கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2024
பார்வையிட்டோர்: 3,974 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12

அத்தியாயம்-5 

மேற்கு மாம்பலத்தில் ஒரு சின்னஞ்சிறு தெருவில் அமிர்தாவின் அக்கா கௌரி, ஒரு சிறிய வீட்டின் சிறு பகுதியில் கணவன், மாமியார், மாமனாருடன் குடித்தனம் நடத்துகிறாள். ஊருக்கெல்லாம் நல்லவளான மாமியார் ராஜம்மா, கௌரிக்கு மட்டும் பொல்லாதவளாகத் தோன்றினாள். அக்கம் பக்கத்தில் ராஜம்மாவின் குணாதிசயங்களைப் புகழ்ந்தார்கள். யாருக்கும் எந்தச் சமயத்திலும் உதவி செய்ய ஓடிப்போகிறவள் அவள். கோவில் சந்நிதியில் யாரையாவது ஒரு தடவை பார்த்துப்பேசி விட்டால் போதும், பரிச்சயம் பரிணமித்து சிநேகமாக வளர்ந்து, ஒருபெரும் நட்பாக முடிந்து விடும். 

எத்தனைக்கு எத்தனை வெளியே நல்லவளாக இருந்தாளோ, அத்தனைக்கு அத்தனை, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அவள் கணவர், பிள்ளை, மருமகள் இவர்களுக்கிடையில் ஒரு புது அவதாரமாகத் தோன்றினாள். கணவர் கைலாசம் அனுபவத்தால் சம்பாதித்துக்கொண்ட பொறுமையின் காரணமாக, ராஜம்மாவை அவள் போகிற வழியிலேயே விட்டுவிட்டார். அவளுடன் எதிர்த்துப் பேசுவதிலோ இஷ்டத்துக்கு முரணாக ஒரு காரியத்தைச் செய்வதிலோ அர்த்தமில்லை என்றும் அது ஏதானும் ஒருவிபரீதத்தில் தான் கொண்டு போய்விடும் என்றும் அவருக்குத் தெரியும். அப்பாவின் நிழலைப் பின்பற்றுகிறவன் பிள்ளை மோகன். பொறுமையின் மறு அவதாரம். அம்மா எது சொன்னாலும் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை வேறு அவனுக்கு உண்டு. இந்த நம்பிக்கையே அம்மாவுக்கு ஒரு ஆதரவாகக்கூட இருந்தது. அதே சமயத்தில் அது மனைவி கௌரிக்கு நிராதரவாக இருக்கிறது என்று மோகன் நினைத்துப் பார்க்கவில்லை. முப்பத்திரண்டு வயதாகியும் கணவனுக்கு முதிர்ச்சி ஏற்படவில்லை என்று நினைத்தாள் கௌரி.

“ஏண்டி, உன் அப்பா தன் மனசிலே என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? கன்னிகாதானம் செய்து கொடுத்துட்டா எல்லாக் கடனும் தீர்ந்து போயிடுத்துன்னு நினைக்கிறாரோ?” என்று கேட்டாள் ராஜம்மா. 

கௌரி பழையகாலத்து மருமகளாக இல்லை. எந்தக் கேள்விக்கும் ஒரு பதிலைச் சொல்லவேண்டும். அந்தப் பதில் மனத்தின் நினைப்புக்களை அழுத்தந்திருத்தமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைக்கிறவள் அவள், அவளுடைய இந்த குணமே, ராஜம்மாவின் பிடிவாதத்தை அதிகமாக்கியது. 

“இன்னும் என்ன கடன் பாக்கி இருக்குன்னு நீங்க சொன்னாத்தான் என் அப்பாவுக்குப் புரியும்!”

“நான் சொன்னபடி ஒரு ஜதைக் கட்டிலும் காட்ரெஜ் பிரோவும் வந்தாகணும்”. 

“அப்படியே வந்துட்டா அதை எந்த இடத்திலே போட்டுக் கொள்வீர்கள்? சமையலறையிலா இல்லே, ஒரு துப்பட்டித் திரையைப் போட்டு, ஒரு பக்கம் நீங்க ரெண்டு பேரும், இன்னொரு பக்கம் நாங்க ரெண்டு பேருமா படுத்துக் கொள்கிறோமே, இந்த ரூமிலா?”

“உனக்கு நாக்கொழுப்பு ஜாஸ்தி தாண்டி, அப்பன் வளர்த்த பெண்தானே?”

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தானே உங்க பிள்ளையை வளர்த்தீர்கள்? அவர் ஏன் இப்படி பிள்ளைப் பூச்சி மாதிரி ஒரு சோப்ளாங்கியா இருக்கார்?”

“அந்தக் காலத்தில் ஒரு மாமியார் கிட்டே மருமகள் இப்படிப் பேசினால் என்ன ஆயிருக்கும் தெரியுமா?”

“என்ன ஆயிருக்கும்? இரும்புக் கரண்டியை அடுப்பிலே போட்டு, அது நன்னா காய்ஞ்சப்புறம், மாட்டுப் பெண்ணோட துடையிலே இழுத்திருப்பா… ராத்திரியிலே ஆம்படையான் கண்ணுக்கு மட்டும் தானே அது தெரியும்… ஆனா இந்தக்காலத்திலே நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். நேரே போலீசுக்குத்தான் போவோம்…” 

“நீ என்ன வேணாலும் சரமாரியாப் பேசு. எனக்கு அக்கறையில்லை. கட்டிலும் பீரோவும் வரணும்”. 

“வராது… என் அப்பாவின் நிலை உங்களுக்குத் தெரியும். என் தங்கை என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறாள். என்னைவிட அவள் பெரிய சுயநலப் புலி. தன் கலியாணத்துக்கு என்று மாசா மாசம் பணம் போட்டுப் போட்டு. இது வரையிலே மூவாயிரம் ரூபாய் சேர்த்து வைச்சிருக்கா… ஆனா அதிலிருந்து ஒரு பைசா எடுக்க மாட்டாள்… எனக்கு அவளுடைய பணமும் தேவையில்லை”. 

“இப்போ உன் தேவையைப் பத்தி யார் என்ன நினைச்சா! இந்த வீட்டுக்கு கட்டிலும், பீரோவும் வேணும்.. அதை எங்கே எப்படிப் போடறதுங்கறதை, அது வாசல்லே வந்து இறங்கியதும் சொல்றேன்.” 

“என் அப்பா வாங்கிக் கொடுத்தா, நீங்க இறக்கி வைச்சுக் கொள்ளுங்கள்… எனக்கு ஆபீசுக்கு நேரமாகிறது” 

வழக்கம் போல அன்றும் மோகனும் கௌரியும் ஆபீசுக்கு ஒன்றாகப் புறப்பட்டார்கள். மின்சார ரெயில் பிரயாணம். ஆண்களோடு நெரிசலில் வரமுடியாது என்று கௌரி பெண்கள் வண்டியில் ஏறிக்கொள்ளுவாள். பூங்கா நிலையத்தில் அவள் இறங்கிப் போவதைக்கூட மோகனால் பார்க்க முடியாமற் போய்விடும். இது அவனுக்கு ஒருதாபம் தான். 

ஒரு நாள் சொன்னான். “கௌரி, ஒரு நாளாவது இரண்டு பேரும் ஒரே பெட்டியில் போகலாமே!” 

“நான் ரெடி. முதல் வகுப்பு ஸீஸன் டிக்கட் வாங்குங்கள். மாசம் பூராவும் போகலாம்.”

அதன் பிறகு தன் அபிலாஷையை மோகன் வெளியிட்டதில்லை. 

அன்று மாமியாருடன் மல்யுத்தம் செய்து விட்டு, மோகனுடன் செல்லும் போது அவள் பேச்சை ஆரம்பித்தாள்.

“உங்க அம்மா கட்டிலும் பிரோவும் வந்துதான் ஆக வேண்டும் என்கிறாள்”. 

“தெரியும்.”

“அது ரெண்டும் வராது.”

“அதுவும் தெரியும்”. 

“தினம் தினம் எள்னை நாராகக் கிழிக்கிறாளே, நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்… உங்க அப்பா மாதிரி வாய்மூடி சன்னியாசியாகவே இருக்கப்போகிறீர்களா?” 

“நானும் ஒரு யோசனை செய்து வைத்திருக்கிறேன். உன். அப்பாவை மீட் பண்ணி அந்த உபாயத்தைச் சொல்லணும்”. 

“என்ன யோசனை? என்ன உபாயம்?”

“எங்கள் கம்பெனியிலே அடிக்கடி மேஜை நாற்காலிகள் தற்காலிக உபயோகத்துக்கு வாடகையில் எடுக்கிறார்கள். ஒரு நாள்தான். அந்த இடத்துக்குப்போயிருந்தேன். புதுப்புது சோபா வாடகைக்குக் கிடைக்கிறது. கட்டில், பிரோ எல்லாம் வாடகைக்குக் கிடைக்கிறது.”

“அதனாலே,..”

“அம்மாவின் திருப்தியைப் பூர்த்தி செய்த மாதிரியும் இருக்கும். அதே சமயம்.உன் அப்பாவுக்கும் பணத்தொல்லை இல்லாமலிருக்கும்”. 

“கொசுவுக்கு இருக்கிற மூளை கூட உங்களுக்கு இல்லை!” என்றாள் கௌரி. 

தன் மூளையின் பரிணாமத்தை மனைவி எப்படிக் கணக்கிட்டாள் என்று புரியாத மோகன் கொசுவை நினைத்துப் பார்த்துக் கொண்டான். பிறகு, “ஏன்?” என்று கேட்டான்.

“உங்க அம்மாவுக்குத் தேவையானது கட்டிலும் பிரோவுமில்லை. பணம். ரொக்கப்பணம். இரண்டாயிரம் ரூபாய்க்கு கரன்சி நோட்”. 

“அப்படியா?”

“அதைத் தவணை முறையிலே கொடுத்தாக்கூட வாங்கிக் கொள்ளுவாள்.”

“உனக்கு எப்படித் தெரியும்?”

“உங்க தங்கைக்கு அவளுடைய சாந்தி முகூர்த்தத்துக்கு வாங்கிக் கொடுத்தாள் இல்லியா? அன்னியிலிருந்து, பெண்ணுக்குக் கொடுத்த மாதிரி பிள்ளைக்கு வரவில்லையே என்கிற நெஞ்சீரல் அவளுக்கு இருக்கு. தான் செலவு செய்த பணம் மருமகள் மூலமாகக் திரும்பி வரட்டுமே என்று பார்க்கிறாள். 

“அப்படியா?” 

“ஆமாம். இதெல்லாம் தெரியாம ஏதோ கொலம்பஸ் மாதிரி ஒரு உபாயத்தைக் கண்டு பிடியுங்கள்!”

“இப்ப என்ள வழி“ 

“உங்க அம்மா இதெல்லாம் கேட்கிறாளேன்னு எனக்கு எந்த எரிச்சலும் இல்லை. உலகத்திலே பிள்ளைன்னு பெத்தவா யாரும் கேட்கிறதுதாள். ஆனா கேட்கிற சமயமும் சந்தர்ப்பமும் முறையும்தான் சரியா இல்லை. என்னை ஒரு சூதாட்டக்காயா வைச்சு ஆடலாம்னு பார்க்கிறா… எனக்கு பிடிக்கலை” 

“கொடுக்காமபோனா என்ன செய்வாள் என் அம்மா?”

“என்ன வேணும்னாலும் செய்வா… அப்பாவை உங்களுக்குத் துணையா படுத்துக்கச் சொல்லி. என்னைத் தங்கிட்டே படுத்துக்கவும் சொல்லலாம். மயிலாப்பூரிலே ஒரு மாமி அப்படித்தான் செய்தாள். சாந்தி முகூர்த்தத்துக்கு அப்புறம் ஒருநாள் கூட பிள்ளையும் மருமகளும் ஒரே படுக்கையைப் பார்த்ததில்லை. ஆனா அந்தப் பொண்ணு கொஞ்சம் கொடுத்து வைச்ச பெண்… கலியாணமான எட்டாம் மாசமே மாமியார் மண்டையைப் போட்டு விட்டாள்…” 

“இப்போ என்ன செய்யறது….?”

“நீங்கள் ஒரு ஆண்பிள்ளையா மாறலேன்னா நான் என் சொரூபத்தைக்காட்டிவிடுவேன்” என்றாள் கெளரி. 

“என்ன கௌரி, இப்படி பயமுறுத்தறே?”

“பயமுறுத்தல் இல்லே. ஒருவார காலமாகவே தான் எனக்குள்ளே ஒரு சங்கல்பம் செய்துகொண்டிருக்கிறேன். எனக்குன்னு ஒரு தனி சம்பாத்தியம் இருக்கு. அதை இப்போ நான் உங்ககிட்டே கொடுக்கிறேன். நீங்க உங்களைப் பெத்த வயித்தின் காலடியிலே கொட்டறேள். அதுக்கு பதிலா நானே தனியே போய் அதை எனக்கே செலவு செய்து கொள்ளலாம்னு முடிவு செய்திருக்கிறேன். எழும்பூர்லே பெண்கள் ஹாஸ்டல் இருக்கு. இந்த எலக்ட்ரிக் டிரெயின் செலவுகூட மிச்சம்”. 

“என்னைக்கூட உதறி விட்டுவிட்டுப் போக உனக்கு மனசு இடம் கொடுக்கிறதா கௌரி?”

“சத்தியமா இல்லை… ஆனா நீங்கள் என்னிக்கு எனக்கு ஆதரவா, பக்கபலமா இருந்திருக்கிறீர்கள்? உங்க அம்மா தேள் கொட்டறமாதிரி கொட்டிண்டே இருக்கிறப்போ, நீங்க அசுவமேத மகா மண்டபத்துக்கு ராமாயணம் கேட்கப்போய் விடுகிறீர்கள். அப்புறம் ராத்திரி என்கிட்டே வந்து, தத்துப் பித்துன்னு உளறிக் கொஞ்சறபோது, அதுவும் தேள் கொட்டற மாதிரி இருக்கு…” 

“என்ன கௌரி இது. என்னென்னமோ பேசறே.”

“எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலை… நீங்களும் நானுமா சேர்ந்து எழுநூத்தம்பதுரூபா சம்பாதிக்கிறோம். உங்க அம்மா, அப்பா கொண்டுவரும் நானூறு ரூபாயிலே, நிம்மதியா இருக்கட்டும். பேசாம ரெண்டு பேரும் தனியா போயிடலாம். புரசைவாக்கத்திலே சின்ன வீடாகவே கிடைக்கும். உங்க திருப்திக்காக வேணும்னா நீங்கள் உங்க அம்மாவுக்கு அம்பதோ நூறோ கொடுத்து விடுங்கள்”. 

“குடும்பத்தைப் பிரிக்கிறது தப்பு கௌரி”

“நான் எழும்பூர் ஹாஸ்டலுக்குப் போகக் கூடாதுன்னு நீங்கள் நினைச்சா நான் சொல்றபடி செய்யுங்கள்… என்னால் இனிமேலும் இந்த அவஸ்தையை சகித்துக் கொண்டு இருக்க முடியாது”. 

மோகனுக்குப் பதில் சொல்ல வாய் எழவில்லை. 

அத்தியாயம்-6

அமிர்தா, ரகு படுத்திருக்கும் அறைக்கு வெளியே நின்று, எட்டிப்பார்த்தாள். ரருவைச் சுற்றி நான்குபேர்கள். உயிருக்காக ஒருவன் மன்றாடுகிறான் என்பதையும் நினையாமல் தங்கள் இஷ்டத்துக்கு உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் எல்லோரையும் ஒரு தடவை பார்த்தாள். அவர்கள் அவளும் ரகுவும் பணியாற்றும் அலுவலகத்தில் வேலை செய்கிறவர்கள். 

அவள் உள்ளே பிரவேசித்தாள். அப்போது தான் ஐந்தாவதாக பானுமதி மௌனமாக கட்டிலுக்கு அருகே, ரகுவின் தலைமாட்டில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவள் வெளியே நின்று எட்டிப் பார்த்தபோது, அவளை மற்றவர்கள் மறைத்திருக்கிறார்கள். 

பிளாஸ்க்கும் கூடையுமாக அமிர்தா பிரவேசித்ததைக் கண்ட போது ஒரு சில வினாடிகள் அவர்கள் மௌனமாக ஒரு வித ஆர்வத்துடன் பார்த்தார்கள். 

“ஹலோ அமிர்தா” என்று மீண்டும் உரத்த குரலில் பேச ஆரம்பித்த சிவதாணு, “நாங்கள் இங்கே உன்னை எதிர்பார்க்க வில்லை!” என்றான். 

“நான்கூடத்தான்” என்றான் மனோகரன். 

“ஹௌ இஸ் அமிர்தா இன்ட்ரஸ்டட் இன் திஸ் புவர் மேன்?” என்று கத்திச் சிரித்தான் ஜோசப். 

“அவளே சொல்லுவாள், வாட் டு யூ ஸே மிஸ் பானுமதி?” என்று அவள் பக்கம் திரும்பினாள் சுந்தசாமி. 

அமிர்தா பிளாஸ்க்கை ஒரு முக்காலியின் மேல் வைத்து விட்டு, கூடையை மூலையில் வைக்கப்போனாள்.

“அமிர்தா ராத்திரி தங்க வந்திருக்கிறாள்!” என்றான் ஜோஸப். 

“தயை செய்து நீங்கள் வெளியே போங்கள். மிஸ்டர் ரகு உணர்வு இல்லாமல் கிடக்கிறார்….” 

“சபாஷ்” என்றான் சுந்தசாமி. “உங்களுக்கு இருக்க என்ன உரிமை இருக்கோ, அதே உரிமை எங்களுக்கும் இருக்கு” என்றான் மனோகரன். 

“கரெக்ட்” என்றான் சிவதாணு. 

“சொல்லப்போனால், எல்லாரையும் விட மிஸ் பானுமதிக்கு ஜாஸ்தி இருக்கு” என்றான் ஜோசப். 

“உணர்வு இல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் ஒருவர். அவரைச் சுற்றி நின்று கொண்டு கத்துகிறீர்களே… ப்ளீஸ் க்ளியர் அவுட்!” என்றாள் அமிர்தா. பிறகு, “உங்களுடைய உரிமைகளைப் பற்றிப்பேச இடம் இது இல்லைன்னு உங்களுக்கே தெரியணும்” என்றாள். 

“நாங்கள் டாக்டரைக் கேட்டுத்தான் இங்கே வந்தோம்” – ஒருவன். 

“அதே டாக்டரைக் கொண்டுதான் உங்களையெல்லாம் வெளியே போகச் சொல்லணும் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை” 

“யூ கேன்ட்ரை” ஜோசப். 

இதுவரையில் பேசாதிருந்த பானுமதி எழுந்தாள். 

“அமிர்தா, நீ சொல்றது சரி. இங்கே சத்தம் போட்டால் பக்கத்து ரூம் பேஷண்ட்களுக்கு கஷ்டம் தான்… ப்ளீஸ்! எல்லாரும் கிளம்புங்கள்”. 

மூன்று பேர் மெளனமாகி அவளைப் பார்த்தார்கள். சிவதாணு மட்டும், “ரகு இஸ் மை டியரெஸ்ட்” என்றான். 

“அதுக்காகவே நீங்க எல்லாரையும் விட அதிமான ஒழுங்கோடு இருக்க வேண்டும்!” என்றாள் பானுமதி. 

“ஓகே… நீயும் கிளம்பு”. 

“இல்லை. நீங்கள் போங்கள்”. 

எல்லோரும் போன பிறகு பானுமதியையும், ரகுவையும் மாறி மாறிப் பார்த்தாள் அமிர்தா. உணர்வற்ற நிலையில், சாந்தமே உருவான முகத்துடன், ஊசி வழியாக மருந்தையும். குளூகோசையும் ஏற்றுக் கொண்டிருக்கும் ரகுவுக்கும், பானுமதிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு நாள் கூட இருவரையும், அவள் ஆபீசிலோ அல்லது பிற இடங்களிலோ சேர்ந்து பார்த்ததில்லை. பின் ஏன் பானுமதி இந்த வேளையில் வந்திருக்கிறாள்? 

அவள் இந்தக் கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, அதே கேள்வி அவளுக்கும் பொருந்துவதை உணர்ந்தாள். அவளுக்குப் பூ வாங்கிக் கொடுத்தவன், வேலை வாங்கிக்கொடுத்தவன் என்கிற காரணங்களைத்தவிர வேறு என்ன காரணம் இருக்கிறது அவன் பால் அவளை ஈர்க்க? அமிர்தாவின் அழகைக் கண்டு சிலர் அயர்கிறார்கள். சிலர் வயிக்கிறார்கள். பலர் அதை ரசித்து உதறி எறியக் கனவு காண்கிறார்கள். அவளுடைய மதமதப்பான உடற்கட்டும், செழுமையான மார்பகமும் பலருடைய மிருக இச்சையைத் தூண்டிவிடுகிறது. ஆனால் அவள் எப்படிப்பட்டவள் என்பதை ஆபிஸ் முழுவதும் அறிந்திருந்ததால், நெருங்கவே பயப்பட்டார்கள். 

ஒரு தடவை ஒரு குறும்புக்காரன், அவள் ஆபீசுக்கு வந்த புதிதில் இடக்காகப் பேசினான். 

“உன்னை மாதிரிப் பெண்களெல்லாம். இவ்வளவு கவர்ச்சி வைத்துக் கொண்டு ஆபீஸுக்கு வரக்கூடாது. பெரிய பங்களாவிலே ஏர்கண்டிஷன்ரூமிலே ஜாலியாக இருக்கணும்” என்றான். 

“எனக்கும் அதே ஆசை தான்!” என்றாள் அமிர்தா.

“நினைச்சேன்”

“ஆனாநடக்காது போலிருக்கே!” என்றாள் அமிந்தர்.

“ஏன்?” 

“இந்த ஜன்மந்திலும் சரி. இன்னும் ஏழேழு ஜன்மங்களிலும் சரி. நீங்கள் பங்களா கட்டி, ஏர்கண்டிஷன் ரூம் வைக்கப் போறதில்லை”. 

அவள் வேண்டுமென்றே குரலைத் தாழ்த்தி, உணர்ச்சி வயப்பட்டுச் சொன்னதை அவன் தப்புக் கணக்குப் போட்டு விட்டான். அவளுக்குத் தன் மீது ஒரு பிடிப்பு இருப்பதாகக் கூட நினைத்தான். அந்த நினைப்பில், “மிஸ் அமிர்தா, நீ பெரிய அழகி, உன்னை மாதிரிப் பெண் எனக்கு அமைந்தால் நான் பங்களா என்ன, ஒரு ஊரையே விலைக்கு வாங்கி விடுவேன்…” என்றான். 

“முதலில் பங்களா வாங்கி விட்டு அப்புறம் சொல்லுங்கள்”

அவளுடைய வார்த்தைகள் அவன் காதில் விழும் முன்னே, அவன் தன்னையும் மீறி அவளைத் தொட்டு விட்டான்.

அடுத்த வினாடி, மின்சாரம் நாக்கியது போல அவன் திணறிப் போனான். அமிர்தா கொடுத்த அறையில் கன்னம் வீங்கி, காது பாடியது. 

இதை ஆபீசில் உள்ளவர்கள் எல்லோரும் பார்த்து விட்டார்கள். அதன் பிறகு அமிர்தா நெருங்க முடியாத ஒரு அக்னியாக விளங்கலானாள். 

இப்படிப் பட்டவள் ரகுவைப் பார்க்கவும், அவனுக்கு சிசுருஷை செய்யவும் ஏன் ஓடி வரவேண்டும்? அதுவும் அப்பாவை எதிர்த்துப் பேசி? ரகு அவளைப் பல வருடங்களாக விரும்புகிறான் என்பதை அவள் உணர்வாள். அவள் அவனை வெறும் நண்பனாக, ஒரு மதிப்பும் மரியாதையும் கொடுத்து ஏற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதை ரகுவும் அறிவான். ஆனால் வெறும் நட்பு காரணமாகத்தான் அமிர்தா துடிதுடித்து வந்திருக்கிறாளா? 

‘ஆமாம்’ என்று வாய்சொல்ல விரும்பினாலும் மனம் எழவில்லை. அமிர்தா என்றுமே தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுகிறவள் அல்ல. இயல்பிலேயே ஒரு யதார்த்தவாதி. எந்தப் பிரச்சினையையும் உலக ரீதியில் பார்க்கக்கூடியவள். அதனால்தான் அவள் மனம் எதிலும் எளிதில் லயிக்காமல் போய்விடுகிறது என்று நினைத்தாள். அவள் இது வரையில் ரகுவைக் காதலிக்காமல் இருப்பதற்கும் இந்த யதார்த்த லட்சியம் தான் காரணமோ? 

திடீரென்று பானுவின் குரல். எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலக் கேட்டது. 

“உட்காரேன் அமிர்தா”. 

அமிர்தா பானுவைப் பார்த்தாள். அவளுடைய கண்கள் கலங்கிச்சிவந்திருந்தன. 

“நீ எப்போது வந்தாய்?”

“நீ ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி ஒரு டாக்ஸியில் ஏறினாயே, அப்போது. ஆனால் நீயும் இங்கே தான் வந்து விட்டுப் போனாய் என்று நான் நினைக்கவில்லை.” 

“எனக்கு நாலு மணிக்குத்தான் செய்தி கிடைத்தது.”

“நேற்று ராத்திரியே அட்மிட் ஆகிவிட்டது”. 

ஒரு நிமிடம் அமிர்தா யோசனை செய்தாள். இன்றும் காலையில் பூ வந்தது. வழக்கம் போல பூக்கடைப் பையன் போட்டு விட்டுப் போயிருக்கிறாள். ஆனால் அவனுக்கு இந்த விஷயம் தெரியாது போலிருக்கிறது. 

“ஓ, அப்படியா?” என்றாள் அவள். 

“நான் நேற்று ராத்திரியே வந்தேன். எல்லோருக்கும் நடுவே போட்டிருந்தார்கள். டாக்டர் நம்பிக்கையே கொடுக்கவில்லை.” 

“ஆமாம்.” 

“ஆனா இப்போது நம்பிக்கை பிறந்து விட்டது. இந்த விசேஷ அறையே ஒரு புதுத் தெம்பைக் கொடுக்கிறது”.

“ஆமாம்.” அமிர்தா இயந்திரமாகப் பேசினாள்.

“நீதான் இந்த ஏற்பாட்டைச் செய்தாய் என்று டாக்டர் சொன்னார்”. 

“கேட்டுக்கொண்டேன். கொடுத்தார்.”

“ஒரு விஷயம் தெரியுமா?”

“என்ன?” 

“யாரிடமும் சொல்லாதே.’ 

“சரி”

“ரகு விஷம் சாப்பிட்டிருப்பார் போலிருக்கு!”

“பேத்தல், தற்கொலை முயற்சி செய்ய அவருக்கு என்ன பைத்தியமா… அவருக்கு என்ன குறை இருக்கிறது?”. 

“அப்படித்தான் நானும் நினைத்தேன்… ஆனால் கிடைத்த ஓரிரண்டு செய்திகளிலிருந்து உண்மையா இருக்கலாமோ என்று எனக்குப் படுகிறது”. 

“என்ன செய்தி?”

“அவருக்கு கல்கத்தாவில் ஒரு அண்ணன் இருக்கிறார். அவரும் தாயாரும் சேர்ந்து இவருக்கு அங்கே ஒரு பெண்ணை நிச்சயம் செய்து விட்டார்களாம்”. 

“அதுக்காக ஸுயிஸைட் அட்டெம்ப்ட் செய்வானேன்?”

“இவருக்கு அதில் இஷ்டமில்லையாம்.”

“உன்னிடம் சொன்னாரா?” என்று கேட்டாள் அமிர்தா.

“ஆமாம்”. 

“இதையெல்லாம் உன்னிடம் சொல்லுகிற அளவுக்கு உங்கள் இருவரிடையே பழக்கம் இருக்குன்னு எனக்குத் தெரியாது”. 

“ரகு ஒரு அலாதி” என்றாள் பானுமதி. மேற்கொண்டு அலாதித் தன்மையை அவள் விவரிக்கவில்லை. ஆனால் அமிர்தா விடவில்லை. 

“அலாதின்னா எப்படி?”

“கறை படாத மனசு. எதிலும் ஒரு தனி ஈடுபாடு கிடையாது, பெண்களைக் கூடப் பிறந்தவர்கள் மாதிரி நடத்துகிறவர். அவரை அணுகி நான் பேசுகின்றேன். மற்றவர்களிடம் பேசுவது மாதிரித்தான் என்னிடமும் பேசுகிறாரே தவிர, நான் வயது வந்த ஒருபெண் என்பதையே நினைத்துப் பார்த்ததில்லை.” 

“பானு!” என்ற அமிர்தா, “நான் ஏன் இங்கே வந்திருக்கிறேன் என்று உனக்கு ஒரு புதிரா இருக்கலாம். ஏழு வருடங்களாக நானும் ரகுவும் நண்பர்கள். எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தவரே அவர்தான். இந்த சிநேக தர்மம் காரணமாக நான் இப்போ உதவி செய்ய வந்திருக்கிறேன்… ஆனா நீ ஏன் வந்திருக்கிறாய் என்றுதான் எனக்குப் புரியவில்லை”. 

பானு சொன்ன பதில் அமிர்தாவைத் தூக்கிவாரிப் போட்டது!. 

அத்தியாயம்-7 

அமிர்தா, பானுமதியை அலுவலகத்தில் பார்த்திருக்கிறாளே தவிர, அவளுடன் இதற்கு முன் பேசியதோ பழகியதோ இல்லை. ரகுவுக்கு சிசுருஷை செய்ய வந்த இடத்தில் அவள் இருப்பாள் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. மற்ற காரியாலய நண்பர்களுடைய துணையில் ஒரு இரக்கம் காரணமாக ரகுவைக் காண வந்திருக்கிறாள் என்றுதான் அவள் முதலில் நினைத்திருந்தாள். 

ஆனால் இப்போது உண்மையான காரணத்தை பானு கூறியபோது அவளால் நம்பவும் முடியவில்லை: ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. 

“நான் ஆபீசுக்கு வந்த நாளிலிருந்து ரகுனாதனைக் காதலிக்கிறேன். அவரை ஒரு தெய்வமாக மதிக்கிறேன்” என்றாள் பானு. 

சில நிமிடங்களுக்கு அயர்ந்து போன நிலையில் மௌனமாக இருந்த அமிர்தா, “என்ன பேந்தறே?” என்று கேட்டாள். எவன் தன் மீது ஆசை கொண்டு, ஏழு ஆண்டுகளாக நாள் தவறாமல் ஒரு முழம் பூ அனுப்பி வருகிறானோ அவனை ஒரு சாதாரண நண்பனாக மதித்து வந்திருக்கும் அமிர்தாவின் நெஞ்சில், அவளே இதுவரை உணர்ந்தறியாத உணர்ச்சிகள் ஒரு புதுமைக் கோலத்தில் பிறந்து கொண்டிருக்கும் வேளையில், பானு கூறியது ஒரு பிரமிப்பையே உண்டு பண்ணியிருந்தது. 

“ஆமாம் அமிர்தா. நான் அவரை மனமார நேசிக்கிறேன். வணங்குகிறேன்”. 

“நீயும் அவரும் சேர்ந்து போயிருப்பதைக் கூட நான் பார்த்ததில்லை” என்றாள் அமிர்தா. 

“முயன்றிருந்தால் கூட முடியாது. ஏன் தெரியுமா? நானும்அவரும் அதிகம் பேசிக் கொண்டது கூடத் தெரியாது.”

”ஆனால் நீ அவரைக் காதலிப்பது அவருக்குத் தெரியும் இல்லையா?” 

“தெரியும். ஆனால் என்ன பிரயோசனம். அவர் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை”. 

“நீ ஒரு பைத்தியக்காரப் பெண்” 

“இருக்கலாம், அவரையும் ஒரு பைத்தியம் என்றுதான் ஆபீசில் பலர் கூறுகிறார்கள். ஏன் தெரியுமா? உன்னை அர்த்தமில்லாமல் அவர் தியானிக்கிறாராம். தினம் தினம் பூ அளித்து ஆராதிக்கிறாராம். ஆனால் நீ அவரை மதிப்பதில்லையாம். அலட்சியம் செய்கிறாயாம். அப்படி எல்லாம் இருந்தும் ஏன் உன்னை ரகு நாடவேண்டும்? அவர் ஒரு பைத்தியக்காரர் தானே?” 

அமிர்தா பதில் சொல்லவில்லை. 

“நான் சொல்றது தப்புன்னா என்னை மன்னித்துவிடு”.

“உன் காதல் வெற்றி அளிக்க நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன் பானு”. 

“தாங்க்ஸ்!” 

அவள் சொல்லி வாய் மூடுகையில் படுக்கையில் ஒரு அசைவு உண்டாவதை அமிர்தா உணர்ந்தாள். ரகுவைப் பார்த்தாள், திடீரென்று ஒரு மூச்சுத் திணறலில் அவன் அவஸ்தைப் படுவதைக் கண்டு கொண்டாள். 

கண் விழித்தவனாய் ரகு பேச முடியாமல், ஒரு புன் முறுவலை வரவழைக்க கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான். 

“இதோடாக்டரைக் கூப்பிடுகிறேன்.” 

அமிர்தா வெளியே ஓடினாள். இரண்டு நிமிடங்களில் ஒரு டாக்டரும் நர்சும் விரைந்து வந்தார்கள். 

மூச்சுத் திணறல் இன்னும் நிற்கவில்லை. வெளியே சென்று கொண்டிருக்கிற உயிரைத் தடுத்து நிறுத்த அவன் தன் சக்தி முழுவதையும் பிரயோகித்துக் கொண்டிருந்தான். 

அவனுடைய நாடியைக் கணக்கிட்டுக் கொண்டே டாக்டர் “ஆக்ஸிஜன்” என்று டாக்டரின் இயல்பான நிதானத்துடன் கூறினார். நர்ஸ் ஓடினாள். 

அடுத்த நிமிடம் எதிர்பாராத அதிசயம் ஒன்று நடந்தது.

“டாக்டர், நான் இவளுடன் தனியா பேச வேண்டும்”. அமிர்தாவைக் கண்களாலேயே சுட்டிக்காட்டினான் ரகு. 

பானுவும் டாக்டரும் வெளியே போய்க் கொண்டிருக்கையிலேயே, “அமிர்தா” என்ற ரகு, கைக்கு வாட்டமாக படுக்கைக்கு அடியிலிருந்து ஒரு பொட்டணத்தை எடுத்தான். ஒரு சிறுவாழை இலைத்துண்டில் மல்லிகைப்பூ.

“இந்தா… என்கடைசிப் பூ.”

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்… ? ரகு…ரகு..!” பூவை அவள் வாங்கிக் கொண்டாள். 

“உன்னை விரும்பியதற்கு என்னை மன்னித்து விடு. அமிர்தா.” 

“ரகு… ரகு…. இன்று தான் நானும் உங்களைக் காதலிக்க ஆரம்பித்தேன்”. 

“அப்படியா…. நான் கொடுத்து வைத்தவன்….”

ஆக்ஸிஜன் வந்தது. 

கண்ணீர் மல்க பானு நின்றாள். இதுவரையில் எதற்கும் அழுதிராத அமிர்தா சிலையாக ரகு அருகே நின்றாள், 

“உங்களுக்கு எப்படி உடம்புக்கு வந்தது?” என்றாள் அமிர்தா. ‘விஷம் குடித்து விட்டீர்களா?’ என்று கேட்க விரும்பவில்லை, 

“தெரியவில்லை. ஏதோ சாப்பிட்டதில் வந்திருக்கலாம்… பானு, நீயும் வந்திருக்கிறாய்… தாங்க்ஸ்”. 

“தூங்குங்கள் ” – அமிர்தா. 

டாக்டர் பானுவையும் அமிர்தாவையும் தனியே அழைந்தார். வெராந்தாவுக்கு எல்லோரும் வந்த போது, “இந்த ஆக்ஸிஜன் ஒரு வெறும் திருப்திக்குத் தான்'” என்றார்.

“அப்படியானால்?” 

“அவனை நிம்மதியாக இறக்க விடுங்கள்”.

“பிழைக்க வழி இல்லையா, டாக்டர்?”

“ஸாரி. மிஸ் அமிர்தா.

உடம்பு தண்ணீரே இல்லாமல் வற்றி விட்டது. நாங்கள் கொடுக்கிற ஸலைன் அவனுடைய உடம்பில் ஒட்டமாட்டேன் என்கிறது”.

சரியாக பன்னிரண்டரை மணிக்கு ரகு தன் காதலின் வெற்றியைக் காணாமல், பானுவின் காதலையும் பூர்த்தி செய்யாமல் ஒரேயடியாகப் போய்விட்டான். 

மறுநாள் காலையில்தான் சடலத்தைக் கொடுக்க முடியும் என்று ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறிவிடவே, கொண்டு வந்திருந்த சாத்துக்குடிப் பழங்களையும், பிளாஸ்க்கையும் எடுத்துக்கொண்டு அமிர்தா புறப்பட்டாள். இன்னும் அழுது கொண்டிருந்த பானுவின் இடுப்பில் கைகொடுத்து மெதுவாக அழைத்து வந்தாள் அவள். 

“நீ எங்கே குடி. இருக்கிறாய்?”

“எழும்பூர் லேடீஸ் ஹாஸ்டலில்”

“உன்னை அங்கு கொண்டு போய் விடுகிறேன்”.

“நீ மயிலாப்பூரில் தானே இருக்கிறாய், எனக்காக சிரமப்படாதே…”

“நீ என்னைவிடச் சின்னவள், நான் சொல்லுவதைக் கேளு”. 

பானு மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. 

டாக்சியில் எழும்பூருக்குச் செல்லும் வழியில், “ரகு இப்படி ஏமாற்றுவார்னு நான் நினைக்கவேயில்லை” என்றாள் பானு. 

“அவருடைய காலம் முடிந்துவிட்டது. ஒரு பறவை கூண்டிலிருந்து விடுதலை பெற்றுப் பறத்துவிட்டது”.

“நீ வேதாந்தம் பேசுகிறாயா, அமிர்தா?” 

“எனக்கு வேதாந்தம் தெரியாது… ரகு என்கிற ஒரு மனிதர் நமக்குத் தெரியாமலேயே போயிருந்தால், அவருடைய மரணம் நம்மை எப்படிப் பாதித்திருக்கும்? அவரைப் பார்த்திருப்பதால் இப்போது அவருடைய பிரிவு நமக்கு வேதனையாக இருக்கிறது.”

“வெறும் வேதனையா? பெரிய துக்கம்.” 

“அது துக்கமா, வெறும் வேதனையா என்பது அவரவர் மனத்தைப்பொறுத்திருக்கிறது. நாள் விரும்பியிருந்தால் நான்கு வருஷங்களுக்கு முன்னாலேயே அவரைக் கலியாணம் செய்து கொண்டிருந்திருப்பேன். இன்று விதவையாகவும் ஆகியிருப்பேன்… அன்று அவரை நான் மணந்து கொண்டிருந்தால், இன்று அவருடைய மரணம் உன்னை பாதித்திருக்குமா? அவரை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டாய்… எத்தனையோ ஆயிரம் சாவுகளில் இதுவும் ஒன்று என்று நினைத்திருப்பாய்…” 

“நீ கலியாணம் செய்து கொண்டிருந்தால், உன்னுடைய தாலிபாக்கியத்தால், அவர் பிழைத்திருக்கலாம்.”

“பேத்தல்… யாருடைய விதியும் இன்னொருவனுடைய விதியுடன் இணைவது கிடையாது. நாம்தான் நம்முடைய பேதமையில், ஒன்றுக்கொன்று முடிச்சுப் போடுகிறோம்.” 

“உன் வேதாந்தம் எனக்குப் புரியவுமில்லை; பிடிக்கவுமில்லை.” 

“ஆர்வம் பிறக்கிற இடத்தில் நம்பிக்கை உண்டாகிறது. நம்பிக்கை தளர்ந்தால் வேதனை, கசப்பு. அது உடைந்தால் துக்கம், துயரம். நீ ஆர்வத்துடன் காதலிக்க ஆரம்பித்தாய். நம்பிக்கையை வளர்த்துக்கொண்டாய்… இப்போது என்ன வாயிற்று? ரகு இறந்து போய்விட்டார். நாளையிலிருந்து நீ இயங்காமலிருக்கப் போகிறாயா? கொஞ்ச காலத்துக்கு துக்கம் உன்னுள் தலைவிரித்தாடும். பிறகு ஓய்ந்து போய்க் கடைசியில் மறைந்தேவிடும். ரகு உன்னுடைய பெரிய நினைவுத் திரையில் ஒரு சின்னஞ்சிறு புள்ளியாகப் போய் விடுவார்.”

பானு இடைமறித்தாள். “ரகுவை என்னால் மறக்கவே முடியாது”. 

“இப்போதைய மன நிலையில் நீ பேசுகிற பேச்சு. அடுத்தவருடம் அல்லது இன்னும் இரண்டு வருடங்களில் உன் வாழ்க்கையின் திசை மாறுவதை நீயே உணர்வாய். ஆனால் அப்போது உன் நெஞ்சில், இன்று இருப்பது போல ரகு இருக்கமாட்டார்.” 

“அமிர்தா, நீ வயதுக்கு மீறிப் பேசுகிறாய். எனக்கு அலுக்கிறது.” 

“என் பேச்சு அலுக்கிறது என்பதை ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லுகிறாயே, பானு. அது எனக்குப் பிடித்திருக்கிறது. இது உன்னுடைய தனித்தன்மை…” 

“அமிர்தா, நீ உன்னுடைய தனித்தன்மையில் வேதாந்தம் பேசுகிறாய். நான் எத்தனையோ ஆயிரம் பெண்களில் ஒருத்தி”. 

”அதனால்தான் சொல்லுகிறேன். ரகு உன் நினைவுத் திரையில் வெறும் புள்ளியாகி விடுவார் என்று.” 

இனிமேலும் அமிர்தாவுடன் பேசுவதில் அர்த்தமில்லை என்று பானு கருதி, மெளனமாகவே இருந்தாள்.

எழும்பூர் விடுதி வந்ததும், பானு டாக்சியிலிருந்து இறங்கினாள். 

அமிர்தா, “நாளை சந்திக்கிறேன்” என்றாள்.

“நான் ஆபீசுக்கு வரப்போறதில்லை.”

”ரகுவுக்கு இந்த ஊரில் உற்றார் உறவினர் யாருமில்லை. அவருடைய சடலத்தை நாம்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். ஆஸ்பத்திரிக்குக் கார்த்தாலே ஏழுமணிக்கு வா!”

“வரப் பார்க்கிறேன்.”

பானு விரைந்து விடுதிக்குள் பிரவேசித்தாள். 

“யார் அம்மா போயிட்டாங்க?” என்று டாக்சிக்காரன் கேட்டான். 

“எங்க ஆபீஸ்லே எங்களோடு வேலை செய்கிற ஒரு நல்ல மனிதர், கல்கத்தாவிலே அம்மாவும், அண்ணாவும் இருக்கிறார்கள். இங்கே அனாதையாகப் போய்விட்டார். போன பின் அவருடைய சடலத்தை அனாதையாக விடலாமா?” 

“நீங்க ஒரு நல்ல காரியம் செய்யறீங்கம்மா” 

“இது ஒரு காரியம்தான்… நல்லதோ கெட்டதோ தெரியாது… ஆனா யாரெல்லாம் என் உதவிக்கு வரப் போகிறார்களோ… நான் ஆண் பிள்ளையாக இருந்திருந்தால், நானே கொள்ளி போடுவேன்….” 

“நான் என் விலாசத்தைத் தரேம்மா… இந்தப் பட்டணத்தில் அவருடைய சிநேகிதருங்க யாரும் வரல்லேன்னா, நான் வந்து கொள்ளி போடறேம்மா… எனக்கு அறுபது வயசாச்சு. புள்ளையே இல்லே, எனக்கு கொள்ளி போட… இவனுக்கு நான் போட்டா ஒரு நல்லவன் எனக்கு போட மாட்டானா?” 

மயிலாப்பூரில் அமிர்தா தன் வீட்டை அடைந்த போது அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

அத்தியாயம்-8 

கெளரிக்கு அவளுடைய மாமியார் அவள் கலியாணமாகி வந்த தினமே ஒரு கட்டளை இட்டிருந்தாள். இரவுச் சாப்பாட்டு வேலையை ஆபீஸிலிருந்து திரும்பியதும் அவள் ஏற்றுக் கொள்ளவேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்திருந்து காபியையும் போட்டு முந்தின இரவுப் பாத்திரங்களையும் துலக்கி வைக்கவேண்டும். பிறந்த வீட்டில் இந்தக் காரியங்களையெல்லாம் செய்து பழக்கப்பட்டிருந்ததால் கௌரிக்கு இந்தக் கட்டளை ஒரு பெரும் சுமையாகவோ ஒரு கஷ்டமாகவோ தோன்றவில்லை. ஆனால் நாள் செல்லச் செல்ல ஒரு அதிருப்தி அவளுள் பிறந்து அது வளர்ந்து வளர்ந்து ஒரு வேதனையாகவே மாறிவிட்டது. வேதனை சிற்சில சமயங்களில் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கின. ஒரு நாள் கூட அவள் கணவனுடன் பீச் என்றோ. சினிமா என்றோ போனதில்லை. கணவனுடன் வெளியே சென்று ஒரு முழம் பூ வாங்கிச் சூட்டிக் கொண்டதில்லை. ஞாயிற்றுக் கிழமைகளிலாவது விமோசனம் உண்டா என்றால் அன்றும் இருக்காது. ராஜம்மாவின் பெண் மீனா தன் கணவனுடன் பெற்றோரைப் பார்க்க வந்து விடுவாள். பெண்ணும் மாப்பிள்ளையும் வீட்டில் இருக்கும்போது மருமகள் கூடவே இருந்தாக வேண்டும். 

சாயங்காலம் சுமார் ஆறு மணிக்குத் திரும்பி வந்தால் ஒரு டிபன் கூடக் கிடையாது. ராத்திரி எட்டு மணிக்கு சாப்பிடுகிறபோது டிபன் எதற்கு என்று கேட்கிறவள் ராஜம்மா. காலையில் எட்டரை மணிக்கு அவசர அவசரமாக ஏதோ அள்ளிப் போட்டுக் கொண்டு போகும் கௌரிக்கு, மதியத்தில் எவர்சில்வர் டிபன் பாக்ஸில் அவல் அவலாகப் போயிருக்கும் மோர் சாதம்தான் உணவு. அது மூன்று மணிக்குள்ளே ஜீரணமாகி, வயிற்றைக் கிள்ள ஆரம்பித்து விடும். வெளியே போய் ஒரு ஒட்டலில் சாப்பிடலாம் என்று வயிறும் மனதும் கோரஸ் பாடும். ஆனால் வேலை கழுத்தை நெரிக்கும். இல்லாமற்போனால் கையில் காசு இருக்காது. மாமியார் ராஜம்மா கணக்காக முப்பது பைசா கொடுப்பாள். அது காலையிலேயே காபிக்குப் போயிருக்கும். 

பசியால் தள்ளாடித் தள்ளாடி வீட்டுக்குத் திரும்பியதும், ராஜம்மா நான்கு மணிக்கே கலந்து ஒரு பழைய பன்னாஸ் பிளாஸ்க்கில் ஊற்றி வைத்திருந்த காபியை ஒருகடமையாகக் குடிப்பாள். கௌரிக்கு காபி சுடச்சுட இருக்க வேண்டும். சூடான பாலில் சூடான டிகாக்ஷனைப் போட்டு பாதி சர்க்கரையில் காபியைக் குடித்தால் தான் கெளரிக்கு காபியே குடித்தது போலிருக்கும். ராஜம்மா ஏற்கனவே கலந்து பழைய பிளாஸ்க்கில் கொட்டி வைத்திருக்கும் காபி வாய்க்கு ருசியில்லாமல் சப்பென்று இருக்கும். தலைவிதியை நொந்து கொண்டே குடித்துவிட்டு, உலையில் அரிசியைப் போடுவாள். சாதாரணமாக காலையில் வைத்த குழம்போ சாம்பாரோ தான் இரவும். சில நாட்களில் வத்தல் குழம்பு வைக்க வேண்டியிருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு கறியோ கூட்டோ வைக்கக்கூடாது. அப்பளத்தை வாட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் பிறந்த வீடு சாதாரணமாக இருந்திருந்தாலும், அங்கு என்னென்ன எளிய சுகங்களை எல்லாம் அனுபவித்தாளோ அவையெல்லாம் கௌரிக்கு புகுந்த வீட்டில் சரித்திரமாகப் போய்விட்டது. 

ஆரம்பத்தில் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தாள். வந்ததும் வராததுமாய் மாமியாருடன் மல்லுக்கு நிற்க விரும்பவில்லை. எல்லாம் போகப்போக சரியாகி விடும் என்று நம்பினாள். 

ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நாள்…. 

“இன்னிக்கு ராத்திரி முருங்கைக்காய் சாம்பாரும் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்குக் கறியும் வையேன் கௌரி!” என்றாள் மோகன், ஆபீசுக்குப் போய்க் கொண்டிருக்கையில். 

“ஏன், உங்களுக்குப் பிடிக்குமா?”

“தங்கை மீனா இருக்கும் போது சாப்பிட்டது.”

“ஏன், அம்மா இதையெல்லாம் சமைக்க மாட்டாளா?”

“மாட்டாள். ‘உருளைக் கிழங்கும் நல்லெண்ணெயும் விக்கிற விலையில் அதெல்லாம் கட்டி வராது’ என்பாள். போதாததற்கு அப்பா வெங்காயத்தை வீட்டில் தொட மாட்டார்”. 

“அப்படீன்னா?” 

“ஓட்டல்லே சாப்பிடுவார். அம்மாவுக்குத் தெரியக் கூடாதாம்”. 

“ரொம்ப நன்னாயிருக்கே… அம்மாவுக்கு வெங்காயம் ஒத்துக்காதா?”

“வெங்காயும் சாப்பிடாததை ஒரு பெருமையாகச் சொல்லிக் கொள்ளுகிறவள் என் அம்மா… இன்னிக்கு அமாவாசை, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பலகாரம் தான். நீயும் நானும் தானே சாப்பிடப் போகிறோம்? வைக்கிறாயா?”.

“சரி. வீட்டுக்குப் போகும் போது, கிழங்கும் வெங்காயமும் வாங்குகிறேன்”. 

ராஜம்மாள் அன்று இரவு ஏழரை மணிக்கு சிவ-விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்பினாள். வீட்டினுள் பிரவேசிக்கையிலேயே வெங்காய வாசனை அவளுடைய மூக்கைத் தாக்கியது. வாசனையை துர்நாற்றமாக மதிக்கும் ராஜம்மாள், சமையலறைக்கு வெளியே தின்று கொண்டே வீடே அலறும்படி கத்தினாள். 

”டீ, கௌரி!”

அப்போதுதான் இரும்புக் கரண்டியில், தாளிக்கப் போட்டிருந்த கடுகும் வெடித்துக் கொண்டிருந்தது. மாமியாரின் குரலுக்குச் செவிசாய்த்துப் போனால் வெடிக்கும் கடுகு கருகிப் போய்விடும். 

“இதோ வரேன், அம்மா” என்று கூறிக் கொண்டே ஒரு நிமிடம் காத்திருந்து, பிறகு சாம்பாருக்குத் தாளித்தாள். 

“என்னடி நாத்தம்?”. ராஜம்மாள் மீண்டும் கத்தினாள். 

கல்சட்டியில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரை இறக்கி வைத்துவிட்டு வந்த கௌரி, ருத்ர மூர்த்தியாக நிற்கும் ராஜம்மாளை ஏறிட்டுப் பார்த்தாள். 

“என்னடி அப்படிப் பார்க்கிறே. ஏன் வெங்காயம் சமைச்சே” 

“வெங்காய சாம்பார் வைத்திருக்கிறேன், அம்மா”

“அதை யாருடீ உன்னை வைக்கச்சொன்னா?”

அப்போதுதான் மோகனும் உள்ளே பிரவேசித்தான்.

அவனை ஒரு தடவை பார்த்த கெளரிக்கு அவன் மீது. இரக்கம்தான் பிறந்தது. கேவலம் ஒரு வெங்காய சாம்பாருக்கு 1975-ம் வருடம் ஆசைப்படும் ஒருவனுக்கு, அதை வெளியில் அதுவும் தாயாரிடம் சொல்லவும் இயலாத அவல நிலையில் இருக்கும் ஒருவனுக்கு அவள் உதவி செய்யத்தான் வேண்டும். 

”யாரும் வைக்கச் சொல்லவில்லை! நானே தான் வைத்தேன்”. 

“இந்த வீட்டுக்குள்ளே வெங்காயம் அடி எடுத்து வைக்கக்கூடாதுள்னு உனக்குத் தெரியாது?”

”தெரியாது”. 

”இன்னும் வேறு என்னென்ன வைச்சிருக்கே… பூண்டு ரசம் வைச்சிருக்கியா?”

“ஏன் பூண்டு நாத்தம் வர்றதா, அம்மா…?”

“என்னடீ ஏடாகூடமாப் பேசறே…”

“எனக்கு வெங்காய சாம்பார் பிடிக்கும். தொட்டுக் கொள்ள எண்ணெயில் வேக வைத்து வறுத்த உருளைக் கிழங்குக்கறியும் பிடிக்கும். அவரைக் கேட்டேன். அவருக்கும் பிடிக்கும்னு தெரிஞ்சுது. வைச்சேன்,”

“வெங்காயத்தை நான் உள்ளே விடமாட்டேன்.” 

“ஏம்மா, நான் ஒண்ணுகேட்கிறேன். வெங்காயம் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“உன் உடம்பு இப்பவே நன்னாத்தான் இருக்கு… இந்த வீட்டை வெங்காயம் நாசப்படுத்தக் கூடாது…”

“அம்மா, பிராமணர் வெங்காயம் சாப்பிடாததெல்லாம் அந்தக் காலம், அதுவும் மற்ற காய்கறிகளைப்போல சமையலுக்கு உள்ளதுதான்.. போன யுக சம்பிரதாயங்களையும், பழக்க வழக்கங்களையும் இன்னும் ஏன் உடும்புப் பிடியாக வைச்சுண்டிருக்கிங்க…” 

“நிறுத்துடி.. என்னை எதிர்த்தா பேசறே… நான் ஒண்ணு ரெண்டுன்னு பத்து எண்ணி முடிக்கிறதுக்குள்ளே இந்த வெங்காய சாம்பார் சாக்கடையில் விழுந்தாக வேண்டும்”.

“நான் கொட்டமாட்டேன்… நீங்களும் கொட்ட மாட்டீர்கள். ஏன்னா அது வெங்காய மாச்சே…” 

”நாளைக்கே உன்னை உன் அப்பன் வீட்டுக்குக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளப் போறேன்.”

“இன்னும் பஸ் இருக்கு… இல்லாமப் போனா டாக்ஸியோ ரிக்ஷாவோ கிடைக்கும். ஏன் நாளை வரையிலும் ஒத்திப்போடறேள்? என் அப்பன் வீட்லே என் சம்பளத்தை வைத்துக் கொண்டு, என் இஷ்டம் போலச் சாப்பிட முடியும். தினமும் வெங்காயமா வைச்சுத் தள்ளுவேன்… உப்புமா, சாம்பார், தோசைன்னு எது எடுத்தாலும் வெங்காயம் தான்.” 

“டேய் மோகன். ஏண்டா இடிச்ச புளிமாதிரி நிக்கறே… நேத்திக்கு வந்த உன் பெண்டாட்டி என்கிட்டே என்ன வெல்லாம் பேசறா, பார்த்தியா…?” 

“கௌரி! அம்மா கிட்டே எதிர்த்துப்பேசக்கூடாது”.

“ஏன், உங்க அம்மா பேசினது உங்க காதிலே விழலையோ?”

“அவள் என் அம்மா, உன் மாமியார். அப்படித்தான் பேசுவா. அந்த ஸ்தானத்திலே இருந்தா அப்படித்தான் பேசணும்.” 

பிள்ளை நையாண்டியாகப் பேசுகிறானோ என்றுகூட ராஜம்மாள் ஒரு கணம் விழித்தாள். 

“உங்க அம்மா பேச்சைக் கேட்டுக்கொண்டு இருக்கணும் என்கிற தலை எழுத்து எனக்கு இல்லை… இப்பவே நான் போறேன் என் அப்பா வீட்டுக்கு. என் சம்பளம் இருக்கு என் வயிற்றைக் கழுவ….” 

“பார்த்தாயாடா… அவள் சம்பளமாம்… வயிற்றைக் கழுவுவாளாம்… தான் சம்பாதிக்கிறோம் என்கிற திமிர் பேச வைக்கிறதுடா.” 

“இப்படி விரட்டி விரட்டித்தான் நீங்கள் உங்க பிள்ளையைக் கோழையாக்கியிருக்கிறீர்கள்.. ஆனா இனிமே, என்னைப் பார்த்தாவது அவர் தைரியமா இருக்கக் கற்றுக் கொள்ளுவார்”. 

“டேய், மோகன், அவள் உன்னையும் இடிச்சுக் காட்டறாள்டா!” 

“கௌரி, இப்படி எல்லாம் பேசக்கூடாது.”

“நான் பேசலேள்னா இந்த வீட்லே யார் உங்க அம்மா கிட்டே பேச இருக்கா?”

“டேய், உன் அப்பாவையும் இடிச்சுக் காட்டறாடா”

“என் அப்பா இப்போ இங்கே இல்லை கெளரி -அவரை இழுக்கப்படாது!” 

”சரி, சரி. உங்க அம்மாவுக்குத் தாளம் போடறதை நிறுத்திவிட்டு, சாப்பிட உட்காருங்கள்..” 

“மோகன், நீ மட்டும் வெங்காய சாம்பாரை இன்னிக்குச் சாப்பிட்டே, அப்புறம் என்னை நீ இந்த வீட்லே பார்க்க மாட்டே!” 

“என்ன செய்யணும் அம்மா?”

“அதை கல் சட்டியோடு சாக்கடையில் கொட்டு”.

“சரிம்மா.” 

“கொட்டினால் என்னை இந்த வீட்டிலே பார்க்க முடியாது” என்றாள் கெளரி. 

அம்மாவையும் கெளரியையும் மாறி மாறிப் பார்த்து நின்ற மோகனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனாலும் அவனுடைய நாக்கு வெங்காய, உருளைக்கிழங்கு களுக்குத்துடிப்பது அடங்கலில்லை. 

இந்த சமயத்தில் தான் அவனுடைய தகப்பனார் கைலாசம், பெண் மீனாவுடனும் மாப்பிள்ளையுடனும் பிரவேசித்தார்.

– தொடரும்…

– கோபுர தீபம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1999, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *