நெஞ்சமடி நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2023
பார்வையிட்டோர்: 4,915 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30

அத்தியாயம்-25

அதே ஹோட்டல்… அதே மதிய உணவு நேரம்… அதே ஏஸி ஹால்… அதே அலுவலகப் பணியாளர்கள்… ஜவஹர் தன் காதலில் வென்று விட்டதற்காக அலுவலகத்தாருக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தான். 

“ஏம்ப்பா ஜவஹர் கல்யாணச் சாப்பாடுதான் போடப் போகிறாயே… அப்புறமும் எதுக்கு ஹோட்டலில் சாப்பாடு..” 

“அது கல்யாண விருந்து சார்… இது காதலில் நான் ஜெயித்ததைக் கொண்டாட நான் கொடுக்கும் விருந்து..” 

“உனக்கென்னப்பா குறைச்சல்? நேர்மையான நட வடிக்கை.. நிறைவான வேலை.. நல்ல படிப்பு… உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ப்ரீதி கொடுத்து வைத்திருக்க வேண்டுமே…” 

“என்ன சார் ஜவஹர் சாரை மட்டும் உயர்த்திப் பேசுகிறீர்கள்? ப்ரீதிக்கு மட்டும் என்ன குறைச்சலாம்…அவளது அழகு.. அறிவு.. படிப்பு.. வேலைக்கு… மும்பையிலிருந்து அவளைக் கல்யாணம் பண்ணிக்க மாப்பிள்ளை பறந்து வருவதாய் இருந்தார். ப்ரீதிதான்.. ஜவஹர் சார் மேல் இரக்கப்பட்டு போனால் போகுதுன்னு மும்பை வாழ்க்கையை தியாகம் பண்ணிவிட்டு ஜவஹர் சாரின் கை பிடிக்கப் போகிறாள்..” 

“ப்ரீதியைச் சொன்னதும் ரூபிணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வருவதைப் பாரேன். கேட்டாயா ஜவஹர். ப்ரீதி போனால் போகுதுன்னு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறதாம்…” 

“யாரு.. இவளா என்னைப் போனால் போகுதுன்னு கல்யாணம் பண்ணிக்கப் போகிறாள்..? உங்களுக்குத் தெரியாது சார்… அம்மணிக்கு ஒரு நாள் என்னைப் பார்க்க வில்லையென்றாலும் வேலையே ஓடாதாம். சபாபதியிடம் ஏன் நான் வரவில்லை… எனக்குத் தலைவலியா.. இல்லை காய்ச்சலா.. வீட்டில் வேலையென்றால் என்ன வேலைன்னு கேட்டு உயிரை எடுத்துவிடுவாளாம்… இதற்காகவே… தலை போகிற அவசரம் என்றாலும் நான் லீவ் எடுப்பதில்லை. எப்போது இவள் லீவ் போடுகிறாளோ..இப்போதுதான் நானும் போடுவேன்…” 

ஜவஹர் ப்ரீதியைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரிக்க ப்ரீதி சபாபதியை முறைத்தாள். 

”சபாபதி.. நீ இவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகியா?” 

“என்ன மேடம் இப்படிச் சொல்கிறீர்கள்.. எனக்கு லேடிஸ் சைக்காலஜி கொஞ்சம் தெரியும் மேடம்… அதனால்தான் ஜவஹர் சாரின் காதல் ஜெயிக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன்…” 

“என்ன சைக்காலஜியைச் சொல்லப் போகிறாய் சபாபதி.. பெண்கள் வேண்டும் என்றால் வேண்டாம் என்று அர்த்தம்.. வேண்டாமென்றால் வேண்டும் என்று அர்த்தம்… அதுதானே.” 

ரூபிணி கேட்டாள். சபாபதி அதிசயப்பட்டான். 

“எப்படி மேடம்… இவ்வளவு கரெக்டாக சொல்கிறீர்கள்?” 

“இது ஒரு பிரம்ம ரகசியமா? எல்லோரும் வாயைத் திறந்தால் பெண்களின் மனோபாவத்தைத்தான் பிட்டுப் பிட்டு வைக்கிறீர்களே… ஆமாம் சபாபதி… பெண்களைப் பற்றி மட்டும்தான் சைக்காலஜியில் சொல்லப்பட்டிருக்கிறதா? ஆண்களைப் பற்றிச் சொல்லவே இல்லையா..?” 

“நான் இந்தச் சண்டைக்கே வரவில்லை மேடம்… எப்படியோ நம் ஆபிஸில் ஒரு காதல் கதை ஆரம்பித்து கல்யாணத்தில் முடிந்துவிட்டது.. ஆனால் எனக்குத் தான் இதில் ஒரு வருத்தம்” 

“அடப்பாவி சபாபதி.. உன்னைத் தினமும் தனியாய் கவனித்து…. அப்பப்போ சிறப்பாய் கவனித்து வந்தேனே… அந்தக் கவனிப்பு நின்று விடும் என்ற பயமா?” 

“அந்தக் கவலையெல்லாம் இல்லை ஜவஹர் சார். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை.. காலம் முழுவதும் என்னைக் கவனிக்காமல் விட்டுவிடமாட்டீர்கள்.. எனக்கு என்ன வருத்தம்ன்னா இனிமேல் ப்ரீதி மேடத்தின் டிரஸ் கலரைப் பார்த்து தினமும் நீங்கள் பாடும் சிச்சுவேசன் சாங்கை கேட்கவே முடியாதே… அதுதான்…” 

சபாபதி சோகமாய் முகத்தை வைத்துக் கொள்ள ப்ரீதி வெட்கத்துடன் முகம் கவிழ்ந்தாள். ஜவஹர் அவளை ஆசையுடன் பார்த்தான். 

அவர்களது உற்சாகத்தை வயிற்றெரிச்சலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இந்த ஜவஹருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? அவனும்தான் அந்த ஆபிஸிற்கு மாற்றலாகி வந்த முதல் நாளே ப்ரீதிக்கு நூல் விட்டுப் பார்த்தான். ஜவஹர் நேரடியாகவே எச்சரித்து விட்டான். 

“பாரு மூர்த்தி.. உன் விளையாட்டையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்.. அவள் என் காதலி.. மீறி வாலை ஆட்டினால் உன் எலும்பை எண்ணி விடுவேன்.. ஜாக்கிரதை…” 

எந்த நேரத்தில் அவன் அந்த வார்த்தைகளைச் சொன்னானோ… உண்மையிலேயே ஹரிஹரனின் ஆள்கள் மூர்த்தியின் எலும்பை எண்ணிவிட்டார்கள். 

அன்று இதே ஹோட்டலில் அடிவாங்கிய மூர்த்திக்கு இன்றும் அந்த அடியின் வலி நினைவில் நிற்கிறது. அவனது டேபிளின் அருகே வந்து உணவுத் தட்டை வைத்த சர்வர், 

“நீங்களா சார்… இப்போ உடம்பு எப்படியிருக்கிறது.. தேறிவிட்டிங்களா?” என்று விசாரித்து வைத்தான். 

அன்று ஹரிஹரனின் பி.ஏ. அழைத்தாகக் கூறி அழைத்துச் சென்ற அதே சர்வர்… அத்தோடு நில்லாமல் அங்கிருந்த இன்னொரு சர்வரிடமும் மூர்த்தியைக் காட்டி விவரம் சொல்லி வைத்தான். மூர்த்தியின் உடல் குப்பென்று வியர்த்தது. 

கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு ஜவஹர் பக்கம் பார்த்தான். அதே நேரம் ரூபிணியுடன் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்த ஜவஹர் மூர்த்தியைப் பார்த்தான். 

‘என்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறார்கள்..’ மூர்த்தியின் மனதில் துவேசம் பொங்கியது. 

நளினமாய் வாய் பொத்தி சிரித்துக் கொண்டிருந்த ரூபிணியைப் பார்த்தவனின் நெஞ்சம் கொதித்தது. எப்பேர்ப்பட்ட பேரழகி. இவளை அடைய அவனுக்கு கொடுத்து வைக்கவில்லையே. அவளை பார்க்கக் கூடப் பயப்படும்படி ஹரிஹரன் செய்து விட்டானே… ஹரிஹரனின் காதலி இவள் என்று ஆகிவிட்ட பின் அவளது நிழலைப் பார்ப்பது கூட ஆபத்தானது என்று ஆகிப் போனது. 

மூர்த்திக்கு அங்கு அமர்ந்திருக்கவே பிடிக்கவில்லை. சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணி விட்டு மற்றவர்களுக்கு முன்னால் அவன் கிளம்பி விட, 

“ஏன் மூர்த்தி.. பாதிச் சாப்பாட்டில் கிளம்புகிறாய்? போன தடவை இதே ஹோட்டலில் விருந்து நடந்த போதும் பாதி விருந்தில் கிளம்பிவிட்டாய்.. இன்றும் அதே போல் கிளம்புகிறாய்.. இந்த ஹோட்டலுக்கும் உனக்கும் ராசி இல்லையோ..” என்று அக்கறையாய் வினவுவது போல் ஜவஹர் வினவினான். 

ரூபிணி ‘களுக்’கென்று வாய் பொத்திச் சிரித்துவிட்டாள். மூர்த்தியின் விழிகள் கோபத்தில் சிவந்தன. அவளை முறைத்தான். 

‘உன் கோபம் என்னை என்ன செய்து விடும்?’ என்ற அலட்சியத்துடன் அவனைப் பார்த்தாள் அவள். 

அதுதான் அவளுக்கு வினையாக அமைந்து விட்டது. நல்லவனை நேரடியாய் எதிர்க்கலாம். அயோக்கியனை நேரடியாய் எதிர்க்க முனையலாமா? 

‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’. 

பெரியவர்கள் அனுபவஸ்தர்கள். சும்மா எதையும் சொல்லி வைக்கவில்லை. ‘ஒல்டு இஸ் கோல்டு’ என்பார்கள்.. அது உண்மைதான். பழமொழிகள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கைக்கு பாடம் சொல்பவை.. வழிகாட்டுபவை.. நாம் தான் அதைப் புரிந்து கொள்வதில்லை. 

ரூபிணி இக்காலத்துப் பெண். பழமொழியை விட பாரதியாரை நேசிப்பவள்.. ஹரிஹரனைக் காதலிப்பவள். 

‘பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ 
பயம் கொள்ளலாகாது பாப்பா… மோதி மிதித்து விடு பாப்பா – அவர் 
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா…’

பாரதியார் இந்த வார்த்தைகளையெல்லாம் பையனிடம் சொல்லியிருக்கலாம்.. பெண்ணைப் பெற்ற மனிதர்.. பாப்பாவிடம் சொல்லிவிட்டார்… இது ஆண்களின் உலகம் என்பதை பெண் விடுதலைக்கு பாடுபட்ட அந்த மகாகவி உணராமல் போனார். 

அத்தியாயம்-26

மூர்த்தி முட்டாள் அல்ல. விழுப்புரத்தில் ரூபிணி யின் நிழலைத் தொட்டாலும் தன் தலை தன் உடலில் நிலைக்காது என்பதை நன்கு உணர்ந்தவன். ஹரிஹரன் ஓர் வேட்டையாடும் வேங்கை என்பதை நன்கு அறிந்தவன். முகம் காட்டி சண்டையிடுவது வீரர்களின் யுத்தம். முகம் மறைத்து இன்னல் விளைவிப்பது கோழை களின் துரோகம்.. மூர்த்தி வீரனல்ல… கோழை. 

எனவே அவன் ஒரு மொட்டைக் கடிதத்தை ரூபிணியின் பெற்றோருக்கு அனுப்பினான். 

கவனமாக டைப் செய்யப்பட்டு தன் முன்னால் இருந்த அந்தக் கடிதத்தை நூறாவது முறையாக எடுத்துப் படித்தார் ரெங்கநாதன். அன்று காலையில் அவர் பேங்கிற்கு வந்து அமர்ந்ததும், 

“சார்.. உங்களுக்கு ஒரு ஸ்பீடு போஸ்ட்..” என்றபடி போஸ்ட்மேன் வந்தார். 

கையெழுத்துப் போட்டு வாங்கின ரெங்கநாதன் தன் முகவரி டைப் அடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் யார் அனுப்பியது என்று பார்த்தார்.. நல்லான், தூத்துக் குடி என்றிருந்தது. 

மூர்த்திதான் தன் கையெழுத்தை கவனமாய் தவிர்த்து டைப் செய்து தூத்துக்குடிக்கு போயிருந்தபோது அங்கேயிருந்த போஸ்ட் ஆபிஸில் ஸ்பீடு போஸ்டில் அனுப்பிவிட்டு வந்து விட்டானே… 

ரெங்கநாதன் சாதாரணமான மனநிலையுடன் தான் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். டைப் செய்யப்பட்டிருந்த கடித வரிகளில் அவரது பார்வை ஓட ஆரம் பிக்க… அவரது இதயம் துடிக்க ஆரம்பித்தது. 

‘ஹலோ மிஸ்டர் ரெங்கநாதன்! 

நலமா? யார் நலம் விசாரிக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா… எல்லாம் உங்கள் நலம் விரும்பி தான் நலம் விசாரிக்கிறேன். எப்படியிருக்கிறீர்கள்? 

உங்களுக்கென்ன சார்.. விழுப்புரம் தொலைத்தூரத் தில் இருக்கிறது. கோவில்பட்டியில் இருக்கும் உங்களுக்கு விழுப்புரத்தில் நடக்கும் கதை தெரியாமல் நிம்மதியாக உண்டு, உறங்கி, எழுவீர்கள். இங்கே உங்கள் மகள் ரூபிணி இந்த ஊரே மிரளும் தாதாவிடம் உறவாடிக் கொண்டிருப்பாள்.. மிஸ்டர் ரெங்கநாதன்… அந்த ஹரிஹரனின் கண் முன்னால் அவனது பெற்றவர்களை ஒரு ரௌடி கொன்றுவிட்டான்.. இவன் பதிலுக்குப் பதில் அந்த ரௌடியை அதே இடத்தில் வெட்டிக் கொன்று பழிக்கும் பழி வாங்கினான். எவரேனும் அவனுக்கு எதிராய் ஓர் பார்வை பார்த்துவிட்டாலே பூண்டோடு அழித்து விடுவான். அப்படிப்பட்ட பயங்கரவாதியின் பள்ளியறைப் பாவையாய் உங்கள் மகள் வாழ ஆசைப்படுகிறாள். நீங்கள் தெருமுனையில் சத்தம் கேட்டால் ஜன்னல் கதவுகளைக் கூட இறுக மூடிக் கொண்டு வாழும் மிடில் கிளாஸ் பயந்த மனிதர். உங்கள் மகளுக்கு கத்தி… துப்பாக்கி.. வெடிகுண்டுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதனையா மாப்பிள்ளையாய் பார்ப்பீர்கள்? இந்த விழுப்புரத்திற்கு வந்து கேட்டுப் பாருங்கள்.. உங்கள் மகள் ஹரிஹரனின் காதலி என்று இந்த ஊரே சொல்லும்.. மனச்சாட்சிக்கு அஞ்சி வாழும் உங்கள் மகளை ஒரு பயங்கரவாதியின் கையில் ஒப்படைக்கப் போகிறீர்களா.. யோசியுங்கள். 

உங்கள் நலம் விரும்பி’. 

ரெங்கநாதனுக்கு நெஞ்சு வலிப்பது போல் இருந்தது. செல்போனை எடுத்து மனைவியை அழைத்தார். 

“என்னங்க… இப்போதுதானே வேலைக்குப் போனீர்கள் அதற்குள் அவசரமாய் கூப்பிடுகிறீர்களே..” என்றாள் 

அதே ஊரில் வேறு ஒரு பேங்கில் வேலை பார்க்கும் வீரலட்சுமி. 

“லட்சுமி..உடனே லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு வாடி.” 

“ஏங்க.. உடம்பு சரியில்லையா… “

“எதுவுமே சரியில்லைடி… கேள்வி கேட்காமல் கிளம்பி வா… நானும் லீவ் சொல்லி விட்டு வருகிறேன்…” 

அவசரமாய் எழுந்த வீரலட்சுமி பேங்க் மேனேஜரிடம் லீவு சொல்லிவிட்டு அவரின் அர்ச்சனைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு பேங்கை விட்டு வெளியே வந்தாள். 

“ஏம்மா.. லீவு வேண்டுமென்றால் நேற்று ஈவினிங்கே சொல்ல வேண்டியதுதானே… காலையில் வந்தவுடன் சொன்னால் உங்கள் சீட்டிற்கு வேறு யாரை அரேன்ஜ் பண்ணுவது?” 

“அர்ஜன்ட் சார்.. ப்ளீஸ்.” 

“என்னவோ செய்ங்க… அதுதான் வி.ஆர்.எஸ். ஸ்கீம் வந்து விட்டதே. பேசாமல் வி.ஆர்.எஸ். கொடுத்து விட்டுப் போக வேண்டியதுதானே. ஏன் வேலைக்கு வந்து என் உயிரை வாங்குகிறீர்கள்… “

வீரலட்சுமி எரிச்சலுடன் மணி பார்த்தாள். 

‘இந்த மனுசன் பண்ணிய அளும்பால் காலையில் வந்தவுடன் மேனேஜரிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கிறது. எல்லாம் என் நேரம்.’ 

ரெங்கநாதன் தன் ஹீரோ ஹோண்டாவை அவளருகில் நிறுத்தி, 

“ஏறு…” என்றார். 

“என்ன விசயம்..?” 

“ரோட்டில் சொல்ல முடியாத விஷயம்.” 

வீரலட்சுமி வாயை மூடிக் கொண்டு வண்டியில் ஏறினாள். வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்தி தாழிடும் வரை ரெங்கநாதன் எதுவுமே பேசவில்லை. 

“உஷ் அப்பாடா… “என்றபடி பேனின் சுவிட்சைத் தட்டிவிட்டு சோபாவில் சரிந்த வீரலட்சுமி. 

”என்னன்னு சொல்லுங்களேன்.” என்றாள்.

“சொல்லாவிட்டால் என்ன.. படித்துத் தெரிந்துகொள்.” ரெங்கநாதன் அவள் முன்னால் கவரைத் தூக்கி எறிந்தார். 

“ஏன் இப்படி போடுறீங்க?” 

“உன் மகள் செய்திருக்கும் வேலைக்கு வேறு என்ன செய்வது?” 

“என் மகளா… உங்கள் மகளில்லையா?” 

“பேசாதேடி… மூன்றைப் பெற்றோம். மூத்ததும், கடைசியும் ஒழுங்காய் நம் பேரைக் காப்பாத்துகிறதுகள். இரண்டாவதா ஒன்னு வந்து பிறந்திருக்கே… நம்மை உயிரோடு கொன்று விடுவாள் போல இருக்குடி வீர லட்சுமி.” 

“யாரு.. நம்ம ரூபிணியா..? அவள் தங்கம்ங்க.” 

“அதனால்தான் அவளை ஒரு தாதா கடத்தப் பார்க்கிறான்.” 

“என்னங்க நீங்க என்னென்னவோ சொல்கிறீர்கள்.. எனக்குப் பயமாய் இருக்குதுங்க… “

“முதலில் அந்த லெட்டரைப் படி.” 

வீரலட்சுமியின் முகம் பயத்தால் வெளுத்திருந்தது. பதட்டத்துடன் லெட்டரைப் பிரித்துப் படித்தாள். 

“ஏங்க இது மொட்டைக் கடிதாசி..”. 

“ஆனால் அதில் இருக்கும் விவரம் உண்மை.”

“எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்…” 

“ஹரிஹரனைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இவன் மறைமுகமாய் பெயரைக் குறிப்பிடாமல் நேரடியாய் ஹரிஹரனைக் குற்றம் சொல்கிறான். விழுப்புரத்திற்கு வந்து கேட்டுப் பார் என்கிறான்.” 

“இப்போது என்ன செய்வது…?” 

“இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.” 

“என்ன..” 

“என் அக்கா மகனுக்கு ரூபிணியை கட்டிக் கொடுத்து விடலாம்.” 

“அவனுக்கா…? அவனைத்தான் வேண்டாமென்று ரூபிணி சொல்லி விட்டாளே. நமக்கும் அவனைப் பிடிக்காதே…” 

“ஏன்.. அவனுக்கென்னடி குறைச்சல்? படித்திருக்கிறான். தாலுகா ஆபிஸில் வேலை பார்க்கிறான். என் அக்காவும் ரொம்ப நாளாய் பெண் கேட்குது…” 

”ஏங்க… அவன் குடியும். கூத்தியுமாய் அலைகிறானே. அவனுக்கா நம் பெண்ணைக் கொடுப்பது?” 

“வேறு வழி…? பயங்கரவாதிக்கு பொறுக்கி பெட்டரில்லையா?” 

வீரலட்சுமி விக்கித்துப் போய் நின்று விட்டாள். 

அத்தியாயம்-27

“கிளியை வளர்த்து பூனையிடம் கொடுப்பதா?”

“புலி கையில் கொடுப்பதற்கு பூனை கையில் கொடுப்பது பெட்டர்டி.” 

“கல்யாணம் பண்ணிக்காமலே குடும்பம் நடத்துகிறவனுக்கு பெண்டாட்டி எதற்கு?” 

“இத்தனைக்கும் பின்னால் நம் பெண்ணை யார் கட்டுவார்கள்.” 

“அதற்கு அவளுக்குக் கல்யாணம் என்ற ஒன்றையே பண்ணாமல் விட்டு விடலாமே.” 

“விட்டால் அவளைப் பிடிக்க முடியாது போல இருக்கேடி…” 

“அதுக்காக அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம். இப்போதைக்கு அவளை உடனே கிளம்பி வரச் சொல்லுங்க. வந்தவுடன் லீவை எக்ஸ்டென்சன் பண்ணச் சொல்லலாம். நமக்குத் தோதான இடமாய் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கலாம். அதை விட்டு விட்டு கிடைத்தது சாக்குன்னு உங்க அக்காள் மகனுக்கு என் பெண்ணைக் கொடுக்கணும்னு பேசினீங்கன்னா நடக்கிறதே வேற.. நான் பொம்பளையா இருக்க மாட்டேன். சொல்லி விட்டேன்.” 

ரெங்கநாதன் வேகம் தணிந்தார். 

“இல்லைடி வீரலட்சுமி. நான் எதற்கு சொல்கிறேன்னு கொஞ்சம் கேட்டுப் பேசுடி.” 

”என்னத்தைக் கேட்கிறது? எனக்கு உங்கள் புத்தி போகும் போக்குத் தெரியாதா? இப்ப என்ன… மொட்டைக் கடுதாசி வந்திருக்கு.. ரூபிணியைக் கூப்பிட்டு விசாரிப்போம். அவள் பக்கம் என்ன நியாயம் இருக்குன்னு கேட்போமே.” 

“அவள் உண்மையிலேயே அந்த ஹரிஹரனைக் காதலித்திருந்தால்…” 

“கேட்போம்… அவள் சொல்லட்டும். அதன் பின்னால் ஒரு முடிவு எடுப்போம்.” 

“என் அக்கா மகனைக் கூப்பிட்டுப் பேசும் முடிவு தானே.” 

“அதற்கு என் மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாம்.” வீரலட்சுமி வெறி கொண்டவளாய் முறைத்தாள். ரெங்கநாதன் பின் வாங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து பின் வாங்கினார். செல்போனை எடுத்து ரூபிணியிடம் பேசினார். 

“அப்பா..” ரூபிணியின் குரல் கேட்டது. 

“நீ உடனே லீவு போட்டுவிட்டு கிளம்பி வாம்மா..” ரெங்கநாதன் பல்லைக் கடித்தவாறு கூறினார். 

“என்னப்பா.. என்ன ஆச்சு” ரூபிணி பதட்டமாகக் கேட்டாள். 

“இங்கே உன் அம்மாவுக்கு உடம்புக்கு முடியலைம்மா.. இழுத்துக்கோ.. பறிச்சுக்கோன்னு கிடக்கிறா…” மனைவியை முறைத்துக் கொண்டே கூறினார் ரெங்கநாதன். 

“உங்க அக்கா மகனுக்கு பொண்ணு கொடுக்கலைன்னா.. என்னை போய் சேர வைச்சிருவீங்களா?” வீரலட்சுமி விழியால் கணவரை சுட்டெரித்தாள். 

“ஐயையோ.. அப்பா.. அம்மாவுக்கு இப்ப எப்படியிருக்கு.” 

“உன்னைப் பார்த்தால்தான் உயிர் தங்குமாம். உடனே புறப்பட்டு வா.” 

ரூபிணி கதறி அழுக ஆரம்பித்து விட்டாள். ப்ரீதி சமாதானப்படுத்த.. அலுவலகமே அவளைச் சூழ்ந்து கொண்டது. ஒரு வழியாய் லீவு லெட்டரை எழுதிக் கொடுத்து விட்டு ரூபிணி ஹாஸ்டலுக்கு விரைய ஜவஹர் கேண்டின் பக்கம் சென்றான். இவன் வருவதைக் கவனிக்காமல் மூர்த்தி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். 

”ஆமாம்டா. காரியம் சக்ஸஸ் ஆகிவிட்டது. என் ஐடியா வொர்க் அவுட் ஆகி விட்டது. நான் போட்ட மொட்டை இன்னைக்கு அவங்க கையில் கிடைச்சிருச்சு போல. அம்மாகாரிக்கு சீரியஸ்ன்னு அப்பன்காரன் போன் பண்ணினான். பட்சி பதறி அழுது கொண்டு ஓடுது… திரும்பி வரும்போது மூக்கணாம் கயிறோடுதான் வரும். எனக்கு எப்படித் தெரியுமா இந்த மிடில் கிளாஸ்காரங்க சைக்காலஜி எனக்குத் தெரியாதா? எங்கே வெடி வைத்தால் எப்படி வெடிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். யாரைப் பார்த்து தெனாவெட்டாய் சிரிக்கிறா.. ம். இப்ப இந்த மூர்த்தி யாருன்னு காட்டி விட்டேனில்ல? ஹா… ஹா..” 

ஜவஹர் காபி குடிக்காமலே ப்ரீதியிடம் திரும்பிச் சென்றான். 

“என்னவாம் ஐயா முகம் வேர்த்து வழியுது?” 

“வெயில்.. அதுதான் உன் பக்கத்தில் இருந்தால் குளுகுளுவென இருக்கும்னு நினைத்து வந்தேன்.” 

பரீதி முகம் சிவந்தாள். 

“ஐயே.. ஆபிஸில் வழியாமல் போய் வேலையைப் பாருங்கள்.” 

”ப்ரீதி…” 

“ம்ம்…” 

“இந்த ரூபிணியிடம் நீ ஒரு விசயம் சொல்ல வேண்டுமே…” 

“என்ன…?” 

ஜவஹர் விசயத்தைச் சொன்னான். ப்ரீதி முகம் மாறினாள். 

“இது இவனுடைய வேலையா? பாவி…” ரூபிணி துடித்துப் போய் விட்டாள். பெற்ற தாய்க்கு உடல் நிலை சரியில்லையென்றால் எந்த மகள்தான் தாங்கிக் கொள்வாள்…?” 

ப்ரீதி செல்போனை எடுத்து ரூபிணியின் எண்களை அழுத்தினாள். 

“சொல் ப்ரீதி.” 

“அழுகிறாயா… இதற்குத்தான் போன் பண்ணினேன். நீ அழுகாதே ரூபிணி. உன் அம்மாவிற்கு ஒன்றும் இல்லை. எல்லாம் இந்த மூர்த்தி ராஸ்கல் செய்த வேலை…” 

ப்ரீதி விவரம் சொல்லிவிட்டு போனை அணைத்தாள். ஹாஸ்டலில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த ரூபிணி தன்நிலைக்கு வந்தாள். பதற்றம் தணிந்து புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. 

இப்போது அவளுக்கு உடனடியாக ஹரிஹரனின் ஆலோசனை தேவை… ஹரிஹரனை போனில் அழைத்தாள். அழைத்த மறுகணம் போனில் அவன் குரல் ஒலித்தது. 

“என் கண்ணம்மாவிற்கு மதியத்திலும் என் நினைவா?”

”ஆமாம்.. உச்சி வெயிலில் உங்களை நினைத்து உருகுகிறேன். அதனால்தான் உங்களோடு கொஞ்சிக் குழாவ அழைத்தேன்…” 

“என்னடா.. எதற்கு இந்தக் கோபம்?” 

“ஹரி.. என் வீட்டாருக்கு என் காதல் தெரிந்து விட்டது…” 

“என்றைக்கு இருந்தாலும் தெரிய வேண்டிய மேட்டர் தானே… அதற்கு ஏன் இவ்வளவு பதட்டம்?” 

“நான் சொல்லி அவர்களுக்கு என் காதல் தெரியவில்லை…” 

“வேறு எப்படித் தெரிந்தது…?” 

“என் ஆபிஸில் ஓர் அயோக்கியன் மொட்டைக் கடிதம் போட்டிருக்கிறான். அதில் என்ன என்ன தப்புத் தப்பாய் எழுதி இருந்தானோ.. தெரியவில்லையே…” 

“வாட்… யார் அந்த ஸ்கௌன்ட்ரல்?”

“நீங்கள் வேறு கோபப்படாதீர்கள் ஹரி.”

“யார் அவன்னு கேட்கிறேனில்ல.” 

“எல்லாம் ஏற்கனவே நீங்கள் மொத்து மொத்தென்று மொத்திய ராஸ்கல்தான்.” 

“ஹோட்டலில் உன்னை டார்ச்சர் பண்ணியவனா.” 

“அவன்தான்… என்ன எழுதி வைத்தானோ.. தெரிய வில்லை. அப்பா உடனே புறப்பட்டு வரச் சொல்லி போன் பண்ணி விட்டார். சும்மாவும் சொல்லவில்லை. அம்மாவுக்கு சீரியஸ். நீ உடனே வராவிட்டால் உன் அம்மாவின் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி விட்டார்… என் உயிரே பறந்து விட்டது ஹரி. இப்போதுதான் ஹாஸ்டலுக்கு வந்து துணிகளை பேக் பண்ணிக் கொண்டிருந்தபோது ப்ரீதி போன் பண்ணிச் சொன்னாள். மூர்த்தி யாரிடமோ போனில் அவனுடைய வீரப் பிரதாபத்தைச் சொல்லிக் கொண்டிருந்தானாம். ஜவஹர் கேட்டு விட்டு ப்ரீதியிடம் வந்து சொன்னாராம். ஹரி.. என்னை எப்படி ஆட்டி வைத்து விட்டான் பார்த்தீர்களா…” 

ரூபிணியின் குரலில் வேதனை வழிந்தது. ஹரிஹரனின் கண்கள் சிவந்தன. அவன் ரூபிணியிடம் போனில் பேசியபடியே ஒரு பேப்பரை எடுத்து எதையோ எழுதி அவனது உதவியாளரிடம் கொடுத்தான். அவன் வெளியேறினான். 

– தொடரும்…

– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *