கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 3,764 
 

டொக்…டொக்..டக்…டக்..தட்..தட்… இந்த சத்தம் பாரிஜாதம் திருமணமாகி முதன் முதல் தாம்பத்யம் நடத்த கணவன் அருகில் படுத்திருக்கும் போது கேட்டது.

இது என்னங்க சத்தம் ? கணவன் முருகேசனிடம் கேட்டாள். பக்கத்துல மோல்டிங் வேலை நடக்குது.

இராத்திரி பத்து மணிக்குமா?

இராத்திரி பகல் அப்படீன்னு கிடையாது. காலையில இருந்து மறு நா விடியற வரைக்கும் கேட்டு கிட்டே இருக்கும்.

அதன் பின் அவர்கள் தூக்கத்திற்குள் போகும் வரைக்கும் கேட்டு கொண்டே இருந்தது..

பாரிஜாதம் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு போக மறுத்து விட்டாள்..அம்மா எவ்வளவோ கேட்டும் வளைகாப்பு முடிந்து அவள் வீட்டிற்க்கு போய் நான்கைந்து நாட்களிலேயே திரும்பி வந்து விட்டாள்.

கணவனிடம் அவளுக்கு பாசம் ஜாஸ்தி, அதான் அங்க இருக்க முடியலை. அவள் உறவினர்கள் கிண்டல் கேலி செய்தனர். அவள் கவலைப்படவில்லை.

முருகேசன் கூட கேட்டான், என் மேலே அம்பிட்டு பாசமா?

அவள் மெல்லிய புன்னகையுடன் முகத்தை காட்டியதோடு சரி. பக்கத்தில் அதே டொக்…டொக்..டக்…டக்..தட்..தட் சத்தம் தாளம் தப்பாமல் கேட்டு கொண்டிருந்தது.

ஏங்க பிரசவத்தை வீட்டிலேயே வச்சுக்கலாமா? முறைத்தான் முருகேசன்.

எந்த உலகத்துல இருக்கே? ஒண்ணு கிடைக்க ஒண்ணு ஆச்சுன்னா என்னாகிறது. பக்கத்துல கவர்ன்மெண்ட் ஆசுபத்திரிக்கே போயிடலாம்.

மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து சத்து மாத்திரை கொடுத்து செல்லும் நர்சம்மா ஆசுபத்திரியில் இருந்ததால் இவர்கள் பிரசவ வலி வரும்போதே சேர்த்து கொண்டார்கள்.

சுகப்பிரசவம்தான், பொண்ணு பிறந்திருக்கா, காதில் குழந்தையின் அழுகுரல் கேட்டு விழித்தவள், கணவனிடம் மெல்ல முறுவலித்து பொண்ணு உங்களை மாதிரி என்றாள்.

இல்லை இல்லை உன்னைய மாதிரி இருக்காள். அவன் குரலில் பெருமிதம்.

இரண்டாம் நாள் கணவனிடம் ஏங்க வீட்டுக்கு போலாம், அவங்க எப்ப போக சொல்லுவாங்களோ அப்பத்தான போக முடியும். பதில் சொன்ன முருகேசன் இங்க உனக்கு என்ன குறை, நல்லா சாப்பாடு கொடுக்கறாங்க,பால் கொடுக்கறாங்க, வீட்டில போனா நமக்கு இதெல்லாம் கிடைக்குமா? இல்லை அப்படித்தான் ஏதாவது வேணுமின்னா நீயோ நானோ வெளியே போய் வாங்கிட்டு தான வரணும்.

என்னால இங்க இருக்கவே முடியலை. இராத்திரியானா தூக்கம் வரவே மாட்டேங்குது.

அவளின் கவலைக்கு மருந்து போல மறு நாள் இவர்களை டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி விட்டார்கள்.

கைக்குழந்தையுடன் வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு அப்பொழுதுதான் பெருத்த நிம்மதி வந்தது. டொக்…டொக்..டக்…டக்..தட்..தட் அப்பொழுதும் அந்த சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.

இப்பொழுது இந்த சத்தம் குழந்தைக்கு பெருத்த இடைஞ்சலாக இருந்தது. முருகேசன் கூட சே..இந்த சத்தத்துல குழந்தை அடிக்கடி எந்திரிச்சுக்கறா. சலித்து கொண்டான். நம்ம குழந்தை எந்திரிக்கறதுக்கு அந்த சத்தத்தை ஏங்க குறை சொல்றீங்க. நாளானா எல்லாம் சரியாய் போயிடும்.

மூன்று. வருடங்களில் அடுத்த குழந்தைக்கும் தாயானாள் பாரிஜாதம். டொக்…டொக்..டக்…டக்..தட்..தட் இந்த சத்தமும் பக்கத்தில் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

இரண்டாவது பையனாய் பிறந்தது. இப்பொழுது வீடு நால்வருக்கும் போதுமான அளவு இல்லை என்று முருகேசனுக்கு தோன்றியது. இருந்தாலும் இதை விட குறைந்த வாடகையில் எங்கு கிடைக்கும். குடும்பத்தில் நால்வராகி விட்டதால் மிகுந்த சிரமப் பட்டான். பாரிஜாதம் நானும் வேலைக்கு போறேன் சொல்லிவிட்டு அக்கம் பக்கம் வசதியாக இருந்தவர்கள் வீடுகளுக்கு வீட்டு வேலை செய்ய போனாள். பொண்ணு ஓரளவு விவரம் வந்து விட்டதால் இரண்டு மூன்று மணி நேரம் தம்பியை பார்த்து கொள்கிறாள். டொக்…டொக்..டக்…டக்..தட்..தட் இந்த சத்தம் இப்பொழுதும் அவர்களுக்கு கேட்டு கொண்டுதான் இருக்கிறது.

புள்ளைய ஸ்கூல்ல சேர்த்து விடணும், வீடு மாறனும், முருகேசன் மனைவியிடம் சொன்னான். இங்க பாருங்க புள்ளைய ஸ்கூல்ல சேத்துடலாம், ஆனா வீடு மட்டும் காலி பண்ண வேண்டாம். அவள் குரலில் தென்பட்ட உறுதியை கண்டு திகைத்தான் முருகேசன்.

இவளுக்கு இப்படி என்ன பிடிப்பு இந்த வீட்டின் மீது. புரியாமல் சென்றான் முருகேசன்.

புள்ளை ஒண்ணாப்பு வகுப்பு சேர்ந்து விட்டாள். பையனை எப்படி பார்த்து கொள்வது? இவள் வேலை செய்யும் பங்களா அருகிலேயே வீடு ஒன்று வாடகைக்கு வந்தது. இல்லை புள்ளை படிக்கற ஸ்கூல் பக்கமாவது வீட்டை மாத்திட்டு போகணும். எதுக்கும் பிடி கொடுக்காம இருக்கறாளே இந்த பாரிஜாதம் சலித்துக்கொண்டான் முருகேசன்.

இந்த ஒரு வாரமாக பக்கத்தில் எப்பொழுதும் கேட்டு கொண்டிருக்கும் சத்தம் கேட்கவே இல்லை. என்ன ஆச்சு அந்த மோல்டிங் கம்பெனிக்கு?

முருகேசனிடம் மறு நாள் கேட்டாள், என்னாச்சுங்க, பக்கத்துல இப்ப வெல்லாம் சத்தமே வர்றதில்லை.

அந்த வீட்டு அய்யன் இறந்திட்டாரு. அதனால அவங்க பையனால அந்த கம்பெனிய பார்த்துக்க முடியலைன்னு கம்பெனி சாமானை எல்லாம் காலி பண்ணி வேறு ஒருத்தருக்கு கொடுத்துட்டான். இப்ப அவங்க அந்த வீட்டை குடித்தனத்துக்கு வாடகைக்கு விட்டுட்டாங்க

மறு நாள் காலை முருகேசன் வேலைக்கு கிளம்பு முன் ஏங்க நம்ம புள்ளை படிக்கற ஸ்கூல் பக்கம் ஏதோ வூடு காலி இருக்குன்னு சொன்னீங்களே அதை பேசி முடிங்க.

புரியாமல் மனைவியை பார்த்தான் முருகேசன். திடீரென்று ஏன் இந்த முடிவை எடுத்தாள்.

பாரிஜாதத்திற்கு அந்த சத்தம் மீண்டும் கேட்காதா என்று ஏக்கமாக இருந்தது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *