புது வருஷப் பரிசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 1,692 
 

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் – என்ற யோவான் – 16:20 பைபிள் வசனத்துடன் தொடங்கியது அன்றைய விடிகாலை டெலிவிஷன் நிகழ்ச்சிகள்.

தனக்காகவேச் சொல்லப்பட்டதைப் போல உணர்ந்தாள் க்ளாரா.

தொடர்ந்து, ஓடிக் கொண்டிருந்த, டெலிவிஷனில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக, புனிதர் தேவ சகாயம் அவர்களின் உரையும், உரையாற்றும் பொருளுக்குத் தக்கபடி, பின்னணிக் காட்சிகளும் (Representative clipings) ஒளிபரப்பப்பட்டு, உரையின் வலிமைக்கு மேலும் வலிமை சேர்த்தது.

காய்ந்துபோன ஒரு சிறு மல்லிகைக் குத்து ஒன்றை க்ளோஸப்பில் காட்டினார்கள்.

அதன் வேரடியில் ஒரு குடம் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றும் காட்சி அடுத்த ஷாட்.

குறுத்துக்கள் பட்டையைப் பெயர்த்துக் கொண்டு வருவதும், நான்கைந்து இலைகள் விரிந்து பரவுவதும், அரும்புகள் எழும்புவதும், மல்லிகைப் பூக்கள் சில மலர்ந்து சிரிப்பதையும் பேச்சாளரின் கருத்துச் செறிவு மிக்க உரையோடுக் கோர்வையாகக் காட்டியபோது, க்ளாராவின் , மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

பின்னணியை ரசித்துக் கொண்டும், சொல்ல வரும் செய்தி (மெசேஜ்) யை மனதில் பதியவைத்துக்கொண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான டெக்கரேஷன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் க்ளாரா.

முதல் முறையாகத் தன் பெயரில் வாங்கிப் போட்டச் சொந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் புத்தாண்டைக் கொண்டாடும் சூழ்நிலைக்குத் திடீரென்றுத் தள்ளப்பட்டவள் க்ளாரா.

நேற்று, புத்தாண்டுடப் கொண்டாட்டத்துக்கு முதல் நாள். புத்தாண்டு ஈவ்.

சென்ற ஆண்டு இதே நாள் நினைவில் வந்தது க்ளாராவுக்கு.

‘யாரையும் எவரையும் நொந்து என்ன ஆவப்போவுது?, நமக்குகொடுப்பினை அவ்ளோதான்.!’ – என்று விரக்தியாக இருந்தது அவளுக்கு.

இருந்தாலும், சித்தப்பாவும், சித்தியும் புத்தாண்டுப் கொண்டாட்டத்துக்கு வருவதாகச் சொல்லியிருந்ததால், அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை யோசித்து யோசித்து வாங்கி வைத்திருந்தாள்.

மிட் நைட் மாஸ் கூடச் செல்லவில்லை. பழைய நினைவுகளிலேயேத் தூங்கிவிட்டாள் க்ளாரா.

வண்ண வண்ணமாய், வகை வகையாய் விலை உயர்ந்தச் செல்லுலாய்டு பொம்மைகளைப் பணக்காரச் சிறுவர்களிடம் கண்டு, ஏங்கி, இளைத்து, நம் வசதிக்கு இவையெல்லாம் எட்டாக் கனியென்ற யதார்த்தம் உணர்ந்து ஆசை அடக்கி, மனசு மரத்து, கொட்டாங்கச்சிகள், உடைந்த வளையல்கள், தென்னங்குரும்பைகள், சைபால் டப்பா, சைக்கிள் டயர், சிகரெட் அட்டைகள், சோடா மூடிகள்… என கிடைத்ததையெல்லாம் வைத்து விளையாடுமே ஏழைக் குழந்தை, அந்த மனநிலையில்தான் அப்போது இருந்தாள் க்ளாரா.

அக்கம் பக்கம் வீடுகளுக்கெல்லாம் பெற்றோர்கள், அண்ணன்மார்கள் என பரிசுப் பொருட்களுடன் வந்தவண்ணம் இருப்பதையும், அவர்களை மகிந்து வரவேற்றும், விருந்தளித்து மகிழ்வதையும் பார்க்கப் பார்க்க, க்ளாராவுக்குத் தன் ஒரே அண்ணன் ஜேம்ஸ்ஸின் நினைவு வந்தது.

“இனி நீ எனக்கு தங்கச்சியும் இல்லை.. நான் உனக்கு அண்ணனும் இல்லை..!” – இதுதான் க்ளாராவிடம் அவள் அண்ணன் ஜேம்ஸ் பேசியக் கடைசீப் பேச்சு.

“உச்சகட்டமாக, இப்படி அறுத்துக் கட்டிப் பேசும் அளவுக்கு என்னதான் நடந்தது..?” – என்று, என்னைப் போல அவர்கள் வீட்டுக்கு அருகில் குடியிருந்திருந்தால் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

கிளாரா கல்லூரி ஃபைனல் படிக்கும்போது , அப்பா ஒரு விபத்தில் இறந்து போனார்.

தங்கச்சி தங்கச்சி என்று பாசமாகத்தான் இருந்தான் அண்ணன் ஜேம்ஸ்.

அப்பா செத்தச் சாவுக் களையே வீட்டை விட்டுப் போகவில்லை, அம்மாவும் ஹார்ட் அட்டாக்’கில் போய்ச் சேர்ந்தாள்.

குழந்தைகளை அநாதையாக விடக்கூடாது என்று முடிவெடுத்து சித்தப்பாவும், சித்தியும் க்ளாரா மற்றும் ஜேம்ஸ் இருவருக்கும் பாதுகாவலாக வந்து அவர்களுடன் இருந்தார்கள்.

அப்பா வேலைபார்த்த கம்பெனியில் காம்பன்சேஷனாக ப்யூன் வேலை கொடுத்தார்கள் அண்ணனுக்கு.

வேலைக்குச் சென்று வந்தான் ஜேம்ஸ். ஒவ்வொரு நாளும் அவன் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.

ஆயிற்று. வேலைக்குச் சென்று ஒரு மாதம் முடிந்துவிட்டது.

முதல் மாதச் சம்பளம் வாங்கியவுடன் அதைக் கொண்டு வந்து நம் கையைல் கொடுத்து அண்ணன் மகன் வணங்குவான் என்று சித்தப்பா சித்தியும் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

மாறாக அறுவருப்பான காட்சிகள் அறங்கேறிவிட்டன.

டாஸ்மாக் சென்றுவிட்டு முழு போதையில் வந்தான் ஜேம்ஸ். தம்பீ முதல் சம்பளம் வாங்கிய நீ, இப்படிக் குடித்துவிட்டு வரலாமா? என்று உரிமையோடு கோபித்தனர் சித்தாப்பாவும் சித்தியும்.

இயேசு பூமியில் வாழ்ந்தபோது திராட்சமது குடித்தார். (மத்தேயு 26:29; லூக்கா 7:34)

ஒரு திருமண விருந்தில் ஏகப்பட்ட தண்ணீரை திராட்சமதுவாக மாற்றினார்; இந்தப் பெரிய அற்புதத்தைச் செய்து, தன்னுடைய தாராள குணத்தைக் காட்டினார்.—யோவான் 2:1-10.

என்றெல்லாம் பிரசங்கம் செய்தான் ஜேம்ஸ்.

அதற்குப்பின், மரியாதை மட்டு இல்லாமல் , தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்த சித்தப்பா சித்தியையும் தாறுமாறாகப் பேசினான். இந்த வீடு தனக்குச் சொந்தமானது என்றான். எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்றான். சகோதரி க்ளாராவை அடிக்கக் கை ஓங்கினான்.

அதிர்ந்தனர் அனைவரும்.

அளவுக்கு அதிகமாகக் குடிப்பது கூச்சமே இல்லாமல் நடந்துகொள்ள வைக்கும்; “சரியானதைச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைக் கெடுக்கும்.”—ஓசியா 4:11; எபேசியர் 5:18. –

என்ற, பைபிள் வசனத்தை நன்கு அறிந்த சித்தப்பாவும் சித்தியும், இப்படிப்பட்ட வக்ரகுணம் உள்ளவனோடு திருமண வயதில் இருக்கும் பொண்ணை விட்டு வைக்கக் கூடாது என்று, க்ளாராவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கிருந்தபடியே ஐடி கம்பெனிக்கு வேலைக்கும் சென்று வந்தாள் கிளாரா. வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்தில், ஒரு ஃப்ளாட் குறைவான விலைக்கு வந்ததை விடக்கூடாதென்று வாங்கிப் போட்டாள்.

க்ளாரா தஞ்சமடைந்திருந்த, சித்தப்பா-சித்தியின் வீட்டுக்கும் போய் குடி போதையில் கத்தினான் ஜேம்ஸ்.

ஜேம்ஸ் இந்தக் கொடிய மதுப்பழக்கத்திலிருந்து வெளி வரவேண்டும் என்று கர்த்தரை மனதாரத் துதித்தனர் சித்தப்பாவும் சித்தியும்,.

“ஏன் உனக்கு நான் சோறு போட மாட்டேனா…?” – ஆத்திரம் மேலிடக் கிளாராவைக் கேட்டான் அண்ணன் ஜேம்ஸ்.

“அதில்லண்ணே..சித்தப்பாவும் சித்தியும் ரொம்ப அன்போடயும் ஆதரவோடயும்தான் செய்யறாங்கண்ணே…! ” – நிதானமாகத்தான் சொன்னாள் க்ளாரா.

கோபப் படுபவர்களின் முன் நிதானமாய் பேசும்போது அது அவர்களின் கோபத்தை பன்மடங்கு அதிகப்படுத்திவிடும் என்பதே யதார்த்தம்.

எரியும் அடுப்பில் எண்ணை வார்த்தாற்போல் கத்தினான் ஜேம்ஸ். “என் தங்கச்சியின் சம்பளம் மொத்தத்தையும் புடுங்கிக்கிட்டு, அரை வயித்துக்கு சோறு போடறீங்களா? – என்றெல்லாம் சித்தப்பாச் சித்தியை அவமானமாய்ப் பேசினான்.

க்ளாரா ஒரு முடிவுக்கு வந்தாள்.

தன்னால், சித்தப்பாச் சித்திக்கு ஏன் அவமானம் எனக் கருதி, தன் பெயரில் வாங்கி வைத்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் குடியேறிவிட்டாள். தனிமை அவளுக்குத் தணலாய்ச் சுட்டது.

நள்ளிரவுச் சிறப்புப் பலியின் போது, தேவாலத்தில் உற்றார் உறவினர்களோடுச் சந்தோஷமாகக் கழிக்கும் ஜனங்களை எல்லாம் பார்த்தான் ஜேம்ஸ்

ஒரு சுள்ளி முறியும் நேரத்தில் ஞானம் வரும். அந்தச் சுள்ளி எப்போது முறியும் என்பதை சாதாரண மனிதனால் அறிய முடியாது..” என்பார் புத்தர்.

என்றுமில்லாம் இன்று அந்த தேவாலயச் சூழல், ஜேம்ஸ் மனதில் ஏதேதோ ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தின. அவனுடைய கேவலமான வாழ்வு அவனுக்கேக் கசந்தது. ‘சொந்த பந்தங்களை இழந்து நிற்கிறோமே..!’ – என்ற கழிவிரக்கத்தில் கலங்கினான்.

நள்ளிரவு பலி முடிந்து அவரவர் வீட்டுக்கத் திரும்பிவிட்டனர்.

புத்தாண்டு நாளன்று வினியோகிக்கப்படும் தின்பண்டங்ளைச் செய்யும் சமையலர்கள், மின் விளக்கு அமைப்போர், துப்புறவுப் பணியாளர்கள் மற்றும் தேவாலய ஊழியர்கள் மட்டுமே தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.

“ஜேம்ஸ்.”

விடிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, தேவாலயத்தைப் பார்வையிடச் சென்ற பங்குத் தந்தையின் கண்களில், தேவாலயக் கதவுக்குப் பின் சுருண்டுப் படுத்திருந்த ஜேம்ஸ் கண்ணில் பட அவனை தட்டி எழுப்பினார்.

எழுந்தவன் தலை குனிந்து நின்றான்.

ஏன் ஜேம்ஸ். திருப்பலி முடிஞ்சி வீட்டுக்கேப் போகலியா? போய் குளிச்சிட்டு, வா..” என்றார் வாஞ்சையோடு.

எதுவும் பதில் பேசாமல் தலை குனிந்தபடி நின்றதைப் பார்த்ததும் பங்குத் தந்தைக்கு ஜேம்ஸின் நினைவோட்டங்கள் புரிந்தன.

சரி ஜேம்ஸ்.. பக்கத்துலதானே தங்கச்சியோட ஃப்ளாட் இருக்கு. அங்கே போயி குளிச்சிட்டு ரெடியாகி வா. உன் சித்தப்பா சித்தி கூட அவங்க வீட்லதான் புத்தாண்டுக் கொண்டாடப் போறதாச் சொன்னாங்க.” என்றார் ஃபாதர்.

இப்போதும் எதுவும் பேசாமல் நின்றான் ஜேம்ஸ்.

“பிராடிகல் சன் பற்றி பைபிள்ல படிச்சிருக்கேதானே..? என்னதான் தவறு செய்திருந்தாலும், திருந்தித் திரும்பி வந்த மகனை, உன் சித்தப்பாவும் சித்தியும் நிச்சயம் நிந்திக்காம ஏத்துப்பாங்க. போ என்றார்.”

கண்ணீரில் தன் பாவங்களைக் கரைத்தபின் தன் சகோதரி க்ளாராவின் வீட்டிற்குப் போனான் ஜேம்ஸ்.

நேற்று வரையில் தன்னை கவனிக்கவில்லையே இன்றைக்கு மட்டும் என்னவாம் என்று பழையதையெல்லாம் எண்ணி உதாசீனப்படுத்தாது, ஊற்றியத் தண்ணீருக்கு நன்றி காட்டித், தளிர்த்து, அரும்பு விட்டு மலர்ந்து சிரிக்கும் மல்லிகையைப் பூவாய், மனம் மலர்ந்தப் புன்முறுவலுடன் புத்தாண்டு விருந்துக்கு வந்த அண்ணன் ஜேம்ஸை மலர்ந்த முகத்துடன் வரவேற்று உபசரித்தாள் க்ளாரா.

சற்றைக்கெல்லாம், வந்த சித்தப்பாவையும், சித்தியையும் அண்ணனும் தங்கையுமாக வரவேற்று உபசரித்தனர். திருந்தித் திரும்பி வந்த மகனை (prodical son) மனதார ஆசீர்வதித்தனர்.

அனைவரும் ஒரு சேர கூட்டுக் குடும்பமாய், வரவேற்பரையில் (Family Gathering) அமர்ந்தபோது, விளம்பரங்கள் முடிந்து

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் –யோவான் – 16:20

என்ற பைபிள் வாசகத்துடன் தொடங்கியது அடுத்தத் தொலைக் காட்சி நிகழ்ச்சி.

– 02.01.2024, மக்கள் குரல்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *