கேரளத்தில் எங்கோ…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2023
பார்வையிட்டோர்: 1,050 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-13

“உர்ஸைக் காணோமா? என்ன பேத்தறே?… பாத்ரும்’ 

அவள் விழிகள் பிதுங்கின. வலது சுட்டுவிரல் இடது பக்கத்து அறையை நோக்கிக் காற்றை அவசரமாய்க் கொத்திற்று. கிதார் சத்தம் அங்கிருந்துதான் வந்தது. இப்போ நின்று விட்டது. அவள் குறிகாட்டிய அர்த்தம் மண்டையில் ஊறியதும் எனக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது. மை காட்! எழுந்து ஓடிப்போய் அறைக் கதவைத் தட்டினேன். ஊஹும். தானாகவன்றி, தட்டித் திறவாது. 

“ப்ரபூ! ப்ரபூ”—ஊ-ஹும். 

என்னிடத்துக்குப் போய் கட்டிலில் அமர்ந்து தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டேன். 

“என்ன அக்ரமம் கண்ணெதிரிலேயே – அசலாத்து சொத்து – அடிவயத்தில் நெருப்பு, ஐயோ என்னால் தாங்க முடியல்லியே!_”

துணுக்குத் துணுக்காக வார்த்தைகள் என் நெற்றிப் பொட்டைத் துருவின. எரிந் விழுந்தேன். “எறியற் நெருப்பில் எண்ணெயை விட்டுண்டு…!” 

“நீங்கள் அடக்கினது போதும்.” சட்டென் என் பக்கம் திரும்பிச் சீறினாள். “பிறத்தியார் நகையைப் போட் டுண்டு கலியாணத்துக்கு வந்து மினுக்கற மாதிரி! நீங்கள் இவளை இங்கு கொண்டு வராட்டா என்ன? உங்கள் சமாசாரம் எனக்குத் தெரியாதா என்ன? ஐயே, ஆண் களே உங்களுக்கு இதில் என்ன பெருமையோ?” தலையில் அடித்துக் கொண்டாள்.”இதிலே வயசாயிடுத்துன்னுவேறே சொல்லிக்கிறேள். மீசை நரைச்சுப் போச்சேன்னு பாடி வேறே என்னை ஏசறேள். ஆனால் இதெல்லாம் சபலம் இல்லைன்னு நீங்கள் மனசார மறுக்க முடியுமா? இதுதான் இன்னும் ஆபத்து. நெருப்போடு விளையாடற சமாசாரம். புலி வாயில் தலையைக் கொடுக்கற சமாச்சாரம்! கொடுத் துட்டு அது தலையைக் கிள்ளிடுத்துன்னு குத்தஞ் சொன் னால் என்ன அர்த்தம்! புலி சுபாவம் கிள்ளாமல் என்ன பண்ணும்? சுபாவத்தோடு விளையாடலாமா? ஐயோ என்னால் தாங்க முடியல்லியே!” வயிற்றைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்துவிட்டாள். ”உங்களுக்கொரு பெண் இருந்தால் இந்த மாதிரி வேடிக்கை பார்ப்பளோ?” 

நான் படம் ஒடுங்கிப் போனேன். விஷயத்தின் குரல் வளையைப் பிடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். நான் வெடியோடு விளையாடிக் கொண்டிருப்பது எனக்கே தெரியவில்லை.என் வயசும், அனுபவமும், அகந்தையும் என்னவாச்சு! 

“உர்ஸ் என் பெண்மாதிரி”-முனகினேன். 

“ஐயே!” கையைக் காட்டிக் கொண்டு நாக்குப் பழித்தாள். 

“பாசம் ஒழுகறதை பாரு!” வேஷத்தைப் பூரா கலைச்சாச்சு. அந்த காளி வெறிப்பார்வையும்,முகத்தின் கொடூரமும் எல்லாமே பூச்சுக்கள் எனும் உண்மை இப்படித்தான் எனக்குப் புலனாகணுமா? இதில் நான் மட்டும் என்ன? 

“எல்லாத்துக்கும் காரணம் நீங்கள் தான். ‘ஹாய்’யா வீட்டை விட்டு போயிட்டேள். நாம் பெத்தது நமக்குச் சரியில்லாட்டாலும் நாம் பெத்ததை நாம் அனுபவிக்க வேண்டியதுதான். நான் இப்போ அனுபவிகல்லே? நீங்கள் விட்டுட்டுப் போனதால் அதுகள் திருந்திடுத்தா? அது களுக்கு இன்னும் குளிர் விட்டுப் போச்சு.” 

“நான் கண்டித்த சமயத்தில் அவர்களோடு நீயும் சேர்ந்துண்டு கூத்து அடிச்சதில் குறைச்சலில்லை. இப்போ என்னை குற்றம் சொல்ல வந்துட்டையாக்கும்!’ 

“அதுக்காக!நாம், பெத்த நாமே விட்டுக் கொடுத்துட முடியுமா? அக்கடான்னு நீங்கள் அஞ்சு வருஷம் தலைமறை வாயிட்டேள். சியமந்துதான் சோறு போடறான்!” 

“வாஸ்தவந்தான். அவனை ஆளாக்கி விட்டதுக்கு, அவன் தாயாருக்கு சோறு போடறது பெரிசுதான். அதுக்கு அவன் தாய் மெச்சிக்கிறது அதைவிடப் பெரிசுதான் ஆமாம், இப்பத்தான் உனக்கு இங்கே பிடிக்கல்லே. ‘என்னோடு வந்துடறேன் எனக்குப் புதுவாழ்வு வேணும் னே அடுத்தே தராசு எதிர்பக்கம் சாஞ்சாடும் உனக்கு எத்தனை நாக்கு மதுரம்?” 

அவள் பதில் பேசவில்லை. அவளுடைய வெறி தணிந் ததுமே ஆயாசம் மேலிட்டு, தரையில் முன்றானை விரித்துப் படுத்து விட்டாள். என்னத்தையோ புரிந்தும் புரியாமலும் முனகிக்கொண்டே, குழறிக் கொண்டேயிருந்தாள். எனக் குப் பயமாய்க் கூடப்போய் விட்டது. நாக்கு, கீக்கு இழுத்து விட்டதா? 

எத்தனை நாழி இப்படியே இருந்தோமோ? 

விடிநேரம் நெருங்கிக் கொண்டிருக்க வேண்டும். எங்கோ தூர, கார், பஸ் சத்தம் கேட்க ஆரம்பித்தாகி விட்டது; பக்கத்தில் பெரிய விடுதியிருக்கிறதோ தெரிய வில்லை. தண்ணீர் பம்பு டாங்குக்கு அடிக்க ஆரம்பித்து விட்டது. கலகல வென்று பால் புட்டிகள் ஒன்றுடன் ஒன்று இடித்துக் கொண்டு டிப்போவில் இறங்குகின்றன. 

பக்கத்து அறைக்கதவு மெதுவாக திறக்கும் சப்தத்தில் கிறீச்சிடுகிறது. 

ப்ரபு எங்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டு வாசல்படியில் நின்றான். உதட்டோரம் குழிந்தது. 

“ஹல்லோ?” 

எழுந்து சென்று கன்னத்தில் ஒரு அறை அறைந்தேன். கன்னத்தைப் பிடித்துக்கொண்டான். 

”திருப்திதானே?” 

அந்தக் கேள்வியில் சிந்திய அலஷியத்துக்கு என்னைக் கைமிஞ்சியிருந்தால் கூடத் தாங்கிக் கொண்டிருந்திருப்பேன். 

அவன் ஒன்றுமே பேசவில்லை. 

திடீரென்று அவன் அறைக்குத் திரும்பிச் சென்று உடனே வெளிப்பட்டுத் தடதட என்று மாடியிறங்கி சென்று விட்டான். 

தோளில் கித்தார் தொங்காட்டம் ஆடிற்று. அவனை நான் பார்த்தது அத்தோடு கடைசி. சில தீர்மானங்கள் முன்னாலேயே தெளிவாகிவிடும், தெரியா விட்டாலும். 

வடிகால் காணாத சீற்றம் என்னை அவன் அறைக்குத் தள்ளிக்கொண்டு போயிற்று. 

உள்ளே சிலை நின்றுகொண்டிருந்தது. 

”உம் – புறப்படு!’ 

புருவங்கள் வினாவில் உயர்ந்தன. 

”கிளம்பு ஐ டோன்ட் கேர்.” வெறி பிடித்துக் கத்தி னேன். “உன்னை உன் தகப்பனிடம் ஒப்படைச்சப்புறம் எப்படியேனும் குட்டிச் சுவராப்போ!” 

சிலை புன்னகை புரிந்தது. எனக்கு மண்டை திகுதிகு வென எரிந்தது. வியர்த்தத்தில் அவள் தோள்கள் தூக்கிக் சலித்தன. 

“உம் சீக்கிரம் புறப்படு. எட்டு மணிக்கு வண்டி!”

எங்கள் பட்டணப் பிரவேசம் முடிந்தது. 

காலை வண்டி காலியாகக் கிடைக்கும் என்கிற நினைப் பில் வருகிறோம். அப்படியே நினைத்துக் கொண்டு மற்ற வரும் வருவதால், காலை வண்டியில் அன்று கூட்டம் வழியும். 

ஆனால், இன்று அப்படியில்லை. ரிஸர்வேஷன் இல்லா மல் வந்த திடீருக்கு – அவசரத்துக்கு இடம் சௌகர்யமாக, ஏன் தாராளமாகவே இருந்தது. ஆனால், அவர்களுக்கு மூட்டை முடிச்சு என்ன தட்டுக்கெட்டுப் போனது? 

அவள் கையில் அவள் பெட்டியோடு சரி. 

அவரிடம் அதுவுமில்லை. 

புக்கிங் கிளார்க் ரொம்பவும் ஒத்தாசையாயிருந்தான். அவர்கள் பட படப்பைக் கண்டு க்யூ தாண்டி அவர்களுக்கு டிக்கெட் வழங்கிவிட்டான். 

அவள் பின்னால், கிழவரை ப்ளாட்பாரத்தில் நின்ற ஒரு இளவல் அலாக்காகத் தூக்கி பெட்டியில் தள்ளிக் கொண்டிருக்கையிலேயே வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. கெடுபிடி அடங்கி, மூச்சை வாங்கிக் கொண்டு அந்தப் பையனுக்கு வந்தனம் கூறுவதற்காக அவன் பக்கம் திரும்பு வதற்குள் வண்டி அவுட்டரைக் கடந்து கொண்டிருந்தது. 

கிழவருக்கு நெற்றி முத்திட்டு விட்டது. இந்த ப்ரயாசையே தாங்க முடியவில்லை. மனச்சலிப்பு கூடச் சேர்ந்த பின் என்ன செய்ய முடியும்? 

தள்ளாமை என்பது இது தானோ? 

உதவியாகவும் ஆளைத் தள்ளி விடுகிறார்கள், அந்த பையனைப் போல். 

வேண்டா விட்டாலும் இடித்துத் தள்ளுகிறார்கள்.

தானாகவும் தள்ளாடுகிறது. 

தாம்பரம் தாண்டினதும் பித்த வெய்யிலோ ஏனோ வாயில் ஜலம் ஊறி ஊறி வாந்தி வருவது போல் மறுக்கி 
ஆளை வில்லாய் வளைத்தது. ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிக் கொண்டு தவித்தார், முகம் குங்குமப் பிழம்பாய்- 

அவரைப் பிடித்துக் கொண்டு அவள் முன்வந்தாள். ஆனால் அவர் கையைப் பலமாக ஆட்டி, அவள் கையைத் தீர்மானமாக உதறினார். அவர் கண்கள் கொதித்தன அடர்ந்து நரைத்து கண்குழிமேல் தொங்கும் கரடிப் புருவங்கள். 

செங்கல்பட்டு வந்ததும் நாலு இட்லி, இரண்டு வடை பார்சல் வாங்கி அவள் எதிரே வைத்தார். 

விழுப்புரத்தில் இரண்டு பொட்டலம் சாம்பார் சாதம், இரண்டு பொட்டலம் தயிர் சாதம். 

அவர் செய்கையில் கருணை, ஆதரவு, உபசரிப்பு இல்லை. 

‘தொலைச்சுக்கோ, சனியனே’ என்கிற மாதிரி. 

பொட்டலங்களை அவருடன் பகிர்ந்து கொள்ள அவள் முன் வந்த போது, கையை ஆட்டி மறுத்து விட்டார். ஆனால், இளம் வயிறு பசிக்கிறதே! அவர் எப்படி கொடுத் தாலும் வாங்கி கொள்வதை விட வழி? 

திருச்சியில் ஒரு பன், ஒரு காப்பியோடு அவர் சரி. 

அவளுக்கு பக்கோடா, பஜ்ஜி பொட்டலங்கள், டீ. 

மதுரையில் இரண்டு சாம்பார் சாதங்கள், இரண்டு தயிர் சாதங்கள். 

அத்தனையும் அவளுக்கே. 

இதுவரை இருவரிடையிலும் ஓர் பேச்சுக்கூட தொடுக்கவில்லை, 

திருமங்கலம். 

வண்டி திருமங்கலத்திலிருந்து புறப்பட்டபோது அவர் கள் ஜன்னலோரம் எதிர்க்கெதிர் உட்கார்ந்திருந்தவர்களின் இரு பெஞ்சிகளும் சொல்லிவைத்தாற் போல் காலியாயின. அந்த இடமே கூபே போல் தனித்து விட்டது. அதுவே இந்த நாளில் ஒரு ஆச்சரியம் தான். 

“ஸாமியோடு ஞான் ஸம்ஸாரிக்கணும்”. 

கிழவர் பார்வை அவளைச் சிந்தித்தது. அவர் கண் களில் சுபாவமாக ஒரு ஏளனம் ஒளிந்து விளையாடும். அதே சமயத்தில், உதடுகளின் செதுக்கலில் கீழுதடு ஒரு இம்மி பிதுங்கி – குரூரம் மிளிர்ந்தது. 

அத்தியாயம்-14

மீண்டும் கேரளத்தில் எங்கோ.. 

இவள் பட்டணத்தில் ஒன்று இரண்டு வார்த்தைகள் நல்ல தமிழே பேசிவிட்டு, என்னோடு ஸம்ஸாரிக்கையில் மட்டும் ஏன் மலையாளம் கூடுகிறது? நடிப்பா? திடீரென தலையின் தும்பை மீறி வயது காட்டும் தோற்றம். நரைக்கும் இயற்கையாகவே வெளிறிட்ட நிறத்துடன் ரத்தம் வேறு சுண்டிப் போய், முகத்தில் தினுசான ஸெலுலாயிடு பளபளப்புக்கும், மெலிந்து சுருக்கம் விழுந்து நீண்ட விரல்களுக்கும் உறைபோல் தொடங்கிய வெள்ளை ஜிப்பா. வேட்டிக்கும் அவர் ஏதோ ஆவியுலகத்திலிருந்து அந்தத் தடத்தினர் அவரை பூமிக்குத் தள்ளி விட்டாற் போல் தோன்றிற்று. 

அவள் முதன் முதலாகப் பேச்சுத் தொடுத்தபோது, வண்டி பூனலூரைக் கடந்து கொண்டிருந்தது. இனி மலை ப்ரதேசத்தின் செழிப்புள், கையால் தொட்டு விடலாம். குறுகிய பாறை நடுவில் இருப்புப் பாதை நுழைந்து மேடு தாழ்வுகளில் ஊசலாட்டமாய்ச் சென்று கொண்டிருந்தது. ஆயினும் இரவாதலின் கண் கண்டு அனுபவிக்க வாய்ப் பில்லை. சென்னைக்குப் போகும் போது இது வழி யாகத்தான் போனோம் என்ற நினைப்போடு சரி. 

இனிமேலேயே சற்று அடைப்பான உணர்வுதான். கஸ்தூரிப் பெட்டியில் அடைத்தாலும் மூச்சு திணறல் தான். 

அவள் குரல் அமைதியாகத்தான் ஒலித்தது. 

“ஸாமி சித்தம் யாது? நேரே போயுன்னு அச்சனிடம் தள்ளிடணும் அல்லோ?” 

“…”

“ஸாமி அச்சனிடம் என்ன பறையும்? ‘நீங்கள் மோளே களங்கம் கண்டாச்சு’ அப்படித்தானே அல்லோ?”

இதுவரை இதுபற்றி யோசிக்க வில்லை. யோசிக்க வேண்டிய விஷயம்தான். முழுக்க யோசிக்காமல் இல்லை. ஆனால் யோசிக்க பயம். மிஸ்டர் ஜியார்ஜ் பெரிய ப்ளாக் மெயில் மாஸ்டர் ஆச்சே! திறந்த வாயில் அவனுக்கு உரித்த பழம் விழுந்த மாதிரின்னா? அசம்பாவிதத்துக்குப் பரிகாரம், ப்ரபு இவளைக் கட்டிக்க வேண்டியதுதானே? எங்களுக்குள் பரஸ்பரம் என்ன தட்டுக் கெட்டுப் போச்சு?

இஷ்டப்பட்ட போது போவேன் எங்கென்று சொல்லேன். 

இஷ்டப்பட்ட போது வருவேன். 

யாருக்கும் நான் பதில் சொல்லத் தேவையில்லே. 

இளையதலைமுறையின் இந்த சுயேச்சை சித்தாந்தத் தின் விரிவு தானே இப்போ நேர்ந்திருக்கும் இக்கட்டு? காதல் தலையிலடித்துக் கொள்ளும் தலைவிதியாக மாறும் போக்கில் யாரை யாரிடமிருந்து நான் தப்புவித்தாக வேண்டும். முடியும்? இப்போத்தான கொஞ்சம் கொஞ்சம் தெரிகிறது! அவசரப்பட்டு விட்டேனா? 

“சாமியிடம் யான் பறையன்னு விஷயம் ஒண்ணு ண்டு. மிஸ்டர் ஜியார்ஜ் என் அச்சன் அல்லன்.ஜியார் ஜிக்கு என் மேல் அதிகாரம் யாதும் இல்லா.” 

கிழவருக்குக் கண்கள் விரிந்தன. ‘இதென்ன புது வெடிகுண்டு? 

“என் அச்சன் எவனுன்னு இன்னும் யான் அறியேன். அம்மை பறைய மறுத்துன்னு.ஞான் ரெண்டு வயது சிசுவாய் அம்மை ஜியார்ஜ் இடம் வந்துன்னு. அம்மைக்குத் திக் கில்லா. கிட்டிய பணி அது ரெண்டும் புரியும். கிட்டிய கூலி ஊணு கழிஞ்சு, மிச்சம் பாட்டில், எங்களுக்குப் பசி மறக்க. எங்கள் கஷ்டம் மறக்க வழி பாட்டில், கள்ளு ஒண்ணேதான் உண்டு. யாருக்கும் யார் மேலும் ஸ்னேக மில்லா. இப்படியே எங்கள் தாமஸம்.” 

“ஆகவே யான் சாமியின் மோனை கண்டதும் என் வாழ்வுக்குச் சித்தம் யாதும் கிடைக்குமோன்னு ஆசைப்படுன்னு சாமி அதையும் சோதிச்சாச்சு.” 

கிழவர் சிரிப்பு புகைந்தது “ப்ரபு உனக்கு என்ன செய்ய முடியும்?” 

“ப்ரபுவிடம் எனக்கு ப்ரேமம் கண்டுன்னு” அவள் குரல் நடுங்கிற்று. ”ப்ரேமம், என்னைத் தீயாய்த் தஹிக் கும் ப்ரேமம், நாங்கள் இருவரும் ஒண்ணே ஓடம்,” 

ரயில் டன்னலுள் புகுந்தது. உடனே விளக்கும் அணைந்தது. ஃப்யூஸ்? அவள் மூலையிலிருந்து அவள் குரல் சொடசொடத்தது. 

“சாமிக்கு சம்சயம் வேண்டா. என்னை விவாஹம் செய்யுன்னு ப்ரபு வாக்குக் கொடுத்திட்டில்லா. எதுக்கும் ப்ரமாணங்கள் எங்களுக்கு இல்லை. யான் ப்ரபுவோடு வருன்னும், ப்ரபு எங்குபோயும் யானும் வருன்னு பறைஞ் சது. ப்ரபுவுக்கு சம்மதமில்லை.” திடீரென்று சிரித்தாள். யாங்கள் ஊணு கழிக்க யான் வேசியாகணும். வேறு ஏதும் யான் அறிஞ்சிட்டில்லாம். யான் சம்மதம். ப்ரபுவுக்கு அவ் வழி சம்மதமிருக்காது. யான் அறியும். என் ப்ராணகதிக்குத் தான் அடைச்சாச்சு.எங்கள் ஓடம் ஒண்ணு.எங்களுக்கு மோக்ஷம் இல்லா”. 

பிறகு அவள் பேசவில்லை. 


ராக்கண், ரயில் விட்டு அடுத்து ஊருக்குப் பஸ் பிரயாண அலுப்பு இத்தனையிருந்தும் தூக்கம் மறுத்து விட்டது. கயிற்றுக் கட்டிலில் புரண்டு புரண்டு முதுகு கன்றிவிட்டது. ஏதேதோ உருவங்கள், ஜியோமிதி வக்கிரங் கள், சதையும் நரம்பும் உரித்த எக்ஸ்-ரேக் கோடுகள், தந்திக் கட்டான்கள், அருவருப்பும் அச்சமும் ஊட்டும் வித விதமான நுங்கு நுரைகள் இமைத் திரையில் தோன்றி, உயிர்கண்டும், நெளிந்தும், பூத்து, பொங்கி, வழிந்து, இழைந்து, மறைந்து மீண்டும் தோன்றி விழி வலித்தது. நினைவு, விழுந்திருக்கும் அதலபாதாளத்தில் சாவை நாடிற்று.”போனால் தேவலை போயிட்டால் தேவலை” -இரண்டு உச்சாடணங்கள் ஜபம் கட்ட ஆரம்பித்து விட்டன. வாய்விட்டு அலறணும் போல் தோன்றிற்று, 

ப்ரபு நீ போனவன் போனவன் தானா? திரும்ப வந்தி ருப்பையா ? நான் அங்கு விட்டு வந்தப்பின் நீ எங்கு போனால் என்ன என்று என்னால் இருக்க முடியல் லியேடா! 

 நானே இனி இங்கு எப்படி இருப்பேன்? முதலில் ஊரை விட்டு இங்கு வந்தது தப்பு. அதைவிடத் தப்பு, இங்கிருந்து அங்கே திரும்பிப் போனது. இப்படியெல்லாம் வரும் என்றா கண்டேன். மூட்டம் கலைந்த சிதையாகி விட் டேனே! அம்மா தாங்க முடியலியே! 

“அட சட்!’ வெடுக்கென உதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். இதேஒப்பாரி என் ஆண்மைக்குத் தகுதியா? அடுத்தது என்ன? இந்தக் கேள்வி தோணும் வரை செத்துப் போய் விட்டேன் என்பது ஏது? ஊசி நுனியில் மத்தாப்புப் பொறியும் துணை வெளிச்சம் தானே! 

ஆனால், இங்கு நேரம் தள்ளுவது இனி முடியாது. வட்டத்தின் விட்டத்தில் இன்னொரு குடிசையைத் தேடணும். அங்கேயும் ஒரு ஜ்யார்ஜ் இடம் மாட்டிக் கொள் ளக்கூடாது. உர்ஸ் கூடவே கூடாது. 

என் சொத்துக்கள், புத்தகங்கள் இத்தனையும் தூக்க வழியில்லை. எண்சாண் உடம்புக்கு சிரஸே பிரதானம். சிரசுக்கு முழியே பிரதானம் என்கிற பழமொழிப்படி சிரிப்பு வந்தது – ஏதோ போறுக்கி நாலைந்து.. மிச்சத்தை ஜ்யார்ஜ் எடைக்கு போட்டு விடுவார். எனக்கு உயிர்நாடி. அவருக்கு ஒரு மொந்தைக்கு ஆனால் சரி. மதிப்பீடுகள் கண்ணெதிரேயே எப்படி மாறுகின்றன! எது நிரந்தரம்? சுயநலம் ஒண்ணுதான் நிரந்தரம். 

மதுரம், என்னை நீ வேடிக்கை பார்த்து விட்டாய். இந்த அஞ்சு வருடங்களாக நான் கட்டிக் கொண்டதாக நினைத்துக் கொண்ட கவசம் வெறும் துத்துநாகத் தகடி லும் மோசம் என்று நிரூபித்து விட்டாய். போனால் போகிறாள். ஆனால், அவளுக்காக மனம் இப்பவும் இரங்கு கிறது. வெட்கக்கேடு அவள், மேல் உடல்கூட லேசாய்ச் சபலிக்கிறது. ஆனால், அங்கே திரும்புவதா? 

அவளை இங்கே வரவழைத்துக் கொள்ளலாமா? அவளே வரேன்னு தானே சொன்னாள்! 

அவளுக்கு இங்கு சிரமம்தான். அவளுக்கு பொழுது போக்குக்கு இங்கு வழியில்லை. கருணாகரனிடம் வசூலுக்குப் போகும்போது அவளையும் கூடவே அழைத்துக் கொண்டு ஒருநாள் அரைநாள் திருவனந்த புரத்தில் அறையெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இரண்டாம் தேனிலவு. மற்றபடி நித்தியப்படி அவளுக்கு கஷ்டம்தான். நத்தை நத்தையா இந்தப் புழுங்கலரிசிச் சோறும், ஆள்வள்ளியும், நேந்திரம் பழமும் காசை வீசி எறிந்தால் இந்த நாளில் கிடைக்காத பொருள் உண்டா என்று எதிர் சவால் விடலாம். ஆனால், யார் எறியறா? பொறுக்க நான் காத்திருக்கேன். போதாதுக்குப் பிள்ளை கள் அனுப்பலாம். அவர்கள் கடமைதானே! இந்த நாளில் தூரத்துப் பச்சைக்குத்தான் அவர்களும் நானும் சரி. 

ஏன், இந்த சீமையில்தான் சிறையிருக்கணும்னு கட்டா யமா? இன்னும் கொஞ்சக்கிட்ட திருச்சி, தஞ்சாவூர் மாயவரம், திருவையாறு… காவிரிப்பாய்ச்சலின் வாழைக் கொல்லை; தென்னஞ்சோலை நடுவில் செல்லமா ஒடுங்கிக் கிடக்கும் குக்கிராமங்கள் எத்தனை இல்லை. சத்தமும் சந்தடியும் எனக்குத்தான் ஆகாது. ஆனால் அவளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டியதுதான்.வீம்பு பிடிக்கும் வயசா எனக்கு இனிமேல்? இதை எங்கேயோ ஏற்கெனவே கேட்ட மாதிரியிருக்கே! 

அவ்வளவுதான் சன்னியாசி பூனைக்குட்டி வளர்த்த கதைதான். சிறுகச் சிறுக விட்டுக் கொடுத்துண்டே போய் நானே எனக்கு காணாமல் போய் விடுவேன். இதுதான் நேரப் போகிறது. ஆனால், எனக்கு அசதி கண்டுடுத்து. அம்மா போனது போக, மிச்சத்தை முழுக்கவும் நான் இழக் காமல், எவ்வளவு சீக்கிரம் என்னை உன்னிடம் அழைச்சுக் கறையேர், உனக்குப் புண்ணியம். இதுக்கு மேல் சொல்ல எனக்கு என்ன இருக்கு? 

கண் அயர்ந்தது. 

தைபிறந்தால் வழிபிறக்கும். 

மதுரம்! மதுரம்!! வாயேன்! அட வரையா? 

உன் வருகைக்கு இப்படித் தானே காத்திருப்பேன்! உன் வருகையின் அடையாளம் கதவு மெல்ல கிறீச் செல்லமா, மெதுவா, திருட்டுத்தனமா கேக்கறது. மதுரம், வரையா? 

சில சமயங்கள், காத்திருந்து காத்திருந்து கண் அசந்துடு வேன். நீ வந்தது, உள்ளே வந்து விட்டது தெரியாது மார் மேல் மெத்தென உன் உடல் அமுங்குகிறது. 

இறுக அணைத்துக் கொண்டார். கழுத்தைச் சுற்றி கைகள் பின்னின. 

நான் சொர்க்கத்துக்குப் போயிண்டிருக்கேன். மதுரம், உனக்கு இன்னும், இந்த ஆர்வம்? கூந்தல் சரிந்து அடையாக முகம் மேல் விழுந்தது. மார் மேல் மார்புகள் அழுந்திக் குழைந்தன. அதரத்தை அதரம் தேடிற்று. மதுரம்! ஓ மதுரம்!! 

ஆமா, மதுரம் இங்கே எப்படி வந்தாள்? எப்படி வர முடியும்? கனவு கண்டுண்டிருக்கேனா? அந்தக் கேள்வியிலேயே சட்டெனக் கனவு கலைந்தது. விழிப்பு வெடுக் கென்று வந்து விட்டது. ஆனால், இமைகள் திறக்க முடிய வில்லை.கனவு இன்னும் அழுத்தறதா? மாரை அழுத்திய பாரம் குறையவில்லை. நினைவு மீண்டுவிட்டது. வாய் மேல் வாய் புதைந்து மூச்சு திணறிற்று. 

கள் நெடி –

பயம் உருவெடுத்த அசுர பலத்தில் உடல் பலத்தின் உந்தல் ஒரு முடிச்சாகி, தன் பலம் கொண்ட மட்டும் இரு கைகளாலும் ஒரு தள்ளு தள்ளி அப்படியே தன்னையும் உதறிக் கொண்டு எழுந்தார். அடுப்பங்கரை திக்கில் அந்தக் கண ம் ஒரு பந்தாய் விழுந்து மடேரென்று எங் கேயோ மோதிக் கொண்ட மாதிரி ஒரு அடங்கிய சத்தம். திரும்ப எழுந்து ஓடின மாதிரி சந்தடி கேட்கவில்லை. ஏதே னும் வனவிலங்கு வழி தப்பி.. புதுக்கிலி, தலைமேல் சுவற் றுக்கட்டையில் துழாவி தீப்பெட்டியைத் தேடியெடுத்து… 

முதல் கிழிப்பிலேயே சுர்ர்ர்- 

அம்மிக் கல்மேல் மண்டையுடன் ஒரு உருவம் கிடந் தது. ஆள்தான் கிட்டப்போய் சுடரை முகத்துக்கெதிரே பிடித்துப் பார்த்தார். 

மைகாட்!நீயா? ஏன்? 

மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தால் தாது கிடைக்க வில்லை. தொப்புளில் நரம்புகள் சுருட்டி பயம் முடிச்சேறி யது. அவசர அவசரமாய் ரவிக்கையுள் கை புகுந்து மார்த் துடிப்புக்குத் தேடிற்று ஊஹும். 

“நோ! நோ!! நோ!!” 

“எஸ்! எஸ்!! எஸ்!!!” என்று உள்ளுணர்வு மறுத் துக் கேலி செய்தது. குடிசையின் நான்கு சுவர்களும் தழுவ வேகமாக நெருங்கின. குடிசையின் கூரை மண்டையுள் கேவிற்று; வெளியே ஓடி வந்தார். கால்கள் தாமே ஓடத் தலைபட்டன. விடிவேளையின் முன்னிருட்டு மரங்கள் கிளைகளை நீட்டித் தம் அடருள் அழைத்தன். பத்தடி கூடத் தாண்டவில்லை. 

“எஸ்! எஸ்!! எஸ்!!!_ கேலி துரத்திற்று. 

ஸ்-ஸ்-ஸ் – 

வலது புறங்காலைச் சீறல் கொத்திற்று. 

“அம்மா!’ வாய் விட்டு அலறினார். 

”அம்பீ!” வாய்விடாத எதிர் அலறல். 

தடுக்கி விழுந்து, உடலில் மணியாங்கற்கள் குத்தின. 

இனி ஓட வேண்டிய அவசியமேயில்லை, நன்றாய்த் தெரிந்தது; இருந்தாலும், எழுந்து உட்கார்ந்து காலைச் சுற்றி இறுக்கிய இன்னும் இறுகிக் கொண்டேயிருக்கும் முடிச்சைக் கழற்ற முயன்றார், முயன்று கொண்டே இரு – ந் – ந் -ந்—. 

(முற்றும்)

– கேரளத்தில் எங்கோ… (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்திணை பதிப்பகம், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *