பிறப்பொக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 2,617 
 

பெருமாள் கோவில் வீதிக்குள் சாமி ஊர்வலம் நுழைந்ததும் அவரவர் வீட்டு வாயில்களில் நின்றிருந்த தெரு மக்கள் எல்லாரும் கைகூப்பி சாமியையே நோக்கிக் கொண்டிருந்தனர். செந்தில் மட்டும் ஏறிட்டு பாட்டியின் முகத்தைப் பார்த்தான். அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. தொங்கிப் போயிருந்த கன்னச் சதைகள் நடுங்க, சுருங்கி வரி விழுந்த கண்களில் நீர் பெருகியிருந்தது. அவள் சாமியை நோக்கிக் கைகூப்பியிருக்கவில்லை. செந்தில் குழப்பமடைந்து, அவள் சேலை நுனியைப் பிடித்து மெல்ல இழுத்தான். பாட்டி இவனைக் கவனிக்காமல் தலைகுனிந்து அழுகையைத் தொடர்ந்தபடி இருந்தாள். அருகில் நின்றிருந்த லல்லி அம்மா அவள் தோள்களில் ஆறுதலாய்க் கை வைத்தாள்.

“ஏனுங்கம்மா, எதாச்சும் நெனச்சுகிட்டீங்களா?”

“வருசா வருசம் சாமி ஊர்வலத்துக்கு பாலு முன்ன நின்னு எல்லாம் செய்வான். இப்ப புள்ள எங்க இருக்குதோ, என்ன பண்ணுதோ? அந்தக் கரிவரதராஜ பெருமாள்தான் என் புள்ளையைக் காப்பாத்தித் திருப்பி அனுப்பணும்.” அழுகையினூடே பேசியதால் அவள் குரல் நடுங்கியது.

“கவலப்படாதீங்கம்மா, வந்துருவாரு. அவுரென்ன புதுசாவா வீட்ட விட்டுப் போயிருக்காரு?”

“திரும்பி வரட்டும். எதோ ஒரு பொண்ணப்பாத்து அவனுக்குக் கட்டி வச்சிடுறேன். அப்பத்தான் திருந்துவான்.”

“பெரியவரு இருக்கும் போது, இவுருக்கெப்படி கல்யாணம் பண்ணுவீங்க?”

“என்னம்மா பண்றது? பெரியவன் கைகால் நல்லாருந்தா இன்னேரம் பண்ணிருக்க மாட்டமா? அவந்தலல என்ன எழுதிருக்கோ தெரியிலயே!”

சாமி இவர்கள் வீட்டை நெருங்கி விட்டது. லல்லி இவன் சட்டையைப் பிடித்து இழுத்தாள். இருவரும் வாயிலில் இருந்து தெருவுக்குள் இறங்கினார்கள். குமரேசன் தன் ஆட்டோவைத் தள்ளிக்கொண்டுபோய் சாமி ஊர்வலம் கடப்பதற்கு வாகாக, ஓரமாக நிறுத்திக் கொண்டிருந்தான். மளிகைக்கடை அண்ணாச்சி வழக்கத்துக்கு மாறாக கடைக்கு வெளியில் வந்து நின்று சாமி பார்த்துக் கொண்டிருந்தார்.

சாமி இவர்கள் வீட்டுக்குச் சற்று முன் நின்று விட்டது. சிறிய தேரின் மீது வீற்றிருந்த பெருமாளை, “குழகனே! எந்தன் கோமளப் பிள்ளாய்! கோவிந்தா! என் குடங்கையில் மன்னி,” என்று துதித்தபடி மூவர் நிற்க, வெள்ளை வேட்டி அணிந்து, வெற்றுடம்பில் பூணூல் தரித்த ஒருவர் துளசி தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார். தேருக்குப் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த சிறிய மணியை லல்லி தட்டி ஒலி எழுப்பினாள். செந்தில் கண்மூடி வணங்கினான்.

அவனுக்கு கடவுளிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. சோமு சித்தப்பாவுக்கு சீக்கிரம் கால் நலமாக வேண்டும் என்று வேண்டினான். ஆனால் அவர் அந்தக் கோரிக்கையை வேளாங்கண்ணி மாதாவிடம்தான் ஆண்டுக்கணக்கில் வைத்துக் கொண்டிருந்தார். இருவரும் தீர்த்தத்தை வாங்கிக் கொண்டு, அதிலிருந்த துளசி இலைகளை மென்று கொண்டிருக்கையில் லல்லி கேட்டாள்.

“உங்க சித்தப்பா செத்துப் போயிட்டாங்களா?”

செந்தில் திடுக்கிட்டான். “இல்லல்ல, வீட்ட விட்டு போயிட்டாங்க. எனக்கு அரயாண்டு முடிஞ்சப்ப போனாங்க. இன்னும் வரல.”

“எங்க மாமா போன வருஷம் செத்துப் பொயிட்டாரு. நீங்கல்லாம் எங்க வீட்டுக்குக் குடி வர்றதுக்கு முன்னாடி.”

“அப்படியா?” என்றான். சாவு செய்தி பற்றிப் பேசினாலே விரக்தியாகவும், அச்சமாகவும் இருந்தது. “எப்பிடி செத்துப்போனாரு?”

“அவருக்கு திடீர் திடீர்னு பைத்தியம் புடிச்சிடும். நான் சின்னப்புள்ளயா இருக்கும்போதிருந்தே. நான் அவர்கிட்டயே போனதேயில்ல. ஒரு நா திடீர்ன்னு காணாம போயிட்டாரு. எல்லாரும் ரெண்டு நாள் தேடுனாங்க. ரயில்வே டேசன் பக்கம் இருக்கற தோப்புல தூக்கு மாட்டிக்கிட்டாரு.”

செந்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“எங்க பாட்டியும் அவரு போட்டோவ வச்சுக்கிட்டு, தெனம் அளுவாங்க,” என்றாள்.

பாலு சித்தப்பாவுக்குப் பைத்தியம் எல்லாம் கிடையாது. திடீர் திடீரென்று சினங்கொண்டு அடிப்பார். அவன் விக்கி விக்கி அழுவதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவனைக் கூட்டிப் போய் கேக், கடலை மிட்டாய் வாங்கிக் கொடுப்பார். பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருப்பார்.தாத்தாவின் அலாரம் கடிகாரம், சாமி முன்னாடி உள்ள வெண்கலக் குத்துவிளக்கு, டிரான்சிஸ்டர் ரேடியோ இப்படி ஏதாவது ஒன்றைக் கழற்றி, சுத்தம் செய்து மாட்டிக் கொண்டிருப்பார். பயங்கரமாய்ச் சாப்பிடுவார்.

ஆனால் சோமு சித்தப்பாவுக்குத்தான் வேலையே குறி. அவர் தினம் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தன் லாட்டரிக்கடையைத் திறக்க ஆயத்தமாகி விடுவார். காலை சாய்த்து, சாய்த்து நடக்கும் அவருடன், செந்திலும் துணைக்குச் சென்று, கடையைத் திறக்க உதவி விட்டு வீடு திரும்பி அதன் பின்தான் பள்ளிக்குக் கிளம்புவான். இப்போது அவனுக்குக் கோடை விடுமுறை என்பதால், கடை திறந்த பின்னும், அங்கேயே அமர்ந்து செய்தித் தாளும், அதன் இணைப்புகளையும் புரட்டி மேய்ந்து கொண்டிருப்பான். பதினோரு மணிபோல வீட்டுக்கு ஓடி வந்து அவருக்கு மதியச் சாப்பாட்டையும் எடுத்துச் செல்வான். பிறகு வீட்டுக்குத் திரும்பி, ஏழு மணிக்கு அவரை மீண்டும் சென்று கூட்டி வரும்வரை, தெருப்பசங்களுடன் பம்பரம் விடுவது, மூணுகுண்டு விளையாட்டு, பச்சக்குதிரை என்று பொழுது போகும்.

அன்றைக்குக் கடையை பதினோரு மணிக்கெல்லாம் மூடிவிட்டார் சோமு சித்தப்பா. சித்தப்பாவுக்கு டீ கொண்டு வந்த பெட்டிக்கடைக்காரர் மகள் கல்யாணி ஆச்சரியமாய்ப் பார்த்தாள். அவர்களுக்கு டீ வாங்கும்போது சித்தப்பாவுக்கும் சேர்த்து வாங்குவது அவள் வழக்கம். “இன்னிக்கு எதானும் மழை வருமா, இவ்வளவு சீக்கிரம் கடைய மூடிட்டீரு,” என்றாள். “மழை வருதில்ல, அதான்,” என்றார் சித்தப்பா. இந்த முசுடுக்கு ஜோக்கெல்லாம் அடிக்க வருமா என்பது போலப் பார்த்தாள் கல்யாணி.

சித்தப்பாவின் பழைய வெளுத்துப் போன தோல்பையை ஒருகையில் மாட்டிக் கொண்டு மறுகையால் அவர் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும்போது, அவர் நடையில் சிறு துள்ளல் இருந்ததைக் கவனித்தான். “எங்க போறோம் சித்தப்பா?” என்ற அவனது கேள்விக்கு, இவன் பக்கம் திரும்பாமலேயே, எதிர் நோக்கிய பார்வையுடன், வாய் விரிந்த புன்னகையொன்றை பதிலாக அளித்தார். அவரது இடது கையில் மஞ்சள் பையொன்றைச் சுமந்திருந்தார்.

கொஞ்சம் சுற்றுதான் என்றாலும், நாஸ் திரையரங்கத்துக்கு முன்னால் வலது திருப்பத்தில் நுழைந்தாலும் இவர்கள் வீட்டுக்குச் செல்லும் வழியைப் பிடித்து விடலாம் .ஆனால் சித்தப்பா நாஸ் திரையரங்கம் தாண்டியும் இவனை இழுத்துக் கொண்டு சென்றார். அவர் இவ்வளவு தூரம் நடந்து செந்தில் பார்த்ததில்லை. வலுவிழந்த, நரம்புக்கோளாறு கொண்ட அவரது கால்கள் தினமும் வீட்டுக்கும், லாட்டரிக்கடைக்கும் மட்டுமே அவரை மாற்றி மாற்றிச் சுமந்து சென்று கொண்டிருந்தன. லாட்டரி மொத்த விலைக்கு வாங்குவதற்குக்கூட உக்கடம் பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள் யாரிடமாவதுதான் பணம் கொடுத்து விடுவார். இரண்டு முறை செந்திலை அனுப்பி வாங்கி வரச்சொன்ன போது அவனுக்குப் பெருமையாக இருந்தது. அவனே தனியாக நடந்து, மூன்று தெருக்கள், பெரிய கட்டிடங்கள், விரையும் பேருந்துகள் எல்லாம் கடந்து லாட்டரி மொத்த விலைக்கு வாங்கி வந்தான். டிசி போட்டது, டிசி போடாதது எண்ணிக்கையில் மட்டும் கொஞ்சம் குழறுபடி ஆகியிருந்தது.

பிரகாசம் டெக்ஸ்டைல்ஸின் எதிரில் இருந்த மணியம் மொத்த லாட்டரிக் கடைக்குள் நுழைந்தார்கள். “வா சோமு. உனக்கு அடிச்சது, எனக்கே அடிச்ச மாதிரி ஒரு சந்தோஷம்,” என்றார் கல்லாவிலிருந்த ரவி. தன் தெற்றுப்பல் தெரிய இவனைப் பார்த்து சிரித்து, “டேய் செந்தில், உங்க சித்தப்பாவை தாஜ் ஹோட்டலுக்குக் கூட்டிட்டு போய் இடியாப்பம், பாயா வாங்கிக் குடுக்கச் சொல்லு,” என்றார்.

சித்தப்பா பேகைத் திறந்து ஒரு கத்தை லாட்டரிச் சீட்டுகளை ரவியிடம் கொடுத்தார். “அருணாச்சல் ப்ரதேஷ் வீக்லி, அம்பதாயிரம் விளுந்துருக்கு. டிசி போடல. முழு கமிசனும் இன்னிக்கே குடுப்பியா, இல்ல இளுத்து அடிப்பியா?”

“ஏப்பா, முறுக்கிக்கிறயே. இரு பாக்கறேன். கொஞ்சம் லேட்டா வந்திருந்தா அமவுண்டு சேர்ந்துருக்கும். இப்ப கல்லாவத் தொடச்சுதுதான் குடுக்கணும். உனக்குங்கறதால குடுக்கறேன். முத தடவ பெரிய அமவுண்டு பாத்துருக்க. போடு ஒரு மாசத்துக்கு மொத்தமா டிக்கெட்டு.”

“அமவுண்டுக்கு வேல இருக்கு, ரவி. முழுசா வேணும்.”

“என்ன வேளாங்கண்ணி போறதுக்குப் பணம் வேணுமா? அதுக்கு இவ்வளவு தேவையில்லையே!”

“அதெல்லாம் மாதா நல்லாத்தான் வச்சுருக்கா. ஏன் எனக்குன்னு நா எதும் செஞ்சுக்கக் கூடாதா என்ன?”

“ஏன்? தாராளமா செஞ்சுக்கோ. இந்தாப்புடி. என்ன பொண்ணு, கிண்ணு எதாச்சும் புடிச்சிட்டியா?”

“ம்க்கூம். இந்தக் கால வச்சுக்கிட்டு அது ஒண்ணுதான் குறைச்சல்.” சித்தப்பா பணத்தை எண்ணி, பேகுக்குள் பாதுகாப்பாய் வைத்தார்.

“நீ ரெடின்னு சொல்லு, நாம்பாக்கறேன் உனக்கு பொண்ணு. உனக்கென்னப்பா, உடம்பு முடியிலன்னாலும், சொந்தமா கடை வச்சிருக்கிற. இந்த நிலமையிலயும் குடும்பத்தக் காப்பாத்தற. உந்தம்பி மாதிரியா? எங்க இருக்கான்னு எதாவது துப்பு கெடச்சுதா?”

“யோவ், அவன் என்ன புதுசாவா ஓடிப்போறான்? கையில கொஞ்சம் காசு சேர்ந்தா நாயி எங்கயாவது திரியப்போயிடும். தீர்ந்தவுன்ன திரும்பி வந்துடும். வந்தா தெண்டச்சோறு எங்காசுலதான். எங்க இருக்கானோ அங்கயே இருக்கட்டும்.”

சோமு சித்தப்பாவுடனான பயணம் அவ்வளவு சீக்கிரம் முடியவில்லை. அங்கிருந்து ராஜவீதிக்கு நடந்து சென்றார்கள். சித்தப்பாவும், அவனும் தள்ளுவண்டிக்கடையில் நன்னாரி சர்பத் குடித்தார்கள். கல்யாணி அக்கா பஜ்ஜிக்கடையில் சமோசா சாப்பிட்டார்கள். ராஜவீதி முக்கிலிருந்த கணபதி ஜூவல்லர்ஸில் நுழைந்தபோது, செந்தில் விழிகள் விரிய தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஒரு நகைக்கடைக்குள் நுழைவது அவனுக்கு அதுதான் முதல் முறை. கண்ணாடிப்பெட்டிகளுக்குள் மோதிரங்களும், அட்டிகைகளும், நெக்லேஸ்களும் குழல்விளக்குகளின் ஒளியில் மின்னின. ஆளுயர புகைப்படத்தில் நதியா தன் எடைக்கு அதிகமாக நகைகளை மாட்டிக்கொண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தாள். இவன் வயதுக்கு சற்றே மூத்த ஒரு பையன் சில்வர் குவளைகளில் டொரினோ கொண்டு வந்து கொடுத்தான். செந்திலுக்குப் பெருமிதமாக இருந்தது.

கமிஷன் வாங்கிய பணம் முழுவதையும் கொடுத்து சித்தப்பா சிவப்புக்கல் டாலர் வைத்த தங்கச் சங்கிலி ஒன்று வாங்கினார். அப்போதும் அறுநூற்று இருபது ரூபாய் குறைந்தது. மஞ்சள் பையில் கைவிட்டு மாதாவின் உருவத்தாலான ஓர் உண்டியலை எடுத்தார். அது வேளாங்கண்ணிக்கு வருடாவருடம் செல்வதற்காக அவர் சேமிக்கும் உண்டியல். எதற்கும் அந்தப் பணத்தை எடுக்க அனுமதிக்காதவர் இப்போது அதையே தங்கச்சங்கிலி வாங்க பயன்படுத்தியது செந்திலுக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆண்கள் போடுகிற சங்கிலி மாதிரித் தெரியவில்லை. கவுண்டம்பாளையத்தில் இருக்கும் அத்தை இந்த மாதிரி ஒரு சங்கிலி அணிந்திருப்பதைப் பார்த்திருக்கிறான். ஒரு வேளை பாட்டிக்கு வாங்கியிருக்கிறாரோ? ஆனால் பாட்டி எந்த நகையும் அணிந்து செந்தில் பார்த்ததில்லை.

வீட்டுக்குள் நுழையுமுன்னே கறிக்குழம்பு வாசனை நாசியை அடைந்தது. செந்திலுக்கு ஆச்சரியம். வழக்கமாக ஞாயிறு அன்றுதான் அவர்கள் வீட்டில் கவுச்சி. அன்று வியாழன். என்ன விசேஷம்? உள்ளே நுழைந்ததும், “வாடா, எலும்பா, என்ன ஸ்கூல்ல அவுத்து உட்டுட்டாங்களா?” என்ற பரிச்சயமான அடிக்குரலில் பாலு சித்தப்பா கேட்டார். திரும்பி வந்துவிட்டாரா! முகம் கறுத்து, உடல் இளைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார்.பின்னறை மூலையில் அமர்ந்து, கணபதியின் படம் ஒன்றுக்கு ப்ரேம் போட்டுக்கொண்டிருந்தார். பின்னால் நுழைந்த சோமு சித்தப்பா, தம்பியைப் பார்த்ததும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, சமையலறைக்கு முன்னாலிருந்த ஸ்டூலில் போய் அமர்ந்து கொண்டார். சமையலறைக்குள்ளிருந்து பாட்டி வந்து கிசுகிசுக்கும் குரலில், “டேய், கடவுள் புண்ணியத்துல அவன் திரும்பி வந்துருக்கான். நீ எதும் கத்தி, கித்தி வைக்காத. உனக்குப் புண்ணியமாப் போவுது,” என்றாள்.

“ஆமா, உம்புள்ள கோச்சுக்கிட்டுப் திரும்பி ஓடிருவானாக்கும். காசு கையில இல்லன்னா நாயி வீடே கதியா கெடக்கும். நீ நல்ல சவரட்டனயா சமைச்சுப் போடு, உம்புள்ள எங்கயும் போமாட்டான்.”

“புள்ள எளச்சுப் போய் வந்திருக்காண்டா. கொஞ்ச நாளைக்கு சாப்புட்டு நல்லாத் தேறட்டும்.”

“இங்க பாரு. அவன் இங்க இருக்கனும்னா, வேலைக்குப் போவணும். நாளைக்கே அலியாரப் போய் பார்க்கச் சொல்லு.”

“போவான், போவான், நீயும் போய் கைகால் கழுவிட்டு சாப்பிட வா. தா, செந்திலு, உனக்குக் காரம் கம்மியாப் போட்டு கறி எடுத்து வச்சுருக்கேன், வா.”

ஆச்சரியகரமாக இந்த முறை வந்து இரண்டு நாட்களுக்குள்ளாகவே, அலியார் பட்டறைக்கு வேலைக்குப் போய் விட்டார் பாலு சித்தப்பா. காலையில் ஒன்பது மணிக்குச் சென்று விட்டு, மாலை ஆறுமணிக்கு க்ரீஸ் கறை படிந்த கைகளோடு திரும்புவார். உக்கடம் பேருந்து நிலையத்திற்கு திரும்புவதற்கு பத்து இருபது அடிகளுக்கு முன்பே அவர் பணிபுரிந்த பட்டறை அமைந்திருந்தது. அலியார் சோமு சித்தப்பாவுக்கு நண்பர். அவரது வேண்டுகோளால்தான், பாலு சித்தப்பா மீண்டும், மீண்டும் ஓடிப்போனாலும், வொர்க்ஷாப்பில் அவரை வேலைக்கு எடுத்துக் கொள்கிறார் அலியார். உக்கடத்தில் லாட்டரிக்கடை வைத்திருந்த சோமு சித்தப்பாவுக்கு மதியச் சாப்பாடு எடுத்துச் செல்லும் வேளையில், பாலு சித்தப்பாவுக்கும் எடுத்துச் செல்ல வேண்டியதாயிற்று. அவரது சாப்பாட்டுப் பை மட்டும் நல்ல கனம் கனக்கும். சோமு சித்தப்பாவுக்கு ஒரு டப்பா. இவருக்கு சாப்பாடு, குழம்பு, பொரியல் என்று மூன்று. சாதமும், குழம்பும் பிசைந்து அனுப்பினால் அவன் சாப்பிட மாட்டான் என்று பாட்டி சொன்னாள். அன்று சாப்பாடு சென்று கொடுத்தபோது, சித்தப்பா லாரிக்கு அடியில் படுத்திருந்தார். டூல்ஸ் பெட்டி மேல் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்த அலியார் இவனிடம், “ வச்சுட்டுப்போடா, நான் அவன்கிட்ட சொல்லிக்கிறேன்,” என்றார். “உங்க சித்தப்பன் நல்ல வேலைக்காரண்டா. நீ அவங்கிட்ட டிரெயினிங்க் எடுத்துக்கோ. நல்ல காசு பாக்கலாம். படிச்சு என்ன கிழிக்கப்போறே?”

பாலு சித்தப்பா அன்று மாலை ஆறுமணிக்கு வீடு திரும்பியபோது, அவர் கையிலிருந்தது ஓர் அதிசயப் பொருள்! ஒரு டேப்ரெகார்டரை செந்தில் இப்போதுதான் பார்க்கிறான். பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக டேப் ரெகார்டரில் ஒலிக்கும் புதுப்படப்பாடல்கள் அவனைப் பரவசத்தில் ஆழ்த்தியதுண்டு. ‘விக்ரம், விக்ரம், நான் வெற்றி பெற்றவன்,’ என்ற பாட்டை அதில் கேட்டபிறகு முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.

“ஐ! டேப் ரெகார்டர்!” என்று அவரருகில் சென்றான். பாலு சித்தப்பா அவனைக் கூட்டி அருகில் அமர வைத்துக் கொண்டார். இருவரும் டேப்ரெகார்டர் முன்னால் அமர்ந்து நெடுநேரம் புதுத் தமிழ்ப்படப் பாடல்களைக் கேட்டார்கள். என்னம்மா கண்ணு, சின்ன மணிக்குயிலே, மன்றம் வந்த தென்றலுக்கு என்று டிரான்சிஸ்டர் வானொலியில் கேட்க இயலாத அபூர்வப்பாடல்கள். ஒரே நேரத்தில் இரண்டு கேசட் போடமுடிகிற அந்தக் கருவியில் சித்தப்பா அவன் குரலைப் பதிவு செய்து காட்டினார்.

“இந்த டேப்ரெகார்டர் எப்படிக் கெடைச்சுது பாலு சித்தப்பா?” என்றான் செந்தில்.

“மூடிட்டு பாட்ட மட்டும் கேளு,” என்றார் சித்தப்பா.

ஏழுமணிக்கு சோமு சித்தப்பாவை அழைத்து வரச் சென்று விட்டான். இருவரும் வீட்டுக்குள் நுழைகையில், டேப் ரெகார்டரையும், தம்பியையும் குறுகுறுப்பாகப் பார்த்தார் சோமு சித்தப்பா. பின் பேகை விசிறி விட்டு முன்னறையில் அமர்ந்து கொண்டார். பாட்டி அடுக்களையிலிருந்து தலையை நீட்டி, “வந்துட்டியா,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள். திரும்பவும் டேப் ரெகார்டர் அருகே செந்தில் அமரப்போகையில், சோமு சித்தப்பா கூப்பிட்டார். “ டேய், பாட்டிட்ட போய் சாவி வாங்கிட்டு, மரபீரோல ஒரு சிவப்பு டப்பா இருக்கும், அத எடுத்துட்டு வா!” என்றார். செந்தில் வேகமாக அடுக்களைக்கு ஓடினான். சாவியை வாங்கிக் கொண்டு அவசரமாக பீரோவைத் திறந்து, டப்பாவை எடுத்து சோமு சித்தப்பாவிடம் கொடுத்தான். பின் மீண்டும் ஓடி பாலு சித்தப்பா அருகில் அமர்ந்து கொண்டான்.

“அம்மா, இங்க வா, இங்க வர்றியா இல்லயா?” என்று கத்தலாகக் குரலெழுப்பினார் சோமு சித்தப்பா. ஒரு கையில் டப்பாவும், மறுகையில் மூடியுமாக இருந்தார்.

முந்தானையால் கையைத் துடைத்துக் கொண்டு பாட்டி வெளியே வந்தாள். “என்னடா?”

“இதுல வச்சிருந்த தங்கச் செயின் எங்க?”

“அதுலதானடா இருக்கும்?”

“நீயே பாரு! நீ எதுவும் எடுத்து வேற இடத்துல வச்சியா? நல்லா ஞாபகப்படுத்திப்பாரு.”

“இல்லியேடா, நீ அதுல வச்சது அதுலதான் இருக்கணும். நீ எங்கயும் கை மாத்தி வச்சிட்டயா?”

சித்தப்பா ஒன்றும் சொல்லாமல் பாட்டியையே பார்த்தார். எல்லாரும் அமைதியாக இருந்த அந்தச் சில கணங்களில், டேப்ரெகார்டரில் பனிவிழும் மலர்வனம், உன் பார்வை ஒருவரம் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. செந்தில் பீரோவைத் திறந்து டப்பாவை எடுத்தபோது, பாலு சித்தப்பா ஒலியைக் குறைத்து விட்டிருந்தார்.

சோமு சித்தப்பா தள்ளாடியபடி எழுந்து நின்றார். “என்ன வெளையாடுறீங்களா? பூட்டியிருக்கிற பீரோல இருக்கிற நகை என்ன கால் மொளச்சுப் போயிடுமா? இப்ப எனக்கு நகை வந்தாகணும்.”

“நகையை உள்ள வச்சதுக்கப்புறம் அந்தப் பக்கமே கைவக்கலடா. ஒண்ணு ரெண்டு தடவ மடிச்ச துணி வைக்க பீரோவ தொறந்ததோட சரி.”

வெறி கொண்டாற்போல காலி டப்பாவை பாலு சித்தப்பாவை நோக்கி வீசினார். அவர் சுருண்டு சுவற்றோடு சாய்ந்து, தாக்குதலிருந்து தப்பித்துக் கொண்டார். “இந்தப் பரதேசிதான் எடுத்துருக்கான். அதுக்கு நீ உடந்தை,” என்றார் நடுங்கும் உச்சக்குரலில். அவர் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. செந்தில் பதற்றமாய் மூன்று பேரையும் மாற்றி மாற்றிப் பார்த்தான். பாலு சித்தப்பா முகத்தில் சூழ்நிலைக்குத் தொடர்பற்ற ஒரு இளிப்பு தெரிந்தது.

“அவன் கை வைக்கிற ஆளு கெடையாதுடா. நான் வீட்டிலேயேதானே இருக்கேன். சாவி என் கழுத்துலயேதான் எந்நேரமும் கெடக்கு. நீ நல்லா யோசிச்சுப் பாரு. கடைக்கு எதும் கொண்டு போனியா?”

“ஆமாம், அங்க கடைல எங்கூத்தியா நின்னுக்கிட்டு இருக்கா, அவளுக்குத்தான் குடுக்க சங்கிலிய எடுத்துகிட்டுப்போனேன். மண்டகாயுது சொல்லிப் போட்டேன். திருப்பித் திருப்பி பேசி சமாளிக்க நெனச்சீன்னா, அடிச்சுக் கொன்னே போடுவேன். கேளு, அவங்கிட்ட, சங்கிலிய எடுத்தானான்னு கேளு.”

“நான்லாம் எதும் எடுக்கல,” என்றார் பாலு சித்தப்பா சன்னமான குரலில். அவர் முகத்தில் ஏன் இப்போதும்கூட இளிப்பு தெரிகிறது என்று செந்திலுக்கு வியப்பாக இருந்தது. பாட்டி முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டு அவரைப்பார்த்து தலையை வலதும், இடதுமாக ஆட்டினாள். செந்திலுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை. தயவு செய்து எடுத்திருந்தா குடுத்துடுடா என்று சொல்ல வருகிறாளா?

“இந்த டேப்ரெகார்டர் எப்படி வந்துச்சாம். எங்கிட்ட திருடித்தானே வாங்கியிருக்கான்.”

“இது அலியாரோடதாக்கும்! அவந்தான் வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் ரெண்டு நாள் கழிச்சுக்குடுன்னு சொல்லியிருக்கான்.”

“தாயோளி, இப்ப உடனே எஞ்சங்கிலிய முன்னாடி எடுத்து வைக்கல, கொலவிழும்டா!” திடும்மென்று எழுந்து, முன்னாலிருந்த ஸ்டூலைக் கையில் தூக்கி பாலு சித்தப்பா மீது எறிந்தார். இவ்வளவு பலம் இவருக்கு எங்கிருந்து வந்ததென்று செந்தில் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, வீசிய வேகம் தாங்காமல் சோமு சித்தப்பா கீழே விழுந்தார். ஸ்டூல் பாலு சித்தப்பாவை அடையுமுன்னரே விழுந்து விட்டது. பாட்டி ஓடிப்போய் பாலு சித்தப்பா முன் அரணாக நின்று கொண்டாள். “வேணாண்டா, இப்பதாண்டா புள்ள வீடு திரும்பி இருக்கான். எதும் பண்ணி கிண்ணி வக்காதடா. சங்கிலி இங்கதான் எங்கயாவது இருக்கும், நான் தேடி எடுத்துத் தறேன்.”

சோமு சித்தப்பா வேகமாக அவர்களை நோக்கி நகர முயன்றார். ஆனால் அவரது கால்கள் ஒத்துழைக்கவில்லை. தடுமாறி முன்னேறி வந்து, நிலைக்கால் தடுக்கி மீண்டும் விழப்போனார். சுவற்றைப் பிடித்துக்கொண்டு சுதாரித்துக் கொண்டார். பாட்டி, “வேணாண்டா, வேணாண்டா!” என்று கைகளை விரித்தபடி கெஞ்சிக்கொண்டிருந்தாள். பாலு சித்தப்பா பாட்டிக்குப் பின்னாலிருந்து மெல்ல நழுவி வெளிவந்து, அறையின் சுவற்றோரம் வைக்கப்பட்டிருந்த மேஜை மீது ஏறிக்குதித்து அறையை விட்டு வெளியேறி ஓடினார். அவர் சென்ற வேகத்தில் அவர் கால் செந்தில் மீது பட்டு அவன் தடுமாறி சோமு சித்தப்பா மீது சாய்ந்தான். அவர் நிலை குலைந்தார்.

செந்தில்தான் முதலில் வெளியே சென்று பார்த்தான். சந்தின் இருபுறமும் திரும்பிப்பார்த்ததில் பாலு சித்தப்பா எங்கும் தென்படவில்லை. வீட்டுக்காரப்பாட்டியும், லல்லி அம்மாவும் அவர்கள் வீட்டிலிருந்து தலை நீட்டிப்பார்த்தார்கள். “என்னடா உங்க வீட்டில சத்தம்?” என்றாள் லல்லி அம்மா. “எங்க சித்தப்பாங்க ரெண்டு பேருக்கும் சண்ட,” என்றான் செந்தில். உள்ளிருந்து லல்லி அப்பா, “இவங்கள வீட்டக்காலி பண்ணச் சொன்னாத்தான் சரி வரும். சும்மா ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ சலம்பல் பண்ணிகிட்டு,” என்றார்.

செந்தில் திரும்பி வீட்டுக்குள் சென்றான். சோமு சித்தப்பா அதே நிலையில் நின்று கொண்டிருந்தார். பாட்டி இருந்த இடத்திலேயே தரையில் அமர்ந்து விட்டிருந்தாள். “கோச்சுக்காதடா, பொறுமையா இரு. நான் கேட்டுப்பாக்கறேன்,” என்றாள்.

“இப்பதான் அவன் எடுக்கலன்னு சாதிச்சே, அப்புறம் கேட்டுப்பாக்கறேங்கற. மாசா மாசம் வாடகையும் குடுத்துட்டு, சோத்துக்கும் குடுத்துட்டு இருக்கேன்ல. அந்தத் திமிருதான். நா ஒண்ணு பண்றேன். உம்பையன் மாதிரி நானும் போயிர்றேன் எங்கியாவது. பேசாம செத்துப்போயிர்றேன். உன் புள்ளயைக் கட்டிகிட்டு நீயே அழு,” என்றார் சோமு சித்தப்பா.

“அப்பிடி எல்லாம் சொல்லாதடா. நான் சங்கிலிய வாங்கித்தாறேன். நீ கொஞ்சம் பொறுமையா இரு.”

“எல்லாம் பொறுமையா இருந்து பாத்தாச்சு. இனி நீயாச்சு, உன் சின்ன பையனாச்சு,” என்றவர், திரும்பி, தள்ளாடியபடி செந்திலைக் கடந்து வீட்டை விட்டு வெளியே வந்தார். வெயிலில் காய்ந்த பாறைபோல் அவர் முகம் கொதித்துக் கொண்டிருந்தது. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. செந்தில், “சித்தப்பா!” என்றான். “நீ மூடிட்டு உள்ள போடா!” என்று இரைந்தார். வீட்டுச் சந்தின் சுவற்றைப் பிடித்துக் கொண்டே அவர் தள்ளாடித் தடுமாறிப்போனதை வாயிலில் நின்று கவனித்தார்கள் லல்லி அம்மாவும், வீட்டுக்காரப்பாட்டியும். அவர் பொதுவாயிலைக் கடந்தவுடன், இருவரும் வெளியே வந்து பாட்டியைக் கூப்பிட்டனர். “ஏனுங்கம்மா, வாங்க வந்து அவரு எங்க போறாருன்னு பாருங்க,” என்றாள் லல்லி அம்மா. “ஏங்க, பாலம்மா, புள்ளயத் தொலச்சிறாதீங்கம்மா. போங்க, போய்ப்பாருங்க,” என்றாள் வீட்டுக்காரப்பாட்டி.

பாட்டி உதடுகள் துடிக்கக் கண்ணீர் விட்டாள். “இதுக ரெண்டையும் வச்சுகிட்டு என்ன பண்றதுன்னே தெரியிலயே. பாலு எங்க போனான்னு தெரியிலயே. டே செந்திலு, போய் உங்க சோமு சித்தப்பாவக் கூட்டிட்டு வாடா. சாக்கடையில எதும் விழுந்து வைக்கப் போறான்,” என்றாள்.

செந்தில் நெஞ்சு துடிக்க நீண்ட சந்தில் ஓடினான். கையடிப் பம்பில் மோதி முழங்கையில் இடித்துக் கொண்டான். நிமிர்ந்து பார்த்தபோது, பாலு சித்தப்பா கழிப்பறையிலிருந்து வெளிவந்தார். அவர்களுக்கும், வீட்டுக்காரர்களுக்கும் பொதுவான ஒரே கழிப்பிடம். “சீக்கிரம் போய் உஞ்சித்தப்பனப் புடிச்சு இழுத்துட்டு வா,” என்றார். முகத்திலிருந்த இளிப்பு மேலும் விரிந்திருந்தது.

வாயிலுக்கு வெளியே ஓடி, தெருவில் இருபுறமும் திரும்பிப்பார்த்தான். அதற்குள் இவ்வளவு வேகமாக அவரால் நடந்து தெருவைக் கடந்து விட முடியுமா? தெருவில் இறங்கி, பெரிய சாக்கடைக்குள் பார்த்தான். கொஞ்ச நேரம் தெரு நடுவில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தான். மளிகைக்கடை அண்ணாச்சி கடைக்குள்ளிருந்து, “என்னா செந்திலு, உங்க சித்தப்பா இப்பதான் குமரேசன் ஆட்டோல ஏறிப்போனாரு,” என்றார்.

செந்தில் வீட்டுக்குள் திரும்ப ஓடிப்போய்த் தகவல் சொன்னவுடன் பாட்டி கதற ஆரம்பித்து விட்டாள். லல்லி அம்மாவும், வீட்டுக்காரப்பாட்டியும் இருபுறமும் அவளுக்கு ஆறுதலாக அவள் தோளைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். லல்லி அப்பா வெளியே வந்து தகவல் அறிந்து கொண்டபின், “நான் போய் பார்க்கறேன்,” என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார்.. “ரயில்வே ஸ்டேஷன்ல பாருடா,” என்று அவர் அம்மா சொல்ல, பாட்டி பெருங்குரலெடுத்து அழுதாள். “அய்யா, என் புள்ளய எப்படியாச்சு கூட்டிட்டு வந்துடுங்கய்யா,” என்றாள்.

தெருவில் உள்ள தன் சில நண்பர்களைக் கூட்டிக் கொண்டு சித்தப்பாவைத் தேடுவதற்கு லல்லி அப்பா சென்றவுடன்தான் பாலு சித்தப்பா அங்கிருந்ததையே எல்லாரும் கவனித்தார்கள். பெண்கள் இருவரும் தம் வீடு சென்றபின் பாட்டி தனியாகத் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். சித்தப்பா வீட்டுக்குள் நுழைந்து, “இனி நான் இங்க இருக்கமாட்டேன். உம்பையன் என்னக் கொல பண்ணிடுவான் போலருக்கு. நான் அலியார் பட்டறையிலயே தங்கிக்கிறேன்,” என்றார். டேப் ரெகார்டரை எடுத்துக்கொண்டு உடனே வெளியேறினார். செந்தில் போய் பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. லல்லி மாமா மாதிரி சோமு சித்தப்பாவும் பிணமாகத்தான் வீடு திரும்புவாரா என்று திகிலில் அவனது கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.

அதிகாலை இரண்டுமணிவரை தேடிவிட்டுத் திரும்பினார் லல்லி அப்பா. ரயில்வே ஸ்டேஷன், அதையொட்டிய மாந்தோப்பு, அவர் கடை அமைந்த உக்கடம் பேருந்து நிலையம், பெருமாள் கோயில் மண்டபம் என்று எல்லா இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. முன்னறையில் பாய் விரித்து ஒருக்களித்துப் படுத்திருந்த பாட்டியிடம் வந்து, “நீங்க பேசாம தூங்குங்கம்மா, நாளைக்குக் காலைல திருப்பியும் போய் தேடிப்பாக்குறேன். இல்லன்னா போலீஸ்ல சொல்லிடலாம்,” என்றார்.

மறுநாள் மதியம் வரை தேடிப்பார்த்துவிட்டார்கள். சோமு சித்தப்பா கிடைக்கவில்லை. பாட்டி காலையில் சிறிது நேரம் அழுது புலம்பி விட்டு, பதினோரு மணிக்கு சமையலை ஆரம்பித்து விட்டாள். சாப்பாடு கட்டி அலியார் பட்டறைக்குப் போய் பாலு சித்தப்பாவுக்குக் கொடுக்கச் சொல்லி செந்திலை அனுப்பினாள். செந்தில் சாப்பாடு கொண்டு போனபோது பட்டறை பூட்டியிருந்தது. வீட்டுக்குத் திரும்ப எத்தனிக்கையில் கல்யாணி அக்கா இவனை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

“செந்திலு இங்க வா!” என்றாள். இவன் அருகில் சென்றவுடன், “உங்க சித்தப்பா எங்க வீட்டிலதான் இருக்காரு. ரயில்வே ஸ்டேஷன்ல உக்கார்ந்து இருந்ததப் பார்த்துட்டு எங்க அப்பாதான் கூட்டிட்டு வந்தாரு. உங்க சித்தப்பா உங்கிட்ட மட்டும் சொல்லி கூட்டியாறச் சொன்னாரு,” என்றாள்.

கல்யாணி அக்காவுடன் அவள் வீட்டுக்குச் சென்று சோமு சித்தப்பாவைச் சந்தித்தான் செந்தில். ஓரிரவுக்குள் அழுக்கடைந்து வாடி இருந்தார். பாலு சித்தப்பா அலியார் பட்டறைக்கு சென்ற விஷயத்தை உடனே தெரிவித்தான். “போய் கெளவிகிட்ட சொல்லு. அவன் திரும்பி வந்தான்னா வீட்டில கொலதான் விழும்,” என்றார். “நீங்க வீட்டுக்கு வாங்க சித்தப்பா,” என்றான். “நீ போ வர்றேன்,” என்றவர் கல்யாணியைப் பார்த்து, “முத தரவயா ஒண்ணு செய்யனும்னு நெனச்சேன். அதுவும் உருப்படாம போச்சு,” என்றார்.

“பரவாயில்ல விடு,” என்றாள் கல்யாணி அக்கா.

வீட்டுக்குள் நுழைந்தபோது பாட்டி முன்னறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். கையில் பாலு சித்தப்பாவின் படம். லல்லி பின்னால் வந்து இவன் சட்டையை இழுத்தாள். “ஒருத்தர் வந்து உங்க வீட்டு முன்னாடி பயங்கரமா கத்திட்டுப் போனாரு. ஒரே சிகரெட் நாத்தம். உங்க சித்தப்பா அவரு டேப்ரெகார்டரைத் தூக்கிட்டுப் போய்ட்டாராம். எங்க அப்பா பயங்கரக் கோவத்துல இருக்காரு. மொதல்ல உங்கள வீடு காலி பண்ணவைக்கணும்னு சொல்லிட்டு இருக்காரு,” என்றாள்.

– பதாகை இதழில் July 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *