இதுதான் உங்கள் முடிவா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 1,658 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலை முடிந்து வீட்டிற்குப் புறப்பட்டேன். களைப்பு என்னை ஆட்கொண்டது. கவலை என்னை வருத்தியது. பற்பல எண்ணங்களு டன் விரைந்துசென்று என் வாகனத்தில் ஏறி அமர்ந்தேன். இல்லத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருந்தபோது வேண்டாத குழப்பங்களிலிருந்து விடுபட விரும்பினேன். வானொலியை இயக்கினேன். ”மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள். அண்ணன் வாழ வைப்பான் என்றே அமைதி கொண்டாள்..” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அமைதியை நாடி இசை கேட்க எண்ணிய எனக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அப்பாடல் நினைவுகூர வைத்து விட்டது.

உடன் பிறந்தவர்கள் என்று பத்து, பதினைந்து பேர் என அடுக்கும் அளவிற்கு இல்லை. ஒரு பெண் ஓர் ஆண் என்ற அளவிலேயே இருந் தோம். எங்கள் பெற்றோர் சிறுகக் கட்டிப் பெருக வாழ் என்பதைக் குழந்தைச் செல்வத்திலும் கடை பிடித்திருந்தனர்.

என்ன இவ்வளவு கட்டுச் செட்டாக நிறுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று என் தந்தையை நண்பர்கள் கேட்கின்ற போது ஆமாங்க நம் முன்னோர் ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஓர் ஆண் என்று சொல்லி யுள்ளனர். மூத்தோர் சொல் அமுதம் இல்லீங்களா? என்று எதிர்கேள்வி கேட்டு அவர்களின் கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார் என் தந்தை.

அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்று சிலர் சொல்வார்கள். ஆனால் எங்கள் பெற்றோர் முற்றிலும் மாறுபட்டவர்கள். அடுப்பை ஊதினாலும் அறிந்து ஊத வேண்டும். ஆகவே, பெண்ணுக்குப் பொன்னு முக்கியமல்ல. கண் போன்ற கல்வியே அவசியம் என்பார்கள். எனவே எங்கள் பெற்றோர் தம் பிள்ளைகளின் கல்வியில் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். என் சகோதரி மிக நன்றாகக் கற்று வந்தார். இரண்டு வயது இளையவனான நான் அக்காளுடன் போட்டி போட முடியாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டு வந்தேன். அவர் ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுப் பரிசுகளோடு வருவார். நானோ தேர்ச்சி அடைந்துவிட்டோம் என்ற இறுமாப்பில் திளைத்து விடுவேன்.

ஆண்டுகள் பல ஓடின. தொடக்க நிலையை முடித்து அக்காள் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். அதன்பின் அக்காளுக்கு ஓய்வு என்பதே இல்லை. மாலைப் பள்ளி என்றால் காலையில் தமிழ் வகுப்ப காலைப் பள்ளி என்றால் மாலையில் தமிழ்வகுப்பு. தமிழ் வகுப்பு இல்லாத நாட்களில் புறப்பாடங்கள் என்று சில நாட்கள். பள்ளியின் மன்றக்

கூட்டம் என்று சில நாட்கள். பள்ளியின் கலைநிகழ்ச்சி என்றும் அதற்குப் பயிற்சி என்றும் அக்காள் சென்று கொண்டே இருப்பார். அக்காளுக்குப் படிக்கவோ, தாய், தந்தை, தம்பியுடன் பேசவோ, பழகவோ நேரமிருக்காது.

தொடக்கப் பள்ளியில் அக்காளிடம் இருந்த படிப்பார்வம் உயர்நிலைப் பள்ளியில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. ஆனால், தமிழ் மொழியில் மிக நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தார். மற்றவர்களிடம் விவாதிக்கும்போது அக்காளின் . அறிவுக்கூர்மையும் வாதத்திறமையும் கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்.

அக்காளின் பத்தாவது வகுப்புத் தேர்வின் முடிவு வெளிவந்தது. நாங்கள் எதிர்பார்த்தது போல அவ்வளவு சிறப்பாக இல்லை. எங்களின் தந்தையே பெரிதும் ஏமாற்றத்திற்கு ஆளானார். அந்த ஏமாற்றத்திலிருந்து என் தந்தை தெளிவு பெற பல மாதங்கள் ஆயின என்றால் அது மிகையாகாது. வீராப்புடனும் விவேகத்துடனும் பேசி வந்த என் அன்புத் தமக்கையால் தமிழ் மொழியில் ‘ஏ’ஒன்றும் இதர பாடங்களில் ஏதோ ஒரு வகையாகவும் தேறி இருந்தார்.

படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்த என் சகோதரி வேலை தேடத் தொடங்கினார். அவருக்கு ஏற்ற நல்லதொரு வேலையும் கிடைத்தது. நாட்கள், வாரங்கள், ஆண்டுகள் என ஓடிக்கொண்டிருந்தன. நானும் பல்கலைக் கழகத்தில் படிக்கத் தொடங்கினேன். என் தந்தையின் மனமும் ஓரளவுக்கு நிம்மதி பெற்றது.

அருள்மொழி என்றார். ஆம் அதுதான் என் அக்காளின் அன்புப் பெயர். பெயரில் மட்டுமா அருள்மொழி. உள்ளத்தில் செயலில் நடத்தையில் எல்லாம் அருள் என்றே அகம் மகிழ்ந்தோம். தந்தையின் அழைப்பை ஏற்று ‘ஏனப்பா’ என்றார். உனக்கும் வயது கூடிக் கொண்டே போகிறது. திருமணம் செய்து பார்க்க நினைக்கிறோம்; உன் எண்ணத்தை அறியலாமா? என்று கேட்டார். யார் எதைக் கேட்டாலும் பட்டென பதில் கூறக்கூடிய என் அக்காள் பேசாப் பதுமையை நின்றி ருந்த நிலை எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. அருள் மொழி ஏனம்மா பேசாது நிற்கிறாய்? உன் மனதில் உள்ள கருத்தைத் தெரிவித்தால் நான் அடுத்து யாது செய்யலாம் என்று திட்டமிடலாம் அல்லவா? என்று மீண்டும் தந்தை கேட்டார்.

தலைகுனிந்த தமக்கை, தாயாரிடம் ஓடினாள். ஒன்றும் புரியாது திகைத்து நின்ற எங்களுக்குச் சற்று நேரத்தில் வந்த அன்னை அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டார். ஆம்! அவள் தனக்குப் பிடித்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டதாகச் சொன்னபோது இந்தப் பூனையும் பால் குடித்ததா என்று ஒரு கணம் சிந்தித்தோம். ஆனால், எங்கள் தந்தை மட்டும் உடனே நான் அந்த இளைஞரைப் பார்க்க வேண்டும் என்றார்.

வாட்டசாட்டமாக வளர்ந்திருந்த அவர் நல்ல அழகுடன் காட்சியளித்தார். அழகோடு அறிவும் பெற்று விளங்கிய அவரைக் கண்டு யார்தான் வேண்டாம் என்று தடுப்பார். எல்லாம் இனிதே நடைபெறவே திருமணம் நல்லோர் வாழ்த்துரைகளோடு நலமே முடிந்தது.

“புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சிக் கண்ணே உனக்குச் சில புத்திமதிகள் சொல்லப் போறேன் பெண்ணே” என்று என் இதயம் வாழ்த்தி அனுப்பியது. இன்ப நிகழ்ச்சியை நினைக்கின்ற போதெல்லாம் மனம் மகிழ்ச்சியில் துள்ளி துடுக்காகப் பேசி மிடுக்கோடு திரிந்த தமக்கை இப்போது அடக்கமே உருவமாக அமைதியாகத் துணை வன் இல்லத்திற்குச் சென்ற போது மனம் பூரித்தது. பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தி அனுப்பி வைத்தோம்.

ஆண்டுகள் சில ஓடின. அன்புச் செல்வத்தை ஈன்றெடுத்தார். நாங்கள் பெற்ற இன்பத்தை எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. தாத்தாவும் பாட்டியும் பேரனைக் கீழே விடுவதில்லை. ஒருவர் மாறி ஒருவர் தூக்கி வைத்துக் கொஞ்சுவதே வேலையாகிவிட்து.

இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை இன்பத்தை மட் டுமே எதிர்பார்ப்பது ஏமாளித்தனமில்லையா? துன்பத்தைக் கண்டு துடிப்பது கோழைத்தனம் ஆயிற்றே. ஒருநாள் வாடிய முகத்தோடு மக னைத் தூக்கிக் கொண்டு அக்காள் எங்கள் வீட்டிற்கு வந்தார். பார்த்த எல்லோரும் பதறிப் போனோம்.

ஓடோடிச் சென்று என்ன ஆயிற்று என்று மாறி மாறி கேட்டோம். ஆனால், அந்த அன்புத் தெய்வம், ஒன்றுமில்லை என்று மிக அமைதியாகச் சொல்லிவிட்டு, தாத்தா பாட்டியைப் பார்க்க வேண்டுமென்று பாண்டியன் அடம்பிடித்தான் அதுதான் அழைத்துக் கொண்டு வந்தேன் என்று அமைதியாகச் சொன்னார். நாங்களும் பேசாமல் இருந்துவிட்டோம்.

களுக் களுக் என்ற சிரிப்பொலி என் சிந்தனையைத் தடுத்தது. ஒலி வந்த திசைநோக்கி என் கண்கள் சென்றன. வாடகை உந்து வண்டியிலிருந்த காதலர்களின் கும்மாளம் என்று அறிந்து வேதனையோடு திரும்பி னேன். என்னதான் காதலுக்குக் கண்ணில்லை என்றாலும் ஒரு மனிதன் பக்கத்தில் இருக்கின்ற போது இவ்வாறு நடந்து கொள்வது மனிதத் தன்மை ஆகுமா என்று நினைத்தபோது மனம் வருந்தியது.

‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங் கண்டது இல்’

என்ற திருவள்ளுவரின் குறளைக் கூறி சற்று அமைதியடைந்தேன்.

இதற்கிடையில் சாலைப் போக்குவரத்து விளக்குக் கூண்டில் சிவப்பு விளக்கு தெரிந்ததும் வண்டியை நிறுத்தினேன். காதலர்கள் வந்த வண்டியும் பக்கத்தில் நிற்கவே மீண்டும் கண்ணோட்டமிடத் திரும்பி னேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. மீண்டும் பார்த் தேன். மறுமுறையும் பார்த்தேன். இதுவரை என்னைக் கவனியாது இருந்த அந்தப் பெரிய மனிதர் என்னைப் பார்த்துவிட்டார்.

மெதுவாக மறையத் தொடங்கிய போதிலும் நான் நன்றாகவே அடையாளம் கண்டு கொண்டேன். எனக்கு வந்த ஆத்திரமும் ஆவேசமும் கொஞ்சம் நஞ்சமல்ல. வண்டிகளின் ஒலி எனக்குப் பச்சை விளக்கு வந்துவிட்டதை நினைவுபடுத்தின. நான் புறப்படுவதற்குள் வாடகை வண்டி வேறு பக்கமாகத் திரும்பிச் சென்று மறைந்தது.

வேறுவழி இன்றி வீட்டிற்கு வந்தேன். அக்காள் தன் குழந்தை யோடு சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார். அக்கா நான் உங்களோடு தனியாகப் பேசவேண்டும் என்று இதுவரை பேசியறியாத நான் கடுகடுப் போடு கூறினேன். அவரும் என்னவோ ஏதோ என்று ஓடோடிவந்தார்.

எந்த வருத்தமும் இன்றி வந்ததாகச் சொன்னீர்களே அது எந்த அளவிற்கு உண்மை என்பதை அறிய விரும்புகிறேன். ஒளிவு மறைவு இன்றி சொல்ல வேண்டும் என்று சற்று கடுமையாகவே கேட்டேன். ஏன் அப்படிக் கேட்கிறாய்? நான் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று மேலும் மழுப்பினார்.

அக்கா உங்கள் கணவர் இன்னொரு பெண்ணோடு வாடகை உந்து வண்டியில்… ஐயோ அதை எப்படிச் சொல்வேன்.. ஒரு கேடுகெட்ட பெண்ணோடு இவர் சிரித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டு… ஐயோ ரத்தம் துடிக்கிறதே! அதனால்தான் நான் உங்களிடத்தில் இதையெல்லாம் கேட்கிறேன் என்று சொன்னவுடன் அக்காளின் முகம் சுருங்கத் தொடங் கியது. வேகம் குறைந்து மௌனம் நிலவியது.

நான் மேலும் மேலும் கேட்கவே வேறு வழி இன்றி தம்பீ! என் கணவரை நானே தேடிக் கொண்டேன். அவர் முதலில் மிக நல்லவரா கவே இருந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு ஒழுங்காக வருவ தில்லை. வந்தாலும் சரியாக நடந்து கொள்வதில்லை. சதா பேசுவதும் ஏதாவது கேட்டால் அடிப்பதுமாக இருந்தார். சற்று ஒதுங்கி இருந்தால் மாற்றம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்றே வந்தேன். ஆனால் நிலைமை வேறுவிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது; என்ன செய்வது என்றார்.

இப்படிப் பட்டவர்களுக்கு இது சரியில்லை. சாமம், பேதம், தானம் தண்டம் என்பார்களே அதில் தண்டம் தான் இவர்களுக்குத் தேவை. அடியாத மாடு படியாது. இவர்களை உதைத்துத்தான் திருத்த வேண்டும் என்று உணர்ச்சி வயப்பட்டு பேசிவிட்டேன். ஆனால் அன்பே உருவான என் சகோதரி மிக அடக்கத்தோடு தம்பி தவறு செய்யாதவர்களே இல்லை. தவறு என்று தெரிந்தும் தொடர்ந்து செய்பவர்களே குற்றவாளி கள். அவர்களும் ஒரு நாள் திருத்தியே ஆகவேண்டும் என்று வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல சொன்னார்.

பொறுமை இழந்த நான் சில தடிப்பான சொற்களைக் கொட்டிவிட் டேன். ஆனால் வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் சிறந்த அந்த நிறைகுடத்திடம் நான் மேலும் சொன்னேன்.

சரி அக்கா.! உங்கள் கருத்துப்படி அவரை அடிக்க வேண்டாம். பஞ்சாயத்திற்குக் கட்டுப்படாவிட்டால் அவர் மீது வழக்குத் தொடுத் தால் என்ன? வழக்குத் தொடுக்கலாம். அதனால் என்னப்பா பயன்?

என்ன பயனா? பதிவு மணம் செய்த உங்களை விட்டுவிட்டு யார். யாரோடோ ஊர் சுற்றுகிறாரே! சட்டம் அவரை சும்மா விடுமா?

சட்டம் தண்டிக்கும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு முன் ஒன்று கேள். நானும் அவரும் எவ்வளவு அன்பாக ஒற்று மையாக பலரும் எங்களைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்தோம். அப்படிப்பட்ட எங்களின் விவகாரம் நாளிதழில் வெளிவர வேண்டுமா? அதைப் பலரும் படித்து விட்டுப் பலவிதமாகப் பேச இடம் கொடுக்க வேண்டுமா? இக்காட்சிக ளைக் கண்டு நான் உயிர்வாழ வேண்டுமா? அவர் முடிக்கவில்லை. நான் குறுக்கிட்டு..

அக்கா என்ன அப்படிச் சொல்லிட்டிங்க. உங்கள் வாழ்விற்காகத் தானே இப்படி எல்லாம் பேசுகிறேன். உங்கள் கதையைப் படிக்கின்ற மற்ற பெண்களாவது கவனமாக இருக்கட்டும் என்பதற்காகவும் வாழ்க் கைப்படி என்ற பெயரில் பணம் செலுத்துவதன் மூலம் அவர் திமிர் கொஞ்சம் அடங்கட்டும் என்றுதான் அவ்வாறு நினைத்தேன். உங்களுக் குப் பிடிக்கவில்லை என்றால் இனிமேல் நான் வாயே திறக்கவில்லை.

உன் மனதை வருத்தியதற்காக என்னை மன்னித்துவிடப்பா. அன்ப ழகா! உன் எண்ணம் மிக உயர்ந்தது. நீ விரும்பும் செயல் பாராட்டுக்குரி யது. ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராது. ஏன் தெரியுமா? இன்று மிகப் புதுமையான வாழ்வு வாழ்கிறோம். நாளை என்று இன்றைய ஆண் – பெண் நினைப்பதில்லை. அறவாழ்க்கை என்றால் பலருக்கு அர்த்தம் புரியவில்லை. இன்பம் இன்பம்… இதுதான் இன்றைய இளைஞர்களின் எண்ணமாக இருக்கிறது. அந்த இன்பத்தை எப்படியும் அடைய வேண் டும். அதற்கு எவ்வளவு துன்பப் பட்டாலும் பரவாயில்லை. துன்பம் செய்யவும் தயங்குவதில்லை. எல்லா இளையர்களும் அப்படி இல்லை என்ற;லும் அப்படித்தான் சமுதாயம் போய்க் கொண்டிருக்கிறது.

எனக்கு வாழ்க்கைப் படி என்ற பெயரில் பணம் கொடுப்பதன்மூ லம் அவரை இக்கட்டிற்கு ஆளாக்கலாம் என்பது ஓரளவுக்கு உண்மை தான். ஏனெனில் எல்லாத் தீய செயல்களுக்கும் பின்னணியாய் இருப் பது பணம்தான் -என்றாலும் இந்தப் பணத்தை இன்று ஒரு பொருட்டா கக் கருதவில்லை. தீர்வையாகட்டும் அபராதமாகட்டும் தண்டனையா கட்டும் அதற்காகப் பயப்படுவதுபோல் தெரியவில்லை. இன்று ஏற்பட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று என்றே கருதுகிறேன். என மிக அடக்கத்து டன் சொல்லி என் ஆத்திரத்தை ஆவேசத்தைப் பெட்டிப் பாம்பாக அடக்கிவிட்டார். நான் வாய் ஏதும் பேசாது ஏக்கத்தோடு பார்த்தேன்.

தம்பி நீ ஒன்றும் கவலைப்படாதே. இன்றோ, நாளையோ அல்லது என்றோ ஒரு நாள் அவர் என்னைத் தேடி ஓடி வருவார். அப்படியே அவர் வராவிட்டாலும் இதோ அவர் எனக்குக் கொடுத்த விலை மதிப்பற்ற சொத்து. எத்தனையோ பெண்கள் திருமணம் செய்து கொள்ளா மலே வாழ்க்கையை ஏதோ ஒரு நம்பிக்கையில் ஓட்டிக் கொண்டிருக்கி றார்கள்.

எனக்கு என்னப்பா? ‘சாண்பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை’ என்பார்களே, அப்படி ஒரு பிள்ளை மகனாக இருக்கும் போது நான் எதற்குக் கவலைப்படவோ, துன்பப்படவோ வேண்டும்? ஒருவேளை கணவன் பிரிவு தாங்காமல் தற்கொலை செய்துப கொள்வேன் என்று நினைக்கிறியா?

நாம் எப்படிப்பட்ட தாய் தந்தையருக்குப் பிறந்தோம்? அவர்கள் எத்தகைய பண்போடும் பழக்கத்தோடும் நம்மை வளர்த்தார்கள்? கோவலனைப் பிரிந்து கண்ணகி வாழவில்லையா? கண்ணகிக்குக் கொஞ்சமும் குறையாத கற்புள்ள மாதவியைப் பிரிந்து கோவலன் ஏன் வந்தார்? கண்ணகியின் உண்மையான அன்பும் பாசமும் தான் கோவ லன் திரும்பி வந்ததற்குக் காரணமாக இருக்கலாம். அந்த நம்பிக்கை எனக்குண்டு.

நம் பெற்றோர் நமக்கு என்ன குறை வைத்தனர்? வெறும் அன்பை யும் பண்பையும் மட்டும் ஊட்டி வளர்க்கவில்லை. ஆழ்ந்த அறிவையும் நிறைந்த கல்வியையும் கற்பித்து இருக்கிறார்கள். எனக்குள்ள கல்வி யைக் கொண்டு ஏற்ற வேலையைத் தேடிக் கொள்கிறேன். அந்தவேலை யில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு நானும் இந்த அன்புச் செல்வ மும் உங்கள் ஆதரவோடு அழகாக வாழ்ந்திடுவோம். இப்படி வாழ்வது எளிதான செயலல்ல; என்றாலும் என்னால் வாழ முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் ஒன்று… என்று நிறுத்தினார்.

இந்த ஊரும் உலகமும் என்னைப் பற்றிப் பலகட்டுக் கதைகளைக் கட்டிவிடும். வாழ்வுக்குத் துணை வராத இந்த சமுதாயம் தூற்றுதலுக்குக் கொஞ்சமும் தயங்காது. அதை நினைக்கும் போதுதான் என் மனம் சோர்வடைகிறது.

நான் ஒரு முறை தவறு செய்துவிட்டேன். அதுதான் நானாகக் கணவனைத் தேர்ந்தெடுத்தது. இனி மீண்டும் ஒரு தவறு செய்யவே மாட்டேன். அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நானும் என் பிள்ளையும் இங்கு இருப்பதினால் உங்களுக்குத் தொல்லைகள் இருக் கும். அதை நினைக்கும் போது.

அக்காள் முடிக்கவில்லை. இடையில் குறுக்கிட்டு என்ன சொன்னீர்கள் அக்கா? நம் பெற்றோர் மட்டுமல்ல நான்கூட உங்களின் நலமான வாழ்விற்காகவே வாழ்கிறேன். எக்காரணத்தைக் கொண்டும் அப்படிச் சொல்லாதீர்கள்; அவ்வாறு நினைக்காதீர்கள்.

உங்களின் அன்பையும், தமிழ்ப் பண்பையும் பரந்த, தெளிந்த அறி வையும் அறிந்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். உங்களைப் போன்ற நல்லவர்கள் எவ்வித வருத்தமும் இல்லாமல் நிறை வாழ்வு வாழ வேண்டும். அதற்காகவே முயற்சித்தேன். ஆனால் நீங்கள்… அக் காள் இதுதான் உங்கள் முடிவா? என்று ஏதோ ஒரு நட்பாசையில் கேட்டேன்.

ஆனால், அவர், கண்களை ஒருமுறை மூடித் திறந்து ஆம் என்பது போல தலையை ஆட்டி அவர் காட்டிய உறுதியையும் மனத்திண்மை யையும் கண்ட போது என்னால் அதற்குமேல் வாய்திறக்க முடியாமல் திகைப்போடு என் அறைக்குச் சென்றேன்.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *