எதிர்நிழல்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2023
பார்வையிட்டோர்: 4,599 
 

Yeah, you got that yummy, yum

That yummy, yum

That yummy, yummy

ஃபோனை எடுத்தான்.

அம்மாதான்.

“என்னமா?”

“ராம்..கதவத் தொறடா..”

“ஏம்மா?”

“தொறக்கறியா இல்ல கடப்பார எடுத்தாந்து ஒடைக்கவா?”

அம்மா செய்யக்கூடியவர்.

திறந்தான்.

“ஏன்மா? நை… நைன்னுட்டு..?”

உதட்டில் விரல் வைத்தார்.

”வா”.

அப்பாவின் ரூம் வாசலுக்கு இழுத்துப் போனார்..

“என்னமா?”

”கேள்”

கதவின் மெலிய இடைவெளியில் அப்பாவின் குரல்.

“வாங்க மாயா சார்.”

“……”

அம்மாவிடம் ஜாடையில் கேட்டான்.

“கேள்.”

“எப்டி இருக்கீங்க மாயா சார்.”

“……”

”உங்க கதை எல்லாத்தையும் படிச்சுருக்கேன் சார்.”

“……”

”உங்க தொடர்கதை வந்த புக்கெல்லாத்தையும் பைண்டு பண்ணி வச்சிருக்கேன்.. இதோ இந்த அலமாரில தான்..”

“……”

”உங்களுக்கு மாசம் ஒரு லெட்டர் போடுவேன்.. நீங்க கூட ஒரு இண்டர்வ்யூல என் பேரச் சொன்னீங்க..”

“……”

“ராஜாஜி ஹால்ல உங்களுக்கு நடந்த பாராட்டு விழாவில உங்க கூட நின்னு ஒரு ஃபோட்டோ எடுத்துருக்கேன்.என் ஃபோன்ல இன்னும் இருக்கு.”

“……”

“என்னமா இது?”

“வா.. உன் ரூமுக்குப் போய் பேசலாம்.”

உள்ளே போனார்கள்.

அம்மா இவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

”கொஞ்ச நாளா உன் அப்பா இப்டிதான் தனியா பேசிட்டு இருக்கார்.”

“என் கிட்ட சொல்லலையே..”

“நீதான் எப்ப பாத்தாலும் ரூமப் பூட்டிக்கிட்டு உள்றயே இருக்கே. ஆபிசுக்கும் போறதில்ல.. ரூம்ல என்னதாண்டா பண்றே?”

“அத வுடு.. அப்பாக்கு என்ன? யார் அந்த மாயா?”

“அவர் பெரிய ரைட்டர்.. உன் அப்பாக்கு அவர ரொம்பப் பிடிக்கும். போன மாசம் அவர் செத்துப் போய்ட்டார்.. அதுலேர்ந்து இப்டி தனியா பேசிட்டு இருக்கார்.”

“ஓ.. மை காட்.. என்ன பண்றது?”

“உன் மாமாக்குத் தெரிஞ்ச சைக்கியாரிஸ்ட் இருக்காராம்.. நாளைக்கு அழச்சிட்டுப் போறியா ராம்?”

“நீ அழச்சிட்டுப் போம்மா.. மாமாவையும் அழச்சிக்கோ.”

அம்மா மெல்ல விசும்பினார்.

“சரி..சரி.. நான் போறேன்.”

அம்மா சிரித்தார்.

ராம் வேகமாகக் கதவைச் சாத்தினான்.

காலிங் பெல் மெதுவாக சப்தமிட்டது.

வெண்ணிற உடையாள் கண்களால் தேடினாள்.

”யார் இங்க பரசு?’

அப்பா எழுந்தார்.

“போய் டாக்டரைப் பாருங்க..நீங்க யார் சார்?”

“நான் இவரோடப் பையன்.”

“நீங்க வெளில இருங்க.”

“நானும் போகணுமே..”

“இருங்க.. டாக்டரேக் கூப்பிடுவார்.”

அப்பா உள்ளே போனார்.

டாக்டர் புன்னகைத்தார்.

“உட்காருங்க பரசு சார்… உங்க மைத்துனர் எல்லாம் சொன்னார்.. என்ன பிரச்னை?”

“ஒரு மாசமா பையன் ஆபிஸ் போகலை.. ரூமுக்குள்றவே இருக்கான்.. எப்பவும் பேசிட்டு இருக்கான்.. யாரோ எதிர்ல இருக்கற மாதிரி பேசறான்..”

“என்ன பேசறார்.”

“மாயா….மாயான்னு பேர் சொல்லி பேசறான்..”

“சரி… அவர் எப்படி இங்க வர சம்மதிச்சார்.?”

“நான் தனியா பேசற மாதிரி நடிச்சேன்.. அவனோட அம்மாவும் ஒத்துழைச்சாங்க. என் ட்ரிட்மெண்டுக்ககுன்னு நெனச்சுதான் வந்திருக்கான்.”

“சரி அவரை வரச் சொல்லுங்க.. நீங்க வெளில இருங்க.”

“என்னபா?”

ராம் கேட்டான்.

“உன்ன வரச் சொல்றார்.”

“என்?”

“உன் கிட்ட ஏதோ பேசணுமாம்.”

“வாங்க ராம்.”

“அப்பாக்கு என்ன?”

“நீங்க தான் சொல்லணும்.. தனியா பேசிட்டே இருக்கார்.”

“என்ன பேசறார்.”

“யாரோ மாயாவாம்.. ரைட்டராம்.. என்னமோ சொல்றார்.. ஒண்ணும் புரில..”

“அவர் வேற சொல்றார்.”

“என்ன?”

“உங்களப் பத்தி தான்.”

“என்ன?”

“இங்க வந்து ரிலாக்ஸ்டா உக்காருங்க..”

“ஏன்?”

“வாங்க சொல்றேன்.”

ராம் தயக்கமாக உட்கார்ந்தான்.

“சில கேள்விகள் இருக்கு.. கரெக்டா பதில் சொல்லுங்க ராம்.“மெஸ்மரிசம் பத்திக் கேள்வி பட்டுருக்கீங்களா?”

”ம்”

“ஆனா உங்க அப்பா பயப்படறார். நீங்க சொன்னாக் கேப்பார்னு நெனக்கிறேன்.”

”எனக்கும் இதப் பத்தித் தெரியாதே..”

“தெரிஞ்சுக்கோங்க.”

தயக்கமாய்த் தலையசைத்தான்.

சரியாக முப்பது நிமிடங்கள்.

வெளியே வந்தான்.

“என்ன ராம்.” அப்பா கேட்டார்.

குழப்பமாய் அவரைப் பார்த்தான்.

“இரு வர்றேன்.” உள்ளே போனார்.

“என்ன சொல்றான் டாக்டர்?”

“காதல்.. மாயான்னு பேர் சொல்றான்..அந்த பெண் சூசைட் பண்ணிட்டாளாம்”.

“என்னது?..ஏன்?”

“அவன் ஆபிஸ்ல ஒர்க் பண்ணாளாம்.. இவனும் ஓகே சொல்லிட்டானாம்..

ஆனா அவ அப்பா ஒத்துகலையாம்.. ஏதோ அசிங்கமாப் பேசிருக்கார்.. அன்னைக்கு நைட் தொங்கிட்டா.”

கடவுளே.

“என்ன பண்றது?”

“பாப்போம்.. ரெண்டு கவுன்சலிங் வைப்போம்… அவர் ஆபிஸ்ல விசாரிங்க.”

“மெடிசின்?”

“இப்ப ஒத்துக்க மாட்டார்.. என்கிட்ட என்ன சொன்னார்னு அவருக்கு ஞாபகம் இருக்காது…ஒரு வாரம் கழிச்சு வாங்க.”

வாசலிலே அம்மா நின்று கொண்டிருந்தார்.

“என்ன?”

”வா.. உள்ற போகலாம்.”

ராம் அறைக்குள் சென்றான்.

அம்மா பின் தொடர்ந்தார்.

“ராம்.. டாக்டர் என்ன சொன்னார்”

மெல்லிய குரலில் கேட்டார்.

“நைட் ஒரு மாத்திரைக் கொடுத்துருக்கார்.”

“ஒண்ணுதானே?”

“தூக்க மாத்திரைன்னு நினைக்கிறேன்.. அடுத்த வாரம் வரச் சொல்லிருக்கார். பாவம் அப்பா.. டல்லாருக்கார். போய் பாரு.”

பரசு யோசனையிலிருந்தார்.

“என்ன சொன்னார்?”

“நாம நெனச்சது சரிதான் ராதா.. மாயா அவனோட வேலப் பாத்த பொண்ணு. ரெண்டு பேரும் லவ் பண்ணிருக்காங்க.. அவ அப்பா ஒத்துகலையாம்.. சூசைட்..”

“கடவுளே.. நம்பகிட்ட கூட அவன் சொல்லலை.”

“தெரில.. அவன் ஆபிஸ்ல விபரம் கேக்கச் சொல்லிருக்கார்.”

“உங்க ஃபிரெண்டு சிவா அங்கதானே இருக்கார்..“உடனே பேசுங்க. ஸ்பீக்கர்ல போடுங்க”

சிவா ஃபோனை எடுத்தார்.

“பரசு.. நானே ஃபோன் பண்ணனும்னு இருந்தேன்.. ராம் ஏன் ஒரு மாசாமா வேலைக்கு வரலை. நான் இருபது நாள் லீவ். இன்னக்குத் தான் ஜாய்ன் பண்ணினேன்.”

“நானும் அதுக்குத்தான் பேசறேன்.. நீயும் சொல்லாமா விட்டுட்டியே சிவா?”

“என்ன சொல்றே?”

“உங்க ஆபிஸ் மாயாவை ராம் லவ் பண்ணிருக்கான்.”

“வெய்ட்.. வெய்ட்.. மாயாவா?”

“ஆமாம்..அவ அப்பா ஒத்துகலையாம். அதான் சூசைட் பண்ணிட்டாளாம்.”.

“டேய் என்ன உளர்றே? இதல்லாம் வெறும் கற்பனை.”

”ஏன் மாயான்னு ஒருத்தி உங்க ஆபிஸ்ல இல்லேன்னு சொல்லப் போறியா?”

”இருந்தா.”

“அதான்.”

“ஆனா.. அவ செத்ததுக்கு அப்றம் தான் சிவா இங்க ஜாய்ன் பண்ணினான்.”

”என்ன சொல்றே?”

“அவ சீட் வேகன்ஸில தான் நான் சிவாவைச் சேத்து உட்டேன்.”

“அப்ப காதல்.. சூசைட் எல்லாம்?”

“அதெல்லாம் உண்மை தான். மாயாவுக்கு மைக்கேலோட காதல்.. கிறிஸ்டியன்கிறதால அவ அப்பா ஒத்துக்கலை.. ஆனா ராம்.. நோ சான்ஸ்.. “

“யாராவது சொல்லிருப்பாங்களா?”

“இருக்கலாம். என்ன பிரச்னை?”

”அப்றம் சொல்றேன்”.

ஃபோனை வைத்தார்.

”என்னங்க இது புதுசா இருக்கு,”

”புரியலை.”

ராதா ஏதோ சப்தம் கேட்டு விழித்தாள்.

யாரோ பேசும் சப்தம்.

பக்கத்தில் பார்த்தாள்.

பரசுவைக் காணவில்லை.

எழுந்து வெளியே வந்தாள்.

ஹாலில் பரசு இவளுக்கு முதுகு காட்டி உட்கார்ந்திருந்தார்.

அவர் குரல் தான்.

“ப்ளீஸ் மாயா..நான் கிறிஸ்டியன் தான்.. உன் அப்பா ஒத்துக்குவார்.. அவர்கிட்ட பேசு மாயா.. சூசைட் பண்ணிக்குவேன்னு பயமுறுத்தாதே மாயா..”

எதிரில் திரைச்சீலை மெதுவாக அசைந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

3 thoughts on “எதிர்நிழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *