தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,375 
 

தான் இருப்பது எந்த இடம் என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி ஜோடியாய் விளக்குகள் முளைத்தன. சுற்றிலும் பார்த்த அவன் பயத்தில் கத்தியே விட்டான். அவனைச் சுற்றி ஓணான்களின் கூட்டம்! எல்லாம் கண்களை உருட்டிச் சுழற்றி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துவிட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு மெல்லச் சிரித்தன. சசி எழுந்து ஓடிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவன் ஓணான்களை விடச் சின்னதாக, குட்டியூண்டாக மாறிவிட்டானே! அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.

ஓணான் கோட்டை

எப்படி இங்கே வந்தான்? பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் ரமேசும் அவனும் சேர்ந்து ஓணான் வேட்டைக்குப் போவார்கள். ஊருக்கு வெளியே உள்ள கருவேலஞ்செடிகளில் உட்கார்ந்து தேமேன்னு கண்களை முந்நூற்று அறுபது டிகிரியும் சுழற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஓணான்களை கல்லை விட்டு எறிந்து கொன்றுவிடுவார்கள்.

சில சமயங்களில் உயிருடன் இருந்தால் அதன் வாலில் சணலைக் கட்டி இழுத்து வருவார்கள். கல்லைக் குறிபார்த்து எறிவதில் ரமேசு கெட்டிக்காரன். ஓணானைக் கண்டுபிடித்துச் சொல்வதில் சசி கில்லாடி.

“ஏண்டா, அதைப் போட்டு வதைக்கிறீங்க?’

என்று யாராவது கேட்டால் வந்தவழியாகத் திரும்பி ஓடிப் போய்விடுவார்கள்.

இப்படித்தான் சசியும் ரமேசும் விடுமுறை நாள்களில் தங்களுடைய பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள்.

இன்று ரமேசு அவனுடைய அத்தை வீட்டுக்குப் போய்விட்டான். அதனால் சசி தனியாகக் கால்போன போக்கில் நடந்து, அவர்கள் எப்போதும் கூடுகின்ற அந்த கருவேலங்காட்டுக்கு வந்துவிட்டான்.

அங்கே ஒரு செடியில் ஒரு சில்லான் (சிறிய ஓணான்) நின்றுகொண்டிருந்தது. இவனைக் கண்டதும் அது இவனையே வைத்த கண் வாங்காமல் தனது பெரிய விழிகளை உருட்டிப் பார்த்துத் தலையசைத்துக் கொண்டிருந்தது. அது தலையசைப்பது, இவனை வா வாவென்று கூப்பிடுவது போல இருந்தது!

அவன் அதற்குப் பின்புறமாகப் போய், அதைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் பதுங்கிப் பதுங்கி நடந்து போனான். அப்போதுதான் அது நடந்தது…

காலுக்குக் கீழே உலகமே சரிவதைப் போல் இருந்தது சசிக்கு. அவ்வளவுதான் தெரியும் அவனுக்கு. அதற்குப் பிறகு –

“ஓணான் கோட்டைக்குத் தங்களை வரவேற்கிறோம்’

என்று கரகரப்பான ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தான். அங்கே செதில்கள் நிறைந்த மடிப்பு மடிப்பாய் சதை தொங்கிய ஒரு வயதான ஓணான் உட்கார்ந்திருந்தது!

நிமிடத்துக்கு ஒருமுறை அதன் நிறமும் மாறிக் கொண்டேயிருந்தது. இதைக் கவனித்த சசிக்கு திகிலாக இருந்தது. கைகாலெல்லாம் உதறல் எடுத்தது!

அந்த இருட்டு பழகுவதற்கு சிறிது நேரம் பிடித்தது. கண்கள் நன்றாகப் பார்க்கத் தொடங்கியவுடன், சுற்றுமுற்றும் கவனித்தான். ஒரு சில்லான் அவனைப் பார்த்துக் கையை நீட்டி,

“ஐயா, இவரும் இவருடைய நண்பரான ரமேசும் நம்முடைய இனத்தையே அழித்து விடப் போவதாகச் சபதம் செய்திருக்கிறார்கள் போலும்! நாம் இவர்களுக்கு எந்தத் தொந்தரவும் தந்தது கிடையாது… எந்த மனிதர்களுக்குமே நாம் தொந்தரவு தந்ததில்லையே… ஆனால் இவர்கள் வாரத்துக்கு ஒருமுறை நம்முடைய குடும்பத்தில் சிலரைப் பிடித்து சித்திரவதை செய்து கொன்று விடுகிறார்கள்… இப்போது இவன்தான் கிடைத்தான். ஆகவே இவனுக்கு நாம் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்…’ என்று கூறியது.

இதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த வயதான ஓணான் தனது தலையை ஆட்டியது.. அதன் முதுகில் இருந்த செதில்கள் சிலிர்த்தன. முகம் சிவந்தது.. எழுந்து நின்று கொண்டு உரத்த குரலில்,

“இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். நம் கூட்டத்தினருக்கு என்னென்ன கொடுமைகள் செய்தானோ, அதையெல்லாம் இவனுக்கு நாமும் செய்ய வேண்டும்..!’ என்று கரகரத்தது.

கோபத்தில் பேசியதால் அதன் குரல் சமயங்களில் கீச்சிட்டது. அது மிகவும் கொடூரமாக இருந்ததால் சசி பயந்து போனான்.

சசியும் ராமேசும் சேர்ந்து சணலை ஓணான்களின் வாலில் கட்டி இழுத்திருக்கிறார்கள். ரமேசு அவனுடைய தாத்தாவிடமிருந்து மூக்குப் பொடியைத் தூக்கிக் கொண்டு வருவான். அதை ஓணான் மூக்கில் தூவுவார்கள். காரம் தாங்காமல் அது துடிதுடித்துச் சுற்றிச் சுற்றி வருவதைக் கண்டு ரசித்திருக்கிறார்கள். கல்லைக் கொண்டு எறிந்து காயப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப் பலவிதமான சித்திரவதைகள்… அதெல்லாம் அப்போது விளையாட்டாகத் தெரிந்தது. அதோ கொடுமைகள் தனக்கும் நேர்ந்தால்… நினைக்கவே சசிக்குப் பயமாக இருந்தது…அய்யோ….

பயத்தில் அழுகை பொங்கி வந்தது. இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்று நடுங்கினான்.

வயதான அந்த ஓணான், மடிப்பு மடிப்பாகத் தனது தாடையில் தொங்கிக் கொண்டிருந்த சதையைத் தடவிக் கொண்டே யோசித்தது. அதன் வாயிலிருந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ என்று சசி பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.

நீண்ட நேரம் சென்றது.

“ஏன் தம்பி, அப்படிச் செய்தாய்?’ என்று மிகவும் பொறுமையாகக் கேட்டது அந்த வயதான ஓணான்.

சசியால் பதில் சொல்லவே முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தை வர மறுத்தது. சும்மா ஒரு விளையாட்டுதான் என்று சொல்ல மனம் வரவில்லை. அவனுக்கே தான் செய்த கொடுமைகள் புரிந்தது. என்ன சொல்லித் தப்பிக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தான். ஒன்றும் தோன்றவில்லை!

பயத்தில் இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டினான்.

வயதான ஓணான் மீண்டும் தனது கரகரத்த குரலில், “தம்பி… இந்த பூமியில் இறைவன் படைத்த எல்லா உயிர்களும் ஏதோ ஒரு வகையில் பூமியின் உயிர்ச் சங்கிலித் தொடருக்கு உதவி செய்பவைதான். எந்தச் சிறு உயிரும் இழிவானதோ, முக்கியத்துவம் இல்லாததோ கிடையாது. எப்போது இந்த உயிர்ச் சங்கிலித் தொடர் அறுந்து போகின்றதோ, அப்போது பெருங்குழப்பம் நேர்ந்து விடும் என்பது உனக்குத் தெரியுமா?’

சசிக்கு, அவனுடைய அறிவியல் ஆசிரியர் பேசுவது போலத் தோன்றியது.

“மனிதர்கள் மட்டும்தான் இந்த பூமியில் வாழவேண்டும் என்று நினைத்தால் அது முட்டாள்

தனம். நாங்கள் எறும்புகள், பூச்சிகள், கொசுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி உயிர்ச்சமநிலைக்கு உதவுகிறோம் என்பது உனக்குத் தெரியுமா?’

என்று அதட்டலாகக் கேட்டது அந்த வயதான ஓணான்.

சசி பயத்துடன் பள்ளிக்கூடத்தில் தலையாட்டுவது போலத் தனது தலையை ஆட்டினான். அவனுடைய பயந்த முகத்தைப் பார்த்த அந்த வயதான ஓணான், மென்மையான குரலில்,

“பயப்படாதே… சசி…நாங்கள் மனிதர்களைப் போல அவ்வளவு மோசமானவர்கள் அல்ல… உன்னை ஒன்றும் செய்யப் போவதில்லை… நீ எவ்வளவு நல்ல பையன் என்பதும் எங்களுக்குத் தெரியும்!’ என்றபடியே சசியின் தலையைத் தடவிக் கொடுத்தது.

சசி விம்மினான். அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது! அதைக் கண்ட ஓணான்கள் எல்லாம் சேர்ந்து,

“சசி… அழாதே… சியர் அப் பாய்…’ என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டு, அவனைச் சுற்றி ஆடிப்பாட ஆரம்பித்தன.

கோமாளித்தனமான அவற்றின் ஆட்டமும் நிறங்களை மாற்றி மாற்றி செய்த சேட்டைகளும் சசியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றின. அவன் முகத்தில் மகிழ்ச்சி பூத்தது. சிரிக்க ஆரம்பித்தான். சிரித்தான்… சிரித்தான் அப்படிச் சிரித்தான்.

கிச்சு கிச்சு மூட்டியது போல விழுந்து விழுந்து சிரித்தான்.

கண்களில் ஆனந்தக் கண்ணிர் வழிந்தோடியது. கண்ணீர் கண்களை மறைத்தது….

கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தபோது, ஒரு கருவேலஞ்செடியின் நிழலில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அருகில் ஒரு எறும்புப் புற்று இருந்தது. ஓணான்கள்..? அவற்றைக் காணவில்லை….

எறும்புப் புற்றிலிருந்து வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்த எறும்புகளைப் பார்த்து சந்தோஷத்துடன் டாட்டா காட்டினான். தெளிவான மனத்துடன் வீடு திரும்பினான்.

மறுநாள், ஊரிலிருந்து வந்த ரமேசு, ஓணான் அடிக்கப் போகலாம், வாடா என்று கூப்பிட்டபோது, சசி மறுத்து விட்டான். அதுமட்டுமில்லாமல் ரமேசையும் போகக்கூடாது என்று சொல்லி வேறு விளையாட்டு விளையாட கூட்டிப் போனான்.

ரமேசிடம் ஓணான் கோட்டையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை சசி. சொன்னால் மட்டும் ரமேசு இதையெல்லாம் நம்பவா போகிறான்?

– உதயசங்கர் (டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *