கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 1,161 
 
 

கைத்தட்டல் வானைப் பிளந்தது.

“க்விக்…! க்விக்…! ஸ்ரீ…!”

“வின்…! ­ஸ்ரீ…! வின்…!”

“சூப்பர்…! சூப்பர்…!”

தடைகளைத் தாண்டித்தாண்டிக் குதித்துக் குதித்து மான் போல் முன்னேறினாள் ஸ்ரீ.

ஸ்ரீ…!ஸ்ரீ…!ஸ்ரீ…!ஸ்ரீ…!

எங்கும் நிரம்பி நிற்கும் ‘ஸ்ரீங்காரம்’.

விந்நிங் பாய்ண்ட்டைக் கடந்துவிட்டாள்.

ஸ்ரீ முதலிடம்.

ரஃப்ரி அறிவித்தார்.

முடிவை அறித்ததும் ஸ்ரீயின் பயிற்சியாளரும், உடற்கல்வி ஆசிரியையுமான வேதவல்லி அவளை உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

அருகாமையில் நின்ற பெண் கோச்சுகள், அவளை தூக்கித் தட்டாமாலை சுற்றி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்கள் அவளைச் சூழ்ந்துகொண்டனர்.

“வெற்றிக்குக் காரணம் என் கோச்தான்.” பெருமையாகச் சொன்னாள்.

“உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்…?”

“LIVE WITH SPORTIVE SPIRIT” என்றாள்.

மீடியாக் கூட்டம் முழுவதும் திகைத்தும், வியந்தும் நோக்கியது ஸ்ரீ யை.

மாநில அளவில் வெற்றி பெற்று மீடியாக் கூட்டத்தின் முன் நிற்கும் ஸ்ரீயிடம் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.


விடிந்தால் தீபாவளி.

‘தீபாவளிக்கு முதல்நாள் ஸ்டேட் மீட் வைத்திருக்கிறார்களே..?’

கவலைப்பட்டாள் ஸ்ரீயின் அம்மா.

“போக வேண்டாம் ஸ்ரீ.”

“மீட் முடிஞ்சதும் கிளம்பினா விடிகாலைல அழைச்சிக்கட்டு வந்துடுவேன்மா…!” அம்மாவைச் சமாதானப்படுத்தினாள் கோச் வேதவல்லி.


ஸ்ரீக்கு மத்தாப்புகள்தான் மிகவும் விருப்பம்.

ஸ்ரீ ஐந்தாவது படித்தபோது தந்தையை இழந்துவிட்டாள்.

தனியார் ஃபைனான்ஸ் கம்பெனியில் இருந்த அவர் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரே மகளான ஸ்ரீக்கு நிறைய மத்தாப்புகள் வாங்கி வருவார்.

கலசம், சாட்டை, பென்சில், பச்சை, சிகப்புத் தீப்பெட்டி, கம்பி மத்தாப்பு, தரைச் சக்கரம், கொம்பு வானம் என அனைத்தையும் இரும்புச் சல்லடையில் போட்டு வைத்திருப்பார்.

தீபாவளி நாளை விட, ‘தீபாவளி வரப்போவுது வரப்போவுது…!” என்று ஆசையோடும் ஆவலோடும் எதிர்பார்க்கும் நாட்கள்தானே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருபவை.

மத்தாப்புகள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு முன்னேயே வந்துவிடும். தினமும் மத்தாப்பு ஜல்லடையை பின் கட்டு முற்றத்தில் காயவைத்து எடுப்பார்.

ஏதாவது ஒரு மத்தாப்பை வீட்டுக்குள்ளேயே கொளுத்துவார்.

மத்தாப்புகள் மட்டுமே வாங்கி வந்து அவளைச் சந்தோஷப்படுத்தியதாலோ என்னவோ, அந்த நினைவே பசுமரத்தாணி போலப் பதிந்து, வெடி ஐட்டங்கள் எதுவுமே அவளுக்குப் பிடிப்பதில்லை.


ஸ்ரீயின் தந்தை மத்தாப்புக் கொளுத்துவதே வித்தியாசமாக இருக்கும்.

முதலில் ஒரு இரும்பு வாளியில் தண்ணீரும், மறு வாளியில் மணலும் நிரப்பிவைத்துக் கொள்வார்.

ஸ்ரீயை மடியில் உட்கார வைத்துக்கொண்டும், இடுப்பில் அமரவைத்துக்கொண்டும் மத்தாப்புகளைக் கொளுத்துவார்.

கம்பி மத்தாப்பைக் கொளுத்தி, அ… ஆ… A… B… C… D… எல்லாம் காற்றில் எழுதிக் காட்டுவார்.

இப்படியெல்லாம் அவளை வளர்த்தால் அவள் படிப்பிலும், நெறி முறைகளிலும் சிறந்தவளாக இருந்தாள்.


கணவனை இழந்தபின் ஸ்ரீயின் தாய், தன் வருமானத்திற்காக, நாலு பேருக்குச் சமையல் செய்து கொடுத்து ஜீவனம் நடத்தி வந்தாள்.

அம்மாவுக்கு உதவியாக ஸ்ரீயும் தன்னால் ஆன உதவிகளைச் செய்வதோடு, படிப்பிலும் சுட்டியாகத்தான் இருந்தாள்.

“உங்க பொண்ணு நல்ல ஃபிட்னெஸ்ஸோட இருக்கா. படிப்பும் நல்லாப் படிக்கறா. விளையாட்டுப் போட்டிகள்ல சேர்ந்து, ஜெயிச்சா, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல நல்ல வேலை கிடைக்கும்…”

ஆறாம் வகுப்பில் அட்மிஷன் போட்டபிறகு, உடற்கல்வி ஆசிரியை வேதவல்லி பெற்றோரிடம் அனுமதி கேட்டாள்.

ஸ்ரீயின் அம்மா தன் குறைவான வருமானத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள்.

“நீங்க அனுமதி மட்டும் கொடுங்க போதும்… மீதியெல்லாம் நான் பாத்துக்கறேன்..”

தைரியமும்,ஊக்கமும் அளித்ததோடு, அதை செயல்முறையும் செய்தார் வேதவல்லி.

சப்ஜூனியர் பிரிவில், ஜூனியர் பிரிவில் எல்லாம் மாவட்ட அளவில் பல பதக்கங்களை வென்றாள் ஸ்ரீ.

இன்று சீனியர் பிரிவில் மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறாள்.

ஒவ்வொரு சானலாக மாற்றி மாற்றி நியூஸ் போட்டுப் பார்த்தாள்.

இவளின் பேட்டி மட்டும் கிட்டத்தட்ட என்பது செகண்டுகள் ஒலிபரப்பானது.

மகிழ்ச்சிப் பிடிபடவில்லை பெற்ற தாய்க்கு

இதை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தாள் ஸ்ரீயின் அம்மா.


‘பாவம் ஸ்ரீ. அவ அப்பா இருந்தவரை தீபாவளிக்கு நிறைய மத்தாப்பு வாங்கித் தருவார். அவர் போன பிறகு இதுவரைக்கும் ஏதோ பேருக்குத்தான் வாங்கிக் தந்தோம். அவளும் முகம் சுளிக்காம அதை ஏத்துக்கிட்டா…’

கழிவிரக்கத்தில் கலங்கினான் ஸ்ரீயின் அம்மா.

தீபாவளிப் பலகாரம் செய்து கொடுத்த வீட்டில் மாலை ஏழு மணிக்கு வந்து பணம் வாங்கிக் கொள்ளச் சொன்னதால் அங்கு சென்றாள்.

பலகாரப் பையுடன், கனிசமாகப் பணம் தந்தார்கள்.


இரவு பத்து மணிக்கு மேல் கிளம்பிக் கடைத்தெருவுற்குப் போனாள்.

பதினோறு மணிக்கு மேல் , சாலையோரக் கடைகளில் ஏலம் விட்டார்கள். குறைந்த செலவில் கனிசமாக மத்தாப்புகள் வாங்கி வந்தாள்.

வாங்கி வந்த மத்தாப்புகளை பிரித்து இரும்பு சல்லடையில் வைத்தாள்.


“விடிகாலை 5 மணிக்கெல்லாம் வந்துருவேன்மா…” சந்தோஷத்துடன் போன் செய்தாள் ஸ்ரீ.

நாலு மணிக்கெல்லாம் எழுந்து கரிப்பிடித்த பித்தளைத் தவலையில் தண்ணீர் நிரப்பி வெந்நீர் சுட வைத்தாள்.

மணி நாலரை ஆகிவிட்டது.

‘இன்னும் அரை மணியில் வந்து விடுவாள் ஸ்ரீ.’

வந்ததும் வராததுமாய் மத்தாப்பு விட ஆசைப்படுவாள் என்பதால் ஸ்ரீயின் அப்பா சொல்லிக் கொடுத்தபடி வாசலில் பக்கெட்டுகளில் தண்ணீரும், மணலும் வைத்துவிட்டு வந்தாள்.

‘இரவுதான் மத்தாப்புகள் வாங்கி வந்ததால் கொஞ்சம் காயவைத்தால் தேவலை…!’

தோன்றியது அவளுக்கு.

தணலை எடுத்துவிட்டு, சூடான குமுட்டி அடுப்பை பின் கட்டில் சுவற்றோரம் வைத்து அதன் மேல் மத்தாப்புகள் இருந்த சல்லடையை வைத்தாள்.

ஒரு பத்து நிமிஷம் காய்ந்தால், நன்கு பிரகாசமாக எரியும் என்பதால் அப்படி வைப்பது அவள் வழக்கம்.

வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டது.

நாலேமுக்காலுக்கே வந்து விட்டாளே ஸ்ரீ…!’

மகிழ்ச்சியில் சுவாமி மாடத்தில் கரைத்து வைத்த ஆலத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.


வேதவல்லி டீச்சர் ஸ்ரீயை பாசத்தோடு அணைத்தபடி நிற்க, ஆரத்தி எடுத்து, குரு, சிஷ்யை இருவருக்கும் இடது கட்டைவிரலால் பொட்டிட்டாள்.

வீட்டுக்குள்ளே வந்தனர் இருவரும்.


“பு…ஸ்… ஸ்… ஸ்… ஸ்… ஸ்… ஸ்…”

“ஃபட்… ஃபட்… ஃபட்… ஃபட்… ஃபட்… ஃபட்…”

“ஸ்… ஸ்… ஸ்… ஸ்… ஸ்… ஸ்… ஸ்…”

“உஃப்…………………………………..”

தரைச் சக்கரங்கள், புஸ்வாணங்கள், கொம்பு வானங்கள், கம்பி மத்தாப்புகள் என்று ஒவ்வொரு மத்தாப்பும் அதனதன் இயல்புக்கு ஓசைகளையும் வண்ணங்களையும் எழுப்பி பின் கட்டில் ஒரு தீ விபத்து.


பேரிடர்மேலாண்மைப் பற்றி நன்கு கற்ற, வேதவல்லி டீச்சரும், ஸ்ரீ யும் ஓடி, எச்சரிக்கையுடன் எட்ட நின்று, மணலும் தண்ணீரும் வீசி தீயை அணைத்தனர்.

ஆசையாக வாங்கி வந்த வானங்களை மகள் கொளுத்தி மகிழவில்லையே என்று அம்மா வருத்தத்தோடு கண்ணீர் விட்டு அழுதாள்.

“அம்மா.. உனக்கு எந்த ஆபத்தும் இல்லாம தப்பினியேம்மா. அதுக்காக சந்தோஷப்படு…!”

ஆறுதல் கூறினாள் ஸ்ரீ.

“இதுதான் SPORTIVE SPIRIT” என்று ஸ்ரீயின் முதுகில் தட்டிக் கொடுத்தாள் வேதவல்லி டீச்சர்.

இப்போதும் ஸ்ரீயின் அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வந்தது.

இது ஆனந்தக் கண்ணீர்.

– தேன் சிட்டு தீபாவளி மலர் 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *