கம் போனான் சின்னராசு. 

அது ஒரு மூன்று கிரவுண்ட் விஸ்தாரமான மயானம். எரிப்பதற்கு அங்கங்கே ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் தகனமேடை. அங்கங்கே புதைகுழி தோண்டியபடி சில வெட்டியான்கள்…ஆடாமல் அசையாமல் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றய மாதிரி சோகமாய்ப் பெரிய பெரிய மரங்கள். தீனமான குரலில் ஊளையிடும் நாய்கள் “கர்கர்” ரென்று தலை சாய்த்து சந்தேகத்துடன் பார்த்துப் பலகாரங்கள், வேகாத சில பிணத்துண்டுகளைக் கொத்தும் காகங்கள். 

“என்னண்ண.? திரும்பி வந்துட்ட?” 

“இல்ல மணி. வெயிலு உச்சிக்கு ஏறிடுச்சு. ஒண்ணுஞ் சாப்பிடாம  கிறுகிறுன்னு வருது. அப்பாரு வரக் காணோம் அதான்…” 

“ம்ம். எனக்கெல்லாம் கிறுகிறுப்பு – தின்னாத்தான் வரும். வெறும் வவுறு கப்சிப்னு கிடக்கும். இப்பப் பாரேன். காக்கா பலகாரம் மூக்கு முட்டத் துண்ணேன். மயக்கம் வருது இந்தக் கட்டய முடிக்க இன்னொரு மூணு மணி நேரமாவும். அது வரைக்கும் நகர முடியாது…” 

மூணடி உயரமுள்ள அவனை விடவும் நீளமான வெட்டிக் கம்பால் லாவகமாய்ப் புரட்டிப் போட்டான் மணி. 

“குழி தோண்டனும்னு சொன்ன?” 

“ம். தோண்டியாச்சு. சின்னப் புள்ளதான். தொட்டிலு மாதிரி சின்னத வெட்டியாச்சு. சின்னதுன்னாலும் பொணம் கனக்குமே., ‘தம்’ புடிச்சு என்னால குழியில எறக்க முடியாது. அதான் அப்பாரு இதை எரிச்சு முடிக்கச் சொல்லிச்சு…”

“இன்னும் ரெண்டு வரட்டி போடுல…வேலையத்தப் பசங்களோ பேச்சுக் கொடுத்தா வேலை முடியுமா? ம்? வேலையை முடி…”

தூரத்திலிருந்து குரல்

“ம்…போடுதேன்.” 

வரட்டியில் தீப்பற்றி – அவனை விட உயரமாய்த் தீ எரிந்தது. முகச்சுளிப்பு இல்லை. எரிச்சல் இல்லை. கோபமுமில்லை. எரிந்து கொண்டிருந்த தழலின் பின்னணியில் மணியின் முகம் ஜொலித்தது. கோயிலில் யாகம் செய்து அக்கினிக் குண்டத்தைப் பெரிதாக்குவதுமாதிரி பொறுப்பாய்ச் செய்தான் மணி. பத்து வயசுக்கு இத்தனைப் பொறுப்புணர்ச்சியா?. சிந்தனையுடன் நகர்ந்தான் சின்னராசு. 

இருசப்பன் வேலையை முடித்து மரத்தடியில் சரிந்திருந்தான். கையிலிருந்த ஒரு சாண் பாட்டிலில் இருந்து சாராயத்தைச் சர்ரென்று உறிஞ்சினான். இடுப்பு பெல்ட்டில் செருகியிருந்த பொட்டலத்தைப் பிரித்து கருவாட்டுத் துண்டை ஒரு வாய்க் கடித்தான். மறுபடியும் சாராயத்தைக் கடகடவென்று குடித்து முடித்தான். காலியான பாட்டிலை எரிந்து கொண்டிருந்த சிதையில் எறிய…. அது பட்டென்று வெடித்துச் சிதறியது. 

“என்ன? லேட்டு? முடிஞ்சதா?” 

“என்னலே லேட்டு? ம்? கலெக்கிடரு உத்தியோகம் தட்டுக் கெட்டுப் போவுதா? முழுசா எரிஞ்சாத்தான்ல நகர முடியும். அரைகுறையா விட்டா.. சோத்துல கை வைக்க மனசு வராது…குத்தமா நினைக்கத் தோணும். இந்தா ஒரு கை குடு…” 

கடைசித்துண்டு கருவாட்டை வாயில் போட்டு நறபுறவென்று கடித்தான் இருசப்பன். டிராயரில் கையைத் துடைத்து-நீட்டினான். 

ஒரு நிமிஷம் போலத் தயங்கினான் சின்னராசு. நாற்றம் அருவருப்பு தயக்கம் இருந்தாலும். தள்ளாடும் அப்பாவை அடுத்த நிமிஷம் தாங்கிப் பிடித்தான்… 

“அம்மா அரிசி எடுத்தாரச் சொல்லிச்சாம்…” 

“நல்லவேளை. நினைப்பூட்டின. அந்தா பாரு பொட்டலம். அதான் எடுத்துக்கோ. பையி பக்கத்துல இருக்கு…”

சின்னராசு பொட்டலத்திலிருந்து அரிசியைப் பையில் கொட்டினான்.

“நல்ல மனுசங்க. அஞ்சு கிலோ அரிசியாச்சும் தேறும். இம்புட்டு யாரும் தரமாட்டாங்க… பக்கத்துல ஜல்லாத் துணி இருக்க..? 

“ம்…” 

செக்கச் செவேலென்று அடிக்கும் நிறத்தில் ஒரு சட்டைத்துணி. 

“அதையும் வச்சுக்க..சம்பத்துக்கு அடுத்த வாரம் பொறந்த நாளு வருதே. அதுக்காச்சு. ரெண்டு மூணு வருஷமா அவம் பொறந்த நாளுக்குப் புதுசு எடுக்காமத் தட்டிப் போச்சு..இன்னிக்குப் பொணம் விழுந்துதோ…புதுசு கிடைச்சுது..” 

துணிப் பையோடு வாசப்பக்கமாய் நடந்தார்கள் ரெண்டு பேரும். சின்னப் பொண்ணு வரட்டியோடு முன்னே நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளோடு பேசியதைச் சொல்லலாமா? 

“பொட்டச்சிங்க கூட வெட்டியான் தொழிலுக்கு வந்தாச்சு, அதுங்கள்ளெல்லாம் போட்டி போட்டா..ஒன்ன மாதிரி ஆம்பளைங்க என்னத்தைச் சம்பாதிக்க? எப்படிக் குடும்பத்தைக் காப்பாத்த..?

இருசப்பன் ஆவலாதி பேசி வெளியே வந்தான். 

ஏற்கனவே உள்ளே போன ஊர்வலத்தின் சிலர் வெளியே கும்பல் கும்பலாய் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். 

இருசப்பனின் குரல் கேட்டதும் அந்த நாய் கண் முழித்து ஒரு தரம் ‘லொள்’ ளென்று குலைத்தது. இவனைப் பார்த்து ஓடி வந்து வாலை ஆட்டியது. அவனை மோந்து மோந்து பார்த்தது. 

“த்த.. சும்மாக் கெட நாயி..வேளையத்த வேளையில காலைச் சுத்தி சுத்தி வந்துட்டு…” 

காலால் சுள்ளென்று அதை எட்டி உதைத்தான் இருசப்பன். “ஊஊஊ” என்று ஊளையிட்டுக் கழுத்தைத் தாழ்த்தி ஓடியது நாய். 

“என்னமா வெயிலு பொசுக்குது சின்ராசு. பொணம் எரிக்கிற நெருப்புக் கூட குளு குளுன்னு தான் இருக்கு. உசிரோட வறுத்தெடுக்குதே வெயிலு. யம்மாடி…” 

இடுப்புத் துண்டால் துடைத்துக் கொண்டான் இருசப்பன். 

சின்னப்பொண்ணு டீக்குச் சொல்லி வைத்திருக்கிறாளே குடிக்கலாமா? அப்பாவிடம் சொல்லலாமா? 

நினைப்பு ஓடியது சின்னராசுவின் மனசில். 

“டீ குடிக்கலாமாப்பா…?” 

“குடிக்கலாந்தா.. சில்லறை வச்சிருக்கியா.?” 

“ம்…ஹாங்.. என் கையி காலிதான். எதிர்க்கடையில கணக்குல சொல்லலாம்..” 

“யாரு கணக்குல? திருப்பித் தர்ற கணக்கா? தராத கணக்கா? ஓசில குடிக்கிற கணக்கா?’” 

விஷயத்தைத் சொல்லும் முன்பே படபடவென்று பொரிந்தான் இருசப்பன். 

“நம்ப.நம்ப சின்னு..சின்…சின்னப்பொண்ணு கணக்குல…”

“அட… இன்னிக்குத்தான் ஊர்லேருந்து திரும்பிருக்க… அதுக்குள்ளாற கண்டு பேசி..கணக்குல டீ குடிக்கறவரையும் வந்தாச்சா.? ..வெட்கக் கேடு..” 

எச்சிலையெல்லாம் சேர்த்துத் துப்பினான் இருசப்பன். 

“பொட்டச்சி கணக்குல டீ குடிக்கற ஆளு நானில்ல. சோத்துல உப்புப் போட்டுத்தான் திங்கறேன். நீ வேணாப் போயி குடி… மாமம் பொண்ணு கணக்குன்னா சொகந்தான். பெருசுங்க சண்டைகுடுமி பிடி… அடிதடி எல்லாம் வச்சுக்கிறோம். நீ குடி… போப்பா… மவராசனாக் குடிச்சிட்டு வா…”

நக்கலும் எள்ளலுமாய்க் கேலி துள்ளியது இருசப்பனிடம். 

“இத்தினி வருஷமாச் சண்டை தாம்ப்பா…முடியணுமில்லா என்னிக்காச்சும்…? என்ன நீயோ. உன்ன நானோ நெருப்பள்ளிப் போட்டு எரிக்கறதுக்கு முன்னாடி முடிக்கலாமே…” 

நினைத்த வேகத்தில் சின்னராசுவால் இத்தனைக் கோர்வையாய்ப் பேச முடியவில்லை..தயக்கமா… விட்டு விட்டு, அப்பாவின் கோபத்தைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் வார்த்தை வார்த்தையாய்ப் பேசினான். சின்னராசு. 

“ம்..கலயத்துல என் சாம்பலை அள்ளினப்பறம் பண்ணு… மொதல்ல நீ சரியாவு… பொட்டச்சிங்க கூட வெட்டியான் தொழிலுக்கு வந்தாச்சு…. ஆம்பளைங்க என்னத்தச் சம்பாதிக்க…? கும்பி காயாம காப்பாத்..?” 

வழியிலிருந்த கல்லில் கண் தெரியாமல் தடுக்கி விழப் பார்த்த இருசப்பனைக் கையால் தாங்கிப் பிடித்தான் சின்னராசு. 

“இன்னும் எத்தினி நாளுக்குப் பார்வை இருக்கும்னு தெரியல்ல.. கண்ணு அவிஞ்சி போயி, அப்பனுக்கு வாரிசாப் பக்கத்துல குந்தப் போ – றேனோ என்னவோ.? மிஞ்சிப் போனா ரெண்டு வருஷம். சாம்பல் அடிச்சு அடிச்சுக் கண்ணு போனது தான் மிச்சம்…” 

கல்லில் களைப்போடு உட்கார்ந்தான் இருசப்பன். 

“இனியு காலந்தாழ்த்தாத சின்ராசு… ஒத்தாசையா இரு. குடும்பத்துக்கு ஒரு வாய்க் கஞ்சியாவது குடுக்க வேணாமா..? எங்காலத்துக்கப்பறம். அல்லாரும் வவுத்துல ஈரத்துணியப் போட்டுக்க முடியுமா.? வா. தொழிலு கத்துக்க சின்ராசு..” 

வரட்டிக் கூடையோடு முன்னே நடந்து போன சின்ன பொண்ணுவையே கண் கொட்டாமல் பார்த்த சின்னராசு… நானா.. வெட்டியானா..? என்று நினைத்ததுமே உயிர் பிரிந்து உடல் தளர்ந்த மாதிரி அதிர்ந்து போனான்…

அத்தியாயம்-4

காத்தல் இனிது. காக்கப் படுதலும் இனிது.
அழித்தல் இனிது. அழிக்கப்படுதலும் இனிது.
உண்பது நன்று. உண்ணப்படுதலும் நன்று.
தலை நன்று. உயிர் நன்று. நன்று. நன்று.. 
-பாரதியார் 

தாழாங்குப்பம் வழக்கமான குப்பம் போலத்தான் இருந்தது. நாற்றமடிக்கும் கூவத்தின் அதில் ஜலக்கிரீடை செய்துவிட்டுச் சொதசொதவென்று சாக்கடை நீரும். நாற்றமும் சுமந்து ஆடி அசைந்து வெளியே வரும் எருமை. பொது கைபம்ப்பில் துணி துவைத்து, பாத்திரம் கழுவி, குடத்தில் பிடித்துத் தேங்கிய தண்ணீர் குட்டையாய் வழிந்து நிற்க அதில் மொத்தக் குத்தகையாய்க் கொசுப்பட்டாளம். சட சட என்று சிறகடித்துப் பறந்து குப்பையைக் கிளறும் கோழிகள், கொண்டையைச் சிலுப்பிச் சண்டை போடும் சேவல்கள், பருந்தும், நாய்களும் கொத்திப் போகாமலிருக்கக் கூடை போட்டு மூடிய கோழிக்குஞ்சுகள் அதைத் திறந்து குஞ்சுகளை வெளியே விடும் பொடிசுகளைக் கம்பெடுத்து விரட்டும் பெரிசுகள். சோம்பிப் படுத்திருந்த நாய்கள். டிராயர் சட்டை எதுவுமில்லாமல் மூக்கொழுகிக் கொண்டு ஓடிவிளையாடி. சண்டை போட்டு. மண்ணில் புரளும் சின்னஞ் சிறுசுகள். மண்ணில் கட்டம் போட்டுப் பாண்டி விளையாடும் சிறுமிகள்.. குடத்தில் தண்ணீரையும், ஊர்க்கதையையும் சேர்த்துப் பிடித்த பெண்கள், பீடி பிடித்துக்கொண்டு ஒற்றைச் செய்தித்தாள் மேயும் இருபது ஜோடி ஆண் கண்கள், ரோஸ்கலர் இனிப்பு மிட்டாய், பான்பராக், சிகரெட், வாழைப்பழம், பெப்பர்மின்ட் விற்கும் பெட்டிக் கடை புஷ்பா. சிம்னியிலிருந்து நெருப்புப் பற்ற வைத்து, பீடி புகைத்துக் கொண்டே புஷ்பாவிடம் சினிமா ஸ்டைலில் காதல் கதை பேசும் கருப்பன், டீக்கடை வரிசையாய்க் குடிசைகள், வாசலில் துருப்பிடித்திருக்கும் பழைய சைக்கிள்கள், கூறுகூறாய் வஞ்சிரா, நெத்திலி. சங்கரா விற்கும் மீன் ஆயா. கறி விற்கும் கசாப்புக் கடை சாயுபு. அழுகிய காய்கறி பழங்களை வந்த விலைக்குத் தள்ளிவிடும் வண்டிக்காரன், பஞ்சு மிட்டாய்க்காரன், பயாஸ்கோப்காரன். தெருத் தெருவாய் தள்ளிப் போகும் சின்ன குடை ராட்டினம், ஊருக்குக் கேட்பது மாதிரி மாரியம்மன் கோவில் ஒலிபெருக்கி, சாலையோரமாய் உட்கார்ந்து, கதை பேசியபடி குச்சியால் நேற்றைய கழிவைக் கிளறிக்கொண்டே இன்றைக்கு வெளிக்குப் போகும் சின்னஞ்சிறுசுகள், எங்கோ தூரத்தில் ரேடியோ ‘சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள வீடுதான்…’ என்று பாடிக்கொண்டிருந்தது. மத்தியான நேரமாதலால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விதமான சாப்பாட்டு வாசனை, மீன் வாசனை, கருவாட்டு வாசனை, கறி வாசனை, மூலைக் கடையிலிருந்து வந்த சாராய வாசனை இத்தோடு இருசப்பன் உடம்பிலிருந்து பிணவாசனை. 

ரெண்டே தெருக்களில் குப்பத்தின் அத்தனை சமாச்சாரங்களும் அடங்கி விட்டன. இந்த ரெண்டு தெருக்களிலிருந்தும் சற்றுத் தள்ளி ஒரு பத்தடிக்குப் பத்தடி இடத்தில் வேலி போட்டு பளபளத் துணியில் பச்சையும் வெள்ளையுமாய்க் கொடி கட்டி “சுத்தமாய் உள்ளே வரவும் ” என்ற அறிவிப்போடு தொழுகை இடம் இன்னுங் கொஞ்சம் தள்ளி சாலை ஓரத்திலேயே சிலுவையிட்ட இடத்தில் கன்னிமேரி, கையில் குழந்தை ஏசு. 

கிட்டத்தட்ட அம்பது குடிசைகள், ரெண்டே சந்துக்கள், இதில் இல்லாத காதலா? கல்யாணமா? வெட்டுக் குத்துப் பழியா? நட்பா? விரிசலா? ஜனனமா? மரணமா? மனித வாழ்வின் சகல வாசனைகளும் இங்கே உண்டு. 

“என்னலே சின்ராசு? வளி தெரிஞ்சுதா ஊருக்கு..? வெளி சோலிக்குப் போனியே…கோட்டை கட்டினியா சம்பாரிச்சு…?” 

குடிசைவாசலில் உட்கார்ந்து ஏகாந்தமாய்ச் சுருட்டுப் பிடித்த மாயாண்டியிடம் விசாரிப்பை விடவும் நக்கல் தான் ஜாஸ்தி. 

“ஏய் மாயாண்டி… வார்த்தைய அளந்து பேசும். கழுதை கெட்டாக்  குட்டிச் சொவருதான்னு சொல்லுதியா?” 

“ஏன்லா இருசு. புள்ளய நல்லாயிருக்கியான்னு கேட்டாக்கூட பழி போடுத? சின்னப் புள்ளயில் காணாடைஞ்சுப் போச்சு. அப்புறம், உத்தியோகம்னு காணாடைஞ்சுப் போச்சு அந்த சின்ராசுவா இதுன்னு ஆச்சரியமாப் பூடுச்சு நம்பவே முடியலே..” 

ரெண்டு இழுப்பு இழுத்து லொக்லொக்கென்று இருமல் புகையை வெளியே விட காரமான சுருட்டு வாசனை. 

“ஒன்னோட எழுவது வயசுக்கு.. நாளைக்கே நீ ஒரேயடி காணாடைஞ்சுடுவ. அதுக்கு முன்னாடி ஒன்னப் பார்த்துக்கத்தா வந்திருக்கான் சின்ராசு. கூறுகெட்ட ஜென்மம். ஒனக்கு நான் நெருப்பு போடற வரைக்கும் பேசிப்பேசியே அழியப் போற…” 

பட்டைச் சாராயத்தின் தள்ளாட்டம், வெயில் கிறக்கம், பசி மயக்கம். எல்லாமுமாய்த் தள்ளாடினான் இருசப்பன். 

இவர்களின் குரல் கேட்டுக் குடிசைக்குள்ளிருந்து குரல் கேட்டது. 

“யாரு – இருசப்ப தாத்தாவா..?” 

“ஆமா..பழனி நாந்தே. சாப்பாடு பலமா? நெத்திலி கும்மு மணக்குதே. எம் மருமவ கைவாகு ஊரெல்லாம் ஒரே நெத்திலிதானே..?” 

“வாரியளா மாமா? ஒரு வாய் துன்னலாம்…” 

“இருக்கட்டும் மாரிம்மா, ஒரு பேரனைப் பெத்துப் போடு. அன்னிக் விருந்துக்கு வாரேன். ஓங் கையால நெத்தில திங்க..மகராசியா இரு. என் வீட்டுக்காரிக்கு இப்பத்தான் அரிசி எடுத்துப் போறேன். ஏய்..சின்ராசு. போயி குடு அரிசிய. நா சித்தப் பேசிட்டு வாரேன்….” 

குத்த வைத்து உட்கார்ந்தான் இருசப்பன். 

“இந்தா ஒரு இளுப்புக் குடு. நாக்கு துறு துறுங்குது…” 

சுருட்டை வாங்கி வாயில் வைத்துக் கையால் லாவகமாய் மூடி சர்ரென்று இழுத்தான். 

“சின்ராசு வந்துருக்கா.ஏய் இருடா…இந்தாவாரேன்…” 

கைலியில் கையைத் துடைத்தபடியே வெளியே வந்தான் பழனி. கூடவே நெத்திலி வாசனை. 

“எப்படியிருக்க சின்ராசு?’ 

“ம்..நீ…?” 

“ம்… வேலை சோலி குடும்பம் அப்பாரு. வாரத்துக்கொருக்கா சினிமா டிராமா மாமியா வூட்டு விருந்துன்னு ஓடுது. ஆமா நீ.? உன் கல்யாணச் சாப்பாடு எப்பச் சாப்பிட?” 

“எங்க? உன் வயசுதான்.. உருப்படியா ஒரு வேலைல நிக்காம தறுதலையா அலைஞ்சா.. எவம் பொண்ணு குடுப்பான்? பியூன் வேலைன்னாலும்…நம்பிக்கையா.. ஒரே கம்பெனில ஒட்டனுமில்லா?.முசுக்குன்னா முன் கோபம். ஏழைக்குத் தேவையில்லாத ப்வுசு சாஸ்தி. அத வச்சு நாக்குத்தேன் வளிக்கனும். எவம் பொறுத்துப்பான்..சீட்டுக் கிளிச்சிட்டான்..” 

நீளமாய்க் கோபத்தில் பேசியதில் வாய் ஓயாமல் இருமி இரைத்தது இருசப்பனுக்கு. 

“லேய் சின்ராசு இப்படிக் குடல் அறுந்து போற மாதிரி இருமற அப்பாவ உக்காத்தி வச்சுச் சோறு போடவேணாமா? எம்புட்டுக் காலந்தான் அவரு நெருப்புல வெளையாடுவாக..?” 

”சும்மாரு பழனி. எல்லாருமாச் சேந்து குத்தஞ் சொல்லிட்டு முன்கோவம் இருந்தாத் தப்பா?.. கண்ணு மூடி ஜடமா இருக்கவா? கூழைக் கும்பிடு போட்டு சம்பாரிச்சு விருந்து துன்றதக் காட்டியும் வயத்துல ஈரத்துணி போட்டுக் கெடக்கலாம்.” 

“ம்..ம்.. இந்தக் கோபம், வேகம் எல்லாம் என்ட்டயிருந்துதான ஒனக்கு வந்துருக்கு. தனிக்கட்டையா இருந்தப்ப நானும் புரச்சியாப் பேசுனவன் தான். பெண்டாட்டி, பிள்ளைங்கன்னு ஆனப்புறம், வேகங்காட்ட முடியுமா? அப்பாரு பண்ண வேலை போறும்னு வெட்டிக்கம்பத் தூக்கிட்டன். இவரு என்னடான்னா பெரிய கலெக்டரு உத்தியோகத்துக்குப் போராறாம்… நா பொணம் வலிச்சுனு கெடக்கணும்…”

மேலே பேசவிடாமல் இருமல் இருசப்பனின் வாயைப் பொத்தியது.

“ஏன்லே சின்ராசு, நாளைக்கே உனக்கும் கல்யாணம் காச்சி ஆச்சுன்ன என்ன பண்ணுவே? சோறு போட வேணாமா..? ” 

“அட நீ வேற பெரிசு.. கல்யாணம் கல்யாணம்னு. மொதல தனிக்கட்டைக்கு வழி பார்க்கணும்…” 

“முசுக்குனு முணகறியே ஓம் மாமன் ஒண்ணுக்கு மூணாப் பெத்தும் குடுத்திருக்கான்ல முறைப்பொண்ணுக. பகையெல்லாம் மறந்துப்புடலாமே? ஒண்ணு சேரலாமே. என்ன இருசா.?” 

“பொலி போட்டுறவன் பொலி.அந்தச் சிறுக்கியா எம் மருமவ? த்தூ..”  

ஆத்திரமாய்த் துப்பினான் இருசப்பன். 

“ரெண்டு வண்டி மாடும் பிச்சுக்கிட்டுப் போற மாதிரி நீ ஒரு பக்கம் ஓடற… சின்ராசு ஒரு பக்கம் ஓடறான்… இப்படி ஓடுனா குடும்பம் எப்படி உருப்படும்? ம்?”

மாயாண்டி முடிந்து விட்ட சுருட்டைத் தூர எறிந்தான். 

“உருப்படவா? இத்தினி வயசுக்கு ஆஞ்சு ஒஞ்சு ஒக்கார முடியல்.- நா போயி பொணம் எரிச்சாத் தான் கஞ்சி . அப்பங்காரனை ஒக்காத்தி வச்ச சோறு போடத வக்கில்லாதவனுக கோபப்படுதாங்க..கூறுகெட்டக் கோவம் இவங்கையால் ஒரு வாய்ச் சோறு போடப் போறானோ..? ஒரேயடியா வாய்க்கரிசி போடப் போறானோ தெரியல்ல..” 

மேலே பேச முடியாமல் இழுத்து இழுத்து இரும ஆரம்பித்தான் இருசப்பன். 


“அப்பாரு சொல்றது வாஸ்தவம்தான்? மசான வேலைக்கே போலாமேண்ணே…” 

பழனியின் பெண்டாட்டி மாரியம்மா..சின்னத் தூக்கு – வாளியில் மீன் குழம்போடு, சின்னராசு குடிசைக்கு வந்து கொண்டிருந்தாள். 

“அத்த வுடு மா. மனசுஒட்ட மாட்டேங்குது இந்த வேலைல..” 

“மனசு ஒப்பினாத்தான் வேலையா? கும்பி காய்ஞ்சா ஒட்டுமே… ஒனக்கு கஞ்சியூத்த அப்பாரு இருக்கிற தைரியம் வெளிவேலைன்னு ஓடுத… சின்னப் பொண்ணுக்குக் கஞ்சியூத்த ஆள் இல்ல… மயானத்தில் இறங்கிட்டா..பொட்டப் புள்ளக்கி எம்புட்டு நெஞ்சுரம் பாரு..கடைசி ஊர்வலத்துலயே வர விடாத பொம்புளைக… இன்னிக்கி பொணம் எரிக்குதுண்ணே. உனக்கு அந்த தைரியம் வேணுண்ணே..” 

“தைரியத்துக்கு ஒண்ணுங் குறையில்ல..”

“ஆமாமா வெறும் வாய்ச்சவடால்.. இதுக்கு மேலயா ஒருத்தி புத்திசொல்லுவா..?”

கோபமாய்க் கேட்டு “சம்பத்து.டேய் சம்பத்து. மாரி வந்திருக்கன்ல…” என்று குரல் கொடுத்துக் குடிசையில் நுழைந்தாள். இவளின் வருகைக்குக் கும்மாளமிடும் குழந்தைகள் சோர்வாயிருந்தனர். 

” என்னத்தே? சம்பத்து, ராணி, சுரேசு படுத்துக்கிடக்காங்க.?”

“ம்… பசிமயக்கம். கஞ்சி ஊத்தப் பொட்டு அரிசி யில்ல. குருணையில்ல..பெருசுங்க பசி தாங்கலாம்…சிறுசுக என்ன பண்ண? மயக்கமாயிட்டாங்க..” 

தளர்ந்த குரலில் முனியம்மா சொன்னது காதில் விழ குடிசையின் வெளியே நின்ற சின்னராசு அவமானமாய்த் தலைகுனிந்தான். வருத்தத்தில் உறைந்தே போனான்.

– தொடரும்…

– தகனம் (நாவல்), முதற் பதிப்பு: 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *