உறவின் விலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 211 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாந்தி அந்தக் கடிதத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் உறவின் சுமையைத் தாங்கிக் கொண்டிருந்த அந்தக் கடிதத்தை, தந்தையால் தாங்கிக் கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தோடு, அவள் மனம் அலையாகிக் கொண்டிருந்தது.

வெளியறையில், ஓர் எசிசேரில் அவள் தந்தை சிவராமன் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார் அரசாங்க வேலையிலிருந்து ஒய்வுபெற்ற பிறகு, அந்த எசிசேரிடம் அவர் தஞ்சம் புகுந்திருந்தார் அவரைப் போலவே, அந்த ஈசிசேரும் இற்றுப் போயிருந்தது.

சாந்திக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்ததில் அவருக்கு உள்ளுர மகிழ்ச்சி பம்பாயில் ஒரு மகளும், டில்லியில் இன்னொரு மகளும் நல்ல நிலையில் வாழ்வதும், தன் ஒரே மகன் நல்ல வேலையில் இருப்பதும், அவர் மனத்தின் நேர்மை கணக்கில் சேர்ந்த சேமிப்புகள், அந்த சேமிப்போடு கடைசிச் சேமிப்பையும் சேர்த்து விட்டால் அவர் தனது வாழ்க்கை அக்கெளண்டை முடித்து விடலாம்.

சாந்தி தயங்கித் தயங்கி அந்தக் கடிதத்தைக் கொடுத்தாள். எதிரே சோபாவில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அவர் மகன் , குமார், கடிதத்தையும் தந்தையையும் நோட்டம் விட்டான் வீட்டுப் பொறுப்புகளை சாந்தியிடம் ஒப்படைத்து விட்டு ‘ஓய்வு பெற்ற’ இருபத்திரண்டு வயது ராஜம்-குமாரின் மனைவி நேரத்தை எப்படிப் போக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

கடிதத்தைப் படித்த சிவராமன் ஒரு பெருமூச்சோடு மகனிடம் அதை நீட்டினார் அவன் அதை மனைவிக்குக் கேட்கும்படி படித்தான்.

“அன்புள்ள அப்பாவுக்கு,
மகள் கோமதி எழுதுவது, அநேக நமஸ்காரம் சாந்திக்கு எஞ்சினீயர் மாப்பிள்ளை கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் ஆனால், மாப்பிள்ளைக்கு என்னைவிட அதிக சந்தோஷம் ஆனால் “சாந்திக்கு பத்தாயிரம் நகையும், ஐயாயிரம் ரொக்கமும் கொடுக்கிற அளவுக்குப் பணம் இருக்கும் உன் வீட்டாருக்கு, உனக்குப் போட வேன்டிய நகை பாக்கியைப் போட மறந்து போயிட்டோ? நான் என்ன இளைத்த மாப்பிள்ளையா?” என்று கேட்கிறார் அவருக்குப் பணம் பெரிதில்லை “வருகிற மாப்பிள்ளையை விட, வந்த மாப்பிள்ளை மட்டமா?” என்கிற மனப்பான்மை அவருக்கு உன் அப்பாவுக்கு எழுதி, போடுவதாகச் சொன்ன பாக்கி நகையை உடனே அனுப்பி வைக்கச் சொல், அப்போது தான் கல்யாணத்திற்குப் போக முடியும்” என்கிறார். நான் பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாது அவர் சொல்வதும் நியாயமாகப் படுகிறது. அதே நேரத்தில் உங்களிடம் எழுதவும் தயக்கமாக இருக்கிறது இந்தப் பிரச்சினையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும்”
பம்பாய்
அன்புள்ள மகள்,
கோமதி

சிவராமனிடமிருந்து ஒரு விரக்திச் சிரிப்பு வெளிப்பட்டது “ஆஹா அவள் பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாதாம்; நான்தான் அவளுக்கு அப்பாவாக இருந்திருக்கக் கூடாது எவ்வளவு லெளகீகமாக, அந்த லெளகீக ஊசியை ஆன்மீகப் பழத்தில் ஏற்றி எழுதியிருக்கிறாள்!”

“குமார்! இதுக்குத் தாண்டா உன்னிடம் படித்துப் படித்துச் ச்ொன்னேன். அந்த நகைப் பாக்கியை அப்போதே தீர்த்து, கணக்கை முடித்திருக்க வேண்டும். கொண்டான் கொடுத்தானுக்கிடையில் பணம் குறுக்கே நிற்கக் கூடாது “

மகனிடம் பேசிய தந்தை, ஆற்றாமையால் விம்மினார் தாலுக்கா ஆபீஸில், பணம் கொடுக்க வந்த எத்தனையோ நபர்களைப் புழுக்களைப் போலப் பார்த்த சிவராமன், மகனிடம் கை நீட்டிக் கேட்க வேண்டிய இயலாமையில் எழுந்த நெருப்பு ஜ்வாலையில் ஒரு புழுவைப் போலத் துடித்தார்.

குமார் ஒன்றும் பேசவில்லை அவனின் மெளனமே அவன் சொல்ல வேண்டியதைச் சொல்லிற்று இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது’ என்று வாய்வரைக்கும் வந்த வார்த்தையை அடக்கிக் கொண்ட ராஜம், “இதுக்குத்தான் விரலுக்குத் தகுந்த வீக்கம் என்கிறது சாந்திக்கு நம்ம அந்தஸ்துக்குத் தக்க இடத்தில் பார்த்திருந்தால் பிரச்சினையே வந்திருக்காது” என்று மாற்றிச் சொன்னாள் குமார் மெளனமாக அவள் கூற்றை அங்கீகரித்தான்.

தன் மகன் அவளைத் தடுத்துக் கேட்கவில்லை என்ற வெம்மையில் சிவராமன், தன் செல்லாக் கோபத்தைச் செலவழிக்க நினைத்தவராய், “உங்களுக்கெல்லாம் பணம் அதிகமாகிறது என்பதைவிட, சாந்திக்கு நல்ல இடத்தில் வரன் கிடைத்து விட்ட பொறாமை. “

“அப்பா அவள் அப்படி என்ன பெரிதாகச் சொல்லி விட்டாள்? நீங்கள் என்னவெல்லாமோ பேசுகிறீர்களே…” என்றான் குமார் அவன் குரல், எரிச்சலை வெளிப்படையாகக் காட்டியது.

சிவராமனால் கோபத்தை அடக்க முடியவில்லை.

“ஒஹோ இப்பச் சொன்னது சின்ன விஷயம்; இன்னும் பெரிய விஷயங்களைப் பிரயோகப் படுத்தாமல் வைத்திருக்கிறீர்களோ? பரவாயில்லை. நீங்கள் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவேண்டாம். என்னால் கோமதிக்கு நகையை அனுப்ப முடியும்” என்று சொல்லிவிட்டு, கிராமத்தில் இருந்த பழைய வீட்டை நினைத்துக் கொண்டார்.

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் “சாந்தி காப்பி கொண்டு வா” என்று ஆணையிட்டாள் மருமகள். ஒரு வேளை, மாமனாரின் பேச்சுக்குப் பதிலாக வந்த உதாசீனமோ? எதிர்காலக் கணவனோடு, கற்பனையில் லயித்துக் கொண்டிருந்த அந்தத் தூரில் முளைத்த தளிர் தெளிவான உலகத்திற்கு வந்து, தனக்காக மட்டுமல்ல; தந்தைக்காகவும் அழுதது.

கிராமத்திற்குப் போய் வீட்டையும், நிலத்தையும் பணமாக்கி, அதைப் பம்பாய் மகளுக்கு அனுப்பிவிட்டு வந்த சிவராமனை, அவரது இரண்டாவது மகள் – டில்லிக்காரி – இரண்டு பிள்ளை களோடு வாசலில் வரவேற்றாள்.

“என்னம்மா? மாப்பிள்ளை வரவில்லையா?”

அவள் மெளனமாகக் கண்ணிர் வடித்தாள். சிவராமன் பதறிப் போனார். “என்னம்மா? என்ன நடந்தது?”

“அப்பா எனக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு நகை போட்டு விட்டு, சாந்திக்குப் பத்தாயிரத்துக்கு நகை போடுவது என் மாமியாரின் கண்ணை உறுத்துகிறது உங்கள் மாப்பிள்ளையிடம் ஏதேதோ சொல்லிக் கொடுத்து விட்டார். அவர் என்னை இங்கே அனுப்பி விட்டார். இரண்டாயிரம் போனால்தான் அவர் இந்த வாசலை மிதிப்பாராம்: நான் அந்த வாசலை மிதிக்க முடியுமாம்.”

சிவராமன் இப்போது பதறவில்லை முற்றும் நனைந்தார்க்கு ஈரமில்லை. “உன் கணவரும் கடைசியில்….. நான் அவரை ஜென்டில்மேனாக நினைத்தேன்…”

“அப்பா அவரை ஒன்றும் சொல்லாதீர்கள். நீங்களும் எல்லாப் பிள்ளைகளையும் ஒரே மாதிரியாகப் பாவித்திருக்கணும்.”

“ஆகக்கூடி, உங்களுக்கு இரண்டாயிரம் கூடுதலாக வேண்டும் என்பதைவிட, சாந்திக்கு இரண்டாயிரம் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம், இல்லையா?” என்று சொல்லிவிட்டு நெட்டுயிர்த்தார் சிவராமன்.

“ஐயையோ, நான் அப்படி நினைக்கவில்லை. சாந்தி என் தங்கை. ஆனால், ஊர் உலகத்தையும் பார்க்க வேண்டியிருக்கேன்னு, அங்கே நடந்ததை ஒளிவு, மறைவு இல்லாமல் சொன்னேன். ஏற்கெனவே இளக்காரமாக நினைக்கும் மாமியாரிடம், தலைக் குனிவாக இருக்குமேன்னு நினைச்சிச் சொன்னேன்.”

“நீ தலைகுனிய வேண்டியதில்லை அம்மா அதற்கென்றே, ஆண்டவன் ஒருவனை ஸ்பெஷலாகப் படைத்திருக்கிறான்.”

ஒட்டுக்கேட்டே பழக்கப்பட்ட ராஜம், வெளியே வந்து. “சாந்திக்கு என்ன குறையாம்? பேசாமல் எட்டாயிரம் ரூபாய்க்கு நகை போட்டால் போதும்” என்று நியாயம் வழங்கினாள்.

வாக்குத் தவறாத சிவராமனுக்கு, வார்த்தை வரவில்லை. மருமகள் சொல்வதை விரும்பினாலும், விரும்பா விட்டாலும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். மகளிடம் நிலைமையை விளக்கினால், ‘பைல் பழையபடி மருமகளிடம்தான் வரும். “உங்க மகளுக்கு, உங்க இஷடப்படி நகை போட்டால் போதும்” என்று ராஜத்தின் அப்பாவிடம் அவர் சொன்னது பழைய கதை. “இன்னும் பெரிய இடத்தில் பார்த்திருக்கலாமே” என்று சொன்ன உறவினர்களைத் துச் சமாகத் தள்ளிவிட்டு, இவளை மருமகளாக்கியது ஒரு பிரசுரமாகாத கதை. அதை அந்த எழுத்தாளன் மட்டும்தான் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

பெரும்பான்மை, மருமக்ள் கட்சியை ஆதரிப்பது அவருக்குத் தெரிந்து விட்டதால், அதை ஏற்றுக் கொண்டார்; ஏற்றுத்தான் ஆகவேண்டும். டில்லி மகள், மன்னியின் கட்சிக்கு ஒட்டுப்போட்டவள் போல, தன்னுடைய கன்களில் பிரகாசத்தைக் காட்டினாள்.

“உன் கணவருக்கு எழுதும்மா! ‘சாந்திக்குப் பத்தாயிரம் நகை இல்லை; எட்டாயிரம்தான். உடனே வந்து உங்கள் மைத்துனியை ஆசீர்வதியுங்கள்’ என்று எழுதிவிடு. சிவராமன் மகளைப் பார்க்காமல் சுவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவர் கிராமத்துச் சொத்தை விற்றுவிட்ட எரிச்சலில், அவர் வரும்போதெல்லாம் எழுந்திருக்கும் குமார் ‘கண்டுக்க’ வில்லை.

சாந்தி மீதே அவருக்கு ஒருவித எரிச்சல். இவளும் இப்படித்தான் நடந்துகொள்வாளோ? மாட்டாள். நல்ல வேளையாக அவளுக்குப் பிறகு, அவர் கடமையை நினைவூட்ட எந்த ஜீவனும் இல்லை. சாந்திக்கு ஒரு வழியைக் காட்டிவிட்டால், சிவராமனுக்கு நிரந்தர ஓய்வு கிடைத்துவிடும்.

திருமண நாள் நெருங்க, நெருங்க, உறவினர்களும் வீட்டை நெருங்கினார்கள். பம்பாய்க்காரி மாப்பிள்ளையோடு வந்திறங்கி னாள். டில்லி மாப்பிள்ளை, “பிள்ளைகளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வந்து விட்டேன்” என்று முன்னதாகவே வந்து மனைவியிடம் மணிக்கணக்கில் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

திருமண வைபவம் எளிய முறையில் தொடங்கியது. ‘ராஜபார்ட் மேளம் வைக்காதது பிள்ளை வீட்டாருக்கு ஒரு குறை. வெற்றிலை பாக்கு தேவையான அளவுக்குக் கொடுக்கப்படவில்லை என்பது உறவினர் வருத்தம். சிவராமனுக்குக் காசு தீர்ந்துவிட்டதால், அவர் பெயரில் மகன் குமார் அழாக் குறையாகச் செலவழித்தான். கஞ்சன் சிவராமன் மகனைனச் செலவு செய்ய விடாமல் தடுப்பதாகச் செய்தி, மருமகள் மூலம் மாப்பிள்ளை வீட்டார் வரைக்கும் எட்டியது.

சிவராமன் குமாரைப் பார்த்தார். அவன் தங்கைக்கு மாமனாராகப் போகிறவரிடம், “ப்ளீஸ், எட்டாயிரம் ரூபாய்தான் புரட்ட முடிந்தது. பெரிய மனசு செய்யுங்கள்” என்று சொன்னான். ‘இந்தாருங்கள் செக். நாளைக்கே பேங்கில் என் கணக்கில் உள்ள பத்தாயிரம் ரூபாயில் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல அவனால் முடியவில்லை.

டில்லி மாப்பிள்ளை “நான் அப்போதே நினைச்சேன்”, என்று பத்திரமாகத் தொலைவில் இருந்து முணுமுணுத்தார். பம்பாய் மாப்பிள்ளை, தன் மாமனார் மோசமானவர் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் என்று சொல்வதுபோல் பக்கத்திலிருந்தவரைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்.

சம்பந்தியைச் சமாளிக்க யாராலும் முடியவில்லை. அவர் நேராக மணப்பந்தலை நோக்கிப் போனார். அதற்குள் மணமகன் கிழே இறங்கி தந்தையிடம் சென்றான். பெருமை அனைத்தையும் இழந்து தலைகுனிந்தார். சிவராமன்.

சாந்திக்குத் தந்தையின் நிலை கண்டு வருத்தம். அதே நேரம் ‘அவர் தந்தையைச் சமாதானப்படுத்தப் போவதில் ஒரு பெருமை. “அவரல்லவோ ஆண்மகன் பணம் பெரிதில்லை. பந்தம் பெரிது’ என்று தன் தந்தையிடம் சொல்லப்போகிறார்…” சாந்தி கற்பனையில் லயித்தாள்.

சாந்தியின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன. அவள் என்ன காண்கிறாள்? அவரும் தந்தையோடு சேர்ந்து கொள்வதுபோல் தெரிகிறது. அவரும் உரக்கப் பேசுகிறார்!

சாந்திக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த அவள் அக்காள், தகராறு நிலவும் இடத்துக்குப் போய்விட்டு மீண்டும் மனப்பந்தலுக்கு வந்தாள்.

“என்னவாம் அக்கா……….. ‘அவர், என்ன சொல்கிறார்?” என்று சம்பிரதாயத்திற்கு விரோதமாகக் கேட்டாள், சாந்தி.

“உன் மாப்பிள்ளையும் அவர் அப்பாவும் சேர்ந்து கொண்டு வீம்பு பேசுகிறார்கள். இரண்டாயிரம் வராவிட்டால் தாலி கட்டமாட்டாராம்…”

பரபரப்பான கூட்டத்தில் இன்னும் ஒரு பரபரப்பு. சிவராமன் தன் சம்பந்தியின் கால்களில் இரண்டு கைகளையும் குவித்து எழுந்தார். சாந்தி தன் கண்களை மூடிக் கொண்டாள். பிறரின் கைகளைக் கூட கெஞ்சலின் அறிகுறியாகப் பிடிக்காத அவரின் இரு கரமும், சாந்தியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அந்தப் பணக் கடவுளின் காலடியை வணங்கின. கூட்டத்தினிடையே ஓர் உருக்கம். பசுமையாக இருந்த சாந்தியின் உள்ளம் அந்தப் பகமையின் சில்லிட்ட குளிர்ச்சியில் பனிக்கட்டியாய் உறைந்தது.

திருமணம் காணவந்த உறவினர் அனைவரும் மாப்பிள்ளையின் தந்தையிடம் மன்றாடினர். ஒரு வழியாகச் சம்பந்தி சமாதானமானார். “இதெல்லாம் சகஜம் சம்பந்தி சண்டை இல்லாத கல்யாணமே இல்லை” என்ற குரலைக் கேட்டு அதுவரை கண்களை மூடியிருந்த சாந்தி கரங்களை விடுவித்தாள்.

மாப்பிள்ளைப் பையன் கொஞ்சம் ‘பிகு செய்து கொண்டே மணப்பந்தலை நோக்கி வந்தான்.

“தாவி கட்டுகிற நேரம் வந்துடுத்து.சீக்கிரம், சீக்கிரம்…” என்றார் புரோகிதர். அவர் ஒருவர்தான் நடப்பதை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். எத்தனையோ கல்யாணங்களை நடத்திவைத்த அவருக்கு இவையெல்லாம் ஒரு ‘நியூலே இல்லை.

“கெட்டி மேளம்” என்றார் புரோகிதர். மேளம் கொட்டியது. நாதஸ்வரங்கள் உச்சஸ்தாயியில் குரல் கொடுத்தன. மாப்பிள்ளை தாலியைச் சாந்தியின் கழுத்தை நோக்கி உயர்த்தினான்…

திடீரென்று கூட்டமே எழுந்தது. நாதஸ்வர வித்வான்கள் பாதி மூச்சை வாய் வழியாக விட்டார்கள்.

மேளத்தை அடிக்கும் கம்புகள் பாதியில் நின்றன. நடக்கக் கூடாதது – நடக்கும் என்று எதிர் பார்க்காதது நடந்து விட்டது.

சாந்தியின் கழுத்தை நோக்கி வந்த தாலிச் சரட்டுக் கயிறு புரோகிதரின் வாயில் விழுந்தது. அவள் செய்கை, கூட்டத்தில் நிர்மலமான ஒரு நிசப்தத்தை நிலவச் செய்தது. யாரும் எதுவும் பேசவில்லை. அவமானத்தால் கண் சிவந்த சம்பந்தி, மாப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு, உறவு சூழ வெளியேறினார். உறவினர்கள் “இப்படி ஒரு பெண் இருப்பதை விட இறப்பதேமேல்” என்று முணுமுணுத்துக் கொண்டார்கள்.

சிவராமன் மகளை நோக்கி வந்தார். அவர் முகத்தில் சினமா. சிறுமையா, பீதியா எதுவென்று கண்டுகொள்ள முடியவில்லை. சாந்தியின் கண்களை நேராகச் சந்தித்தார். தந்தையின் கண்ணும் மகளின் கண்ணும் ஆன்மீகமாகப் பேசிக் கொண்டன.

“சாந்தி நாள் அந்த ஆளின் காலில் விழுந்ததுபோல் உன் காலிலும் விழுந்து உன்னைச் சம்மதிக்க வைத்திருப்பேன். உன் காவில் விழவில்லை என்கிறாயா? நான் அப்படிச் செய்திருந்தாலும் உன்னை மணக்க அவர்கள் சம்மதித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்த நாட்டில் மாப்பிள்ளை கோபிக்கலாம். ஆனால், மணப்பெண் கோபிக்க முடியாதம்மா.”

சிவராமன் துண்டை வாயில் வைத்தார். சாந்தி அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள்.

“மன்னித்துக் கொள்ளுங்கள் அப்பா பணத்தை கால் தூசியாக நினைத்த நீங்கள். அந்தத் தூசியின் காவில் விழுந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல, கணவன்-மனைவி என்ற புனிதமான உறவு, இரண்டாயிரம் ரூபாயில் தொங்கிக் கொண்டிருக்கும் என்பதை நினைக்கவே முடியல. என்னை மன்னிச்சிடுங்க அப்பா பணத்தைக் கொடுத்து, பந்தத்தை வாங்குவதைவிட உங்களையும், உங்களுக்குப் பிறகு கடவுளையும், நினைத்துக் காலத்தைக் கழித்துவிடுவேன். ஒரு வேளை நானும் திருமணத்திற்குப் பிறகு உங்களிடம் லெளகீக உறவை மட்டுமே வைக்க வேண்டியது இருக்கலாம். விலைகொடுத்து வாங்கும் பந்தத்திற்காக, விலை மதிக்க முடியாத இந்தப் பந்தத்தை வெட்டிக் கொள்ள மாட்டேன். இது சத்தியம் அப்பா.”

சிவராமன் மகளை நாலு அறை போடுவார் என்று நினைத்தவர்கள் ஏமாந்தார்கள். காலில் இருந்த முகத்தை நிமிர்த்தி தனது மார்பில் அனைத்துக் கொண்டார்.

வீடே அழுதது. டில்லிக்காரி விக்கி விக்கி அழுதாள். அவள் மாப்பிள்ளையின் கைக்குட்டை நனைந்தது. பம்பாய்க்காரி குப்புறப்படுத்து, தலையணையை ஈரமாக்கினாள், குமார் – ஒரு கம்பெனியின் பப்ளிக் ரிலேஷன் ஆபீலர் – பேமிலி ரிலேஷனின் விநோதத்தால் மனமார அழுதான். அவள் மனைவி எல்லோரையும் விட சத்தம் போட்டு அழுதாள். அவர்கள் அனைவரும் தங்கள் குற்ற உணர்வை அழுகையின் வாயிலாகக் கழுவாய் காண நினைத்தார்களோ? அல்லது அழுதுவிட்டால் அவர்கள் பொறுப்பு தீர்ந்துவிட்டதாய் எண்ணினார்களோ?

ஆனால், சிவராமனும் சாந்தியும் அழவில்லை. அவர்களைக் கண்ணிரும் அனாதையாக்கியது.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *