கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 2,201 
 

21-வருடங்களில் அவர் ஊருக்குச் சென்று வந்தது மூன்று முறை மட்டுமே. மொத்தமாகவே இரண்டு மாதங்கள் மட்டுமே இருந்திருப்பார். இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததுமே மலேசியாவுக்குக் கிளம்பிவிட்டார் மயில்வாகனன்.

‘பையனா இருந்தா பஞ்சுமிட்டாய் வித்தாச்சும் கஞ்சி குடிச்சிருவான்.பொம்பளப் புள்ளைங்களுக்கு படிச்சா தான் மதிப்புன்னு’ நினைச்சார் மயில்வாகனன்.

இரண்டு பெண் குழந்தைகளையும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை லட்சக் கணக்கில் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். இப்போது மூத்த மகள் Msc நர்சிங் படித்துக் கொண்டிருக்கிறாள். இளையவள் மூன்றாம் ஆண்டு சட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். பள்ளிப் படிப்பு வரை சொந்த ஊரான தென்காசியில் முடித்து விட்டு கல்லூரிப் படிப்பை ஹாஸ்டலில் தங்கி சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கே லட்சங்கள் என்றால் கல்லூரிக்குச் சொல்லவா வேணும்.

தந்தையாரின் வீடு என்னவோ பெரிசுதான். தொட்டிமுத்தம் உள்ள சுத்துக்கட்டு வீடுதான். அண்ணண் தம்பி சண்டையில கல்யாணம் ஆன ஐந்து மாசத்துலயே வாடகைக்கு வீடு புடிச்சு தனிக்குடித்தனம் வந்துவிட்டார் மயில்வாகனன்.கல்யாணமாகி 24-வருசத்துல வீட்டு வாடகை, பிரசவச் செலவு, குடும்பச் செலவு, புள்ளைங்க படிப்புச் செலவுன்னு தான் சம்பாதிச்ச அனைத்தையும் காலி செஞ்சுட்டார் மனுசன். சேமிப்புன்னு பார்த்தால் மனைவி போஸ்ட் ஆபிஸ்ல போட்டு வச்சிருக்குற ஐம்பதாயிரம் தான்.

வயது ஐம்பதைக் கடந்துவிட்ட மயில்வாகனத்தால் முன்பு போல வேலை செய்ய முடிவதில்லை. ஓவர் டைம் பார்த்து விட்டு வந்து படுத்தால் மறுநாள் காலையில் வேலைக்குச் செல்ல தாமதமாகி விடுகிறது. அலுப்பில் தூங்கி விடுகிறார். பதினெட்டு மணிநேரம் வேலை பார்த்த மனுசன், இப்போ பத்து மணி நேரத்துக்கே மலைத்துப் போகிறார். மலேசியாவுக்கு வந்த புதிதில் உணவகம்,மளிகைக் கடை, இரும்புக் கடைன்னு வேலை பார்த்தார்.எங்கேயும் சம்பளம் போதவில்லை. இரண்டு வருடத்திற்க்குப் பின் தார் சாலை போடும் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது.பகல் இரவுன்னு பார்க்காம,பனியிலயும் வெயில்லயும் கிடந்து பாடுபட்டார்.இப்போது அப்படியெல்லாம் வேலை பார்க்க முடியவில்லை.காலில் நரம்புகள் சுருண்டு போயிருப்பதால் சில நேரங்களில் மரண வலியைத் தருகிறது.சவுல் எடுத்து தார் ஜல்லியை இழுத்துப் பரப்பும் பொழுது முதுகு வலி உயிர் போகிறது.

ஊருக்குப் போய் விடலாம் என நினைக்கிறார். ஆனால், மகள்களின் படிப்பிற்காகவே இன்றளவும் கடினமாக உழைக்கிறார். பத்தடிக்குப் பத்தடி அறையில் தான் சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாமே.

இன்றும் வழக்கம் போல் வேலை முடிந்து அறைக்கு வந்ததும் குளித்து,சமைத்து சாப்பிட்டு விட்டு படுக்கும் நேரத்தில் செல்போன் அழைப்பு வந்தது.தென்காசியிலிருந்து மனைவி…… “என்னங்க… என்னங்க” ஒரே அழுகுரல்.

“என்னம்மா… அழுகாம சொல்லு என்னாச்சு?”

“நம்ம கௌசல்யா யாரயோ லவ் பண்றாலாம்ங்க… சேதி தெரிஞ்சதும், என்னடி உண்மையான்னு கேட்டதுக்கு,ஆமா ஒருத்தன லவ் பண்றேன், அவனதான் கட்டிக்கப் போறேன்னு எடுத்தெறிஞ்சு பேசுறாங்க”.

“சரி நான் பேசிக்கிறேன் நீ கவலைப்படாத,போனை வை” என்று சொல்லிவிட்டு அடுத்த வினாடி கௌசல்யாவுக்கு போன் செய்தார் மயில்வாகனன்.

“என்ன சாமி,அம்மா சொல்றதெல்லாம் உண்மையாடா? சும்மாதான சொல்லிருப்ப?” என்றார் மயில்வாகனன்.

“என்ன சும்மா… அதுதான் உண்மை. சட்டக் கல்லூரில என் கூட படிக்கிறவன். அவன்தான் என் வாழ்க்கைத் துணை. இப்பவே நாங்க ஒரே ரூம்ல ஒன்னாதான் வாழ்ந்துக்கிட்டுருக்கோம். படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்குவோம். தடையா இருக்காதீங்க. உங்க மேல கேஸ் போடுற அளவுக்கு என்னை தள்ளிடாதீங்க”.

“அம்மா இதுக்காமா உன்னை அப்பா கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்”.

“கஷ்டப்பட்டீங்களா…???என்ன கஷ்டப்பட்டீங்க? அப்பறம் எதுக்கு புள்ள பெத்தீங்க?பெத்தா மட்டும் போதுமா?வளக்குறது, படிக்க வைக்கிறதெல்லாம் உங்களோட கடமை…..”

செல்போனைத் துண்டித்து விட்டு பத்துக்குப் பத்து அறைக்குள்ளே, துக்கம் தொண்டையை அடைக்க, தூக்கம் வராமல் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார் அப்பாவியான அப்பா மயில்வாகனன். வந்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போங்களேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *