கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: September 14, 2013
பார்வையிட்டோர்: 16,857 
 

தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் மனதில்லை. அழவேண்டும் போன்றதொரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது. அழுகை எதற்காக? தாமராவுக்காகவா?

தாமரா வீட்டை விட்டுப் போன நாளிலிருந்து அவனுக்கு, தான் தனிமைப்பட்டுப்போனது போன்றதொரு விரக்தி மனதை எரித்துக்கொண்டிருந்தது. தன் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வெதும்புகிறது. அப்படி அலட்சியப்படுத்தினால் அதற்கு அழுகை ஏன்? தாமரா தனக்கு யார்? என்ன உறவு? உறவு ஏதுமில்லையெனில் ஒன்றுமே இல்லையென்றாகிவிடுமா? அவனுக்குப் புரியவில்லை. எனினும் அழுகை தேவைப்படுகிறது. எதற்காகவோ என்று காரணம் தெளிவாகாவிடினும் அழுது தீர்க்கவேண்டும் போலிருக்கிறது.

ஜன்னலுக்கு வெளியே பொழுது புலர்ந்துகொண்டிருக்கிறது. பறவைகள் விதவிதமான தொனிகளில் பாடுகின்றன. இதமான அவற்றின் கீதங்களை படுக்கையை விட்டு ஏழாமலே கேட்டுக்கொண்டிருக்க அவனுக்கு விருப்பம். ஆனால் இப்போது அவனுக்கு இரவுகள் மிக நீண்டுகொண்டிருந்தன. கனவா நனவா என்று புரியாத இடை மனநிலைகளில் தாமரா கற்பனைக் கதைகளில் வருவதுபோல வருகிறாள். கனவுகளில் லயித்துப்போகும் வேலைகளில் விழிப்பு வந்துவிடுகிறது. மீண்டும் உறங்க, கதை தொடர்கிறது. தடைப்பட்ட உறக்கம் அதிகாலையில் அசதியை ஏற்படுத்தி, பறவைகளின் கீதங்கள்கூட ஏதோ மாயலோகத்தில் ஒலிப்பது போன்ற மயக்கத்தை தருகிறது.

அன்று காலைச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வேலைக்கு புறப்படும் வேளையிற்தான் அவள் அந்த விஷயத்தைச் சொன்னாள்.

“பொழுது பட நீங்க… வீட்டுக்கு… வர்ற நேரம்… நான் வீட்டில… இருக்கமாட்டன்!”

அவனுக்கு சிறு அதிர்ச்சி ஏற்பட்டதுபோலதான் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளவில்லை. திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான்.

“மாமா வீட்டுக்குப்… போக போறன்.”

அவன் அதற்கு எவ்வித பதிலும் பேசாமலே புறப்பட்டுவிட்டான். இப்படித் திடுதிப்பென்று எதற்காக மாமா வீட்டுக்குத் தாமரா போகிறாள் என உள்ளே யோசனையாய் இருந்தது. தனக்கு ஏற்கனவே அவள் அதுபற்றிக் கூறாமல் விட்டது, தன்னைப் பொருட்படுத்தாதனால்தானே என ஒரு கோபம்கூட மூண்டது. கோபம் தாமராமேலா அல்லது அவள் தன்னை விட்டுப் பிரியப்கோகிறாளே என்ற ஆற்றாமையாலா என்றும் புரியவில்லை.

ஏன், போகிறாய், எப்போது திரும்ப வருவாய் என ஒரு கேள்வியையாவது அவளிடம் கேட்டிருக்கலாம். தாமராவும் அதை அவனிடமிருந்து எதிர்பார்த்திருக்கக்கூடும். அப்படிக் கேட்காமல் விட்டது அவளுக்கு ஏமாற்றமாகக்கூட இருந்திருக்கும். அதனாற்தான் அவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லையோ? கேட்காமல் விட்டது மடைத்தனம்தான். மாமா வீட்டுக்குத்தானே போகிறாள், இரண்டொரு நாட்களில் திரும்பிவிடுவாள்.. என அலட்சியமாக இருந்துவிட்டேனே என இப்போது கவலையாயிருந்தது. ஒவ்வொரு நாட்களும் வெறுமனே கழிந்துகொண்டுபோக அவள் எப்போது வருவாள் என மனம் ஏங்குகிறது.

இப்படி எவ்வளவு நேரம்தான் அவள் நினைவுகளுடன் கிடப்பது என அவனுக்குத் தன் மேலேயே சினம் ஏற்பட்டது. படுக்கையை விட்டு எழுந்தான். தாமராவையும்;… அவள் நினைவுகளையும் மறந்துவிடவேண்டும். நேரத்தோடு வெளிகிட்டு பஸ் நிறுத்தத்துக்குப் போய்விடவேண்டும். இல்லாவிட்டால் நேற்றையைப் போலவும்.. அதற்கு முன்தினம் போலவும் பஸ்சைத் தவறவிட்டு வேலைக்கு லேட்டாகப் போக வேண்டிவரும்.

குளித்து ரெடியாகி வந்தபோது மேசையில் சாப்பாடு தயாராயிருந்தது. அவசர அவசரமாகக் குளித்து உடையணிந்து வந்ததால் உடல் வியர்த்தது. நெற்றி வியர்வையைக் கைவிரலினால் துடைத்தபோது தாமராவின் நினைவு வந்தது…

இது போன்ற ஒரு காலைப்பொழுதில் தாமரா பக்கத்தில் நின்று உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை புறங்கையினால் துடைத்தபடியே அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அதைக் கவனித்த தாமரா சட்டெனத் தனது தாவணியைக் கையிலெடுத்து அவனது முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்துவிட்டாள். அப்போது அவள் தன்னோடு அணைந்துகொண்டு நின்றது போலவும் அவனுக்கு ஒரு ஸ்பரிசம் கிடைத்தது. அது ஒரு வித பரவசத்தையும் ஏற்படுத்தியது. பதட்டமுமடைந்தான்…

“அம்மா… அம்மா.. வந்தால்…?”

“வந்தால் வரட்டும் பயமில்லை…!”

தாமரா அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்மா குசினியிலிருந்து வெளிவரும் அசுகை தெரிந்தது. இமைக்கும் கணத்தில் தாமரா அவனை விட்டு விலகி நல்ல பிள்ளையாக நின்றாள். அவனுக்குப் படபடப்பு அடங்காமல் இன்னும் அதிகமாய் வியர்த்தது. அம்மா மீண்டும் குசினிக்குள் போக, அவன் சற்று ஆசுவாசமாக மூச்செடுக்க முயல்கயில் தாமராவின் கை அவனது காதைப் பிடித்து முகத்தைத் தன் பக்கம் திருப்பியது. தாவணியைக் கையிலெடுத்து வியர்வையைத் துடைத்து விட்டு… “எப்படி?” என்பது போலக் கண்களைச் சிமிட்டினாள்.

இப்படி ஏதாவது நினைவு வந்துவிடுகிறது. தாமராவை மறக்கவேண்டும் என மனதில் ஒரு வைராக்கியம் எடுத்தால் அதை அவளது குறும்புத்தனங்கள் நினைவில் வந்து அழித்து விடுகிறது.

சாப்பாட்டைக் கையிலெடுத்தபோது சாப்பிடத்தான் வேண்டுமா என உள்ளே ஒரு மனம் பிரேக் அடித்துக் கேட்டது. சாப்பாடு வயிறு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல, அது மனமும் சம்பந்தப்பட்டது என்பது இதுபோன்ற வேளைகளிற்தான் புரிகிறது.

தாமரா வீட்டில் இல்லாத குறை கண் பட்ட இடமெல்லாம் தென்பட்டது. பாத்திர பண்டங்களெல்லாம் அவற்றுக்குரிய இடங்களுக்குப் போகாமல் போட்ட போட்ட இடங்களில் இடக்குப் பண்ணிக்கொண்டு கிடந்தன. தண்ணீர்க்குழாய்கூட தாமரா இல்லையென சிணுங்கி வடிந்துகொண்டிருந்தது. எழுந்து அவன் அந்தக் குழாயை இறுக்கமாக மூடினான்… ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வீணாகச் சிந்துவது தாமராவுக்குப் பிடிக்காது.

“ஏன் தம்பி… சாப்பிடயில்லையா…”

“இல்லையம்மா… எனக்குப் பசியில்லை…”

தாமராவின் தாயாரை அவன் அம்மா என்றுதான் அழைப்பான். ஆறு வருடங்களுக்கு முன் இந்த வீட்டில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் குடியிருக்க வந்த நாளிலிருந்தே ஒரு பெற்ற தாயைப்போல அவரது அன்பையும் பரிவையும் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறான். படிப்பு முடிந்த பின், முதலிற் கிடைத்த உத்தியோகத்துக்காக காலித்துறைமுகத்துக்கு அண்மிய இந்தப் பகுதிக்கு வரவேண்டியிருந்தது. தங்குவதற்கு இடம் தேடியபோது அவன் யுத்த பிரதேசத்திலிருந்து வந்தவன், அதிலும் இளம் இளைஞன் என்ற காரணத்திற்காக அறையொன்று கிடைப்பது பெரும் பாடாயிருந்தது. அப்போது பெருமனசுடன் தங்குவதற்கு இடம் தந்து உதவியவர் அம்மா.

“பசியில்லாட்டி… பார்சல் பண்ணித்தரட்டா… தம்பி?”

“வேண்டாம்மா… நான் கடையில… பார்த்துக்கொள்ளுறன்.”

அரைகுறையாகப் பதில் சொல்லிக்கொண்டே புறப்பட்டான்; இல்லாவிட்டால் அம்மா, சாப்பாட்டைப் பார்சல் பண்ணிக் கையிற் தந்துவிடுவாள். அவன் கடைகளிற் சாப்பிடமாட்டான் என்பது அம்மாவுக்குத் தெரியும். அவன் தாவர பட்சணி. கடைச் சாப்பாடு ஒத்து வராது.

ஆரம்பத்தில் தங்குவதற்கு அறை தந்தபோது “சாப்பாட்டை வெளியில் வைத்துக்கொள்ள வேண்டும்… அதுக்கெல்லாம் எங்களுக்கு வசதிப்பாடாது” என அம்மா சொல்லியிருந்தாள். தொழிலகத்துக்கு அண்மையில் சைவச்சாப்பாடு சாப்பிடக்கூடிய உகந்த கடைவசதி இல்லை. கடைகளிற் போய் அமர்ந்ததும் மச்சக்கறியின் மணம்.. அவனுக்குக் குமட்டிக்கொண்டு வரும். அதனால் மதியச் சாப்பாட்டுக்காகக் கடைகளுக்குப் போவதைக் கூடியவரை தவிர்த்துக்கொண்டான். இது தெரியவந்ததும் அம்மா கவலைப்பட்டாள். “பசி… கிடக்க வேண்டாம்.” வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு மதியத்துக்கு பார்சலும் எடுத்துப் போகும்படி கூறினாள். அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மறுப்புத் தெரிவித்துவிட்டு வேலைக்கு போயிருந்தான். ஆனால் அன்றைய தினம் வேலைத்தலத்துக்குச் சாப்பாடு பார்சல் தேடி வந்தது. மதிய வேளைக்கு வரும் பஸ்சில் அனுப்பியிருந்தார்கள். அவனுக்குத் தெரியும்… தாமராவின் வேலைதான் அது. தாமரா அவனின் பெயரை சாப்பாட்டுப் பார்சலில் எழுதியிருந்தாள். அதற்கு ஏதோ சக்தியிருந்து.. தன்னை ஈர்ப்பது போல தாமராவின் கையெழுத்து… தனது பெயரை அவள் கைபட எழுதியது.. அவனுக்கு ஓர் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது புலனுணர்வுகளை தாமரா மெல்லத் தட்டியசைக்கத் தொடங்கிருப்பதை அவன் உணரத்தொடங்கினான். இதிலிருந்து விடுபட முடியாமல் போகுமோ என அவனுக்குள் அவ்வப்போது கேள்விகள் எழத்தொடங்கின.

மாலையில் வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் சொன்னான்.

“என்னால் ஏன் உங்களுக்கு வீண் சிரமம்? சாப்பாடு அனுப்பவேண்டாம் அம்மா.”

“இதில என்ன கஷ்டம் தம்பி?… நீங்களும் எனக்கு ஒரு பிள்ளை மாதிரித்தான்.”
அப்போது தாமராவின் குரல் குசினிக்குள் இருந்து கேட்டது.

“வேலைக்குப் போறவர் பசி கிடக்க நாங்கள் எப்படி இங்கை சாப்பிட்டுக்கொண்டிருக்கேலும்?”

இப்படிதான் தாமரா மெல்ல மெல்ல அவன் நெஞ்சுக்கு அருகில் வந்தாள்.
அம்மாவிடமாவது கேட்டுப் பாத்திருக்கலாம். தாமரா ஏன் போனாள், எப்போது வருவாள் என அம்மாவிடம் கேட்கலாமா என்ற கேள்வி பலமுறை அவனுள் எழுந்து வந்திருக்கிறது. பின் அதே வேகத்திலேயே அடங்கிப்போகும். அம்மாவிடம் இந்த விஷயத்தைக் கேட்கும் துணிவு அவனுக்கு இல்லை. அது அம்மாவிற்கு ஏதாவது சந்தேகத்தைக் கொடுக்குமோ என்ற தயக்கம். அல்லது அப்படி ஒரு சந்தேகத்தினாற்தான் அம்மாவாகவே தாமராவை அனுப்பியிருப்பாளோ என்று சிலவேளைகளில் குற்ற மனப்பான்மை உறுத்துகிறது. இதனால் அம்மாவுடன் இயல்பாக முகம் நிமிர்த்திப் பேசமுடியவில்லை. இந்த விசித்திரத்தில் தாமராவைப் பற்றி எப்படி அம்மாவிடம் கேட்பது? அம்மாவுக்கு முன் நின்று “தாமரா…” என்று ஏதாவது பேசத் தொடங்கினாலே நாக்குத் தடுமாறும் என அவனுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. வேண்டாம்… அந்த வில்லங்கம்.

பஸ் நிறுத்தத்தில் காத்துநின்று தனக்குரிய பஸ் வருகிறதா என இடையிடையே திரும்பிப் பார்த்தான். அறிந்த, தெரிந்த சிலர் அவனைக் கண்டு முகஸ்துதிச் சிரிப்பு செய்த போது அவன் ஏதும் போசாமல் நின்றான். அவர்கள் முகம் மாறித் திரும்பியதும்… “அட… என்ன நினைத்திருப்பார்களோ” என உணர்வில் உறைத்தது. இந்தக் குழப்பம் இனி வேண்டாம் என மனதுக்கு எச்சரிக்கை செய்துகொண்டு நின்றான். இன்னும் சிலர் வந்தபோது தானே முந்திக்கொண்டு “ஹலோ..” என்பதுபோல முகத்தை மலர்த்தினான். அவர்களுக்கு அவனைத் தெரியவில்லை.? அவர்கள் விழிக்க, அவனுக்கு அசடு வழிந்தது. எல்லாம் குழம்புகிறது அவனுக்கு. தாமரா மட்டும் நினைவில் நிறைந்துபோயிருக்கிறாள். “தாமரா இன்றைக்கு வந்து விடுவாள்” எனத் தன் மனதைத் தேற்றினான். அது உண்மையானால்? மாலையில் வீட்டுக்கு வரும்போது தாமரா வீட்டில் நிற்பாளானால்..? அவனது உள்ளம் ஒரு முறை விம்மலெடுத்தது. அது நடக்குமா? தாமரா இன்று வீட்டுக்கு வருவாளா?

தாமரா ஒருபோதும் இவ்வளவு அதிக நாட்கள் வெளியிற் போய் தங்கியதில்லை. ஏதாவது முக்கிய காரணத்துக்காகப் போயிருக்கலாம்.. இன்று வந்துவிடுவாள் என மனதைச் சமாதானப்படுத்த முயன்றான். இனனுமின்னும் தன்னைப் போட்டு வருத்தாமல் அவள் இன்றைக்காவது வந்துவிட வேண்டுமென்று விரும்பினான். வருவாளா?

அவனுக்குரிய பஸ் வந்து நின்று சிலரை ஏற்றிக்கொண்டு கடந்து ஒரு உறுமலுடன் போனது. அப்போது தான் அதைக் கவனித்தான். ஓடிச்சென்று பஸ்சில் தொற்றிக்கொள்ளும் கலையில் அவனுக்குப் பயிற்சியும் இல்லை.. இஷ்டமுமில்லை. பஸ் போகும் திசையையே பார்த்துக்கொண்டு நின்றான். தாமராவின் நினைவுகள் தன்னை எப்படியெல்லாம் போட்டு அழுத்துகிறது என வியப்பாயுமிருந்தது. அவள் வீட்டில் இருந்த நாட்களை விடப் பிரிந்துபோன பின்னர்தான் அந்த அழுத்தத்தின் தாக்கம் தெரிகிறது. தாமரா… இப்படிப் போட்டு வருத்தாதே… வந்து விடு! இன்றைக்காவது வருவாயா?
பக்கத்தில் நின்றவர் திரும்பி அவனை விநோதமாகப் பார்த்தார்.

“மட்ட மொனவா ஹறி கிய+வாத? (எனக்கு ஏதாவது சொன்னீர்களா?)
அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. “இல்லையே… மங் மொக்குவத் கியூவ நே..” (நான் ஒன்றும் சொல்லவில்லை)

“ஏதோ சொன்ன மாதிரிக் கேட்டிச்சு….”

அவன் சட்டென ஒரு பாட்டை முணுமுணுத்தான். தான் நோர்மலாகவே பாட்டுப் பாடிக்கொண்டிருப்பது போல பாசாங்கு செய்துகொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.

தொழிலகத்திலே வேலை ஓடவில்லை. எதையாவது கடமைக்குச் செய்யவேண்டியிருந்தது. “ என்ன முகம் வாடியிருக்கு?” என நண்பர்கள் சிலர் கேட்டார்கள். “இல்லையே நல்லாய்த்தான் இருக்கிறேன்.” என ஒவ்வொருவருக்கும் சொல்லவேண்டியிருந்தது. தான் நன்றாக இருப்பதாகக் காட்டுவதற்கு மிக முயன்றான். ஆனால் அவனது ஒவ்வொரு செய்கையிலும் வித்தியாசம் இருந்து காட்டிக்கொடுத்தது.

“இப்ப சில நாட்களாக நீ யாருடனும் சரியாகப் பேசுவதில்லை… ஊரில ஏதாவது பிரச்சினையா?” என அனுதாபப்பட்டார்கள். சில சமயங்களில் அவனுக்கு அவர்கள் மேல் எரிச்சல் ஏற்பட்டது. ஏன் தன்னை தன் பாட்டில் விடாமல் தொல்லை தருகிறார்கள் என நினைத்தான். லீவு போட்டுவிட்டு வீட்டுக்குப் போய்விடலாமா என்றும் தோன்றியது. லீவில் வீட்டுக்குப் போனால் அம்மாவுக்கு தனது வித்தியாசம் பிடிப்பட்டுவிடும். அல்லது வீட்டுக்கும் போகாமல் அலுவலகத்திலும் நிற்காமல் எங்காவது கடற்கரை பக்கமோ… வேறு தனிமையான இடங்களுக்கோ செல்லலாம். அவனுக்குத் தனிமை தேவைப்பட்டது. தாமராவின் நினைவுகளின் கரைவதற்கு அதுதான் சரி. மனதுக்கு ஓய்வு தேவைப்படுவது போலுமிருந்தது. ஓய்வு எப்படிக் கிடைக்கும் என்பது அவனுக்குத் தெரியவில்லை. இரவில் தூக்கம் கெட்டதால் அசதியாயுமிருந்தது. நெற்றியைக் கைகளாற் தேய்த்துவிட்டு.. எழுந்து நடந்து.. முகத்தைக் கழுவி.. இப்படி எதையாவது செய்து அலுப்பைப் போக்க முயன்றான்.

“என்ன… லவ்… பிரச்சினையா?” எனக் கூட வேலை செய்யும் ஜயந்தி கேட்டாள். அவன் அதிர்ந்துபோனான்.

“இவளுக்கு எப்படித் தெரியும் எப்படித் தெரியும்?”

அவள் சும்மா விளையாட்டுக்குக் கேட்டிருப்பாள் என்பதை அவனால் ஊகிக்க முடியாதிருந்தது. ஏதோ அசுகை தெரிந்துதான் கேட்கிறாளோ எனக் குழம்பினான்.

ஜயந்தியை அணுகி… “உங்களுக்குத் தாமராவைத் தெரியுமா..?” எனக் கேட்டான்.

“தாமராவா…? யார் அது?” ஜயந்தி வியப்புடன் சிரித்தாள். தான் உளறுகிறேன் என்பது அப்போதுதான் அவனது புத்தியில் தட்டியது.

ஜயந்தி விடவில்லை. இன்னுமின்னும் கேள்விகளால் அவனைத் துளைத்தாள். உளறாமல் இருக்க வேண்டுமென மனதுக்குள் பிரார்த்திக்கொண்டு தடுமாறினான்.

ஆனால் ஜயந்திக்கு அந்தச் சிறு தகவலே போதுமானதாயிருந்தது. அலுவலகத்திற் பெண்கள் எல்லாம் சேர்ந்து கதைப்பதுபோல அவனுக்குப் பிரமையாயிருந்தது. தன்னை அவர்கள் சற்று வேடிக்கையாகப் பார்ப்பது போலவும் தங்களுக்குள் கலந்துரையாடிச் சிரிப்பது போலவும் கூச்சமாயிருந்தது. அல்லது அது தனது கற்பனையோ என நினைத்தான்.
“என்ன… ஆளே.. மாறியிட்டீங்க? அப்பிடி என்ன கவலை? சும்மா… கவலைப்பட வேண்டாம். நாங்களெல்லாம்… இல்லையா?” – மல்லிகா வந்து இப்படிக் கேட்டது தன்னைத் தேற்றுவதற்காகவா அல்லது இன்னும் கதை பிடுங்கும் விளையாட்டா என்று குழப்பமாயிருந்தது. அவன் மௌனம் சாதித்தான். “நாங்களெல்லாம்… இல்லையா…?” என மல்லிகா சொன்னது ஏதாவது உளளர்த்தத்துடனாயிருக்கக் கூடுமோ? இவர்களெல்லாம் தாமராவின் இடத்துக்கு வர முடியுமா என அவனால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. யாரும் யாருக்கும் சமனல்ல. யாரையும் யாருடனும் ஒப்பிடவும் முடியாதுதான். அவரவர் வரையில் அவரவர்க்கு ஏதாவது விசேடம், உசத்தி உண்டு. ஆனால் ஒரு பெண் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டால், பிறகு அவள்தான் எல்லாமாகிவிடுகிறது. தாமரா ஓர் அழகிய ஓவியமாய் இதயத்திற் பதிந்து போயிருக்கிறாள். அவளைச் சுற்றிய வட்டத்திற்குள்ளேயே அவனது உலகம் சுருங்கிப் போய்விட்டது. மதியம் சாப்பிட போகும் நேரம் மல்லிகா மீண்டும் வந்து அவனிடம் கேட்டாள்,

“கேவத?” (சாப்பிட்டீங்களா?)

“இல்ல… பிறகு சாப்பிடலாம்.”

ஜயந்தியும் கூட வந்து நின்று அவனைச் சாப்பிட வருமாறு வற்புறுத்தினாள். தங்களது சாப்பாட்டுப் பார்சலை அவன் முன்னே வைத்தார்கள்.
“படகினயென் இன்ட எப்பா. (பசி கிடக்க வேண்டாம்)” என்றார்கள். பெண்களின் இயல்புதான் இது. “நாங்கள் இல்லையா?” என அவர்கள் கேட்டதுகூட துன்பம் வரும்போது பக்கத்திற் துணையிருப்போம் எனும் உதவியுணர்வுடன்தான். தனக்காக அவர்கள் இரக்கப்படுவது அவனது மனதைத் தொட்டது. எனினும் அது அவனுக்கு வெட்கமளித்தது. யாருடைய இரக்கமும் தனக்கு வேண்டாம். மற்றவர்களுடைய இரக்கத்தைச் சம்பாதிக்கிற அளவுக்கு தனது நிலைமை ஆகிவிடக்கூடாது என எச்சரிக்கையடைந்தான். மற்றவர்களின் கேலிப்பேச்சுக்குரியவனாகும் அளவுக்கு நிலைமை போய்விடுமோ எனப் பயமாயுமிருந்தது. நிதானித்து நிதானித்து இயல்பு நிலையடைய முயன்றான். ஆனால் தாமரா தன்னை விட்டுப் போய்விட்டாள் என்ற நினைவு வந்து அடித்துப் போட்டுவிடுகிறதே… என்ன செய்ய?

“யாரோ ஒருத்திக்காக உடலை வருத்த வேண்டாம்… பிரச்சினை என்னவென்றாவது சொல்லுங்க… தீர்க்கிற வழிபற்றி நாங்களும் கலந்து யோசிக்கலாம்.” அவர்கள் சற்று கோபப்பட்டுத் தன்னுடன் பேசுவதுபோலவே அவனுக்குப் பட்டது. அவர்களது கோபம் நியாயமானதாயிருக்கலாம். எனினும் தாமராவைப் பற்றி விமர்சிக்க இவர்கள் யார்? தாமரா தனக்கு யாரோ ஒருத்தியா?

“நீங்க போங்க… என்ர அலுவல் பார்க்க எனக்கு தெரியும்… நீங்க போங்க…”
மல்லிகாவும் ஜயந்தியும் சட்டென விலகிப்போக அவனுக்கு “சுருக்” எனத் தைத்தது. இப்படியொரு சீற்றம் எங்கிருந்து வந்தது எனக் கவலை மேலிட்டது. இயல்பாகவே தான் கோபமான சுபாவக்காரனல்ல. எல்லாவற்றுக்கும் தாமராதான் காரணம். உள்ளே நின்று ஆட்டிவைப்பதும் அவள்தான்… அவளுடைய நினைவுகள்தான்.

பட்டினி கிடப்பதும் தாமராவுக்காகத்தான். தாமரா போன நாளிலிருந்தே மதியச் சாப்பாடு இல்லை. வழமையாக அதிகாலையில் எழுந்து சமையல் செய்து சாப்பாட்டுப் பார்சல் தந்துவிடுவாள் தாமரா. அந்தக் கரிசனை இப்போது எங்கே போனது? அதற்காகத்தான் தண்டனை. “வேலை செய்யிறவர் சாப்பிடாமல் கிடந்தால்… நாங்கள் எப்படிச் சாப்பிடுறது.” என நீதானே கேட்டாய் தாமரா? இதோ பார்… என் வயிற்றைத் தொட்டுப் பார்… காலையிலிருந்து ஒன்றுமில்லை. எனக்குப் பசிக்கிறது. இப்போது என்ன செய்வாய்?

கூட வேலை செய்யும் நண்பர்கள் ஒருவர் மாறி ஒருவராக வந்து பேச்சுக் கொடுத்தார்கள். தன்னை ஆறுதல்படுத்துவதற்காகவே அவர்கள் வந்து பேசினாலும் அவனுக்கு எரிச்சலாயிருந்துது. “என்னைத் தனிய விடுங்கள்” எனக் கத்தவேண்டும் போலிருந்தது. “அவனைத் தனிய விடவேண்டாம்” என அவர்கள் பேசிக்கொள்வது காதிற் கேட்டது. தனிமையிலிருந்தால் தனக்கு ஏதாவது மனக்கோளாறு ஆகிவிடும் எனக் கருதுகிறார்கள்போலிருக்கிறது. நேரத்துடனேயே வீட்டுக்குப் போய்விடலாமடா என நினைத்தான்.
வீட்டுக்குப் போவதா? வேண்டாம். அங்கு போய் அறையிற் கிடந்து என்ன செய்வது? அழுது தீர்ப்பதா? இது அழுது தீர்க்கக்கூடிய கவலையா? எந்தக் கணமும் அழுகை உடைத்துக்கொண்டு வரக்கூடும் என்றதொரு பயமும் அவனுள் ஏற்பட்டிருக்கிறது. இங்கே நிற்கவேண்டாம்.. போய்விடுவோம். யார் கண்டது? இன்றைக்கு ஒருவேளை நல்ல நாளாயிருக்கலாம். தாமரா ஏற்கனவே வீட்டில் வந்து நிற்கக்கூடும். ஆ.. அப்படியானால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

ஷோர்ட் லீவ் போட்டுவிட்டு வந்தபோது வீடு முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தது. பூட்டிய கதவின் முன்னால் நின்று என்ன செய்யலாம் என ஒரு கணம் யோசித்தான். தாமரா நின்றால் தட்டாமலே கதவு திறந்துகொள்ளுமல்லவா? பேசாமல் திரும்பிப் போய்விடலாம் என வெறுப்பாயிருந்தது. சில சமயம் பஸ்சில் பயணித்து வந்த அலுப்பில் தாமரா உள்ளே அறையிற் படுத்திருப்பாளோ..?

கதவைத் தட்டினான். உள்ளேயிருந்து கதவைத் திறந்து கேள்விக்குறியுடன் பார்த்தாள் அம்மா.

“என்ன தம்பி.. நேரத்தோட..?”

சற்றுத் தடுமாறினான்.. “தலையிடி..”

“தலையிடியா..?” பதிற் கேள்வியில் அம்மா அனுதாபத்தைக் காட்டினாள்.

“போய்க் கொஞ்ச நேரம் படுங்க.. சுகமாகும்;”

“தலையிடியில்ல.. என் தலைவிதி..!” என எண்ணிக்கொண்டான்.
“தாமரா இன்னும் வரவில்லையா..” அம்மாவிடம் கேட்பதற்கு மனம் உந்தியது. இதென்ன கேள்வி? தாமரா வீட்டில் இல்லையெனக் கண்கூடாகத் தெரிந்தபின்னும் மனம் நம்ப மறுக்கிறதா? ஒரு நப்பாசைதான்! அம்மாவின் வாயிலிருந்து ஏதாவது தாமராவைப் பற்றி எடுக்கமுடியாதா என்று!
அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தான். சற்று உருண்டான். எதிர்ச் சுவர்க் கொளுவியில் மாட்டியிருந்த சேர்ட் லோங்ஸ் இத்யாதி ஆடைகள் கண்ணில் பட்டன. இன்னும் தோய்த்துலர்த்தப்படாமல் பல நாடகள் கிடக்கும் குறையை அவை காட்டின. சினத்துடன் எழுந்தான். ஆடைகளை எடுத்துக்கொண்டு பாத்றூமுக்குள் நுளைந்தான். சோப்பல் போட்டு ஊறவைத்து ஒவ்வொன்றாகக் கையில் எடுத்து உரஞ்சினான்.
கண்ணீர் உகுத்து வந்து கைகளில் கொட்டியது. உடைத்துக்கொண்டு வருவதுபோல சகல புலன்களின் கட்டுப்பாட்டையும் இழந்து கண்ணீர் கொட்டியது. அழுகையை அவனால் அடக்க முடியவில்லை. பூட்டிய பாத்றுமிலிருந்து கண்களைத் துடைத்துத் துடைத்து அழுதான். கை ஆடைகளைக் கழுவும் வேலையைச் செய்துகொண்டிருந்தது.
தாமரா நின்றால் இந்த வேலை அவனுக்கு இல்லை. ஆடைகளை அவளே தோய்த்துலர்த்தி ரெடியாக வைத்துவிடுவாள்.

வீட்டுக்கு வந்த ஆரம்ப நாட்களில், வார விடுமுறை நாட்களில் அல்லது சில இரவுகளில் வேலை முடிந்து வந்தபிறகு ஆடைகளைக் கழுவும் வேலையைச் செய்வான். உலர்ந்தபின் அவற்றை மடித்து தலையணைக்குக் கீழ் வைத்துக்கொண்டு படுத்தால், ஓரளவுக்கு அயன் பண்ணியதுபோன்ற திருப்தியைத் தரும். தாமரா ஒருநாள் அதுபற்றி அவனிடம் கேட்டாள். “என்ன இது? அயன் பண்ணி ஸ்மார்டாகப் போட்டுக்கொண்டு போகாமல்…? சேர்ட் கசங்கியிருக்கு.. சரியில்ல..”

“அதுக்கு எனக்கு நேரமுமில்ல.. கூலி கொடுத்துச் செய்யுமளவுக்கு நான் பெரிய சம்பளக்காரனுமில்ல..”

அன்று மாலை வந்து அறையினுள் நுழைந்தபோது கட்டிலில், தோய்துலர்த்தப்பட்டு அயன் பண்ணப்பட்டு அழகாக அடுக்கப்பட்டுள்ள அவனது ஆடைகளின் புதிய கோலம்!

“தாமரா.. என்ன இது..?”

அவனது கோபத்தைப் பொருட்படுத்தாது அவள் அழகாகச் சிரித்தாள். “எனக்கு ஒரு அண்ணா இருந்தால் செய்யமாட்டேனா?…. அது போல வைச்சுக்கொள்ளுங்க… ஏன் வீணாய் இதுக்குப் போய் கனக்க யோசிச்சு தலையை உடைக்கிறீங்க?”

தடுத்தும் தாமரா கேட்கப்போவதில்லை. சரி அவள் விருப்பப்படியே செய்யட்டும் என விட்டிருந்தான். பல வருடங்களாக இப்படியொரு வேலை தனக்கு இருக்கிறதென்பதே அவனுக்கு மறந்துபோயிருந்தது. அதைப் பெரிதுப்படுத்தவுமில்லை. இப்போது தாமராவின் உதவிகள் மனதைத் தொட்டு வருத்தியது.

குளித்து முடித்து அறைக்கு வந்து தலையைத் துவட்டியவாறு தனது சிறிய ரேடியோவை ஒன் பண்ணினான். “மன்னவனே அழலாமா… கண்ணீரை விடலாமா” – சில வேளைகளில் மன நினைவுகளுக்கும் நடைமுறைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல அர்த்தப+ர்வமாக ஏதாவது நிகழ்ந்துவிடுகிறது. அல்லது மனம் அப்படித் தொடர்புபடுத்திப் பார்த்து ஆறுதற்படுகிறது. “உன்னுயிராய் நானிருக்க… என்னுயிராய் நீயிருக்க…” – தாமராவே தன்னை அவ்வாறு தேற்றுவது போலக் கற்பனை செய்தான். அது உண்மையாயிருக்குமானால், அதுமட்டும் போதும். தாமரா எங்கிருந்தாலும் பரவாயில்லை. தான் அவளை நினைத்து ஏங்குவது போல தாமராவும் தன்னையே நினைத்துக் கொண்டிருப்பாள் என்ற நினைவே ஒரு சுகமான வருடலாயிருந்தது.

தாமரா குறும்புகள் கொண்ட ஒரு விளையாட்டுப் பெண்ணாகத்தான் அவனோடு பழகி வந்தாள். அவனுக்கு, கூடப் பிறந்த சகோதரிகள் யாருமில்லை. அந்த இடத்தை அவள் நிரப்புவது போல சில சமயங்களில் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. ஒரு நல்ல சிநேகிதியாக அவனை உணர்ந்திருக்கிறான். இப்போது பார்த்தால்… அதெல்லாம் பழைய கதைப்போலப் படுகிறது. ஒவ்வொரு மூச்சும் தாமரா… தாமரா… என்றே தியானிக்கிறது. கூட வேலை செய்யும் நண்பர்கள் “இவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ” எனக் கருதியது போல அவனுக்கே அந்தப் பயம் தொட்டுவிட்டது. தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ…

அறையில் அடைந்து கிடக்காமல் வெளியே போவது நல்லது. லைபிரரி பக்கம் போகலாம். எதையாவது வாசிக்கலாம். யாராவது தெரிந்தவர்களைக் கண்டால் சற்று நேரம் வேறு விஷயங்கள் கதைக்கலாம்… தாமராவை மறக்கலாம்.

அறையை விட்டு வெளியேறியபோது அம்மா கடிந்து கொண்டாள். “என்ன தம்பி தலையிடி என்று சொன்னீங்க… பிறகு எங்க போறீங்க? படுத்து றெஸ்ற் பண்ணியிருக்கலாமே?”

“இல்லையம்மா… முக்கியமான ஒரு அலுவல் இருக்கு.”
கால்கள் வெளியேறி நடந்தன. அவை அவனைத் தம் போக்கிற் கொண்டு சென்றன. அட, லைபிரரிக்குப் போகவேண்டுமென்றுதானே வெளிக்கிட்டு வந்தது? இப்போது பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்திருப்பதை உணர்ந்தான்.
பஸ்கள் வருகின்றன, போகின்றன. சனங்கள் யார் யாரையோ தேடுகிறார்கள். ஓடுகிறார்கள். ஏதாவது ஒரு பஸ்சில் தொற்றிக் கொள்கிறார்கள். தங்களுக்குத் தேவையானவர்களைக் கண்டு முகம் மலர்ந்து பேசுகிறார்கள். தாமரா எந்த பஸ்சில் வருவாள் என அந்த றூட் நம்பரைத் தேடினான். அவள் வந்து இறங்கும்போது ஓடிப்போய் அவள் முன் நிற்க வேண்டும்… “தாமரா!”… அவளுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். அவள்மீது பொய்க்கோபம் கொள்ளவேண்டும். “ஏன் இவ்வளவு நாளும் என்னை விட்டுப் போயிருந்தாய்?” அவள் அசந்து போய் விடுவாள். “அட இந்த ஆளுக்குக் கோபிக்கக் கூடத் தெரியுமா?” எனக் கண்களை அகல விரிப்பாள்.
சுமார் அரைமணித்தியாலத்துக்கு ஒரு தடவை அந்த றூட் பஸ் வந்துகொண்டிருந்தது. ஆனால் தாமராதான் வரவில்லை. சரியான கர்வக்காரி போலிருக்கிறது. ஏன் அவளுக்குத் தன்மேல் அவ்வளவு கோபம்? அவள் மனம் நோகும்படி நடந்துகொண்டது என்ன? எவ்வளவுதான் எண்ணி எண்ணிப் பார்த்தாலும் ஒன்றும் பிடிபடவில்லை.

பஸ் வந்து நின்று ஆட்கள் இறங்கும்போது கடைசியாக ஆவது இறங்கிவருவாள்.. எனக் காத்து நின்றான். தாமரா பாவம், முண்டியிடித்துக் கொண்டு மற்றவர்களுடன் இறங்கமாட்டாள்.. ஒதுங்கி நின்று கடைசியாகத்தான் இறங்கி வருவாள்.. எனத் தன்னையே தேற்றிக்கொண்டு ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புடன் நின்றான். ஆனால் ஒரு பஸ்சிலேனும் தாமரா வரவில்லை. பொறுமை இழந்து எரிச்சல் வந்தது. கடைசி ஆள் இறங்கும் வரை காத்து நிற்க முடியாது. இனி உள்ளே ஏறிச் சென்று பார்க்க வேண்டியதுதான். பஸ் வந்ததும் இறங்குபவர்களையும் தள்ளிக்கொண்டு கண்டக்டரின் கத்தல்களையும் பொருட்படுத்தாது ஏறிவிடுவான்.

ஒவ்வொருவரையும் விலத்தி, விலத்தி ஒவ்வொரு இருக்கையாகப் பார்த்துப் பார்த்து… “தாமரா… தாமரா”… இல்லை அவள் வரவேயில்லை! எனினும் மனம் தளராது வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்துவிடுவான். அடுத்த பஸ் எப்போது வரும் எனக் கண்கள் வழியை வழியைப் பார்க்கும்.

“யாரையாவது பார்க்க வெயிட் பண்ணுறீங்களா?”

அவன் திடுக்குற்று, கேள்வி கேட்டவரைத் திரும்பிப் பார்த்தான். “ஓம்… இல்லை…. இல்லையே.” தடுமாறினான்.

அவரது பார்வை மாறியது. அவனைச் சற்று வினோதமாகப் பார்த்தவாறு பக்கத்தில் நின்றவருக்கு ஏதோ சொன்னார். அவனுக்குக் கூச்சமாயிருந்தது. பயமாயுமிருந்தது. குண்டு வைக்க வந்தவனென்று பொலீசில் மாட்டிவிடவும் கூடும். அவர்களது பார்வையிலிருந்து ஒளித்து வேறு இடம் போய் நின்றான்.
அந்த றூட் நம்பர் பஸ் அடுத்தது எத்தனை மணிக்கு வரும் என அடிக்கடி ரைம் கீப்பரிடம் விசாரித்தான். ஒரு கட்டத்;துக்கு மேல் ரைம் கீப்பர் பொறுமை இழந்து கத்தினார்.

“இது தான் கடைசி பஸ்… இனி வராது… போ… போ… யனவா… யன்ட!”

சரி இனி அறைக்குப் போகவேண்டியதுதான் எனத் தோன்றினாலும்… “ரைம் கீப்பர்… சும்மா கோபத்தில் கத்தியிருப்பான்.. இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்க்கலாம்.” என நினைத்துக் கொண்டு அமர்ந்தான்.

அப்படி எவ்வளவு நேரம் இருந்தானோ… பொழுது இருளைக் கொண்டுவந்து மெல்ல மெல்ல அன்றைய நாளை மூடத் தொடங்கியது.

எழுந்து அறைக்கு நடந்தான். அறையும் தன் மகிழ்ச்சிகளையெல்லாம் இழந்து கிடந்தது. என்ன செய்யலாம் என்று தோன்றவில்லை. மேசையில் சில புத்தகங்கள் கிடந்தன. ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தான். வாசிக்க மனம் மறுத்தது. ஓரிரு பக்கங்கள் வாசித்த பின்னரும் என்ன வாசித்தேன் என்பது மனதில் பதியாமலிருப்பதை உணர்ந்தான். வாசித்த பகுதியை திரும்ப வாசித்தான். இது வேண்டாம் என மூடிவைத்துவிட்டு இன்னொரு புத்தகத்தைக் கையிலெடுத்தான். அதிலும் மனம் லயிக்கவில்லை. தெருவில் யாராவது நடந்துவரும் காலடி ஓசை கேட்கும்போதெல்லாம் இருப்புக் கொள்ளவில்லை. “அது தாமராவாக இருக்குமோ…” ஜன்னலூடு எட்டிப் பார்த்தான்.. ஒரு வேளை தாமரா பயணம் செய்த பஸ் தாமதமாக வந்திருக்கக் கூடும்.

தாமராவின் காலடி ஓசை அவனுக்குப் பரிச்சயமானதுதான். அவள் நடந்து வருகையில் அந்த ஓசையைக்கொண்டே இது தாமரா எனத் தெரிந்துவிடும். இப்படித் தெருவில் போவோர் வருவோரையெல்லாம் அது தாமராவாக இருக்குமோ என்று பார்க்கத் தேவையில்லைதான். ஆனால் அதை மனசு கேட்க வேண்டுமே.

“தம்பி சாப்பிட வாங்க…” – அம்மாவின் குரல் வெளியே கேட்டது. கனவுகள் கலைந்தவன் போல் எழுந்தான். இன்று முழுதும் சாப்பிடவில்லை. சில நாட்களாக சரியான சாப்பாடும் உறக்கமும் இல்லாததனாலோ என்னவோ அயர்ச்சியாயிருக்கிறது. உடல் தளர்ச்சியடைந்து காய்ச்சல்காரனைப் போல சோர்வாயிருக்கிறது. ஒரு பாட்டு நினைவில் வந்தது. குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்துவிடலாம். குடித்தால் தாமராவை மறந்திருக்கலாமா? அவனுக்குத் தெரியவில்லை. தாமராவை மறக்கமுடியுமானால் இந்த வேதனைகள் அற்று இருக்கலாமா? அதுவும் தெரியவில்லை.

அம்மாவின் குரல் மீண்டும் அழைத்தது. சாப்பிட்டுவிட்டுப் பனடோல் போடலாம் என எண்ணிக்கொண்டு எழுந்தான்.
சாப்பாடு மேசையில் அமர்ந்திருந்தபோது அம்மா ஒரு புதிய செய்தியைச் சொன்னாள்.

“நாளைக்கு நான் அண்ணன் வீட்டுக்குப் போறன்… திரும்ப வாறதுக்கு ராவாகும்…”

அவன் எதிர்பாராத செய்தி அது. அண்ணன் வீடு என அம்மா குறிப்பிடுவது தாமராவுக்கு மாமா வீடு. அவனுக்கு உற்சாகம் பொங்கியது.
“ஏன் அம்மா… தாமராவைக் கூட்டி வரவா போறீங்கள்?” அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாது – தனது தவிப்பை அம்மாவுக்குக் காட்டிக்கொடுத்த மாதிரியாகிவிட்டது. இந்த மனது அவசரக் குடுக்கைமாதிரி தன்னிச்சையாகச் செயற்பட்டுவிட்டது.

“தாமராவைக் கூட்டி வரத்தான் வேணும்…. தம்பி!.. அவளில்லாமல் எனக்கும் ஒரு கை முறிஞ்ச மாதிரித்தான் கிடக்கு.. அங்க கோயில்ல திருவிழா நடக்குது… நாளைக்குத் தேர்… போனால் தேரையும் பார்த்திட்டு பிள்ளையையும் கூட்டிவரலாம்.”

தாமரா போன பின்னர் தன்னில் ஏற்பட்ட மாற்றத்தை அம்மா கவனித்திருப்பாள் போலிருக்கிறது என நினைத்தான். “எனக்கும் கை முறிஞ்ச மாதிரி” என அம்மா குறிப்பிட்டது அந்த அர்த்தத்தில்தான் போலும். அம்மாவுக்கு எந்த வித்தியாசத்தையும் காட்டாமலிருக்க முயன்றதெல்லாம் தோல்வியற்தான் முடிந்திருக்கிறது.

எது எப்படியோ தாமரா வரப்போகிறாள் என்ற செய்தியொன்றே போதும். நீண்ட நாட்களாகத் தண்ணீரைக் காணாதிருந்த செடியொன்று எதிர்பாராமல் வந்த மழையில் நனைந்தது போன்ற உயிர்ப்பும் சிலிர்ப்பும் ஏற்பட்டது. தாமரா விட்டுப் போனது ஏனென்று புரியாமல் தனக்குத் தானே எத்தனை காரணங்களைக் கற்பித்துக் குழம்பியிருக்கிறான். ஆனால் தாமரா கோயிற் திருவிழாவுக்குத்தான் போயிருக்கிறாள் என்பதை அறிந்ததும் மனம் இலகாகிவிட்டது. தாமரா தனது குறும்புத் தனத்தை இந்த விஷயத்திலும் காட்டிவிட்டாள் என ஒரு பொய்க்கோபமும் தோன்றியது. அவள் தன்னைச் சோதித்துப் பார்ப்பதற்குத்தான் இப்படியொரு வேடிக்கையைச் செய்திருப்பாளோ? ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் தாமரா தன்னை ஆழம் பார்க்க முயன்றது அவனுக்கு நினைவில் வந்தது. ஆனால் அவளுக்கு எதுவும் பிடிபடாமற் போயிருக்கும். அப்போதெல்லாம் மிக அவதானமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமலிருந்திருக்கிறான். தான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அல்லது அவனுக்குத் தன்னை இப்போதுதான் புரிந்திருக்கிறது. பிரிவுதான் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.. தாமரா அவனுக்கு வேண்டும். தாமரா இல்லாமல் அவன் இல்லை. தாமரா வந்ததும் இதுபற்றியெல்லாம் பேசவேண்டும். ஒளித்துப் பிடிக்கிற விளையாட்டு இனியும் வேண்டாம். மனம் திறந்து பேசுவோம். “ இதுதான் நான். இதுதான் என் மனசு” எனத் தாமராவுக்கு காட்ட வேண்டும்.

படுக்கையில்… கண்களை மூடிக்கொண்டு உறங்காமலே கனவுகளில் மிதந்தான். தாமரா வரும்போது அவளோடு எப்படிப் பேசுவது, எப்படிப் பொய்க்கோபம் கொள்ளலாம்… ஒரு நாளைக்காவது அவளோடு பேசாது முகத்தை உம்மென்று வைத்திருக்கவேண்டும். இந்த நினைவுகள் எல்லாமே இனிமையாயிருந்தது. ஒரு மௌனகீதம் மீட்டப்பட்டுக் கொண்டிருக்கும் சுகம் கிடைத்தது.

டண்…டண்… டண்

இத்தால் சகலருக்கும் அறியத் தருவது யாதெனில் தாமரா மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டாள். அப்படியொரு சந்தோசம் அவனுக்கு! காண்பவர்களிடமெல்லாம் அதைச் சொல்லி மகிழவேண்டும் போல மனதுக்குள் ஒரு குதூகலம் பிறந்திருந்தது. அது யாரைப் பார்த்தாலும் முகத்தை மலர்த்திப் புன்னகைக்க வைத்தது. தொழிலகத்தில் சில நண்பர்கள் கேட்டார்கள்;: “முகம் வெளிச்சிருக்கு…என்ன விஷேசம்?” அவன் ஏதும் பேசவில்லை. யாரிடமும் வாய் திறக்கவில்லை. ஒரு புன்னகையை மட்டும் கேட்டவர்களுக்குப் பதிலாகக் காட்டினான். சொல்லாமல் மனதுக்குள் பூட்டிக்கொண்டு திரிவதும் ஒருவித சுகம்தான். மல்லிகா நேரடியாகவே கேட்டுவிட்டாள். “என்ன வீட்டுக்காரி வந்தாச்சா…? முகத்தில் எல்லாம் தெரியுது.”

அவன் முகம் சிவந்து கூச்சமடைந்தான். மல்லிகா இரட்டை அர்த்தத்தில் வீட்டுக்காரி எனக் குறிப்பிட்டது மகிழ்ச்சியளித்தது. தாமராவை இப்போதெல்லாம் தன் வீட்டுக்காரியாக… மனைவியாக… கற்பனை செய்து பார்க்கத் தொடங்கியிருந்தான்.

அவனுக்கு வீட்டுக்குப் போகவேண்டும் போலிருந்தது. தாமராவுடன் காலையில் சரியாகப் பேசாமல் வந்தது மன உளைச்சலைத் தந்தது.
தாமரா அதிகாலையிலேயே எழுந்து குளித்து முகமலர்ச்சியுடன் அவன் அறையிலிருந்து வெளிப்பட்டபோது எதிர்ப்பட்டாள். அதை அவன் கண்டுகொள்ளாதவன்போல குளியலறைப் பக்கம் போய்விட்டான். சாப்பாட்டு மேசையில் அவள் பேச எத்தனித்தபோதெல்லாம் அவன் அவளை அலட்சியப்படுத்தினான். வேலைக்குக் கிளம்பியபோது அவள் சாப்பாட்டுப் பார்சலைக் கொடுத்தாள். அவன் “நான் கடையில பார்த்துகொள்ளுறன்… தேவையில்லை.” எனப் புறக்கணித்து வந்துவிட்டான். அவளை மனம் நோகச்செய்வதில் ஒரு விளையாட்டுத்தனம் இருந்தது. மாலையில் வந்து அந்தக் கோபமெல்லாம் சும்மா விளையாட்டு எனத் தெரியப்படுத்தும் போது திறில்லாயிருக்கும்;.

ஆனால் இப்போது கவலை மேலிட்டது. ஒருவேளை தாமராவும் கவலையில் சாப்பிடாமலே பார்த்துக்கொண்டிருப்பாளோ? மனம் சஞ்சலப்பட்டது. தாமராவிடம் நிறையப் பேசவேண்டும். “நீயில்லாமல் நான் எப்படித் தவித்துப் போனேன் தெரியுமா?” என அவளுக்கு பக்கத்தில் இருந்து கதை கதையாகச் சொல்லவேண்டும். நாளைக்கு லீவ் போடலாமா?

“உங்களோட… ஒரு… விஷயம்… பேசவேணும்”.

அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. எப்படி அவளிடம் அந்தக் கதையை ஆரம்பிப்பது என்று புரியாத தவிப்பு அவனிடமிருந்தது. தாமரா முந்திக்கொண்டுவிட்டாள். அவளும் அது போன்ற மன நிலையில் இருந்திருக்கிறாள். எனவே தனது பிரச்சினை மிக ஈஸியாக முடியப்போகிறது என்ற நம்பிக்கை துளிர்த்தது அவனுக்கு.

“அதை… எப்படிச் சொல்லுறதென்று… தெரியாமலிருக்கு!”

தாமரா பேசுவதை நிறுத்தி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சொல்லுங்கோ தாமரா!”

“எனக்கு… எல்லாம் ஒரே… குழப்பமாயிருக்கு… எப்படி முடிவு எடுக்கிறதென்றே தெரியல்ல… அதுதான் உங்களிட்டையே கேட்கலாம் என்று நினைச்சன்.”

அவனது மனம் இறக்கை விரித்துப் பறந்தது. மிதந்து பறக்கும் சுகத்தை அனுபவித்தான். “எனக்குத்….தெரியும்… தாமரா… கிட்டத்தட்ட… என்ர நிலைமையும் அதுதான்!”

தாமரா அவசரப்பட்டாள், “முதல்ல நான் சொல்லுறதைக் கேளுங்க…”

எனினும் சொல்லாமலே மௌனம் காத்தாள். பின்னர் தொடர்ந்தாள்..

“நினைவிருக்கா?… இங்கை வீட்டில ஒருமுறை வந்து போனவர்… ரஜீவன்?” எதிர்பாராத ஒரு கொந்தளிப்பு. பறக்கவும் முடியாது இறக்கை வலித்தது.

“நினைவிருக்கு… சொல்லுங்கோ…”

“இன்ஜினியரிங்… ஸ்கொலசிப் கிடைச்சு… அமெரிக்காவுக்குப் போனவர்… நாலு வருசத்துக்கு முதல்ல… பயணம் சொல்ல வந்த நேரம்தான்… இங்க வீட்டில கொஞ்ச நாள் நின்றவர்… போய் கொஞ்ச காலத்தில் கடிதம் போட்டிருந்தாh.. தனிமை… ஹோம் ஸிக்…. விரக்தி… இப்படிக் கனக்க எழுதி தனக்கு அடிக்கடி கடிதம் எழுதச் சொல்லி…”

“நீங்கள்… எழுதினீங்களா?” – அவன் முகம் பரிதாபகரமாக மாறியது.

“நான்… எழுதயில்ல… பிறகு அடிக்கடி அவற்றை கடிதங்கள் வந்தது. பாவம் தூர தேசத்தில் தனிய இருக்கிறவர்… ஆறுதவலாயிருக்கட்டுமென்று எழுதினன். காலப்போக்கில அவரது கடிதங்களில் தொனி மாறிவந்தது. அவர் என்னை விரும்புகிறாராம்…. எனக்குக் குழப்பமாயிருந்தது. கடிதம் எழுதாமல் விட்டன். ஆனால் அவர் விடயில்லை… இப்ப என்னவென்றால்… தான் ஃபைனல் எக்ஸாம் எடுக்கமாட்டன் என்று முரண்டு பிடிக்கிறார். கடிதத்துக்கு மேல கடிதமாய் வருது… நான் நல்ல முடிவு சொன்னால்தான் பரீட்சை எழுதுவாராம்…”

அவனது குரல் அடங்கிப்போய் வெளிப்பட்டது. “நீங்க… என்ன பதில் எழுதினீங்க?”

“ஒன்றும் எழுதவில்லை… அதுதான் உங்களைக் கேட்கிறன். உங்களை மறந்திருக்கலாமோ என்று பார்க்கதான் மாமா வீட்டில போய் நின்றன்…”
பறவை சுடப்பட்டு விழுந்தது. இதயம் துடிதுடித்தது… இன்னும் உயிரைத் தக்க வைத்திருக்க முடியுமா எனத் தத்தளித்தது. அவன் பேயறைந்தவன் போல தாமராவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“நீங்கள் இதுக்கு ஒரு முடிவு சொல்லவேணும்.”

நிதானித்து கண்களை மூடி, மூச்சை ஆழமாக இழுத்து, இலகு நிலைக்கு வர முயன்றான்.

“தாமரா.. நீங்கள்… ரஜீவனை… விரும்புறீங்களா?”

“இல்ல… அப்படியொன்றும் இல்ல…” அவளிடமிருந்து சட்டெனப் பதில் வந்தது.
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான். ரஜீவனின் முரட்டுதனமான அன்பும், உண்மையிலேயே பரீட்சை எழுதாமல் விட்டால் ஏற்படப்போகும் இழப்பும் ஒருகணம் நினைவில் வந்து போயின. பின்னர் கேட்டான். “சரி இதுக்குப் பதில் சொல்லுங்கோ… ரஜீவன் உங்களை ஆழமாகக் காதலிக்கிறார்… நீங்கள் விரும்பயில்ல… என்று சொன்னால் அது அவரை ஏதாவது விதத்தில.. பாதிக்கக்கூடும். அவரது வாழ்க்கை மோசமாய்ப் போய்விடவும் கூடும்… அதை உங்களால் தாங்கிக்கொள்ளமுடியுமா?”

“இல்ல… தாங்கமுடியாது.. அவரை நினைச்சாலும் பாவமாய்த்தானிருக்கு…”
“அப்ப… உங்களுடைய மனசில அவருக்காகவும் ஒரு இடம் இருக்கு.”

தாமரா அவன் கூறுவதை மறுக்க முடியாதவள்போல மௌனித்திருந்தாள். பின்னர் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.

“நான் என்ன செய்யயேலும்? என்னால யாரும் ஹேர்ட் பண்ணப்படக் கூடாது… அதுதான் என்ட கவலை…”

அவன் தாமராவையே சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த பார்வையில் இரக்கம், கருணை… கவலை…ஏக்கம்…ஏமாற்றம்.
தனக்கு ஒண்ணே ஒண்ணு… கண்ணே கண்ணு என்று… அது தாமராதான் என்று… அவனது காதல் உணர்வுபர்வமாயிருந்திருக்கிறது. ஆனால் தாமரா காதலை அறிவுப+ர்வமாய் அணுகியிருக்கிறாள். ரஜீவனைத் தெரிவு செய்வதால் அவளது வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையக்கூடும். அவளது மனதில் இவரா… அல்லது அவரா என்ற சொய்ஸ் இருந்திருக்கிறது. எனவே முடிவெடுப்பதும் அவனுக்கு மிக ஈஸியாயிருந்தது. இதுவும் ஒரு வித மனக்கணிதம்தான். தாமராவைக் கடைசி முறையாகப் பார்ப்பது போன்ற சோகத்துடன் பார்த்துச் சொன்னான்.

“எக்ஸாமை… எழுதச் சொல்லி…. ரஜீவனுக்குக் கடிதம் எழுதுங்கோ…”

– மல்லிகை 2000 – காற்றோடு போதல் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு 2002, எம்.டி குணசேன அன் கம்பனி, கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *