கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 13,187 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒலி வடிவம்: https://www.youtube.com/watch?v=gLdOLqKMQ9o

காலை வெயில் சுள்ளென்று ஊசி குத்தியது. லெச்சுமி ரொம்ப சிக்கிரமாகவேதான் கிளம்பி வந்திருந்தாள். இருந்தும் அவளுக்கு முன் அம்பது அறுபது பொம்பளைகள் நின்று கொண்டிருந்தார்கள்.

சுவரை ஒட்டிக் கியூ வரிசை நின்றது. அங்குதான் நிழல் ஓர் அடி அகலத்துக்கு நீண்டிருந்தது. குழந்தைக்கு வெயில் படாமல் இருக்க துணியால் தலையை மறைத்துத் தோளில் போட்டுக் கொண்டிருந்தாள். பச்சைப் புள்ளையைத் தூக்கிக் கொண்டு சினிமா வுக்கு, இந்த வெயிலில் வந்து நின்று கொண்டிருப்பதை அந்த ‘ஆள்’ பார்த்தால் கொன்றே போடும் என்கிற பயம் வந்து சுற்று முற்றும் தெரித்தவர் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்துக் கொண் டாள். நல்ல வேளை, புருஷனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை,

இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் தெருவில் யாரும் இல்லை. நேற்றுப் பிறந்ததிலிருந்து. கிழங்கட்டை வரை எல்லாருமே பார்த்து விட்டிருந்தார்கள். கதை கதையாச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

லெச்சுமி இந்நேரம் இதைப் பார்க்காமல் விட்டு வைத்திருப் பாளா? பிள்ளை பெற்றுக் கொண்டு வருவதற்காக அம்மா வீட்டுக் குப் போயிருந்தாள். ஏழாம் மாசம் போனவள். அப்போது அந்தப் படம் வெளியாகி விட்டிருந்தது. அம்மா ஊரில் கூட அதைப் பார்க் காமல் இருந்த ஜென்மங்கள் யாரும் இல்லை. ஆனால் பின்னையை வயிற்றில் வைத்துக் கொண்டு சினிமா பார்க்கப் போக முடியுமா? நிறை மாசக்காரி. ‘பிள்னையைப் பெத்துக் கொண்டு எங்கு வேணும் னாலும் போ’ என்று அம்மாக்காரி சொல்லிவிட்டாள்.

ஒரு வழியாகப் பிள்ளை பெற்றுக் கொண்டு நேற்று முன் தினம் தான் ஊர் திரும்பி இருந்தாள். குழந்தையைப் பார்க்க வந்த ராமக்காள், செந்தாமரை, செங்கேணி, வெள்ளைமுத்து இன்னும் யார்தான் சொல்லவில்லை? அப்படிப் பேசிக் கொண்டார்கள். இன்றுதான் முடிந்தது. அந்த ஆள், ‘பக்கத்து ஊருக்குப் போய்விட்டு இருட்டுவதற்கு முன் வந்து விடுவேன்’ என்று கூறி விட்டுப் போனதும். இதுதான் தக்க சமயம் என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு கொட்டாய்க்கு வந்து விட்டாள்.

வெயில் கடுமையாக உறைத்தது. புடவையைத் தலையைச் சுற்றிப் போர்த்திக் கொண்டு நின்றாள். அதற்குள் வரிசை அனுமான் வால் மாதிரி நீண்டு கொண்டே போயிருந்தது. தெரு முக்கில் கடைசிப் பொம்பளை நின்றிருந்தான்.

குழந்தை வெயில் தாங்காமலோ, பசியாவோ சிணுங்கியது. நின்றவாறே ரவிக்கைப் பட்டனை அவிழ்த்துக் குழந்தைக்குப் பால் கொடுத்தாள். அவளுக்கு முன்னால் நின்றிருந்த வயசானவன் ஒருத்தி, திரும்பிப் பார்த்து, ‘பச்சைப் பிள்ளையைத் தூக்கிக்கிட்டு இந்த வெயில்ல வந்திருக்கியே…’ என்றாள்.

லெக்சுமி பதில் சொல்லவில்லை, ஆனால் லெச்சுமிக்குப் பின்னால் நின்றிருந்த ஒருத்தி பதில் சொன்னாள். ‘இந்த வயசுல உனக்கு சினிமா கேட்குது. நீ யோக்யம் பேச வந்துட்டே.’ என்றாள், ‘தே. மூடிக்கிட்டு உன் வேலையைப் பாரு’ என்றாள் வயசானவள்.

அப்போதைக்கு அந்த விஷயம் முடிந்தது. லெக்சுமி மேலே கட்டியிருந்த பேனரைப் பார்த்தாள். ஆடு ஒன்று நின்றிருந்தது. அதை அணைத்துக் கொண்டு ராமனும், ஸ்ரீலேகாவும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருந்தார்கள், அவர்கள் இருவரையும் இந்த ஆடு தான் சேர்த்து வைக்கிறதாம். மனுஷன் செய்கிற எல்லா வேலையையும் இந்த ஆடு செய்வதாக மாரக்கா சொன்னாள்,

இப்போது தெரு முனையைத் தாண்டி விட்டிருந்தது. நிற்க முடியாதவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். இளம்பெண்கள் நிற்க, வயசான பொம்பிளைகள் அப்படியே மண்ணில் உட்கார்ந்து சுருக்குப் பையை அவிழ்த்து வெற்றிலை போட்டுக் கொண்டி ருந்தார்கள். கடலை, பட்டாணி விற்கிற பையன்கள் இவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

தாகம் தொண்டையை வறளச் செய்திருந்தது. சோடா விற்கிற பையன் பக்கத்தில் வந்தபோது குண்டு சோடா வாங்கிச் சாப்பிட்டாள் லெச்சுமி. இன்னும் நிறைய பொழுது இருந்தது. டிக்கெட் கொடுக்குமுன் ‘வினாயகனே…’ பாட்டு போடுவார்கள். இரவுகளில் ஊர் முழுதும் அந்தப் பாட்டுக் கேட்கும். அதையே குறிப்பு வைத்துக் கொண்டு சினிமாவுக்கு வருபவர்கள் புறப்படு வார்கள். இன்னும் அந்தப் பாட்டுப் போடவில்லை.

ஜனங்கள் லெச்சுமியை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவள் எழுந்து நின்று கொண்டாள். குழந்தை வாடித் தளர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. ‘கண்ணு…. கண்ணு…’ என்று அழைத்து அதன் கன்னத்தை நிமிண்டினாள் லெச்சுமி, சிரமப்பட்டுக் கண்ணைத் திறந்து பார்த்து சிணுங்கியது குழந்தை, சூரிய வெளிச்சம் அதைச் சிரமப்படுத்தி இருக்கும். மீண்டும் கண்ணை மூடிக் கொண்டது.

வரிசையில் வெள்ளைப் புடவை கட்டிய ஒருத்தி புகுந்தாள். லெச்சுமிக்குப் பக்கத்தில் இருந்தவன். ‘அடி என் சக்காளத்தி, யாருடி அவ வரிசையில் பூரது…’ என்றாள். அந்த அம்மாள் திரும்பிப் பார்த்து, ‘யாரைப் பாத்துடி சக்காளத்திங்கறே? மூதேவி’ என்றாள். வரிசை கொஞ்சம் சலசலப்புற்று, தன் ஒழுங்கைக் கலைத்து, இருவரையும் வேடிக்கை பார்க்கும் உத்தேசத்துடன் முன்னால் வந்தது.

‘ஹா… மூதேவியா? நீ மூதேவி! உன் அம்மா, ஆத்தா உன் பரம்பரை! உன் மூதேவித் தனத்தை இங்சுக் காட்டாதே…’

லெச்சுமிக்குப் பக்கத்திலிருந்தவள் பாய்ந்து அவளிடம் போனாள்.

அதற்குப் பின் கேட்க முடியாததும், சகிக்க முடியாததுமான வார்த்தைகளால் அவர்கள் கத்த, அவர்களைச் சுற்றி ஆண்களும், பெண்களுமான ஒரு கூட்டம் கூடியது. வரிசையில் இருந்த பலரும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்கள்.

வாய்ச் சண்டை கொஞ்ச நேரத்துக்குள், கைச் சண்டையாக மாறிவிட்டது. வெள்ளைப் புடவைக்காரியின் தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் மற்றவள். அவளுடைய தலை மயிரைப் பிடித்து அந்த வெள்ளைப் புடவைக்காரியும் இழுத்துக் கொண்டி ருந்தாள். இருவர் புடவையும் தோளில் இருந்து நழுவி, வெறும் ஜாக்கெட் தெரிய இழுத்துப் பற்றிக் கொண்டிருந்தார்கள். இளம் பெண்ணின் ஜாக்கெட்டின் முதுகுப்புறம் கிழிந்து உள்பாடி தெரிய இருந்தது. ஆண்கள் சுற்றி நின்றது இருவருக்குமே உறைக்கவில்லை.

இந்த நேரம் பார்த்து, இது போன்ற சச்சரவுகளைக் கவனிக்க என்றே சம்பளம் கொடுத்து அமர்த்தப்பட்ட கட்டையன் அங்கு தோன்றினான். பனியனும், மடித்துக் கட்டப்பட்ட கைலியும், மொட்டைத் தலையும், விசாலமான உடம்பும், கூட்டத்தை அயர வைத்துக் கொஞ்சம் பின்னடைய வைத்தது. வந்தவன் முதலில் இளம் பெண்ணைத் தோள், மார்பைப் பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அசுரத்தனமாக அறைத்தான். வெள்ளைப் புடவைக்காரியின் இடுப்பில் ஓர் உதை விழுந்தது.

அதே சமயம், ‘விநாயகனே!’ பாட்டு ஒலித்தது. டிக்கெட் கொடுக்கும் மணியும் அலறியது. கூட்டும் முண்டியடித்துக் கொண்டு கவுண்டரைச் சூழ்ந்தது. பலமணி நேரம் நிர்வகிக்கப்பட்டது வரிசையில் பாதி கலைந்து, கவுண்டருக்கு முன்னால் வட்டமாமிருந்தது.

சண்டை நடக்கும்போது, கவுண்டரை மிகவும் நெருங்கி விட்டிருந்த லெச்சுமியை இப்போது கூட்டம் நெருங்கித் தள்ளிக் கொண்டு சுவரை நோக்கிச் செலுத்தியது. லெச்சுமி அவன் பிரக்ஞை இல்லாமல், கூட்டத்தால் பின் தள்ளப்பட்டு சுவருக்குமேல் சாய்க்கப் பட்டாள். ‘ஐயோ என் குழந்தை’ என்ற அவள் அலறலை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை.

பெண்களின் உடம்புகள், முட்டிகள், கைகள், தலைகள் அவளை இடித்ததை அவள் உணர்ந்தாள். மூச்சு முட்டிக் கொண்டு வந்தங்து. உடம்பெல்லாம் வியர்வை வழிந்தது. திடீரென்று பத்துப் பனிரெண்டு பெண்கள் அவள் மேல் சரித்தார்கள். ‘ஐயோ’ என்று இடது புறம் சரிந்து மண்ணில் விழுந்தாள். தன் முயற்சி அத்தனையும் சேர்த்துக் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு, குப்புறப் படுத்துக் கொண்டாள்.

முன்னோ பின்னோ தகரக் கொஞ்சம்கூட இடமில்லாம லிருந்தது. வரிசை சுத்தமாகக் கலைந்து குழுமியிருந்தது. கால்களை, இடுப்புக்குக் கீழே பலவித நிறங்களில் துணிகளை, பாதங்களின் மிதிப்பை மட்டுமே லெச்சுமியால் பார்க்க முடிந்தது. உணர முடிந்தது.

போலீஸ் வந்து, கும்பலைக் கலைத்து, லெச்சுமியை மீட்டு, அவனை எதிர்ப்புறம் இருந்த தூங்குமூஞ்சி மரத்தடியில் கொண்டு வந்து போட்டு, சோடா தெளித்து அவள் மயக்கத்தைப் போக்க வேண்டியிருந்தது. மயக்கத்திலும், அவள் உடும்புப்பிடியாகக் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். துணிக்கந்தையில் சுருட்டப் பட்டுக்கிடந்த குழந்தையை வெளியே எடுத்தாள் ஒரு அம்மாள். கை கால் துவண்டிருந்தது குழந்தைக்கு. தலை தொங்கியது. குழந்தை முக்கால் மணி நேரத்துக்கு முன்னாலேயே இறந்துவிட்டிருந்தது.

– 1984

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *