ஒரு நிபந்தனை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 2,008 
 

சுந்தரேசன்

பெண் வீட்டிலிருந்து மூன்று முறை போனில் தொடர்பு கொண்டு விட்டார்கள். ஜாதகம் பொருந்தி இருக்கிறதாம். மூன்று ஜோசியகாரர்களிடம் காண்பித்து விட்டார்களாம். எல்லாரும் ஓகே சொல்லி விட்டார்கள் அதனால் எப்ப பெண் பார்க்க வரலாம் என்று மொபைலில் கேட்டார் பெண்ணின் தந்தை சதாசிவம். ஈரோடில் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ப்ணி செய்கிறார். அவர் மனைவி வசுமதி தனியார் பள்ளியில் பணி புரியும் தமிழ் ஆசிரியர். மகள் . பவித்ரா, பி ஈ பட்டாதாரி. வயசு இருபத்தி ஆறு. பெங்களுரூவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறாள்.

எனக்கு ரொம்ப குழப்பமாகயிருந்தது. இப்படி மேலே மேலே வந்து விழறாங்களே. ஒரு வேளை இந்த இடத்தில்தான் மாதவனுக்குப் பிராப்தம் இருக்குமோ என்று தோன்றியது. என் மனைவி கீதாவிடம் கலந்து ஆலோசித்தேன். எனக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கையில்லை. அவர்கள் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்வோம். நம்ம மாதவன் நல்ல வேலையில் இருக்கிறான். லட்ச ரூபாய் சம்பாதிக்கிறான். அவன் முதலில் பெண்ணைப் பார்க்கட்டுமே. அவனுக்குப் பிடிச்சிருந்தா நாம் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம். அவள் சொன்னது எனக்குச் சரியாகப் படவே நான் சதாசிவத்திடம் ”பெண் இங்கு வந்தால் பையனிடம் பேசட்டும். அவங்களுக்கு ஓகே என்றால் நாம் மேலே தொடரலாம் என்று என் மனதில் இருந்ததைச் சொல்லி வைச்சேன். அதற்கு அவர் ஒப்புக் கொண்டார்.

நான் இருப்பது சென்னை . அவர் இருப்பதோ ஈரோடு . பெண் இருப்பதோ பெங்களூரு. அவர் சென்னைக்குப் பெண்ணை வரச் சொல்வாரா என்று தெரியலை. எப்படி, அதற்கு ஏற்பாடு பண்ணுவார் என்று தெரியலை.

ஒரு வாரம் கழித்து எனக்கு போன் வந்தது. நானும் என் மனைவியும் இப்போ சென்னை வந்திருக்கோம். மைலாப்பூரில் என் தங்கையின் வீட்டில் இருக்கிறோம். பவித்ராவும் சென்னைக்கு வந்திருக்கா. அதனாலே உங்க பையன் பெண்ணை பார்த்து பேசலாம். இது ஒரு இன்பார்மல் மீட்டிங். இரண்டு பேருக்கும் பிடிச்சுருந்தா நாம் பார்மலா ஈரோடில் ஒரு நாள் பார்மலா பெண் பார்க்கும் நிகழ்ச்சியை வைச்சுகலாம். இப்போ நாம் எங்கே மீட் பண்ணலாம்என்று வினவினார். நான் என் பையனுடன் கலந்து கொண்டு நாளை மாலை ஆறு மணி சுமாருக்கு காபாலீஸ்வர்ர் கோவிலில் மீட் பண்ணலாம் என்றேன். அவர் சரி என்று சொல்லி விட்டார்.

மாதவனுக்குத்தான் கொஞ்சம் பயம். என்ன பேசறது ? என்றான். டேய் நீ ஆபிஸில் எத்தனையோ பேரிடம் பேசியிருக்கிறாய்,. தைரியமா பேசு என்றேன். “அது ஆபிஸ். ஆனா இது வேறே இல்லையா?….” என்றான்.

அடுத்த நாள் கோவிலில் சந்திப்பு நடந்தது. இரண்டும் பேரும் கொஞ்ச நேரம் தனியாகப் பேசினார்கள்.

மாதவன் முகத்திலிருந்த சந்தோஷத்தைப் பார்த்து பெண்ணை அவனுக்குப் பிடித்து விட்டது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. பெண்ணின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

அன்று மாலை மைலாப்பூரில் உள்ள சங்கீதா ஓட்டலில் எல்லாரும் டிபன் சாப்பிட்டோம். அடுத்த வாரம் பெண்ணை பார்மலா ஈரோடு வந்து பார்த்துடுங்க் என்றார் சதாசிவம். நான் ஓகே என்றேன்.

“பவித்ரா என்னடா கேட்டாள் ?“ மாதவனிடம் வினவினேன். “பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம் அப்பா. என்னுடைய் நெட் டேக் ஓம் பே எவ்வளவு” என்று கேட்டாள். வேறு ஒன்றும் கேட்கலை.

அடுத்த நாள் சதாசிவத்திடமிருந்து போன் வந்தது. அடுத்த வாரம் புதன் கிழமை ஏழாம் தேதி பார்மலா பெண் பார்க்க ஈரோடு வாங்க என்று சொல்லி விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார், இப்போதுதான் பிரச்சனையே ஆரம்பித்தது .அவர் மாதவனின் வருமானம் எவ்வளவு என்று கேட்டு விட்டு அவனுடைய பே சிலிப் அனுப்பச் சொன்னார். மாதவன் ஏற்கனவே பவித்ரா அவனுடைய வருமானத்தை பற்றிக் கேட்ட்தாய் சொல்லியிருந்தான். இருந்தாலும் அவர்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மாதவனின் சேலரி சிலிப்பை அவருக்கு அனுப்பினேன். கல்யாணம் முடிஞ்ச பிறகு நீங்க சொந்த ஊருக்குப் போயிடுவீங்களா? என்று கேட்டார். எனக்கு பக் என்று இருந்தது. அவர் பேசியதிலிருந்து கல்யாணத்துக்குப் பிறகு மாதவனுடைய குடும்ப விவகாரத்தில் மூக்கை நுழைப்பார் போலத் தோன்றியது. என் மனைவி மங்களத்திடம் அபிப்பிராயம் கேட்டேன். ”அந்தப் பெண் நமக்கு ஒத்து வருவாளா?” மனவெழுச்சியை வெளியே காட்டிக்கொள்ளாது அவள் லேசாக புன்முறுவளித்தாள், எனக்குக் குழப்பமா ஆயிடுத்து. மங்களம் சாது. யாரையும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாள். அவளுக்குத் திருப்தி இருந்தால்தான் இந்த பெண் பார்க்கும் படலத்துக்குப் போக வேண்டுமென்று தீர்மானம் பண்ணினேன்.

மங்களம்

பவித்ராவை எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அடக்கமும் அழகும் உள்ளவள். தங்கச் சிலை போல இருந்தாள். பெண்ணின் அம்மாவும் டீச்சர். கம்பீரம் முகத்தில் தெரிய குரல் மென்மையாய்

ஒலித்தது. இன்னும் ஐந்து வருஷம் கழித்து ஓய்வு பெற வேணுமாம். வளவளன்னு பேசாமல் சுருக்கமாகப் பேசினார்கள். பெண்ணையும் அம்மாவையும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு, பையனும் பெண்ணும் மையிலாப்பூர் கபாலி கோயிலில் தனியாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தார்கள். மாதவன் என்ன சொல்வானோ என்று பதட்ட,மாக இருந்தது. அவன் முகத்தில் சந்தோஷத்தைப் பார்த்ததும் எனக்கு மிக்க திருப்தியாக இருந்தது. நான் என் கணவரைப் பார்த்துக் கண்ணாலே சிரித்தேன். அவர் புன்னகை புரிந்தார்.

”என்ன சொல்றீங்க ?” என்று கேட்டார் சதாசிவம்.

நான் என் கணவரைப் பார்த்தேன்.

”அவர் மாதவனைப் பார்த்து விட்டு, “எங்களுக்குப் பெண் பிடிச்சு இருக்கு. மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்க்கலாம்” என்றார் என் கணவர்.

”நாங்க ஊருக்குப் போயிட்டு நீங்க எப்போ வரலாம்னு சொல்றோம்” மகிழ்ச்சியுடன் சதாசிவம்.

அன்று மாலை ஓட்டலில் டிபன் சாப்பிடும்போது பவித்ராவுடன் உரையாடினேன். அவள் உற்சாகமாகப் பேசினாள்.”கல்யாணம் முடிந்தவுடன் சென்னைக்கு வேலை மாற்றி கொண்டு விடுவேன்” என்றாள்.

என்ன தான் பனிவாகப் பேசினாலும் கல்யாணத்துக்குப் பிறகு அப்படியே மாறாமல் இருப்பாளா என்று எனக்குக் சிறிது சந்தேகமாக இருந்தது. பேசும்போது இடையிடையே ”அப்பா எனக்கு எதுவேணுமாலும் செய்வார் . அப்பாவை கேட்கணும் அப்பா கிட்டே சொல்லணும்” என்று நூறு தடவை சொல்லியதிலிருந்து எல்லாவற்றையும் அப்பாவிடம் கேட்டோ இல்லை சொல்லியோ செய்வாள் என்று தெரிந்தது.

அன்று வீட்டுக்கு வந்த பிறகு அன்று நடந்ததைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.

மாதவன், ”எனக்குப் பெண் பிடிச்சுருக்கு. அவ என் வருமானத்தைப் பற்றிக் கேட்டாள். என்னுடைய மாத சம்பளத்தைச் சொன்னேன். அவளுடைய வருமானத்தை பேங்கில் சேர்த்து வைக்கப் போகிறேன் என்றாள். எனக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை என்று கூறினேன். “ என்றான்.

” கல்யாணத்துக்குப் பிறகு உங்க அப்பா அம்மா நம்மோடு இருக்கப்போறாளா?” என்று கேட்டாள்

எனக்குத் திக் என்று ஆகிவிட்டது.

”மாதவா என்னடா, கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படிப் பேசறாளே”

”நான் அவளிடம் சொல்றேன். இது கூட பரவாயில்லை. அவ அப்பா என் கூட பேசும்போது, ”குழந்தை பிறந்தவுடன் நல்ல கான்வெண்டில் சேர்க்க வேணும். அபாஸ்கஸ் வகுப்பில் போட வேண்டும் என்று சொன்னார் மேத்ஸ் டீச்சர் இல்லையா”என்று கூறி சிரித்தான்.

நான் மெளனமாக இருந்தேன்.

எனக்கு என்னவோ பவித்ராவின் பெற்றோர் அதிக பாசத்தின் காரணமாக அவள் விஷயத்தில் அவர்களே முடிவு எடுத்து விடுவார்கள் என்று தோன்றியது.

பெண் வீட்டிலே அடுத்த மாசம் பார்மலா வந்து பெண் பார்க்க வந்துடுங்கோ என்று சொல்லி இரண்டு நல்ல நாட்கள் ஆப்சன் கொடுத்தார்கள்.

மாதவனிடம் அதைச் சொல்லி விட்டு, ”மாதவா, எனக்கும் பவித்ராவை ரொம்ப பிடித்திருக்கிறது. ஆனால் கல்யாணம் ஆனப்பிறகும் அவள் அப்பா அம்மா வளையத்துக்குள்ளே இருப்பாள் என்று எனக்குத் தோன்றுகிறது. அதுதான் எனக்கு நெருடலாக இருக்கிறது.. நீ எதற்கும் யோசித்து முடிவெடு” என்று கூறினேன்.

மாதவன்

பவித்ராவை இன்று முதல் முறையாக பார்த்தப் போது அசந்து போனேன். நல்ல உயரம், பேரழகி, இனிமையான குரல், சிரித்த முகம் எல்லாருக்கும் பார்த்தவுடனே பிடித்துப் போய் விடும். நாங்கள் இருவரும் பொதுவாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம். அவள் என்னுடைய விருப்பங்கள் என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய வேலைப் பற்றிக் கேட்டேன். பத்து நிமிடம் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய புத்திசாலித்தனம் எனக்குப் புலப்பட்டது. என்னுடைய வருமானம் எவ்வளவு என்று கேட்டாள். நான் வீட்டு லோன் போக வரும் வருமானத்தைச் சொன்னேன்.

“எனக்கும் அதே அளவுதான் வருகிறது என்றாள். கல்யாணத்துக்குப் பிறகு என் வருமானத்தில் எண்பது பர்செண்ட் நான் மீயூட்சுவல் பண்டில் சேர்த்து வைப்பேன். இருபது பர்செண்டை என் விருப்பம் போல் செலவழிப்பேன். உங்களுக்கு ஆட்சேபனை எதுவுமில்லையே” என்று கேட்டாள்.

“உன் வருமானம், நீ என்ன வேணுமானாலும் செய்து கொள்” என்றேன். ”நான் சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிண்டு வந்து விடுவேன்” என்றாள்.

”அது போதுமென்றேன்.”

அவளுக்கும் என்னைப் பிடித்து விட்டது என்பது எனக்குத் தெரிந்து விட்டது.

இன்னும் வேறு ஏதாவது என் கிட்டே கேட்கணுமா? என்றாள். இல்லை என்றதும் இருவரும் அவ்விடத்திலிருந்து அப்பா அம்மா இருந்த இடத்துக்கு வந்தோம்.

அடுத்த நாளிலிருந்து இரண்டு பேரும் மொபைலில் பேசிக்கொண்டோம். அவளுடன் பேசுவது எனக்கு மிகவும் இனித்தது. இரவு ஒன்பது மணிக்குத் தான் பேசுவாள். அரை மணி நேரம் பேசுவோம். நான் அவளை ”பவி” என்று அழைப்பேன். அவள் என்னை ”மாது” என்று கூப்பிடுவாள். குறுகிய காலத்திலேயே நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டோம்.

அன்று அவளிடம் பேசும்போது அம்மா அன்று காலை என்னிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது. அது பற்றி அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு நிபந்தனை என்றேன். என்னது கல்யாணத்துக்கு முன்னயே ….” என்றாள்.

உன் அப்பா நம் குடும்ப விஷயத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்வார் என்பது என் அம்மாவின் அபிப்பிராயம். கல்யாணத்துக்கு அப்புறம் உன் அப்பா நம் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. எது செய்வதானாலும் என் அப்பா அம்மாவை கேட்டுக் கொண்டு செய்யலாம். இதற்கு நீ ஒப்புக் கொண்டால் நாங்கள் அடுத்த வாரம் ஈரோடு வருவோம்” என்றேன்.

அவள் ஒரு நிமிடம் மெளனமாக இருந்தாள்.

ஒப்புக் கொள்ளாவிட்டால்….

நாங்கள் வரமாட்டோம்.

சாரி மாது. என் அப்பாவிடம் நீங்க சொன்னதை சொல்ல முடியாது. நம்ம கல்யாணம் நடக்கவில்லையென்றாலும் பரவாயில்ல. உங்க நிபந்தனையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது”என்று சொல்லி விட்டு மொபைலை அணைத்து விட்டாள்.

நான் அதிர்ந்து போனேன். சோகம் என் நெஞ்சை என்னமோ செய்தது. ”கைக்கு வந்தது நழுவி விட்டது” என்று சொல்ல அம்மா இருக்கும் இடம் நோக்கி வருத்தத்துடன் சென்றேன்.

பவித்ரா

முதன் முதலாக மாதவனைப் பார்த்தபோதே மிகவும் பிடித்துப் போய் விட்டது. அழகா இருக்கார். இங்கிதத்தோடுப் பேசினார். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை. கை நிறையச் சம்பளம். கெட்ட பழக்கம் எதுவுமில்லை. நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லி விட்டேன்.

அன்று போன் செய்யும்போது ஒரு நிபந்தனை என்று மாதவன் சொன்னதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. என்ன நிபந்தனை என்று கேட்டேன். அவன் சொன்னது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை. என் மேல் என் அப்பாவுக்கு நிரம்பப் பாசம் உண்டு. அடிக்கடி போன் பண்ணி இதைச் செய் அதைச் செய் என்று அறிவுரை கொடுப்பார். என் அப்பா மேல் எனக்கு பாசம் உண்டு. அதனால் அவர் சொல்வதை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய குடும்ப விஷயத்தில் அப்பா தலையிடக் கூடாது என்று நான் அவரிடம் சொல்ல வேண்டுமாம் , மாது சொல்கிறான். அது எப்படி என்னால் முடியும். கல்யாணம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் சொல்ல மாட்டேன் என்று மறுத்து விட்டேன்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியலை. நாற்காலியில் உட்கார்ந்து மேசை மீதிருந்த டைரியில் ஏதோ எழுதினேன். கண்கள் கலங்க அப்படியே மேசை மீது சாய்ந்தேன். என்னை மறந்து உறங்கி விட்டேன்.

”பவி எழுந்திரு. மணி எட்டாகிறது” என் அம்மா எழுப்பிய உடன் எழுந்தேன்.

”சாரிம்மா என்னை அறியாமல் ரொம்ப நேரம் தூங்கி விட்டேன்.”

”ஏண்டி நேத்து ராத்திரி மாதவனிடம் பேசினாயா? அவர்கள் எப்போது வரப்போகிறார்கள்.”

”அவர்கள் வர மாட்டார்கள். எங்களுக்குள் பிரச்சனை. அவர் போட்ட நிபந்தனை எனக்கு உடன்படிக்கை இல்லை.. இந்த கல்யாணம் நடக்காது.

ஏண்டி அப்படி சொல்றே? அவர் என்ன நிபந்தனை போட்டார்?

நான் மெளனமாக இருந்தேன்.

”நீ டைரியில் எழுதியதை இரவு படித்தேன். . உடனே உன் அப்பாவிடம் கலந்தாலோசித்து விட்டு மாதவனிடம் பேசினேன். அப்பாவும் அவனுடன் பேசினார். அவனுடைய நிபந்தனைக்கு ஒத்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டோம்.. அவர்கள் நாளை வரப்போகிறார்கள். அந்த நிபந்தனையைப் பத்தி என் கிட்டே சொல்ல வேணாமா”? நீயே முடிவெடுத்தா எப்படி கல்யாணப் பெண்ணே?”

நான் குதூகலத்துடன் அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு சிரித்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *