அம்மாவ பார்க்கப் போறேன்…..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 10,467 
 

என்னை அந்த வெள்ளை மெத்தையில்தான் போட்டு வைத்திருக்கிறார்கள். உயிர் இருக்கிறது; அசைவில்லை. மூச்சு இருக்கிறது; பேச்சில்லை. வாயில் சுவாசக்கவசம் அணியப்பட்டிருக்கிறது. போத்தலில் உள்ள இரத்தம் கையில் துளையிட்டு கிடந்த குழாயின் வாயிலாக என் உடலுக்கு இடம் மாறிக் கொண்டிருக்கிறது. ஒட்டுப்போட்டத் துணி போல உடலில் ஆங்காங்கே தையல் போடப்பட்டிருக்கிறது. தலையில் வெள்ளைத் துணி சுற்றப்பட்டிருக்கிறது. புரியாத கணக்கைக் காட்டியபடி ஒரு பெட்டிக்குள் பச்சைக் கோடு மேலேயும் கீழேயும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.

என்னைச் சுற்றி யாரார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. எனக்காக எத்தனைப் பேர் அழுகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. மருத்துவர்கள் என்னை மாறி மாறி வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். நான் சுயநினைவை இழந்துவிட்டேனாம். ஆனாலும் என் ஆள்மனம் இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. எல்லாமே சரியாகத்தான் இருந்தது. அன்றைய தினம் மட்டும் அப்படி நடக்காமலிருந்தால் இன்று எல்லாமே சரியாகத்தான் இருந்திருக்கும். இந்த நொடிப்பொழுது வரையிலும் நடந்தது எதையும் என்னால் நம்ப இயலவில்லை.

அன்றைய தினம் வழக்கம் போல அம்மா எனக்காக பள்ளிக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தாள். பள்ளி முடிந்ததும் ஆவலோடு அம்மாவை நோக்கி ஓடோடி வந்தேன். எப்போதும் என்னைப் பார்த்ததும் அம்மாவின் முகம் மலர்ந்துவிடும். அன்று அம்மாவின் முகம் மிகவும் வாடிப் போய் இருந்தது. நான் வழக்கம் போல அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டே நடந்தேன். அம்மா எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. அம்மாவின் கைப்பிடியிலிருந்து என் கை தளர்ந்து விலகியது. அம்மா புத்தகப்பையைச் சுமந்தபடி என்னைப் பின் தொடர்ந்தாள். நான் காற்சட்டைப் பாக்கேட்டில் கையை விட்டபடி சாலையோர கற்களை உதைத்துக் கொண்டு நடந்தேன். நேர்பாதையில் சென்றால் இரயில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டும் என்பதால் அம்மா என்னை எப்போதும் போல அந்த குறுக்குப் பாதையில் அழைத்து வந்தாள். நான் அவ்வப்போது அம்மாவின் முகத்தை நோக்கினேன். அம்மா எதையோ தீவிரமாக யோசிப்பதை முகம் காட்டியது.

இருவரும் வீட்டை வந்தடைந்தோம்; வீட்டிற்குள் ஓடினேன். எனது ஐந்து வயது தங்கை தொட்டிலில் படுத்திருந்த பாப்பாவை பத்திரமாக கவனித்துக் கொண்டிருந்தாள். அவளது பொறுப்புணர்ச்சியைப் பெருமிதத்தோடுப் பார்வையிட்டேன். பல்லில்லாத அவளின் பொக்கை வாய் சிரிப்பு எனக்கும் சிரிப்பைத் தந்தது. தொட்டிலில் தலையை நீட்டினேன். பாப்பா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். உதட்டைப் பாப்பாவின் நெற்றிப்பொட்டில் பதித்துவிட்டு கையை அலம்பச் சென்றேன்.

புதிதாக எதுவும் இல்லையென்றாலும் வழக்கமான இரசத்தில் சோறும் கருவாடும் மிதந்து கொண்டிருந்தன. பசி வயிற்றைக் கிள்ளியதால் பேசாமல் சாப்பிட்டு எழுந்தேன். பாடப்புத்தகங்களோடு மீண்டும் அமர்ந்தேன். இந்நேரம் அம்மா என்னருகில் அமர்ந்து தலையை வருடியபடியே “இன்னிக்குப் பள்ளிக்கூடத்துல ஆசிரியரு என்ன சொல்லி கொடுத்தாங்க?” என விசாரித்திருப்பாள். ஆனால் அம்மா அப்படி செய்யவில்லை. சுவற்றில் சாய்ந்தபடி அவளது தலை விட்டத்தை அன்னாந்து நோக்கியிருந்தது; கண்கள் சிவந்த குளங்களாக மாறியிருந்தன. அம்மாவின் போக்கு எதுவும் எனக்கு விளங்கவில்லை. தங்கை மட்டும் அம்மாவிடம் “அம்மா….. ஏம்மா….? ஏம்மா….அழற….. சொல்லுமா?” என தொல்லைப் பண்ணினாள். “ஒன்னுமில்லடி” எனும் ஒரு வார்த்தையில் அம்மாவின் பதில் அடங்கிவிட்டது.

அழுகுரல் கேட்டது; தொட்டில் அசைந்தது; பாப்பா விழித்துக் கொண்டாள். அநேகமாக பாப்பாவுக்குக் பசியாகத்தான் இருக்கும்; அம்மா எழவில்லை. “அம்மா…..! பாப்பா அழறா” என தங்கையின் குரல் அம்மாவைத் துரிதப்படுத்திய பின்னரே அம்மா ஏதோ நினைவுக்கு வந்தது போல எழுந்து சென்று பாப்பாவைத் தூக்கினாள்.

கடிகாரத்தில் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் நான்கில் கூடி இருந்தன. அது நானும் தங்கையும் சேர்ந்து விளையாடும் நேரம். அந்நேரத்தில் ஒரு நொடி கூட என்னால் பாடம் செய்ய இயலாது. இருவரும் வீட்டுப் பின்புறத்தில் ஒன்றாக சேர்ந்து விளையாடுவதுதான் வழக்கம். பிற வீட்டு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட அம்மா அனுமதித்தது கிடையாது. எப்போதும் மண்ணில் கோடு கிழித்து ‘ஒத்த ரெட்ட’ விளையாட்டை விளையாட அம்மா பாப்பாவைக் கையில் சுமந்தபடியே “பாத்து பத்திரமா விளையாடுங்க…..! அந்த தண்டவாளம் பக்கமெல்லாம் போகாதீங்க” என மிரட்டுவாள். வீட்டின் பின்புறத்தில் இருக்கும் அந்த தண்டவாளத்தின் பயன்பாடு இன்னும் ஓயவில்லை.

அன்று நாங்கள் வழக்கம் போலவே விளையாடினோம். ஆனால் அம்மா நாங்கள் விளையாடும் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. அன்றைய பொழுது அம்மாவின் போக்கு எல்லாமே புதுமையாகவும் புரியாத புதிராகவும் இருந்தது. மோட்டார் சைக்கிளின் ஒலி கேட்டபோது “அப்பா…..அப்பா….” என சந்தோசத்தில் கத்தியபடி துள்ளி குதித்துக் கொண்டு வாசலுக்கு ஓடினோம். வேலை முடிந்து களைப்பில் அசந்து போய் வந்த அப்பாவின் கையில் எங்களுக்காக எதுவுமில்லை.

“இந்த அப்பாவுக்கு நம்ம மேல பாசமே இல்ல” என தங்கை முகம் சுளித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.

தங்கை சொல்வது போல அப்பாவும் முன்பு போல் கிடையாது. முன்பெல்லாம் எங்களிடம் பிரியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்ட அப்பாவிடம் இப்போது பாசம் எட்டிப் பார்ப்பது குறைவுதான். மதிய சாப்பாடு வீட்டிற்கு வந்து செல்லும் அப்பா இப்போதெல்லாம் வருவதே கிடையாது. வேலை முடிந்து தாமதமாகதான் வீடு திரும்புவார். வந்த வேகத்திலேயே குளித்துவிட்டு வெளியே கிளம்பி விடுவார். அப்பா வீடு வருவதற்குள் நானும் உறங்கி விடுவேன். அம்மா ஏதேனும் கேள்வி கேட்டு விட்டால் இரகளை ஆரம்பமாகி விடும். சிலநேரங்களில் அம்மாவின் கண்ணம் சிவந்துவிடும். அம்மாவிடம் பாசமாக இருந்த அப்பாவை விட அம்மாவிடம் எரிச்சலைக் கொட்டுகின்ற அப்பாவைதான் அதிகம் காணமுடிந்தது. அப்பாவின் இந்த மாற்றமெல்லாம் இடைப்பட்ட காலத்தில் ஆரம்பமானதுதான்.

வீடு வந்த அப்பா அறைக்குள் சென்றார். அப்பாவைக் கண்டதும் அம்மா பாப்பாவைத் தொட்டிலில் போட்டு விட்டு தலைமுடியை முடிச்சுப் போட்டாள். அம்மாவின் முகத்தில் கடுங்கோபம் தெரிந்தது. அம்மாவும் அந்த அறைக்குள் சென்றாள். அறைக்குள் அம்மாவின் குரலே மேலோங்கி நின்றது. அவர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது. ஆனால் ஏன் இந்த வாக்குவாதம் என்பதுதான் புதிராக இருந்தது. தங்கை பயத்தில் என் கையைப் பற்றிக் கொண்டாள். அவர்களது வாக்குவாதத்தில் பாப்பாவும் அழத் தொடங்கி விட்டாள்.

அப்பா அறையின் கதவை இழுத்து அடித்தபடி வெளியே வந்தார்; அம்மாவும் பின்தொடர்ந்து வந்தாள். “சொல்லுங்க உங்களுக்கும் அவளுக்கும் எத்தன நாள இந்த உறவு இருக்கு…..? சொல்லுங்க!!!”

“இத்தன நாள ஊராரெல்லாம் உங்கள பத்தி என்கிட்ட தப்பா பேசனப்பக் கூட அவங்கள திட்டுனேனே தவிர உங்க மேல நம்பிக்கைய இழக்கல… ஆனா இன்னிக்கு அவளோட நீங்க மோட்டர்ல நெருக்கமா இருந்தத பார்த்த போது உங்களோட நான் வாழ்ந்த வாழ்க்கையை வேரோட அறுத்து எறிஞ்சமாதிரி இருந்துச்சு…!!! அந்த வலிக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?”

“சொல்லுங்க…..!!! எனக்கு பதில் தெரிஞ்சாகனும்…. யான் இப்படியொரு துரோகத்த எனக்கு தந்தீங்க? நான் அப்படியென்னங்க உங்களுக்கு கொற வெச்சேன்…. மூனு புள்ளைங்களுக்குப் அப்பாவா இருந்துகிட்டு எப்படி இவ்வளவு இழிவா நடந்துகிட்டீங்க?” என அம்மா கேட்ட ஒவ்வொரு கேள்வியும் எனக்குப் பேரதிர்ச்சியை உண்டாக்கியது. அப்பாவுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருப்பதை என்னால் நம்பமுடியவில்லை. “அப்பாவா இப்படி!!!” என எனக்குள் ஒர் எதிரொலி ஏற்பட்டது..

அப்பாவோ தான் செய்தது தவறே இல்லாதது போல அம்மாவிடம் குரலை உயர்த்தினார். அம்மா கடுங்கோபத்தில் என் கண்களுக்கு பத்ரகாளியாக தெரிந்தாள். அவளுடைய கேள்விகள் ஒவ்வொன்றும் எறிகனல்களாக இருந்தன.

“ச்ச்சீசீ….நீங்களும் ஒரு மனுசனா? வாழ்ந்தா உங்க கூடதான் வாழ்வேனு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்தேனே….உங்க மேல உயிரையே வச்சேனே…. கடைசில எனக்கு மிஞ்சனது துரோகம்தானா? யாங்க என்ன இப்படி ஏமாத்திட்டீங்க….இதுவே நான் உங்க கூட வாழ்ந்துகிட்டே வேறொருவன் கூட தொடர்பு வெச்சிருந்தா…” என அம்மாவின் கேள்வி முற்றுப் பெறுவதற்குள் பேயறை ஒன்று அம்மாவின் கன்னத்தில் விழுந்தது.

அம்மா சுருண்டு விழுந்தாள். அப்பாவின் கால்கள் அம்மாவை சரமாரியாக எட்டி உதைத்தன. அம்மாவின் கதறலைக் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஒருசிலர் வெளியே இருந்தபடி நோட்டமிட்டனர். அப்பாவின் செயலைக் கண்டு எனக்குக் கோபம் வந்துவிட பலம் பொருந்திய குத்துகளை அவரது வயிற்றில் விட்டேன். அவருடைய ஒரு கைக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தங்கையோ அப்பாவின் காலைப் பற்றிக் கொண்டு “அம்மாவ அடிக்காதீங்கப்பா” என கெஞ்சினாள்.

“யாருகிட்ட பேசுறேனு தெரிஞ்சிகிட்டு பேசு…!! என்ன தைரியம் இருந்த என்கிட்டயே அப்படி ஒரு வார்த்தைப் பேசுவ… நான் ஆம்பல. நான் ஆயிரம் பண்ணுவேன்; என்ன யானு கேட்க எவனும் வர மாட்டான்… நான் அவகூடதான் இருப்பேன்…உன்னால என்னோட இருக்க முடிஞ்சா இரு… இல்லனா என் மூஞ்சுல முழிக்காம எங்கவாச்சும் போய் தொலஞ்சிடு” என ஆவேசமாக பேசி அப்பா வீட்டை விட்டு வெளியேறினார். அது அவருடைய ஆண்பலமா….. ஆணாதிக்கமா….. என்பது எனக்கு விளங்கவில்லை.

அம்மா அன்று இரவு முழுவதும் ஏதேதோ புலம்பி கொண்டே அழுதாள். அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது. அப்பா இன்னும் வீடு வரவில்லை…அநேகமாக அங்குதான் இருப்பார். அம்மாவின் உடல் ஆங்காங்கே வீங்கி போய் கிடந்தது. அம்மாவுக்கு ஆறுதல் கூட சொல்ல இயலாமல் வாங்கிய அறையில் அப்படியே அயர்ந்து விட்டேன்.

ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

காலையில் கண்விழித்த போது எனக்குள் ஒரு மகிழ்ச்சி. அம்மா குளித்துவிட்டு அழகிய உடையணிந்து, நேர்த்தியாக தலைமுடி வாரி, நெற்றியில் குங்குமமிட்டு மிகவும் அழகாக இருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் அம்மாவை இக்கோலத்தில் காண்கிறேன். என்னையும், தங்கையையும் குளிப்பாட்டி விட்டு அழகிய உடையை அணிவித்தாள்.

“என்னம்மா….காலையிலேயே புதுசட்டலாம் போட்டுகிட்டு எங்கம்மா போவ போறோம்” என அம்மாவை ஆவலோடு கேட்டேன். அம்மா சிரித்தாள்….. தொட்டிலில் பாப்பாவைப் பார்த்தேன். பாப்பாவும் புது உடையில் பொம்மையைப் போல பதுமையாக இருந்தாள். அப்பாவைத் தேடினேன்; காணவில்லை. அநேகமாக வேலைக்குதான் சென்றிருக்க வேண்டும். “அம்மா இப்பவாச்சும் சொல்லும்மா….. ஸ்கூலுக்குக் கூட போகாம எங்கம்மா போவ போறோம்” என அம்மாவிடம் மீண்டும் கேட்டேன். இம்முறை சிரிப்போடு “நாம வெளிய போறோம்னு” பதிலும் வந்தது.

இதுவும் எனக்குப் புதுமையாகதான் இருந்தது. அம்மாவின் செயலை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அம்மா வீட்டைப் பூட்டினாள். அதுவரை பாப்பாவைச் சுமந்துக் கொண்டபடி அம்மாவையே பார்த்தேன். அம்மா ஒரு கையில் பாப்பாவைச் சுமந்துக் கொண்டு மறுக்கையில் தங்கையின் கையை விலங்கிட்டுக் கொண்டாள். நான் வழக்கம் போல காற்சட்டைப் பாக்கேட்டில் கையை விட்டபடி சாலையோர கற்களை உதைத்துக் கொண்டு நடந்தேன். எப்போதும் குறுக்குப்பாதையைப் பயன்படுத்தும் அம்மா இம்முறை நேர்பாதையிலேயே சென்றாள். அந்த பாதையில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டியிருக்கும். நான் அவ்வப்போது அம்மாவை நோக்கினேன். அம்மா என்னைப் பார்த்துச் சிரித்தாள். அம்மாவின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

“அம்மா! தண்டவாளம் வந்திடுச்சுமா….. மேம்பாலம் ஏறனும்….. வாங்கம்மா படிக்கட்டுல ஏறலாம்” என்றேன் ஏதோ வழிகாட்டுவது போல.

“வேணாம்டா…..அம்மாவுக்கு உடம்பெல்லாம் ரொம்ப வலியா இருக்குடா. அம்மாவுக்குப் படியெல்லாம் ஏற முடியாது….. வாடா இப்படியே தாண்டி போயிடலாம்” என்றாள் அம்மா. அம்மாவுக்கு விழுந்த அடியும் உதையும் நினைவுக்கு வந்தது…..பாவம் அம்மா.

நான்கு தடங்கள் கொண்ட அந்த பெரிய தண்டவாளத்தைக் கவனமாக கடந்து கொண்டிருந்தேன். முதல் தடம் கடந்ததும் அம்மா அங்கேயே அப்படியே நின்றுவிட்டாள்.

“வாங்கம்மா….. யான் அங்கேயே நிக்கிறீங்க”.

“அம்மாவுக்குக் காலுலாம் ரொம்ப வலிக்குதுடா…..நடக்க முடில.. கொஞ்சம் உட்காந்துட்டு போவோம்….வாடா”.

பாவம் அம்மா….! வலியின் வேதனையில் மிகவும் சோர்ந்து போய் கிடந்தாள். அம்மா இரண்டாம் தடத்தில் தங்கையோடும் பாப்பாவோடும் அப்படியே அமர்ந்து விட்டாள். நான் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டேன். பாப்பா தன் பிஞ்சு கைகளில் தங்கையின் கன்னத்தைத் தொட்டுத் தொட்டுச் சிரித்தாள்.

“ஏம்மா….! ஒரு மாதிரியா இருக்கீங்க” என வினவியபோது அம்மாவின் தோரணை மாறியது; கண்களில் நீர் ததும்பியது. எனக்கோ சுருக்கென இருந்தது.

“இனிமே நமக்குனு யாருடா இருக்கா….நாம அனாதைகளாயிட்டோம். இதுநாள் வர உங்க அப்பாவோட வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாம போயிடுச்சு… எப்ப வேறொருத்திய தேடிகிட்டுப் போனாறோ அப்பவே நான் செத்துட்டேன்… உங்க அப்பா செஞ்சது மிகப் பெரிய துரோகம்டா….இனி இந்த உலகத்துல வாழ்ந்து என்ன இருக்கு? நாம வாழ வேணாம்டா….சாமிகிட்ட போயிடலாம்” என்றாள் அம்மா.

அம்மா தவறான முடிவுக்கு வந்துவிட்டதை உணர்ந்தேன். தண்டவாளம் அதிர்ந்தது. அது இரயில் வந்து கொண்டிருப்பதற்கான அறிகுறி. அதற்குள் என் அம்மாவையும் தங்கைகளையும் காப்பற்ற போராடியாக வேண்டும். தூரத்தில் இரயில் அபாய ஒலியை ஒலித்துக் கொண்டே அதிவேகத்தில் விரைந்து வந்தது.

“அம்மா.. வாம்மா.. வாம்மா….. அம்மா … வாம்மா இரயிலு வருதுமா… பாருமா தங்கச்சிங்க பயத்துல அழறாளுங்கம்மா…. வாம்மா போயிடலாம்மா… உங்கள கெஞ்சி கேட்குறேன் வாம்மா..” என கத்திக் கதறினேன். என் முழு சக்தியையும் கொண்டு அம்மாவின் கையைப் பற்றி இழுத்தேன். அம்மா கையை உதறிவிட்டாள்.

“பயப்படாதடா…… ஒன்னுமில்ல….. அம்மாவுக்கு ஒன்னுமில்ல…… அம்மாகிட்ட வாடா….. கொஞ்ச நேரம் அமைதியா படுத்தா எதுவும் தெரியாது” என்றவள் தங்கையையும் பாப்பாவையும் அணைத்தபடியே தண்டவாளத்தில் சாய்ந்துவிட்டாள். அந்த பிஞ்சுகள் இரண்டும் அம்மாவின் பிடியிலிருந்து வெளிவர முடியாமல் அப்படியே சிறைப்பட்டு போயின.

“அம்மா…..! அம்மா……! வேணாம்மா…. தங்கச்சியெல்லாம் பாவம்மா… நீங்க எனக்கு வேணும்மா….எதுவும் செஞ்சிகாதிங்கம்மா…..ரொம்ப வலிக்கும்மா… வந்திடுங்கம்மா….!” என கதறினேன். அம்மாவின் கால்களைப் பற்றி பலம் கொண்டு இழுத்தேன்….இழுத்த வேகத்தில் வழுக்கிக் கொண்டு தடத்தின் வெளியே விழுந்தேன்.

எதுவும் செய்ய இயலாத நிலையில் அப்படியே கத்தினேன்; கதறினேன். என் கதறலை அம்மா கேட்க முடியாதபடி இரயிலின் ஓசை ஆதிக்கம் செலுத்தியது. என் முகத்தில் அரைபட்டு சிதைந்து போன சதைகளும் இரத்தமும் தெரித்தன. சிதைந்து தெரித்தது அம்மாவின் சதையா, தங்கைகளின் சதையா என்று கூட எனக்கு தெரியவில்லை. சக்கரத்தின் அடியில் சிக்குண்டு அரைபட்டு சிதைந்து கொண்டிருந்த உடல்களைப் பார்த்து பேச்சு மூச்சு உறைந்து நின்ற போது இரயில் வண்டியின் இரும்பு கம்பியால் மோதப்பட்டு புதருக்குள் தூக்கியெறியப்பட்டேன்.

குற்றுயிரோடு நான் இப்போது தீவிர கண்காணிப்புப் பிரிவில் போராடுகிறேன். எனக்கு சுயநினைவு திரும்ப மருத்துவர்கள் போராடுகிறார்கள். எனக்கு சுயநினைவு திரும்பக் கூடாது; திரும்பவும் வேண்டாம். நான் அம்மாவைப் பார்க்க வேண்டும்…. அம்மாவிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது……

“அம்மா…!!! உன் புள்ள கேள்விக்குப் பதில் சொல்லும்மா! அப்பா மேல நீ வச்ச பாசத்துக்கு அவரு உனக்கு துரோகம் பண்ணிட்டாரு… அவரு செஞ்ச பாவத்துக்குக் கண்டிப்பா தண்டனைய அனுபவிப்பாரு…. அதுக்கு நீ யாம்மா இப்படியொரு முடிவ எடுத்த? அவர தூக்கியெறிஞ்சிட்டு வாழ்ந்து காட்டியிருக்கலாமே! எந்த தாயும் தன் உயிர கொடுத்து புள்ளைங்க உயிர காப்பாத்துவாங்க… ஆனா நீ எடுத்த முடிவில எந்த பாவமும் அறியாத என் தங்கச்சிகளையும் உன்னோட கூட்டிட்டு போயிட்டியே…!!! சொல்லுமா… நீ செஞ்சது சரியாம்மா?”

இதோ தாதி வந்து விட்டாள். அந்த பச்சைக்கோடு இப்போது சீராக ஒரே நேர்கோட்டில் செல்கிறது. என் உடலில் பொருத்திய எல்லாவற்றையும் தாதி கழற்றுகின்றாள். வெள்ளைத் துணி என்னை முழுமையாக மூடுகிறது.

நான் அம்மாவைப் பார்க்க போறேன்…..

– இந்து பிரதிநிதித்துவச்சபை,மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பயணம்-14 சிறுகதை தொகுப்பில் தேர்வு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *