கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 15,763 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புழுக்கம் நிறைந்த அந்தக் கோடையிரவில், நகருக்கு வெளியே ஒதுக்குப் புறமாயமைந்த அந்தப் பாதையில் ஒரு காட்சியைக் கண்டேன். சேறு நிறைந்த குட்டை யொன்றின் நடுவே காலூன்றி நின்றுகொண்டு, சிறு பிள்ளையைப் போல, சகதியை வாரியடித்துக்கொண்டிருந் தாள் ஒரு பெண். காலூன்றி நின்றவாறே, ஆபாசமான பாட்டொன்றை மூங்கைக் குரலில் பாடிக்கொண்டிருந் தாள்.

அன்று ஊருக்குள் சரியான புயல் அடித்து ஓய்ந் திருந்தது; பலத்த மழை கரிசல் பூமிப்பாதை முழுவதையும் சேறாக்கிவிட்டது. அந்தக் குட்டை ஆழம் உள்ளது. அந்தப் பெண் முழங்காலளவு ஆழம் வரையிலும் அதில் இறங்கியிருந்தாள். அவளுடைய குரலை வைத்து நிதா னித்தால், அவள் குடித்திருக்கிறாள் என்பதை அறிய லாம். ஆட்ட பாட்டத்தால் களைப்புற்று அவள் சாய்ந் தால், அந்தச் சேற்று நீரில் அவள் எளிதில் மூழ்கிவிடக் கூடும்.

நான் எனது நெட்டையான பூட்சுகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு, குட்டைக்குள் இறங்கி அவளது கரங் களைப் பற்றியிழுத்துக் கரைக்குக் கொண்டு வந்தேன் முதலில், அவள் திடுக்கிட்டுப் போனாள். வாய் திறவாது, என்னைப் பின்தொடர்ந்தாள். பிறகு திடீரென்று தனது முழு உடம்பையும் ஒரு உலுப்பு உலுப்பி , தனது கையை விடுவித்துக் கொண்டு, என் மார்பில் அறைந்தாள், கூச் சலிட்டாள். ” உதவிக்கா வாரே!”

மீண்டும் மீண்டும் என்னையும் இழுத்துக் கொண்டு, அந்தக் குட்டைக்கு ஓடினாள்.

“பிசாசுப் பயலே ! நான் போகமாட்டேன். என்னை விட்டுவிட்டு நீ போய்விடு, நானும் உன்னை விட்டுப் போகிறேன்.. உதவியா …” அவள் குழறினாள்.

இராக் காவலாளி இருளிலிருந்து தோன்றினான்: எங்களிடமிருந்து ஐந்தடி தூரத்தில் நின்று கொண்டு கடூர மான குரலில் கேட்டான் :

“யாரங்கே லூட்டி யடிப்பது?” நான் அவனுக்கு அந்தப் பெண் சேற்றில் மூழ்கப் போனதையும், ஆகவே அவளை நான் வெளியே இழுத்த தையும் தெரிவித்தேன். காவலாளி அந்தக் குடிகார ஸ்திரீயை உற்று நோக்கி, காறித் துப்பிவிட்டுச் சொன்னான்:

“மாஷ்காவா ! வா வெளியே.”

“மாட்டேன்”

“நான் சொல்லுகிறேன் – வா வெளியே”

“நான் வரவே மாட்டேன்.”

சிறுக்கி உன்னை உதைப்பேன் ” என்று காவ வாளி அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு, என்னிடம் திரும்பிச் சொன்னான். அவள் இங்கே பக்கத்திலேதான் வசிக்கிறாள். அவுரிக் கட்டைகள் பொறுக்கி, ஜீவனம் செய்கிறாள் . பேர் மாஷ்கா….ம்…. சிகரெட் இருக்கிறதா?

நாங்கள் சிகரெட்டுகள் பற்றவைத்தோம். அவள் அந்தச் சேற்றுக்குள் இறங்கிக் கொண்டே அடிக்கடி சாத்த மிட்டாள்.

அதிகாரமா செய்கிறீர்கள்! எனக்கு நான் தான் அதி காரி, வேண்டுமென்றால், இதிலே நான் குளிக்கக்கூடச் செய்வேன். அது என் இஷ்டம்.”

வா. உன்னைக் குளிப்பாட்டுகிறேன்” என்று அந்தத் தாடி வளர்த்த தடிக் காவலாளி சொன்னான். “இரவெல் லாம் இப்படித்தான். வீட்டிலே இவளுக்கு ஒரு நொண்டிப் பிள்ளையும் இருக்கிறான்.”

“இங்கிருந்து அவள் தொலைவிலா வசிக்கிறாள்?” எனக்குப் பதில் கூறாமலே அவன் சொன்னான்: “அவளைச் சுட்டுத்தள்ள வேண்டும்.”

“அவளை வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும்” என்றேன் நான். அந்தக் காவலாளி சிரிப்பது தாடிக்குள் தெரிந்தது; சிகரெட்டை எனது முகத்துக்கு நேராய் ஏந்திப் பிடித்தவாறே அந்தச் சகதிப் பாதையில் நடந்தான்.

“கூட்டிக்கொண்டு போ. ஆனால் அவள் மீது படிந் திருக்கும் சகதியைக் கவனி.”

அதற்குள் அந்தப் பெண் சேற்றுக் குட்டையில் அமர்ந்து கொண்டு. சகதியை வாரியிறைத்துக் கொண்டு, மூங்கைக் குரலில் பயங்கரமாய்க் கத்தினாள்.

“அந்த -ஆழமான – கடலிலே”

கொழு கொழு வென்றிருக்கும் அந்தச் சேற்று நீரில், பரந்த வானக் கருமையின் ஓரத்திலே நின்று மினுங்கும் பெரிய தாரகை ஒன்று பிரதிபலித்தது. அந்த நீரில் ஒரு சிற்றலை வீசினதால், பிரதிபிம்பம் மறைந்தொழிந்தது. மீண்டும் நான் அந்தக் குட்டையில் இறங்கி, அவளுடைய கடகத்தில் கைகொடுத்துத் தூக்கி, என் முழங்காலால் அவளைத் தாங்கி, வேலிப் புறமாகக் கூட்டி வந்தேன். அவளோ கைகளை ஆட்டிக்கொண்டு , இடக்குப் பண்ணிக் கத்தினாள்.

“அடிக்கத்தானே செய்வே! அடி. நல்லா அடி. பரவாயில்லெ. சீ. மிருகமே! கொலைகாரா போரியா ! இல்லியா! அடிக்கவா செய்தே!”

அவளை வேலியின்மீது சாத்தி வைத்து அவளது இருப்பிடத்தைக் கேட்டேன். அவள் தனது வெறியேறிய தலையை உயர்த்தி, கரும்புள்ளி போன்ற கண்களால் கூர்ந்து பார்த்தாள். அவளுடைய மூக்கு உள் வாங்கிப் போயிருப்பதைக் கண்டேன். வெளியே நீட்டிக்கொண் டிருந்த பாகம் , ஏதோ பித்தானைப் போலத் தானிருந்தது. அவளுடைய மேலுதடு கோரைப் பட்டுக் கோணி ஒதுங்கி யிருந்தது; சிறுபற்கள் வெளியே தெரிந்தன; அந்த வதங் கிய முகத்தில் வெறுக்கத்தக்க புன்னகை நெளிந்தது.

“சரி, நாம் போகலாம்” என்றாள் அவள்.

நாங்கள் இருவரும் அந்த வேலிப் புறமாகவே சென் றோம்; அவளுடைய சட்டையில் படிந்திருந்த சேறெல்லாம் என்னுடைய கால்களில் தெறித்து விழுந்தது.

“வா – என் அன்பே!” அவள் அமைதியோடு முன கினாள்.

“உள்ளே, கூட்டிச் சென்று உனக்கு வசதி பண்ணு கிறேன்.”

அவள் என்னை ஒரு பெரிய இரட்டை மாடி வீட்டு முற்றத்துக்குக் கொண்டு சேர்த்தாள். குருடனைப் போல ஜாக்கிரதையுடன் அவள் அங்கு கிடந்த பெட்டிகள். விற குக் குவியல்கள், வாளிகள், வண்டிகள் முதலியவைகளைக் கடந்து சென்று சுவற்றை யொட்டிய ஒரு பொந்தருகே நின்து என்னை அழைத்தாள்.

“உள்ளே வாருங்கள்”

அந்தப் பலமற்ற சுவரைப் பிடித்துக் கொண்டு, அந் தப் பெண்ணுடைய இடுப்பையும் சுற்றி வளைத்துப் பிடித் துக் கொண்டு அவளுடைய நிலைகொள்ளாத உடம்பை இழுத்தவாறே சென்றேன்; வழுக்கும் படிகள் வழியாக இறங்கினேன் ; கதவை நெருங்கியதும் நாதாங்கியைத் தட விப் பார்த்துத் திறந்தேன் ; திறந்தவுடன் ஒரு கறுப்புக் குதிக்குள் செல்லும் வாசல் நடையில் நான் நிற்பதை உணர்ந்தேன். அதற்குமேல் செல்ல எனக்குத் தைரியம் இல்லை .

அம்மா! நீ தானா அம்மா?” இருளிலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது. ‘நான் தாண்டா “

அழுகல் காற்றமும், கீலெண்ணெய் வாடையும் என் மூக்கைப் பிடித்தன. ஒரு தீக்குச்சி கிழிக்கப்பட்டது. அந்த வெளிச்சத்தில் ஒரு வெளிறிய குழந்தையின் முகம் தோன்றி மறைந்தது.

“வேறு யாருடா உன்னைத்தேடி வருவார்கள்? நானே தான்” என்று சொல்லிக் கொண்டே என்மீது சாய்ந்தாள்.

இன்னொரு தீக்குச்சி கிழிக்கப்பட்டது; ஏதோ கண்ணாடி கணீரென்றது; முதுமை தட்டிய மெலிந்த கரமொன்று சிறு தகர விளக்கை ஏற்றியது.

‘என் கண்ணே !” என்று கூறியவாறே, அவள் சுவர் மூலையில் தடுமாறிச் சாய்ந்தாள்; அங்கு தரையை ஒட்டினாற் போல் ஒரு பெரிய படுக்கை கிடந்தது.

விளக்கின் சுடரைக் கூர்ந்து கவனித்தவாறே , அந்தப் பிள்ளை புகை உமிழும் திரியைச் சரியாக்கினான். அவ னுடைய முகம் வக்கிர அமைதி கொண்டது; மூக்கு கூறி யது; உதடுகள் பெண்களுடையதைப்போல் தடித்திருந்தன. மெல்லிய பிரஷ்ஷைக் கொண்டு வரைந்த சித்திரம் போலிருந்தது அந்த முகம் ; இருளும் ஈரமும் நிறைந்த அந்தப் பொந்தில் அப்படிப்பட்ட முகத்தைப் பார்ப்பதே அதிசயந்தான், விளக்கைச் சீர்படுத்திய பின்பு, சுருங்கி வதங்கிப் போன கண்களை என் மீது திருப்பிக் கேட்டான் : “குடிச்சூட்டு வந்திருக்காளா?”

படுக்கையிலே கிடந்த அவனுடைய தாய் குறட்டை விட்டாள் ; கொர் கொர் என்ற தொரட்டிழுப்பும் வந்து கொண்டிருந்தது.

“அவளுடைய ஆடைகளைக் கழற்றவேண்டும்” என் றேன் நான். “கழற்றேன்” என்று பதில் கூறிவிட்டு, பையன் கண்களைத் தாழ்த்தினான். அவளது நனைந்த அங்கியை நான் கழற்ற ஆரம்பித்தபோது, அந்தப் பையன் அமைதியாகவும் வியாபாரார்த்தமாகவும் கேட்டான்.

“விளக்கு?- அதை அணைச்சுரட்டுமா?”

“எதற்காக?”

அவன் பதில் கூறவில்லை. நான் அவளை ஒரு மாவு மூட்டையைப் போல் கையாளும் போது அவனைப் பார்த்தேன். அவன் தரையில் கிடந்த கனத்த பலகைப்பெட்டியின் மேல் உட்கார்ந்திருந்தான்; பெட்டியின் மேல் “ஜாக்கிரதையுடன் கையாளவும். “என்.ஆர்.அண் கோ” என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. அந்தப் பையனுடைய தோள் அந்தச் சதுர ஜன்னல் பலகையில் சாய்ந்து பதிந்திருந்தது. சுவரை யொட்டி சில அரங்குகள் ; அவைகளில் சிகரெட்டுப் பெட்டிகளும் தீப் பெட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பையன் உட்கார்ந்திருந்த பெட்டியை அடுத்து, மஞ்சள் காகிதம் ஓட்டப் பெற்று மேசை மாதிரி விளங்கும் இன்னொரு பெட்டியும் கிடந்தது. தனது தோய் வற்ற கரங்களைப் பிடரியில் கோத்தவாறு , இருளடைந்த ஜன்னல் கதவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவளுடைய ஆடை முழுவதையும் களைந்தவுடன், ஈர உடைகளைக் கணப்பு வெக்கையில் போட்டேன். மூலை பிலிருந்த மண் பாண்டத்தில் என் கரங்களைச் சுத்தி செய்து, கைக்குட்டையால் துடைத்துவிட்டு, அந்தப் பையனை நோக்கிச் சொன்னேன்.

“சரி. அப்போ – நான் வருகிறேன்”

அவன் என்னைப் பார்த்தான்; வாய்க்குள் ஏதோ முனகிவிட்டு, என்னைப் பார்த்துக் கேட்டான்:

“இப்போ – நான் விளக்கை அணைச்சுரட்டுமா?”

“உன் இஷ்டம்.’

“அப்போ – நீ வெளியேவா போறே? நீ படுக்கப் போகலியா?” தன்னுடைய சிறு கரத்தினால் தன் தாயைச் சுட்டிக் காட்டி, “அவளோடே” என்றான்.

“எதற்காக?” என்று திடுக்கிட்டுப் போய்க் கேட்டேன்.

“அது உனக்கேதான் தெரியுமே” என்று அமைதியுடன் கூறிவிட்டு, கீழே சாய்ந்து கொண்டே சொன்னான்:

“அவங்களெல்லாம் அப்படிச் செய்வாங்க.”

நான் என்னைச் சுற்றியுள்ளவைகளைப் பார்த்தேன். வலது புறம் லக்ஷணமற்ற கணப்படுப்பின் அகண்ட வாய்; கணப்பின் மேலே அசுத்தமான பாத்திரங்கள்; மூலையில் பெட்டிக்குப் பின்னால், கீலெண்ணெய் படிந்த கயிறு ; அவுரிக் கட்டு; விறகு முண்டுகள் ; தீயிடுக்கி; தண்ணீர் வாளி கள் சுமந்து வருவதற்கமைந்த நுகத்தடி. என் காலடியில் அந்த மஞ்சள் உருவம் குறட்டை விட்டுக் கொண்டிருந்தது.

“நான் ஒன்னோடே கொஞ்ச நேரம் இருக்கலாமா?” என்று கேட்டான் பையன். தலையைத் தாழ்த்திப் புருவங் களுக்குக் கீழாக என்னைப் பார்த்தான் : “விடியற வரையில் அவ எந்திருக்க மாட்டாள் ” என்றான்

“ஆனால் – அவள் எனக்குத் தேவையில்லை” என்றேன் நான்.

அவனுடைய பெட்டியருகே குந்தியமர்ந்துகொண்டே அவனது தாயை நான் எப்படிச் சந்தித்தேன் என்ற விஷயத்தை ஹாஸ்யத்துடன் சொல்ல முயன்றேன் : “அவள் சகதியிலே உட்கார்ந்து, கைகளால் அளைந்து கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தாள்…”

அவன் தனது நெஞ்சுக் கூட்டைச் சொரிந்தவாறே வதங்கிய புன்னகையுடன் தலையாட்டினான்.

“குடித்திருந்தாள் – அதனால் தான் அப்படி, சுவாதீனமாய் இருந்தால் கூட அப்படித்தான் செய்வாள். ஒரு குழந்தையைப் போல….”

இப்போது நான் அவனுடைய கண்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனுடைய கண் ரெப்பைகள் நீண் டிருந்தன. கண்ணிமைகளும் அழகாகச் சுருண்ட மயிரிழை களால் நிறைந்திருந்தன. கண்களுக்குக் கீழே பாரித்திருந்த நீலநிறம் ரத்த மிழந்த தோலின் வெளுப்பைக் கூட்டிக் காட்டியது; சுருக்கம் விழுந்த அகன்ற நெற்றியில், செம் பட்டை மயிர்ச் சுருள் கவிந்து கிடந்தது. ஆர்வமும் அமைதியும் நிறைந்த அந்தக் கண்களின் உணர்ச்சிகள் சொல்லுக் கடங்காதவை, இந்த அமானுஷ்யமான அதிசயப் பார்வையைத் தாங்குவதே கஷ்டமாகத்தானிருந்தது.

“உன் கால்களுக்கு என்ன கேடு விளைந்தது?”

துணிச் சுருள்களுக்கிடையிலிருந்து அந்தச் சூம்பிய காலை வெளியே எடுத்தான்; முட்டைக் கோஸ் தண்டைப் போலிருந்த அந்தக் காலைத் தனது கையினால் தூக்கி பெட்டியோரத்தில் வைத்தான்.

“இரண்டு கால்களும் இப்படித்தான் இருக்கு. பிறந்த்திலேருந்து அப்படித்தான். அதிலே நடக்க வலுவும் கிடையாது; சீவனும் கிடையாது. அப்படியே இருந்தது இருந்தாற் போலத்தான்.”

“சரி. அந்தப் பெட்டிகளில் என்ன இருக்கின்றன?”

“காட்சிசாலை” என்று பதில் கூறிவிட்டு, தனது காலை ஒரு கம்பை எடுப்பது போல் எடுத்து, மீண்டும் பழந் துணிகளால் சுற்றிச் சுருட்டி வைத்துவிட்டு, புன்னகை புரிந்தான்.

“அதை யெல்லாம் ஒனக்குக் காட்டட்டுமா? சரியா உட்காரு. இந்த மாதிரி நீ வேறே எங்கேயும் பார்த்திருக்க மாட்டே” சூட்டிகத்துடன் தனது நீண்ட கைகளை நீட்டி, அரங்கிலிருந்த ஒவ்வொரு பெட்டியையும் எடுத்தெடுத்து என்னிடம் கொடுத்தான்.

“ஜாக்ரதை திறக்காதே . திறந்தா அதுகள் ஓடிப் போயிரும், மெதுவாக் காதை வெச்சுக் கேளு. தெரியுதா?”

“ஆமாம், ஏதோ அசைகிறது.”

“அஹஹா. அதுக்குள்ளே ஒரு சிலந்தியாக்கும் இருக்கு… பொல்லாதது அது பேரு டிரமர்; கெட்டிக்காரப் பய”

அந்தப் பையனின் கண்களில் உயிரும் உணர்வும் கூடிற்று ; ஒளியற்ற முகத்தில் புன்னகை சுழித்தோடி யது. விறுவிறென்று அரங்கிலிருந்து ஒவ்வொரு பெட்டி யாக எடுத்து, தனது காதருகே வைத்துப் பார்த்துவிட்டு என்னிடமும் கொடுத்தான். கொடுக்கும் போதே பேசினான் :

“இதோ இதுக்குள்ளே அனிசிம் என்கிற பாச்சைப் பூச்சி இருக்கு – இது ஒரு சிப்பாய் மாதிரி. இதிலே ஈ இருக்கு. இது இன்ஸ்பெக்டரோடே பெஞ்சாதி. மோச மானது!.. படுமோசமானது… நாள் முச்சூடும் இரைஞ் சுக்கிட்டே இருக்கும். எல்லாத்தையும் திட்டும்; அம்மா வோடே தலை மயிரைக் கூட ஒரு நாள் புடிச்சி இழுத்திட்டுது. அது ஈ இல்லே …. ஆனா இன்ஸ்பெக்டரோடே பொஞ்சாதி. அதன் வீட்டிலே தெருவெப் பாக்க சன்னலெல்லாம் உண்டு. பாக்கிறதுக்குத்தான் ஈ மாதிரி, இது வந்து… இது கரும்பாச்சை ; பெரிசு; தலைவன். ரொம்ப ஒழுங்குள்ளது. ஆனால், குடிகார மட்டை ; மான சனங் கிடையாது. முற்றத்திலே போய் நிர்வாணமாத் திரியும்; சடை நாய் மாதிரி கறும்கம்’னு இருக்கும். இது ஒரு மூட்டைப்பூச்சி; பேரு நிக்கோடிம் மாமா. முற்றத்திலே தான் பிடிச்சேன். இது ஒரு பரதேசிச் சாமி; தன்னை எல்லாரையும் அப்படி மதிக்கவச்சி, கோயிலுக்குப் பணந் திரட்டுது. அம்மா இதை ஏமாளின்னு கூப்பிடுவா. அது அவளுடைய காதலன். அம்மாவுக்கு எத்தனையோ காதலர்கள், ஈக் கூட்டம் போல நீ அவ்வளவையும் எண்ணிட முடியாது. அம்மாவுக்கு மூக்கு இல்லாட்டியுங்கூட, அத்தினி பேர்”

“அவள் உன்னை அடிக்கமாட்டாளா?”

“அவளா? உனக்கென்ன பைத்தியமா? நான் இல்லாமெ அவளாலெ வாழமுடியாது . அவ மனசு ரொம்ப நல்ல மனசு ; ஆனா. குடிக்க மட்டும் செய்யிறா . அன்பும் அருமையும் உள்ளவள் தான்; ஆனா, சிறுக்கி – குடிக்க மட்டும் செய்யிறா . அவள்ட்டே நான் சொல்றேன் ‘முட்டாள் ! ஓட்காவைக் குடிக்கிறதை மட்டும் விட்டிரு; நீ பணக்காரி ஆயிருவே. அப்படின்னா அவள் வெறுமனே என்னைப் பாத்துச் சிரிக்கிறாள். பொம்பிள்ளை – இப்பிடி முட்டாத்தனமாயிருக்கா. ஆனா, நல்ல மனுஷிதான். தூங்கியே பொழுதைக் கழிச்சுருவா; நீ தான் பாரேன்.” அவனுடைய கவர்ச்சி நிறைந்த அந் தப் புன்னகையை நீங்கள் கண்டால் உடனே அவன் மீது அனுதாபம் பிறக்கும்; அவனுக்காக அனுதாபத்துடன் வாய் திறந்து ஓலமிட்டு, ஊர் முழுதும் ஒலிக்கும் படி செய்து விடுவீர்கள். அவனுடைய அழகமைந்த தலை ஒல்லி யான கழுத்தின் மேல், ஒரு அபூர்வ மலர்போல ஆடியது. தாங்கமுடியாத சக்தியோடு, அவனுடைய கண்கள் உயிர் பெற்று ஒளி வீசின.

அவனுடைய குழந்தைப் பேச்சில், பொல்லாத வாய் ளப்பில் மயங்கிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது சூழ் நிலையையே மறந்துவிட்டேன். மறு கணம் நான் அந்தச் சிறை வீட்டின் ஜன்னல், வெளிப்புறம் சசதி வாரியடிக்கப் பட்ட சுவர், கணப்பு அடுப்பின் கறுத்தவாய், மூலையிலே கிடந்த அவுரிக்கட்டு, வாசலை ஓட்டிக் கந்தைத் துணியில் வெண்ணெயைப் போல் உருண்டு கிடக்கும் அவனுடைய தாய் – எல்லாவற்றையும் பார்த்தேன்.

“நல்ல காட்சி சாலை தானா?” என்று பையன் பெருமை யுடன் கேட்டான்.

“ரொம்ப நல்லதுதான்”

“ஆனா, எங்கிட்ட வண்ணாத்திப் பூச்சிகளோ, அதன் வர்க்கமோ கிடையாது”

“உன் பெயரென்ன?”

“லெங்க்கா “

“அடே, என் பேரே தான்”

“நிசம்மாவா? நீ எந்த மாதிரி மனுஷன்?”

“ஒரு மாதிரியுமில்லை”

“நீ பொய் சொல்றே, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான். எனக்குத் தெரியும், நீ ரொம்ப நல்லவன்”

“இருக்கலாம்”

“எனக்குத் தெரியுமே- ஆனா நீ ஒரு பயந்தாங் கொள்ளி”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“எனக்குத் தெரியும்” அவன் சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்.

“ஏன் அப்படி நினைக்கிறாய்?”

“சரி , என்னோடெ உட்காரு. நீ ராத்திரித் தனியா வீட்டுக்குப் போகப் பயப்படுறே?”

“ஆனா, அதோ பொழுது விடிந்து விட்டதே”

“அப்பன்னா , நீ போகப் போரியா?”

“திரும்பியும் வருவேன்”

அவனால் என்னை நம்ப முடியவில்லை. தனது அமைதி நிலவும் கண்களை மூடி அவன் சொன்னான்;

“எதுக்காக?”

“ஏன்? உன்னைப் பார்க்கத்தான். நீ ஒரு ரசமான பேர் வழி , சரி . நான் வரட்டுமா?”

“நிச்சயமா?- எல்லாருந்தான் இங்கே வருவாங்க” பெரு மூச்சு விட்டுவிட்டு மீண்டும் சொன்னான்: ”நீ என்னை ஏமாத்தறே”

“சத்தியமாச் சொல்கிறேன். வருவேன்”

“கட்டாயம் வா. என்னைப் பார்க்க வா . அம்மாவைப் பாக்கிறதுக்கில்ல, அவ எப்படியும் போகட்டும் – நீயும் நானும் சிநேகிதமா இருப்பமா ..ம்…?”

“ரொம்ப சரி”

“சரி. நீ பெரியவனா இருந்தா, பரவாயில்லை. உனக்கு வயசு என்னாச்சு?”

“இருபது”

“எனக்குப் பதினொண்ணு. எனக்குச் சிநேகிதர்களே கிடையாது. கட்கா மாத்திரம் , அவள் அந்தத் தண்ணீர் வண்டிக்காரனின் மகள், என்னோடே சேர்ந்தா அவளோடே அம்மா அவளை அடிக்கிறா ..ம் .. நீ திருடனா?”

“இல்லை. ஏன் திருடன் என்கிறாய்?”

“ஒன் வாய் – பயங்கரமா யிருக்கு. வெறுந் தோல் மயம்… ஒன் மூக்குத் திருடனைப்போலவே இருக்கு. இங்கே இரண்டு திருடர்கள் வருவாங்க. ஒண்ணு, ஸாஷ்கா; முட்டாள் ; அசிங்கமானவன். இன்னொண்ணு , வானிச்கா; நல்லவன் ; நாய்மாதிரி நல்லவன் . ஓங்கிட்டே சின்னப் பெட்டிகள் இருக்கா”

“வரும்போது கொண்டு வருகிறேன்”

“கொண்டு வா. நீ வாரதாக அம்மாவிடம் சொல்ல மாட்டேன்”

“ஏன்?”

“மாட்டேன். மனுஷாள் வந்தா அவளுக்கு எப்போதும் சந்தோஷம். நாய்… மனுஷர்களை யெல்லாம் அவள் காதலிக்கிறாள். சகிக்கலெ ஆனா , அம்மா ரொம்ப நல்ல வள். பதினஞ்சு வயசுலெ என்னைப் பெற்றாள்; என்னை எப்படி உண்டானாள்’ எங்கிறதே அவளுக்குத் தெரியா தாம்……. நீ எப்ப வருவே?”

“நாளை மாலையில்”

“மாலையிலா ? அப்போ அவள் குடிச்சிட்டிருப்பாள் … ம்…. நீ திருடன் இல்லென்னா என்ன தொழில் பாக்கற?”

“பவேரியன் பீர் விற்கிறேன்”

“அப்படியா? எனக்கு ஒரு பாட்டில் கொண்டு வாயேன். வருவியா?”

“நிச்சயமாய் ஒன்று கொண்டு வருகிறேன். சரி நான் வரட்டுமா?”

“ஓடு ஓடு. வருவியா நீ!”

“அநேகமாய்”

அவன் தனது நெடிய கரங்களை என்னிடம் நீட்டி னான். நான் அந்த மெல்லிய குளிர்ந்த கரங்களைப் பிடித்து அழுத்திக் குலுக்கிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் குடிகாரனைப் போல் முற்றத்துக்குத் தாவி வந்தேன்.

பொழுது விடிந்து கொண்டிருந்தது. அரைகுறை யாய்ப் பாழடைந்துள்ள கட்டிட வரிசைக்கு மேலாக, சுக்கிர வெள்ளி சிலிர்த்து நடுநடுங்கி மறைந்து கொண்டிருந்தது. அந்த வீட்டுச் சுவருக்கடியிலுள்ள அசுத்தமான குழியிலிருந்து, பாதாள அறையின் ஜன்னல் கதவுகள் குடிகாரன் கண்களைப் போல் இருண்ட தூசி படிந்த சதுரக் கண்களால் என்னை விறைத்து நோக்கின. வாயில் பக்கம்

நின்ற வண்டியில் ஒரு சிவத்த விவசாயி தனது பெரிய கால்களை அகல விரித்துப் போட்டுத் தூங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய அடர்ந்த தாடி வானை நோக்கி நிமிர்ந்து நின்றது; அதனிடையில் வெண் பற்கள் மின் வெட்டின. அந்த விவசாயி கண்களை மூடிக்கொண்டு, வெறுப்போடு சிரிப்பது போலிருந்தது அந்தக் காட்சி காயம் பட்டதனால் மயிரிழந்து முதுகிலே வழுக்கை பெற்ற கிழட்டு நாயொன்று எனது காலடியில் மோப்பம் பிடித் துச் சிணுங்கியது; பசியோடு மெதுவாக ஊளையிட்டது. எனது இதயத்தில் அதற்கு அனுதாபம் பிறந்தது. உஷத் காலத்தில் வெளிறிய பழுப்பொளி சேற்றுக் குட்டங்களில் பிரதிபலித்தது; அந்த அசுத்தமான குட்டைகளிலே கண்ட பிரதிபலிப்பு இதய நிறைவைக் கெடுத்து, வேண்டாத அழகை வீணாக்கிக் கொண்டிருந்தது.

மறுநாள் நான் எங்கள் வட்டாரத்துப் பையன்களைச் சில மூட்டைப் பூச்சிகளும் வண்ணாத்திப் பூச்சிகளும் பிடித் துத் தரும்படி வேண்டிக்கொண்டேன். மருந்துக் கடையி லிருந்து சிறு சிறு பெட்டிகள் வாங்கிக்கொண்டேன். பிறகு இரண்டு பாட்டில் க்வாஸ் பீர், சில இஞ்சி ரொட்டி கள், சர்க்கரை மிட்டாய்கள் முதலியவைகளோடு லெங்க் காவைப் பார்க்கச் சென்றேன். அகல மலர்ந்த கண்க ளோடும், வியப்போடும் லெங்க்கா எனது பரிசுகளை ஏற் றுக்கொண்டான். அந்தக் கண்கள் பகலொளியில் மேலும் வியப்பூட்டின.

“ஓ-ஹோ-ஹோ” என்று அவன் தணிந்த, குழந்தைத் தனம் அற்ற குரலில் கத்தினான்.

“எல்லாத்தையும் கொண்டு வந்தூட்டியே! நீ பணக்காரனா? அது எப்படி – பணக்காரன்னா… ஆனா, நீ ரொம்ப மோசமாய் உடை உடுத்தியிருக்கே ! திருடன் இல்லேன்னும் சொல்றே… இந்தச் சின்னப் பெட்டிகள் ! ஓ-ஹோ ஹோ…. என் கையெல்லாம் சுத்தமாயில்லே. அதைத் தொடவே கூசுது. உள்ளே என்னா இருக்கு? ஆஹா, ஒரு மூட்டை களிம்பேறிய செம்பு மாதிரியில்லெ இருக்கு சீ மூதி… இவை யெல்லாம் திறந்தாப் பறந்தோடிப் போயிருமா?… நல்லாயிருக்கணும் ” மேலும் அவன் உற்சாகத் துடன் திடீரெனச் சத்தமிட்டான்.

“அம்மா! கீழே வந்து, என் கையை யெல்லாம் கழுவி விடும்மா. அசடே, இங்கே வந்து இவன் என்ன கொண்டாந்திருக்கான்னு பாரேன். அவன் தான் – நேத்து ராத்திரி உன்னை இழுத்துக்கிட்டு வந்தானே அவனேதான். போவீஸ்காரன் மாதிரி இருந்தானே, அவன் பேரும் வெங்க்காதானாம்.”

“நீ அவருக்கு நன்றி கூறவேண்டும்” என்ற தணிந்த சூரல் என் பின்னே கேட்டது.

பையன் அதி விரைவாகத் தலையை ஆட்டினான்.

“வந்தனம் வந்தனம்”

அந்தப் பொந்துக் குடிலுக்குள் தூசும் தும்பும் மேகம் போல் கனத்து மிதந்தன. ஆகவே, அவற்றின் ஊடே, கலைந்த தலையும் அங்கஹீனமான முகமும், பல் வரிசையின் ஒளி ரேகையும், வேண்டா வெறுப்பாக வளையும் புன்கையும் கொண்ட அந்தப் பெண்ணின் மங்கிய உருவை அடுப்பருகே கண்டேன்.

“சௌக்கியமா?”

“செளக்கியமா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள். அவளுடைய மூங்கைக் குரல் குழம்பியிருந்தாலும் களிப்பும் பெருமிதமும் கொண்டிருந்தது. அவள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்து, கேலி செய்வது போலிருந்தது.

லெங்க்கா என்னை மறந்துவிட்டு, இஞ்சி ரொட்டியைச் சவைத்துத் தின்றான். பெட்டிகளைப் பதமாய்த் திறக்கும் போது வாய்க்குள் முனகிக்கொண்டான். அவனுடைய கண் ரெப்பைகள் அவன் கன்னங்களில் நிழலாடி, கண் களுக்குக் கீழ் உள்ள வளைவுகளைத் துலாம்பரமாகக் காட் மன். கிழட்டு மனிதனின் மங்கிய முகம் போன்ற சூரியன் புழுதியடைந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்; மங்கிய ஒளி பையனின் செம்பட்டைத் தலைமயிர் மீது விழுந்தது. பொத்தான் கழற்றப்பட்ட உடம்பில் , அவ னுடைய ஹிருதயம் மெல்லிய குருத்தெலும்புகளுக்குப்

பின்னால் துடிப்பதையும், மார்புக்கண் மேலும் கீழும் அடிப்பதையும் கண்டேன்.

அவனுடைய தாய் அடுப்புப் பக்கமிருந்து இறங்கி கழுவு பாத்திரத்தில் ஒரு துண்டை நனைத்தெடுத்துக் கொண்டு, லெங்க்காவிடம் வந்து அவனுடைய இடது கரத்தைப் பிடித்தாள்.

“அவன் ஓடிப் போயிட்டான். நிறுத்து அவனை, ஓடிட்டான்!” என்று கத்தினான். தனது முழு உடம்பையும் அந்தப் பெட்டியில் தாழ்த்தி, நாற்றமடிக்கும் துணி களைக் கொண்டு மூடிப்பிடித்தான். அவனுடைய நொண்டிக் கால்கள் வெளியே தெரிந்தன. அந்தப் பெண்ணும் சிரித்தாள்; அந்தக் கந்தைகளை அணைத்துக்கொண்டே சத்தமிட்டாள்.

“பிடி அதை!”

அந்த மூட்டையைப் பிடித்து அவள் அவன் உள்ளங் கையில் விட்டாள்; விட்டுத் தனது சோளக் கொத்து நிறக் கண்களுடன் அதைப் பார்த்தாள். பிறகு என்னைப் பார்த் துப் பழகிய குரலில் சொன்னாள் :

“இதுமாதிரி நிறைய இருக்கிறது”

“அதை நசுக்கிப் பிடாதே” என்று அவள் பிள்ளை எச்சரித்தான்.

“ஒரு தடவை அவள் குடிச்சிட்டு வந்து, என் மிருகக் காட்சிசாலை மேல் உட்கார்ந்து, எத்தனையையோ கொன்னு. தள்ளிட்டா”

“அதை மறந்துவிட்டா கண்ணு”

“நானு அவைகளை யெல்லாம் புதைக்க வேண்டிய தாகப் போச்சு”

“ஆனால், பிறகு நான் உனக்கு நிறையப் பிடித்துக் கொடுத்தேனே”

“நீ பிடிச்சதா? நீ நசுக்கிக் கொன்னதெல்லாம் பழகிப் போன தாக்கும், அசடே செத்ததை யெல்லாம் நான் அடுப்பண்டை புதைச்சேன். ஊர்ந்து போய்த்தான் புதைச்சேன். அங்கே ஒரு இடுகாடு இருக்கு… உனக்குத் தெரியுமா, எங்கிட்ட ஒரு சிலந்திப் பூச்சி இருந்தது. மிங்க் கான்னு பேரு அம்மாவோடெ வைப்பாளன் மாதிரி – அவன் தான் ஜெயில்லே கிடக்கானே, தடியன்! அவனை மாதிரி இருக்கும் -“

“என் அருமைக் கண்ணு’ என்று கூறிக்கொண்டே, முரமாத்த கறுத்த கை விரல்களால் தன் மகனின் தலை மயிர்ச் சுருள்களைக் கோதினாள், பிறகு முழங் கையால் என்னை இடித்துக் கொண்டு, களி துலங்கும் கண்களோடு கேட்டாள் :

“என் மகன் அழகாயிருக்கிறான் – இல்லையா? அவன் கண்களைப் பாருங்களேன்”

கையிலிருந்த மூட்டைப் பூச்சியைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த லெங்க்கா, “என் கண்ணிலே ஒண்ணெ வேனுமின்னா எடுத்துக்கோ – எனக்குக் கால் மட்டும் கொடு” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். மேலும், அம்மா… இதைப் பாரம்மா. கல்லு மாதிரி, எவ்வளவு தண்டியா யிருக்கு அம்மா–நீ ஏணி செய்து குடுத்தியே, அந்தப் பாதிரியாரை ஞாபகமிருக்கா – அவரு மாதிரி”

“ஞாபகம் இருக்கிறது”

சிரித்துக்கொண்டே அவள் என்னிடம் சொன்னாள்:

“இதோ பாருங்கள். ஒரு தடவை இங்கே, ஒரு தடி மனுஷன், ஒரு பாதிரி வந்தார். வந்து, ‘இங்கே பார். நீ ஒரு அவுரி பொறுக்கிறவள் தானே. அப்படியானால், எனக்கொரு நூலேணி செய்து தாயேன்’ என்று கேட்டார். நானோ அந்த மாதிரி ஏணிகளைப் பற்றிக் கேள்விப்பட்டது கூட இல்லை. என்னால் முடியாது என்றேன். நான் சொல்லித் தருகிறேன்’ என்று அவர் சொல்லி விட்டு, தமது நிலையங்கியைக் கழற்றி, தமது தொந்தியைச் சுற்றியிருந்த நீளக் கயிற்றை உலைத்தெடுத்தார். பிறகு சொல்லிக் கொடுத்தார். நான் அதைத் திரித்துத் திரித்துச் செய்யும் போதே இவருக்கு இது எதற்கு? ஒரு வேளை எங்கேயாவது ஒரு தேவாலயத்தைக் கொள்ளையிடப் போகிறாரா?’ என்று நினைத்தேன்.”

அவள் தன் மகனின் புஜங்களை அணைத்துத் தட்டிக் கொடுத்துக் கொண்டே வாய் விட்டுச் சிரித்தாள்.

“ஓ எவ்வளவு திருட்டுத்தனம் உள்ளவர்கள், இவர்கள்? சொன்ன வேளையில் அவர் வந்தார். அவரிடம் நான் ‘இதை வைத்துக் கொண்டு நீர் திருடினால், எனக்கும் அதற்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கக்கூடாது’ என்றேன். அவர் மெதுவாகச் சிரித்தார். பிறகு, ‘இல்லை யில்லை. இது ஒரு சுவாமீது ஏறுவதற்காகத்தான். நமக்கு முன்னால் ஒரு பெரிய சுவர் இருக்கிறது. நாமோ பாபாத் துமாக்கள். பாபமோ மறுபுறத்தில் இருக்கிறது – ம் புரிந்ததா?’ என்றார். எனக்குப் புரிந்து விட்டது. இரவில் பெண்களிடம் போவதற்கு அது அவருக்குத் தேவைப் பட்டது. இருவரும் சிரித்தோம்” என்று கூறினாள்.

“உனக்கும் சிரிக்கணும்னு தோணல்லெ” என்று பெரிய மனுஷ தோரணையில் கேட்டான் சிறுவன் : சரி அடுப்பைப் பத்தவையி” என்று தாயிடம் சொன்னான்

“ஆனால் – சர்க்கரை யில்லையேடா”

“போயி வாங்கிட்டு வா”

“பணமும் இல்லையே”

“எல்லாம் நீ மிடாக்குடி குடிக்கிறதாலேதான் ….ம்…. அவன் கிட்டேயிருந்து வாங்கிக்கோ”

பையன் என் பக்கம் திரும்பினான், கேட்டான்.

“பணம் வச்சிருக்கியா?”

நான் பணம் எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். அவள் துள்ளியெழுந்தாள். அடுப்பின் மீது களிம்பேறி நெளிந்து கழிந்து போன அந்தப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, மூக்கால் முனகிக்கொண்டே, நடையைக் கடந்து மறைந்தாள்.

“அம்மா” என்று அவள் மகன் கூப்பிட்டான் : “ஜன்னலைக் கழுவி விடு. என்னாலே எதையும் பாக்க முடியலே,ஏ! உதவாக்கரைச் சிறுக்கி! சொல்றதைக் கேளு” என்று தொடர்ந்து கூறிக்கொண்டே, பூச்சி பொட்டுக்கள் அடங்கிய அந்தப் பெட்டிகளை அரங்கில் பதனமாக அடுக்கினான் . நீரூற்றுப் பாய்ந்த சுவர் வெடிப்புகளில் இறக்கப் பட்டிருந்த ஆணிகளில், அந்த அட்டைப் பெட்டிகளை மாட்டினான். அவுரி பொறுக்கி, அதை அடித்துக் கட்டும்போது. ஒரே புழுதியைக் கிளப்பி விடுவாள். இவள். புழுதின்னா – நீ யெல்லாம் மூச்சடைத்துத் திணர வேண்பயதுதான். அம்மா! வெளியே கொண்டு விடு; இங்கே எனக்குத் திகை முட்டுது’ என்று கத்துவேன். அதுக்கு அவள், அமைதியா யிரு. நீ யில்லாமெ என்னாலே தனிமையா இருக்கமுடியாதுன்னு சொல்வாள். என் மேலே அவளுக்கு அத்தனை பிரியம். அவுரி பொறுக்குவா; பாடுவாள். அவளுக்கு ஆயிரம் பாட்டுத் தெரியுமாக்கும்”

ஆவல் நிறைந்த கண்களில் ஒளி தெரிக்க, புருவங்களை உயர்த்தி அவன் பாடவும் ஆரம்பித்தான்.

“அன்னத்தூவி மெத்தையில், அரீனா படுத்துறங்கு வாள்…”

நான் ஒரு கணம் கேட்டுவிட்டுச் சொன்னேன்:

“சே! அசிங்கமான பாட்டல்லவா?”

“அவுங்களுக் கெல்லாம் இதுதான் பிடிக்கும்” என்று நிச்சய தீர்க்கமான குரலில் பதில் கொடுத்து விட்டுத் திடீரென, காது கொடுத்துக் கேள். ஏதோ பாட்டுச் சத்தம் வருது. என்னைத் தூக்கிவிடு” என்றான்.

வற்றி மெலிந்த தோலுக்குள் அடங்கிய கால்களைப் பற்றி அவனைத் தூக்கி நிறுத்தினேன். திறந்து கிடந்த ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டி ஆவலோடு பார்த்தான். வலியிழந்து சூம்பிப்போன கால்கள் சுவரில் சாய்ந்து பலம் தேடின வெளி முற்றத்தில் ஒரு குழ விசைக் கருவி எரிச்சல் தரும் வண்ணம் சுரபேதங்களை வெளியே துப்பியது உற்சாகத்தில் ஒரு குழந்தை உச்சஸ்தாயியில் சத்தமிட்டது; ஒரு நாயும் ஊளையிட்டது. லெங்க்கா அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே, தனது வாய்க்குள் அதே இசையை முனகிக்கொண்டான்.

அந்தப் பொந்துக் குடிலுக்குள் மிதந்த தூசி படிந்து தெளிவுண்டாயிற்று. அவனுடைய தாயின் படுக்கைக்கு மேலாக ஒரு பாடாவதிக் கடிகாரம் தொங்கியது; ஒரு செய் புக் காசு அளவுள்ள அதன் பெண்டுலம் மெதுவாக அசைந்தாடியது. கணப்பருகே இருந்த பண்ட பாத்தி ரங்கள் அழுக்கடைந்திருந்தன. தூசும் தும்பும் அவை மீதும், மூலையிலே நூலாம்படைக் கூடு கட்டி வாழும் சிலந்தி ஊஞ்சல்களிலும் படிந்தன. லெங்க்காவின் வீடு ஒரு குப்பைக் கிடங்கு மாதிரி இருந்தது, வறுமையின் அவலக்ஷணம் அந்த வீட்டில் எங்கணும் நிறைந்து, புலனை உறுத்திற்று.

பாத்திரம் சூடேறிக் கொதித்து இரைந்தது; அதே வேளை போ வெளியே” என்ற கடூரமான குரல் கேட் டது; இசை திடீரென நின்றது.

“என்னை உட்கார வையி. அவுங்க அவனை விரட்டிட டாங்க” என்று பெருமூச்சுடன் சொன்னான் லெங்க்கா.

நான் அவனைப் பெட்டி மீது உட்காரவைத்தேன் அவன் தனது நெஞ்சுக்கூட்டைக் கைகளால் தடவிக் கொடுத்துக் கொண்டே இருமினான்.

“என் நெஞ்சு வலிக்குது. நல்ல காற்றை ரொம்ப நேரம் மூச்செடுத்தாலே எனக்குப் புடிக்காது. ம், சரி. நீ பேய் பிசாசுகளைப் பாத்திருக்கியா?”

“இல்லை “

“நானும் இல்லை. ராத்திரி அடுப்பையே பாத்துக் கிட் டிருப்பேன். ஏதாச்சும் தலை காட்டுதான்னு -ஆனா அது வராது. இடு காட்டிலே யெல்லாம் பிசாசு உண்டுல்ல?”

“உனக்கு எதற்கு அந்தக் கவலை?”

“வேணும், அது கேட்கவே ரசமாயிருக்கு. அதிலே ஒண்ணே ஒண்ணு அன்பு ஏற்பட்டு, நல்லதா மாறி விட்டா? தண்ணீர் வண்டிக்காரன் மகள் கட்கா ஒரு குட் டிப் பிசாசைப் பார்த்தாளாம். உடனே பயந்துட்டா நான்? நான் இப்படிப் பட்டதையெல்லாம் கண்டு பயப்பட மாட்டேன்.”

அவன் தனது கால்களைத் துணிக்கந்தையில் சுற்றிக் கொண்டு மேலும் சொல்லிக்கொண்டே போனான்: ‘எனக் குப் பயங்கரமான சொப்பனங்கள் கூடப் புடிக்கும். செம்மா! ஒரு தடவை ஒரு மரம் தலை கீழாக வளரும் மாதிரி கண்டேன், இலை யெல்லாம் தரையிலே – வேரெல் வரம் ஆகாசத்திலே! நான் வேர்த்து விறு விறுத்துப் பயந்து எழுந்தேன். ஒரு தடவை அம்மாவையே பார்த் தேன் . அவள் அம்மணமாகக் கிடந்தா. ஒரு நாய் அவள் வயித்தைக் கடிச்சிக் குதைஞ்சிது. ஒரு கடி கடிக்கும் , உட்னே அதைத் துப்பும்; கடிக்கும், துப்பும். இப்படி – ஒரு தடவை எங்க வீடு கிடு கிடென்னு ஆடிச்சி; உடனே தெரு வழியே ஓட ஆரம்பித்தது. கதவு ஜன்ன லெல் வாம் படபடன்னு அடிச்சிது, ஓடற வீட்டைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பொஞ்சாதியோடே பூனைக் குட்டி ஓடியாந்தது.

அவன் தனது முதுகை வளைத்தான்; வளைத்து ஒரு சர்க்கரை மிட்டாய் எடுத்து, அதன் மீது சுற்றிருந்த காகிதத்தை எடுத்து, சரி பண்ணி, ஜன்னல் சட்டத்தில் வைத்தான்.

“நானு இந்தப் பேப்பரை யெல்லாம் வச்சிக்கிட்டு, அழகாக ஒண்ணு செஞ்சி பார்ப்பேன், இல்லேன்னா – கட்காவுக்குக் குடுத்திருவேன். கண்ணாடித் துண்டு , ஓட்டுச் சில்இ , காகிதம் – இது மாதிரிச் சாமான் எல்லாம் அவ ளுக்குப் புடிக்கும், கேளும் – ஒரு விட்டில் பாச்சையை நல்லா உணவு குடுத்து வளர்த்தா, அது ஒரு குதிரை மாதி வளந்திருமா?”

அவன் குரலே அவன் அப்படி நம்புகிறான் என்பதைத் தெரிவித்தது. ஆகவே நானும் சொன்னேன்.

“நல்ல ஊட்டம் கொடுத்து வளர்த்தா , கட்டாயம் வளரும்!”

“வளருமில்லா! ஆனா, அம்மா அப்படிச் சொன்னா என்னைக் கேலி பண்ணிச் சிரிக்கிறா” என்று உற்சாகத் தோடு சொன்னான்.

அவன் ஒரு ஆபாசமான வார்த்தையால் அவளைத் திட்டினான்.

“அவள் ஒரு முட்டாள். ஒரு பூனையை மட்டும் அப்படி உணவு குடுத்து வளர்த்தா. அது ரொம்ப சீக்கிரத்திலே குதிரை மாதிரி வளர்ந்துடாது?”

“ஆமாம். வளரும்!”

“ஆனா, எங்கிட்டெ அவ்வளவுக்கு உணவு இல்லே அதுக்கு நெறைய வேணுமோ” என்று கூறிவிட்டு, தனது கையை நெஞ்சோடு வைத்துத் தலையாட்டினான்.

“ஈயெல்லாம் நாய் மாதிரி வளந்திரும். விட்டில் பாச் சையெல்லாம் செங்கல் மாதிரி வளந்திரும்! அதுமட்டும் ஒரு குதிரை அளவு வளர்ந்துட்டா, அதுக்கு ரொம்பப் பலமாயிருக்குமில்லே”

“ஆனால் அதற்கெல்லாம் மீசை இருக்கிறதே”

“இருந்தா ஒண்ணும் குத்தமில்லே . மீசை கடிவாளம் மாதிரி இருக்கும். ஹை – லகான் – சிலந்தி எப்படி வள ரும்? சிலந்தி ஒரு பூனைக்குட்டி தண்டி வளர்ந்துட்டா, பார்க்கப் பயமாயிருக்கு மில்லே. எனக்கு மட்டும் கால்கள் இருந்தா ! வியாபாரம் பண்ணுவேன் ! அம்மாவுக்குப் பச்சை வயல்களுக்கு மத்தியிலே ஒரு வீடு வாங்குவேன். நீ எப்பவாச்சும் பச்சை வயல்லே இருந்திருக்கியா?”

“இருந்திருக்கிறேன்”

“அதைப்பத்திச் சொல்லேன் – சொல்லுவியா?”

நான் அவனுக்குப் பசும் புல் வெளிகளைப் பற்றியும், வயற்புறங்களைப் பற்றியும் சொன்னேன். குறுக்கே விழுந்து பேசாமல் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். கண்ணிமைகள் கண்களின் மேல் மூடிப் பதிய, தூங்கி வழி யும் முகம் போல் வாய் மெதுவாகத் திறந்திருக்க அவன் கேட்டுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்து, நான் அமைதியுடன் கூறிக் கொண்டிருந்தேன். அவனுடைய தாய் கொதியேறிய சட்டியைக் கையில் தூக்கிக்கொண்டும் மறு கையில் ஒரு காகிதப் பொட்டலத்தை வைத்துக் கொண்டும், மார்பீடுக்கில் ஒரு ஓடகா பாட்டிலை வைத்துக் கொண்டும் உள்ளே வந்தாள்.

நான் வந்துவிட்டேன்”

“எனக்குப் புடிச்சிருக்கு!” என்று கூறிக்கொண்டே பையன் கண்களை அகலத் திறந்தான்.

“வெறும் இடம் – பூவையும் புல்லையுந் தவிர……”

அம்மா ஒரு வண்டி அமர்த்திக்கிட்டு வந்து, என்னை என் வயல் புறத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போகமாட்டேங் கிறே நான் சொல்றதுதான் மிச்சம் ; அவைகளைப் பார்த்தாப்போலேதான். அம்மா – ஏ பொட்டை நாயே” சோகமும் குத்தலும் நிறைந்த குரலில் சொன்னான்.

அவன் தாய் அவனை அன்போடு கண்டித்தாள்: “சும்மா திட்டாதே. நீ திட்டக்கூடாது. நீ இன்னும் சின்னவனாய்த்தான்”

“திட்டக்கூடாதா? எல்லாம் உன் நன்மைக்குத்தான். நீ பாட்டுக்கு நாய் மாதிரி சுத்தரே. நீ அதிருஷ்டசாலி என்று கூறிவிட்டு என்னிடம் திரும்பி , “கடவுள் தானே. இந்த வயலையெல்லாம் படைச்சார்?” என்று கேட்டான்.

நிச்சயமாய் “

“எதுக்காக?

“ஜனங்களெல்லாம் ஆனந்தமாய்ச் சுற்றிவருவதற்குத்தான்”

“பச்சை வயல்கள் ” என்று பெருமூச்சோடும் பெரு மிதத்தோடும் சொன்னான்: “நான் என்னுடைய காட்சி சாலையை அங்கே கொண்டு போயி, அவைகளையெல்லாம் திறந்து விடுவேன். ஓடுங்கடா, பயல்களா என்பேன் -ம் – கேளு: கடவுளை எங்கே படைக்கிறாங்க? – ஏழையின் விட்டிலா?”

அவனுடைய தாய் கூச்சலிட்டுக் கொண்டே ஒரேடியாய்ச் சிரித்து ஊளையிட்டாள்; படுக்கையில் விழுந்து சத்தமிட்டாள்.

“அட கடவுளே! என் அருமைக்கண்ணு – கடவுளைப் படைப்பவர்களா?…… விலா வெடிக்கும் ஹாஸ்யமடா இவன் தான் கெட்டிக்காரன்”

லெங்க்கா அவளைச் சிரித்தவாறே பார்த்தான். ஆபாசமான வார்த்தைகளில் மெதுவாகத் திட்டினான்.

“அவள் ஒரு குழந்தை மாதிரி. சிரிக்கிறதுன்னா போதும் ” அவன் மீண்டும் அந்த அசிங்கமான பாலை யைச் சொன்னான்.

“சிரிக்கட்டும். நீ அதைக் கவனியாதே” என்றேன் நான்.

“நானா – அதை நான் கவனிக்கலை. ஜன்னலைக் கழு வாம் இருக்கப் போயித்தான் அவள் மேலே கோவங் கோவமாய் வருது . ஜன்னலைத் துடைத்து வையின்னு நானும் கேட்டுக் கேட்டுத்தான் பாக்ரேன். கடவுளின் ஒளி யையே நான் காண முடியலை. அவளானா. மறந்துக்கிட்டே இருக்கா” என்றான் பையன்

அவள் அவ்வப்போது என்னைப் பார்த்துத் தனது நீலக் கண்களைச் சிமிட்டிக்கொண்டும் டீ பாத்திரங்களைக் கழுவிக்கொண்டும் சொன்னாள்:

“நானும் பிரியமுள்ளவள் தானே. இவன் மட்டும் இல்லாவிட்டால், நான் எங்கேனும் எப்போதோ முழுகி இறந்திருப்பேன், தூக்கேனும் போட்டிருப்பேன்”

சொல்லிவிட்டு அவள் புன்னகை புரிந்தாள்.

லெங்க்கா என்னைப் பார்த்துத் திடீரெனக் கேட்டான் :

“நீ ஒரு முட்டாளா?”

“எனக்குத் தெரியாது, ஏன்?”

“இல்லை – அம்மா நீ ஒரு முட்டாள்னு சொல்லுரா?”

“நான் எதற்குச் சொல்லப் போகிறேன்?” என்று அவள் திகிலடையாமல் பதில் கூறிவிட்டு, அவர் ஒரு குடிகாரியைத் தெருவிலிருந்து கொண்டு வந்து, படுக்கையிலே போட்டுவிட்டு, வெளியே போய்விடுகிறார். அதைத் தான் சொன்னேன். வேறு ஒன்றும் நான் குறிக்கவில்லை. அதை நீ என் மேலே திருப்புகிறாயா – சின்னப் பயலே என்று மேலும் தொடர்ந்தாள்.

அவளும் ஒரு குழந்தையைப் போலத்தான் பேசினாள். அவளுடைய பேச்சு பருவம் எய்திவரும் இளம் பெண் ணின் பாணியில் இருந்தது. வடுப்பாட்டு மூளியான மூக் கும், கோணிய வாயும், இடை விழுந்த பல் வரிசையும் சேர்ந்து, வாலைப் பருவத்தின் புனிதத்துவம் பெற்ற அவள் கண்களையுங்கூட பயங்கரமாகக் காட்டின. பேய்க் கனவு கண்டு பதறிய பான்மை போல, அவள் முகம் தென்பட் டாலும் அதிலும் ஒரு குதூகலம் தென்பட்டது.

“சரி. நாம் டீ சாப்பிடுவோம்” என்று அமைதியுடன் சொன்னாள் அவள். வெங்க்காவுக்குப் பக்கத்திலுள்ள பெட்டியின் மேல் டீ பாத்திரம் இருந்தது. கீறல் விழுந்த இடை வழியே வரும் நீராவிப் புகை அவன் தோளில் பாய்ந்தது. அவன் தனது சின்னக் கையை அதற்கு எதிராக ஏந்தி, உள்ளங்கை ஈரமானவுடன் தலையில் துடைத்துக்கொண்டு, தனது கண்களை ஏறச் சொருகுவான்.

“நான் பெரியவனான பின் அம்மா எனக்கு ஒரு வண்டி செய்து தருவா. அதிலே நான் இருந்து, தெரு வழியே ஊர்ந்து சென்று பிச்சை கேட்பேன். வேண்டு மட்டும் ஜனங்கள் தந்தப்புறம் நான் பச்சை வயல்களின் பக்கம் போவேன்” என்றான் சிறுவன்.

“ஹோஹோ” என்று பெருமூச் செறிந்து விட்டுத் தாய் வாய்விட்டுச் சிரித்தாள். “என் கண்ணுவுக்கு ஊரெல்லாம் சொர்க்கம் மாதிரித்தான்! ஆனால், நாடு முழு தும் என்ன காண்கிறாய்? – முகாம்கள்! மிருகத்தனம் படைத்த சிப்பாய்கள்! குடிகாரக் குடியானவர்கள் !”

“நீ பொய் சொல்றே” என்று லெங்க்கா முகத்தைச் சுருக்கிச் சொன்னான்: “இவனைக் கேளு- ஊர்ப்புறமெல்லாம் எப்படி இருக்குன்னு – இவன் அதைப் பாத்திருக் கான்.”

“அப்படியானால் நான் – நான் மட்டும் பார்க்கவில்லையா?”

“ஆமாமா, குடிச்சுக்கிட்டுக் கிடக்கிறப்போ”

அவர்கள் இருவரும் சிறு குழந்தைகளைப் போல உற் சாகத்துடனும் தர்க்க ரீதியாகவும் வாதித்தார்கள். அச்சமயம் மாலை வெயில் வெளி முற்றத்தில் விழுந்தது. புறாநிறங் கொண்ட கனத்த மேகம் செக்கர்வானில் நிலைத்துத் தொங்கியது. பொந்துக் குடிலில் இருள் புகுந்துகொண்டிருந்தது.

பையன் ஒரு கப் டீ குடித்தான் வியர்த்தது. என்னையும் தன் தாயையும் பார்த்துச் சொன்னான்.

“நான் சாப்பிட்டாச்சு, நான் குடிச்சாச்சு. இப்போ – எனக்குத் தூக்கமா வருது”

“சரி தூங்கப் போ” என்று சொன்னாள் தாய்.

“ம்… அவன் – அவன் போயிருவான் – நீ போவப் போறியா?”

“கவலைப்படாதே, அவரைப் போகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவள் தன் முழங்கையால் என்னை இடித்தாள்.

“நீ போகவேண்டாம்” என்று வேண்டியவாறே கண்களை மூடிப் பெட்டிக்குள் சாய்ந்தான். திடீரென்று தலையை உயர்த்தித் தன் தாயிடம் கண்டிப்பான குரலில் சொன்னான்.

“இவனை ஏன் நீ கலியாணம் பண்ணிக்கக்கூடாது? கலியாணம் பண்ணிக்கிட்டு, மத்த பொம்பளைகளைப்போல நீயும் ஏன் இருக்கக்கூடாது? எல்லா மாதிரி ஜனங்கள் கிட்டேயும் ஏன் பழகுறே? அவங்க உன்னை அடிக்கத் தானே செய்தாங்க. ஆனா , இவன் – இவன் ரொம்ப நல்லவன்”

“உஷ், உறங்கு” என்று மெதுவாகக் கூறிவிட்டு, அவள் தன் கையிலிருந்த டீ கப்பில் தனது முகத்தைக் கவிழ்த்தாள்.

“இவன் பணக்காரன்’

ஒரு கணம் அவள் அமைதியாயிருந்தவாறே , கோப்பையிலிருந்த டீயைத் தனது உதடுகளால் உறிஞ்சினாள். பிறகு ரொம்பப் பழகிப்போனவள் மாதிரி என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

“இப்படித்தான் நானும் அவனும் – நாங்கள் இருவர் மட்டும் – வாழ்கிறோம். அக்கம்பக்கத்தில் என்னை ஒழுங்கு முறையற்றவள் என்று தூற்றுகிறார்கள். ஆனால் நான் யார் முன்னும் வெட்கப்படுவதில்லை. நான் எவ்வளவு அவ இணமானவள் – இருந்தாலும், நான் எதற்கு நல்லவள் என்றுதான் ஒவ்வொருத்தரும் பார்க்கிறார்கள். ஆம். என் மகன் தூங்குகிறான். எனக்கு இவன் நல்ல பிள்ளை தானே -ம்”

“ஆமாம். ஆமாம்”

“ஆனால், நான் அவனைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. அவனுடைய மூளையைத்தான் பாருங்களேன்!”

“ஆமாம், ரொம்பக் கெட்டிக்காரன்தான்”

“வாஸ்தவம். அவன் தந்தை ஒரு பெரிய மனுஷர்; கிழவர். அவரை நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? அவர்களுக்குப் பல ஆபீஸ்களும் உண்டு. அப்பா! எப்போதும் பேப்பர்களோடுதான் மாரடிப்பு”

“என்ன சொல்கிறாய்? – அவர் ஒரு பிரமுகர் என்கிறாயா?”

“ஆமாம். அவர் அன்பானவர்; வயதானவர். ரொம்ப அன்புடையவர். அவர் என்னைக் காதலித்தார். நான் அவர் வீட்டில் வேலைக்காரியாயிருந்தேன்.

“பிறகு அவர் திடீரென்று இறந்து போய்விட்டார். அப்போது இரா வேளை. அவர் தரையில் சாய்ந்து உயிர் விட்டவுடனேயே நான் அங்கிருந்து வந்துவிட்டேன். ம்…. நீங்கள் ‘க்வாஸ்’ பீர் விற்கிறீர்களா?”

“ஆமாம்”

“சொந்த வியாபாரமா?”

“இல்லை, இன்னொருத்தர் வியாபாரம். நான் வேலை செய்கிறேன்.”

அவள் என்னை நெருங்கி வந்தாள்.

“ஐயோ – என்னைப் பார்த்து முகத்தைத் திருப்ப வேண்டாம். அந்த வாடையே இனி அடிக்காது. தெரிவிலுள்ள யாரையும் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்குத் தெரியும்” என்றாள்.

“நான் ஒன்றும் முகத்தைத் திருப்பவில்லையே”

வேலை செய்து மரத்துத் தொய்ந்து போய், நகம் தேய்ந்த விரல்களை என் மடியில் போட்டுக் கொண்டே அவள் சொன்னாள்:

“லெங்க்காவின் சார்பில் உங்களுக்கு நான் நன்றி கூறவேண்டும். அவனுக்கு இன்று இன்பப் பொழுதாகக் கழிந்தது. எல்லாம் உங்களால் தான்.”

“சரி நான் போக வேண்டும்” என்றேன்

“எங்கே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“வேலை இருக்கிறது”

“இருங்களேன்”

“இல்லை. முடியாது.”

அவள் மகனைப் பார்த்தாள் : ஜன்னலைப் பார்த்தாள். வானைப் பார்த்தாள். பிறகு மெதுவாகச் சொன்னாள் “தங்குங்கள். நான் எனது ஜாடியைக் கைக் குட்டையால் மூடிவிடுகிறேன். என் மகன் சார்பில் உங்களுக்கு நான் வந்தனம் கூற வேண்டுமல்லவா?”

அவள் ஆணித்தரமாக, அன்பாக இதய நெகிழ்ச்சியோடு பேசினாள். அவளுடைய கண்கள். பயங்கர முகத்தில் அமைந்த பச்சிளம் கண்கள் புன்னகையோடு பிரகாசித்தன. பிச்சைக்காரியின் புன்னகையல்ல; நன்றியறிதலை நல்ல வழியில் காட்டும் செல்வந்தனின் புன்னகை அது.

“அம்மா” என்று பையன் கத்திக்கொண்டு உதறியெழுந்தான். “அவைகள் போகின்றன. அம்மா வா”

“சொப்பனம் காணுகிறான்” என்று கூறிக்கொண்டு அவள் குனிந்து பார்த்தாள். சிந்தனையில் மூழ்கியவனாய் நான் வெளி வந்தேன். அந்த மூங்கைக் குரல் ஜன்னல் வழியாகப் பாட்டாகப் பாய்ந்து வந்தது. தாய் மகனுக்கு அதிசயமான தாலாட்டுப் பாடினாள். வார்த்தைகள் தெளிவாயிருந்தன.

தேடி வரும்பல ஆசைகளும்
கேடு பலவிதம் கொண்டு வரும்!
கொண்டு வருங் கொடுந்துன்ப மெனைத்
துண்டு துண்டாக்கியே துன்புறுத்தும்!
வெந்திடுந் துன்பத்துக் கஞ்சிடிலோ
பொந்தினில் வாழ்வதோ சொல்மகனே!

நான் வாயை இறுக மூடிக்கொண்டு, விறு விறு என்று நடந்தேன்.

– சந்திப்பு – ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை – எழுதியவர்: மாக்சிம் கார்க்கி – தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன் – முதற் பதிப்பு – டிசம்பர் 1951

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *