கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2023
பார்வையிட்டோர்: 2,364 
 
 

அடுக்களை வேலைகளை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்த ராஜி, கணவர் எதிரில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“ஆமாம், கேட்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஏன் உங்க முகம் ரெண்டு நாளா சுரத்தில்லாமல் இருக்கு?”

கேள்வி கேட்ட மனைவியை ஒரு மாதிரியாகப் பார்த்த சுந்தரம் , “நம்ம பொண்ணு லலிதா பற்றிதான் ராஜி…” என்றார்.

“அவளுக்கென்ன..நல்லா படிக்க வெச்சிங்க. நல்ல இடத்தில கல்யாணமும் ஆகி ஓஹோன்னு இருக்கா. அவளைப் பற்றி என்ன கவலை?”

“ராஜி, புகுந்தாத்தில அவ தன்னோட மாமனார், மாமியாரை எப்படி கூப்பிடறா?”

“இது என்னன்னா கேள்வி? நம்ம வர்க்கத்தில் மாமனாரை அப்பான்னும், மாமியாரை அம்மான்னும் கூப்பிடறது வழி வழியாக வரும் வழக்கம்தானே! அப்படித்தான் நம்ம லலிதாவும் கூப்பிடறா. ஏன் நான் கூட உங்க அப்பா அம்மா வை கடைசிவரை அப்படித் தானே கூட்டுண்டிருந்தேன்!!”

“ம், சரி. உங்கம்மாவை நீ எப்படி கூப்பிடறே?”

“அம்மான்னுதான் கூப்பிடறேன் …” சட்டென ஏதோ ஒன்று புரிகிறார்போல் இருந்தது ராஜிக்கு.

“ஆனா உம் பொண்ணு இன்னும் உன்னை பேர் சொல்லி ‘ராஜின்னு’ தானே கூப்பிடறா! அம்மான்னு கூப்பிடறதில்லையே!“

ராஜி திடுக்கிட்டாள்.சின்ன வயதில் தன் கணவர் தன்னை ‘ராஜி’ என அழைப்பதை கவனித்த லலிதா அதே மாதிரி மழலை மொழியில் ‘ஆஜி’ என கூப்பிட அகமகிழ்ந்து போய் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு மெய் மறந்தாள் ராஜி.

“கண்ணு, நீ அப்படியே கூப்பிடும்மா! அதான் அம்மாவுக்குப் பிடிக்கிறது.”

ராஜி தீர்த்துச் சொல்லிவிட அதை அப்படியே பிடித்துக் கொண்டாள் லலிதா.

வளர்ந்து பெரியவளானதும் அம்மா வை பெயர் சொல்லி அழைப்பதையே வழக்கமாகக் கொண்டாள் லலிதா. ஏனோ அது பிடித்திருந்தது ராஜிக்கு.

ஆனால், இப்போது கணவர் சுட்டிக் காட்டும் பட்சத்தில் பெற்றவளை பெயர் சொல்லி அழைப்பது முறையாகுமா என பட்டது ராஜிக்கு.

சுந்தரம் தொடர்ந்தார். “ராஜி, கல்யாணமாவதற்கு முன்னாடி லலிதா எப்படி வேணுமானாலும் உன்னைக் கூட்டிருக்கலாம். ஆனால் இப்போது கல்யாணமாகி விட்டது. ஒரு வேளை தன் மாமியார் எதிரில் உன்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டால் அவா என்ன நினைப்பா? மரியாதை இல்லாமல் நடந்துக்கறகாகத்தான் கண்டிப்பாக ஃபீல் பண்ணுவா. அதோட பெண்ணை வளர்த்த லட்சணம் இதுதானான்னு நம்மளப் பத்தி தவறா நினைக்க மாட்டாளா?”

கணவர் கூறுவது நூறு சதவிகிதம் சரி என பட்டது. ஆனாலும் இதை எப்படி மகளிடம் சொல்வது என்ற கவலை தோன்றியது ராஜிக்கு.

லைப்ரரிக்கு புத்தகம் வாங்குவதற்காக அந்தப் பக்கம் தனியாக தன் டூ வீலரில் வந்திருந்தாள் லலிதா. அப்படியே தன் பெற்றோரைப் பார்த்து விட்டுச் செல்லலாம் என எண்ணி வீட்டுக்குள் நுழைய முற்பட்டவள், உரையாடல் தன்னைப் பற்றி இருக்கவே அப்படியே நின்றபடி கேட்டாள்.

கேட்டவளுக்குள் ஒரு ரசாயன மாற்றமே நிகழ்ந்தது. சுதாரித்துக் கொண்டு

உள்ளே நுழைந்த லலிதா , “அம்மா, அப்பா எப்படியிருக்கீங்க?” என சிரித்தபடி கேட்க, சுந்தரமும் ராஜியும் ஒருவரையொருவர் சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டனர்.

Print Friendly, PDF & Email

1 thought on “அம்மா!

  1. ‘அம்மா ‘ என்கிற என் சிறுகதையை சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டு
    என்னை ஒரு எழுத்தாளராக அங்கீகாரம் செய்த ஆசிரியர் குழுவிற்கு கோடானு
    கோடி நன்றிகள்.

    வி.கே.லக்ஷ்மிநாராயணன்
    போருர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *