அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 261 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

குட்டாம்பட்டியில், வடக்குத் தெருவும். தெற்குத் தெருவும் அல்லோலகல்லோலப்பட்டன மற்றத் தெருக்கள் அல்லோல கல்லோலப்படவில்லை ஏனென்றால், அந்த ஊரில் வேறு தெருக்கள் கிடையாது. வடக்குத் தெரு மாடசாமியின் மகனும் கல்லூரி வரைக்கும் காலெடுத்து வைத்த பிள்ளையாண்டானுமாகிய சண்முகத்திற்கும், தெற்குத் தெரு, சுடலையாண்டி மகளும், டிச்சரம்மாவுமான அமுதாவுக்கும் திருமணம் நடக்கப் போவது ஊர் வாய்க்கு அவலாக வந்தது.

சண்முகமும், அமுதாவும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். அவர்கள் இரவில் சந்திக்கும்போது அதை அருகிலிருந்த முருங்கை மரத்தில் ஏறி, மறைவாக இருந்து ரசித்த சில மைனர்களுக்கு இது ‘திரில் லாக இல்லைதான். ஆனால், அந்த மைனர்கள் சொல்வதைக் கேட்ட ரசிகப் பெருமக்கள் ‘முருங்கை மரத்தில் ஏறும் பாக்கியம்தான் கிடைக்கவில்லை திருமணத்தைப் பார்க்கும் பாக்கியமாவது கிடைக்கிறதே’ என்று மகிழ்ச்சியடைந்தார்கள். “என் உழவு மாடுங்ககூட இவ்வளவு பொருத்தமில்ல. இந்தப் பய பிள்ளைக அவ்வளவு பொருத்தமாய் இருக்கு” என்று ஓர் ஆசாமி சொல்லும் அள்விற்கு அமுதாவும், சண்முகமும் கனப் பொருத்தமாக இருந்தார்கள்.

ஆனால், பெற்றோர்கள், உறவினர்கள்?

நிச்சய தாம்பூலத்திற்குக் குறிக்கப்பட்ட நாளும் வந்தது. காலையில் இருந்தே ஆண் பெண் வீட்டுப் பங்காளிகள், கடைக்குப் போய் வெற்றிலை வாங்குவதும், வாங்கிய வெற்றிலை நன்றாக இல்லை என்று திருப்பிக் கொடுப்பதும், கருப்புக் கட்டி வாங்குவதும், அதை காபியாக்கிக் குடிப்பதுமாக இருந்தார்கள். அந்த ஊர் வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டுப் பங்காளிகள், பெண் வீட்டிற்குத் திரண்டு சென்று திருமணத்திற்குரிய நாளையும், நகை, ரொக்க விவரங்களையும் முடிவு செய்யவேண்டும்.

மாப்பிள்ளை வீட்டில் சுமார் ஐம்பது பங்காளிகள் கூடி அண்டாவில் கொதித்துக் கொண்டிருந்த காபியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“வந்து. காபி குடிக்கலாம். ராகு காலம் வர்றதுக்கு முன்னாடி போயிடணும்” என்றார் ஒரு நடுத்தர ஆசாமி.

“ராகு வந்தா வரட்டும் அது முடியற வரைக்கும் காபி குடிக்கலாம்” என்றார் வயிறு காய்ந்த ஆசாமி ஒருவர்.

சண்முகத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை. “நிச்சயத் தாம்பூலம் எதற்கு? பேசாமல் இன்றைக்கே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று முணுமுணுத்தான்.

“ஏலே, மடப் பய மவனே எவன் கடையிலடா பாக்கு வங்கின? பாக்காடா இது?” என்றார் பல்போன தாத்தா ஒருவர்.

ஒரு வழியாக மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டை நோக்கி நடை போட்டார்கள் “ஏல, சண்முகம் நீ வரக் கூடாதுடா” என்று அவர்களோடு வந்த மாப்பிள்ளையைத் துரத்திவிட்டு, துள்ளு நடை போட்டது கூட்டம். பெண்ணைப் பெற்றவரும், அவரது பங்காளிகளும் வாசலிலேயே வந்து நின்றார்கள்.

“என்னவே மச்சான் எப்போ புது வீடு கட்டப் போநீர்? இந்த வீட்டை இடிச்சித் தள்ளிட்டு, புதுசா கட்டும்” என்றார் மாப்பிள்ளையின் பெரிய தாத்தா மகன்.

“இழவு எடுத்த பய பிள்ளை, அபசகுனமாய்ப் பேசறான் பார்” என்று சுப மங்கலமாக ச் சொன்னார் கிழவர் ஒருவர். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குள் நுழைந்து, அங்கு ஏற்கனவே விரித்திருந்த ஒலைப் பாயில் உட்கார்ந்து இருந்து, பெண் வீட்டுப் பங்காளிகளோடு சங்கமமாகி, லாரி விபத்தில் இறந்த முனுசாமியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதற்குள் பெண் வீட்டுப் பேர்வழி ஒருவர். ஒருசிறு துண்டுக் கருப்புக் கட்டியை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு போக, அவர் பின்னால் வந்த ஒருவர் தலைக்கு ஒரு டம்ளர் தண்ணிரைக் கொடுத்தார். அது தான் காபி.

“என்னவே, கருப்பட்டியை வச்சுக்கிட்டு. ஆளுக்கு ரெண்டு வாழைப்பழமும், சீனியும் வைக்கிறதை விட்டுப்புட்டு…” என்றார் மாப்பிள்ளை வீட்டார் ஒருவர்.

“வே மச்சான் இதுகூடக் கிடைக்காம நீர் திண்டாடுனது எனக்குத் தெரியாதா?” என்று பழைய குப்பையை ஒருவர் கிளற, கூட்டத்தினர் கை தட்டிச் சிரித்தார்கள்.

“வந்த வேலையைப் பார்க்கிறதை விட்டுப்புட்டு மடப்பய மவனுக மட்ட ரகமா பேசறாங்க பாரு” என்று அறுபதைத் தாண்டிய ஐயாசாமி சொல்லிக் கொண்டே சம்பந்தி ஆகப் போகிறவர்களை அழைத்தார்.

“டேய், மாடா நீ கொஞ்சம் குறைச்சி கேக்கனும் என்னடா கடலை நீ கொஞ்சம் கூட்டிக் கொடுக்கணும்” என்றார் ஐயாசாமி.

“மச்சானும் நானும் முன்னாடியே முடிவு கட்டியாச்சி. அவர் சொன்னபடி முப்பது கழஞ்சி நகையும், மூவாயிரம் ரூவாயும் கொடுத்தால் போதும்” என்றார் சண்முகத்தின் தந்தை மாடசாமி.

“எங்க குடும்பத்தில் பொண்ணு எடுக்க நீங்க தவம் இருக்கனும்: நகை எதுக்காம்?” என்றார் வக்கில்லாத வாயாடி ஒருவர்.

மாப்பிள்ளை வீட்டார்க்கு ரோஷம் வந்தது.

“ஏது ஏது, நாங்களா தவம் இருக்கனும்? ஏதோ பய சண்முகம் விரும்புறானேன்னு உங்க வீட்டுக்கு வந்தோம்.”

“காடிப் பானைக்குள் காலை விட்டிருப்பியளோ? பேச்ச்ைப் பார். பேச்சை. எங்க அமுதா விரும்புறாளேன்னு உங்களை வீட்டுக்குள் விட்டோம்” என்றார் பெண்ணின் பெரியப்பா.

ஐயாசாமி துள்ளிக் குதித்தார். “சல்லிப் பயல்களா சல்லித் தனமா பேசாதிங்கடா சுடலையாண்டி தாம்பாளத்தில் கொஞ்சம் வெத்திலை பாக்கும், வாழைப்பழமும், ரூவாயும் வச்சி கொண்டு வா வர்ற வெள்ளிக்கிழமை ராத்திரி பதினோரு நாழிகையில் தாலி கட்டணும்” என்றார். உடனே கடலையாண்டி, தயாராக வைத்திருந்த தாம்பாளத்தை நீட்டினார். சாளரத்தின் வழியாக, நடப்பது அனைத்தையும் நாணத்தோடு கவனித்துக் கொண்டிருந்த அமுதா, பூரிப்பால் பெளர்ணமியானாள்.

அந்தச் சமயம் பார்த்து மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த கல்லூரிப் பையன் ஒருவன், “ஒரு சின்ன விஷயம், எங்க பெரியப்பா மகன் கல்யாணத்துக்கு, வேளாண்மைக் கட்சித் தலைவர் வெற்றித் திரு. வெண்தாமரையார் தலைமை தாங்கனும்” என்றான்.

“அந்தத் தோலிருக்க களை விழுங்கும் வெண்தாமரை வேண்டாம். நல்லார் கட்சித் தலைவர் ‘நயமிகு நாராயணன் தான் தலைமை தாங்கணும்” என்று பெண் வீட்டைச் சேர்ந்த பி.யூ.சி. ஃபெயிலான ஒருவன் சொன்னான்.

“யாரு, நாராயணனா? அவன் அகப்பட்டதைச் சுருட்டும் அயோக்கியனாச்சே? அவன் வந்தால் கல்யாணம் நடக்காது, கருமாதி தான் நடக்கும்.”

“எங்க தலைவரை, அப்படி மட்டமாய்ப் பேசாதே மச்சான். உங்க வெண்தாமரை தான் அயோக்கியன்.”

“நாராயணன் வந்தால் அவன் காலை ஒடிச்சி, கையில் கொடுப்போம்.”

“வெண்தாமரை வராம கல்யாணம் இல்லை.”

“நாராயணன் தலைமை ஏறாமல் தாலி, கழுத்தில் ஏறாது.”

பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் (சம்பந்திகளாகப் போகிறவர்கள் தவிர) வெண்தாமரையாகவும், நாராயணனாகவும் மாறினார்கள். விஷயம் கெளரவப் பிரச்சினையாகியது.

ஐயாசாமி எம்பிக் குதித்தார் பெண்ணின் அப்பாவும், பிள்ளையின் அப்பாவும் கையைப் பிசைந்தார்கள். இப்போது அவர்களால், தத்தம் பங்காளிகளின் பேச்சுக்கு மறுவார்த்தை சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், பங்காளிக் கூட்டம் ‘பாய் காட்’ செய்து விடும்.

“தலைமை கிலைமை எதுவும் வேண்டாம் எவனையும் கூப்பிட வேண்டாம்” என்றார் ஐயாசாமி.

“முடியாது. ‘வெற்றித்திரு. வெண்தாமரை வரணும்.”

“அந்த முடிச்சி மாறி வந்தால், கழுத்தில் முடிச்சி விழாது. நாராயணன் வந்தே ஆகணும்.”

ஐயாசாமி சிந்தித்தார்: “இதுக்கு நான் ஒரு ഖഴ്സി கண்டு பிடிச்சிட்டேன். நான் சொல்றதைக் கேளுங்க” என்றார்.

“சீக்கிரமா சொல்லுங்க மாமா நாராயணன்தான் தலைமை தாங்கணும்.”

“வெண்தாமரை வரணும்னு சொல்லுங்க.”

ஐயாசாமி நிதானமாகச் சொன்னார்.

“பேசாம நானே தலைமை தாங்குகிறேன்.

கூட்டத்தினர் சிரித்தார்கள்.

“தலைமை தாங்குறவர் ஒரு மணி நேரமாவது பேசனும். உங்களால் முடியுமா தாத்தா” என்றான் ஃபெயிலான பி.யூ.சி.

ஐயாசாமி, “ஒரு மணி நேரம் என்ன, அதுக்கு மேலே வேணுமுன்னாலும் பேசுவேன்” என்றார்.

“நீங்க பேசுவீங்க யார் கேட்கிறது? எங்க தலைவர் வெண்தாமரை, பேசினால், மாப்பிள்ளை தாலி கட்டக் கூட மறந்து போவான்.”

“கூடாது. கூடவே கூடாது. வெண்தாமரையும் ஆமையும் ஒன்னு. போற இடம் உருப்படாது. ஒருக்காலும் நடக்காது. அந்தச் சோமாறி வந்தால் கல்யாணம் நடக்காது, கருமாதிதான் நடக்கும்.”

ஐயாசாமி மேடைப் பேச்சாளியானார்.

“மடப்பய மவங்களா, சொல்றதைக் கேளுங்க. அழிஞ்சி போகாதீங்க. நம்ம கிராமத்தில் கட்சிங்க வந்த பிறகு ஊரு ஊரா இல்லை. அதுவும் பஞ்சாயத்துத் தேர்தல் இழவுக்குப் பிறகு ஒரே இழவாப் போச்சி. எங்கயோ இருக்கிற பயல்களுக்காக நாம் ஏண்டா சள்டை போடணும்? அவங்க ஒருவனோட ஒருவன் கூடிக்கிறான். நம்ம பசங்க இழவு வீட்டுல கூட கலந்துக்க மாட்டேங்கறான். இது என்ன அரசியலுடா? நாம ஒன்னோட ஒண்ணு: சின்னஞ் சிறிசுக, அந்த ரெண்டும் நூறாண்டுப் பயிருடா, ஒண்ணை ஒண்னு விரும்பது, அழிச்சிடாதீங்க அழிஞ்சி போவீங்கடா. சுடலையாண்டி, தாம்பாளத்தைக் கொண்டு வா!”

“முடியாது. முடியாது, நாராயணன் வரிம கல்யாணம் நடக்கப் போறதில்லை.”

“வெண்தாமரை வராம, கல்யாணத்தை நடத்த விடப் போறதில்லை.”

“முடியாது. வெண்தாமரை அயோக்கியன்: போக்கிரி: பொறுக்கி.”

“வே, மச்சான் என்னைத் திட்டும்; ஆனால் எங்க தலைவரைத் திட்டினா, பல்லு உடைஞ்சு போயிடும்.”

“எங்கே, உடைடா பார்க்கலாம்.”

“உடைச்சா என்னடா பண்ணுவே?”

இரு தரப்பும், கைகலக்க முற்பட்டன. உள்ளே இருந்த பெண் பிள்ளைகள் வெளியே வந்து ஒப்பாரி வைத்தார்கள்.

அமுதா, செய்வதறியாது சண்முகத்தை நினைத்தாள். ஊரே கூடியது. சத்தம் கேட்டு, சன்முகமும் அங்கே வந்தான். பழைய ஜாதிகள் மறைந்து கொண்டிருக்கையில் புதிய ஜாதிகள் அரசியல் ஆடையில் உலவத் தொடங்கின.

இப்போது, ஐயாசாமி அடிதடியில் அகப்படாமல் தப்பிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. செய்ய முடிந்ததைச் செய்தார்.

“வாடா சண்முகம் இந்த ரெளடிப் பயல்க வீட்டில் ஒண்னும் வேண்டாம்.”

“நீ உள்ளே போம்மா இந்த ரெளடிப் பயல்க வீட்டில் சம்பந்தம் வேணாம்.”

இரு தரப்பும் ஒருவாறு கலைந்து, வெளியேறிற்று. அமுதாவும், சண்முகமும் அழுது கொண்டே பிரிந்தார்கள். திருமணம் நின்றுபோன வெறுப்பில் சண்முகம் ராணுவத்தில் சேர்ந்து, காஷ்மீருக்குப் போய்விட்டான். அவன் பிரிவில், அமுதா அரையுருவானாள். இரு தரப்பினரும் தங்கள் தன்மானத்தைத் தலைவர்களோடு ஐக்கியப்படுத்தி, தீராப் பகை கொண்டனர்.

உறவு. பகையாக மாறிய ஒரு மாதத்திற்குள் எல்லாப் பத்திரிகைகளும் ஒரு செய்தியைக் கொட்டை எழுத்தில் வெளியிட்டன. செய்தி இதுதான்.

வேளாண்மைக் கட்சித் தலைவர் வெண்தாமரை மகனுக்கும், நல்லார் கட்சித் தலைவர் நாராயணன் மகளுக்கும் சென்னையில் திருமணம் தலைவர்கள் வாழ்த்து.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *