அழியாச் சித்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 2,488 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தான் சொல்ல வேண்டியதைக் கச்சிதமாகப் பத்து வார்த்தைகளில் சொல்லிவிட்டு, எழுந்து நின்று, பணிவான குரலில், “நாட்டாண்மைக்காரருக்குத் தெரியாததை நான் எடுத்துச் சொல்லலை ! முறை தவறி நடந்து, கெட்ட பேரும் வாங்கி அவமானமும்பட என் மனம் சம்மதப்படாததைத் தான் நான் தெரிவிச்சுக்கிட்டேன். மத்தபடி வேறே எதுவா யிருந்தாலும் உங்க உத்தரவை நிறைவேற்றத் தயங்க மாட் டேன். மன்னிக்கணும்! நான் வரட்டுங்களா ?” என்று கை குவித்து விடை கேட்டான் ஐயணனம்பலம். 

வாய் பேசாமல் தலையை அசைத்து விடை கொடுத்தார் நாட்டாண்மைக்கார காத்தான் அம்பலம். 

அவன் சென்றதும் உள்ளே வந்து பொறி கலங்கிய நிலையில் வெறித்த பார்வையுடன் கூடத்துச் சுவரில் சாய்ந்து கொண்டிருந்த மகளைப் பார்த்தார்! கோபம் பொங்கியது. நாற்பது வருஷ காலமாகக் காப்பாத்திக்கிட்டு வந்த என் கௌரவத்தையும், மானத்தையும் மண்ணாக்கிட்டே பார்த்தாயா? ‘முறைமைக்காரன் இருக்கறப்ப, என்னை வந்து பொண்ணு கேக்கச் சொல்றியோ’ன்னு எம்மூஞ்சியிலே காறி உமிஞ்சிட்டில்ல போய்ட்டான்! உன் மனசு குளுந்து போச்சில்ல?” 

அழகம்மாள் சீறியெழுந்தாள் ! “என் போகலே! குமுறுது எரிமலையா! நான் கேடுகெட்ட வையாபுரியையும் கட்டிக்கலை, யோக்கியனான ஐயணனையும் கட்டிக்கலை, கன்னியாகவே வாழ்ந்துட்டுப் போறேன் போ!” 

“செய்யி! அங்கே நின்னா இங்கே நின்னா அவன் கூடப் பேசினா, அவனோட சிரிச்சான்னு நாலுபேர் பேசிச் சிரிக்க இடம் கொடுத்து என் மானத்தை வாங்கு……” என்று பல்லைக் கடித்தார் காத்தான். 

“மானத்தோட செத்திடுவேனே தவிர மானத்தை வாங்கமாட்டேன் அப்பா.” 

“ஊம், தாராளமா! கம்மாய்லே விழு. இல்லேன்னா கயத்திலே தொங்கி போலீசிலே மாட்டி வை. ஜெயிலுக்கு அனுப்பு!…”

அழகம்மாள் தத்தளித்தாள்! ஐயணனின் புறக்கணிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியும் ஏமாற்றமும் இடியாகத் தாக்கி உட்கார்த்தியிருக்க, பெற்ற தகப்பனும் பேச்சினாலேயே சுடுவதைத் தாங்க மாட்டாமல் தடாரென்று குப்புற விழுந்து ‘அம்மா, நிர்க்கதியாக என்னை இப்படி வுட்டுட்டுப் போயிட்டியே ஆத்தா!’ என்று அலறினாள். 

நாட்டாண்மைக்காரரின் மனம் பதைத்தது! அழகம்மாளின் மனநிலையை உணர்ந்தார்! ஏதும் பேசாமல் வாசலுக்கு நடந்தார்! 

அவரது மனம் அலை பாய்ந்தது! 

வையாபுரியிடம் எல்லாவித கெட்ட பழக்கமும், சகவாசமும் உண்டு ! முறைமைக்காரன் என்ற ஒரே ஒரு பாத்தியதையை முன்வைத்துத் தென்பாக தலைநிமிர்வோடு வந்து பெண் கேட்டாள் தங்கை. அவனைக் கட்டிக்கொள்ளத் தன் மகள் சம்மதிக்காததைச் சொன்னதும் அவள் ஆத்திரம் மிகுந்தவளாகி “கட்டிக்கொள்ள மாட்டாளாமா? ‘முந்தி கிழித்துத்’ தாலி கட்டாவிட்டால் பார்” என்று சபதம் செய்து விட்டுப் போனாள் தங்கை – அதையும் லட்சியம் செய்யாமல், தன் மகளுடைய சந்தோஷ வாழ்வுதான் முக்கியம் என்று நினைத்து, அவள் விரும்பியபடி செய்து வைக்கவே ஐயணன் தாயாருக்கு விவரமாகச் செய்தி அனுப்பி, பெண் கேட்க வரச் சொன்னார் காத்தான் அம்பலக்காரர்! 

ஐயணன் சாதிப்பற்றும், நேர்மையும், கண்யமும் வாய்ந்த வாலிபன். போக்கிரியும், பொல்லாதவனுமான வையாபுரி முறைமைக்காரனாக இருக்க, தான் பெண் கேட்டுப் போய் பஞ்சாயத்தார் முன் குற்றவாளியாக நிற்பதா? 

நாட்டாண்மைக்காரர் சொல்லுகிறாரே என்று எதை வேண்டுமானாலும் செய்ய முடியுமா? நல்லதனமாக கெளரவமாக மறுத்துவிட வேண்டியதுதான் என்று மறுத்து விட்டான்; அவன் யோக்கியன். 

எனக்குத் தலையிறக்கமாச்சே, என் மகளுக்குக் கல்யா ணம் ஆகணுமேன்னு அவன் கவலைப்பட முடியுமா?….

இப்படி எண்ணங்கள் மனதில் கிளர்ந்தெழ கட்டிலில் படுத்துக் கிடந்தார் காத்தான். 


அழுகை ஓய்ந்து எழுந்தாள் அழகம்மாள் ! அவள் மனத்தில் தெளிவு பிறந்து விட்டது போன்றதொரு தோற்றம். எழுந்து பரபரவென்று சமைத்து மூடி வைத்தாள்! 

ஆமாம்! கலியாணமின்று நின்றாலும், தந்தைக்கும் தனக் கும் அவமானம். ஊரில் ஏச்சு. கம்மாவில், கிணற்றில், அல்லது தூக்கிட்டுக் கொண்டாலும் அப்பனுக்கு ஆபத்து! 

ஆனால், இந்த துரதிருஷ்டம் பிடித்தவளுக்காக என்றுதான் என் குல தெய்வம் பதினெட்டாம் படியான்தான் அழகர் மலையிலேயிருந்து அடிவாரத் திடலுக்கு விரட்டி யிருக்கிறான். சிறுத்தையை! 

எனக்காகக் காத்திருக்கிற சிறுத்தையைப் போய் ஊரார் கொன்னுடப் பார்த்தால் நடக்குமா? அது அவர்களுக்குப் ‘பாய்ச்சல்’ காட்டிவிட்டு, புதருக்குள்ளே எங்கேயோ மறைஞ் சிருக்குது! 

‘நல்லவேளை! ஆடுங்களை மேய்க்கிற சாக்கிலே சிறுத் தைக்கு இரையாகி விட்டால் யாருக்கும் உபத்திரவமில்லை!’ இந்த நினைப்புடன் தெருக் கதவைத் திறந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு புறப்பட்டாள் – அப்பனுக்குத் தெரியாமல் ! குறுக்கு வழியாக ஓட்டிக்கொண்டு திடலுக்கு வந்தாள்! மலையடிவாரம் ஜனசஞ்சாரமற்று – அவள் மனத்தைப் போலவே சூனியமாகக் கிடந்தது! 

ஆடுகளை மேய விட்டுவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந் தாள்! வெறும் வயிறுதான் ! ஆனால் பசிக் களையில்லை! 

மானமும் ரோச உணர்வும்தான் வயிற்றை நிறைத்து விட்டனவே! 

“பதினெட்டாம்படியானே, உனக்கு தெண்டம்பா! இன்னிக்கென்னை சிறுத்தைக்கிக் காட்டிக் கொடுத்துடு! எங் கவலையைத் தீத்துடுடா அப்பனே, ஆடுங்களை மோப்பம் பிடிச்சுக்கிட்டு…வந்திடாது?” 

சிந்தனையில் மூழ்கிக் கிடந்தவள் உர்…உர் என்ற உறுமலைக்கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள். நாலு பக்கமும் பார்த்தாள்! 

அதோ! கூப்பிடு தூரத்தில் ஒரு மரத்தின் ஒதுக்குப் புறமாக, ஒரு மனிதனும் சிறுத்தையும் நின்று போராடுவது கண்டு திகைத்தாள் ஒரு கணம் ! 

மறு வினாடி ஓடிச்சென்று பார்த்தாள்! ஆடுகள் தலை தெறிக்க மரண ஓலமிட்டவாறு சிதறி ஓடின. 

ஐயையோ, ஐயணனா! ஆமாம்! அவரே தான்! சிறுத் தையின் முன்னங்கால்களை ஒரு கையிலும், பின்னங்காலை ஒரு கையிலும் பற்றிக்கொண்டு தயிர் கடைவதுபோல அதன் வயிற்றை மரத்தில் உராசியவாறு கடைந்து கொண்டிருந் தான் ஐயணன்! 

அங்குமிங்கும் பார்த்தாள்! ஐயணன் இடுப்பில் குத்து வாள் செருகியிருப்பதைக் கண்டு அதை உருவி எடுத்துக் கொண்டு முன்புறம் வந்தாள்! 

அவள் கள்ளர்குல மறப்பெண் அல்லவா? 

சிறுத்தையின் கழுத்துப் பக்கம்வந்து நின்று வாளைப் பிடித்து, பிடரியில் குத்தி ஆழச் செருகினாள்! 

வாயிலும், மூக்கிலும் உதிரம் கக்க, விழிகள் சுழன்று நிலைகுத்த கோரமான கதறலுடன் உயிரை விட்டது சிறுத்தை ! 

ஸ்தம்பித்து நின்றான் ஐயணன். “அது செத்திட்டுது, விட்டுடுங்க!” என்றாள் அழகம்மாள். சிறுத்தையின் பிடரியிலிருந்த வாளை உருவியெடுத்தாள். 

ஐயணன் கைவிட்டதும் பொத்தென்று கீழே விழுந்தது சிறுத்தை. தலை முண்டாசைப் பிரித்து முகத்திலும் உடலிலும் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டான் ஐயணன். 

கையிலிருந்த வாளை அவனிடம் நீட்டி, “இந்தாங்க உங்க குத்துவாள்” என்று கூறிக் கொடுத்துவிட்டுத் திரும்பி நடந்தாள். 

“நில்லு, நீ நாட்டாமக்காரரு மக தானே!” என்று- கேட்டான் ஐயணன். 

அவன் குரலிலிருந்த தொனிப்பு அவள் இதயத்தைத் டுடாத ேஅவளை நிறுத்தியிருக்க வேண்டும்! இல்லாவிட்டால் அவளுக்கிருந்த ஆத்திரத்தில் காறி உமிழ்ந்து விட்டே போயிருப்பாள் அவள்! 

அவள் நின்றதும்.. “இங்கெங்கே வந்தே நீ?” என்றான். 

“எங்கே வந்தேனா? சாவத்தான்! வையாபுரிக்கு வாழ்க்கைப்பட்டு அவனுக்கு இரையாவதைவிட, சிறுத்தைக் கிரையாகி விடலாம்னுதான் வந்தேன், இங்கேயும் குறுக் கிட்டு என் நெனைப்பிலே நெருப்பைக் கொட்டிட்டீங்க ; போவுது; எனக்கு வேறே வழியில்லாம இல்லே! நீங்க; மானமா, மரியாதையா, ஊருக்கும், நாட்டாமைக்காரருக்கும் நல்லவுங்களா – பெத்தவங்களுக்குப் பிள்ளையா…”

“ஏ! நிறுத்து அம்மட்டோடு ! போ, நேர வீட்டைப் பார்க்க, நட, நான் போய் நேரே பஞ்சாயத்தாரைப் பார்த்து, விவரமெல்லாம் சொல்லி, ஆக வேண்டியதை யெல்லாம் முடிச்சிக்கிட்டுப் பரிசம்போட வருவேன். அதுவரைக்கும் முந்தியை மட்டும் பத்திரமாகப் பாத்துக்க ! என்ன சரிதானா? பெருமாள் மாடு கணக்கா தலையை ஆட்டறியே, வாயைத் திறந்து சொல்லேன்!” என்றான் ஐயணன் குறும்பு நிறைந்த குரலில், 

அழகம்மாள் தலை நிமிர்ந்தது! ஓரக் கண்ணால் பார்த்து, “ஆமாம், சாகத் துணிஞ்ச பிறகுதான், மனசு இரங்கிச், சாக்கும்; ஆமா, நீங்க இப்படி எங்கே வந்தீங்க?” என்று சட்டென்று நினைவு கூர்ந்தவளாகக் கேட்டாள் அழகம்மாள். 

“நானா! நெல்லுப் பிடிக்கப் போனவன், வண்டியோட கூட நடந்து வந்தப்போ, மதகடியிலிருந்து இது பாஞ்சு ஓடி யதைப் பார்த்துத் துரத்திக்கொண்டே வந்தேன்! இங்கே வந்து புதருக்கடியிலே புகுந்தது ! கம்பாலே ஓங்கி யடிச்சேன். சிறுத்தை புதர்லே மறைஞ்சுப் பாய வந்தது. குத்துவாளை எடுக்கக்கூட நேரமில்லே: அப்படி மரத்துக்குப் பின்பக்க மாக நின்னு லாவிப் பிடிச்சேன் காலுங்களை ?……” 

“நான் வராட்டியும்கூட இன்னும் சித்தெக்கெல்லாம் செத்திருக்கும்!…” 

“இல்லே! பின்னங்காலு கையிலேயிருந்து நழுவி நுனிக்கி வந்திட்டுது! நீ வரல்லேன்னா அது அடுத்த வினாடி உருவிக்கிட்டு இருக்கும்! அப்பாட! எவ்வளவு நேரமாச்சு நீ வந்து ! அப்பாரு தேட மாட்டாரு? போ வீட்டுக்கு. சாலை வரைக்கும் கொண்டாந்து விடவா?” 

“இப்ப வேணாம்! அப்புறமா…!” 

“உம், உனக்கும் எனக்கும் முடிஞ்சிட்டிருக்கிறான்  அந்தக் கடவுளு! வேண்டாம்னால் விடுமா ? நட! பத்திரமாயிரு என்ன?” 

தலையை ஆட்டிவிட்டு நடந்தாள் அழகம்மாள். 

இனி திரும்பி வரப்போவதில்லை என்ற நினைப்புடன் அசிரத்தையாக மூடிவிட்டு வந்த வேலிப் படலைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள் அழகம்மாள். ஆடுகள் அங்கங்கு படுத்துக் கிடந்தன! 

கொல்லைப்புறம் சந்தடிகேட்டு ஓடிவந்து பார்த்த காத்தான், “எங்கே போனே அழகு, சொல்லாமல் கொள்ளாமல்! உன்னை எங்கேன்னு தேடறது நான்?” என்று கேட்டார். 

தந்தையை உட்காரச் சொல்லி, அருகில் தானும் அமர்ந்து, சாவதானமான குரலில் நடந்த நிகழ்ச்சியை அப்படியே விவரித்தாள் அழகம்மாள். 

காத்தானுக்கு ஒரே திகைப்பு! செத்துவிடத் தீர்மானித்து வீட்டைவிட்டுப் போன மகளை அதட்டி வைது கோபிப்பதா. அல்லது தனது மதிப்பைப் பெற்ற யோக்கியனான ஐயணனே தனக்கு மருமகனாகச் சம்மதித்து மனக்கவலை தீர்த்து வைத்த தற்குச் சந்தோஷப்பட்டு மகளைத் தட்டிக் கொடுத்து மெச்சு வதா என்று புரியாமல் முகத்தில், வெற்றியும் களிப்பும் குதி போட அருகில் அமர்ந்திருக்கும் மகளைக் கூர்ந்து பார்த்தார் நாட்டாண்மைக்காரர். 

“என்ன அப்படிப் பாக்கறீங்க அப்பா? பெத்த தகப்பனைத் தவிக்க விட்டுவிட்டு சாகத் துணிந்தாளே என்கிற கோபமா எம்மேலே? அதுக்கு அபராதக் காணிக்கையாகத்தான் நல்ல சேதி கொண்டுவந்திருக்கேனே !” என்று குரலில் கெஞ்சலும் கொஞ்சலும் ஒலிக்கச் சிணுங்கினாள் அழகம்மாள். 

அதற்குப்பின் மூன்று நாட்கள் போய்விட்டன. 

பௌர்ணமி நிலவில் வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக்கொண்டு, தாயையும் அருகில் அமரச்சொல்லி பஞ்சாயத்து போர்டு தலைவரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்ததை வேலம்மாளிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஐயணன். 

அவசர அவசரமாக யாரோ, தன் வீட்டுக்காக வருவதைக் கண்ட வேலம்மாள் “யாருடா பயலே அது? வேக வேகமா வாரானே யாரோடு” என்றாள். 

“அட, வையாபுரி வருகிறான் அம்மா ; தனிச்சு வரு கிறானே, என்ன சங்கதின்னு…!” 

சொன்ன சொல் பூர்த்தியாகுமுன்பே அருகில் வந்து விட்ட வையாபுரி ஐயணன் பக்கத்தில் வந்து பொத்தென்று அமர்ந்தான்! 

“வாங்க, வாங்க,ஆத்தா, நம்ம வையாபுரி அம்பலக்காரருல்ல…” 

“அட! வாப்பா, ஆத்தா, அப்பாரு எல்லாம் சொகம் தானே?” என்று விசாரித்தாள் வேலம்மாள். 

“எல்லாரும் சுகம்தான். வந்து உங்க கிட்டத்தான் ஒரு விஷயம் சொல்லிட்டுப் போக வந்திருக்கிறேன்; இப்ப நான் பழைய வையாபுரியில்லே! அது முதல் சங்கதி. ஆச்சா நீங்க தாராளமா நாட்டாண்மைக்காரர் மகளைக் கலியாணம் செய்துக்கலாம். பஞ்சாயத்து பொன்னம்பலகாரர் எல்லாம் சொன்னாரு. எங்க அம்மாவானால் ஒரே பிடிவாதமா, ‘முந்தி கிழிச்சு’ அவள் கழுத்திலே நீ தாலி கட்டாதபோனால் நீ என் மகனுமில்லை; ஆம்பிளையுமில்லைன்னு குதிக்கிறாள். நல்லாக் குதிச்சிக்கிட்டுக் கிடக்கட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. 

“இரண்டாவது, நான் சீட்டாடுகிறவன். குடிக்கிறவன், கெட்டவன், பொல்லாத போக்கிரியும் கூடத்தான். ஆனால்- அம்பலக்காரரே, எனக்கு, வீராப்பும், தன்மானமும் உண்டு, ரோசமும் அதுக்கு மேலே உண்டு. சுகத்தை – அனுபவிக் கணும் என்கிற ஆசை எவ்வளவு உண்டோ, அவ்வளவுக்கு அதைத் ‘தூ’ன்னு துப்பி மண்ணைத் தள்ளி மூடவும் என்னாலே முடியும்! 

அந்தக் குட்டி, நான் கட்டவேண்டிய முறைமைக்காரி, மாமன்மக. அவள் தனக்கு என்னைப் பிடிக்கலைன்னாலும், என்னைப் பெத்தவள் ‘வேணாம்டா அது, விட்டுவிடு’ன்னு குறுக்கே விழுந்து மறிச்சாலும், நம்ம சாதியாசாரப்படி, கட்டுப் பாட்டுப்படி-நான் அவள் மேலே வச்சிருந்த ஆசைக்கி அவள் ‘முந்தியைக் கிழிச்சு’ அவள் கழுத்தில் தாலிகட்டிருப்பேன்! ‘ஏண்டா கட்டலை’ என்கிறியளா? எப்போ, அவளுடைய நினைப்பு வேறே ஆண்பிள்ளைமேலே போயிட்டுதோ அந்தப் பொண்ணை நான் கட்டவே மாட்டேன்! பதினெட்டாம் படியான் சாட்சியா கட்டமாட்டேன்! இது தெரியாதபடி வையாபுரிக்கு இரையாவதைவிட சிறுத்தைக்கி இரையாகப் போகிறேன் என்று செத்துடப்போனாளாம். அது காதிலே கேட்டதிலிருந்து என் குடல் அப்படியே பதறுது அம்பலக் காரரே-பதறுது! நினைப்பு நெஞ்சைத் தீயாகத் தீண்டித் தீய்க்குது! அவளுடயமதிப்பிலே – நான் சிறுத்தையிலும் கேடுகெட்ட சென்மம்னு ஆயிடுச்சு பாருங்க! அதனா லே இரண்டுகால் மிருகமா ஊதாரியா, உதாவாக்கரையா, சோம்பேறியா இருக்கிறதைவிட கண்காணாத சீமைக்குப் போயி – எப்படியோ இருந்துக்கிறது! 

“இதெல்லாம்; கிடக்கட்டும்; 

“என்சொத்து நஞ்சை முப்பது ஏக்கரா, புஞ்சை பதி னெட்டு ஏக்கரா, வீடு எல்லாத்தையும் எங்கம்மாவுக்குப் பிறகு மாமனை, அவரோட வாரிசைச் சேரணுயினு எழுதி ரெயிஸ்தரு பண்ணி, பத்திரத்தை பந்தோபஸ்தா பாங்கியிலே வச்சிட் டேன். இந்த சங்கதி ஊருக்குள் வேறேயாருக்கும் – அதாவது என்னைச் சேர்ந்தவங்களுக்குத் தெரியாது. 

“நீங்க மனசுலே கரவு இல்லாமல் அழகம்மாளைக் கலியாணம் செய்துக்கிட்டு நல்லாயிருக்கணும். உங்கமேலே ஆத்திரமோ கோவமோ எனக்கில்லே. உங்கவரைக்கும் நீங்க கண்ணியமா, ஒழுங்காகத்தான் நடந்துக்கிட்டீங்க – முத ல்லே. அதிலே எனக்கு ரொம்ப சந்தோசம். கடைசியா இதெல் லாம் மாமன் கிட்டச்சொல்லி வவுத்தெரிச்சல் தீர நாலு வார்த்தை கேட்டுட்டுப் போயிடலாம்தான். ஆனால் அந்த மனிசன் முகத்தைப் பார்க்கவோ, பேசவோ பிடிக்கலை. அதனாலே யோக்கியப் பொறுப்பொட நடந்துக்கிட்ட உங்க கிட்ட சங்கதியை சொல்லிட்டுப்போகலாம்னுதான் வந்தேன்” என்றான். 

அதுவரையில் சிலையாகச் சமைந்திருந்த ஐயணன் வையாபுரியின் கையைப் பற்றி “குந்துங்க இப்படி” என்று அவனை உட்கார்த்த முயன்றான். 

“புண்ணிய மில்லை. உட்டுடுங்க?” பசையற்ற குரலில் கண்டிப்போடு சொன்னான் வையாபுரி. 

“எதுக்கும் அவசரப்படக் கூடாதுங்க.” 

“அவசரப்படலையே! நிதானமாக ஆற அமர மூணுநாள் யோசிச்சு செய்தமுடிவுல்ல இது! உல்லாசப் பிரியன்தான் வையாபுரி. ஆனால் சொல்லுப் பொறுக்காத ரோசக்காரன். ரோசங்கெட்டுப் பிழைக்கக் கூடாது பாருங்க மனிசுனாப் பொறந்தவன்! உத்தரவுகுடுங்க” என்று சொல்லி கையை உதறி விடுவித்துக் கொண்டு கைகுவித்து கும்பிடு போட்டு விட்டு நடையைக் கட்டினான் வையாபுரி திரும்பிப் பாராதவனாக. 

அவன் போய் விட்டான்! அவனுடைய துடிப்பும், வேதனையும் மிக்க முகமும், ஆழ்ந்த துயரைத் தேக்கிநின்ற கண்களும், பசையற்ற குரலுமாகச்சேர்ந்து ஐயணனின் மனதில் ஆழப்பதிந்து விட்டதே- ஆயுசுக்கும் அழியாச் சித்திரமாக!

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *